-  அ.ந.கந்தசாமியின் இளமைத்தோற்றம் -

- எழுத்தாளர் அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றி எழுத்தாளர் அந்தனி ஜீவாவின் இக்கட்டுரை பூபாலசிங்கம் பதிப்பகம் வெளியிட்ட  அவரது  ' இவர்கள் வித்தியாசமானவர்கள்' நூலிலிருந்து மீள்பிரசுரமாகின்றது.  அ.ந.க பற்றி இவர் எழுதி தினகரன் பத்திரிகையில் தொடராக வெளியான 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரைத்தொடர், 'அ.ந.க ஒரு சகாப்தம்' நூல், அவ்வப்போது மல்லிகை சஞ்சிகையில் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை.   அந்தனி ஜீவா அவர்களின் இலக்கியப் பங்களிப்பு முக்கியமானது. மலையகத்தமிழ் மக்கள் பற்றி, அவர்கள்தம் கலை, இலக்கியப் பங்களிப்புகள் பற்றி அவரது எழுத்துகள் , வெளியிட்ட நூல்கள், 'கொழுந்து சஞ்சிகை' ஆகியவை முக்கியமானவை. தற்போது சிறிது உடல்நலம் குன்றி இருப்பதாக அறிகின்றோம். விரைவில் அவர்  பூரண நலத்துடன் மீண்டு வந்து மீண்டும் முன்னரைப்போல் செயலாற்றுவார் என்று எதிர்பார்ப்போம். வேண்டிக்கொள்வோம். - பதிவுகள்.காம் -


கொழும்பில் என்னை ஓர் இளைஞர் தேடி வந்தார். “கலாநிதி சபா" ஜெயராசா உங்களிடம் அனுப்பினார். இலக்கிய முன்னோடி அ.ந. கந்தசாமியைப் பற்றிய குறிப்புகளைத் தந்துதவ வேண்டும், அ.ந. கந்தசாமியைப் பற்றிய பல்கலைக்கழக ஆய்வுக்கு குறிப்புகள் தேவை என்றார். அந்தப் பல்கலைக் கழக மாணவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தினகரன் வார மஞ்சரியில் சில வாரங்கள் தொடராக எழுதிய அறிஞர் அ.ந. கந்தசாமியைப் பற்றிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்ற கட்டுரையையும், மற்றும் அ.ந.க.வை பற்றி எழுதிய மற்றும் குறிப்புகளையும் கொடுத்து அனுப்பினேன்.

நினைவு நாள்
அதற்குச் சில தினங்களுக்கு பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிஞர் அ.ந. கந்தசாமியின் நெருக்கமான நண்பரான தான் தோன்றிக் கவிராயர் திரு.சில்லையூர் செல்வராசன் அவர்களைச் சந்தித்தேன். பெப்ரவரி மாதம் அ.ந.க.வின் நினைவு நாள் வருகிறது என நினைவூட்டினேன்.

நானும் சில்லையூரும் அ.ந.க.வைப் பற்றிய பழைய நினைவுகளை இரைமீட்டிப் பார்த்தோம். பின்னர், வீடு திரும்பிய பின்னர் அறிஞர் அ.ந.க.வைப் பற்றிய நினைவுகள் என் நெஞ்சில் திரைப்படம் போல் விரிந்தன. நான் பாடசாலை மாணவனாக இருந்த காலத்தில் அறிஞர் அ.ந.க.வைச் சந்தித்தேன். அவரை எனக்கு யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது ஞாபகமில்லை. அவர் அப்பொழுது தகவல் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்தக்கால கட்டங்களில் கவிஞர் சில்லையூர் செல்வராசன் ஷெல் கம்பெனியின் விளம்பரப் பிரிவில் உயர் உத்தியோகம் வகித்தார். சில்லையூர் செல்வராஜனை எனக்கு அ.ந.க. தான் அறிமுகப்படுத்தி வைத்தார்.

