- எழுத்தாளர் பா.விசாலம் அவர்கள் மறைந்த செய்தியினை சமூக, அரசியற் செயற்பாட்டாளரான அசோகன் யோகன் கண்ணமுத்து தனது முகநூற் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். எழுத்தாளர் பா.விசாலம் அவர்களின் மறைவால் வாடி நிற்கும் அனைவருடன் நானும் இணைந்து கொள்கின்றேன். ஆழ்ந்த இரங்கல். - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் தோழர் பா. விசாலம் அவர்கள், இன்று அதிகாலை காலமானார்!  - அசோகன் யோகன் கண்ணமுத்து -
 

எழுத்தாளர் தோழர் பா. விசாலம் அவர்கள், இன்று அதிகாலை காலமானார், எழுத்தாளர் தோழர் பா. விசாலம் அவர்களும் அவரது வாழ்க்கைத்துணைவராக ஏற்ற தோழர் ராஜூ அவர்களும் நாகர்கோவிலில் களப்பணியாற்றியவர்கள். தோழர் பா. விசாலம், இரு நாவல்கள் மற்றும் சிறுகதைகள் எழுதியுள்ளார். ஏற்றத்தாழ்வுகளற்ற சமுதாய வாழ்வு நோக்கி தங்களை உட்படுத்திக்கொண்ட தோழர்கள் அவர்கள் தோழர் ராஜூ பல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துவிட்டார். தோழர் பா. விசாலம் எனும் பெயர் நிலைகொண்டது. (தகவல்: தளம் இதழ்)

எட்டு வருடங்களுக்கு முன்னர், தோழர் விசாலம் அவர்களின் 'மெல்லக் கனவாய் பழங்கதையாய்' நாவல் பற்றி நான் எழுதிய குறிப்பை மறுபதிவு செய்கின்றேன். தோழருக்கு என் இதய அஞ்சலி! புனைவு இலக்கியங்கள் மீது எனக்கு இப்போதெல்லாம் ஆர்வம் எழுவதில்லை. அவை வெறும் சடலங்களாகவே எனக்கு தென்படுகின்றன. நாவல்கள் வாசித்து நீண்ட நாட்கள் சென்றுவிட்டன. தமிழ்மகனின் ‘’வெட்டுப்புலி’’ நாவலுக்கு பிற்பாடு இன்று ஒரு நாவலை இரண்டாம் தடவையாக மீண்டும் வாசிக்கத் தொடங்கியுள்ளேன். இந் நாவலை, பாரீசுக்கு வந்து துயர்கொண்ட காலம் ஒன்றில் வாசித்தேன். 1995ம் ஆண்டு பரீஸ் வாழ்வின் புதிய நெருக்கடிகளும், நான் கடந்து வந்த அரசியல் போராட்டம் தந்த வடுக்களும், சொந்த வாழ்வின் கசப்பான துயரங்களும் சூழ்ந்திருந்த அந்தக் காலம் ஒன்றில் இந் நாவல் எனக்கு பலகதைகளைச் சொன்னது. இந் நாவலின் ஊடாக தொடர்ந்தோடும் சோகமும், போராட்டமும் என்னை இந் நாவலோடு நெருக்கமுறச் செய்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும், இடதுசாரி சிந்தனைகளிலும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையிலும் ஆர்வம் கொண்ட ஒரு பெண் எதிர்கொள்ளும் வாழ்க்கைப்போராட்டமே இந் நாவல். இது புனைவு என்பதைவிட இதை எழுதிய பா.விசாலம் அவர்களின் சுயசரிதையோ என்ற மயக்கம் இன்றும் என்னிடம் தொடர்கின்றது.

இந் நாவலில் பல அரசியல் தலைவர்கள் தங்களின் உண்மையான பெயர்களிலேயே வருகின்றார்கள். இந் நாவலில் வரும் கம்யூனிட் கட்சியின் முழு நேர உறுப்பினரான நந்தன் என்ற பாத்திரமும், இந் நாவலின் கதைசொல்லியாக வரும் பெண்ணிற்குமான காதலும், இயல்பாய் ஏற்படுகின்ற மன ஓப்பந்தமும் எனது வாழ்வின் ஏதோ ஒரு பக்கத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றது. இன்று மீண்டும் இந் நாவலை படிக்கின்றேன். சில வேளைகளில் இவ் மறுவாசிப்பு புதிய அனுபவங்களை எனக்கு தரக்கூடும். பா.விசாலம் எழுதிய இந் நாவலை பாண்டிச்சேரி ஆர்த்தி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.