எழுத்தாளர் , கல்விமான், மார்க்சியவாதி என அறியப்பட்ட லெனின் மதிவானம் மலையகத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவர். அவரின் மறைவுச் செய்தி அதிர்ச்சி தருமொன்று. 2013, 2014 ஆண்டுகளில் பதிவுளில் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களைப் பதிவுகளின் நிகழ்வுகள் பகுதிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். அதன் பின்னர் அவரைப் பெரிதும் பொதுவெளியில் காணவில்லை. ஏன் ஒதுங்கிப்போனார் என்பதை இப்பொழுதுதான் அறிய முடிகின்றது.  உடல் நிலை சீரற்றுப் போன காரணத்தினாலேயே அவர் ஒதுங்கி விட்டார் என்பதை வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது இழப்பால் பெருந்துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தவர், உறவினர்கள்,  நண்பர்கள் , கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவர்தம் துயரில் பதிவுகளும் இணைந்து கொள்கின்றது.

இத்தருணத்தில் அவர் பதிவுகள் இணைய இதழில் எழுதிய  ஸி. வி. வேலுப்பிள்ளை நூற்றாண்டு நிறைவு நினைவு ஒரு முன்னோட்டம்! ' , 'பிரேம்ஜி வகுத்த தனிப்பாதை! ' ஆகிய கட்டுரைகளை மிள்பிரசுரம் செய்வதுடன், அவர் பதிவுகள் இணைய இதழின் நிகழ்வுகள்  பகுதிக்கு அனுப்பிய தகவல்கள் சிலவற்றையும் பகிர்ந்துகொள்கின்றோம்.


ஸி. வி. வேலுப்பிள்ளை நூற்றாண்டு நிறைவு நினைவு ஒரு முன்னோட்டம்!      - லெனின் மதிவானம் -    
    
செப்டம்பர் பதினான்காம் திகதி ஸி.வி வேலுப்பிள்ளை நூற்றாண்டாகும். அவர் மலையக இலக்கியத்தின் தலைமகனாக விளங்கியவர். அவரது நூற்றாண்டை எதிர்நோக்கியிருக்கின்ற இவ்வேளையிலே அவர் பொறுத்த காத்திரமான ஆய்வுகள், மதிப்பீடுகள், விவரணங்கள், செய்திகள், நினைவுக் குறிப்புகள் என்பன வெளிவரவில்லையாயினும் சில குறிப்பிடத்தக்க எழுத்துக்கள் பிரசுரமாகியிருக்கின்றன என்பது மனங்கொள்ளத்தக்கவையாகும். அவ்வாறு குறிப்பிடத்தக்கவற்றுள் பெரும்பாலானவை முற்போக்கு மார்க்ஸியர்களால் எழுதப்பட்டவையாகும். இர.சிவலிங்கம், மு.நித்தியானந்தன், சாரல் நாடன், தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா, ஓ.ஏ. இராமையா, லெனின் மதிவானம், சுப்பையா இராஜசேகர், மல்லியப்புசந்தி திலகர் முதலானோரின் எழுத்துக்கள் குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றுள் சாரல் நாடனின் 'சி.வி. சில சிந்தனைகள' என்ற நூலே ஸி.வி பற்றிய தேடலுக்கு காத்திரமான அடித்தளத்தை வழங்கியது. இவ்வெழுத்துக்களிடையே தத்துவார்த்த வேறுபாடுகள் இருப்பினும் ஸி.வி.யின் ஆளுமை பண்முகப்பாட்டை வெவ்வேறு விதங்களில் வெளிக்கொணர்பவையாக அமைந்திருக்கின்றன.

ஸி.வி.யின் சமூக முக்கியத்துவத்தையும் மலையக இலக்கிய கதியில் அவரது ஆக்கங்கள் செலுத்தும் பாதிப்பினையும் கொண்டு நோக்குகின்ற போது ஸி.வி. பற்றிய தேடல் வளர் நிலையிலேயே உள்ளதாக தோன்றுகின்றது. ஸி.வி. ஆசிரியர், பத்திரிகையாளர், அரசியல்வாதி, இலக்கியகர்த்தா எனப் பல்துறைசார்ந்த ஆளுமைகளை கொண்டவர். அவரது நூற்றாண்டு நிகழ்வை ஒழுங்கமைப்பதற்காக ஹட்டனிலே ஸி.வி. நூற்றாண்டு நினைவுக் குழு நியமிக்கப்பட்டு சில முன்னோடி செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தருணத்தில் ஸி. வி. பொறுத்து செய்யக் கூடிய விடயங்கள் சிலவற்றை கவனத்திலெடுத்தல் அவசியமானதாகும்.

