ஈழத்து இலக்கியப் பரப்பில் சிறுகதை எழுத்தாளர்கள் அதிகம். கவிதையென எழுதிக் குவிப்போர் ஏராளம். நாவல் எழுதுவோர் மிகக் குறைவு எனலாம். அன்றும் இன்றும் இதே நிலை தான். அன்று கிராமத்தை அடிப்படையாக வைத்து நாவல் எழுதுவோர் மிகக் குறைவாக இருந்த காலகட்டத்தில், ஒருவர் கிராமத்தைக் களமாகக்கொண்டு நாவல் எழுதினார். குரும்பசிட்டி என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவர், கிராம மக்களின் வாழ்க்கையை, அவர்தம் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக நாவலை எழுதினார். 'நடமாடும் நூல்நிலையம்' எனப் போற்றப்பட்ட 'இரசிகமணி' கனக செந்திநாதன் எழுதிய 'விதியின் கை' என்ற இந்நாவல் 05 - 07 - 1953 திகதியிலிருந்து 'ஈழகேசரி'ப் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. அக்காலத்தில் ஈழத்தில் பிரபல சிறுகதை எழுத்தாளர்களாக விளங்கிய இலங்கையர்கோன், சி. வைத்திலிங்கம், சம்பந்தன், சோ. சிவபாதசுந்தரம், அ. செ. மு., வரதர், சு. வே., அ. ந. கந்தசாமி ஆகியோரும் நாவல் எழுதவில்லை. (* "அ.செ.மு பிஷ்மன் என்னும் பெயரில் எழுதிய யாத்திரை என்னும் நாவல் ஈழகேசரியில் தொடராக வெளியாகியுள்ளது. அ.ந.கந்தசாமி எழுதிய நாவலான மனக்கண் தினகரன் பத்திரிகையில் தொடராக வெளியாகியுள்ளது." - பதிவுகள் - ) இந்த நிலையில் கனக செந்திநாதன் அசட்டுத் துணிச்சலுடன் 'விதியின் கை' என்ற நாவலைச் செம்மண் கிராமத்து மணத்துடன் எழுதியுள்ளார். கிராமத்துப் பாடசாலை, கிராமச் சங்கத் தேர்தல், காவடி ஆட்டம், என்பவற்றைப் பின்னணியாகக் கொண்டு, நிலப்பிரபுத்துவத்தின் எச்ச சொச்சங்களை, உண்மை நிலையில் சித்தரித்துள்ளார். இந்நாவல் பின்னர் வீரகேசரிப் பதிப்பக வெளியீடாக 1977 மார்ச் மாதம் வெளியாகியது.

ஈழகேசரிக் காலத்துக்குப்பின், வீரகேசரியில் கனக செந்திநாதன் மற்றும் சில எழுத்தாளர்களுடன் சேர்ந்து எழுதிய ''மத்தாப்பு, மணிமகுடம்'' ஆகிய நாவல்கள் வெளியாகியன. இலக்கிய சர்ச்சை, பழைய நூல் அறிமுகம், கொய்த மலர்கள் போன்ற இவரது கட்டுரைகளும் வீரகேசரியில் வெளியாகின. ஈழத்து எழுத்தாளர்கள் - ஈழத்துப் படைப்புகள் என்பதில் மிகக் கரிசனையோடு செயற்பட்டவர் கனக செந்திநாதன்.

