- குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதை, நாவல் திறனாய்வுப் போட்டி – 2021 இல் 14 நாடுகளில் இருந்து வந்த நூற்றுக்கு மேற்பட்ட திறனாய்வுக் கட்டுரைகளில் இருந்து தெரிவாகி முதலாவது பரிசு பெற்ற திறனாய்வுக்கட்டுரை. -


அறிமுகம்

தமிழ் இலக்கிய படைப்புலகில் உலகின் பல பாகங்களிலும் புகழ்பெற்று விளங்கும் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களுக்கு முதலில் எனது வாழ்த்துக்களையும் அவருடைய தமிழ் இலக்கியயப்பணி மேலும் பல்லாண்டுகள் சிறக்க ஆசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்தாளர் குரு அரவிந்தன் பற்றி தெரியாத தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் இருக்க முடியாது. அதற்கு காரணம் தனது பல்வேறுவிதமான இலக்கியப் படைப்புக்களால் உலகளவில் பிரபல்யம் அடைந்துள்ளதோடு அங்கீகாரமும் பெற்றவர். இவர் யாழ் காங்கேசன்துறை மாவிட்டபுரம் தந்த இலக்கியச் செம்மல். நடேஸ்வராக் கல்லூரி, மகாஜனாக்கல்லூரி, மற்றும் பட்டயக்கணக்காளர் நிறுவனம் போன்றவற்றின் பழைய மாணவர். ஈழத்து மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் பலவற்றில் இவரது படைப்புக்கள் களம்பெற்றுள்ளதோடு பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்று சாதனை படைத்துள்ளவர். நான் படித்த இவரது சிறுகதைத் தொகுப்புக்களில் சில சிறுகதைகளை தேர்வுசெய்து அவைசார்பான எனது ஆய்வை சமர்ப்பிப்பதில் நானும் சிறிதளவு பெருமைப்பட்டுக்கொள்கிறேன்.

சிறுகதைகள், நாவல்கள், ஒலிப்புத்தகங்கள், மேடை நாடகங்கள் மற்றும் சிறுவர் இலக்கியங்கள் போன்ற பல்வேறு படைப்புக்களை தனக்கேயுரிய பாணியில் வாசகர் மனமறிந்து வழங்குவதில் இவருக்கு நிகர் இவர்தான் என்று கூறலாம். இவர் பல்வேறு வகையான படைப்புக்களை வழங்குவதில் முனைப்புடன் செயற்பட்டு வந்தாலும் இக்கட்டுரை இவரது சிறுகதைளின் நான்கை மட்டுமே ஆய்வு செய்வதாக அமைகிறது. ஒரு சிறுகதையை எப்படி எழுதுவது என்பதற்கான ஒழுங்குமுறைகள் பல இலக்கிய கர்த்தாக்களாலும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் வாசித்து அவற்றை பின்பற்றி எழுதுகின்ற ஆற்றலை சிறப்பாக வளர்த்து வைத்திருக்கின்றார் என்பது இவரது ஒவ்வொரு சிறுகதையிலும் இளையோடிப் போயிருக்கும் கதையெழுதும் முறைமையிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

இந்த திறனாய்வுக்காக “இதுதான் பாசம் என்பதா”, “ரோசக்காரி”, “அவளுக்கு ஒரு கடிதம்” மற்றும் “தங்கையின் அழகிய சிநேகிதி” என்ற நான்கு சிறுகதைகளை இவரது வெவ்வேறு சிறுகதைத் தொகுப்புகளிலிருந்து தெரிவு செய்திருக்கிறேன். பொதுவாக குரு அரவிந்தன் அவர்கள் இந்த நான்கு சிறுகதைகளிலும் ஒரு சிறுகதைக்குரித்தான பொதுவான அம்சங்களை சரியாக பின்பற்றி சிறுகதை எழுதுவதில் தனக்கு இருக்கும் ஆற்றலை ஒவ்வொரு கதையிலும் வெளிப்படுத்தியிருக்கின்றார். புலம் பெயர்ந்து கனடா நாட்டில் வாழ்ந்து வரும் இவர் அங்கு வாழ்ந்தாலும் தனது கதைகளில் தான் பிறந்த தாய் மண்ணின் வாசனையை மிகத்தத்ரூபமாக உள்ளே அசைபோட வைத்திருப்பதை ஒவ்வொரு கதைகளிலும் காணக்கூடியதாக இருக்கின்றது.