ஸி.வி.யை நாம் புரிந்து கொள்வதற்கும் ஆராய்ச்சிக்குட்படுத்தவும் எம் முன்னுள்ளவை அவரது எழுத்துக்கள் தான். அவர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவரது கடிதங்கள், குறிப்புக்கள்;, நூல்வடிவம் பெறாத கட்டுரைகள், ஆக்கப் படைப்புக்கள், வரைந்த கேலிச் சித்திரங்கள் இதுவரை முறையாகக் கிடைக்கவில்லை. சில ஆவணங்கள் மல்லியப்பு சந்தி திலகரிடமும் சுப்பையா இராஜசேகரிடமும் இருப்பதை பார்வையிடக் கூடியதாக இருந்ததில் மகிழ்ச்சி. அவர் 'சாக்குக்காரன'; என்ற சிறுகதையை எழுதியிருப்பதாக 'தாக்கம்' இதழில் ஸி.எஸ்.காந்தி குறிப்பிட்டிருக்கின்றார். வீரகேசரியில் வெளிவந்த அக்கதை திரு.அந்தனி ஜீவா சேகரித்து வைத்திருப்பதாக என்னிடம் கூறியிருக்கின்றார். அவ்வகையில் அவரது அனைத்து படைப்புகளையும் தொகுத்த அடக்கத் தொகுப்பொன்று வெளிவரவேண்டியது காலத்தின் தேவையாகும். ஸி.வி.யின் சிலநூல்கள் அச்சுறுப்பெற்றுள்ளன. இவ்வாறு வெளிவந்த நூல்களையும் இப்போது பெற முடியாதுள்ளது. மேலும் இது தொடர்பான தகவல் தெரிந்தவர்களைத் தேடியறிவதும் சிரமமாக உள்ளது. அவர்களில் சிலர் இன்று மறைந்து விட்டமை இன்னொரு துரதிஸ்டவசமான நிகழ்வாகும்.

 இவ்விடத்தில் முக்கியமானதொரு விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஸி.வி. இறந்த பின்னரே அவரது ஆக்கங்களிற் சில நூலுருவம் பெற்றன. அவர் தமது நூல்களை மீள்நோக்கி சீராக வெளியிடும் வாய்ப்பு அவருக்கிருக்கவில்லை. அன்னார் வாழ்ந்த காலத்தில் மலையக படைப்புகளின் வெளியீட்டு வசதி மிகக் குறைவாகவே காணப்பட்டன. அத்துடன், ஸி.வி. ஆங்கிலத்தில் எழுதிய படைப்புகள் தமிழில் மொழிமாற்றம் செய்யும் போது ஏற்பட்ட இடர்பாடுகள் - மயக்கங்கள் கவனத்தில்கொள்ளத்தக்கவை. உதாரணமாக 'In Ceylon Tea Garden' என்ற கவிதைத் தொகுப்பை சக்தி பால ஐயா இலங்கைத் 'தேயிலைத் தோட்டத்திலே' என மொழிமாற்றம் செய்தாக கூறப்படுகின்றது. சக்தி பால ஜயாவின் நூலில் சி.வி.யின் கவிதைகளில் காணப்பட்ட இயல்பான மண்வாசனைப் பண்பும் அவற்றோடு இணைந்த சொற்களும் காணப்படவில்லை. சக்தி பால ஜயாவின் கவிதைத் தொகுப்பினை மொழிபெயர்ப்பு என்று கூறுவதை விட தழுவல் எனக் கூறுவதே பொருந்தும் (இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தபோது, சி.வி.யின் படைப்பின் தாக்கத்தினால் தனது ஆக்கம் வெளிப்பட்டதேயன்றி மொழிபெயர்ப்பென தாம் குறிப்பிடப்படவில்லை என்று சக்தி பால ஜயாவின் தனிப்பட்டவகையிலும் சில கூட்டங்களிலும் கூறியதை கேட்டிருக்கின்றேன்). சி.வி. அவர்கள் அரசியல்வாதியாக, தொழிற்சங்கவாதியாக இருந்தவர். இலக்கியத் தளத்தில் மட்டுமே இயங்கியவரான சக்தி பால ஐயா இத்தகைய உணர்வுகளை எவ்வாறு எதிர் கொண்டார் என்பதும் சுவாரசியமானதோர் வினாதான்; (லெனின் மதிவானம்- 2010).

புதிதாய்க் கண்டெடுக்கப்படும் ஸி.வி.யின் படைப்புகள் தக்கபடி பரிசோதிக்கப்பட்டும், அவற்றின் நம்பகத் தன்மை ஐயத்திற்கிடமின்றி நிறுவப்பட்டும் ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும். வரலாற்றுச் சுருக்கங்கள், குறிப்புரைகள், சில முக்கிய தகவல்கள் என்றவகையில், சில தகவல்கள், பயனுள்ள சங்கதிகளையும், செய்திகளையும்; தொகுத்தளித்தல் வேண்டப்படுவதாகும். இவ்விடத்தில் பிறிதொரு முக்கிய விடயம் பற்றிச் சற்று அழுத்திக் கூற வேண்டியுள்ளது. ‘ பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்கும் முன்னோடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில் சி. வை. தாமோதிரம்பிள்ளை, உ.வே. சாமிநாத ஐயர் முதலியோருக்கே பழந்தமிழ் நூல்கள் சிலவற்றின் பெயர்கள் சரிவரத் தெரியாத நிலையிலே, சில தமிழ் ‘ஆர்வலர்கள்’ வினோதமான பெயர்களுடன் சிலபல ‘ பழந் தமிழ்’ நூற் பிரதிகளைப் பற்றிப் பேசலாயினர். உதாரணமாக த.மு. சொர்ணம்பிள்ளை என்பவர் ‘இன்னிலை’, ‘ஊசிமுறி’ முதலிய நூல்களைத் தாமே இயற்றிப் பழந்தமிழ் நூல்கள் எனப் பறைசாற்றினார். பிற்பட்ட ஆராய்ச்சிகளினால் இப்பொய்மை ஐயத்திற்கிடமின்றி அம்பலப்படுத்தப்பட்டதெனினும், இலக்கிய உலகிலே சிலகாலம் குழப்பத்தையும் மயக்கத்தையும் உண்டாக்கியது என்பதில் ஐயமில்லை. (கைலாசபதி.க. 1974, இலக்கிய சிந்தனை). முந்திய பதிப்புகள் மாத்திரமன்றி கையெழுத்துப் பிரதிகள் வெளிவந்த பத்திரிக்கைகள், பிரதிகள், மேற்கோள்கள்இ எடுத்தாண்டோர் படங்கள் என்பனவற்றை நுணுகி ஆராய்ந்து கூட்டு முயற்சியால் வெளியிடத் தக்கவையாகும்.'ஸி.வி. பதிப்புக் குழு’ ஒன்றினை அமைத்தல் காலத்தின் தேவையாகும். தனியொருவரின் முயற்சியை விட கூட்டு முயற்சி பயன்மிக்கதாகவும் பணியை இலகு படுத்துவதாகவும் அமையும். இத்துறைச் சார்ந்த அறிஞர்களையும் ஆர்வலர்களையும் கொண்டு இத்தகைய முயற்சிகளை மேற்கொள்வது பயன்மிக்கதாக அமையும்.

