சுப்ரபாரதிமணியன்1. உங்களைப்பற்றிய ஒரு விரிவான அறிமுகம் வாசகர்களுக்காக:

15 சிறுகதைதொகுப்புகள் கொண்ட சுமார் 250 சிறுகதைகள் , 7 நாவல்கள் ( மற்றும் சிலர், சுடுமணல், சாயத்திரை, பிணங்களின் முகங்கள், சமையலறைக்கலயங்கள், தேநீர் இடைவேளை, ஓடும் நதி ) , இரண்டு குறுநாவல் தொகுப்புகள்,  கட்டுரைத்தொகுப்புகள் மூன்று, நாடகம், வெளிநாட்டுப்பயண அனுபவம், திரைப்படகட்டுரைகள்  இரண்டு என்று 30 நூல்கள் வெளிவந்துள்ளன. மூன்று நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி வந்துள்ளன. அ. மொழிபெயர்ப்புகள், விருதுகள், திரைத்துறை ஈடுபாடு, களப்பணிகள்...... திரைப்படக்கட்டுரைகள் சில மொழிபெயர்த்திருக்கிறேன். ஜே பி தாஸ் என்ற ஒரிய எழுத்தாளரின் சிறுகதைத்தொகுப்பு, திருப்பூர் பின்னலாடைதுறை சம்பந்தமான “ தி நிட்டெட் டூகதர் “ என்ற ஆராய்ச்சி நூல் ஆகியவைதான் மொழிபெயர்த்தவை. சிறந்த சிறுகதையாளருக்கான கதா விருது , சிறந்த நாவலுக்கான தமிழக அரசு பரிசு, ஏர் இண்டியா குமுதம் குறுநாவல் போட்டிப்பரிசாக அய்ரோப்பா, இங்கிலாநது நாடுகளின்  பயணம், மற்றும் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் பரிசுகள் ஆகியவைதான். தனியாகக் களப்பணி என்று எதுவும் செய்ய நேரம் வாய்த்ததில்லை.நாவல்கள் களப்பணிகளைக் கோருபவை.ஆனால் வந்து சேரும் அனுபவங்களை எழுதுவதைத் தவிர வேறு நேரம் வாய்க்காத வேலை வாழ்க்கை சங்கக்டப்படுத்துகிறது. 

ஆ. நீங்கள் எழுதவந்த காலம், எழுத்தில் ஆர்வம், தூண்டிய பாதித்தபடைப்புகள். பற்றி..
 
நான் நெசவாளர் குடும்பத்தைச் சார்ந்தவன் என்ற வகையில் கோவை மாவட்டத்தின் செகடந்தாளி என்ற கிராமத்தில் பிறந்து பத்தாவது வயதில் திருப்பூருக்கு இடம் பெயர்ந்து கல்லூரியைத் தொட்ட குடும்பத்தின் முதல் நபர் என்ற வகையில் கல்லூரி வாழ்க்கைவரைக்கும் எவ்வித இலக்கிய வாசிப்பும் இல்லாதாவன். முதலில் ஜெயகாந்தனைத்தான் வாசித்தேன். அவர் காட்டிய உலகம் நான் அறிந்ததில் இருந்து வித்தியாசப்பட்டு அதிர்ச்சி தந்தது. குறிஞ்சி என்ற கையெழுத்துபத்திரிக்கையில் எழுதிப்பார்த்தோம், மார்க்சிய தோழர்களின் அரவணைப்பில் மார்க்சிய இலக்கியம் கற்றோம். ஜெயந்தனும், கி ராஜநாராயணனும்  ஆரம்பத்தில் மிகவும் பாதித்த எழுத்தாளர்கள்.

இ. அன்றைய இலக்கியச் சூழல் எப்படி இருந்தது.
    
வானம்பாடிகள் தீவிர அக்கறையுடன் இயங்க ஆரம்பித்த காலம். அவர்களின் எளிமையான வெளிப்பாட்டு முறையும், ஜனநாயகத்தன்மையும் வெகுவாக பாதித்தன, கவிஞர்கள் சிற்பியும், புவியரசும் ஆகர்சித்தார்கள்.அவர்கள் பாணியில் கவிதைகள் எழுதினோம். நா பா, அகிலனைக் கடந்து வெகு சீக்கிரம் மார்க்சிய படைப்புகளுக்குள் வந்து விட்டோம்.திருப்பூர் கிருஸ்ணன் நடத்தி வந்த  தீபம் வாசகர் வட்டத்தின்” மூலம் ஜானகி ராமன், அசோகமித்திரன் போன்றோர் அறிமுகமானார்கள்.  பொதுவுடமையியக்கத்தினர் நடத்திய பட்டிமன்றங்கள் பாதிப்பை ஏற்படுத்தின. “ கம்யூனிஸ்ட்டுகளுக்கு இலக்கியம் என்றால் பட்டிமன்றம்தான் “ என்ற ஜெயகாந்தனின் விமர்சனம் அந்த பிரமையை குலைத்தது.