கதைகளின் சுருக்கம்

“இது தான் பாசம் என்பதா” என்ற சிறுகதை ஒரு குடும்பச் சூழலை மையப்படுத்தி எழுதப்பட்ட சிறுகதையாக எழுதப்பட்டிருக்கிறது. இக்கதையில் மகளுடைய வருமானத்தில் தங்கி வாழும் குடும்பத்தின் நிலைமை முன்வைக்கப்படுகிறது. பெண் கதாபாத்திரமாகிய மகளுக்கு திருமணம் பேசப்படுகிறது. அவளது தந்தை அவள் திருமணமாகி சென்றால் குடும்பச்சுமையை எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்ற ஆதங்கத்தால் அவளுடைய திருமணத்தில் அவளுக்கு தெரியாமலே தடையாக இருக்கிறார். உண்மையில் நடந்தது என்ன என்பதை காலம் கடந்து ஏதேச்சையான ஒரு சூழலில் அறிந்துகொண்ட மகள் தானே நிலைமையை உணர்ந்து திருமணத்தை தானாகவே முன்வந்து தள்ளி வைத்து தனது பாசத்தை வெளிக்காட்டும் நிலைமை. இதனை புரிந்துகொண்ட தந்தையின் பாசத் தவிப்பு என்று அவர்களுக்குள் இருந்த பாசத் தவிப்பையும் பாசப்போராட்டத்தையும் மிகவும் சாதுரியமாக கதையிலே வெளிக்கொணர்ந்திருக்கிறார் கதாசிரியர்.

அடுத்த கதையாகிய “ரோசக்காரி” என்ற சிறுகதையில் பொறியியல் படித்த பட்டதாரிப்பெண் திருமணம் செய்து கணவனுடன் வாழ்ந்துவருகிறாள். பட்டம் பெற்ற இவள் வீட்டு வேலைகளை பார்த்துக்கொண்டு வீட்டிலேயே இருக்கிறார். கணவன் எவ்வளவு தடவை அவளது படிப்புக்கு பொருத்தமான வேலையை தேடி செய்யும்படி கூறியும் அவள் அதனைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இறுதியில் அவளுடைய தந்தையின் ஆலோசனையின்படி கணவன் அவளது ரோசத்தை தூண்டிவிடும்படியான செயற்பாட்டில் ஈடுபட்டார். இது வெற்றியளித்ததா? அவள் வேலைக்குச்சென்றாளா இல்லையா என்பதை கூறுவதே கதை.

மூன்றாவது கதை “அவளுக்கு ஒரு கடிதம்” என்பது. இந்தக் கதையில் கல்லூhயில் கல்விகற்கும் மாணவன் அவனுடன் கற்கும் சக மாணவியை நீண்ட நாட்களாகவே தனது காதலுக்குரியவளாக மனதில் இருத்தி வைத்திருக்கிறான். கல்லூரி நாட்கள் நிறைவை அண்மித்துக்கொண்டிருந்தது. எப்படியாவது தனது காதலை அவளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என் முடிவு செய்கிறான். அவனது நண்பர்களும் உந்துதலளிக்கவே அடுத்து வந்த காதலர் தினத்தை அவளுக்கு தெரியப்படுத்தும் நாளாக குறிவைக்கிறான். அந்த நாள் வரவே நேரடியாக கூற தயக்கப்பட்டு ஒரு வாழ்த்து அட்டையில் தனது காதலை தெரிவித்து அவளிடம் கொடுத்து விடுகிறான். அவளும் அவன் அந்த அட்டையில் குறிப்பிட்டிருந்தபடி அவனைப்பார்த்து புன்முறுவல்செய்து அதனை ஏற்றுகொண்டது போல் காண்பித்தாலும் மறுநாள் அதிபரிடமிருந்து அவனுக்கு விசாரணைக்கான அழைப்பு வருகிறது. விசாரிக்கவும்படுகிறான். ஏன் இப்படி செய்தாய் என அவளிடம் கேட்டுவிட கோபத்துடன் அங்கிருந்து வெளியேறி அவளைத் தேடி செல்கிறான். அவளை சந்தித்து கேட்டானா? அவனது காதல் வெற்றி பெற்றதா? என்பதை கூறுவதே மிகுதிக்கதை.

