ஆய்வுக் கட்டுரை: களாபூரணோதயத்தில் உவமைகள்1.0 முன்னுரை

தெலுங்கு இலக்கிய உலகில் குறிபிடத்தக்கவர் பிங்களிசூரனார். இவர் களாபூரணோதயம் எனும் கற்பனைக் காவியத்தைப் படைத்துள்ளார். இப்படைப்பில் பாத்திரங்களை அறிமுகப்படுத்துமிடத்தும், அப்பாத்திரங்களின் தன்மைகளைக் குறிக்குமிடத்தும், இயற்கைச் சார்ந்த காட்சிகளை வருணிக்குமிடத்தும் உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார். அவ்வுமைக் குறித்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

2.0 பிங்களிசூரனாரும் களாபூரணோதயமும்

தெலுங்கு இலக்கிய பிரபந்தங்களின் வளர்ச்சிக்கு அடிகோலியவர்களுள் ஒருவர் பிங்களிசூரனார். இவர் பதினாறாம் நூற்றாண்டைச் சார்ந்த கிருட்டிணத்தேவராயர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவரும், இங்கிலாந்தைச் சார்ந்த  சேச்சுப்பியருக்குச் சமகாலத்தவரும் ஆவார். அவர் சைவ சமயத்தைச் சார்ந்தவரானாலும் வைணவக் கருத்துகள் மிகுந்த களாபூரணோதயத்தை (திருமாலை வழிபடக்கூடிய கிருட்டிணத்தேவராயரின் வேண்டுகோளுக்கிணங்க எழுதப்பட்டது) எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் தெலுங்கில் பிரபலமாக இருந்த கவிதைப்போக்கு பிரபந்தம் இயற்றுவதாகும். இது இலக்கியத்தின் உயிர்நாடி போன்றது. இதனை இயற்றுவதில் அட்டதிக்கசங்கள் (எண்திசைப் புலவர்கள்) என்றழைக்கப்பட்ட புலவர்களே சிறந்து விளங்கினர். அவ்வட்டதிக்கசங்களுள் ஒருவர் பிங்களிசூரனார். இவர் இராகவபாண்டவியம் (சிலேடைக் காவியம்), பிரபாவதி பிரத்தியுமனம், களாபூரணோதயம் ஆகிய பிரபந்தங்களை இயற்றியுள்ளார்.

பிங்களிசூரனாரின் பிற படைப்புகளை விட சிறந்த நூலாக அனைவராலும் மதிப்பிடப்படுவது களாபூரணோதயம் ஆகும். இது எட்டு அத்தியாயங்களைக் கொண்டது. இந்நூல் பிரபந்தங்களின் அடிப்படை இலக்கணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட நூல். இதனுள் மிகுதியான வருணனைகள், உவமைகள், சிறந்த கதையோட்டம் போல்வன இடம்பெற்றுள்ளன. இக்கதையை விவரிக்கும் முறையில் முற்பிறவிக் கதைகளையும் நடப்பியல் கதையையும் முன்பின்னாக வைத்து விளக்கியுள்ளார். அவர் ஐந்தாம் அத்தியாயத்தில்தான் கதைத்தலைவனுடைய கதையை ஆரம்பிக்கிறார். அதற்கு முன்பு அத்தலைவனுடைய முற்பிறவிக் கதைகளைக் குறிப்பிட்டுள்ளார். இத்தன்மை படிப்போரின் ஆவலைத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது எனலாம். மேலும், இப்படைப்பு கதைக்குள் கதை எனும் போக்கில் உள்ளது.

இனி, இப்படைப்பில் காணலாகும் உவமைகள் குறித்துக் காணலாம். அதற்கு முன்பு உவமைகள் குறித்த விளக்கத்தையும், தொல்காப்பியமும் தண்டியலங்காரமும் குறிப்பிடும் உவமை, உவமை வகைகள் குறித்துக் காண்போம்.