                    - எழுத்தாளர் அந்தனி ஜீவா -

அறிஞர் அ.ந.கந்தசாமியினது நட்பின் காரணமாக இலக்கிய உலகின் ஒரு சகாப்தத்தின் பிரதிநிதிகளான படைப்பாளிகளையும் விமர்சகர்களையும் கல்விமான்களையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியது. பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி, பிரேம்ஜி ஞானசுந்தரம், செ. கணேசலிங்கன், கே.டானியல், எச்.எம்.பி. முஹைதீன், என்.கே.ரகுநாதன், இளங்கீரன், டொமினிக் ஜீவா, ஈழத்துச் சோமு போன்ற அரிய மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் அவர்களோடு பழகவும் உறவாடவும் சந்தர்ப்பமும் கிட்டின. முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் கூட்டங்களில் அழைப்பில்லாமல் ஆஜராகிவிடுவேன். இதற்கெல்லாம் காரணம் அறிஞர் அ.ந.க. இலக்கியக் கூட்டங்கள் பற்றி எனக்கு முன்கூட்டியே தகவல் தந்து விடுவார். பெரிய படைப்பாளிகள் எல்லாரும் என்னை ஒரு சீடனாக நடத்தாமல் சக தோழனைப் போல நடத்தினார்கள்.  அப்பொழுது பேராசிரியர் கா.சிவத்தம்பி வெள்ளவத்தையில் ருத்ரா மாவத்தையில் தங்கியிருந்தார். அங்கதச் சுவையுடன் பேசுவதில் வல்லவர். அவரைச் சந்தித்து உரையாடுவதே ஒரு சுகானுபவமிக் இருக்கும். முன்னோடிகள் அறிஞர் அ.ந.க. எனக்கு உலக இலக்கியங்களையும், தலை சிறந்த படைப்பாளிகளைப் பற்றியும் அடிக்கடி எடுத்துக் கூறுவார். ஓர் எழுத்தாளன் எப்படி எழுத வேண்டும், அவன் எதற்காக எழுத வேண்டும், இதற்குத் தனக்கு முன்னோடியாக இருந்தவர்களைப் பற்றி ஒருமுறை அறிஞர் அ.ந.க. குறிப்பிட்டது இன்னும் என் நெஞ்சில் பசுமையாக இருக்கின்றது.

'பிரெஞ்சுப் புரட்சி கண்ட ரூஸோ, வால் டயர் தொடக்கம், மாக்ஸிம் கார்க்கி, எஹ்ரென் பேர்க்' வரைக்கும் எல்லா நல்ல எழுத்தாளர்களைப் பற்றியும் இந்தச் செய்தியை எனக்குக் கூறினார். பேர்னாட்ஷாவின் எழுத்துக்களும், பேட்ரன்ட் ரஸல் எழுத்துக்களும் கூட சமுதாய முன்னேற்றத்துக்குரிய பிரச்சனைகளுக்குத் தீர்ப்புக் காணும் பணியை அலட்சியம் செய்து விடவில்லை. வங்கக் கவிஞர் தாகூரும், தமிழ்க் கவிஞன் பாரதியும் தாம் வாழ்ந்த சமுதாயத்தில் உடனடிப் பிரச்சனைகளைத் தீர்க்கும் பணிக்குத் தமது பேனாக்களை அர்ப்பணம் செய்ய மறக்கவில்லை. உலகப் பண்பாடிய பாரதிதாசனும், சமுதாய ஊழல்களைச் சுட்டெரிக்கும் பணிக்குத் தன்னாலான சேவைகளைச் செய்திருக்கிறார்' 

இவ்வாறு தன்னை நெறிப்படுத்திய எழுத்தாளர்களைப் பற்றி அறிஞர் அ.ந. கந்தசாமி பெருமையுடன் குறிப்பிட்டார்.

மகாகவி பாரதியைப் பற்றி அ.ந. கந்தசாமி எப்பொழுதும் பெருமையோடு குறிப்பிடுவார். 'முற்போக்குக் கவிஞன். ஆனால் மக்கள் பிரச்சனைகளைப் பாடிய அதே வாயால் கண்ணன் என் காதலனையும் பாடினார். இதற்கு ஒரு விளக்கத்தையும் அ.ந.க. கூறினார். 'தோட்டக்காரன் கத்தரிக்காயையும், கீரையையும், தக்காளியையும் பயிரிடுகிறான். ஆனால், வீட்டு வாசலிலே மல்லிகைக் கொடியைப் படர விடுவதில்லையா?  கத்தரித்தோட்டத்து வேலையின் களைப்புப் போக, மல்லிகை பந்தலின் நறுமணத்தை மகிழ்ச்சியோடு உறிஞ்சி மகிழ, அதன் கீழ் சென்று உட்காருவதில்லையா?  எமக்கு நெல்லும் வேண்டும். கோதுமையும் வேண்டும், காய்கறிகளும், கிழங்குகளும் வேண்டும். ஆனால் ரோசா மலர்களும் வேண்டும்.  ரோசா மலர்களை மன நிறைவுக்காக நடும் தோட்டக்காரனை ரோசா மலர் நடுபவன் என்று சொல்லமாட்டார்கள். தோட்டக்காரன் என்று தான் அழைக்கப்படுவான்'

'பிள்ளையைத் தூங்க வைக்கையில் தாலாட்டு பாடுவோம். ஏற்றம் மிறைக் கையில் ஏற்றப்பாட்டுப் பாடுவோம். அணிவகுப்பில் புரட்சி கீதம் பாடுவோம். ஆனால் குளிக்கும் அறையில் வெறும் ஸ்வரங்களை நாம் வாய்விட்டு இசைப்பதில்லையா?'