அன்னாரின் புனைப்பெயர்கள் பற்றிய பூரணமான தகவல்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. கைலாசபதி, செ.கணேசலிங்கம் முதலானோரின் ஆக்கங்கள் வெளிவந்த பிரசுரங்கள், காலம், வெளியீட்டாளர்கள்- சில சமயங்களில் ஆக்கங்கள், நூல்கள் பற்றிய தகவல்களுடன் நூலகவியலாளர் என். செல்வராஜா தொகுத்துள்ளார். இவை சமூக ஆளுமைகள் பற்றிய ஆய்வுகளுக்குப் பெரிதும் உதவியுள்ளன. ஸி.வி உட்பட மலையக எழுத்தாளர்களின் எழுத்துக்கள் இவ்வாறு பட்டியற் படுத்தப்படவில்லை. இந்நிலையில் தொடர்ந்து ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுவது அவசியமானதாகும்.

இதுவரை ஸி.வி. பொறுத்து வெளிவந்த ஆய்வுகளை நோக்குகின்ற போது அவற்றில் பல வழிப்பாட்டு முறையாகவே காணப்படுகின்றன. மலையக சமூகத்திற்கு அவரது பங்களிப்பு வெளிக்கொணரப்படவேண்டும்  என்றவகையில்; அவர் பற்றி மறுவாசிப்பு அவசியம். அரசியல் பண்பாட்டுத் தளத்தில் அவரது செயற்பாடுகள் வியப்பை அளித்த போதினும் அவர் மீதான வழிபாட்டுணர்வுக்கு இடந்தராமல் விமர்சித்து விளக்குவதே சமூக பயன்மிக்க அம்சமாக காணப்படும். அதேசமயம் அன்னாரின் ஒவ்வொரு துறைசார்ந்த பங்களிப்புகளும் பண்முக நோக்கில் வெளிக் கொணரப்படல் அவசியமானதாகும். அவ்வாய்வுகள் பின்வரும் நான்கு நிலைகளில் இடம்பெற வேண்டும். முதலாவது, ஸி.வி.யை பல்துறைநோக்கில் அணுகி ஆராய்பவையாக இருத்தல் வேண்டும். சமூகவியல் நோக்கில் ஸி.வி.யின் சமூக முக்கியத்துவம் வரலாற்றுக் கதியில் அவரது சிந்தனைகளும், போதனைகளும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது குறித்து ஆராய்தல் இதன் பாற்படும். இரண்டாவது, ஸி.வி.யை பின்பற்றி எழுந்த மரபு அவரை பின்பற்றியும் அவரை மீறியும் எவ்வாறு வளர்ந்துள்ளது என்ற நோக்கில் ஆராயப்படல் வேண்டும். மூன்றாவது, வரலாற்றுப் பின்னணியில் ஸி.வி.யை மதிப்பிடுதல் முக்கியமானவையாகும். நான்காவதாக ஸி.வி. குறித்து வெளிவந்த ஆய்வுகள், மதிப்பீடுகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது பற்றியதாக இருத்தல் வேண்டும்.

இந்தவகையில் ஸி.வி.யின் நூற்றாண்டு நிறைவு நினைவையொட்டிய செயற்பாடுகள், கருத்தரங்குகள், வெளியீடுகள், கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது ஸி.வி. என்ற பெருமகனுக்காக நாம் செய்யும் நன்றிக் கடனாகும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பதிவுகள்,     22 செப்டம்பர் 2014


பிரேம்ஜி வகுத்த தனிப்பாதை!     - லெனின் மதிவானம் -    
    
“ஒரு நபர் தனக்காக மட்டும் பாடுபட்டால், ஒரு வேளை பிரபலமான அறிவாளியாகலாம். மாபெரும் ஞானியாகலாம், மிகச்சிறந்த கவிஞராகலாம், ஆனால் உண்மையான மனிதராக முடியாது” என தனது பள்ளிப்பருவத்திலே எழுதியவர் காரல் மார்க்ஸ். சக மனிதர்கள் குறித்தும் அம்மனிதர்களின் வாழ்வுக் குறித்தும் உயரிய நிலையில் சிந்தித்து செயலாற்றியமையே வரலாற்றினுடைய மனிதராக அவர் போற்றப்படுவதற்கான அடிப்படையாகும். மனித குல வளர்ச்சிப் போக்க்pல் அறிவு என்பது சமுதாயம் சார்ந்த விடயமாகும். எனவே அவ்வறிவு எப்போதும் விஞ்ஞானம் தழுவியதாக அமைந்திருப்பதுடன் செருக்ககோ நேர்மையீனமோ இல்லாது சமூக வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதாக அது அமைந்துக் காணப்படுகின்றது. பிரம்ஜி என்ற ஆளுமையின் பணிநலன் பாரட்டு நிகழ்வு குறித்த சிந்திக்கின்ற போது மேற்கறிக்க வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன.

இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் பொதுவான வளர்ச்சியிலும், குறிப்பாக அப்பரிமாணத்தை ஆழமாகவும் அகலமாகவும் வளர்த்தெடுப்பதிலும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முக்கிய பங்கினை வகித்துள்ளது. அவ்வியக்கத்தின் பொதுவான வளர்ச்சியையும் முற்போக்கு நிலைப்பட்ட செயற்பாடுகளையும் முன்னெடுத்து செல்வதில் பிரேம்ஜிக்கு முக்கிய இடமுண்டு. அவர் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், பதிப்பாளர் என பல்துறைசார்ந்த ஆளுமைகளை கொண்டிருப்பினும் 1950 களில் இ.மு.எ.ச.த்தின் வீறுக்கொண்ட எழுச்சியும் அதன் பின்னணியிலான பிரேம்ஜியின் அமைப்பாக்க செயற்பாடுகளுமே அவரை சமூக முக்கியத்துவம் உடைய மனிதராக்கியது. அதற்காக அவரது ஏனைய துறைசார்ந்த பங்களிப்புகள் புறக்கணிக்கதக்கதல்ல.

இவர் யாழ்பாணத்திற்கு வடக்கேயுள்ள அச்சுவேலி கிராமத்தில் 17-11-1930 அன்று பிறந்தார். தந்தையின்பெயர் நடராஜா தாயின் பெயர் பவளம்மா. பேர்ற்றோரால் இவருக்கு சூட்டப்பட்ட பெயர் ஸ்ரீ கதிர்காம தேவ ஞானசுந்தரம். தமது இளமைக்கால முதலாகவே எழுத்துத் துறையில் ஆர்வம் காட்டியிருந்த ஞானசுந்தரம் வாலிப முன்னணி என்ற பத்திரிக்கையில் பிரேமா என்ற புனைப்பெயரிலே எழுதிவந்திருக்கின்றார். பின் ராமகிருஷ்ணன் என்ற மலையாள தோழரின் ஆலோசனைக்கு அமைய ‘பிரம்ஜி’ என தமது பெயரை மாற்றிக் கொண்டதாக ராஜ ஸ்ரீகாந்தன் குறிப்பிடுகின்றார். பிரம்ஜி என்பது புகழ்பெற்ற மலையாளக் கவிஞரொருவரின் பெயராகும். இதுவே ஞானசுந்தரம் என்ற மனிதர் பிரம்ஜியாக மாறிய கதை, வரலாறு.

அவர் முன்னணி(1948), தேசாபிமானி(1949), சுதந்திரன்(1953-1956), சோவியத் செய்திகளும் கருத்துக்களும் நாளாந்த செய்தி மடல்(1958-1972), சோவியத்நாடு(1972-1991), சோசலிசம்: தத்துவமும் நடைமுறையும்(1978-1989) சக்தி(1980-1989) போன்ற பத்திரிக்கைகளில் பத்திரிகை ஆசிரியராகம் துணை ஆசிரியராகவும் அரசியல் விமர்சகராகவும் கடமையாற்றியிருக்கின்றார். 1964 இல் லெனின் நூற்றாண்டையொட்டி நடாத்தப்பட்ட பத்திரிக்கையாளர் மகாநாட்டில் சிறந்த பத்திரிக்கையாளருக்கான விருதை பெற்றுள்ளார். 1964 இல் உருவாக்கப்ட்ட எழுத்தாளர் கூட்றவுப் பதிப்பகத்தில் பிரம்ஜி பணிப்பாளராக கடமையாற்றியிருக்கின்றார். மேலும் இலங்கை தமிழ் ஆலோசனைச் சபையின் செயலாளர்(1971-1975), யாழ் பல்கலைகழக அமைப்புக் குழு செயலாளர், பத்திரிகை கமிட்டியின் உறுப்பினர்(1973), இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபன ஆலோசனைச் சபை உறுப்பினர்(1972-1974), இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் சபை உறுப்பினர்(1995), இலங்கை தேசிய நூலகச் சபை மதியுரைக் குழு உறுப்பினர்(1997), தினகரன் ஆசிரிய பீட ஆலோசகர்(1997), இன விவகாரங்கள் சம்பந்தமான உயர்மட்ட ஊடகக் கமிட்டி உறுப்பினர்(1997) என பல பதவிகளையும் வகித்திருக்கின்றார். பின்னர் கனடாவிற்கு குடிபெயர்ந்து விட்டார். தொடந்தும் அவர் சமூக செயற்பாடுகளில் ஆர்வம் காட்டிவருகின்றார்.