3.0 உவமை – விளக்கம்

உவமை என்பதற்கு ஒருவன் தான் கூறக் கருதிய ஒரு பொருளை அதனுடன் ஒப்புமையுடைய பிறிதொரு பொருளைப் பொருத்திக் காட்டுவது என்றும், அறிந்த பொருளினைக் கொண்டு அறியாத பொருளினை விளக்கிக் காட்டுவது என்றும் பொருள் குறிக்கலாம். இத்னை ஆங்கிலத்தில் Familiar to Unfamiliar அல்லது Known to Unknown எனச் சுட்டலாம்.

4.0 தொல்காப்பியமும் தண்டியலங்காரமும்: உவமைக் கருத்தியல்

வினை பயன் மெய் உரு என்ற நான்கே
வகைபெற வந்த உவமத் தோற்றம்   – தொல்.1222

என்பது உவமை குறித்த தொல்காப்பியர் விளக்கம். இதனுள் உவமைக்கும், உவமிக்கப்படும் பொருளுக்கும் சில பொதுத் தன்மைகள் இருந்தால்தான் ஒன்றை மற்றதனோடு உவமிக்க முடியும் என்றும், அவ்வுமைகள் வினை, பயன், மெய், உரு என்ற நான்கையும் நிலைக்களன்களாகக் கொண்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளன.

 எ – டு. வினை – மயில் போல ஆடினாள்
பயன் – பேரறிவாளன் செல்வம் ஊருணி நீர் போன்றது
மெய் – கயல் போன்ற விழிகள்
உரு – பால் போன்ற வெண்ணிலா

இந்நிலைக்களன்களைத் தண்டியாசிரியர் பின்பற்றி விரி, தொகை, இதரவிதரம், சமுச்சயம், உண்மை, மறுபொருள், புகழ்தல், நிந்தை, நியமம், அநியமம், ஐயம், தெரிதருதேற்றம், இன்சொல், விபரீதம், இயம்புதல் வேட்கை, பலபொருள், விகாரம், மோகம், அபூதம், பலவயிற்போலி, ஒருவயிற்போலி, கூடா உவமை, பொதுநீங்கல்,  மாலை என இருபத்து நான்காக (தண்டி.30) வகைப்படுத்தினார். அவ்வகைப்பாடு சமசுகிருதத்தை அடியொற்றியது என்பதால் தெலுங்கு இலக்கியத்திற்கும் பொருந்தும் என்பது கருத்து.

5.0 களாபூரணோதய உவமைகள்

பிங்களிசூரனார் களாபூரணோதயத்தில் மிகுதியான உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார். அவர் வருணனைகளில் தரும் உவமைத் தொடர்களைத் தவிர்த்துப் பிறவிடத்து அறுபத்து மூன்று உவமைத் தொடர்களைக் கையாண்டுள்ளார். அவ்வுமைத் தொடர்களை மனிதன், அணிகலன்கள், அழகு,  வானம், நீர், ஊர்வன, விலங்கு, பறவை, வண்டு, நிலம், குழம்பு, தீ, வலை, பொழுது, கருவி, மலர், போர்க்கருவி, ஓவியம், உடலுறவு, உறவினர், புழங்குப் பொருள், அலை, மொழி, தவரங்கள், மாந்தரும் கருவியும், வானமும் நீரும், பறவைகளும் வண்டுகளும் என இருபத்தியெட்டாகப் பாகுபடுத்திப் பார்க்கலாம். காட்டாக,

• குறைவிலாத எழிலும் கற்பொழுக்கமும் இணைந்த மங்கை கிடைத்தால் கணவனுக்கு வேறென்ன வேண்டும் பொன்மலர் மணம் பெற்றது போலச் சிறக்குமன்றோ? (களா.202).

