
['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
50 வருசத்திற்கு முந்தின கதையிது.மத்தியான வெயில் கொளுத்தி எரிக்கும்.மேனி பிசுபிசுக்கும்.சைக்கிளில் சென்று அலுவல்களை முடித்து வீடு திரும்புவதற்கிடையில் காற்றும் வீசவில்லையென்றால் ஒரே எரிச்சலாயிருக்கும்.அப்படியிருந்தும்,ஊருக்குள்ளால யாழ்தேவி கிழிச்சிக்கொண்டு போற வேகத்தில யாழ்.இந்து மகளிர் கல்லூரிக்குப் பக்கத்தில இருக்கிற ரெயில்வே கேற்றோட நிற்கின்ற அரசமர இலைகளும் பறக்கும்,அந்தக்காத்து வந்து முகத்திலயும் அடிக்கும்.அப்போதுதான் இலேசா உடம்புக்குச் சுகமாயிருக்கும்.காத்தில் பறந்த மாசுபடாத புழுதியின் வாசமும் எம்மை ஒருகணம் வசப்படுத்திவிடும்.புகையிரத நிலையங்களுக்கு பக்கத்தில் இருக்கும் தேநீர்க்கடைகளுக்கு முன்னால் நிற்கின்ற பெரிசுகளிடம் கிடுகு வண்டில்காரர் வந்து,
"ரயில் கடவையைக் கடந்து யாழ்தேவி போயிற்றுதே?"என்று கேட்டு நேரத்தைக் குறிச்ச காலமது.யாழ்தேவியில் வருபவர்க்கென்றே ஒவ்வொரு கதையிருந்தது.
கல்யாணவீடோ,செத்தவீடோ;"இண்டைக்கு யாழ்தேயியில வருயீனமாம்,வந்த பிறகுதான் எல்லாமாம்"என்ற செய்தி இனம்சனமென்று கடுகதிப்புகையிரதம்போல எல்லோரிடமும் போய்ச் சேர்ந்து பரவியதையும் எப்படி எம்மால் மறந்துவிட முடியும்?
எம்மில் பெரும்பாலானோர் குடும்பத்தின் பொறுப்புக்களைச்சுமந்தபடி கொழும்புக்கு உழைக்கச் சென்றவர்களே! தாய்மார் அப்பாக்களின்றி பிள்ளைகளை வளர்க்கப்பட்ட பாடிருக்கே அது இன்று எத்தனை பேருக்குத்தெரியும்? மாதம் முடிய மணி ஓடரில் பணம் வரும் எனக்காத்திருந்த தாய்மாரை நானறிவேன். "அம்மா இனி எப்ப அப்பா வருவார் ?"என்ற பிள்ளைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்துக்கொண்டே,' சிலவேளை இரண்டு மூன்று மாதத்தில யாழ்தேவியில வருவார் பிள்ளைகள்’என்றதும்,குழந்தைகளின் கண்கள் கலங்கியதைக் கண்டவன் நான்!
ஏதோ ஒரு வெள்ளியன்று யாழ்தேவியில் அப்பா வருவார்.வரும்போது றம்புட்டான், மஸ்குஸ்தான் நிறைய வாங்கி வருவார்.பிள்ளைகள் சந்தோசத்தில் துள்ளிக் குதிப்பார்கள்.வீட்டுக்குக் காவலனான நாயும் அப்பா வந்த சந்தோசத்தில்,அவர்மேல் துள்ளிக் குதித்து அவரைப் புரட்டி எடுக்கும்.அன்றுதான் அம்மாவின் முகம் முழு வட்ட நிலாவாக மலர்ந்திருக்கும்.இந்தச் சந்தோசம் அந்தக் குடும்பத்துக்கு இரண்டே இரண்டு நாட்கள்தான்.ஞாயிறன்று பின்னேரமானதும் அப்பா “மெயில் ரெயினில்" ஏறி மீண்டும் கொழும்பு பயணித்துவிடுவார்.போகும்போது யாழ்ப்பாணத்திலிருந்து முருங்கைக்காய் கட்டாக வாங்கி பழைய வீரகேசரிப்பேப்பரால் சுற்றிக்கட்டப்பட்டு,அதுவும் சேர்ந்து அப்பாவுடன் பயணிக்கும்.கொழும்பில் வாழும் சொந்தங்கள் முன்கூட்டியே அப்பாவிடம் கேட்பது,
" முடிந்தால் யாழ்ப்பாணத்து முருங்கைக்காய் வால்கீற்று வாங்கோ ".அன்றைய போராட்ட வாழ்வில் பொதுவாக இதுவும் ஒன்றென இக்கதை யாழ்தேவியுடன் இணைந்து பக்கங்களைப் புரட்டிக்கொண்டேயிருந்தது.
