மார்ச் 28, 2025 அன்று, சிட்னித் தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் ஒழுங்கு செய்யப்பப்ட பவளவிழாவுக்கு முதல்நாள், எழுத்தாளர் நண்பர் முருகபூபதி அவர்கள், மெல்பனிலிருந்து வெளிவரும் அக்கினிக்குஞ்சு இணைய சஞ்சிகையில், பவளவிழாக்காணும் படைப்பிலைக்கியவாதி பேராசிரியர் ஆசி கந்தராஜா என்னும் தலைப்பில் ஒரு விவர்ணக் கட்டுரை எழுதியிருந்தார். அது பின்னர் கனடாவிலிருந்து வெளிவரும் பதிவுகள் இணைய சஞ்சிகையிலும் சிட்னியிருந்து வெளியாகும் தமிழ்முரசு இணைய சஞ்சிகையிலும் பிரசுரமாகியிருந்தது. நண்பர் முருகபூபதிக்கு எனது நன்றிகள்.

எழுத்தாளர் முருகபூபதியின் கட்டுரையை வாசிக்க விரும்பின் இணைப்பை அழுத்தவும்

கட்டுரையில் எழுதப்பட்ட தகவல்களை முழுமையாக்கும் நோக்கில் சில உண்மைகளை இங்கு பதிவு செய்வது அவசியமாகிறது. காரணம் வரலாறு மறைக்கப்படவும் திரிவுபடவும் கூடாது என்பதற்காக.

சிட்னி தமிழ் அரங்கக் கலைகள் + இலக்கியப் பவர்

இவ் அமைப்பு முதுபெரும் எழுத்தாளர் எஸ்பொ அவர்களால் 1991ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 'பவர்' என்பது ஒரு தூய தமிழ்ச் சொல். ஒரு நோக்கத்தை நிறைவேற்ற, 'கொடி கொண்டு முன்னெடுத்துச் செல்லல்' என்பதைக் குறிப்பது. அறியப்பட்ட இந்திய எழுத்தாளர் சி சு செல்லப்பா அவர்கள், முன்னாளில் 'பவர்' என்னும் பெயரில் ஒரு அமைப்பை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிட்னி 'பவர்' அமைப்பில் நானும் ஒரு ஸ்தாபக அங்கத்தவராக அயராது உழைத்தவன் என்பது தற்போது பலருக்கும் தெரியாத உண்மை. இதுபற்றி முருகபூபதி தனது கட்டுரையில் ஏனோ தொட்டுச் சென்றிருக்கிறார். 'பவர்' இன்றுவரை ஒரு பதிவு செய்யப்படாத இலக்கிய அமைப்பு, யாப்பு இல்லாதது. இதனால் தனிப்பட்ட முறையில் இதன் பெயர் எவருக்கும் சொந்தமில்லாதது, உரிமை கோரமுடியாதது.

ஆரம்பத்தில் 'பவர்' அமைப்பின் சார்பில், இலங்கை அரசியல் வரலாற்றையும் தமிழர் வரலாற்றையும் விளக்கும் ஈடு, வீடு, காடு என்னும் தாள லய கவிதைவடிவ நாடகங்களை எழுதி மேடையேற்றத் தீர்மானிக்கப்பட்டது. ஈடு, வீடு ஆகிய இரண்டு நாடகங்கள் மேடையேற்றப்பட்டுப் பெரும் வரவேற்பைப் பெற்றன. காடு, சில காரணிகளால் முழு வடிவம் பெறவில்லை. ஈடு நாடகம், 1992ம் ஆண்டு சிட்னியில் நடந்த உலகத் தமிழர் பண்பாட்டு மாநாட்டில் நடிகர் சிவகுமார் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. காடு, மக்குவாறி பல்பலைக்கழக அரங்கில் மேடையேறியது.

