ஈழத்தில் மருத்துவத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் கலை இலக்கியத்துறைகளில் ஈடுபடுவது குறைவு. தமிழ் இலக்கியத்துறையில் அவ்வாறு ஈடுபட்டவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தவகையில் ஒருவர் மிகச் சிறப்பானவராக விளங்கினார். பாராட்டுகள் பெற்றார். புகழ்பெற்ற மருத்துவப் பேராசிரியராக விளங்கியதோடு, புகழ்பெற்ற, சிறந்த இலக்கியவாதியாக, நாடக, சினிமா நடிகராகத் திகழ்ந்தவர் டாக்டர் நந்தி என எல்லோராலும் அறியப்பட்ட செ. சிவஞானசுந்தரம் அவர்களாவார்.

யாழ்ப்பாணம் - இணுவிலில் 1928 -ம் ஆண்டு பிறந்த நந்தி யாழ்ப்பாணத்தில் ஆரம்பக்கல்வியைக் கற்றபின் கொழும்பு சென்ற் யோசப் கல்லூரி, றோயல் கல்லூரி ஆகியவற்றில் உயர்கல்வியைக் கற்றார். பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுபெற்றுக் கொழும்பு மருத்துவக் கல்லூரியில் கற்று 'எம். பி. பி. எஸ்.' பட்டம் (1955) பெற்றார். சிறிய தந்தையார் பேராசிரியர் வி. செல்வநாயகம், இலட்சுமண ஐயர் உட்பட சிலரிடம் முறைப்படி தமிழ் அறிவையும் வளர்த்துக்கொண்டார். குருநாகல், ஹிரிப்பிட்டியா, கொழும்பு, நாவலப்பிட்டி, யாழ்ப்பாணம் ஆதியாம் இடங்களில் வைத்திய அதிகாரியாகப் பணியாற்றினார். 1965 ஆண்டு முதல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூக வைத்தியத்துறை விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1968 - 1971 காலத்தில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் 'டி. பி. எச்.' பட்டமும் 'பி. எச். டி.' பட்டமும் பெற்றுக்கொண்டார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து விரிவுரையாளராக, இணைப்பேராசிரியராக, பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1979 -ல் இணைந்து சமூக வைத்தியப் பிரிவுப் பேராசிரியராகத், துறைத் தலைவராக, மருத்துவத்துறைப் பீடாதிபதியாக 1993 -ம் ஆண்டுவரை பணியாற்றினார். இந்தோனேசியா, தாய்லாந்து, பங்களாதேசம், சிங்கப்பூர், இந்தியா, யோர்தான், பிரித்தானியா ஆதியாம் நாடுகளில் மருத்துவக் கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார். இலங்கையிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிச் சமர்ப்பித்துள்ளார். மருத்துவக் கல்லூரியில் கற்கும் காலத்தில் இலங்கை வானொலி நாடகங்களில் விருப்பத்துடன் நடித்துள்ளார். 'குரங்குகள்' என்ற நாடகத்தை எழுதி (1975)வெளியிட்டுள்ளார். எழுத்தாளர் காவலூர் இராசதுரை கதை வசனத்தில், பிரபல இயக்குனர் தர்மசேன பத்திராஜ◌ா இயக்கத்தில் உருவான 'பொன்மணி' திரைப்படத்தில் டாக்டர் நந்தி, தந்தை வேடமேற்று நடித்ததை அருகிருந்து யான் பார்த்திருக்கிறேன்.

1979 -ம் ஆண்டு அக்டோபர் 21 -ம் திகதி தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் மூன்றாவது மாநாடு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியாக இடம்பெற்ற, கே. டானியலின் கதை வசனத்தில் உருவான, 'கதை இன்னும் முடியவில்லை' என்ற நாடகத்தில், டாக்டர் நந்தி ஐயர் வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்துச் சபையோரின் பாராட்டுகளைப் பெற்றதைச் சக நடிகனாக மேடையில் நின்ற என்னால் காண முடிந்தது.

