- ஜனவரி 14 அன்று இலண்டனில் பேராசிரியர் கோபாலப்பிள்ளை மகாதேவா (கோபன் மகாதேவன்) மறைந்த செய்தியினை அவரது குடும்பத்தினர் பேராசிரியரின் முகநூல்  பக்கத்தில் அறிவித்துள்ளார்கள். அவரது இழப்பால் ஆழ்ந்த துயரிலிருக்கும் அனைவர்தம் துயரில் 'பதிவுக'ளும்  பங்குகொள்கின்றது. 'பதிவுகள்' இணைய இதழின் ஆலோசகர்களில் ஒருவராகவிருந்தார். கடந்த சில வருடங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தபோதும் தொடர்ந்தும் புத்துண்ர்ச்சியுடன் முகநூலில் இயங்கிக்கொண்டிருந்தவர் பேராசிரியர். அவரது ஆக்கங்கள் பல, கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என, பதிவுகள் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. அவற்றில் சிலவற்றை அவர் நினைவாகப் பகிர்ந்துகொள்கின்றோம். - ஆசிரியர், பதிவுகள்.காம்  -



1. உனக்காக என் இதயத்திலிருந்தொரு கவிதை!

 - மறைந்த அவரது  மனைவி  வைத்தியர் திருமதி சீதாதேவி மகாதேவா நினைவாகப் பேராசிரியர் கோபன் மகாதேவா எழுதிய கவிதை. -

நித்திரையே வாராத நீள் இரவின்  நதியினில் நீந்துகிறேன்.
பத்தரை மாற்றவள் எனப் பல் மக்கள் புகழ்ந்து சொன்ன
பத்தினியாள் பிரிந்துசென்று வாரம் ஏழு ஆகுது இன்று.

எத்தனையோ எண்ணங்கள் எனது நுனி மனக் குகையில்
நத்தைகள்போல் நெளிந்து நித்திரையை அரித்து உண்டு
புத்தியையும் புண் ஆக்கிச் செல்லும் வேகமும் அடக்கிச்

சத்தியமும் சபலமும் சாக்கடையின் சேறையும் கலந்து
மெத்தையிலே நீரூற்றாய் மேனி தனைக் குளிப்பாட்டி
எத்தையுமே நிரல் போட்டு எத்தனிக்கும் அதை நிறுத்தி

முத்துமுத்தாய் முன்னாளில் கவி புனைந்த என் மனசைக்
குத்திக் குடைவதனால் குழப்பத்துக்கு உருக்கொடுத்து
கத்திக் கதற வைத்துப் பல கலவரங்கள் உண்டு செய்து

சத்தம் இல்லா இரவினிலே சலசலப்பால் நிறை குலைத்து
செத்து ஒழிந்த நாட்களுக்கு நான் செல்லாமல் முன் போக
உத்தி ஒன்றும் தோன்றாது உருளுகிறேன் தீச்சுடரில்

2.  செல்லுயிரே, நல்லிரவு!

சென்ற உயிர் சிரிக்கிறது
முன் சுவரில், சித்திரமாய்.
 
நல்லிரவு! என்றேன்,  யான்
செல்லமாய், வழக்கம் போல்.
 
தரித்திருக்கும் எனது உயிர்
தவித்தாலும், துணை குன்றி...
 
இன்னும் ஒரு மணித் துகளில்
மின் விளக்கு அணைந்து விடும்...
 
சோர்ந்த இமைக் கண் இரண்டும்
போர்வையுடன் பிணைந்துவிடும்.
 
பத்து மணி நித்திரையில்
சித்தம் இலாச் சொர்ப்பனங்கள்!
 
இன்னும் ஒரு  யுகம் பிறக்க
இன் உலகம் மலர்ந்திடுமா?


4.  சொல்லாத வார்த்தைகள்                                                                                       

இல்லாத இலக்கைப் போல்... நில்லாத நிழலைப் போல்...  
சொல்லாத வார்த்தைகளை எவர் எங்ஙனம் காண்பார்?  
 சொல்லாத வார்த்தைகளை எவர் எங்ஙனம் கேட்பார்?
சொல்லாத வார்த்தைகளை எவர் எவ்வாறு அறிவார்?  

வில்லாலே விசயன் நில-நீர் நோக்கி மேலே-சுழல் மச்சம்     
நல்லாய்க் குறி வைத்து நங்கையைப் பிடித்தான் என்றால்...
பொல்லால் தன் பெண்ணாளை இருள்பிடித்த அடுக்களையுள்  
கல்வி-குறை முடக்குருடன் அடக்கத் துணிந்ததைப்போல்... நாம்...

அவல் போன்ற வார்த்தைகளை வெறும் வாயில் சப்புவதா?
 சவர்க்காரக் குமிழிகளால் கவிக் கோட்டை கட்டுவதா?   
இவர் என்ன, சுவர் இல்லாச் சித்திரங்கள் தேடுகிறார்?      
மந்திரத்தால் மாம்பழங்கள் யாம் விழுத்த வேண்டுகிறார்?    
சந்தி சிரிக்க வைக்க எமைச் சங்கடத்தில் மாட்டுகிறார்?    
 
மூலைகளில் மௌனமாய் இருந்து எழுதும் எமைச் சீண்டி       
மூளையுள்ளே முடங்கியுள்ள திரவியங்கள் தோண்டுகிறார்?  
ஆலையிற்போல் அலைவரிசை ஆக்கங்கள் தேடி...வேறு
வேலை இல்லை எமக்கென்று ஓட்டை வலை வீசுகிறார்!

சமகால இலக்கியத்தில் சமபங்கு எமக்கு உண்டு என்பது உண்மை!  
கமகமவாம் கந்தமுடை நூல்கள்பல இருமொழியில் நாம்செய்தது உண்மை!!
எமகாத ஊக்குநர்கள் எனக் கண்ட சிலரிடம் நாம் வீழ்ந்ததும் உண்மை.   
தமதுதனித் திட்டங்கள் மற்றோர்க்கும் ஏற்றாலன்றோ பொது நன்மை வெல்லும்!
                                
இலக்கியத்துக்கு இலக்கு வேண்டும். அல்லவேல், இலக்கியம் சிதறிச் செல்லும்.  
பல-நோக்கு இலக்கியம் பரந்து, பறந்து விடும். பாருக்கும் அதன் பலன் குன்றும்.   
சிலர்-இலக்கு மற்றவர்க்குச் சரி வராது. சிந்தித்தால் அதுவும் நியாயமே தான்!
பலர்நோக்கு ஒன்றாகி உருவாகும் இலக்கியங்கள் என்றும் காலத்தை வெல்லும்.

இன்றைய கவியரங்கில் பங்குகொள்ளும் பாவலர்கள் எல்லோரும் எமது நண்பர்.
தன்னலத்தைத் துறந்து தமிழ் இலக்கியத்துக்குத் தொண்டாற்றத் துடிதுடிப்போர்.
இன்றுள்ள உலகில் தமிழ் தழைத்தோங்குதற்குத் தம்மால் ஆனதைச் செய்வோர்.
 இன்தமிழைச் சுவாசிப்போர், நேசிப்போர், பா இயற்றித் தம் பசியையும் மறுப்போர்.               
அன்னார்களுடன் இன்று, இவ்வரங்கு தனில் இணைவதில் மிக மகிழ்ச்சி உற்றேன்.
இன்று விலகிவரும் தமிழ்இன்னல் கெதியில் மறைய வேண்டி முடிக்கின்றேன் யான்.                                 


5. விடைகிடைக்கா வினாக்கள்:  ஏன்? ஏன்?? ஏன்???

ஏன் என்னாள்
தேன்நிலவைத் தோற்கடித்து
வெள்ளிவிழா தினத்தன்று
கள் போல் இனித்தார்?  
மீன்போல் சுவைத்தார்?                                                    
பின் அன்னார்     
பொன்விழா நிலவன்று  
இன்னும் கூடி இன்சுவைத்தார்??  
ஏன்   
அன்றிருந்துமூன்றாண்டு
சென்றுமுடியுமுன்னர்
சென்றே ஒழிந்தார்???