ஈ. உங்கள் குடும்பப் பின்னணி  எழுத அனுமதித்ததா....
    
கோவை பூசாகோ கல்லூரியில் எம்எஸ்ஸி கணிதம் படித்த போது கல்லூரியின் ” புதுவெள்ளம்” மாணவர் இதழில் எழுத ஆரம்பித்தேன். திருப்பூரிலிருந்து வெளிவந்த “ யுக விழிப்பில்’’ சுதந்திரவீதிகள் என்ற முதல் சிறுகதை வெளிவந்தது. பூமணி, அஸ்வகோஸ், புவியரசு, சி ஆர் ரவீந்திரன், பாவெல்  போன்றோர் எழுதினர். முற்போக்கு சங்க எழுத்தாளர்களால் நடத்தப்பட்ட செம்மலருக்கு மாற்றான இதழ் அது.  நான் இலக்கிய நண்பர்களுடன் திரிந்தது  வீட்டில் பார்வைக்குப் பட்டிருக்கிறது, எங்கள் வீட்டில் ராணி  பத்திரிக்கை வாசிப்பிற்கு மேல் செல்லாத சகோதரர்கள்  இதில் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. கொஞ்சம் நாடகமுயற்சிகள் அப்போது ஆறுதல் தந்தன. ஜெயந்தனின்

”இயக்க  விதிகள் 3 “. , அறந்தைநாராயணனின் “ மூர்மார்க்கெட்” ,ஞானராஜசேகரனின் “ வயிறு ”, அயன்ஸ்கோவின் “ தலைவர் ” , சி ஆர் ரவீந்திரனின் “ பசு “ போன்ற நாடகமுயற்சிகளும், தெரு பிரச்சார நாடகங்களும்  என.

2. கிட்டத்தட்ட இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு  மேலாக ‘ கனவு” என்ற இலக்கியச் சிற்றிதழை நடத்தி வருகிறீர்கள். எப்படி தொடர்ந்து

கனவு இதழைக் கொண்டு வருகிறீர்கள். நிதி நெருக்கடிகளை  எப்படி சமாளிக்கிறீர்கள்.  ஆரம்பித்த்து முதல் இன்றுவரை இதழைக் கொண்டு வருவதற்காக நீங்கள் மேற்கொண்ட  முயற்சிகள், இழப்புகள் குறித்துச் சொல்ல முடியுமா..  செகந்திராபாத்தில் வேலை நிமித்தமாக 7 ஆண்டுகள் இருந்தேன். அங்கு பிராமண சமூகம்  பெரிய அளவில் கலாச்சார நடவடிக்கைகளில் இருந்தது. அசோக மித்திரனின் படைப்புக்களமாக இருந்த நகரம்... இளைஞர்களின் படைப்பாக்க முயற்சிக்கு இதழ் தேவைப்பட்டது. ஆந்திர மாநில தமிழர் பேரவை என்ற அமைப்பினர்  நடத்தி வந்த ஒரு இதழை மீட்டுருவாக்கம் செய்ய நினைத்தோம் அவர்கள் தீவிரமான பெரியார்சீடர்கள். அவர்கள் ஒத்துக்கொள்ளாத போது  “ கனவு ” என்ற இதழை ஆரம்பித்தேன். இரண்டு இதழ்கள் உள்ளூர் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தாங்கி வந்தன. பிறகு தமிழகத்திலிருந்து படைப்புகள் வாங்கி பிரசுரிக்க ஆரம்பித்தேன். 23 ஆண்டுகள் ஓடி விட்டன. முதல் 20 ஆண்டுகளில் வெளிவந்த தேர்வு செய்யப்பட்ட படைப்புகளை காவ்யா பதிப்பகம் 700 பக்கங்களில் வெளியிட்டுள்ளது. இன்றைய முக்கிய படைப்பாளிகள் பலரும் அதில் இடம் பெற்றிருக்கிறார்கள். ஜெயமோகன் தயாரித்த மலையாளக்கவிதைகள் , அசோகமித்திரன், சுந்தரராமசாமி சிறப்பிதழ்கள், திரைப்பட நூற்றாண்டை ஒட்டிய 5 சிறப்பு இதழ்கள் யமுனா ராஜேந்திரனின் தயாரிப்பில், புலம்பெயர்வு இலக்கிய சிறப்பிதழ்கள், இலங்கை, சிங்கப்பூர் சிறப்பிதழ்கள் , பாவண்ணன் தயாரித்த கன்னட சிறப்பிதழ்  , நோபல் பரிசுபெற்றவர்களின் கதைகள் சிறப்பிதழ் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்  இளம் படைப்பாளிகளின் மேடையாக அது இருந்து வந்துள்ளது. எனது சொந்த கைக்காசுதான். இழப்புகளைக் கணக்கிட்டால்  மனச்சோர்வுதான் மிஞ்சும். தொடர்ந்து இயங்குவதுதான் ஆறுதல்

3 செகந்திராபாத்தில் ஏழு ஆண்டுகள்  இருந்திருக்கிறீர்கள். உங்கள்  படைப்புகளில் பெரும் பகுதியும் செகந்திராபாத்தான். அந்த வாழ்க்கை உங்களை எந்த விதத்தில் பாதித்தது.

