எழுத்தாளர் மாஸ்டர் சிவலிங்கத்தின் மறைவையடுத்து இன்னுமொருவரின் மறைவும் இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு முக்கியமானதோர் இழப்பு. எழுத்தாளர் மயிலங்கூடலூர் பி.நடராசன் அவர்கள் மே 12இல் மறைந்தார் என்னும் செய்தியினை எழுத்தாளர் ஆதவனின் முகநூற் பதிவு மூலம் அறிந்துகொண்டேன். உண்மையில் மனம் வருந்தினேன். இவரை நான் சந்தித்ததில்லை. இவரது எழுத்துகள் மூலம் அறிந்திருக்கின்றேன். எழுத்தாளர் அ.ந.கந்தசாமி அவர்களின் படைப்புகளைத் தேடிக்கொண்டிருந்தபோது என் தம்பி பாலமுரளி இவரைச் சந்தித்து, அ.ந.க.வின் சில படைப்புகளின் பிரதிகளைப்பெற்று அனுப்பியிருந்தான். அதனை இத்தருணத்தில் நினைவுகூர்கின்றேன்.

மாணவர்களை எழுதுவதற்குத் தூண்டிய இவரது ஆர்வத்தையும், அதற்கான உழைப்பினையும் அவதானித்திருக்கின்றேன். அப்பொழுதெல்லாம் நான் நினைத்துக்கொள்வதுண்டு 'இவரது மாணவர்களில் ஒருவனாக நானும் இருந்திருக்க வேண்டுமென்று'. இவரைப்போன்ற ஆசிரியர்களின் கீழ் கற்பதென்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்பேன்.

இவர் பண்டிதர் கதிரேசர்பிள்ளையிடம் (எழுத்தாளர் ஆதவனின் தந்தையார்) தமிழ் இலக்கணம் கற்றவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரது தமிழ் இலக்கியத்துக்கான பங்களிப்பு பன்முகப்பட்டது.

சிறுவர் இலக்கியம் , இலக்கியத்திறனாய்வு, இலக்கியப்பிரதிகளின் சேகரிப்பு, தொகுப்பாசிரியராக ஆக்கங்களைத் தொகுத்தல் எனப் பன்முகத்தன்மை மிக்கது. புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பான 'மரணத்துள் வாழ்வோம்' நூலின் தொகுப்பாசிரியர்களில் இவருமொருவரென்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பலரின் ஆய்வுகளுக்கு நிச்சயம் இவர் சேகரித்து வைத்திருந்த இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் உதவியிருக்கும். இவருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவிப்பதோடு , இவர் பற்றிய விக்கிபீடியாக் குறிப்பினையும் இங்கு , இத்தருணத்தில் பகிர்ந்துகொள்வது நல்லதென்பதால் பகிர்ந்துகொள்கின்றேன். மயிலங்கூடலூர் பி.நடராசன் பற்றிய விக்கிபீடியாக் குறிப்பு: https://ta.wikipedia.org/s/b3qb