இதைத் தொடர்ந்து அன்ரன் செக்கோவின் 'இருதுருவங்கள்' (தமிழ் வடிவம்), Bertolt Brecht என்னும் ஜேர்மன் நாடகவியலாரின் 'ஒரு பயணத்தின் கதை' (தமிழ் வடிவம்), மகாகவியின் 'புதியதொரு வீடு' 'பம்மாத்து' போன்ற காத்திரமான நாடகங்கள் பவர் அமைப்பின் தயாரிப்புக்களாக பல மேடைகளில் மீண்டும் மீண்டும் மேடையேற்றப்பட்டு பாராட்டுதல்களைப் பெற்றன. இவை அனைத்திலும் முக்கிய பாத்திரங்களில் நான் வேஷம் கட்டியதை இங்கு பதிவு செய்வது காலத்தின் கட்டாயமாகிறது. 'ஒரு பயணத்தின் கதை' வட்டக்களரி கூத்து வடிவிலான நாடகத்தின் வெற்றிக்கு அண்ணாவியார் இளைய பத்மநாதனின் நெறியாள்கை காரணமாயிருந்தது.

சிட்னி தமிழ் அரங்கக் கலைகள் + இலக்கியப் பவர் அமைப்பில் நான் தலைவராக இருந்தகாலத்தில், எனது பெரு முயற்சியில் மேற்கு சிட்னி பல்கலைக் கழகத்தின் அரங்கக் கலைகள் பீடத்தின் அனுசரணையுடனும் பாரிய பங்களிப்புடனும் 'சர்வதேச அரங்கக் கலைகள் மாநாடு' சிட்னியில் நடந்தது. பிரதம பேச்சாளராக சிங்கப்பூரிலிருந்து நாடகவியளார் இளங்கோவன் வந்து கலந்துகொண்டார். நாடக விற்பன்னர் பாலேந்திரா உள்ளடங்கலாக பலரின் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுதி வெளியிடப்பட்டு உலகளாவிய நூலகங்களுக்கு அனுப்பப்ட்டது. இம் மநாட்டில் நாடக ஜாம்பவான்களான மக்கன்டயர், அண்ணாவியார் இளைய பத்மநாதன், சிங்கப்பூர் இளங்கோவன் ஆகியோர் நடாத்திய நாடகப் பட்டறைகளும் நடந்தன.

சில காரணிகளால் 2001ம் ஆண்டு தொடக்கம் எஸ்பொவும் நானும் (எஸ்பொவால் ஸ்தாபிக்கப்பட்ட) சிட்னி தமிழ் அரங்கக் கலைகள் + இலக்கியப் பவர் என்னும் அமைப்பில் அங்கம் வகிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து 20 வருடங்கள், துடிப்புடன் இயங்கிய 'பவர்' அமைப்பு எந்தவித கலை இலைக்கிய முயற்சிகளுமின்றி முடங்கிப் போனது சோகம். இதற்கான காரணத்தை ஆராய்ந்தால், எல்லோருக்கும் எல்லாம் தெரியும் என்பதே பதிலாக அமைகிறது.

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

எழுத்தாளர் முருகபூபதியால் ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கத்தில் ஆரம்பகால உறுப்பினராகவும் இரண்டு முறை தலைவராகவும் இருந்து பணியாற்றியிருக்கிறேன். அவை மிகவும் ஆரோக்கியமான காலங்கள். இதுவும் முருகபூபதி தனது கட்டுரையில் சொல்ல மறந்த கதை. அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம், தொடர்ந்தும் இலக்கியப் பணியாற்றவும் திரு முருகபூபதி நலத்துடன் நீடு வாழவும் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

தமிழ் முழக்கம் வானொலி

இலங்கை இனக்கலவரங்களைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெர்ந்த தமிழர்களுக்கு தாயகச் செய்திகளை அறிய அப்போது ஒரு ஊடகம் தேவைப்பட்டது. இணைய இணைப்புக்கள் இல்லாத காலம் அது! அக்காலங்களில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை SBS வானொலியில் 30 நிமிடங்களுக்கு திரை இசைப் பாடல்களே ஒலிபரப்பானது. இந்நிலையில் தமிழர்களின் தேவை கருதி உருவானதே இரண்டேகால் மணிநேர தமிழ்முழக்கம் தமிழ் வானொலி ஒலிபரப்பு. இது பல்லின பல்காலாசார சபையால் ஆரம்பிக்கப்பட்ட றேடியோ 2000 (Free to air) வானொலியிலிருந்து பிரதி சனிக்கிழமை தோறும் ஒலிபரப்பப்பட்டது.

