கடந்த ஜனவரி 28ம் திகதி நூல்தேட்டம் தொகுப்புப் பணிக்கான தகவல் சேகரிப்புக்கென தமிழக விஜயத்தை மேற்கொண்டிருந்த ஈழத்தின் பிரபல நூலகவியலாளர் என்.செல்வராஜாவுக்கு சென்னையில் சிறப்பான வரவேற்புபு உபசாரமொன்றினை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இந்திய ஒன்றியத்தினர் மேற்கொண்டிருந்தனர். கடந்த ஜனவரி 28ம் திகதி நூல்தேட்டம் தொகுப்புப் பணிக்கான தகவல் சேகரிப்புக்கென தமிழக விஜயத்தை மேற்கொண்டிருந்த ஈழத்தின் பிரபல நூலகவியலாளர் என்.செல்வராஜாவுக்கு சென்னையில் சிறப்பான வரவேற்புபு உபசாரமொன்றினை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இந்திய ஒன்றியத்தினர் மேற்கொண்டிருந்தனர்.  சென்னை பாரதீய வித்தியா பவனில் 29.1.2013 அன்று செவ்வாய்க் கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்தநாள் விழாவின் சிறப்பம்சமாக இவ்வரவேற்புபசாரம் மேற்கொள்ளப் பட்டிருந்தது. சுவாமி விவேகானந்தரின் போதனைகளில் ஒன்றான பலனை எதிர்பார்க்காமல் சமூகத்துக்குத் தன்னை அர்ப்பணித்துச் சேவை செய்ய வேண்டும் என்ற வாக்கைத் தன் வாழ்வில் முழுமையாகப் பின்பற்றி வரும் செல்வராஜாவுக்கு இந்நிகழ்வு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்கும். நிகழ்ச்சிக்கும் பொருத்தமானதாக இருந்திருக்கும். பாரதீய வித்தியா பவன் வாயிலில் நூலகவியலாளரின் புகைப்படத்தைத் தாங்கிய பாரிய வண்ணப் பதாதையொன்று “இலண்டன் மூத்த நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் வரவேற்பு விழாவுக்கு வருகைதரும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்” என்று வரவேற்றது.

நிகழ்வில் தமிழகத்தின் பிரபல அறிவியல் நிறுவனங்களின் முன்னாள், இந்நாள் துணைவேந்தர்கள், தலைவர்கள், பேராசிரியர்கள், தமிழகத்தின் மூத்த நூலகர்கள், சென்னை எழுத்தாளர்கள்; சங்கத் தலைவர் உள்ளிட்ட அங்கத்தினர்கள் என பலரும் வருகை தந்திருந்தார்கள். பிரபல சட்டத்தரணி விஜயகுமார், விருபா டொட் கொம் குமரேசன், சென்னை வள்ளியம்மாள் கல்லூரி தமிழ்ப் பேராசிரியை பானுமதி, எழுத்தாளர் சுகுமாரன், இதயகீதம் ராமானுஜம் போன்றோர் அவர்களுள் அடங்குவர்.

மண்டபத்தினுள் நுழைந்த நூலகவியலாளரை ஈழத்தவரான திரு வரதன் அவர்கள் பொன்னாடை அணிவித்தும் மலர்ச்செண்டு வழங்கியும் வரவேற்றார். இவர் திரைப்பட இயக்குநர் குகநாதனின் சகோதரராவார். செல்விகள் வனிதா மதிவாணன், சாலினி ஆகிய இளவல்கள் அவையோரை வாயிலில் நின்று வரவேற்றனர். நூல்தேட்டம் உள்ளிட்ட நூலகவியலாளர் செல்வராஜாவின் நூல்களின் பிரதிகள் மண்டப வரவேற்பறை வாயிலில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றை அவையோர் பார்வையிட வசதி செய்துதரப்பட்டிருந்தது.