பேராசிரியர் கோபன் மகாதேவா எழுதிப் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான கட்டுரை. -

கலாநிதி எ.பி.ஜெ. அப்துல் கலாமின் வாழ்க்கையும் சேவைகளும்

- பேராசிரியர் கோபன் மகாதேவா -

கலாம் எம்மைப் போல் ஒரு தமிழர். எம்மைப் போல் மத்திய தரக் குடும்பத்தில் பிறந்து, பின் விடாமுயற்சியால் இந்திய ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதியாக உயர்ந்து இளைப்பாறியவர். மேலும் ஒரு விஞ்ஞானியாகக் கற்றுத் தொடர்ந்து அவ்வாறே பணி செய்து, பல வகையில் ஒரு அரிய உதாரணராக, பத்மபூஷண், பத்மவிபூஷண், பாரத்ரத்ன பட்டங்களுடன் பெரிதான போட்டி இன்றி மிகவிரும்பி எல்லோராலும் ஏற்கப்பட்டு இந்தியாவின் ஜனாதிபதியாக நியமனம் பெற்றுத் தானாகவே ஒரே ஒரு தவணையின் பின் தன் உயர் பதவியைத் துறந்து பின்னரும் கல்வித் துறையில் தொண்டராகத் தன் மறைவு நாள் மட்டும் வேலை செய்து கொண்டே வாழ்ந்தவர். மேலும்ஒரு பிரமச்சாரியாக நிலைத்து, தன் பிறந்த குடும்பத்துக்கும் பெற்றோருக்கும் பழைய ஆசிரியர்களுக்கும் நன்றிக் கடனும் பயபக்தியும் உடையவராகவும் வாழ்ந்தவர். தன் வாழ்நாள் முழுவதும் நல்லதையே சிந்தித்து, நல்லதையே செய்து, ஒரு சான்றோராகத் தூய்மையுடன் திகழ்ந்தவர். மனிதருள் ஒரு எடுத்துக் காட்டான மாணிக்கம். சில தடவை இவரை நான் எம் ஈழத்து ஆறுமுக நாவலருக்கு ஒப்பிட்டுச் சிந்தித்தேன். எனினும் கலாம் உலகில் நாவலரிலும் மிகக் கூடிய உயற்சியைப் பெற்றவர்.

பிறப்பும் குடும்பமும்:

ஏபீஜே அப்துல் கலாம் என்று பெயர் சூட்டிய ஆண் குழந்தை பிறந்தது, 1991இன் ஒக்தோபர் 15ந் திகதி அன்று, இந்தியாவின் தமிழ்நாட்டு இராமேஷ்வரம் எனும் தீவின் நடுத்தரக் குடும்பம் ஒன்றில். அவரின் தகப்பனார் பெயர் ஜைனுல்லாபுதீன் மரைக்காயர். தனுஷ்கோடி சேதுக்கரையில் இருந்து இராமேஸ்வரம் சிவன் கோவிலுக்கு வந்து செல்லும் யாத்திரீகர்களின் படகுகளை ஓட்டி ஏற்றிச் சென்றும் திரும்பக் கொணர்ந்தும் உழைத்துத் தன் குடும்பத்தைக் கலாமின் தந்தை வளர்த்து வந்தார். அத்துடன் ஒரு சொந்தத் தென்னங்காணியையும் பராமரித்து வந்தார். அவர்களின் வீடு, 1850களில் சுண்ணாம்பு, செங்கற்கள் முதலியவற்றால் கட்டப் பட்டு மசூதித் தெருவில் இருந்த ஒரு பெரிய பழைய வீடு. அப்துல் கலாமின் தாயார் ஆஷியம்மாவின் மூதாதையரில் ஒருவர் பிரிட்டிஷாரின் இந்திய ஆட்சிக் காலத்தில் பகதூர் பட்டம் பெற்றிருந்தார். கலாமின் பெற்றோர் அதிகம் படித்தவர்களல்ல. எனினும் தங்கள் இஸ்லாம் நெறிமுறையைப் பின்பற்றிக் கொண்டு விருந்தினரை உபசரித்து ஆடம்பரங்கள் இல்லாது வாழ்ந்து உதாரணத் தம்பதிகள் என மதிப்புப் பெற்றவர்கள். கலாமை வீட்டில் அபுல் என்று செல்லமாகக் கூப்பிடுவர். கலாம், மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரியுடன் மூன்றாவது பிள்ளை. கலாமின் பெற்றோர் உயரமானவர்கள். ஆயினும் அவர் உயரத்தில் குள்ளமானவராகவே இருந்தார்.

அவரைத் தகப்பனார் தினமும் மாலைகளில் மசூதிக்குக் கூட்டிச் சென்று அரேபிய மொழியில் திருக்குர்ஆன் கீர்த்தனைகளைப் பாடச்செய்து தெய்வவழிபாடு நடத்துவார். இவர்களின் வீட்டிலிருந்து 10-நிமிட தூரத்தில் ஒரு சிவன் கோவிலும் இருந்தபடியால் இவர்களின் குடும்பம் கணிசமான இந்துக்களால் சூழப்பட்டு, அவர்களுடன் அன்னியோன்யமாக இவர்கள் வாழ்ந்து வந்தனர். இவரின் தந்தை இந்துக்கள் இடையேயும் ஒரு மருத்துவரும் மதக்குருவும் போன்ற சாந்தமான, பரோபகாரப் போக்கும் கிரமமான வேலை நிரலுமுடன் 1976 மட்டும் 100 வயதுக்கு மேல் வாழ்ந்து, அளவில்லா மரியாதை பெற்றிருந்தார்.

கலாமின் பிள்ளைப் பருவம்:

இவரின் குழந்தைப் பருவத்தில் ஆடம்பரம் இன்றி உணவு, உடை, மருந்து, முதலிய தேவையான எல்லாம் கிடைத்தன. மற்றும் பாசமும் பாதுகாப்பும் சமூகச் சூழலும் நன்றாக அமைந்தன. வீட்டில் வழக்கமாகப் பையன் அபுல் சமையலறையில் தரையில் உட்கார்ந்து வாழை இலை போட்டு தாயுடனேயே சாதம், சாம்பார், ஊறுகாய்கள், தேங்காய் சட்னி முதலிய உணவுகளை விரும்பிச் சாப்பிட்டார். இராமேஸ்வரம் ஆரம்ப பள்ளியில் தன் குல்லாத் தொப்பியுடன், பூணூலும் குடும்பியுமாகச் சென்ற இந்துப் பிராமணப் பையன்களுடன் பக்கத்திலே உட்கார்ந்து படித்து, சிநேக குணமுள்ள நேர்மையான பையன் எனப் பெயரெடுத்ததார். கலாமின் இளவயதில் அவருடைய தகப்பனாருடன், பின் அவரின் சகோதரி ஜொகாராவைக் கலியாணம் செய்த, அவருக்கு 15 வயதால் மூத்தவராகிய, தச்சுவேலைக்கார அஹமது ஜலாலுதீனும், ஒன்று விட்ட தமையனான பத்திரிகை விநியோகத்தர் சம்சுதீனும், மிகவும் இணைந்து வாழ்ந்து, கலாமில் மிகவும் கரிசனை எடுத்து நாளாந்த வாழ்க்கையைப் பற்றிப் பல விடயங்கள் கற்பித்துச் சிறிதளவு செலவுப் பணம் உழைக்க வழியும்செய்து கொடுத்தனர். பின்னரும் அவரின் மேற்கல்விக்கு எவ்வளவோ உதவிகளைச் செய்து பக்கபலமாக இருந்தனர். ஜலாலுதீனுடன் மாலைகளில் பெரும் தூரம் சிவன் கோவிலடிக்கு உலாத்தச் சென்ற கலாம், அவருடன் சிவன் கோவிலிலும் பயபக்தியுடன் வணங்கப் பழகி, வேறு மதங்களின் ஒரே நல்-நோக்கங்களைச் சிறு வயதிலேயே கற்று, மற்றைய இனத்தாரினுடன் சேர்ந்து வாழவும் அனுபவம் பெற்றார். கடின உழைப்பின் அனுபவமும் பெற்றார். மேலும் சம்சுதீன் விற்ற பத்திரிகைளில் உள்ள செய்திகள், கட்டுரைகள் மூலம் அவற்றின் உள்ளடக்கங்களைச் சம்சுதீனுடன் விவாதித்து, விளங்கி, உலகைப் பற்றியும் கற்றார்.