1916 -ம் ஆண்டு குரும்பசிட்டியில் கனகசபை - பொன்னம்மா தம்பதிகளின் மகனாகப் பிறந்த இவருக்குத் தந்தையார் வைத்த பெயர் திருச்செவ்வேல். அதுவே பதிவுப் பெயராகும். தந்தையின் பெயருடன் சேர்த்து கனக செந்திநாதன் என்ற பெயரை இவரே வைத்துக்கொண்டார். ஆனால் முக்கிய ஆவணங்களில் திருச்செவ்வேல் என்ற பதிவுப் பெயரில் தான் ஒப்பமிடுவாராம். பிறந்த ஒருசில மாதங்களிலேயே தந்தையை இழந்தார். தாயாரின் அரவணைப்பால், தளராத முயற்சியால் கல்விகற்று ஆசிரிய தராதரப் பரீட்சையில் சித்தியடைந்தார். திருநெல்வேலி சைவ ஆசிரிய கலாசாலையில் பயிற்சிபெற்று ஆசிரியராக வெளிவந்தார். பல பாடசாலைகளில் தொடர்ந்து 32 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆசிரிய கலாசாலையில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் மாணவனாக இருந்து இலக்கிய ஆர்வம் மிக்கவராகத் தம்மை வளர்த்துக்கொண்டார். சோ. சிவபாதசுந்தரத்தின் வழிகாட்டலில் இலக்கியத்துறையில் ஈடுபட்டார்.

இளம் வயதில் வறுமையை உணர்ந்தவராக இருந்த போதிலும், பின்னர் தனது சம்பளத்தின் பெரும்பகுதியை நூல்கள் - பத்திரிகைகள் வாங்குவதிலும் மற்றும் இலக்கிய முயற்சிகளிலும் செலவு செய்தார். இலக்கிய விழாக்களில் தவறாது கலந்துகொண்டார். எழுத்தாளர்களை ஊக்குவித்தார். அவர்களுடன் கலந்துரையாடுவதில் மகிழ்வடைந்தார். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, ஈழகேசரி நா. பொன்னையா, கலாகேசரி ஆ. தம்பித்துரை, சிற்பக் கலைஞர் ஆறுமுகம் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைப் பதிவு செய்துள்ளார். சோமசுந்தரப் புலவர், அல்வாயூர்க் கவிஞர் செல்லையா, அம்பி ஆகியோரின் கவிதைகள் குறித்தும் எழுதியுள்ளார். பள்ளு, பரணி, கலம்பகம் என்பவை குறித்த இவரது வானொலிப் பேச்சுகள் நூலாகியுள்ளன. 'கடுக்கனும் மோதிரமும்' என்ற இலக்கிய இரசனைக் கட்டுரைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார். 1964 -ம் ஆண்டு இவர் வெளியிட்ட 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி' என்ற நூல் குறிப்பிடத்தக்கது. பலரின் பாராட்டுகளைப் பெற்றது. இந்நூல் பல பதிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளது.

கரவைக்கவி கந்தப்பனார் என்ற பெயரில் ஈழத்துப் பேனா மன்னர்கள் குறித்து எழுதியுள்ளார். அவரது 'ஈழத்துக் கவிமலர்கள்' என்ற நூலும் குறிப்பிடத்தக்கதாகும். 1941 -ல் ஈழகேசரியில் யாழ்பாடி என்ற புனைபெயருடன் சிறுகதை எழுதத் தொடங்கியவர். இவரது 'ஒருபிடி சோறு, வெண்சங்கு, செம்மண், சொந்தம், பிட்டு, தரிசனம், அலை ஓய்ந்தது, கூத்து, கண் திறந்தது, சமர்ப்பணம், வண்ணான் குளம், இரும்பு இதயம் ஆகியன குறிப்பிடத்தக்க சிறுகதைகளாகும். இவர் இருபத்தைந்து சிறுகதைகள் வரை எழுதியுள்ளதாகத் தெரிய வருகிறது. நாடகங்கள் சிலவும் எழுதியுள்ளார். இவரது பத்துச் சிறுகதைகள் அடங்கிய 'வெண்சங்கு' சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டுள்ளது..