• மக்கள் ஆட்டுமந்தை போல ஒருவரை ஒருவர் பின் தொடர்வார்கள் அன்றித் தாமே சிந்திக்கமாட்டார்கள் (களா.205).
என்ற இரண்டு உவமைத் தொடர்களைச் சுட்டிக் காட்டலாம். இங்கு முதலாவது தொடரில் மங்கையின் அழகை பொன்மலருக்கும், அவளின் கற்பை மணம் என்பதுக்கும் உவமைப் படுத்தப்பட்டுள்ளன. இரண்டாவது தொடரில் சிந்திக்கத் தெரியாத மக்களை ஆட்டுமந்தைக்கு உவமைப்படுத்தப் பட்டுள்ளது. இவ்வாறே பிற உவமைத் தொடர்களும் அமைந்துள்ளன.  இனி, மேற்குறித்த வகைப்பாடுகளுள் அணிகலன்கள் என்ற பொருண்மையில் வரும் உவமைகள் குறித்து மட்டும் விளக்க முயல்வோம்.

 மணிதர்கள் அணியக்கூடிய அணிகலன்கள் பலவகை. இன்று தங்கம், வைரம், பிளாட்டினம் பெற்றிருந்த மதிப்பை அன்று ( மன்னராட்சிக் காலம்) முத்து, மணி போன்ற அணிகலன்கள் பெற்றிருந்தன. அக்காலக் கவிஞர்களிடத்து அவ்வணிகலன்களைக் குறிப்பிட்டு உவமை சொல்லும் மரபு இருந்துள்ளது. ஆகையால் சூரனார் முத்து, மணி என்ற இரண்டு அணிகலன்கள் தொடர்புடைய உவமைகளைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. அவ்வணிகலன்களையுடைய உவமைகள் முறையே கவிதை எழுதுகின்ற தன்மைக்கும், கதை சொல்லுகின்ற தன்மைக்கும் உவமித்துக் காட்டியுள்ளார்.

... கண்ணபிரான் இந்தத் தண்டகத்திற்கு உளமகிழ்ந்து கொடுத்ததல்லவா சிஷ்யனது கழுத்தில் ஒளியுடன் திகழும் அந்த மணிமாலை என்று கூறி மேலும் அப்பூங்கொடியாள், முத்துகளை கோத்தாற் போல நல்ல சொற்களை சேர்த்துப் பொருள், தொனி முதலிய வேறுபாடுகள் உணர்ந்து, குற்றமற்ற தாகச் செய்து, ரசங்களுக்கேற்ற நடையில் அமைத்து, பத்தழகும் ஒத்தடைய, உவமை முதலிய பொருளணியும், யமகம் முதலிய சொல்லணிகளும் இணைத்து, அழகாகக் கவிதை சொல்ல வல்ல கவிஞனுக்கு விரும்பிய பொருள் கொடுக்காதவர்களும் உண்டோ? (களா.11)

என்பது பிங்களிசூரனார் தரும் முத்து எனும் அணிகலனை மையப்படுத்திய உவமைத்தொடர். இத்தொடரில் முத்துகளைக் கோத்தாற் போல எனும் உவமைத்தொடர் அமைவதைக் காணலாம். இது, ஒரு கவிஞனுக்கு இருக்க வேண்டிய திறன்களை மையமிட்டதாகும். அக்கவிஞனுக்கு நல்ல சொற்களைச் சேர்த்தல், தொனி முதலிய வேறுபாடுகளை உணர்தல், இரசங்களுக்கு ஏற்ற நடை அமைத்தல், பத்தழகு ஒத்திருத்தல், உவமை முதலிய பொருளணி, யமகம் முதலிய சொல்லணி ஆகிய திறன்கள் முத்துகளைக் கோத்து மாலையாக்கினால் எவ்வாறு அழகு தருமோ அவ்வாறு கவிதை புனையும் திறனும் அமைந்துள்ளது என உவமிக்கப்பட்டுள்ளது. அத்தன்மை அக்காப்பியத்தில் வரும் மணிகந்தரன் எனும் பாத்திரப்படைப்பின் கவியழகு இருப்பதாகக் கலாபசினி கூறுவதாகக் குறித்துள்ளார் சூரனார்.