இவரின் பால்ய காலத்தின் நெருங்கிய சிநேகிதர்கள், ராமநாத சாஸ்திரி, அரவிந்தன், சிவப்பிரகாசன் எனும் ஆசார அனுஷ்டானமான இந்துப் பிராமணக் குடும்பங்களைச் சேர்ந்த மூன்று பையன்களுமே. தன் படுக்கை நேரங்களில் இவர், தன் சகோதரங்களுடன் தனது தாயார், பாட்டியின் இனிய குரல்களில், இராமாயணத்தில் இருந்தும் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் இருந்தும் பல சம்பவங்களைக் கேட்டு மனதில் பதிய வைத்து அவைகளின் புத்திமதிகளின் படி பிற்காலத்தில் வாழ்ந்து வந்தார். இளமையில் கடற்கரைக்குக் கிட்ட வாழ்ந்து வந்த கலாம், விதம் விதமான பறவைகளையும் முகிற் கூட்டங்களையும் பலமணி நேரங்கள் உற்றுப் பார்த்துக் கவனித்துத் தானும் ஆகாயத்தில் பறப்பதைப் பற்றிக் கனவுகள் கண்டு மேலும் தொடர்ந்து படித்து ஒரு விமானம் ஓட்டியாக விரும்பினார். ஆனால் இவரின் தந்தையார், இவர் ஒரு கொலெக்ரர் எனும் உயர்ந்த அரசாங்கப் பதவியைப் பெறவேண்டும் என ஆசைப்பட்டார். எதற்கும் இவர் உயர் கல்வியைப் பெறுவதென முடிவாயிற்று.

கல்விக்கு கலாம் ஏறிய கடின மலைகள்:

இராமேஸ்வரம் ஆரம்ப பள்ளியில் இவர் படித்துத் தேறிய பின்னர், இரண்டாம் மகாயுத்தம் முடிந்து இந்தியாவின் சுதந்திரமும் முடிவாகிய காலத்தில் கலாம் உயர் கல்வியைத் தேடி மாவட்டத் தலைநகராகிய ராமநாதபுரத்தில் உள்ள ஸ்வார்ட்ஜ் உயர்நிலைப் பள்ளியில் நான்கு வருடங் களும், பின்னர் 1950 தொடக்கம் முதற் பட்டம் பெறுவதற்குத் திருச்சி செயின்ர் யோசப் கல்லூரியில் நான்கு வருடங்களும், படித்தார். இந்தச் செலவுகளுக்கு விடுதலை மாதங்களில் தன் தமையனார் முஸ்தாபா கமாலின் ரயில் நிலைய மளிகைக் கடையிலும், அதன்பின் தம்பி காசிம் முகமதுவின் சின்னக் கடையிலும் வேலைகள் செய்து உழைத்ததுடன், கடுமையாகப் படித்துப்பெற்ற புலமைப்பரிசுகளிலும் தங்கவேண்டி இருந்தது. திருச்சிக் கல்லூரியில் இவருக்குப் பிற்காலத்தில் உதவிய இயற்பியலுடன் (physics), ஆங்கில, தமிழ் இலக்கியங்கள், வானியல் முதலிய பாடங்களையும் கற்று, விஞ்ஞானத்தில் 1954ல் பட்டதாரியானார். 1955ல் எம்.ஐ.ரீ. எனும் Madras Institute of Technology நிறுவனத்தைத் தன் சகோதரியின் நகைகளை அடகுவைத்துச் சேர்ந்து விமானப் பொறியியல் கற்று, 1959ல் பட்டம் பெற்றுத் தமிழ்ச் சங்கத்தின் போட்டி ஒன்றில், 'நமது சொந்த விமானத்தை நாமே உருவாக்குவோம்' என்னும் கட்டுரைக்கு முதற் பரிசை வென்றார். இந்திய விமானப் படையில் அதிகாரியாக முயற்சித்து நேர்முகத் தேர்வில் சித்தியடையாமல் வருத்தமடைந்து, எனினும் Directorate of Technical Development and Production (Air) அதாவது DTDP (Air) எனும் அரசாங்க நிறுவனத்தில் முதுநிலை விஞ்ஞான உதவியாளராக, மாதம் ரூ.250 அடிப்படைச் சம்பளத்துடன், தன் முதல் உத்தியோகத்தில் 1960ல் சேர்ந்தார்.

கலாமின் இந்திய முன்னேற்றக் கனவுகள்:

இந்தக் கட்டத்திலிருந்து எம் கலாம், போர் விமானங்களையும் ஏவுகணைகளையும் மற்றும் பறக்கும் கலங்களையும் இந்தியாவிலேயே முதலிலிருந்து அளவுப் பிரமாணங்களை கணக்கிட்டு நிர்ணயம் செய்து படங்கள் கீறி, உதிரிப் பாகங்களையும் அவ்வாறே நிர்மாணித்து இந்தியாவிலே உற்பத்தி செய்து அவற்றைப் பாவித்து விமானங்களையும் கலங்களையும் கட்டிப் பறக்கவிட்டு, மாதிரிகளைப் பரீட்சித்து மெருகூட்டிக் கடைசியில் அசல்களையும் சிருஷ்டித்து உற்பத்தியாக்குவதைப் பற்றிக் கனாக் கண் டார். மேலும், இந்தியாவைத் தொழில் நுட்பத் துறையில் மற்றைய முன்னணி நாடுகளுக்குச் சமமாக விருத்தி அடையச் செய்து, இந்தியப் படைகளையும் அவர்களின் வாகனங்கள், விமானங்கள், ஆயுதங்களைப் பொறுத்த அளவில் மற்றைய நாடுகளுடன் ஒப்பிட்டால் சோடை போகாமல் உயர்த்த வேண்டும் என்னும் குறிக்கோளுடன், தனது பதவி உயர்வுகளையும் தானாகவே திட்டமிட்டு, மேலதிகாரிகளையும் தன் நற்குணம், நடத்தை, செயற் திறன், தேசபக்தி, பிரயாசை முதலியவற்றால் வசீகரித்து, நாளாந்தம் 18 மணிகள் வேலை செய்தார். மேலும் மண வாழ்வின் எண்ணத்தையே துறந்து எளிய முறையில் சீவித்தும் உண்டும் உடுத்தும் 50 ஆண்டுகள் தினமும் கடுமையாக உழைத்து, அவரை அறிந்தோர், கேள்விப் பட்டோர் எல்லோரினது பாராட்டுகளையும் பெற்றார்.

அவரின் கூர்மையான தீர்க்க தரிசனம்:

இந்தியாவின் முன்னேற்றத்தைப் பற்றித் தீர்க்க தரிசனத்துடன் கனவு கண்டு சொந்தத் தியாகங்களுடன் அயராது வேலை செய்த ஜவர்ஹல்லால் நேரு, இந்திரா காந்தி, கிருஷ்ண மேனன் முதலிய அரசியல் தலைவர்களினதும், கலாநிதிகள் பிரம்ம பிரகாஷ், ஓ.கே. மெடிரட்டா, பேராசிரியர்கள் விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், முதலிய தொழில்நுட்பத் துறை ஜாம்பவான்கள், கலாமினுடைய கல்லூரிப் பேராசிரியர்கள் போன்றோரினதும் தீர்க்க தரிசனங்கள், தேசப் பற்று முதலிய வேறு நற்குணங்கள் ஆகிய எல்லாவற்றையும் கலாம் உற்று நோக்கித் தானும் விரும்பி ஏற்றுத் தமதாக்கி, அவற்றை அமுல் செய்தார்.