4.  உங்களுடைய சாயத்திரை நாவல்தான்  தேசிய விருது பெர்ற  “ காஞ்சீவரம் ‘  திரைப்படமாக  உருவானது என்று நீங்களே  இன்யொரு வலைத்தளத்தில்   ஆதங்கப்பட்டிருக்கிறீகள்  உண்மையில் என்ன நடந்தது 
   
சாயத்திரை ” நாவல் ஆங்கிலம், மலையாளம் , கன்னடம், இந்தி மொழிகளில் வெளிவந்துள்ளது. அதை திரைப்படமுயற்சியாக்க ஒருவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்  அழைத்தார். பிறகு அது கைவராத போது  நெசவாளர் குடும்பத்து திருமணமாகாத பெண் ஒருத்தி பற்றி அவருக்கு ஒரு முழு நீள ஸ்கிரிப்ட்எழுதித் தந்தேன். அது மாற்றங்களுடன் ” காஞ்சீபுரமானது” பற்றி எழுதி இருந்தேன். நானே எழுதிய ” சாயத்திரை ” முழு ஸ்கிரிப்ட்டும் பல இயக்குனர்களிடம் சென்று திரும்பியுள்ளது. அது எந்த வடிவில் எப்போது திரைக்கு வருமோ..  தீபத்தில் வெளிவந்த ”கவுண்டர் கிளப்” குறுநாவல்தான் மாற்றங்களுடன் “ முதல் மரியாதை” யாக வந்தது முதல் தற்போது செய்திகளில்  இடம் பெறும்  ஜானகி விஸ்வநாதன் இயக்கியுள்ள  ” ஓம் ஒபாமா ‘  வரை இதே அனுபவம்தான். ஓம் ஒபாமா 40 காட்சிகளைக் கொண்ட முழு ஸ்கிரிப்ப்ட் எழுதினேன்.அது எந்த வகையில் மாற்றம் பெற்றுள்ளதோ. 2009 பிப்ரவரி,  மார்ச் மாதங்களில் என் உழைப்பை கோரிய ஓம் ஒபாமா பற்றி ஜானகி அம்மையாரிடமிருந்து  எந்த சன்மானமோ, அங்கீகாரமோ இல்லை. 2009 அக்டோபரில் வெளிவந்த ”  கனவு” இதழிலும் , திண்ணை, இனியொரு இணைய இதழ்களிலும் நான் “ காஞ்சிபுரம்” பற்றி எழுதியிருக்கும் கட்டுரையில் நான் எழுதி இருந்த சந்தேகம் இப்போது உறுதியாகிவிட்டது 7 ஆண்டுகளுக்கு முன் வந்த “ தேநீர் இடைவேளை “ நாவலில் கிராமங்களிலிருந்து பெண்கள் புரோக்கர்கள் மூலம் திருப்பூருக்கு வருவது,பல்வேறு கதாபாத்திரங்கள்,  சுமங்கலித்திட்டம், கொத்தடிமைத்தனம், அவர்களின் காதல் தற்கொலை இவையெல்லாம் “ அங்காடித்தெருவில்” இடம் பெற்றிருப்பது எதேச்சையானதாகத் தெரியவில்லை. “ ஓம் ஒபாமா” விசயத்தில் ஏதாவது செய்ய வேண்டும். 

5. சற்று விரிவாகச் சொல்லுங்கள்

11-11-10  தேதிய “ தி இந்து “ தினசரியில் திருமதி ஜானகிவிஸ்வநாதனின் இயக்கத்திலான “ ஓம் ஒபாமா “  திரைபட முன்னோட்டம் பற்றியக் கட்டுரையைப்படித்ததும் அப்படத்துடனான என் அனுபவப்பகிர்வை எழுத வேண்டும் என்றுத் தோன்றியது. 2009 பிப்ரவரியில் திரைப்பட ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் அவர்கள் தொடர்பு கொண்டு திருமதி ஜானகி விஸ்வநாதனுடன் சேர்ந்து  ஒரு திரைப்பட கதைப்பணியில் ஈடுபடக் கேட்டுக் கொண்டார்.அவரின் ” குட்டி”  , ”கனவுகள் மெய்ப்படவேண்டும் ” படங்களைப் பார்த்திருக்கிறேன். ராஜ்குமார் இரண்டிலும் ஒளிப்பதிவு பணியில் இருந்தவர்,ஒத்துக் கொண்டபின்பு திருமதி ஜானகி தொலைபேசியில் பேசினார். தொடர்ந்து பேசிக்கொண்டேஇருந்தார். மின்னஞ்சலில் சில தகவல்களை தர நானும் அக்கதைக்கான சம்பவங்களை தொடர்ந்து தந்து கொண்டிருந்தேன். தினமும் பெரும் பேச்சுசுதான். பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் என் துறையில் ஒருவாரப்  பயிற்சி ஒன்றுக்கு சென்னையில் இருந்த போது அவரைச் சந்திக்க பிப்ரவரி 15 மாலை தேதி தந்திருந்தேன்.  பிப்ரவரி 14 என் மனைவி கவிஞர்  சுகந்தி சுப்ரமணியன் மாரடைப்பால் காலமானதால் நான் பயிற்சியின் இடையிலேயே திருப்பூர் திரும்பி விட்டேன். திருமதி ஜானகியிடம் குறுஞ்செய்தியாக தெரிவித்தேன்.
   