மக்களுக்கு சோதனையானக் காலக்கட்டத்தில் இடர்பாடுகளையும் முரண்பாடுகளையும் கண்டு அவற்றிலிருந்து தப்பிச் செல்லாமல் அதற்கான அவற்றினை எதிர் கொண்டு அதற்கான தீர்வுகளை முன் வைக்க முனைகின்றவரே வீரனாவார். அந்த வீரனுக்குரிய தன்மையே மேதாவிலாசத்தின் அடிப்படையாகும். அந்த வகையில் பிரேம்ஜியின்; மேதாவிலாசத்தின் அடைப்படைகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

1. உலகில் ஏற்பட்டுள்ள ஆழமான மாற்றங்களை புரிந்துக் கொண்டமை

2. இப்புரிந்துக் கொள்ளலின் அடிப்படையில் மார்க்சிய தத்துவத்தை மாறிவருகின்ற சூழலுக்குக்கேற்ப புனரமைப்பதன் அவசியத்தை உணர்ந்துக் கொண்டமை

3. பொது மக்களின் மீதும் ஸ்தாபனங்களின் மீதும் நம்பிக்கை கொண்டு பொது மக்களின் நலனுக்காக தம்மை அர்பணித்து கொண்டமை

ஐம்பதுகளின் பிற்பகுதியில் சர்வதேச ரீதியாக பல மாற்றங்கள் நிகழ்ந்துக் கொண்டிருந்த அரசியல் மாற்றங்கள் இலங்கையிலும் தாக்கம் செலுத்தியது. உலகின் சகல பாகங்களையும் பொறுத்தமட்டில் இக்கால பகுதியில் பலமான மக்கள் இயக்கங்கள் தோற்றம் பெற்றன. இந்நாடுகளில் தொழிலாளர்கள் இயக்கங்கள் பாசிசத்தையும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து ஆர்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடாத்தின. அத்தகைய வீரியமிக்க சூழலில் அத்தகைய விடுதலையுணர்வுக்கு விய+கம் அமைக்ககூடிய தத்துவமான மார்க்கியத்தை தமக்கு ஆதர்சமாக கொண்டு சமூகமாற்றத்திற்றத்திக்கான இயங்காற்றலை சாத்தியமாக்கியவர் பிரம்ஜி.

மார்க்சிய தத்துவத்தை தமக்கு ஆதர்சனமாக கொண்ட பிரம்ஜி அதனை யதார்த்த வாழ்விலிருந்து அந்நியப்பட்டு வரட்டுத்துவமாக பியோகிக்கவில்லை. வுரட்டு மார்க்ஸியர்கள் சிலர் அறிந்தோ அறியாமலோ ஐரோப்பிய சமூகச் சூழலி;ல் காணப்பட்ட வர்க்க பிளவை அப்படியே இனக்குழு வாழ்க்கை முறையை கொண்டிருந்த எமது சூழலிலும். பிரயோகிக்க முற்பட்டனர். ஊகங்களுக்கு அப்பால் யாதார்த்த வாழ்வுத் தரும் படிப்பினைகளை கையிலெடுப்பதற்கு இவர்களது இரும்பு மண்டைகளும் இறுகிய மூளைகளும் இடம் தர மறுத்தன. இந்த சூழலில் நமக்கான இலக்கிய கோட்பாட்டை முன்னிறுத்தியவர்களில் பிரம்ஜி முக்கியமானவர். ஒருவகையில் உழைக்கும் மக்கள் உலகளவில் பெற்ற அனுபவங்களின் சாரத்தை உள்வாங்கி அதனை நமது பண்பாட்டுக்கும் சூழலுக்குமேற்றவகையில் பிரயோகித்தார் என்பதை அவரது எழுத்துக்கள் சிறப்பாகவே அடையாளம் காட்டியிருக்கின்றன. 1957 ஆம் ஆண்டு கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த மநாட்டில் சோசலிஸ யதார்;த்தவாதம் பற்றிய சிந்தனைகள் முன் வைக்கபபட்ட போது அவ்விலக்கிய போக்கு நமது சுழலுக்கும் பண்பாட்டுக்கும் பொருத்தமற்றதாகவே அமைந்திருந்தது.

நமது பண்பாட்டுத்தளத்தில் மண்வாசைன என்ற இலக்கிய வடிவமும் அதன் தர்க்க ரீதியான வளர்ச்சியான தேசிய இலக்கிய கோட்பாடு அமைந்திருந்ததை உணர்ந்து செயற்பட்டமையுயே இ. மு.போ.எ.ச. முக்கிய பங்களிப்பாகும். மண்வாசைன இலக்கியம் என்ற இலக்கிய போக்கை முதன் முதலில் பிரதானப்படுத்தியவர் பிரம்ஜி. அதற்கான கோட்பாட்டு உருக்கத்தை செய்தவர் பேராசிரியர் க. கைலாசபதி. மேலும் தேசிய இனப்பிரச்சனைக் குறித்தும் பிரம்ஜி கவனமெடுத்திருந்தமை இவ்விடத்தில் முக்கியமாக குறித்துக்காட்ட வேண்டியதொன்றாகின்றது.