உத்தியோக வழியில் கலாமின் உன்னத திருப்தி:

கலாம் தன் கனவுக்கேற்ற, விரும்பிய, வேலைகளுக்கே விண்ணப்பித்து அவற்றில் அயராது உழைத்தார். எதிர் வந்த முட்டுக்க ட்டைகளைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டு, விடா முயற்சியால் அடி அடியாக அவற்றை வென்று தன் முக்கிய குறிக்கோள்களைச் சென்றடைந்தார். இதைக் கவனித்த அவரின் மேலதிகாரிகள், அவரைக் கடினமான உயர் பதவிகளுக்குத் தாமாகவே சிபார்சு செய்தனர். பிற் காலத்தில் அவர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டி வரவே இல்லை. எனவே அவர் உத்தியோக வழியில் உன்னத திருப்தி அடைந்திருந்தார். இது வாழ்வில் சிலருக்கே கிடைக்கும் வரப் பிரசாதம் எனலாம்.

கலாமின் பதவி முறைக் கடமைகளும் சாதனைகளும்:

இவற்றை அரை-குறையாயே, மாதிரிகளாகவே, இங்கு சொல்ல முடியும். 1963-1980 காலத்தை கலாமே தன் படைத்தல் காலமென அக்கினிச் சிறகுகள் (1999) நூலில் சுட்டியுள்ளார். அது மட்டும், அவர் முதலில் Supersonic Target விமானத்தை வடிவமைத்தார். Gnat MK1 விமானம் பற்றி ஆய்வுப் பணி மதிப்பீட்டில் கலந்து கொண்டார். Dart Target வடிவமைப்புக் குழுவில் சேர்ந்து கடமையாற்றினார். Vertical Take-Off and Landing Platform ஆராய்சியில் ஈடுபட்டார். Hot Cockpit ஐத் தீர்மானிப்பதிலும் பங்கேற்றார். இவற்றில் 1960-63 ஆண்டுகள் கழிந்தன. இதன் பின் Aeronautical Development Establishment (ADE) எனும் புதிய நிறுவனம் உண்டாக்கப் பட்டு கலாம் அங்கு மாற்றப் பட்டுத் தனக்கான வாய்புகளையும் வேலையையும் தானே உருவாக்கி அன்றைய பாதுகாப்பு மந்திரி கிருஷ்ணமேனனின் GEM திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். நந்தி எனும் ஹோவர் ரக விமானத்தின் மாதிரி ஒன்றை உருவாக்கி மேனனுடன் பறந்து பரீட்சித்த வெற்றியின் பின் அந்தத் திட்டம் பொசுங்கி விட்டது. ஆனால் அதன் மூலம் கலாநிதி மெடிரட்டா, பேராசிரியர் எம்.ஜீ.கே. மேனன், கலாநிதி விக்ரம் சாராபாய் போன்றோரின் கவனத்தை ஈர்த்து, Indian Committee for Space Research (INCOSPAR) நிறுவனத்தில் ஏவுகணைப் பொறியியலாளர் (Rocket Engineer) பதவியை உருவாக்கித் தெரிவு செய்யப்பட்டு, 1963ல் தும்பாவில் Equatorial Rocket Launching Station ஒன்றை நிறுவி, உடனே அமெரிக்காவின் NASA (National Aeronautical and Space Authority) இல் Sounding Rocket ஏவுவது பற்றிய ஆறு மாதப் பயிற்சி பெற்றுத் திரும்பித் தனக்கு அளவிலாப் புகழ் நல்கிய படைத்தல் சாதனைகளை, 1963-1980 காலத்தில் தொடர்ந்து செய்தார்.

கலாம் அமெரிக்காவில் இருந்து திரும்ப, 21-11-1963 அன்று இந்தியாவின் முதல் ஏவுகணையாகிய நைக்-அபாத், விண்ணில் ஏவப்பட்டது. அடுத்த நாள், பேராசிரியர் சாராபாய், கலாமுக்கும் சகாக்களுக்கும் Indian Satellite Launch Vehicle (SLV) திட்டத்தில் இராணுவ விமானங்களுக்கான ஏவுகணை உந்துதலால் உடனடியாக மேலே கிளம்பக் கூடிய RATO (Rocket Assisted Take-Off) செயல்பாடு பற்றி ஆய்வு செய்ய உத்தரவு கொடுத்தார். இதனால் Rohini Sounding Rocket (RSR) திட்டம் உருவாகி, இதில் தான் இந்தியாவின் உண்மையான விண்வெளி ஆராய்ச்சித் திட்டம் தொடங்கியது. Rohini-1, Rohini-2 மாதிரிகள் பரீட்சித்து வெற்றி கண்ட உடனே இந்தியாவின் Propellant Fuel Complex, Rocket Propellant Plant முதலிய தொழிற் சாலைகள் ஆரம்பிக்கப் பட்டன. இக் கட்டத்தில் கலாம் இந்திய NPL, PRL, TIFR ஆய்வு நிறுவன விஞ்ஞானிகளுடனும் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான் நாடுகளில்உள்ள செயற்கைக் கோள் விஞ்ஞானிகளுடனும் ஆலோசனைகள் நடத்தி, 1967 நவம்பரில் முதலாவது Rohini-75 இந்தியன் ஏவுகணை, தும்பாவிலிருந்து விண்ணில் செலுத்தப் பட்டது. இதன் பின் கலாமின் தலைமையில் Indian Space Research Organisation (ISRO) பேராசிரியர் சாராபாயால் உருவாக்கப் பட்டது. 31-12-1971ல் தில்லியில் நடந்த ஒரு முக்கிய கூட்டத்தின் பின், 1966-71 காலத்தில் கலாமுடன் வேலை செய்த 24 விஞ்ஞானிகள், பொறியியலருக்கு ஆலோசனையும் ஊக்கமும் தந்து கொண்டிருந்த சாராபாய், மாரடைப்பால் இறந்தார். 08-10-1972 அன்று RATO இயக்கமுறை வெற்றி கரமாப் பரிசோதனை செய்யப் பட்டது. மேலும், தும்பா வளாகத்தின் ISRO, TERLS, SSTC, RPP, RFF, PFC முதலிய அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, சாராபாயின் பெயரில், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) உண்டாக்கப் பட்டு, கலாநிதி பிரம்ம பிரகாஷ் அதன் இயக்குநரானார். கலாம், 7-10 வருடகால SLV-3 திட்டத்துக்குப் பொறுப்பெடுத்து, ஒவ்வொரு உறுப்பினரும் அவரவர் துறையில் நிபுணராகிய 50 பொறியியலாளர், விஞ்ஞானிகளை இணைத்து வேலை செய்தார். இதன் குறி, 40 கிலோ செயற்கோளை பூமியைச் சுற்றி வர ஏவுவது. இத்திட்டம் சுமார் 250 துணை-அசெம்பிளி பிரிவுகளையும் 44 பெரிய துணை சாதனங்கள், 10-லட்சம் உதிரிப் பாகங்களைக் கொண்டது. 300க்கும் மேற் பட்ட தொழிற் சாலைகள் இவற்றை உருக்கு, மக்னீசியம், தாமிரம், பெரிலியம், ரங்ஸ்ரன், மலிப்டினம் முதலிய உலோகக் கலவைகளில் உற்பத்தி செய்தன... ... ... இவ்வாறு பல சிரமங்களின் பின் 18-07-1980 காலை, இந்தியாவின் முதற் செயற்கைக் கோள் ஏவுகலம் SLV-SHAR இலிருந்து விண்ணிற் கிளம்பி, அதன் திட்டமிட்ட பாதையில் சென்று, கலாமையும் இந்தியாவையும் வரலாற்றுப் பாதையில் மேலும் தொடர உந்தியது.

