- அண்மையில் டொரெண்டோ வந்திருந்த எழுத்தாளர் ஜெயமோகன், தன் டொரோண்டோ அனுபவங்களைத் தனது வலைப்பதிவில் 'ஓர் அமெரிக்கக் கனவு' என்னும் கட்டுரையில் பதிவு செய்திருந்தார். அதனை ஒரு தகவலுக்காக இங்கு பதிவு செய்கின்றோம். -


டொரெண்டோவில் இரு நிகழ்வுகள். ராஜன் சோமசுந்தரம், ஆஸ்டின் சௌந்தர், ராதா  ,பழனிஜோதி மகேஸ்வரி ,வெங்கடப்பிரசாத் என நண்பர்கள் வந்து ஒரு வாடகைப் பங்களாவை எடுத்து அங்கே தங்கியிருந்தோம். மிக வசதியான அழகிய பங்களா. முத்துலிங்கமும் முரளியும் முன்னரே சென்று அது வசதியானதா என்று உறுதிசெய்துகொண்டனர் என்று அறிந்தேன். முத்துலிங்கம் மிக இளமையிலேயே உயர்நிர்வாகியாக ஆகி, அப்படியே பணியாற்றி உச்சநிலைகளில் இருந்து ஓய்வுபெற்றவர். மிகச்சிறந்த நிர்வாகி. (ஆனால் ஒரு சாதாரண ஊழியனாக வாழ்ந்த எனக்கு அவரை அப்படிப் பார்க்கையில் ஒரு நடுக்கம். நல்லவேளை நான் இவர் கீழே வேலைபார்க்கவில்லை என நினைத்துக்கொண்டேன்)

அ.முத்துலிங்கத்தையும் காலம் செல்வத்தையும் நீல்கிரீஸ் என்னும் உணவகத்தில் காலை சந்தித்தோம். முத்துலிங்கத்தைச் சந்திப்பது பற்றி எனக்கொரு கிளர்ச்சி இருந்துகொண்டே இருந்தது. நாங்கள் நேரில் சந்தித்து பல ஆண்டுகளாகிறது – எனக்கு இயல்விருது அளிக்கப்பட்டபோது. ஆனால் நேரில் சந்தித்தபோது என்னென்னவோ உணர்வுகள். நான் அவரை அடிக்கடிச் சந்தித்துக்கொண்டே இருப்பதுபோல. அவருடைய தோற்றம், பேச்சு எதுவுமே புதியதாக இல்லை. மானசீகமாக அவருடனேயே இருக்கிறேன் என உணர்ந்தேன்.

இந்த உணர்வு அறிவியக்கத்தில், கலையில் எப்போதுமே முக்கியமானது. பிற எல்லா தளங்களிலும் முந்தைய தலைமுறையினர் அடுத்த தலைமுறையினரிடமிருந்து விலகிச் செல்கின்றனர். பெற்றோர் கூட பிள்ளைகளிடமிருந்து விலகியே ஆகவேண்டும். அது இயற்கைநெறி. ஆனால் கலை, அறிவுத்தளங்களில் நம் உள்ளம் முந்தைய தலைமுறையினரிடம் மிகுந்த தீவிரத்துடன் இணைகிறது. அவர்களையே எண்ணிக்கொண்டிருக்கிறோம். அவர்கள்மேல் பெருங்காதல் கொண்டிருக்கிறோம். அவர்களை பெரும் பரவசத்துடன் தியானிக்கிறோம். ஏனென்றால் அதுவும் இயற்கைநெறியே. கலையிலக்கியம் வழியாகவே தலைமுறைகளின் தொடர்ச்சி நிகழ்கிறது. தனித்தனி நபர்களால் இயற்றப்பட்டாலும் கலையிலக்கியம் என்பது ஒரே ஒழுக்குதான். அதில்தான் நானும் அ.முத்துலிங்கமும், ஷேக்ஸ்பியரும், கம்பனும் எல்லாம் இருக்கிறோம்.

அ.முத்துலிங்கத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். கண்களையே எடுக்க முடியவில்லை. அவர் தலைசீவியிருந்த விதம்கூட நன்கு தெரிந்ததாக இருந்தது. அவருடைய சிரிப்பு மிகமிக தெரிந்ததாக இருந்தது. நாகர்கோயிலில் பார்வதிபுரத்தில் இருந்து வடிவீஸ்வரம் சென்று அவரைச் சந்தித்ததுபோல. அத்துடன் 2001ல் அவரை முதலில் சந்தித்த நினைவுகள். ஆனால் அவையும்கூட மிகமிக அண்மையில், சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்ததுபோல இருந்தன. அந்த பிரமையில் இருந்து வெளியேற முடியவே இல்லை. ஆனால் டொரெண்டோவில் இருந்து கிளம்பும்போது சட்டென்று அவரை எண்ணி ஓர் ஏக்கம் உருவானது. உடனே அடுத்த ஆண்டே திரும்ப வரவேண்டும் என்னும் எண்ணமும்.