பத்து நாள் இடைவேளைக்குப் பின் அவர்கள் தொடர்பு கொண்ட போது சுகந்தியின் மரணம் தந்திருந்த சோர்விலிருந்து விடுபட வேண்டியிருந்த்தால் அக்கதைபற்றித் தொடர்ந்து தொலைபேசியில்  கலந்தாலோசித்தோம் . தபாலில் சம்பவங்கள் தொடர்ந்து  அனுப்பிக்கொண்டிருந்தேன். 40 காட்சிகளை வடிவமைத்திருந்தேன். ஒரு மாத இடைவெளியில்  சாகித்திய அக்காதமியின் நிகழ்ச்சிக்குச் சென்றபோது அவர்கள் வீட்டில் ஒரு முழு நாள் நான் எழுதிய திரைக்கதை சம்பவங்களை முறைப்படுத்தினோம். .
    
பின்னர் தொடர்பு கொண்ட பலமுறை சற்று தாமதமாகும் என்றார். பிறகு ஒருமுறை திரைக்கதை முயற்சிக்கு சன்மானம் கேட்டு கடிதம் எழுதியபோது தொடர்பு கொள்வதாக குறுஞ்செய்தி அனுப்பினார். அவ்வளவுதான். பிறகு நாலைந்து முறை அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கும் அதே பதில் குறுஞ்செயதிதான்.
   
“ காஞ்சீபுரம் “ திரைக்கதைவிசயத்தில் நடந்ததைப் பற்றிய என் அபிப்ராயங்களை ” கனவு “  இதழிலும், திண்ணை, இனியொரு இணைய இதழ்களிலும் எழுதி  இருந்த போது இப்படிக் குறிப்பிட்டிருந்தேன். ”கனவு”  63 ம் இதழ்  அக்டோபர் 2009 இதழில் பக்கம் 24லில் இப்படி குறிப்பிட்டிருக்கிறேன்:   “ எனது  சாயத்திரை நாவலை நான் திரைக்கதையாக்கி வைத்திருந்ததை  பெற்றுக் கொண்ட பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இப்போது 5 பேர் உள்ளனர். சமீபத்தில் ஒரு பெண் இயக்குனர் கேட்ட்தினால் “ ஆன்லைனில் ஒரு திரைக்கதை  எழுதி முடித்தேன்.  பிளீஸ், பிளிஸ் என்று தொலைபேசியிலெயே தொடர்ந்து கேட்டுக்கொடிருந்தார். 15 நாளில் முழுத் திரைக்கதையை  ஆன்லைனில் எழுதி முடித்தேன். அது என்ன பாடு படப்போகிறதோ. திரைப்படத்துறையைச்சார்ந்த  ஒரு நண்பர் சொன்னார்: பத்து குயர் பேப்பர் வாங்கிக்குடுத்து இதுதான் சன்மானமுன்னு அனுப்பிசிருவாங்க “ சினிமாவுலே இதெல்லாம் சகஜமப்பா” “ ஓம் ஒபாமா” விசயத்தில் பத்து குயர் பேப்பரும் கிடைக்கவில்லை. ஒரு பைசா சன்மானமும் கிடைக்கவில்லை.

