நுணாவிலூர் கா.விசயரத்தினம்- (இலண்டன்)விசுவாமித்திரன் வரங்கள் பல பெற விரும்பி ஒரு வேள்வி செய்யத் தீர்மானித்தார். அதே நேரத்தில் அந்த வேள்வியைக் குழப்பிவிடப் பல அசுரர்கள் எத்தனிப்பர் என்ற ஐயப்பாடும் அவருக்கு ஏற்பட்டது. எனவே, கடுகதியாய் அயோத்தி சென்று, தசரத மன்னனைக் கண்டு, விடயத்தைக் கூறி, வேள்வியைக் காப்பதற்கு இராமனைத் தந்தருளுமாறு வேண்டி நின்றார். இராமனைப் பிரிய விரும்பாத தசரதன் துடிதுடித்து ஈற்றில் இராமர், இலக்குமணன் ஆகிய இருவரையும் விசுவாமித்திரருடன் செல்வதற்குச் சம்மதித்தான். விசுவாமித்திரன், இராமன், இலக்குமணன் ஆகிய மூவரும் அயோத்தியிலிருந்து காட்டுக்குச் சென்றனர். ஆங்கு முனிவர்களின் தவத்திற்கு இடையூறு புரிந்து வருபவளான தாடகை என்ற அரக்கியை இராமன் அம்பைத் தொடுத்துக் கொன்றான். அதன்பின் இராமரும், இலக்குமணனும் யாக சாலையைச் சுற்றி நின்று காவல் புரிய, விசுவாமித்திரன் அரிய வேள்வியை ஆறு நாட்கள் நடாத்தி முடித்து இராமனையும், இலக்குமணனையும் வாழ்த்தினார்.

 அதன்பின,; மூவரும் மிதிலை அரசன் ஜனகன் செய்து கொண்டிருக்கும் யாகத்தைக் காண்பதற்குச் சென்றனர். மிதிலை நகரை அணுகியதும் அங்கு ஒரு கருங்கல் மேட்டைக் கண்டனர். அதனை நெருங்கிச் செல்லும்போது இராமனின் காலின்துகள் அக் கல்லின்மீது பட்டதும் அக்கல் ஒரு அழகிய பெண்ணாகி (அகலிகை) எழுந்து, நாணிக் கோணி, நிலம் பார்த்து, நிமிராது, நின்றாள்.

அந்த அதிசயத்தை இராமன் கேட்க ‘கௌதம முனிவரின் மனைவி அகலிகையை அடையவிரும்பி, இரவு நேரத்தில் பொழுதை விடியச் செய்து, சேவலைக் கூவச் செய்ய, கௌதமர் விடிந்துவிட்டதென நினைத்துப் பூசை செய்வதற்குச் செல்ல, இந்திரன் கௌதம முனிவர்போல் உருவெடுத்துக் கொண்டு அகலிகையை அடைய, அவளும் தன் கணவன்தான் என்று நினைந்து ஒருப்பட்டு இருக்கையில், உண்மையான கௌதமர் ஏதோ விபரீதம் நடந்து விட்டதென வீடு நோக்கி வந்தபொழுது இந்திரனும், அகலிகையும் படுக்கையில் ஒன்றாயிருப்பதைக் கண்டு, கோபம் கொண்டு, இந்திரன் மேனியில் ஆயிரம் பெண்குறிகள் தோன்றட்டும் என்றும், அகலிகை கல்லாகட்டும் என்றும் சாபமிட்டுச் சாந்தியடைந்தார் கௌதம முனிவர்.’ என்று கல்லின் கதையைக் கூறி முடித்தார் விசுவாமித்திரர்.

விசுவாமித்திரர் இராமனிடம் ‘ஐயனே! தாடகையுடன் நடந்த போரில் உன் கைவண்ணம் கண்டேன். இங்கே உன் கால்வண்ணம் கண்டேன்’ என்று புகழ்ந்தார். முனிவருடன் வீதி வழியே சென்ற இராமன், கன்னி மாடத்தில் நின்ற சீதையைப் பார்த்தான். சீதையும் இராமனைப் பார்த்தாள். சீதை இராமனின் தோளில் மயங்கினாள். இராமன் சீதையின் உடலழகில் மயங்கினான். இவ்வண்ணம் சீதையின் உள்ளத்தில் இராமனும், இராமனின் உள்ளத்தில் சீதையும் புகுந்து கொண்டனர். ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’- (514)  என்று கம்பன்  பாவடித்தான்.

மறுநாள் சீதையின் தந்தை சனகன் யாக்கும் யாகசாலையைப் பார்ப்பதற்கு விசுவாமித்திரர், இராமன், இலக்குமணன் ஆகிய மூவரும் வந்தமர்ந்திருந்தனர். மன்னன் சனகன் அவையில் இருந்த இராம, இலக்குவரைப் பார்த்து அவர்கள் அழகால் கவரப்பட்டு, விசுவாமித்திரரை அணுகி அவர்கள் யாரெனக் கேட்க விசுவாமித்திரன் ‘இவர்கள் உன் விருந்தினர், உன் யாகத்தைப் பார்க்க வந்துள்ளனர். நீ வைத்திருக்கும் சிவதனுசையும் பார்க்க வந்துள்ளனர். இவர்கள் அயோத்தி மன்னன் தசரதனின் புதல்வர்கள்.’ என்று அறிமுகப் படுத்தி, அவர்களின் குலப்பெருமையையும் கூறி வைத்தார். இவை கேட்டதும் சனகன் மிக மகிழ்ந்து விசுவாமித்திரரிடம் ‘இந்தச் சிவதனு வில்லில் நாண் ஏற்றினால் என் துன்பம் தீரும். என் மகள் சீதைக்கும் ஒரு வாழ்வு பிறக்கும். எத்தனையோ இளவரசர்கள் வந்தனர். வில்லைப் பார்த்ததும் சென்று விட்டனர். உன்னுடன் வந்தவர்கள் இந்த வில்லில் நாண் ஏற்றினால் என் அருமை மகள் சீதையின் வாழ்வு மலரும்.’ என்று கூறி முடித்தார்.