பிரம்ஜி 1957 ஆண்டு ஜுன் 02ஆம் திகதி இ.மு.எ.ச. ஆரம்பித்த நாளிலிருந்து அவரே அதன் வினைத்திறன் மிக்க செயலாளராக இருந்து வருகின்றார். அவருடைய இந்த பதவிக்கு எவரும் போட்டியிட்டதாக இல்லை. அந்தளவிற்கு அவரது ஆளுமையும் பங்களிப்பும் அவ்வியக்கத்தின் வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பை நல்கியுள்ளது.அவ்வியக்கம் வீறுக் கொண்ட இயங்கிய இரு தசாப்த காலம் இலங்கை வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அவர் தமது செயற்பாடுகளை தனிநபர் சார்ந்த செயற்பாடுகளாகவோ அல்லது குழு செயற்பாடுகளாகவோ அவர் மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. அவர் தாம் சாந்த இயக்கத்தினூடாக பரந்துப்பட்ட மார்க்சிய முற்போக்கு ஜனநாயக சக்திகளை அணித்திரட்டியிருந்தார்.முற்போக்கு எழுத்தாளர்கள் பொது மக்களுடன் தொடர்புக் கொண்டிருப்பதுடன் அவர்களது அன்றாட வாழ்வுடனும் போராட்டங்களுடனும் ஒன்றுக் கலக்க வேண்டும் என்ற கருத்தை தமது அமைப்பினூடாக முன்னெடுத்தவர் பிரம்ஜி.

சகல ஜனநாயக மார்க்சிய சக்திகளும் ஒன்றினைதல் என்பது ஒரு அமைப்பு அல்லது கட்சி சார்ந்த உணர்வை மற்றக் குழுக்களின் மீது திணிப்பதல்லஇ மாறாக ஒவ்வொரு அணியிலும் காணப்படக் கூடிய சமூகம் சார்நத கூறுகளை சாதகமாக பயன்படுத்தி ஒன்றாக செயற்பட வேண்டும் என்பதே அதன் பொருள். இதற்கு மாறான குழுநிலைவாதம் ஒரு வெகுஜன அமைப்பை உருவாக்காது என்பதே அதன் பொருள். மாறாக வெற்றுக் கோங்களினால் நிலை நிறுத்து முற்படுகின்ற எந்தவொரு அமைப்பும் சமூகத்திற்கு பயன்படப்போவதில்லை. அழிவையே கொண்டு வரும். இவ்வம்சத்தை பிரம்ஜி சரிவர உணர்ந்திருந்தார் என்றே எண்ணத் தோன்றுகின்றது. இந்நிலையில் அவர் தமிழர்களை மாத்திரமின்றி சிங்கள முற்போக்கு சக்திகளின் ஆதரவையும் திரட்டியிருந்தார். மேலும் தமது ஸ்தாபத்தின் கொள்கைக் கோட்பாடுகளையும் சிங்கள மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்வதிலும் இவரது முக்கிய பங்ளிப்புகளை பலர் பதிவாக்கியுள்ளனர். 1975 இல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மநாட்டு மண்டபத்தில் பிரம்ஜி தலைமையில் நடைப்பெற்ற இ.மு.எ.ச. தேசிய ஒருமைப்பாட்டிக்கான சிங்கள தமிழ் எழுத்தாளர் மநாடு’ முக்கியமாக குறிப்பிடத்தக்க தொன்றாகும். யாவற்றுக்கும் மேலாக பிரம்ஜி தாம் இயங்கியகாலத்தில் தன்னை எப்போதுமே முன்னிறுத்தியதில்லை என்தையும் அவர் தமக்குகிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் பிறருக்கு வழங்கி ஊக்கப்படுத்தினார் என்பதையும் பல தோழர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்.

இருப்பினும் காலப்போக்கில் நசிவு தரும் தேசிய சர்வதேச அரசியல் சூழலில் பிரம்ஜியும் தளர்வடைந்தார் என்பதும் கவனத்திலெடுக்கத்தக்கது. 1962-1963 களில் சர்வதேச கம்ய+னிச இயக்கத்தில் உருவான முரண்பாடு இ.மு.எ.ச த்தையும் பாதித்திருந்தது. காலப்போக்கில் இவ்வியக்கத்தில் மொஸ்கோ சார்புக் கொண்டிருந்த திரிபவாதிகளின் கருத்தே மேலோங்கிய நிலையில் துரதிஸ்டமாக பிரம்ஜி;யும் அவ்வணியை நாடுகின்றவராக இருந்தமையினால் இவ்வமைப்பின் பின்னடைவு தொடங்கியது எனலாம். இவ்வடத்தில் பிறிதொரு விடயம் பற்றியும் குறித்துக் காட்ட வேண்டியுள்ளது. புரட்சிகர சீன அணியை சார்ந்திருந்த சிலர் எடுத்துக்காட்டாக கே. டானியல், கே. கைலாசபதி, செ. கணேசலி;ங்கம் முதலானோர் முற்போக்கு அணியை கைப்பற்றல் அல்லது புரட்சிகர எழுத்தாளர் சங்கம் ஒன்றை அமைக்கும் திட்டம் தோல்வி அடைந்ததை செ. கணேசலிங்கம் நினைவுக் கூறுவர். இந்த பின்னணியில் தேசிய கலை இலக்கிய பேரவை என்ற அமைப்பின் உருவாக்கம் முக்கியமானதொன்றாகும். இது தொடர்பில் திருக்கோணமலையில் நடைப்பெற்ற கூட்டம் இதற்கான முன்னோடி முயற்சியாகவே அமைந்திருந்தது எனக் கூறலாம். சீனசார்புடன் இணைந்திருந்த பலர் இவ்வமைப்புடன் இணைந்து செயற்பட்டனர்.