இறுதியாக இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட நான்காவது கதை “தங்கையின் அழகிய சிநேகிதி” என்பது. இந்தக்கதையில் அண்ணன் தங்கை இருவருக்கிடையிலான அவ்வப்போது ஏற்படகின்ற சிறிய சிறிய செல்லச் சண்டைகள். தங்கையின் சிநேகிதி ஒருவர் அவர்களுடைய வீட்டிற்கு வந்தபோது ஏதேச்சையாக அவளை காண்கிறான் அண்ணன். அந்தக் கணமே அவளது அழகில் மயங்கி தன்னகத்தே காதல் வயப்படுகிறான். சிநேகிதிக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடாகியிருக்கிறது ஆனால் அவளுக்கு அந்தத் திருமணத்தில் விருப்பமில்லை. அப்படியாயின் அந்த சிநேகிதியின் மனதில் இருந்தது என்ன? தங்கைக்கும் அண்ணனுக்கும் இடையில் நடந்த சண்டைகள் எவ்வளவு ஆழமாக தங்கையின் மனதில் பதிந்திருந்தால் அவள் அந்த உண்மையை தனக்குள் புதைத்து வைத்திருப்பாள். அண்ணனின் காதல் நிறைவேறியதா இல்லையா என்பதை மிகவும் சாதாரணமாக காரண காரியங்களுடன் இந்தக் கதையில் முன்வைக்கிறார் கதாசிரியர்.

கதைத் தலைப்புக்கள்

இவர் எழுதுகின்ற ஒவ்வொரு கதைகளையும் எடுத்து நோக்கும் போது சிறுகதை எழுதுவது எப்படி என்பது பற்றி பல எழுத்தாளர்கள் குறிப்பிடுவதுபோல் கதைத்தலைப்பிலிருந்தே கதையின் உட்கருப்பொருளை உணரக்கூடியதாகவும் அந்தக் கதைகளை உடனடியாக படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாகவும் கதையின் தலைப்புக்கள் மிகச் சிறப்பானதாகவும் பொருத்தமுடையதாகவும் ஒவ்வொரு கதைக்கும் தேர்வு செய்து சூட்டியிருக்கிறார். சில எழுத்தாளர்களின் சிறுகதையில் அவர்களது கதையின் கருப்பொருளுக்கும் கதைத் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லாமல் தலைப்பிடுவார்கள். ஆனால் இவருடைய கதைகளில் அப்படி ஒரு நிலைமையை காணமுடியவி;ல்லை. கதைத் தலைப்புக்கள் கதையின் இறுதிவரை நினைவில் நிற்கும்படியாக ஒவ்வொரு கதையின் கருவுடனும் பின்னிப் பிணைந்து இறுதிவரை நகர்கிறது.  

கதைக்கருவும் உள்ளடக்க அளவும்

வாழ்க்கை பற்றிய போதாமைகளைச் சொல்வது சிறுகதை என்பது ஒரு அறிஞரின் கருத்து அதேபோல சிறுகதைகள் அநேகமாக வாழ்கையோடு ஒன்றித்துப்போகும் பல விடயங்களை வெளிப்படுத்துபவையாக இருக்கின்றன. சமூகம், கலை, கலாசர விழுமியங்கள், பண்பாடு, நாகரீகம் போன்றவற்றின் உள்ளார்ந்த நிலைமைகள் காலவோட்டத்தில் மாறுபடுகின்றபோது பழமை மற்றும் புதுமை என்கின்ற மாறுதல்கள் தோற்றம் பெறுகிறது. இந்த மாறுதல்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மனித வாழ்வியல் முறைமைகளிலும் பாரிய மாறுதல்களை ஏற்படுத்த விளைகின்றன. இந்த இடத்திலேதான் சிறுகதைகள் முன்நிலைபெறுகின்றன. சிறுகதைகள் மூலமாக அந்தந்த கால சூழ்நிலைகளை மையப்படுத்தி மாறுதல்களினால் ஏற்படும் பல்வேறு விதமான உள்ளக்குமுறல்களை வெளிக்கொணர்வதற்கு இவை களம் அமைத்துக்கொடுக்கின்றன. இந்த வகையில் எழுத்தாளர் திரு. குரு அரவிந்தன் அவர்களுடைய சிறுகதைகள் ஒவ்வொன்றும் சமூக வாழ்வியல் சார்ந்த குடும்பம் மற்றும் சமூகம் சார் பல்வேறு விடயங்களை வெளிக்கொணரும் வகையில் கதைக்கருவைக்கொண்டவையாக தோன்றுகின்றன.