நான் எழுதிய  ” ஓம் ஒபாமா ‘ திரைக்கதையில் சில சம்பவங்கள்.: திருப்பூரை ஒட்டிய ஒரு கிராமம். பின்னலாடைத்துறை தொழிலுக்கு அந்த கிராமத்திலிருந்து வரும் சிலரின் வாழ்க்கை. அதில் காதல் வயப்பட்ட ஒரு ஜோடிபிரதானமாய். அந்த கிராமத்து அம்மன் கோவிலில்  பூஜையின்போது நாதஸ்வரம் வாசிக்கும் ஒரு குடும்பம். அந்த ஊர் பண்ணையரின் மகன் நிர்வாகத்திற்கு வரும்போது நாதஸ்வரத்திற்கு  பதிலாக  கோவில் பூஜையின்போது சிடி போட்டு நாதஸ்வர ஓசை வந்தால் போதும் என்று அக்குடும்பத்திற்கு வேலை போய்விடுகிறது.  இதில் வரும் பிரதான சிறுவன் பாத்திரத்தின் அண்ணன் பனியன் கம்பனி வேலைக்குப் போய்விடும்போது பள்ளியில் படிக்கும் சிறுவன் விடியற்காலையில் எழுந்து கோவிலுக்கு நாதஸ்வரம் வாசிக்கும் அப்பாவுடன் செல்லும் தொந்தரவில் திரைக்கதை ஆரம்பிக்கிறது. பையன் குடும்பம் நாத்ஸ்வரம் ஓதி கடவுளை எழுப்புவதால் பையனுக்கு பள்ளியில் மவிசு அதிகம். தங்கள் குறைகளை பையன் துயிலெழும் கடவுளிடம் சொல்லி அருள் பாவிக்க தலைமை ஆசிரியர் முதற்கொண்டு பலர் வேண்டுகிறார்கள். பனியன் உற்பத்தி பாதிப்பு, அமெரிக்க இரட்டை கோபுர வீழ்ச்சி , பொருளாதார தடுமாற்றம் திருப்பூர் பனியன் ஏற்றுமதி பாதிப்பில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் அமெரிக்காவில் ஒபாமா வெற்றி பெற்றால் நிலைமை சீராகும். என்று வேண்டிக்கொள்கிறார்கள் . ஓம் லாபம், எழுதுவதைப்போல் பலர் ஓம் ஒபாமா நாமம் எழுதுகிறார்கள்.  கிராம வாழ்க்கை, பனியன் உற்பத்தி பாதித்ததால் கிராம மக்களின் மனநிலை, பையனின் பள்ளி அனுபங்கள்..பையனும் ஓம் ஒபாமா எழுதுகிறான். பலன் கிடைத்ததா  என்பதை வெள்ளித்திரையில் காண்க. நானும் வெள்ளித்திரையில் பார்த்துவிட்டு, அல்லது  சிடி கிடைத்தால் பார்த்துவிட்டு  அடுத்த அங்கலாய்ப்பிற்குப்  போகவேண்டும். 

6. அரசியல் பின்புலம் என்பது எழுத்தாளர்களுக்கு அவசியமா.  படைபுகளில் ஒரு சார்பான அரசியல் இருப்பது சரிதானா.

அரசியல் சார்பு எழுத்தாளனை கம்பீரமுள்ளவனாக்கும். சமூக முன் மாதிரியாக்கும். வாசிப்பு நுகர்வு என்றாலும் அதைத் தாண்டி படைப்பு செயல்படுவதில் நுண்ணரசியல் உண்டு. வெளிப்படையான பிரச்சாரம் கோராமல் இருப்பதில் அதன் கவுரவம் இருக்கிறது. பிற வடிவங்கள் பிரச்சாரத்திற்கென்று உள்ளன.

7. தலித், விளிம்பு நிலை எழுத்துக்கள் பரவலாக முன் எடுத்துச் செல்லப்பட்டு  வருகிற காலம் இது. பயணங்கள்  மற்றும் மொழிபெயர்ப்புகள் வழியாக மற்ற மாநிலங்களை உற்று கவனித்து வருபவர் நீங்கள் . மற்ற  மாநிலங்களோடு ஒப்பிட்டால்  இன்றையச் சூழலில் தலித், விளிம்பு நிலை சார்ந்த  எழுத்துக்கள் தமிழில் எப்படி இருக்கின்றன?
      
பின்நவீனத்துவமும் அது பிரதானப்படுத்தும் விளிம்பு நிலை எழுத்தும் காலத்தின் கட்டாயம். மராத்தியில் வலுவான அவ்வகைப்படைப்புகள் வந்துள்ளன. அவை பெரும்பாலும் தன் வரலாறாக அமைந்துள்ளன. அதை மீறிய சமூக வரலாற்று ஆவணங்களாக தமிழிலும் மலர்ந்துள்ளன.

8.  இன்றைக்கு நான்பிக்சன் எழுத்துக்கள் அதிகம்   வர ஆரம்பித்திருக்கின்றன. அதற்கு வரவேற்பும் பலமாக இருக்கிறது. பதிப்பாளர்களும் அவற்றையே விரும்பி வரவேற்று  பதிப்பிக்கிறார்கள்.  இந்நிலையில்  நாவல், கவிதை. சிறுகதைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்.``` 

படைப்பிலக்கியம் என்றைக்கும் குறிப்பிட்டவர்களாலேயே வாசிக்கப்படுவது. அதிலும் மொழி சார்ந்த இலக்கியத் துறைமாணவர்களால். அதை மீறிய  பொது எழுத்து வாசிப்பு நீங்கள் குறிப்பிடும் எழுத்துக்களாக உள்ளன. பரபரப்பு உலகத்தில் சரியான தீனி அது. இப்போதைய தீனி மசாலா கலந்த உடனடி  சுவை கொண்டது. இலக்கிய வாசிப்பிற்கு ஆட்களைக் கண்டடைவது  குதிரைக்கொம்புதான.