உச்சப் பட்டங்களும் சமூகத்தில் கௌரவமும்:

கலாமுக்கு 1959-60 வரை அவர் கற்றுப் பெற்ற மூன்று பட்டங்களின் பின், 1980ல் SLV என்னும் Satellite Launch Vehicle ஏவுகலத்தைப் பாவித்து, ரோகினி-1 எனும் துணைக்கோளை (satellite) விண்ணில் ஏற்றி வெற்றி கண்டதற்கு 1981ல் கிடைத்த பத்மபூஷண் எனும் கௌரவ பட்டத்தில் தொடங்கி, உலகின் எத்தனையோ பல்கலைக் கழகங்கள் போட்டி போட்டுக் கொண்டு இவரின் அறிவு பரந்த விஞ்ஞானம், பொறியியல், சட்டம், கலை போன்ற துறைகளிலும் கௌரவ பட்டங்களை அளித்தனர். பல பல்கலைக் கழகங்கள் அவரை வருகைப் பேராசிரியராக நியமித்தனர். பல பெருஞ்சாலைகள், நகரங்கள், நிறுவனங்கள் அவரின் பெயரைத் தாங்கின. இன்னும் கணக்கில்லாக் கௌரவங்கள் உலக ரீதியாக அவரை வந்தடைந்தன. அவர் 2015ல் இறக்கு மட்டும் பட்டம் வழங்கினர். இவற்றின் உச்சம், 1997ல் கிடைத்த பாரத்ரத்ன பட்டமும் 25-07-2002ல் கிடைத்து இவர் ஐந்து வருடங்களுக்கு வகித்து 2007ல் தாமாகவே துறந்த இந்தியக் குடியரசின் ஜனாதிபதிப் பதவியும் எனலாம். இவ்வளவு புகழுடன், அவர் என்றும் போல் எளிமையாகவே வாழ்ந்து, சில நூல்களுடன், மனைவியோ வீடோ பிள்ளைகளோ இன்றி, ஒரு சோடி மாற்றுச் சட்டைகளும் ஒரு சிறு வங்கிக் தொகையையும் விட்டு, தன் பெற்றோருடனும் அத்தான், ஒன்று விட்ட அண்ணனுடம் இறையடியில் சேர்ந்தார்.

கவிதையிலும் சங்கீதத்திலும் இலக்கியத்திலும் கலாமின் ஈடுபாடு:

இளமையில் இருந்தே ஆங்கில, தமிழ்க் கவிதையிலே அவர் கொண்டிருந்த மோகம், விஞ்ஞானச் சிந்தனையைத் தொழிலாகக் கொண்டிருந்த கலாமை ஒரு சம்பூர்ண, முழுமையான மனிதனாக ஆக்கி, ஒரு சமாந்திரமான, சாந்தமான, மன இய்லபை அவருக்கு அளித்தது எனலாம். மேலும் அவர் பொதுவாகச் சங்கீதத்திலும், விசேடமாக வீணையிலும் கொண் டிருந்த திறனும் இயல்பும், அவரின் வேலை நேரப் பழுக்களைக் குறைத்து, அவருடைய மனோ பலத்தையும் தன்னம்பிக்கையையும் மேலும் கூட்டி, அவரின் வாழ்வைச் சீர்மைப் படுத்தியது என்றும் சொல்லலாம்.

இளைப்பாறலும் தொண்டர் சேவையும்:

தன் 60வது வயதில் இளைப்பாறிப் பின்னர் சமூகத் தொண்டு செய்ய வேண்டுமென முன்னர் எண்ணி இருந்த கலாம், 2007ல் தன் 76ம் வயதிலேயே, ஜனாதிபதிப் பதவியில் இருந்து இளைப்பாற முடிந்தது. அதன் பின் பிள்ளைகள், இளைஞரின் கல்விக்கு ஊக்கமூட்டித் தொண்டுகள் செய்து கொண்டு, அவர் 1999ல் எழுதிய அக்கினிச் சிறகுகள் எனும் சுய சரிதை நூலைப் பின் பற்றி இன்னும் 10 நூல்களை எழுதி, தன் 83ம் வயதில் விட்ட கடைசி மூச்சு வரை, வேலை செய்து கொண்டே வாழ்ந்தார்.

கலாமின் மறைவு:

எம் நாயகரின் உயிர் பிரிந்தது, இவ்வாண்டு (2015) ஜூலை மாதம் 27ந் திகதி திங்கள் அன்று, மாலை 7.45 மணி நேரத்தில். அவர், தன் தொண்டர் சேவையாக, மேகாலய மாநிலத்தின் ஷில்லாங் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் மாணவருக்கு, 6.30 மணியளவில், நாம் வாழக் கூடிய இப் பூமிக் கிரகம் எனும் கருப் பொருளில் ஒரு சொற்பொழிவு ஆற்றிக் கொண்டு இருந்த போது, சடுதியாக மாரடைப்பினால் மயங்கி விழுந்து, கிட்டிய பெதனி தனியார் சிகிச்சை மனைக்கு உடனே கொண்டு செல்லப்பட்டு, ஒரு விதமான சிகிச்சையும் பலனளிக்காமல் உயிர் துறந்தார். உலகின் முக்கிய தலைவர்கள் எல்லோரும் தம் விசனத்தை உடனேயே அறிவித்தனர். கலாமின் பூதவுடல் அவரின் பிறந்த இடமாகிய ராமேஸ்வரத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டு, உயர்ந்த இராணுவ மரியாதைகளுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட, பல பிரமுகர்களின் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது. மக்களின் ஜனாதிபதி என்றும் ஏவுகணை மனிதன் எனவும் இந்திய மக்களால் செல்லமாக அழைக்கப் பட்ட அவுல் பக்கீர் ஜைனுல்லாபுதீன் அப்துல் கலாம் எனும், மகாத்மா காந்தியை ஒத்த மாமனிதர், தன் நாட்டுக்கு அளித்த அளப்பற்ற 83 வருடம் 9-மாத ஆயுள் சேவையின் பின், இன்று எம் இதயங்களில் வாழ்கிறார். அவரின் கள்ளம் கபடமற்ற வாழ்வு எம்மை என்றும் ஊக்குவிக்கும்!

முடிவு:

இந்திய உபகண்டத்தின் வரலாற்றின் பின்னணியில் அப்துல் கலாமின் சேவைகளையும் அவர் வாழ்வில் அடைந்த உயர்வையும் சற்று ஆராய்வோம். 1947ம் ஆண்டு, இந்திய உபகண்டம், முக்கியமாக முஸ்லீம்களின் தலைவராகிய மொஹமத் ஜின்னாவின் அணுங்குப் பிடிவாதத்தால் இரண்டாக்கப் பட்டு இந்தியா, பாகிஸ்தான் எனும் மூன்று துண்டான இரண்டு நாடுகள் ஆகிற்று. இந்தப் பிரிவினையைப் பெரும்பான்மையான இந்திய இந்துக்களும், தம் ஆதிக்க பூமியைப் பிரித்தளித்த பிரித்தானியரும், விரும்பவில்லை. எனினும், பாக்கிஸ்தானுக்குச் செல்ல விரும்பாத, கலாமின் குடும்பத்தவரைப் போன்ற முஸ்லீம்களை இந்தியா பெருமளவில், கொள்கையளவில், நன்றாகவே நடத்தியது. உதாரணமாக, முஸ்லீம்களை இந்தியா புறக்கணிக்காமல், பலதடவை ஜனாதிபதி, உபஜனாதிபதி போன்ற பதவிகளுக்குத் தொடர்ந்து தெரிவு செய்தது. இந்த அம்சத்தில் நன்றியறிவின் நிமித்தம், கலாம் தன் தேசாபிமானம் குன்றாது, உண்மையில் உயர்ந்து, மிகவும் மேலதிகமாக, இந்தியாவுக்குப் பயபக்தியுடன் சேவை செய்தார் என்று கொளலாம். மேலும், கலாம் செய்த அசாதாரணமான தொண்டு, பாக்கிஸ்தானிலுள்ள சக-முஸ்லீம்களின் அழிவுக்குப் பாவிக்கக் கூடிய ஏவுகணைத் துறை ஆகும். இதைப் பற்றிக் கலாம் சிந்தித்து இருக்காமல் முடியாது. எனவே அவர் இனப் பற்றிலும் பார்க்கத் தேசாபிமானத்துக்கு மிகக் கூடிய முன்னுரிமை கொடுத்தார் என்றே கொள்ள முடியும். இதற்கு நன்றியாக, மேலும் அவரின் தூய பிரமச்சார்யம், வாழ்வின் எளிமை, மச்சம் உண்ணாமை, பெண்-பொன்-பூமியாதிக்கத் துறவுத் தன்மை, நாளாந்தம் 18-மணித்தியாலங்கள் தினம் தினம் 83 ஆண்டுகளுக்கு மேல் ஆக்கப் பூர்வமாக உழைத்தது, போன்ற அம்சங்களினாலேயே இந்திய மக்கள் எல்லோரும் அவரில் மரியாதையும் மோக பக்தியும் கொண்டதும், ஜனாதிபதியாகத் தெரிந்ததும், இன்று ஒரு தெய்வத்துக்குரிய அந்தஸ்து (காந்தியைப் போல்) கொடுக்கும் பாதையில் செல்வதும் எனலாம். வாழ்க, உத்தம புருஷரும் அபூர்வப் பிறவியும் மாமனிதருமாகிய அப்துல் கலாமின் நினைவும் புகழும். மேலும், தமிழர் சிறுபான்மை இனத்தவராக வாழும் சிறீலங்காவுக்குக் கலாமின் கதை உரிய படிப்பினையும் ஆகட்டும். உலகின் மக்கள் எவரும் அவரின் கதையைப் படித்துப் பலன் பெறுவாராக.