இந்த கட்டுரையில் குறிப்பிடப்படுகின்ற சிறுகதைகள் ஒவ்வொன்றிலும் அவற்றை நன்கு உணரக்கூடியதாக இருக்கிறது. இவருடைய இந்த நான்கு கதைகள் மட்டுமன்றி மற்றய கதைகள்கூட அவ்வாறேதான் எழுதப்பட்டிருக்கின்றன. இதுதான் பாசம் என்பதா என்ற இந்த ஆய்வின் முதற் கதையில் மிகவும் வசதி குன்றிய குடும்பத்தில் மகளின் வருமானத்தை நம்பியே வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் தந்தை மகள் திருமணமானால் எதிர்கால வாழ்வாதார நிலை என்னவாகும் என்ற தவிப்பில் இருக்க அந்த இடத்தில் மகளுடைய பாசம் எத்தகையது என்பதை வெளிக்கொணர்கிறார். இவ்வாறான சூழலில் வாழுகின்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு முன்மாதிரிகையான அறைகூவலாக தனது கதையெழுதும் பாங்கின் மூலம் முன்வைத்திருக்கிறார் அரவிந்தன். அதுமட்டுமன்றி ஒரு குடும்பத்தினுடைய சுமையை முழுமையாக ஒரு பெண்ணாலும் கூட சுமக்க முடியும் என்பதையும் அதற்கு இந்தக் கதையில் வரும் மூத்த மகள் பாத்திரத்தை சிறந்த உதாரணமாக கையாண்டிருக்கிறார்.

இரண்டாவது கதையாகிய ரோசக்காரி என்ற கதையில் பெண்மை என்பது அமைதியாக இருப்பது மட்டுமல்ல அவளுக்குள்ளும் ரோசம் கோபம் போன்றவை இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தருணத்தில் தனது ரோசம் கோபம் போன்றவற்றையும் வெளிக்கொணர்வாள் என்பதையும் அவளாலும் சாதனைகளை நிலைநாட்ட முடியும் என்பதையும் கதாசிரியர் வெளிப்படுத்துகிறார். அத்தோடு ஒரு கணவன் தனது மனைவியை சமூகத்தில் ஒரு அந்தஸ்துடைய சாதனைகளை நிலை நிறுத்தும் பெண்ணாக வெளிக்கொணர எத்தகைய ஒத்துழைப்பை வழங்க முடியும் என்பதையும் இந்த கதையில் சிறப்பாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

அவளுக்கு ஒரு கடிதம் கதையிலே இன்றைய சமூகத்தில் சாதாரணமாக பாடசாலைகளில் நிகழும் காதல் முன்மொழிவை எடுத்து முன்வைத்து அதன்மூலம் காதலிப்பது தப்பில்லை ஆனால் காலகாலத்துக்கும் இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கான சரியான மற்றும் உறுதியான அடித்தளத்தை இடுவதில் அக்கறைகாட்டி அதனை முன்னுரிமைப்படுத்துவது எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாசூக்காக எடுத்துக்காட்டியிருக்கிறார்.