9. பல இளம் பெண் படைபாளிகள் இன்று பரவலாக அறியப்படுகிறீர்கள் இன்றையச் சூழலில்  தமிழில் வெளியாகும்  பெண்ணியம், மகளிர் பிரச்னைகள் சார்ந்த எழுத்துக்கள் பற்றி நீங்கள் என்ன நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

எந்தக்காலத்தை விடவும் தற்போது பெண் படைப்புகள் தீவிரமாக வெளிவருகின்றன. கவிதையில் இது உச்சத்தைத் தொட்டிருக்கிறது. விரிந்த அனுபவங்களாய் நாவலில் இன்னும் தீவிரமாகவில்லை.

10. பரிசுகள் பற்றி...
பரிசுகள் நல்ல எழுத்துக்களை அடையாளப்படுத்துகின்றன. எழுத்தாளர்களுக்கு ஆசுவாசம் தரக்கூடியது. கவனிப்பிலிருந்து தப்பும் ஆடுகளையும் சரியாக பல சமயங்களில்  அடையாளப்படுத்தும் வேலையைச் செய்கிறது. நிழல் போன்ற ஆசுவாசம்.

11  எழுத்தை நம்பி  இன்றைக்கு  ஓர்  எழுத்தாளன் வாழ முடியுமா?

வணிக எழுத்தை மட்டும் நம்பி வாழலாம். பரபரப்பான மலின ரசனையுடன் செய்யப்படும் விசயங்கள் விற்பனையாகும். தீவிர எழுத்து சோறு போடாது. புலி வாலை பிடித்த கதைதான். நிராகரிப்பின் வலியும், குழு அரசியலும் தீவிரமாய் எழுதுகிறவனை மனநோயாளியாக்கும்.

12. இன்றைய தமிழ்த் திரைப்படச்  சூழல் ஆரோக்கியமாக இருக்கிறதா.

கடந்த இரண்டு ஆண்டுகளாய் யதார்த்த திரைப்படத்தை நோக்கிய பயணத்தில் ஆறுதலாக பத்து நல்ல படங்களையாவது சொல்லலாம். ஆனால் சமீபத்தில்  தமிழக ஆட்சியாளர்குடும்ப வாரிசுகளும், அவர்களின்  தொலைக்காட்சி ஆக்கிரமிப்பும் இவ்வகை முயற்சிகளை முடக்க ஆரம்பித்துவிட்டது. அவர்களின் ஆக்கிரமிப்பை மீறி நல்ல படங்கள் வருவதற்கான சூழல் அருகிக்கொண்டு வருகிறது. துரதிஸ்டமான சூழல்.

13. நீங்கள் குறும்படங்களோடு தொடர்பு  கொண்டவர்  எதிர்காலத்தில்  மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெரும் வடிவமாக  உருவெடுக்க வாய்ப்பிருக்கிறதா.

3 குறும்படங்கள் எனது படைப்புகளை கொண்டு வந்துள்ளன. நான் இயக்கவில்லை.திருப்பூர் இளம் குறும்பட படைப்பாளிகளின் தளமாக விளங்குகிறது.   குறும்படங்கள் பற்றிய அறிமுகமும் அக்கறையும் தொலைக்காட்சி  வழியாக அதிகரித்திருக்கிறது. இது ஆரோக்கியமான போக்கு. எண்பதுகளில் புதுக்கவிதை தொகுப்புகள் போல இன்றைய இளைஞர்கள் குறும்படங்களை ஓரளவு சரியாக கையாண்டு மாற்றுத் திரைப்பட முயற்சியில் இணைகிறார்கள் என்பது ஆரோக்கியமானது.

14.. இணைய தளங்களால்  இலக்கியத்திற்குப் பங்களிப்பைத் தர இயலுமா

இணையதளங்கள் காலத்தின் கட்டாயம், தவிர்க்க இயலாதது இலக்கியம் மட்டுமின்றி எல்லாதுறை சார்ந்த இளைஞர்களும் அக்கறை கொண்டு  எழுதுவது நல்ல விசயம். நல்ல வாசிப்பிற்கேன்றே பல நூறு வலைப்பூக்கள் உள்ளன. காசுவல் ரைட்டிங் என்பதும், கிசுகிசுவும் இன்னும் ஒரு புறம். வலைப்பதிவில் நான் நேரம் ஒதுக்குவது மிகவும் குறைவு. சண்டை சச்சரவுகளைப் பார்ப்பதில்லை. என் வலைப்பூவில் பின்னோட்டத்தைத் தவிர்த்திருக்கிறேன். அலுவலக சூழல், நேரமின்மையால் நேரம் ஒதுக்க முடிவதில்லை. கசடுகளை மீறி நல்லது வரத்தான் செய்கிறது. வலைப்பூக்களிலும் பொழுதுபோக்கு எழுத்துதான் அதிகம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது வருத்தமானது.