  அடுத்ததாக, சூரனார் மணி என்ற அணிகலனைக் கொண்டு கூறிய உவமையைப் பற்றிக் காண்போம்.

... களாபூரணன் கதையை பற்றிய பேச்சு வந்ததும் நாரதன் தனும் சொல்லக்கூடாது என்றதும் சொன்னவர்கள் புத்திர பௌத்திர சந்ததியுடன் செல்வமாக உலகில் வாழ்வார்கள் என்ற காரணமும் ஒன்றுவிடாமல் மணி கோத்தாற் போல கேட்போர் வியப்பெய்துமாறு கூறினாள் (களா.108)

என்பது சூரனார் மணி எனும் அணிகலன் குறித்துக் கூறும் உவமைத்தொடர். இத்தொடரில் மணி கோத்தாற் போல எனும் உவமைத்தொடர் அமைவதைக் காணலாம். இது களாபூரணன் கதையைச் சொல்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் இடையே நிகழும் நிகழ்வுகளை மையமிட்டதாகும். அஃதாவது, களாபூரணன் கதையைச் சொன்னவர்கள் புத்திர சந்ததியுடன் செல்வமாக உலகில் வாழ்வார்கள் என்பது உள்பட கலபாசினி மணிகந்தரனிடம் கூறிய தன்மையாகும். இங்கு மணி கோத்தால் போல் எனும் உவமைத்தொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்தொடர் பல மணிகளைக் கோத்த மாலை எவ்வாறு அழகு தருமோ அவ்வாறு களாபூரணின் கதையைக் கூறினாள் கலபாசினி என உவமிக்கப்பட்டுள்ளது. இங்குக் குறிக்கப்பபட்ட அணிகலன்கள் தொடர்பான உவமைத் தொடர்களின்வழி அறியலாகும் கருத்துகளாவன.

• அவ்விரு உவமைத் தொடர்களும் புகழ்தல் எனும் உவமை வகையைச் சார்ந்ததாகும்.

• அத்தொடரில் வரும் உவமேயமும் உவமானமும் இரண்டு நிலைகளில் அமைந்துள்ளன. ஒன்று: உவமானத்தை முன்பும், அதன் பின்பு உவமேயத்தையும் குறிக்கும் நிலை. மற்றொன்று: உவமேயத்தை முன்பும், அதன் பின்பு உவமானத்தையும் குறிக்கும் நிலை.

இதுவரை விளக்கப்பட்ட அக்கருத்துகள் தண்டியாசிரியர் குறிப்பிடும் உவமை வகைகள் புகழ்தல்  உவமையைச் சூரனார்  குறிப்பிடும் அணிகலன்கள் தொடர்பான உவமைகள் தாங்கி நிற்பதை அறிய முடிகிறது. இதன்வழி மேற்குறித்த தண்டியாசிரியரின் இலக்கணம் தெலுங்கு இலக்கியத்திற்கும் பொருந்தி உள்ளமையைக் காணமுடிகின்றது. எனவே, புகழ்தல் எனும் உவமை அணிக்குரிய வகைப்பாடு தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளுக்கும் பொதுத்தன்மை என்பதை விளங்கிக்கொள்ள முடிகின்றது.

துணைநின்றவை

1. கிரிபிரகாசு டி. எஸ். ஆனந்தக்குமார் பா., 1985, தெலுங்கு இலக்கிய வரலாறு, பார்த்திபன் பதிப்பகம், மதுரை.
2. கௌமாரிசுவரி எஸ்.(பதிப்.), 2012, தண்டியலங்காரம் தெளிவுரை, கௌரா ஏஜென்சிஸ், சென்னை.
3. தமிழண்ணல், 2008, தொல்காப்பிய மூலமும் கருத்துரையும், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
4. திருஞானசம்பந்தம் ச., 2007, தண்டியலங்காரம் தெளிவுரை, கதிர் பதிப்பகம், திருவையாறு.
5. ஜகந்நாதராஜா மு. கு., 1995, களாபூரணோதயம், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவுர்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.