'காலச்சுவடு' கண்ணனுக்குச் செவாலியர் விருது கிடைத்துள்ளதாக முகநூல் கூறுகின்றது. வாழ்த்துகள். இன்று பெரும்பாலும் விருதுகள் என்பது தொடர்புகளின் அடிப்படையில் வழங்கப்படும் ஒன்றாக மாறிவிட்டது. அவ்வப்போது விருதுகள் சர்ச்சைகளை உருவாக்கி விடுவதுமுண்டு. காலச்சுவடு கண்ணனுக்குச் செவாலியர் விருது என்றதும் எனக்கு இவ்விருதினைப்பெற்ற நடிகர் திலகம் நினைவுக்கு வந்தார். நடிகர் கமலகாசன் நினைவுக்கு வந்தார். அவர்கள் தமிழ்த்திரையுலகின் சாதனையாளர்கள்.

அவர்களுடன் 'காலச்சுவடு' கண்ணனை ஒப்பிட்டுப் பார்த்தேன். இவர் சிறந்த பதிப்பாளர்களில் ஒருவர். எழுத்துத்துறையில் மிகவும் சாதித்தவரென்று கூற முடியாது. ஆனால் தமிழ்ப் பதிப்புத்துறையில் சிறப்பாக வர்த்தக நோக்கில் இயங்கி வரும் ஒருவராக இவரை அடையாளம் காண்கின்றேன். சிறந்த உலக இலக்கியப் படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கின்றார். தமிழின் சிறந்த படைப்புகளை ஆங்கில மொழிக்குக் கொண்டு சென்றிருக்கின்றார். அதற்காக இவருக்கு இவ்விருது கிடைத்திருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன்.

இச்சமயத்தில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியை நினைவு கூர்கின்றேன். தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் அவர். சிறுகதை, நாவல், கவிதை, மொழிபெயர்ப்பு, பதிப்புத்துறை என்று அவரது இலக்கியப் பங்களிப்பு பரந்து பட்டது. தற்போது வெற்றிகரமாக இயங்கும் 'காலச்சுவடு' பதிப்பகம் அவர் உருவாக்கியதுதான். 'காலச்சுவடு'; சஞ்சிகையும் அவர் உருவாக்கியதுதான். தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ் இலக்கியத்துக்காக அர்ப்பணித்து வாழ்ந்தவர் அவர். அவரை இந்திய மத்திய அரசு கண்டுகொள்ளவேயில்லை. அவரது படைப்புகளுக்குச் சாகித்தியப் பரிசு எதனையும் கொடுக்கத்தவறிவிட்டது இந்திய மத்திய அரசு. அவருக்கு அவரது வாழ்நாள் இலக்கியப் பங்களிப்புக்காக செவாலியர் விருது போன்ற விருதுகள் கிடைக்கவில்லை. எழுத்தாளர் அ.முத்துலிங்கம் உருவாக்கிய தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 'இயல் விருது' மட்டுமே கிடைத்திருந்தது. மேலுமிரு தமிழக அமைப்புகளின் விருதுகள் கிடைத்திருக்கின்றன.

இந்நிலையில் சகல விருதுகளும் கிடைத்திருக்க வேண்டிய எழுத்தாளர் சுந்தர ராமசாமிக்குக் கிடைத்திருக்காத வாழ்நாள் சேவைக்கான அயல் நாட்டு விருதொன்று அவரது மகனுக்குக் கிடைத்துள்ளது. வாழ்த்துகள்!