15.  படைப்பிற்கு பிரச்சாரம் தேவையா
 
பிரச்சாரம் உள்ளீடாக இருக்கலாம், வாசகனை சிந்திக்கிற தளத்திற்கு ஏதோ ஒரு நிலையில் அது இட்டுச் செல்லும் . ஏதோவொருவகையில் பிரச்சாரம் இல்லாத எழுத்து இல்லை. வெளிப்படையான பிரச்சார அம்சங்களுக்கு எழுத்தைத்தவிர வேறு வடிவங்களைப் பயன்படுத்தலாம்.

16. செகந்திராபாத்தில் ஏழு ஆண்டுகள்  இருந்திருக்கிறீர்கள். உங்கள்  படைப்புகளில் பெரும் பகுதியும் செகந்திராபாத்தான். அந்த வாழ்க்கை உங்களை எந்த விதத்தில் பாதித்தது.

செகந்தராபாத்தில் 7 ஆண்டுகள் இருந்தேன். வேற்று மொழிச் சூழல். நல்ல அனுபவம். அவை அனுபவமாவதே அங்கிருந்து வெளியேறி யோசிக்கிற போதே. அங்கிருக்கும் போது அவை சிரமங்களாகவே இருந்திருக்கின்றன. மற்றும் சிலர், சுடுமணல் போன்ற நாவல்கள் எழுத பயன்பட்டிருக்கிறது. நூறு சிறுகதைகளைக் கொடுத்திருக்கிறது. இம்மாதம் “  உயிர் எழுத் “தில் வந்திருக்கும் ” ஆறுதல் “ சிறுகதை கூட செகந்திராபாத் அனுபவம்தான். அசோகமித்திரன்  இன்னும் செகந்திராபாத் அனுபவங்களையே எழுதி  வருகிறார்.

17. தொடர்ந்து திருப்பூர் நகரம் குறித்து எழுதி வருகிறீர்கள். நீங்கள் எழுதியவற்றிப் மூலம் விழிப்புணர்வு பெற்று  அதனால் ஓர் அவலம் நிறுத்தப்பட்டுள்ளது அல்லது குறைக்கப்பட்டுள்ளது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

படைப்பு செயல்படும் தளம் நுணுக்கமானது. 1994ல் திருப்பூர் வந்த போது என்னை  சாயமும், சுற்றுச்சூழல் கேடும், குழந்தை உழைப்பு அவலமும் வெகுவாக பாதித்தது.படைப்பு தளம் மீறி வேறு தளங்களிலும் செயல்பட்டேன். அதன் அக்கறை இன்றைக்கு ஏற்றுமதியாளர்களின் கொள்கையில் கடைபிடிக்க வேண்டிய விதைகளாகியுள்ளன. படைப்புகள் மூலம் எழுப்பப்பட்டகேள்விகள்   மனித உரிமை பிரச்சினைகளாக மாறி  தன்னார்வக்குழுக்களாலும் , அரசு தரப்பில் ஓரளவும் நலத்திட்டங்ளாக மாறியுள்ளன. 35000 குழந்தைதொழிலாளர்கள் இருந்த திருப்பூரில் ஏற்றுமதி பின்னலாடை தொழிற்சாலைகளில் ஏகதேசம் இப்போது இல்லை. சிறு ஒப்பந்த நிலையங்களில்  அது  உள்ளது. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல் நொய்யலும் மண்ணும் பாழ் பட்ட பின்பு இன்றைக்கு அதன் சீரமைப்பிற்கு ஏற்றுமதியாளர்களே அக்கறை எடுத்து செலவிட்டு வருகிறார்கள். நிலைத்த வணிக விசயங்களுக்கு அவர்கள் இவற்றை கடைபிடித்தே ஆக வேண்டிய கட்டாயம்  இருக்கிறது.  கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வும், நியாய வணிகமும் அதிகளவில் பேசப்படுவது    இதன் அடுத்த கட்டம்தான். தொழிலாளி ,மனிதன் சமூக மனிதனாக விளங்கவேண்டிய அக்கறையை  எழுத்து தொனிக்கிறது.அவன்  இயந்திரமோ, கொத்தடிமைத் தொழிலாளியோ அல்ல. அதை வலியுறுத்த வேண்டியிருக்கிறது.