https://www.geotamil.com/index.php/2021-02-11-18-03-07/2902-2015-10-04-03-42-01


சிறுகதை: மகிழ்வறம் வாழ்க்கையும் வெண்காயப் பொரியலும்

- பேராசிரியர் கோபன் மகாதேவா -

அந்தத் தமிழர், காலை ஒன்பதிற்குப் படுக்கையை விட்டெழுந்து கழிவறைக்குச் சென்று தன் சலம் பாய்ச்சிய பின்,  வழக்கம் போல் அன்று சவரம் செய்வதிலிருந்து தப்பலாமா எனக் கண்ணாடியில் பார்த்தார். ஒரு மில்லிமீற்றர் நீளத்தில் அவரின் நாடியிலிருந்து கீழே தூங்கிய நரை வளர்த்தி, கோதுமை-மா இடியப்பம் பிழியும் போது வரும் வெள்ளைப் புழு-வால்கள் போல் தோன்றிற்று. அதை இன்னும் ஒருநாள் இருக்க விடமுடியுமென முடிவெடுத்த மறுகணம், வளரும் புழுக்களுக்கும் தான் போட்டிருந்த சட்டையின் கழுத்து-வெட்டுக்கும் மத்தியில், நெஞ்சின் மேற்பக்கம் ஒரு பெரிய கரிய இலையான் போல் ஏதோ ஒன்று ஒட்டிக் கொண்டு இருப்பதைக் கண்டார். சாவகாசமாக அதை நுள்ளிப் பிடுங்கிக் கண்ணால் பார்த்து,  நுகர்ந்தும் பார்த்தார். அவருக்கு மிகவும் பிடித்த வாசனைகளில் ஒன்று! நல்லதான எதையும் எறிந்து வீணாக்க மாட்டாதார், அதைத் தன் வாயினுள் போட்டு நாக்கில் வைத்துத் துழாவித் தாலாட்டி அன்புடன் மெல்லமாகக் கடித்து அதை மிகமிகச் சுவைத்து உண்டார். அதன் பின்னர் பல்விளக்கி முகம் கழுவித் தன் காலை உணவைத் தயாரிக்கக் குசினிக்குச் சென்று ஓரத்தில் இருந்த சிற்றலை மின்னடுப்பின் கதவைத் திறந்து எதையோ உள்வைத்தார்.

    சென்ற இரவு இருவர் கொண்டுவந்து அளவளாவிச் சென்றபின் அவர் மகிழ்ந்து உண்டு,  அதே பிளாஸ்ரிக் இயத்தில் மூடிக் குளிர்ப் பெட்டியுள் கவனமாகச் சேமித்து வைத்த மிச்சம் அரைப் பங்கு மாட்டிறைச்சிக் கொத்து றொட்டியைச் சூடாக்கி, வழக்கம் போல் ஒரு வாழைப்பழம்,  தன் நீரிழிவுக் குளிசைகள் முதலியவற்றுடன் ஆறு சக்கரீன் வில்லைகளால் இனிப்பூட்டிய கறுத்தக் கோப்பியுடன் அருந்திக் கொண்டே இணைய வலையில் தன் காலைநேர 10-20 ஈமெயில்களைப் பார்த்து உரிய நடவடிக்கைகளை எடுத்து விட்டு,  தொலைக் காட்சியில் எஞ்சியிருந்த ஆங்கிலச் சிரிப்புத் தொடர்நிகழ்ச்சிகளைப் பதினொன்று வரை பார்த்து மகிழ்ந்து ரசித்து விட்டுத் தனது புதிதாகத் தொடங்கிய வாழ்க்கைத் திட்டத்தை அன்றின் 24 மணிகளைப் பொறுத்த வரை தொடர்ந்து நடத்த முனைந்தார்.  முதலில் ஒருகிளாசு பச்சைத் தண்ணீருடன் தன் படுக்கையில் ஏறிக் கால்களை நீட்டியவாறு தலை அணைகளில் சொகுசாகச் சாய்ந்து அமர்ந்து இரவு நடந்த மூன்று மணித்தியாலச் சம்பாசணைகள்-சம்பவங்களைக் கண்களை மூடியவாறு மேல்வாரியாக மீளாய்ந்து மகிழ்ந்தார்:-

ஐயா, ஏழுமணிக்கு வரச் சொன்னியள். சரியாய் வந்திட்டம், உங்கடை கொள்கையை மீறாமல்!

ஓம் தெரியுது. மிக்க நல்லம். ஏழு ஆசனங்கள் இருக்குது. வசதியாய் எதிலையும் இருங்கோ.

வழக்கத்துக்கு மாறாய் நாங்கள் வீட்டிலை சாப்பிட்டிட்டு உங்களுக்கும் கொண்டு வந்தம் ஐயா.

அது பரவாயில்லை. ஆனால், இங்கை வரும் நேரமெல்லாம் சாப்பாடு கொண்டரத்தான் வேணும் என்று இல்லை. நீங்கள் எப்பவும் அறிவித்து விட்டுச் சும்மா வரலாம். நாங்கள் இலக்கியத்தோடு குடும்ப விசயங்களையும் ஒழிவுமறைவின்றிக் கதைப்பம். என்னைப்பற்றி நல்லாய் தெரியும் தானே!

ஓம் ஐயா. அதுதானே, எங்கடை பெற்றோர் போன பிறகு உங்களையும் அம்மாவையும் எங்கள் தாய்-தகப்பன் மாதிரி நாங்களாய் வரித்துத் தத்தெடுத்துப் பேணிக் கொண்டும் வாறம்.  மற்றது, அம்மா உங்களை எவ்வளவு கரிசனமாய்ச் சாப்பாடு தந்து மெலியாமல்ப் பார்த்தவ. நாங்களும் இங்கை எத்தினை தரம் சாப்பிட்டிருக்கிறம்.  அதுதான் நாங்களும் ஏதும் உணவு கொண்டுவாறது.

சரி, சரி. எல்லாத்துக்கும் நன்றி.  முக்கியமாய் ஒவ்வொரு முறையும் எனக்கு அமிர்தம் போன்ற வெண்காயப் பொரியல்,  தவறாமல் தருகிறீர்கள். ஆனால் வழக்கமாய் நீங்களும் நாங்களும் தொடாத மாட்டிறைச்சியை ஏன் இன்று நினைச்சியள்?  நான் சாப்பிடுறது தான்... ஆனால் சும்மா கேட்கிறன்...