தமிழ்த்தாய் வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமாயிற்று.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தமிழ்த் தேனீ இரா. மதிவாணன் இவ்விழாவினை சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தார். அவையோரை வரவேற்று அவர் திரு செல்வராஜாவுவை சிறப்பான முறையில் அறிமுகம் செய்துவைத்ததுடன் அவருக்கும் மேடையில் வீற்றிருந்த பேச்சாளர்களை அறிமுகம் செய்துவைத்தார்.
எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியை நித்தியகல்யாணி அவர்கள் முதலில் தனது வரவேற்புரையை நிகழ்த்தினார். நூல்தேட்டம் செல்வராஜாவின் பணிகள் தமிழகம் வரை பரவியுள்ளதை அவர் தமதுரையில் விதந்துரைத்தார்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவரும் ஈழத்தமிழர்களின் மிக நெருங்கிய சட்டத்துறை வல்லுநருமான (Senior Advocate) இரா. காந்தி அவர்கள் தலைமையுரையை நிகழ்த்தினார். அண்மையில் பாரதி விழாவுக்குத் தமது அணியினர் கொழும்பு சென்றதையும் தமக்கு விமானநிலையத்திலேயே ஈழத்தமிழர்களால் அளிக்கப்பட்ட சிறந்த வரவேற்பையும் நினைவுகூர்ந்த அவர் புலம்பெயர்ந்தபோதும் ஈழத்தமிழரின் வரலாற்றை எதிர்காலம் அறியும்வகையில் அவர்களது அறிவாக்கங்களை பாதுகாக்கவேண்டும் என்ற ஒரே முனைப்புடன் எவ்வித பட்டம் பதவிகளையும் எதிர்பாராது, தனது சொந்த உழைப்பிலும் நிதிவளத்திலும் கடினமான அப்பாரிய பணியை மேற்கொள்ளும் ஒரு ஈழத்தமிழனை வரவேற்று வாழ்த்துவது பெருமைதருகிறது என்றார். தனது உரையின் முடிவில் நூலகவியலாளருக்குப் பொன்னாடை அணிவித்தும், மலர் மாலை அணிவித்தும் சிறப்புச் செய்ததுடன் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் வெளியீடுகளை அன்பளிப்பாக வழங்கினார்.

அடுத்து முன்னிலை உரையாற்றியவர் மருத்துவர் மேஜர் து.இராஜா அவர்கள். எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான இவர் தனது உரையில் திரு செல்வராஜாவை வரவேற்று உரையாற்றியதுடன் சுவாமி விவேகானந்தரின் பணிகளை விரிவாகப் போற்றினார்.

மேஜர் து.இராஜாவின் உரையை அடுத்து இன எழுச்சிக் கவிஞரும், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இந்திய ஒன்றியத்தின் துணைச்செயலாளருமான நெல்லை இராமச்சந்திரன் அவர்கள் நூலகவியலாளர் என்.செல்வராஜாவுக்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் சந்தக் கவிதையில் ஒரு வாழ்த்துப்பாவை அரங்கில் பாடி, அதன் கட்டமிடப்பட்ட பத்திரப்பிரதியை அவரிடம் கையளித்தார்.

அவரைத் தொடர்ந்து விவேகானந்தர் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், விஞ்ஞான ஆய்வு நிறுவனமொன்றின்
தற்போதைய இயக்குநருமான வ.வே சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். அவர் நூலகவியலாளர் செல்வராஜாவின் பணிகளை விதந்துரைத்தபின்னர், சுவாமி விவேகானந்தர் பற்றிய தனது பேருரையை நிகழ்த்தினார். நிகழ்வின் இறுதியில் அவரும் திரு செல்வராஜாவுக்குப் பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்தார்.

அதன் பின்னர் தலைவர் அவர்கள் அவையோரை, நூலகவியலாளருக்கு வாழ்த்துத் தெரிவிக்க மேடைக்கு அழைத்தார். நூலக அறிஞர் பேராசிரியர் பெருமாள், சென்னை நூலகச் சங்கத் தலைவர் எம்.முத்துசாமி, வள்ளியம்மாள் கல்வி நிதியத் தலைவர் கலாநிதி சா வளவன், தமிழக எழுத்தாளர் சங்கச் செயலாளர் வாசுகி கண்ணப்பன் உள்ளிட்ட பலரும் பொன்னாடைகளால் போர்த்தி ஈழத்துத் தமிழ் நூலகவியலாளர் செல்வராஜாவுக்கு உளமார வாழ்த்துத் தெரிவித்தனர்.