எந்த இலக்கியக் கோட்பாடு - சித்தாந்தங்களுக்குள்ளும் தன்னைச் சிக்கவைக்காமல், யாழ்ப்பாணக் கிராமங்களில் வேரோடியிருக்கும் போலிக் கலாசாரத்தைப் படம்பிடித்துக் காட்டுவனவாகக் கதைகளைப் படைத்துள்ளார் என்பர். இவரது சிறுகதைகள் ஒருசில ஆங்கிலத்திலும், ரஸ்ய மொழியிலும் வெளிவந்துள்ளன. கரவைக்கவி கந்தப்பனார், யாழ் பாடி, இலக்கிய மாணவன், வேல், பரதன், உபகுப்தன் எனப் பல புனைபெயர்களில் இலக்கிய இரசனைக் கட்டுரைகள், சிறுகதைகளைக் கனக செந்திநாதன் எழுதியுள்ளார். இவரது 'ஒருபிடி சோறு' நாடகம் நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தினால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. பல இலக்கிய அமைப்புகளின் வளர்ச்சிக்கு இவர் பங்களிப்புச் செய்துள்ளார். மறுமலர்ச்சிச் சங்கம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இலங்கை எழுத்தாளர் சங்கம், யாழ் இலக்கிய வட்டம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவியவர். குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் செயற்பாடுகளிலும் பெரிதும் பங்கு கொண்டவர். இரசிகமணியின் அறுபதாண்டு நிறைவு விழாவின்போது, அவரது இலக்கியப் படைப்புகள் யாவும் தொகுக்கப்பட்டு 'பூச்சரம்' என்ற பெயரில் யாழ் இலக்கிய வட்டத்தினால் வெளியிடப்பட்டது. தமிழகத்து 'எழுத்து'ப் பத்திரிகை 'கனக செந்திநாதன் ஒரு நடக்கும் வாசிகசாலை' என ஒரு வசனத்தில் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கிலங்கை எழுத்தாளர் சங்கம் 1964 -ம் ஆண்டு இவரது இலக்கியப் பணிகளைப் பாராட்டி வழங்கிய 'இரசிகமணி' என்ற பட்டம் இவரது பெயரோடு இணைந்து சிறப்பைக் கொடுத்தது. யாழ் இலக்கிய வட்டம் 1967 -ல் இவரது 50 -ம் ஆண்டு நிறைவை ஓர் இலக்கிய விழாவாக நடத்தியது. 1976 -ம் ஆண்டு யாழ் இலக்கிய வட்டம் இவருக்கு மணிவிழா நடாத்திக் கௌரவித்தது. 1970 -ம் ஆண்டளவில், எமது மூத்த சகோதரர் நாவேந்தன், தனது பெயரில் வெளியிட்ட 'நாவேந்தன்' இலக்கிய இதழில் இரசிகமணியைப் பேட்டிகண்டு வெளியிட்டார். முன் அட்டையில் இரசிகமணியின் படத்தையும் பிரசுரித்தார். யாழ் நகரில் எனது சகோதரர் மூலம் இரசிகமணியை அறிந்திருந்த போதிலும், அந்தப் பேட்டி எடுப்பதற்காக நாவேந்தன் இரசிகமணியைச் சந்திக்க அவரின் வீடு சென்றபோது நானும் உடன் சென்றிருந்தேன். அவருடன் சில வார்த்தைகள் பேசிக்கொண்டேன். பின்வந்த காலங்களில் யாழ் பெரியகடைப் பகுதியில், சிறிய தகரக் கொட்டகைக் கடையாக இருந்த கிட்டுவின் (கிருஸ்ணசாமி) பேப்பர் கடையில் இரசிகமணியைப் பார்க்கும்போது சில வார்த்தைகள் பேசிக்கொள்வதுண்டு.