அது ஐயா, நீங்களும் போனகிழமை வந்த,  எங்கடை மகனின்ரை கலியாணத்துக்கு அடுத்த நாள் நாங்கள் எங்கடை ஊர் ஆக்களை பஸ் ஒண்டு பிடிச்சுக் கடல்ப் பக்கம் கூட்டிக் கொண்டு போய்த் திரும்பேக்கை இரவுக்கு ஆட்டிறைச்சி தேடினம்.  போன ஊரிலை அது அன்று கிடைக்கேல்லை. அது தான் பன்றியிலும் பார்க்க மாடு சுத்தம் எண்டு மாட்டிறைச்சி வேண்டினது.  நாம் சாப்பிட வேணுமே?!  அதுசரி ஐயா, எங்கடை கலியாண வீடு எப்பிடி? உங்களை அதைக் கேக்கவும் தான் வந்தம்!

சுருக்கமாயச் சொன்னால், எல்லா லண்டன் தமிழ்க் கலியாணங்களையும் போலவே நடந்துது. உங்கடை குடும்பம், இனத்தார்,  பெண்ணின் குடும்பம் எல்லாரும் ஒத்துழைத்து மிகவும் சிரமப்பட்டு விஷயம் முடிஞ்சுட்டுது. இனி ஏன் முடிஞ்சதுகளைக் கிண்டுவான்?  எனக்கு எல்லாமே சந்தோசம். பின்னேரம் நடந்த விருந்துகளும் நடனங்களும் மிகவும் திறம்.  உங்கள் மகனும் இங்கிலீசிலை தங்கு தடை இல்லாமல் 15 நிமிடம் கடுதாசிக் குறிப்பு ஒண்டும் பார்க்காமல் நன்றாய்ப் பேசினார். எனக்கு மிகவும் பெருமையாய் இருந்தது. நீங்கள் இருவரும் எப்பிடியோ கெட்டிக்காறர் தான்!

தாங்க்ஸ் ஐயா. இவருக்கு எண்டால் மனம் சரியில்லை.  ஐஞ்சு மணிக்கு ஆக்களை வரவேற்க நிற்க வேண்டிய நாங்களே கார்த் திறப்பை எங்கேயோ வைச்சதாலை சுணங்கி ஏழரைக்குத் தான் வந்து சேர்ந்தம்.  நீங்களோ சொன்னமாதிரி ஏழுக்குப் போட்டியள். பிறகு, கொஞ்சமாய்க் குடிச்சுட்டு அது சமிக்க,  நல்லாய்த் திறமாக டான்சும் ஆடிப் போட்டு பத்துக்கு வெளிக்கிட்டுப் போட்டியள். கடைசி விருந்தும் சாப்பிடேல்லை. அதுக்கும் சேர்த்துத் தான் வெண்காயப் பொரியலுடன் இன்று உங்களுக்குச் சாப்பாடோடை வந்தம். ஆனால், அன்று சுணங்கினதுக்கு என்னைத் தான் ஏசுறார்.

அப்பிடி இல்லை ஐயா,  மற்றவையின்ரை கலியாணங்களிலை வீட்டை வந்து பிழையள் பிடிச்சுக் கதைக்கிற நாங்கள். எங்கடை கலியாணத்தைச் சரியாய் நேரத்துக்கு நடத்தாட்டி?...   உங்கடை இரண்டு பிள்ளையளுக்கு எப்பிடி எல்லாம் நீங்கள் ஒரு நிமிடம் பிந்தாமல் நடத்தி முடிச்சியள்!

தம்பி, கலியாணத்தைச் செய்து பார், வீட்டைக் கட்டிப் பார்,  என்று எங்கள் சான்றோர் சும்மாவே சொல்லி வைத்தார்கள்?  எனக்கு இது இரண்டிலும் வேண்டிய அனுபவம் இருக்குது.  திட்டமிட்ட படி நேரத்துக்கு ஐயர்மார் நடத்திற தமிழ்ச் சைவக் கலியாணங்களை நான் இங்கை காணவே இல்லை. ஆனால் கலியாணச் சிரமங்களையும் பின்வருத்தங்களையும் மிகமிகக் குறைக்க வழி முறையள் எத்தினையோ இருக்குது,  தம்பி. ஒருநாளைக்கு நான் அவற்றை விவரித்து எழுதவும் முடியும்.

அதையும், எல்லாருக்கும் திருப்தியாய் கூட்டங்களை நடத்துவது எப்பிடி, இன்றைய எலியுக-ஓட்ட உலகில் தொல்லைகள் இன்றி நிம்மதியாய் வாழ்வது எப்பிடி, எண்டும்எழுதி வெளியிடுங்கோ ஐயா!

அப்பிடி எத்தனையோ எண்ணங்கள்,  ஆசைகள் எனக்கு இருந்தது தான், தம்பி. ஆனால் எங்கடை அம்மா போன பின் எனது வாழ்க்கையும் மனமும் பெருமளவு மாறீட்டுது தம்பி. ஒன்றிலும் ஆசை எண்டு இல்லை. நான் இனி ஏன் இருப்பான்?  ஏன் எதையும் சாதிப்பான்?  என்று கூட யோசிக்கிறன். என் பகுத்தறிவு,  எதையும் இருட்டாக நோக்காமல் பிரகாசமாகப் பார்க்கவேணும்,  என்று ஒரு பக்கம் என்னை நச்சரிக்குது. இருந்தாலும் இலங்கை அரசியல் விட்டு வைத்த ஓரளவு என் நம்பிக்கையையும் அம்மாவின்ரை சடுதி மறைவு அழிச்சுப் போட்டுது, வேறொன்றுமே எனக்கு வேண்டாம் போல! கடைசியில், துறவறம் பூணவும் சமயத்துள் மாளவும் என் இயல்பு விடாமல்,  மகிழ்வறம் எனும் வாழ்க்கை முறையை என்னளவில் நிறுவி,  அதையே பின் பற்றி வாழவும் முடிவு செய்துள்ளேன்.

உது ஓரளவு விளங்குது ஐயா. ஆனால் இன்னும் கொஞ்சமாவது விவரமாய்ச் சொல்லுங்களேன்!

அதிலை சொல்ல அதிகம் இல்லைத் தம்பி.  நான் தொடங்கி உள்ள மகிழ்வறத்தில், பெரிய ஆசையளைத் துறந்து, மற்றையோருக்கு மனதிலும் தீங்கு நினையாமல்,  நாளாந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு,  என் பிள்ளைகள் கேட்கும் போதே ஆலோசனைகள், உதவிகள் செய்து கொண்டு, எனைத் தேடிவரும் நண்பரைப் பேணிக்கொண்டு,  நாளாந்தம் மனத் துன்பத்தைத் தவிர்க்க,  எனக்கு மகிழ்வுதரும்,  செலவு இல்லாத எல்லாச் சிறுசிறு ஆசைகளையும் தெண்டித்து நிறைவேற்றி,  பசிக்கும் நேரம் மட்டும் உண்டு,  உடம்பு கேட்கும் நேரமெல்லாம் உறங்கி,  தேகத்தையும் சுகாதா ரத்தையும் பேணி,  வருங்காலத்தைப் பற்றி அலட்டாமல் மகிழ்வுடன் தரிப்பது தான் என் மகிழ்வறம்.

ஐயையோ! அப்ப உங்கடை இலக்கியப் பணிகளை அப்பிடியே கைவிடவே ஐயா போறியள்?

இலக்கியத்தை விட மாட்டன். அது எனக்கு மகிழ்வைத் தரும் விசயம். எனது தட்டு வீட்டிலை இன்று இருக்கும் நூல்களை வாசிக்கவே பல ஆண்டுகள் வேணும்.  அது என் மகிழ்வறத்தில் ஓர் முக்கிய பங்கை வகிக்கும்.  ஆனால் முன் போல பெரிய திட்டங்கள் ஒன்றுமே இல்லாமல்!...

நான் உங்கள் மகிழ்வறத்தைப் பற்றிக் கூடவிளங்கிக் கொள்ளக் கேட்கிறன். குறை நினைக்க வேண்டாம். அது ஒரு original concept உம் terminology யும்.  நல்லாயிருக்குது. Necessity is the Mother of Invention என்று சொல்லுவார்கள்.  உங்கள் இன்றைய மனோநிலையுடன்... தொடர்ந்து... வாழ்ந்து கொண்டிருக்க உகந்த philosophy ஒன்றை உருவாக்கிக் கொண்டு வாழ்கிறீர்கள். இதில் உள்ள விசேடமான அம்சங்கள் சிலவற்றை விளக்கிச் சொல்ல முடியுமா ஐயா, தயவு செய்து.

