இலக்கிய வித்தகர், கலாபூசணம், ஓய்வுநிலைக் கல்விப் பணிப்பாளர் த. துரைசிங்கம் (84) திங்கட்கிழமை மாலை (23 - 08 - 2021) கொழும்பில் காலமானார். ஈழத்து இலக்கியப் பரப்பிலும், கல்விப் புலத்திலும் நன்கு அறியப்பட்ட புலமையாளர் த. துரைசிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆறு தசாப்தங்களுக்கு மேலாக, எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டு அமைதியாகச் செயற்பட்டு வந்தவர்.

சிறந்த எழுத்தாளர். கவிஞர். நூற்றுக்கு மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். இளம் வயதிலேயே பத்திரிகைச் செய்தியாளராகப் பணியாற்றத் தொடங்கியவர். ஆசிரியராக, அதிபராக, கோட்டக் கல்வி அலுவலராக, மாவட்டக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றிய பல்துறை அனுபவசாலி.

இவரது எழுத்துப் பணிக்குக் கிட்டிய அங்கீகாரமும் விருதுகளும் ஏராளம். சிறுவர் இலக்கியத் துறைக்கான தேசிய இலக்கிய (சாகித்திய) விருதினை நான்கு முறை பெற்ற பெருமைக்குரியவர். வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு, இலங்கை இலக்கியப் பேரவை, யாழ் இலக்கிய வட்டம், கொழும்பு விவேகானந்த சபை, கலாசார அலுவல்கள் அமைச்சு, மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் எனப் பலதரப்பட்ட அமைப்புகள் இவருக்கு விருதுகளை வழங்கிக் கௌரவித்துள்ளன. இலக்கிய வித்தகர், கலாபூசணம், தமிழியல் விருது முதலான பல்வேறு விருதுகளுக்குரித்தானவர். எழுத்துப் பணியில் இடைவிடாது உழைத்துக்கொண்டிருந்த தமிழறிஞர்.

இவரது சிறுவர் இலக்கிய நூல்கள், பல பதிப்புகள் வெளியாகி ஈழத்தில் விற்பனையில் சாதனை படைத்தவையாகும். பைந்தமிழ் வளர்த்த ஈழத்துப் பாவலர்கள், தமிழ் இலக்கியக் களஞ்சியம், ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு, ஈழத்துத் தமிழ் அறிஞர்கள், ஈழத்தில் சிறுவர் இலக்கியம் மற்றும் சிறுவர் இலக்கிய நூல்கள் குறிப்பிடத்தக்க, பாராட்டுப் பெற்ற நூல்களாகும். தமிழகத்திலும் இலக்கியவாதிகள், தமிழறிஞர்களின் பாராட்டுகளைப் பெற்றவர்.

காலஞ்சென்ற பிரபல எழுத்தாளர் நாவேந்தனின் இளைய சகோதரரான இவர், அவரது பெயரால் வருடந்தோறும் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கு, இலங்கை இலக்கியப் பேரவை மூலம் 'நாவேந்தன் விருது' வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. சட்டத்துறைப் பேராசிரியர் வி. ரி. தமிழ்மாறன், எழுத்தாளர் மருத்துவர் வி. ரி. இளங்கோவன், மருத்துவர் வி. ரி. சிவானந்தன் ஆகியோர் இவரது இளைய சகோதரகளாவர்.