அடுத்த கதையாகிய தங்கையின் அழகிய சிநேகிதி மூலமாக சமூகத்தில் பல குடும்பங்களில் உண்மையாகவே நிகழ்கின்ற சகோதரர்களுக்கிடையிலான சிறிய சிறய முரண்பாடுகளை புடம்போட்டுக் காட்டியிருக்கிறார். அதனைக் காட்டுவதன் மூலமாக இவ்வாறான சிறிய சண்டைகள் மற்றும் முரண்பாடுகள் அடிமனதில் ஆழமாக பதிந்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாரிய பாதிப்பையோ இழப்புகளையோ கூட பொருட்படுத்தாமல் பழிவாங்கும் சூழலை உருவாக்கிவிடுகிறது என்பதை அழகாக சுட்டிக்காட்டியிருக்கிறார். நெருக்கமான உறவுகளுக்கிடையிலும் வெவ்வேறு கராணங்களின் நிமித்தம் பழிவாங்கும் மனப்பாங்கு ஏற்படாமலில்லை என்பதையும் இக்கதை மூலமாக ஒரு எச்சரிக்கையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த ஒவ்வொரு கதைகளும் அவர் கூறவந்த குறிப்பிட்ட கருப்பொருளை தாண்டி அவசியமற்ற விடயங்களுக்குள் நுளைந்துவிடாது மிக கவனமாக கதைகளை நகர்த்திச்சென்றிருக்கின்ற கதையின்போக்கு மெய்சப்படவேண்டியதே. கதைக் கருவில் எந்தவொரு இடத்திலும் தொய்வோ சலனமோ காணப்படவில்லை என்பது இன்னும் கதையின் போக்கிற்கு வலுச் சேர்கிறது. ஒவ்வொரு கதையிலும் கதையினுடைய வேகம் பொருத்தமான சீரில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. படிப்படியாக கதை தனது உச்சக்கட்டத்தை நோக்கி செல்லும்படியாக அடுத்து வரக்கூடிய காட்சிகளை தொடர்ச்சியான ஒரு கோர்வையாக ஒழுங்குபடுத்தியிருக்கிறார். இவற்றோடு ஒவ்வொரு கதையிலும் மிகப்பொருத்தமான இடத்திலே எதிர்பாராத ஒரு ஆச்சரியத்தை (ருவிஸ்ற்) கொடுத்து வாசகர் மனதில் அக்கதையை படிக்க ஆரம்பித்தபோது இருந்த கதைப்போக்கு கருப்பொருள் பற்றிய அவர்களின் கருத்து மற்றும் எதிர்பார்ப்பில் திடீர் மாற்றத்தை கொடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி கதையை தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டிவிடுகிறார்.

கதையினுடைய உள்ளடக்கம் அதாவது நீட்சியை அநேகமாக ஒவ்வொரு கதாசிரியர்களும் தங்கள் கதைக்கேற்ப தாமே வகுத்துக்கொள்வதுண்டு. ஆனால் பொதுவாக ஒரு சிறுகதையானது 5 முதல் 7 (யு 4) பக்கங்களுக்குள் அடக்கப்படவேண்டும் என்பது சிறுகதை பற்றிய அறிவார்ந்தோரின் கருத்து. அது உண்மையும் கூட. அதற்கு மேல் எழுதினால் வாசகர் பொறுமையிழந்துவிடுவர். அத்தோடு அது குறுநாவல் என்ற கட்டத்திற்கு நுளைந்துவிடும். போட்டிகள் என்று வரும்போது போட்டிக்கான அழைப்பு விடுப்பவர்களால் பக்கங்கள் மட்டுப்படுத்தப்பட்டு இத்தனை பக்கங்களுக்குள் சிறுகதைகள் உள்ளடக்கப்படவேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்படும். இங்கு எழுத்தாளர் குரு அரவிந்தனுடைய சிறுகதைகள் ஒவ்வொன்றையும் எடுத்து நோக்கினால் அவர் தனக்குத்தானே வரையறை ஒன்றை வைத்திருப்பது புலனாகிறது. ஒவ்வொரு சிறுகதையும் 5 பக்கங்களை தாண்டாமல் அதற்குள் அடக்கிவிடுகிறார். தனது கதையில் தான் கூறவந்த கதையின் கருவை மிகவும் நுணுக்கமாக இந்த பக்கங்களுக்குள் அடங்கிவிடுமாறு செய்திருக்கின்றார்.   