இதைக் கேட்ட விசுவாமித்திரன் இராமனைப் பார்க்க இராமன் எழுந்து சென்று ஒரு பூமாலையை எடுப்பதுபோல் அந்தச் சிவதனுவை எடுத்து, அதில்; அம்பு தொடுத்து, நாண் வலித்து நிற்கையில் வில் முறிந்த பேரோசை யாவருக்கும் கேட்டுத் திகைத்து நின்றனர். இராமன் சென்றதையும், சிவதனுவை எடுத்ததையும்தான் கூடியிருந்தோர் கண்டனர். பின் சிவதனு முறிந்த ஓசையையும்தான் கேட்டனர். இராமன் அம்பு தொடுத்ததையும், நாண் வலித்ததையும் அவர்கள் கண்டிலர். இதை ‘கையால் எடுத்தது கண்டார், இற்றது கேட்டார்’ – (34)  என்று கவி புனைந்தான் கம்பன்.

சனகன் மட்டிலா மகிழ்ச்சி அடைந்து, விசுவாமித்திரன் உதவியுடன் தசரத மன்னனுக்கு விரிவான ஒர் ஓலை அனுப்ப மன்னனும் அவனைச் சேர்ந்தோரும் மிதிலைக்கு வந்து சேர்ந்தனர். தசரத மன்னனை வரவேற்றுக் குசலம் விசாரித்து அவர்களுக்கு மாளிகையும், இடவசதிகளையும் ஒழுங்கு செய்து வைத்தான் மன்னன் சனகன். இரு மன்னர்களும் இராமன், சீதை திருமணத்தை ஒழுங்கு செய்தனர். மிதிலை நகரம் மணக்கோலம் பெற்றது. வசிட்ட முனிவர் தீ வளர்த்து மணவறை அமைத்தார். சங்கு முழங்க, அந்தணர் ஆசி கூற, மணவேள்வி மந்திரம் மூன்று முறை ஓத, சீதையின் கையை இராமன் பற்றி, இருவரும் மண வேள்வித் தீயை வலம் வந்து வணங்க மணவிழா இனிதே முடிவுற்றது. இராமன், சீதை இருவரும் பள்ளியறைக்குள் புகுந்தனர். இது அவர்கள் முதலிரவு. உற்சாகமாக இருந்தான் இராமன். ஆனால் சீதையோ ஒரு மூலையில் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தாள். இதைக் கவனித்து விட்டான் இராமன்.

இராமன்:- என் உயிரான பெண்ணே சீதா! நாம் எங்கிருக்கிறோம் என்பதையும் மறந்து விட்டு ஏன் இந்த மௌனம்?  ஏன் இந்த  ஆழ்ந்த  சிந்தனை?  கூறுவாய்  கண்ணே! 

சீதா:-   என்  ஆருயிர்  மன்னவ! என் சிந்தை  சிறிது குலைந்து  ஒரு சங்கடத்தில் மாண்டுள்ளேன் நாதா!  தாங்கள்தான்  என்னை  அதிலிருந்து  மீட்டெடுக்க வேண்டும். கருணை காட்டுங்கள் அன்பே!

இராமன்:- பெண்ணே!  நீர் ஓர்  இளவரசி.  நான் ஓர்  இளவரசன்.  ஓன்றும்; ஒளிவு மறைவின்றிக் கூறு கண்ணே!  என் சீதாவுக்கு எதையும் செய்யத் தயார்.

சீதா:-   நாதா! நான் அணிந்திருக்கும் எல்லா ஆபரணங்களும் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டவை. இது என் தந்தையாரின் அன்பளிப்பு. உங்கள் கால் பட்டு  ஒரு கல்லு மிக அழகிய பெண்ணாக அகலிகை என்ற பெயருடன் உயிர்த்து  எழுந்த கதையை அண்மையில் கேள்விப்பட்டேன். நீங்கள் இன்று என்னைத் தீண்டும்  போது  நான் அணிந்திருக்கும்  கற்களிலிருந்து  அழகிய பல பெண்கள்  உருவெடுத்து  வந்து  நிற்பார்கள்.  அப்பொழுது  என் நிலை என்னாகும்? இதுவே என் தயக்கமும் ஐயுறவுமாகும் மன்னவ!

இராமன்:- மயில் போன்ற பெண்ணே! கௌதம முனிவன் தன் மனைவி அகலிகையைக் கல்லாகும்படி சாபமிட்டு,  என் கால் அக் கல்லில்பட்டதும்  பெண்ணாகட்டும்  என்றொரு  விமோசனமும்  கொடுத்திருந்தார்.  அதுவே அன்று  நிகழ்ந்தது.   உண்மையில் கல்லைப் பெண்ணாக்கும் சக்தி என்னிடம் இல்லைக் கண்ணே.

சீதை:-   நாதா! மனம் தெளிந்து விட்டது. என்னைப் பொறுத்தருள்வீராக!

இந்நிலையில் இருவரும் தாம் ஏன் பள்ளியறைக்கு வந்தனர் என்பது புரிந்து விட்டது. அக்கணமே நாணிக் கோணி வெட்கப்பட்டாள் சீதை. அதைக்

கலைத்துக் குலைத்து நின்றான் இராமன். அவர்கள் கடமை உந்தக் காதற் கப்பல் ஓடத் தொடங்கியது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.