ஊருக்குள்ள ஒரு சாவு விழுந்துவிட்டால்,அப்போதெல்லாம் 'தந்தி’ஒன்றைத்தவிர வேகமாகத்தகவல் சொல்ல வேறொன்றுமில்லை.அதேபோல
'தந்தி'கிடைத்து,பிரேதம் எடுப்பதற்கு முன்னர் காரியங்கள் செய்வதற்கு பிள்ளையோ,சொந்த உருத்தோ வரவேண்டுமென்றால் அவர்களைப் பவுத்திரமாக கொண்டு வந்து சேர்த்த பங்கு யாழ்தேவிக்கு உண்டு என்பதையும் எம் ஞாபகங்களிலிருந்து அழிக்கமுடியாது.
‘யாழ்தேவி‘என்பதும் எம் உறவு என்றபடியால்தான் இன்றும்கூட மழையாகி, குடையாகி, தீ மூட்டி,நீருற்றிய நினைவுகளை இந்த நெஞ்சாங்கூடு சுமந்து கொண்டே யிருக்கின்றது.
" கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்தேவி வெளிக்கிட்டு,அடிச்சு அள்ளிக்கொண்டுவரும்.வந்து வவுனியா தாண்ட,பச்சைப்பசேலென்று எங்கட மண்ணும் செழிச்சு நிற்க,இடைக்கிட யாழ்தேவி கூவிக்கொண்டு வரும் ‘ஹோர்ன்'சத்தத்தில எங்கட சனம் படலைகளுக்குள்ளால நின்று எட்டிப்பார்க்கின்ற காட்சி இப்பவும் என்ர கண்ணுக்குள்ள அப்படியே நிற்குது.அப்படியே கொடிகாமம் வந்து,சாவகச்சேரி வர காத்தில மாம்பழம்,பலாப்பழம்,பனங்கட்டி எல்லாம் சேர்ந்து ஒரு வாசமடிக்கும்.ஆஹா அது சொர்க்கம்.சாவகச்சேரியும் கடக்க,யாழ்ப்பாணம் வரையும் சீமான் இன்னுமொரு பிடிபிடிப்பார்." நான் வந்திட்டன்,வந்திட்டன் என்பதை தண்டவாளங்களும் சேர்ந்து "தாய்மடி தேடி வந்தாச்சு"என்று மெட்டுக்கட்டித்தாலாட்ட எங்கள் மனங்களும்,சோலைகளும் மகிழ்ந்திட்ட பொற்காலமது.
நெடுந்தூரப் பயணமாய்ச்சே!ஒருவராக,அதுவும் அவர் ஆணாக இருந்துவிட்டால்,இருக்க இடம் கிடைக்காவிடினும்,ஒரு பேப்பரையாவது தரையில விரித்துப்போட்டு படுத்து விடலாம்.அப்படிப் பயணித்தவர்களையும்கூட; "யாழ்தேவி மற்றும் மெயில் ரெயினில் பயணம் செய்த அனுபவங்களை ஒரு கதையாக எழுதுங்கள்"என்றும் சொல்லலாம்.