எது எவ்வாறாயினும் ஒரு முற்போக்கு மார்க்கியவாதியின் அனுபவ பகிர்வு, அவர்கள் பற்றிய மதிப்பீடகள், ஆய்வுகள் யாவும் சுமவிமர்சனமாகவே அமையும் இவ்வகையில் பிரம்ஜி பொறுத்த சுமவிமர்சனங்கள் வெளி வரவேண்டியது காலத்தின் தேவையாகும். இன்றைய சூழலில் புதிய அரசியல் பண்பாட்டு பாதையில் உருவாகிவரும் எண்ணற்றவர்களுக்கு இவ்வாளுமைகளின் வாழ்வும் வளமும் வழிகாட்டி நின்கின்றன. இத்தகைய சிறப்பு மிக்க பிரம்ஜி என்ற மனிதர் தொடர்ந்து எமக்காக இயங்க வேண்டும் என்பதே அவரது பாதையில் பயனிக்கின்ற இளைய தலைமறையினரின் எதிர்பார்ப்பாகும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பதிவுகள்,     17 ஜூலை 2013


டொமினிக் ஜீவாவின் 85 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு .... - லெனின் மதிவானம் -

ஈழத்து சஞ்சிகை வரலாற்றில் முக்கிய திருப்பு முனையாக திகழ்கின்ற தோழர் டொமினிக் ஜீவாவின் 85 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு முச்சந்தி இலக்கிய வட்ட நண்பர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர். சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக மல்லிகை என்ற முற்போக்கு சஞ்சிகையை வெற்றி கரமாக நடத்திவருவதுடன், முற்போக்கு மார்க்சிய உணவுக் கொண்ட பல தளிர்கள் கிளையாவதற்கும் வேர்கொள்வதற்கும் தூண்டுதலாக இருந்து வருபவர் டொமினிக் ஜீவா. எமது யாசிப்பு அவர் தொடந்து இந்த மானுட அணி சார்ந்து காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதாகும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


முற்போக்கு இலக்கிய முன்னோடி காவலூர் ராஜதுரைக்கு இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் அஞ்சலி    - லெனின் மதிவானம் -    
 
இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் பொதுவான வளர்ச்சியையும், குறிப்பாக அவ்விலக்கியத்தின் மக்கள் சார்பு ஆழ அகலப்பாட்டை வற்புறுத்தி அதற்காக செயற்பட்டதில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு முக்கிய இடமுண்டு. அவ்வகையில் இலங்கையில் முற்போக்கு இலக்கியத்தின் பரிணாமத்திலும், அப்பரிணாமம் ஆழமாகவும் அகலமாகவும் வளத்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் மூத்த முற்போக்கு எழுத்தாளர்களிரொருவரவரும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முத்த உறுப்பினராக  காவலூர் ராஜதுரை முக்கியமான ஒருவர். வாழ்விலிருந்து அந்நியப்படாமல் இவர் தீட்டிய சிறுகதைகள் சமூக முக்கியத்துவம் உடையவைகளாகும். யாழ்பாணத்தில் ஊர்காவற்துறையில் கரம்பன் என்னுமிடத்தில் பிறந்த இவர் தமது சமூகம் சார்ந்த செயற்பாடுகளினூடாக முழு இலங்கை சார்ந்த புத்திஜீவியாக ஆளுமையாக திகழ்ந்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனத்தில் நீண்டகாலம் பணியாற்றிய இவர் தமக்கு கிடைத்த வாய்ப்பையெல்லாம் முற்போக்கு இலக்கியத்தின் செழுமைக்காக பயன்படுத்தியவர். இவரது கதைகள் நாடகங்களாகவும் தொலைக்காட்சி நாடகங்களாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன. இவரது காலங்கள் என்ற தொலைக்காட்சி நாடகம் மலையக மக்களின் வாழ்வை பின்னணியாகக் கொண்டது. பொன்மணி என்ற இலங்கைத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதுடன் அதன் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கின்றார்.

