உயிர்வாசம்-  அலை புரளும் பெருங்கடலை படகு மூலம் பயணித்து கடந்த கதை!

எழுத்தாளர் தாமரைச்செல்வி அவர்களின் 549 பக்கங்கள் நிரம்பிய 'உயிர்வாசம்'நாவலை வாசித்து முடித்தேன்.வாசகரை வரலாற்று வலிசுமந்த உணர்வுடன் பயணிக்கவைப்பது என்ற இலக்கிலிருந்து தளும்பாமலும், ஆழ்கடலில் எம்மையும் தத்தளிக்கவைப்பதுமாக அத்தனை வலிகளையும் வாசகனாகிய எனக்கும் உணரவைத்து,பயணிக்க வைத்துள்ளார் எழுத்தாளர்.எம்வரலாறு எமக்குக்கற்றுத்தந்த அனுபவங்களை இலக்கியக்கியத்திற்குள் உயிரோவியமாய் வரைந்து,உன்னத படைப்பாக்குதல் என்ற கடின உழைப்பை எழுத்தாளர் கையாண்ட யுக்தி பல இடங்களில் பேசுபொருளாக, பேரலைக்குள் மோதிய படகு ஆட்டங்கண்டதுபோல,கதாபாத்திரங்களின் போராட்ட வாழ்வியலை வாசித்த இந்த மனசும் இன்னும் விடுதலையாகி அமைதியாகவில்லை என்பதுதான் மெய்.

500 இற்கும் மேற்பட்ட பக்கங்களை வாசித்து முடிக்க நாட்கள் எடுக்கலாம் என்ற எண்ணம் வாசகருக்கு வருவது புதிதல்ல.நிஜத்தின் பிரதிபலிப்பையும்,வரலாற்று வடுக்களையும் வாசி என பக்கங்களைப்புரட்டியவர்களே கதாபாத்திரங்களான எம்மவர்தான்.அவர்களின் வலிகளும்,இழப்புக்களும் என இழந்தவற்றை கதாசிரியர் வடித்த உரையாடலின் உயிர்நாடித்துடிப்பே அவ்வளவு வேகமாக என்னையும் வாசித்து முடிக்கச்சொன்னது. 'உயிர்வாசம்'ஒவ்வொருவர் வீட்டிலும் வாழவேண்டிய இன்னொரு நிரந்தர உறவு.

காத்திரமான படைப்பைத்தந்து, "வாசித்துவிட்டு உங்கள் கருத்தைப்பகிருங்கள்"என அன்பைப்பகிர்ந்த அக்கா தாமரைச்செல்வி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. 



இரவி. அருணாசலம் அவர்களின் 'நாலு வார்த்தை!

'அது ஒரு காலம்'என்று வாழ்ந்து அனுபவித்த அத்தனை நினைவுகளையும்,மறந்துபோகும் முதுமை வரையிலும் பகிர்வதே மனித இயல்பும்,அதுவே யதார்த்தமும் கூட!அதேபோல,காலமாகி வந்த கதைசொன்ன இரவி. அருணாசலம் அவர்களின் 'நாலு வார்த்தை'எனும் நிகழ்ச்சியும் பிரமாண்டம்தான்!அப்படித்தான் அக்காலமும் எம்மனசுக்குள் பரந்த வெளியில் பந்தல்கட்டி,தமிழ் எனும் சோறு படைத்து,ருசிக்க வைத்து கொண்டாட வைத்தது.அதன் ருசி கொஞ்ச நெஞ்சமல்ல!தமிழ் இனி,கேட்டிருப்பாய் காற்றே என புலமும் தமிழும் பற்றிய தேடல்,கவிதை சிந்தும் நேரம்,காலமாகி வந்த கதை,புதியதோர் உலகம் செய்வோம்,நதியோரம், யன்னல்களைத் திறவுங்கள்,நெஞ்சில் நிறைந்தவை,நெடும்புனல் என 'இரவி'தயாரித்து வழங்கியவை கணக்கில் அடங்காதவை.அப்பப்பா ; அத்தனையும் எம்மை அன்று பிரமிக்க வைத்தவை!

IBC எனும் வானொலிக்கான அந்தப் பின்னணி இசைக்குள் எமக்கென ஓர் அடையாளம் இருந்தது.அது காற்றில் தவழ்ந்து வரும்பொழுதே "நெஞ்சில பால் வார்த்தது போல"நீண்ட கால காத்திருப்பு ஒரு நாள் நிறைவேறினால்?அப்படியொரு ஆனந்தம் எமக்கு!அப்படித்தான் ஓர் தாயாக அவள் வந்தாள்!அந்த உயிரொலி அன்று எம்மைச்சொக்கவைத்தது.பச்சை,மஞ்சள் என புல்தரை மட்டுமல்ல,பச்சைப்பசேலென்று மரங்களும் சோடிச்சுக்கொண்டு நிற்க, ' IBC தமிழ்,அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்"என சில்லென்ற காற்று இசைத்துக்கொண்டு வந்து கன்னத்தைக் கொஞ்சும்.உள்ளம் புல்லரித்து எனக்கென்ற இன்னொரு உலகத்தில் உதிக்கும்.வானம் நீலமும்,வெள்ளையுமாய் பூத்துக்குலுங்கும்.அப்போது,யசோதா மித்திரதாஸ் அவர்கள் 'நதியோரம்'என்று ஆரம்பிக்கும்போதே அக்குரலின் உணர்வில் இன்னொரு பூபாளத்தில் நாம் மிளிர்வோம்.

"நதியோரம் நாம் நடந்தோம் வெகுதூரம். கண்ணில் கலந்தனவும்,காதில் குழைந்தனவும் உம்முன் படையலாய்"என்று இருவரினதும் குரல்கள் குழைந்து எம்மைத்தாலாட்டியது. 'ப்பா'அதுவும் ஒரு பொற்காலம்.