தமிழ்நாடு (சென்னை மாநிலம்) முன்னாள் முதலமைச்சரும், தமிழறிஞருமான ராஜ◌ாஜி அவர்களால் நந்தி என்ற புனைபெயர் இவருக்குக் கிடைத்தது. இவரின் முதலாவது சிறுகதையான 'சஞ்சலமும் சந்தோசமும்' வீரகேசரியில் 1947 -ல் பிரசுரமானது. ஆரம்பத்தில் பல புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். 1959 முதல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து செயற்பட்டார். சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய 'மலைக்கொழுந்து என்ற சிறந்த நாவல் 1964 -ம் ஆண்டு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றது. இந்நாவல் தமிழ்நாட்டில் மறுபிரசுரமானது. இவரது மருத்துவ அறிவுரைகள் அடங்கிய 'அருமைத் தங்கைக்கு' என்ற நூலினைச் சென்னைத் தமிழ்ப் புத்தகாலயம் 1960 -ல் வெளியிட்டது. இந்நூல் யாழ்ப்பாணத்தில் மறுபிரசுரமானது. 'அன்புள்ள நந்தினி (மருத்துவ அறிவுரை), உங்களைப் பற்றி (சிறுவர் அறிவுரை நூல்), இதய நோயும் தடுப்பு முறைகளும் (மருத்துவ அறிவுரை), தம்பி தங்கைக்கு' (இளைஞர் அறிவுநூல்) ஆகிய நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது பன்னிரண்டு சிறுகதைகள் அடங்கிய 'ஊர் நம்புமா' என்ற சிறுகதைத் தொகுதி 1966 -ல் யாழ்ப்பாணத்தில் வெளியானது. 'தங்கச்சியம்மா' என்ற இவரது நாவல் வீரகேசரி வெளியீடாக 1977 -ல் வெளிவந்தது. 'கண்களுக்கு அப்பால்' என்ற பன்னிரண்டு சிறுகதைகள் அடங்கிய தொகுதியை 1984 -ல் சென்னை புக் ஹவுஸ் வெளியிட்டது. 'நம்பிக்கைகள்' என்ற நாவலை 1989 -ல் வெளியிட்டார். பதினொரு சிறுகதைகள் அடங்கிய 'நந்தியின் கதைகள்' தொகுதியை சென்னை குமரன் பதிப்பகம் 1994 -ல் வெளியிட்டது. 'தரிசனம்' சிறுகதைத் தொகுதி 2002 -ல் வெளியாகியது. 'நந்தியின் சிறந்த சிறுகதைகள் - 12' என்ற தொகுதி 2005 -ல் வெளியிடப்பட்டது. மருத்துவ ஆராய்ச்சி மாணவர், மருத்துவர்களுக்கான கையேடுகள், கட்டுரைகளை ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளார்.

1993 முதல் இறுதிவரை யாழ் பல்கலைக்கழகச் சமூக மருத்துவத்துறை வாழ் நாள் பேராசிரியராக விளங்கினார். மனிதாபிமான நோக்குடன் இலக்கியம் படைத்த டாக்டர் நந்தி, பல்கலைக்கழக மட்டத்திலும், வெளியில் சாதாரண மக்களுடனும் அன்புடன் பழகியவர். பெருமை கொள்ளாத, பகட்டுகளற்ற, எளிமையான, எல்லோர்க்கும் இனிய மனிதராக விளங்கிய டாக்டர் நந்தி, 04 - 06 - 2005 -ல் யாழ்ப்பாணத்தில் காலமானார். கே. டானியலுடன் டாக்டர் நந்தியின் வீடு சென்று பலமுறை உரையாடியதும், அவருடன் நாடகப் பயிற்சி பெற்றதும், மேடையில் அவருடன் நாடகத்தில் நடித்ததும் எனக்கு மறக்க முடியாத நினைவுகள். பல்துறை ஆற்றலாளரான அவரது நினைவுகள் ஈழத்து இலக்கிய வரலாற்றில் நீடித்து நிலைக்கும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.