தமிழகத்தின் வாழ்த்துக்களால் திக்குமுக்காடிய செல்வராஜா அடுத்து தனது ஏற்புரையை நிகழ்த்தினார். ஈழத்தமிழரின் வரலாறு ஒவ்வொரு கட்டத்திலும் திட்டமிட்டு சிதைக்கப்பட்டு வந்திருப்பதை வரலாற்றுரீதியில் எடுத்துக்கூறிய அவர். யாழ்ப்பாண நூலக எரிப்புடன் அண்மைக்காலத்தில் இந்திய இராணுவத்தின் பிரசன்னத்தின்போதும் அது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அருங்காட்சிப்பிரிவில் பாதுகாக்கப்பட்ட ஆனைக்கோட்டை முதுமக்கள் தாழி அழிக்கப்பட்டதை உதாரணப்படுத்தி விளக்கினார். எதிர்கால சந்ததியினர் எமது வரலாற்றை சரியாக எழுதவேண்டுமானால் அவர்களுக்குத் தேவையான அறிவியல் மூலாதாரங்கள் பேணப்படவேண்டும். இன்று எந்தவொரு அரசோ, அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டியங்கும் எந்தவொரு அறிவுசார் நிறுவனமோ இப்பணியை சுதந்திரமாக முன்னெடுக்க முடியாது. அதனால் தான் தன்னை இப்பணியில் முழுமையாக ஈடுபடுத்தி தனிமனித நிறுவனமாக மாறி இயங்குவதாகக் குறிப்பிட்டார். தனக்கு தார்மீக ஆதரவினை வெளிப்படையாக வழங்குவதன்மூலம் இப்பணியை தடையின்றி முன்னெடுக்க முடியும் என்றார்.

நிகழ்வின் இறுதியில் தான் இலங்கையிலிருந்து கொண்டுசென்ற நூல்தேட்டம் தொகுதிகளின் முழுமையான தொகுப்புக்கள் அடங்கிய பொதியை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இந்திய ஒன்றியத்தின் தலைவர் இரா காந்தி அவர்களிடம் கையளித்து தமிழகத்தின் பொருத்தமான நூலகமொன்றில் அதனை பாதுகாக்கும்படி கேட்டுக் கொண்டார்.
நிகழ்வின் இறுதியில் முனைவர் எம். நித்தியகல்யாணி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். ஈழத்தமிழரின் வலியையும் மன வலிமையையும் செல்வராஜாவின் உருவில் தான் தரிசிப்பதாக அவர் நெகிழ்ந்து குறிப்பிட்டார். நிகழ்வு இந்திய தேசிய கீதத்துடன் மங்களகரமாக நிறைவெய்தியது. ஈழத்துத் தமிழர் ஒருவருக்கு தமிழகத்தில் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வு ஈழத்தமிழர் பெருமைகொள்ள வேண்டியதொன்றாகும்.

தனியொருவனாக நின்று பாரிய சுமையைத் தாங்கி இயங்கும் இத்தமிழ்மகனின் தோள்களை வலுப்படுத்தும் பணி ஒவ்வொரு ஈழத்தமிழ் அறிவுஜீவிக்கும் உரியது. அவருக்கு அத்தியாவசியமாக வேண்டிய நிதி உதவி உள்ளிட்ட தார்மீக உதவிகளை சிறிதளவேனும் வழங்கவேண்டும் என்று நம்மில் எத்தனைபேர் சிந்திக்கிறோம் என்பது கேள்விக்குரியதாகும். வழமை போலவே யாரோ ஒருவர் செய்கிறார் நாம் பார்வையாளர்களாகவே இருந்துவிட்டுப் போவாம் என்ற நிலையே எம்மிடையே காணப்படுவது வெளிப்படையாக உள்ளது. இந்நிலையை மாற்றவும் ஈழத்தமிழரிடையே ஒரு சிறு சலனத்தையாவது ஏற்படுத்தவும் இந்நிகழ்வு துணைபுரியுமாயின் அது இந்நிகழ்வினை ஒழுங்கு செய்த இரா மதிவாணனுக்கும் அவரது நண்பர்களுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதலாம்.

நன்றி: http://thesamnet.co.uk/?p=44056