சரி, சரி. நாம் ஒவ்வொருவரும் ஒரே பொது-இனக் கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்தாலும், வொவ்வேறு ஆளுமைகளுடனும் தனித்துவமான விருப்பு வெறுப்புகளுடனும் வளர்ந்து உருவாகி உள்ளோம். சிறுவயதில் எம்மை மகிழ்வித்த சில வாழ்க்கை அம்சங்களைப் பின்னர் சமுதாயத்தின் பார்வைக்குப் பயந்து துறந்து,  எம் மகிழ்வு மட்டத்தைக் குறையவிட்டுத் துக்கத்துடன் வாழ்கின்றோம். ஏன் அப்பிடி,  எமக்கு நாங்களே மகிழ்வை மறுத்துத் தன்னம்பிக்கையையும் இழந்து குறுகி, குனிந்து, முறுகி, வறண்டு வாழவேணும்?  ஒரு நல்ல உதாரணம்: நீங்கள் எனக்கு இன்று கொண்டு வந்த வெண்காயப் பொரியல்!  இதைநான் எம்அம்மாவுக்கு முன்சொல்லி, அவ எனக்குத் தொடர்ந்து தாராளமாக அதைச் செய்து தருவதுண்டு. நீங்கள் அதை அவவிடமிருந்து கேட்டு வைத்து இப்போ எனக்குச் செய்து கொண்டு வந்து தருகிறீர்கள். அது ஒரு செலவு குறைந்த,  மகிழ்வற அம்சம். எம்மை மகிழ்விக்கிறது. இன்னொன்று, சிறுவயதில் நாம் கொறித்து மகிழ்ந்த கடலை வகை.  அளவுடன் நாளாந்தம் உண்டால் அவை சுகாதாரத்துக்கும் பற்களின் உறுதிக்கும் உதவும்.  மற்றது,  சீனி பாவிப்பதை என் நீரிழிவு வருமுன்னர் இலங்கையிலேயே விட்டிட்டன்,  அன்று வளரும் பருவத்து, எம் பிள்ளைகளுக்கு ஊட்ட! ஆனால் இனிப்பாய் மகிழ்வுதரும் சக்கரீனை அன்றிருந்தே பாவிக்கிறேன். கறுத்தக்கோப்பிக்கு ஆறு-வில்லை, பால்கோப்பிக்குப் பத்து, என்றஅளவில் போட்டுமகிழ்கிறேன். ஒரு காலத்தில் பட்டாள அதிகாரியாக ஒவ்வொரு இரவும் 10-12 அளவு சாராயம் அருந்தி நாம் மகிழ்ந்தோம். இன்று 1-2-3 ஷினாப்ஸ்,  சீனியற்ற கோலாவுடன் கலந்து உறிஞ்சி,  ஒரு மணி வரை கண்களை மூடிச் சிந்தனை செய்து மகிழ்கிறேன். மேலும், சிறுவனாகப் படுக்கையில் முழங்கால்களில் குந்தித் தலையணையில் சிரத்தை வைத்துச் சிலநிமிடங்கள் உறங்கி ஆறுதல் அடைவேன். அதை இன்று மறுமலர்ப்பித்துச் செய்து மகிழ்கிறேன்.  காலை-மாலை, 12 தேவாரங்களை உரத்துப் படித்தும் மகிழ்கிறேன்... .... ...


அப்ப எங்கடை கலியாண வீட்டிலை நடந்த குறையளைப் பற்றி ஒண்டும் இனிச் சிந்தனை செய்ய வேண்டாம் என்றே சொல்லுறியள் ஐயா? அல்லது அது திறமாய் நடந்தது என்றோ சொல்லுறியள்?


தங்கச்சி,  நேற்றும் ஒரு தமிழ் இந்துக் கலியாணத்துக்குப் போயிட்டு வந்தநான்.  நான் தவிர்க்கவே முடியாத, இனத்தார்!  லண்டன் பாராளுமன்றத்துக்குக் கிட்ட ஒருபெரிய ஹோட்டலிலை தடல்புடலாய் வைத்தார்கள். ஆனால் எல்லாம் தாமதம். பதினொண்டுக்கும் ஒண்டுக்கும் இடையிலை கலியாணம், மேலும், பத்துக்குச் சிற்றுண்டி தொடங்கும், ஒன்றுக்கு மத்தியானச் சாப்பாடு தருவம், எண்டு எல்லாம் பொன் எழுத்திலை பிரமாதமாய் அடிச்சு அனுப்பிப் போட்டு கலியாண மணமண்டபக் கதவு திறந்தது பதினொண்டரைக்கு. தாலி-கட்டு, முகூர்த்தத்துக்குப் பல நிமிடங்கள் பிந்தி,  ஒன்றரைக்கு. சாப்பாடோ இரண்டுக்குப் பிந்தி. நான் வீட்டைவந்தது நாலு மணிக்கு. எழுந்தது ஏழுக்கு. வெளிச்சென்றது ஒன்பதுக்கு. சரியாய் களைத்து வந்து இரண்டு மணித்தியாலம் உடனே நித்திரை கொண்டு ஆற வேண்டி வந்திட்டுது. அதோடை ஒப்பிட்டால் உங்கடை கலியாண ஐயர் திறம். ஆனால்... நேற்று... அங்கை... ஒரு நல்ல அம்சம்: வெண்காயப் பொரியல் மட்டும் மிகப் பிரமாதம், அந்தக் கலியாண வீட்டிலை.

சரி,  வரப் போறம் ஐயா. கடைசிப் பொடியன் எண்டு,  சீட்டும் ஒண்டிரண்டு எடுத்து,  மற்ற இரண்டு பிள்ளையளுக்கும் செய்த மாதிரிச் செய்துவிட்டம், அதுக்கும் வஞ்சகம் செய்யாமல்!  மற்றப் பிள்ளையளும் ஆயிரமும் மூவாயிரமும் தந்ததுகள். எங்களுக்கும் எட்டோ பத்தோ வரை போட்டுது. நீங்களும், அம்மா இல்லாட்டிலும் கலியாணத்துக்கும்,  மாலையிலும் வந்ததுக்கு மிக்க நன்றி ஐயா.

நீங்கள் எல்லாரும் கொன்ரெயினருக்குள் பயணித்து உயிரைப் பணயம்வைத்து கையில் ஒரு சதமும் இல்லாமல் வந்து,  மூண்டு பிள்ளையளையும் படிப்பித்துப் பட்டதாரியளாக்கிக் கலியாணங்களும் முடித்து வைத்து பேரப்பிள்ளையளோடும் சீவிக்கிறியள். அது எவ்வளவு கெட்டித்தனம். அங்கை எம் இலங்கையிலை அதுகள் முடிந்திராது. உங்களைப் பற்றி நான் எவ்வளவோ பெருமையாய்த் தான் நினைக்கிறன். சந்தோசமாய்ப் போய் வாருங்கோ. வேண்டியநேரம் என்னை வந்து பார்க்கலாம். நன்றி.

கசிந்த கண்களுடன் பாத-நமஸ்காரம் செய்து அவர் விருந்தினர் தங்கள் வீடுதிரும்பி,  அறிவித்தனர்.  எம் மகிழுறவுத் தமிழர் மீழாய்விலிருந்து மகிழ்ந்து வெளியேறி,  அந்நாட்களில் வாசித்துக் கொண்டு இருந்த புதுமைப்பித்தன்,  ஜெயகாந்தனின் சிறுகதைகளின் ஒப்பியல் ஆராய்ச்சி நூலில் இரண்டு அத்தியாயங்களை வாசித்து மகிழ்ந்து,  தன் குளிர்ப் பெட்டியிலிருந்து அளவாய் ஏதோ ஐஸ்லன்ட் பொதியுணவைச் சூடாக்கி உண்டபின், ஏழுமட்டும் இணையவலைக்குள்,  சுழியோடப் புகுந்தார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.