இவ்வாறு சந்திக்கும் பொழுதெல்லாம் அறிஞர் அ.ந.க. பல அரிய கருத்துக்களை எனக்கு எடுத்துக் கூறுவார்.

                    - அறிஞர் அ.ந.கந்தசாமி -

பல நண்பர்கள்
அறிஞர் அ.ந.கந்தசாமிக்குப் பல்வேறு மாவட்டங்களில் நண்பர்கள் இருந்தார்கள். அறிவு ஜீவி முதல் சாமானிய மனிதன் வரை அவரை மனம் விட்டு நேசித்தனர். அறிஞர் அ.ந.க. பொது உடமைவாதியாக இருந்தாலும், பெரியார் ஈ.வே.ரா. மீது பெரும் பக்தி வைத்திருந்தார். அவரைப் பற்றி மணிக்கணக்கில் பேசுவார். பெரியாரின் சுயமரியாதை இயக்கக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டிருந்தவர்கள் பலர் அ.ந.க.வுடன் தோழமை பூண்டிருந்தனர்.

கம்யூனிஸ்டான திரு.பீட்டர் கெனமனும், திராவிட முன்னேற்றக் கழகத்தவரான திரு.இளஞ்செழியனும், சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த திரு.நாகலிங்கமும், அன்பு மார்க்கத்தைச் சேர்ந்த பூபதிதாசரும், கலாபிரியரான திரு.பாலச்சந்திரனும் அவருக்கு நண்பர்களாக இருந்ததில் வியப்பில்லையல்லவா? நாடகத்துறையில் நடிப்பில் தலைசிறந்து விளங்கிய நடிகவேள் லடீஸ் வீரமணியின் திறமையை உணர்ந்த அறிஞர் அ.ந.க. ஒருவரே; அவருக்கு அன்பு காட்டியது மாத்திரமின்றி அவரது திறமைகளைப் பற்றிப் பலரிடம் எடுத்துச் சொல்லியும் அவரைப் படித்தவர்கள், பத்திரிகையாளர்கள் மத்தியில் புகழுக்குரியவராக்கினார். அதனால் தான் நடிகவேள் லடீஸ் வீரமணியும் அவரது மனைவியும் அறிஞர் அ.ந.கந்தசாமி மரணப்படுக்கையில் இருக்கும் பொழுது அவரருகில் இருந்து பணிவிடைகளைச் செய்தார்.

நல்ல வழிகாட்டி
என்னுடைய இன்றைய கலை, இலக்கிய முன்னேற்றத்துக்கு வழிகாட்டியாக, முன்னோடியாக நின்று உதவியவர் அறிஞர் அ.ந.க. என்பது சாத்தியமான உண்மையாகும். இன்று நான் நாடக உலகில் பிரகாசிப்பதற்குக் காரணம் அவரது அறிவுரைகளே. உலகப்புகழ் பெற்ற நாடகாசிரியர்களான இப்ஸெனையும், பெக்சாட்டையும், பேர்டோல் பிரட்ஜையும் பற்றி எனக்குச் சொல்லித் தந்தவர் அவரே.
தமிழ் நாடகமேடை நலிவுற்றுக் கிடக்கிறது. அதனால் நாடகத்துறையில் அதிக அக்கரை காட்ட வேண்டும் என எனக்கு ஊக்கமூட்டியவர் அறிஞர் அ.ந.கந்தசாமி எனக்கு மாத்திரமல்ல, இன்னும் பலருக்கு வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் இருந்துள்ளார். அந.க.வைப் பற்றிய நினைவுகள் இன்றும் என் நெஞ்சில் பசுமையாக இருக்கின்றன. அறிஞர் அ.ந.க. மறைந்து பதினெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அவரின் நினைவு நிலைத்திருக்க ஏதும் செய்தோமா என்றால் பூஜ்யம் தான். இனிவரும் நாட்களிலாவது அவரைப் பற்றிய ஒரு நூலையாவது வெளியிட வேண்டும் என்று எனக்குள் கங்கணம் கட்டிக் கொள்கிறேன்.

அ.ந.கந்தசாமியின் படைப்புகள்:

நாடகம் - மதமாற்றம்

உளவியல் நூல் - வெற்றியின் இரகசியங்கள்

மின்னூல்கள் (அமேசன் & கிண்டில் பதிப்பு) :

மனக்கண் (நாவல்) - அ.ந.கந்தசாமி -  பதிவுகள்.காம் வெளியீடு

எதிர்காலச் சித்தன் பாடல் - அ.ந.கந்தசாமி (கவிதைகள்) -  பதிவுகள்.காம் வெளியீடு

நான் ஏன் எழுதுகிறேன்? - அ.ந.கந்தசாமி (கட்டுரைகள்) -  பதிவுகள்.காம் வெளியீடு