அன்னாரின் மறைவையொட்டி, அவரது படைப்புகள் மீள் பதிப்புகள் செய்யப்பட்டு அவை மககள் மத்தியில் கொண்டு செல்லப்படல் வேண்டும். அதற்கு அப்பால் அவர் பற்றிய ஆய்வுகள் காய்த்தல் உவத்தலற்ற நிலையில் வெளிவர வேண்டியுள்ளது. அவ்வாய்வுகள் பின்வரும் நான்கு நிலைககளில் இடம்பெறல் காலத்தின் தேவையாக உள்ளது. பண்பாட்டுத் தளத்தில் அவரது செயற்பாடுகள் வியப்பை அளித்த போதினும் அவர் மீதான வழிபாட்டுணர்வுக்கு இடந்தராமல் விமர்சித்து விளக்குவதே சமூக பயன்மிக்க அம்சமாக காணப்படும். அதேசமயம் அன்னாரின் ஒவ்வொரு துறைசார்ந்த பங்களிப்புகளும் பண்முக நோக்கில் வெளிக் கொணரப்படல் அவசியமானதாகும். அவ்வாய்வுகள் பின்வரும் நான்கு நிலைகளில் இடம்பெற வேண்டும். முதலாவது, காவலூர் ராஜதுரையை பல்துறைநோக்கில் அணுகி ஆராய்பவையாக இருத்தல் வேண்டும். சமூகவியல் நோக்கில் காவலூர் ராஜதுரையின் சமூக முக்கியத்துவம் வரலாற்றுக் கதியில் அவரது சிந்தனைகளும், போதனைகளும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது குறித்து ஆராய்தல் இதன் பாற்படும். இரண்டாவது, காவலூர் ராஜதுரையை பின்பற்றி எழுந்த மரபு அவரை பின்பற்றியும் அவரை மீறியும் எவ்வாறு வளர்ந்துள்ளது என்ற நோக்கில் ஆராயப்படல் வேண்டும். மூன்றாவது, வரலாற்றுப் பின்னணியில் காவலூர் ராஜதுரையை மதிப்பிடுதல் முக்கியமானவையாகும். நான்காவதாக காவலூர் ராஜதுரைகுறித்து வெளிவந்த ஆய்வுகள், மதிப்பீடுகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது பற்றியதாக இருத்தல் வேண்டும். இதுவே இறந்த மனிதருக்காக நாம் ஆற்றும் உண்மையான அஞ்சலி என இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் தலைவர் லெனின் மதிவானம் அவர்களும். பொதுச் செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன் அவர்களும் தெரிவித்துள்ளனர்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பதிவுகள், 04 நவம்பர் 2014


இலங்கை கல்வி சமூக சம்மேளனம் (SLECO) - லெனின் மதிவானம் -        

இலங்கை கல்வி சமூக சம்மேளனம் (SLECO) காலத்தின் தேவைதான் பெரும அரசியல், சமூக, பெருளாதார, கலாசார நிறுவனங்களை தோற்றுவிக்கின்றது எனக் கொண்டால் இன்றைய சமூகத் தேவைதான்- வரலாற்றுத் தேவைதான் இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தையும்
( Sri Lanka Educational Community Organization- SLECO)   தேற்றுவித்தது எனலாம். அந்தவகையில் கல்விசார் பணியாளர்களான ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விசாரா ஊழியர்கள்  மற்றும் கல்வி அதிகாரிகள், ஆகியோர் எதிர் நோக்கும் பிரச்சனைகளை அவர்களின் துன்பத் துயரங்களை வெவ்வேறு வகைகளிலும் வடிவங்களிலும்  உணர்ந்து அதற்கான மாற்றுச் செயற்பாடுகளை முற்போக்கான திசையில் முன்னெடுப்பதே இவ்வியக்கத்தின்  நோக்கமென அவ்வமைப்பினர் பிடகடனப்படுத்தியுள்ளனர். அவ்வாறே, தமது செயற்பாடுளை எத்தனங்களை ஒரு பிரதேச எல்லைக்குள் மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ளாமல் தேசம் தழுவிய அமைப்பாக இது செயற்படும். ஐக்கியம் புதிய தளம் அமைக்கும் என்ற தாரக மந்திரத்துடன் தோற்றங்கொண்டுள்ள இவ்வமைப்பு  எந்தவொரு கட்சிக்கும் சார்பானதோ எதிரானதோ இல்லை. அந்தவகையில் எந்தக் கட்சியிலும் உள்ள ஒருவர் தனது கட்சிக்குரிய அமைப்பாக்கும் நோக்கம் இல்லாமல், தனது கட்சிக்கு விரோதமாயல்லாத வெகுஜன செயற்களங்களில் இவ்வமைப்போடு சேர்ந்து இயங்க இயலும். இது பரந்துபட்ட சமூக தளம் என்கிறவகையில், வெவ்வேறு சமூகத்தின்- குறிப்பாக பின்தங்கிய சமூகங்களின் கல்வி வளர்ச்சியை தமது இலக்காக கொண்டே இவ்வமைப்பு செயற்படும்.

இத்தகைய உயரிய நோக்கோடு கடந்த ஞாயிறு அட்டன் பொஸ்கோ கல்லூரியில் நடைப்பறெ்ற உறுப்பினர் தெரிவுக் கூட்டத்தில் திரு. லெனின் மதிவானம் தலைவராகவும், திரு.ஆர்.  சங்கர மணிவண்ணன் பொதுச் சொயலாளராகவும். திரு. ஆர். மணாளன் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பதிவுகள், 18 அக்டோபர் 2014


அறிவோர் ஒன்று கூடல் நிகழ்வு: கொழும்புத் தமிழ்ச் சங்கம்     -லெனின் மதிவானம் -    
    
அறிவோர் ஒன்று கூடல் நிகழ்வு: கொழும்புத் தமிழ்ச் சங்கம்
இடம்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் - ' நீர்வை பொன்னையனின் இலக்கிய தடம் சிறுகதைகளை முன்னிறுத்தி…..!'
காலம்: 11-10-2013(மாலை: 6.00 மணி)
தலைமை: திரு. அந்தனி ஜீவா (ஆட்சி மன்ற உறுப்பினர்)
உரை : திரு. லெனின் மதிவானம் (புதிய பண்பாட்டுத் தளம்)
ஏற்பாடு: கொழும்புத் தமிழ்ச் சங்கம்
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பதிவுகள்,    09 அக்டோபர் 2013


லெனின் மதிவானம் எழுதிய திறனாய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு - 'ஊற்றுக்களும், ஓட்டங்களும்' - https://noolaham.net/project/136/13588/13588.pdf