யோ. பெனடிக்ற் பாலன்..!"நான் யாழ்ப்பாணத்திலே ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். ஏழைகளின் துன்ப துயரங்களையும்,  அவலங்களையும்,  பசிபட்டினிகளையும் அவர்களது கல்வி அறிவின்மையையும் நான் அனுபவரீதியாக அறிவேன். நாம் வாழும் இலங்கைச் சமூகம் மனிதனை மனிதன் சுரண்டி வாழ்கின்ற ஓர் அமைப்பாகும். பெரும்பான்மை மக்களின் வாழ்வு துன்ப துயரங்கள்,  அமைதியின்மைகள், வறுமையின் தாக்கங்கள் நிறைந்ததாயிருப்பதற்கு மனிதனை மனிதன் சுரண்டுகின்ற வர்க்க சமுதாயமே காரணமென்பதை அறிந்தேன். அரசியலே சகலவற்றையும் தீர்மானிக்கின்றது. இந்த ஓர வஞ்சகமான சமுதாயத்தை மாற்றி அமைப்பதற்கு உழைக்கும் மக்களின் அரசியலாலேயே முடியும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில்,  இச்சமுதாய அமைப்பை மாற்றி அமைத்து, சகலரும் சரிநிகர் சமானமாக,  சுபீட்சமாக வாழத்தக்க ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்காக மக்களைத் தயார்ப்படுத்துவதில் ஈடுபட்டிருந்த மார்க்சிய இயக்கத்திலே இணைந்து உழைத்தேன். அந்த இயக்கம் எனக்கு ஒரு சரியான உலகப் பார்வையை அளித்தது. மக்களை நேசிக்கக் கற்றுக் கொடுத்தது.  மக்களிடம் கற்று மக்களிடமே மீண்டும் அளித்தல் வேண்டும் என்ற கோட்பாட்டைப் போதித்தது. இவைகளால் தெளிவும், பரந்த உணர்வும் பெற்ற நான் மனிதனை மனிதன் சுரண்டுவதை அம்பலப்படுத்தவும், சுரண்டலினால் மக்கள் வாழ்வில் விளைகின்ற துன்ப துயரங்கள், அவலங்கள், ஏக்கங்கள், கல்வி அறிவின்மை, அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்படுதல் முதலியவைகளை வெளிப்படுத்தவும் நான் எழுதத் தொடங்கினேன்." எனப் பிரகடனப்படுத்துகிறார் சிறந்த முற்போக்கு எழுத்தாளர் யோ. பெனடிக்ற் பாலன்.

ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக எழுதிவந்தவர் பெனடிக்ற் பாலன். சிந்தனைத் திறனும் செயல் திறனும் மிக்கவர். சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குட்டிக் கதைகள் போன்ற தனது படைப்புகள் மூலம் ஈழத்து இலக்கியத்திற்கு வளமான பங்களிப்புச் செய்தவர். யாழ் இளம் எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்து, அதன் வெளியீடான "மலர்" என்னும் சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். அன்று இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க யாழ் கிளையின் தீவிர செயற்பாட்டாளராகவும் விளங்கினார். தினகரன்,  வீரகேசரி, சிந்தாமணி,  ஈழநாடு, முரசொலி ஆகிய பத்திரிகைகளிலும் தாமரை, தாயகம், வசந்தம், குமரன், சிரித்திரன் ஆகிய சஞ்சிகைகளிலும் இவரது கதைகள் பிரசுரமாகின.

முதுகலைமாணிப் பட்டம் பெற்ற இவர் மலையகத்தில் ஆசிரியராகப்  பணியாற்றினார். கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திலும் பணிபுரிந்தார். உழைக்கும் மலையக மக்கள்மீது பெரிதும் கவனங்கொண்டு  அவர்களின் எழுச்சிக்கும் போராட்டங்களுக்கும் பக்கபலமாக இருந்ததுடன் தனது எழுத்தையும் அதற்கெனப் பயன்படுத்தினார். மலையகம் குறித்த பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது "சொந்தக்காரன்" என்ற நாவல் மலையக மக்களின் வீடில்லாப் பிரச்சினையை மையமாகக் கொண்டது.
இந்நாவல் விமர்சகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது.  இவரது "குட்டி" என்ற குறுநாவலை 1963 -ல் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் வெளியிட்டது. கண்டி கலாசாரக் குழு இவரது குட்டிக் கதைகளைத் தொகுத்து "தனிச்சொத்து" என்ற பெயரில் வெளியிட்டது. பதினெட்டுச் சிறுகதைகள் அடங்கிய "விபசாரம் செய்யாதிருப்பாயாக.." என்ற இவரது  சிறுகதைத் தொகுதி குறிப்பிடத்தக்கதாகும். பூபாலசிங்கம் புத்தகசாலை - பதிப்பகம் இவரது "கல்வி உளவியல் அடிப்படைகள்" என்ற நூலை வெளியிட்டது. "பலஸ்தீனம் என்னை அழைக்கிறது" (குறுநாவல்),  "தலைவிதியைப் பறிகொடுத்தோர்"  என்பன இவரது ஏனைய நூல்களாகும். பல சிறுகதைகள் நூல்களாக வெளிவரவில்லை.

இவரது "சொந்தக்காரன்" என்ற நாவல் மலையக மக்களின் வீடில்லாப் பிரச்சினையை மையமாகக் கொண்டது.

அரசியலில்  இவர், அன்று தோழர் என். சண்முகதாசன் தலைமையிலான இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராகச் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சிறந்த படைப்புகள் மூலம் அவரது நாமம் இலக்கிய வரலாற்றில் நிலைத்து நிற்கும்..!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.