இலங்கை இந்திய செய்திகள், செய்தி விவர்ணங்கள், செவ்விகள், நாடகங்கள், சிறுவர் நிகழ்ச்சிகள், ஜனரஞ்சக அம்சங்கள் என பலதும் ஒலிபரப்பாகி புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு நல்ல தீனியாகியது. சனிக்கிழமை இரவு 8 மணிக்கு என்ன வேலை இருந்தாலும் தமிழ்முழக்கம் வானொலியைக் கேட்பது தமிழர்களின் வழக்கமாகியது. பல்லின பல்காலாசார சபையில் நான் அப்போது ஒரு நிர்வாக அங்கத்தவனாக இருந்த காரணத்தாலேயே முக்கிய நாளான சனிக்கிழமை இரவு 8 மணிதொடக்கம் இரண்டகால் மணிநேரம் தமிழ் ஒலிபரப்பைப் பெறக்கூடியதாக இருந்தது. பல அமைப்புக்களின் கூட்டங்களில் வானொலி வேண்டுமென பலரும் கதைத்ததோடு நின்றுவிட்ட நிலையில் வானொலி நிகழ்சியை வடிவமைத்து, தயாரித்து ஒலிபரப்பியதில் நான் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்திருக்கிறேன். அப்பொழுது என்னை தமிழ்முழக்கம் றேடியோ கந்தராஜா எனவே அழைப்பார்கள். தமிழ்முழக்கம் வானொலியின் தலைவராகவும் இணைப்பாளராகவும் பலவருடங்கள் பணியாற்றியது கொசுறுச் செய்தி!

1992ம் ஆண்டு நவம்பர் மாதம் முதன்முதலாக இவ் ஒலிபரப்பு வானலைக்கு வந்தது. இவ் ஒலிபரப்பில் திரு பாலசிங்கம் பிரபாகரனும் இணைந்திருந்தார் என்ற மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட தகவலை இங்கு பதிவு செய்யவேண்டும். இன்றுவரை ஒலிக்கும் தொடக்க, முடிவு மற்றும் செய்தி நிகழ்ச்சிகளைக் குறிக்கும் இசை, நானும் திரு பாலசிங்கம் பிரபாகரன் அவர்களும் தொகுத்தவையே.

இன்று வானொலி யாம்பவான்களாகத் தங்களை எண்ணிக்கொள்ளும் சிட்னி வானொலியாளர்களில் கணிசமானவர்கள் என்னிடமும் திரு பாலசிங்கம் பிரபாகரனிடமும் 'வணக்கம் நேயர்களே!' சொல்லப் பழகியவர்களே. காலஓட்டத்தில் ஒருசிலரின் இருப்புக்காக திரு பாலசிங்கம் பிரபாகரன் தமிழ்முழக்கம் ஒலிபரப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து உருவானதே பிரபாகரனின் முத்தமிழ் மாலையும் இன்பத்தமிழ் வானொலியும்.

ஒரு நிலையில் வானொலி ஒலிபரப்பு, கிலோ என்னவிலை? எனக் கேட்கும் நபர்களுடன் பணிபுரிய முடியாத நிலையில் நானும் ஒதுங்கிக்கொண்டேன். தமிழ் முழக்கம் free to air வானாலி, உலக்கை தேய்ந்து உளிப்பிடியாகி இன்று சேடமிழுத்தபடி ஒலிபரப்பாகிறது. ஒரு காலத்தில் வெகு பிரபல்யமாக இருந்த இவ் ஒலிபரப்பு இன்று யாருமறியாத நிலைக்கு வந்ததற்கான காரண காரியங்கள் ஆராயப்படவேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.