கதை எழுதும்போக்கு

கதையின் ஆரம்பம் கதையின் கருப்பகுதி அதன் முடிவுப் பகுதி போன்றவற்றை அவற்றுக்கான எல்லைகளை வகுத்து அந்த எல்லைகளுக்;குள் மட்டுப்படுத்தி குறிப்பிட்ட பகுதிக்குள் கதையின் ஒவ்வொரு பகுதிகளையும் கச்சிதமாக அநேகமாக அனைத்துக்கதைகளிலும் சிறைப்படுத்திவிட்டிருக்கிறார். அவசியமற்ற அலட்டல்களை அறவே தனது கதைகளுக்குள் நுளையவிடாது பார்த்திருக்கிறார். இது இவரது சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்ற அனுபவத்தை புடம்போட்டுக் காட்டுகிறது.
இவரது கதையெழுதும் போக்கில் ஒரு கேள்வி என்னை உறுத்திக்கொண்டிருக்கிறது ஆகையால் அதை தவறவிட்டுவிடாது இங்கு குறிப்பிடுகிறேன். ஆதாவது இவருடைய இந்த நான்கு கதைகளிலும் இலக்கண முறையிலான எழுத்து முறைமையையே கூடுதலாக கையாண்டிருக்கிறார். பாத்திரங்களுக்கிடையிலான சம்பாசணைகளும்கூட இலக்கண முறை வழக்கிலேயே கையாளப்பட்டிருக்கிறது. அது ஏன் என்பது தான் எனது கேள்வியும் புரியாத விடயமாகவும் இருக்கிறது. சில வேளை புலம்பெயர்ந்து வேறு நாட்டில் வாழ்ந்து வருவதால் எல்லா நாடுகளிலும் இருக்கக்கூடிய இவரது அனைத்து வாசகர்களையும் திருப்திப்படுத்தும் நோக்கோடு வெவ்வேறு வகைiயான பேச்சு வழக்குகளை உள்ளே நுளைத்துவிடாது இலக்கண முறைமையை கையாண்டிருப்பாரோ? இது இவ்வாறு இருப்பினும் இவரை அறியாமலே கதாபாத்திரங்களிடையிலான சம்பாசணைகளில் சில இடங்களில் பேச்சு வழக்கு இயல்பாகவே நுளைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

கதாபாத்திரங்களும் காட்சியமைப்புகளும்

இந்த ஆய்விற்குட்பட்ட எழுத்தாளர் குரு அரவிந்தனின் நான்கு கதைகளையும் எடுத்து நோக்கும்போது அவர் தனது ஒவ்வொரு கதைக்கும் பொருத்தமான அதேவேளை கதைக்கருவின் தேவைக்கேற்ற வகையில் கதா பாத்திரங்களை மட்டுப்படுத்தியிருக்கிறார். கதைக்கருவை மிகைப்படுத்தும்படியான அல்லது கவர்ச்சியூட்டும்படியான தேவைக்குப் புறம்பான எந்தவொரு பாத்திரத்தையும் கதைக்குள் நுளையவிடாது கச்சிதமாக பாத்திர அமைப்புக்களை கையாண்டிருக்கிறார். முதலாவது கதையில் தந்தை, மகள் மற்றும் மகளுக்காக பார்த்த மாப்பிள்ளை என்ற மூன்று பாத்திரங்களையும் இரண்டாவது கதையாகிய  ரோசக்காரி எனும் சிறுகதையில் கணவன், ரோசக்கார மனைவி, அவளுடைய தந்தை மற்றும் தாய் என கதைக்கு அவசியமான அந்த நான்கு பாத்திரங்களையும் முன்நிலைப்படுத்தி கதையை சுவாரசியமாக நகர்த்தி முடித்திருக்கிறார்.

அவளுக்கு ஒரு கடிதம் என்ற மற்றய சிறுகதையில் கல்லூரியில் கற்கும் மாணவன், அவன் தனது காதலை முன் வைக்கும் பெண் மற்றும் கல்லூரியின் அதிபர் என்ற மூன்று பாத்திரங்களையும் முன்வைத்து நான்காவது பாத்திரமாகிய அவன் காதலிக்கும் பெண்ணின் தந்தை என்ற பாத்திரத்தை புதிதாக ஒருவரை நுளைக்காது கல்லூரி அதிபரையே ஒரு திருப்புமுனை பாத்திரமாக காண்பித்து அதே நேரம் நண்பர்களையும் காதலியின் தாயையும் பொதுவாக பயன்படுத்தி குறித்துரைக்கும்படியாக யாருக்கும் நடிபாகத்தை தராமல் விட்டு கதையை முழுமைப்படுத்தியிருக்கிறார். இறுதியாக வரக்கூடிய தங்கையின் அழகிய சிநேகிதி என்ற கதையிலும் பிரதான பாத்திரமாகிய கதையின் நாயகன், அவனது தங்கை, அவளுடைய சிநேகிதி மற்றும் அவனுடைய தாய் என்று இந்த நான்கு பாத்திரங்களை மட்டும் காட்சிகளுக்குள் நுளைத்து கதையை நகர்த்தியிருக்கிறார்.