மெயில் ரெயினில் சொந்தங்கள் சேர்ந்து சிவராத்திரிக்கு'மன்னார்'சென்றதும்கூட சுகமானஅனுபவம்.காங்கேசன்துறையிலிருந்து 'தபால் புகையிரதம்'வெளிக்கிட்டால் அதில் தலைமன்னாருக்குப்போற பெட்டியைப்பார்த்து ஏறிவிட்டால் நிம்மதி.அந்தப்பெட்டியை அனுராதபுரத்தில கழட்டிவிட்டு
மெயில் ரெயின் தொடர்ந்து கொழும்புக்குப்பயணிக்கும்.அந்தச்சாமத்தில அடுத்த ரெயின் வர 3 மணித்தியாலமாவது எடுக்கும்.அதுவரைக்கும் நாங்கள் வெளியே இறங்கமாட்டம்."சிங்களப்பகுதிக்குள்ள கும்மென்ற இருட்டுக்குள்ள ஒருத்தரும் இறங்கக்கூடாது"என்று அம்மா எல்லாரையும் உறுக்கிப்போடுவா.அப்படியேதும் அவசியமெண்டால் மட்டும் அப்பா இறங்கி சுடுதண்ணி எடுத்துக் கொண்டு வருவார்.அவர் சிங்களம் சரளமாக பேசுவார் என்பதால், எங்களுக்கும் கொஞ்சம் ஆறுதல் !அடுத்த புகையிரதம் வந்து எங்கட பெட்டியையும் இணைச்சுக்கொண்டு தலைமன்னாருக்கு வந்து விடும்.அங்கிருந்து வாடகைக்காரில மன்னார் பெரிய நாவற்குளம் வந்துசேர மொத்தத்தில விடிஞ்சிரும்.அதுகூட உள்ளத்தில் நிலைத்து நிற்கும் ஞாபகங்களில் ஒன்று!
இராத்திரியில் ரெயில் பயணங்களில் முறிகண்டி தாண்டியதும் ஒவ்வொருவரும் அவர்களது சாப்பாட்டுப் பாசல்களை திறக்க,யன்னல்களும் திறந்திருக்க காற்றில் பரவும் பொரித்துப் புரட்டிய குழல்புட்டின் வாசமிருக்கே;ஆஹா
அது அமிர்தம்.சுடச்சுட,ஆவி பறக்க,நியூஸ் பேப்பரில வாழையிலையை வைத்து,சாப்பாட்டையும் போட்டு மடிச்சுக்கட்டினால்,நேரம் செல்ல செல்ல அந்த வாழையிலையும் சூட்டில வெந்து கறுத்திருக்கும்.அதுக்குள்ள சாப்பாடு, இன்னொரு தாக்கமடைந்து அறுசுவையா அள்ளித்தரும்.அந்த வாசத்தில அடுத்தவரும் பொறுக்க முடியாமல் தனது பார்சலையும் திறப்பார்.அது புட்டும்,மாம்பழமுமாக இருக்கும்.
அல்லது புட்டும் முட்டைப்பொரியலுமாக இருக்கும்.இடையிடையே பொரிச்சு,வதக்கின கத்தரிக்காய் குளம்பும் வாசத்தில முதலிடத்தைப் பிடித்து,அந்தச்சாப்பாட்டைக் கொண்டு வந்தவரும்,பக்கத்தில் இருந்தவரும் சாப்பாட்டுப் பிரியர்களாகி,புதிய பந்தமாகியும் விடுவார்கள்.
"தம்பி ஊரில எந்த இடம்?“
' நான் யாழ்ப்பாணம் ஐயா'
‘நீங்கள்?’
" நான் சாவகச்சேரி சங்கத்தானை தம்பி.." என்று தொடங்கி, கடைசியில இவர்கள் தூரத்துச்சொந்தமாகி விடுவார்கள்.மனிதருக்கிடையில் மனிதநேயத்துடன் உரையாடல் நிரம்பி வழிந்த காலம்!பார்த்தீர்களா;எங்களைச் சுமந்த
யாழ்தேவிக்குள் இப்படிச்சந்தோசமும், துக்கமும் நிறைந்த எத்தனை கதைகள் இருக்கும்?அந்தக்கதைகளை இனி நீங்கள்தான் சொல்ல வேண்டும்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.