அவரது மெலிந்த உருவம், வெள்ளை 'நாசனல்' உடை - சால்வை, கையில் சுருட்டு... எனக்கு இன்றும் மனக்கண்ணில் தெரிகிறது. 1977 -ம் ஆண்டின் தொடக்கத்தில் ஒருநாள் கே. டானியல் இரசிகமணியைப் பார்க்கப் போவதாக என்னையும் அழைத்துக்கொண்டு சென்றார். அவ்வேளை இரசிகமணி மிகவும் உடல்நலம் குன்றி நடமாட முடியாத நிலையில் இருந்தார். ஆனாலும் டானியலைக் கண்டதும் உடல்நிலையைப்பற்றிக் கவலைப்படாமல் உற்சாகமாக உரையாடினார். திரும்பிவரும்போது டானியல், இரசிகமணியின் உடல்நிலை குறித்து மிகவும் கவலையடைந்தவராக இருந்தார். ஒருசில நாட்களின்பின் 'ஈழநாடு' பத்திரிகையில், 'இப்படியும் நடக்கிறது' என்ற பத்தியில், ''ஓர் எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரின் உடல் நிலைகண்டு மனம். கலங்கி, ஓர் 'வீல் செயர்' தனது தொழிலகத்தில் உருவாக்கி வழங்கியுள்ளார். யாருக்கும் தெரியாமல் அந்த மனிதாபிமான உதவியை கே. டானியல் இரசிகமணிக்கு வழங்கியுள்ளார்'' என்ற செய்தி இடம்பெற்றிருந்தது. பத்திரிகையைப் பார்த்தே டானியலின் இந்த உதவியை நானும் அறிந்துகொண்டேன். ஈழநாட்டு'க்கு இது எப்படித் தெரிந்தது..? ஈழநாடு பத்திரிகையில் செய்தி ஆசிரியராகக் கடமையாற்றிய மகாதேவா இரசிகமணியைப் பார்க்கப் போனபோது, அவர் கண்கலங்கியவாறு டானியலின் உதவியால் வீட்டிற்குள் உலாவ முடிகிறதென மகாதேவாவிடம் கூறினாராம். அதனையே மகாதேவா 'இப்படியும் நடக்கிறது' பத்தியில் பதிவுசெய்து டானியலின் மனிதாபிமானத்தைக் குறிப்பிட்டுள்ளார். டானியலும் இரசிகமணியும் இலக்கியம் - அரசியலில் ஒத்த கருத்துடையவர்களல்ல என்பது இங்கு நோக்கத்தக்கது.

வாழ்நாள் முழுவதும் இலக்கிய வாஞ்சையுடன் வாழ்ந்த இரசிகமணி, பத்திரிகை - சஞ்சிகைகளில் பிரசுரமாகிய படைப்பாளிகள் பலரதும் சிறந்த கதைகள் - கவிதைகளைக் கத்தரித்து பெரிய கொப்பிகளில் ஒட்டிப் பாதுகாத்தவர். படைப்பாளிகள் பலர் தமது பிரசுரமாகிய படைப்புகளை இழந்த நிலையிலும், இரசிகமணியிடம் அவற்றைப் பெற்றுப் பிரதி எடுத்துக்கொண்டதுமுண்டு. ஈழத்து இலக்கியவானில் ஒளி வீசிப் பிரகாசித்த இரசிகமணி என்ற இலக்கியச் சுடர் 1977 -ம் ஆண்டு நவம்பர் மாதம் அணைந்தது. பின்வந்த காலத்தில் யுத்த நிலைமைகளினால் இரசிகமணியின் கிராமம் பெரிதும் பாதிப்புக்குள்ளானது. அவர் சேகரித்து வைத்திருந்த இலக்கியத் தேட்டங்களும் அழிந்துபோயின என அறியமுடிகிறது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஒரு பெரும் இலக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தவர் இரசிகமணி. தான் பிறந்த கிராமத்துக்குப் புகழ் தேடிக் கொடுத்தவர். யாழ் இலக்கிய வட்டத்தின் பிதாமகராகக் கணிக்கப்பட்டவர். ஈழத்து இலக்கியத் திறனாய்வுத் துறையில் சிறந்து விளங்கிய பேராசிரியர்களுக்கு நிகராக இரசிகமணியும் உயர்ந்து நின்றாரெனக் கூறுவர். ஈழத்தில் வெளிவரும் தமிழ் இலக்கியப் படைப்புகள் யாவற்றையும் தவறாது வாசித்து கருத்துக் கூறும் ஆளுமையாக அவர் விளங்கினார் எனப் படைப்பாளிகள் கூறுவர். ஈழத்து இலக்கிய வரலாற்றில் அவர் நாமம் நிலைத்து நிற்கும்.!