மேற் கூறியவாறு ஒவ்வொரு கதையிலும் குறிப்பிட்ட 3 அல்லது 4 கதாபாத்திரங்களுக்கு மேற்படாதவாறு பாத்திரங்களை மட்டுப்படுத்தி சொல்ல வந்த கதைக்கருவை அழகாகவும் தெளிவாகவும் காண்பித்து தனது கதைகளை முடித்திருப்பதானது வாசகர்களும் பாத்திரங்கள் சார்பான அனாவசியமான குளப்பங்களுக்கு உட்படாது கதையை ஆர்வமாக படிக்க தூண்டிவிட்டிருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.

அதே வேளை அவர் உருவகித்த பாத்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் அவசியமற்ற சம்பாசணைகளை தராமல் கதைக்கு பொருத்தமான அதேவேளை அவசியமான சம்பாசணைகளை மட்டும் கனகச்சிதமாக வழங்கி அவசியமற்ற அலட்டல்களை ஒவ்வொரு கதையிலும் தவிர்த்திருப்பது மற்றொரு சிறப்பம்சமாக காணப்படுகிறது.

முடிவுரை

எழுத்தாளர் குரு அரவிந்தனுடைய கதைகள் பலவற்றில் நான் படித்தவற்றுள் சில தொகுப்புகளிலிருந்து நான்கு கதைகளை இந்த திறனாய்வின்பொருட்டு தேர்வு செய்திருந்தேன். அவை சார்பான ஒரு சிறுகதையை எழுதும்போது பொதுவாக கவனத்தில் கொள்ளப்படவேண்டிய பல விடயங்களை முன்நிலைப்படுத்தி இந்த ஆய்வை சமர்பித்திருக்கிறேன். இந்த கதைகளுக்;குள் நான்; மேலே குறிப்பிட்டிருக்கக்கூடிய நேரான பல விடயங்களை அவதானிக்கக்கூடியதாக இருந்த போதிலும் எதிர்மறையான வியங்களை காண்பது சற்று சவாலான விடயமாகவே காணப்பட்டது. இருப்பினும் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இவருடைய சிறுகதைகள் அமைந்திருக்கும் என நான் கருதிய ஒரு சில விடயங்களையும் குறிப்பிட்டிருக்கிறேன். இவற்றுக்கும் மேலாக சில சுவாரஸ்யம் தரக்கூடிய விடயங்களையும் இடையிடையே ஒவ்வொரு கதைகளிலும் சேர்த்திருந்தால் வாசகர்களுடைய வாசிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டியிருக்குமோ என்பதை மேலதிகமான ஒரு கருத்தாக நான் இங்கு குறிப்பிடுகிறேன். பொதுவாக நான் படித்த ஏனைய கதைகளையும் வைத்துப் பார்க்கின்றபோது இவரது கதைகள் யாவும் சிறப்பாகவே அமைந்திருக்கின்றன. வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு முன்னோடியாக இருக்கும், குரு அரவிந்தன் மேலும் பல படைப்;புக்களை தமிழ் இலக்கிய உலகிற்கு தரவேண்டும் என்ற வாஞ்சையுடனான பதிவையும் முன்வைத்து இவ்வாய்வை நிறைவு செய்கிறேன்.

உசாத்துணை:

‘இதூன் பாசம் என்பதா?’ – மணிமேகலைப்பிரசுரம். சென்னை.
‘தங்கையின் அழகிய சினேகிதி’ – இனிய நந்தவனம் பதிப்பகம். திருச்சி.
‘அவளுக்கு ஒரு கடிதம்’ - ஆனந்தவிகடன் காதலர்தினமலர் (14-2-99).
‘ரோஷக்காரி’ - https://kurunovelstory.blogspot.com/