கனடா இலக்கியத் தோட்டம் ஒருங்கிணைத்த உரை அக்டோபர் 21 ஆம் தேதி. டொரெண்டோவில் உரைக்கு கட்டணம் வைத்தது இதுவே முதல்முறை என்றனர். டொரெண்டோ மாநகராட்சிக் கூட்டம் நடைபெறும் சிட்டி கௌன்ஸில் சேம்பர்ஸ் அரங்கம். மிகச்சிறந்த ஒலி- ஒளி அமைப்பு, இருக்கையமைப்பு. அரங்கு நிறைந்திருந்தது. மேடையில் எழுந்து நின்றபோது ஒரு கலவையான புலம்பெயர்ந்த தமிழ்ச்சூழலை பார்க்கும் உணர்வு உருவானது.

நான் ஒருமணிநேரம் பேசினேன். அரைமணிநேரம் கேள்விகள். உரை இயல்பாக, உற்சாகமாக ஒரு பண்பாட்டுச் சித்திரத்தை முன்வைப்பதாக இருந்தது. என் உரைகள் கேட்பவர் எழுந்துசெல்லும்போது கொஞ்சம் குழம்பி, கொஞ்சம் ‘சரிதானே’ என எண்ணி, கொஞ்சம் ‘அப்படி இருக்குமா’ என ஐயுற்று தனக்குள் உசாவிக்கொள்ளும்படி அமையவேண்டும் என எண்ணுவேன். நான் முன்வைப்பது என் அறுதியான கருத்தை அல்ல, என் சிந்தனையின் ஓட்டங்களை. நான் அழைப்பது என்னுடன் இணைந்து சிந்திக்க.

விற்பனைக்கு வைக்கப்பட்ட எல்லா நூல்களுமே விற்றுத்தீர்ந்தன என்று மகிழ்ச்சியாகச் சொன்னார்கள்.  நீண்ட வரிசையில் நின்று நூல்களை வாங்கி, கையொப்பம் பெற்றுக்கொண்டார்கள். அதுவும் ஓர் அரிய காட்சி என்று அ.முத்துலிங்கம் சொன்னார். தேவகாந்தனைப் பார்த்தேன். துணைவியின் மறைவு அவரை கொஞ்சம் சோர்வுறச் செய்திருந்தது. அவருடைய கனவுச்சிறை நாவல் தனிநாவல்களாக ஆங்கிலத்தில் வெளிவந்துகொண்டிருக்கிறது.

இளங்கோ (டி.செ.தமிழன்) வந்திருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பின் மைக்கேலை (மான்ட்ரியல்) பார்த்தேன். தீவிரமாக எழுத தொடங்கி பின் நின்றுவிட்ட நண்பர்களில் ஒருவர் அவர். 2001ல் மான்ட்ரியல் சென்று அவர் இல்லத்தில் தங்கியிருக்கிறேன். சிவதாசன் (யாழ்நூலை பதிப்பித்தவர்) வ.ந.கிரிதரன் (பதிவுகள் இணையதளம்) ஆகியோரைச் சந்தித்தேன்.நண்பர் சுமதி ரூபன் வருவார் என எதிர்பார்த்தேன். அவர் நகருக்கு வெளியே சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். அன்று மாலை வழக்கறிஞர் மனுவேல் ஜேசுதாசன்  வீட்டில் ஒரு சந்திப்பு.

மறுநாள் , அக்டோபர் 22 அன்று டொரெண்டோவில் அதர் ஸ்டோரீஸ் என்னும் புத்தகக் கடையில்  அறம் கதைகளின் ஆங்கில மொழியாக்கமான Stories of the True ஒரு சந்திப்பு. அந்தக்கடையின் வாடிக்கையாளர்களை உத்தேசித்தது. கனடிய எழுத்தாளர் நேட்ரா ரோட்ரிகோ ஒருங்கிணைத்தார். அறுபதுபேர் வரை வந்திருந்தனர். சிற்றரங்கம் நிறைந்த கூட்டம்.

கவிஞர் சேரன், நண்பர் வெங்கட்ரமணனின் மகன் வருண், கனடிய எழுத்தாளர் கூம் ஆகியோர் தொகுப்பு பற்றிப் பேசினர். நான் ஒருமணி நேரம் கேள்விகளுக்குப் பதிலளித்தேன். என் உரையாடல் மிகச்சிறப்பாக இருந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். அ.முத்துலிங்கமும் டிவிட்டரில் சொல்லியிருந்தார்.

நன்றி: https://www.jeyamohan.in/192566/