18. உலகமயமாக்கலை தொடர்ந்து எதிர்த்து வருகிறீகள் அதனால் தேங்கி விடும் அபாயம் இருப்பதை ஏற்கிறீர்களா. உள்ளூர் பொருளாதாரப் வசதிகள் சார்ந்தே இப்பிரச்சினையை எதிர் கொண்டு விட முடியும் என்று நினைக்கிறீர்களா
  
உலகமயமாக்கல் தவிர்க்கஇயலாதது.முதலாளித்துவத்தின் கோரவடிவத்தையும், கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தையும்  இனி   தவிர்க்க இயலாது. இந்நிலையில் சாதாரண தொழிலாளி குறைந்தபட்ச மனித உரிமைகளுடன் மதிக்கப்படுதலும், நவீன கொத்தடிமையாக்கப்படலும் இல்லாமல் வாழ ஆசைப்படுவதை  என் ஆசையாக சொல்லிக் கொண்டிருக்கிறேன்.அவ்வளவுதான். 60 ஆண்டுகளில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியில் சாதித்ததைவிட   வங்கதேசம்  5 ஆண்டுகளில் சாதித்திருப்பதை சென்ற மாதம் டாக்கா சென்ற போது கண்டபோது அதன் அடிப்படையான  மலின உழைப்பு,குறைந்த  கூலியும் இருப்பது தெரிந்தது. அடிப்படை தொழிற்சங்கஉரிமைகள் அற்று சாதாரண தொழிலாளி  நவீனக் கொத்தடிமையாக, தினசரி கூலியாக உலகம் முழுவதும் மாறிக்கொண்டிருக்கிறான். 

19. சிறுவர் இலக்கியம் சார்ந்த வெற்றிடம் பற்றி... 

சிறுவர் இலக்கிய நூல்கள் அதிக அளவில் அச்சிடப்படுகின்றன. படைப்பிலக்கிய நூல்களை விட... ஆனால் தமிழ் வழிக்கல்வி அற்றுப்போன சூழல் அதற்கு பலவீனங்களைத் தந்துள்ளது. பள்ளிகளில் குழந்தைகள் நூலங்களைச் சரியாகப்பயன்படுத்தினாலே போதும். ” கதை சொல்லி ’ என்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திவருகிறேன். சிறுவர் கதைகளை எழுதும் முயற்சிக்கு கடந்த 5 ஆண்டுகளாக  “: கதை சொல்லி பரிசுகளைத் தந்து வருகிறேன். என் வீட்டு அருகில் உள்ள பாண்டியன் நகர் தாய்த்தமிழ்பள்ளி முயற்சிகளில் மருத்துவர் முத்துசாமியுடன் இணைந்து கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறேன். “ பள்ளி மறுதிறப்பு “ என்ற சிறுவர் கதைகள் நூல் வெளியிட்டுள்ளேன். சிறுவர் கதைகளில் அக்கறை கொண்டு எழுத இக்கேள்வி ஆதார ஆதரவைத் தருகிறது  என்றே நினைக்கிறேன். தாய்வழிக்கல்வியும், பள்ளிகளில் நூலக செயல்பாடுகளும் இதனை ஊக்குவிக்கும்.

20.  சிறுபத்திரிக்கைச் செயல்பாட்டில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் இடை  நிலைப்பத்ஹ்டிரிக்கை முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலயில், சிற்றிதழ்கள் செய்து வந்த இலக்கியப்பங்களிப்பு  இனி என்ன ஆகும் என நினைக்கிறீர்கள்.

அப்படி ஒன்றும் ஆகிவிடவில்லை. என்றைக்கும் சிறுபத்திரிக்கைகள் இளம் புதிய படைப்பாளிகளுக்கான மேடையாக இருக்கும். இருக்கிறது பல வணிக இதழ்கள் சிறுபத்திரிக்கை விற்பனையை ஒத்து இருக்கலாம். அல்லது ஓரிரண்டு விதிவிலக்காக இருக்கலாம். அவ்வளவுதான்.  பெரிய நம்பிக்கை இல்லை.பெரிய பத்திரிக்கைகளில் சிறுபத்திரிக்கைஎழுத்தாளர்களின் படைப்புகள் இடம் பெறுவது தனிப்பட்ட நட்பு, அறிமுகம் காரணமாகவே உள்ளது. மற்றபடி அங்கீகாரம், கவ்ரவம் இல்லை. அதிலும் அரசியல்.

அபுனைவு என்றாலே அது மொழிபெயர்புதான் என்ற சூழல்  இருப்பதாகத் தொன்றுகிறது.இன்றைய கலாச்சார நெருக்கடிகளை அரசியல் சார்ந்து வெளிப்படுத்த தயக்கம் இருப்பதாலேயே இக்கேள்வி எழுகிறது. இன்னும் 5 ஆண்டுகளுக்குப்பின் இந்த கேள்விக்கான பதிலைத் தரும். பன்முகத்தன்மையுடன் வெளிப்படுத்தப்படும் சுயமான படைப்புகள்  வரும். நெருக்கடிகளை உணர்ந்து கொள்ள எழுத்தாளனுக்கு ரொம்ப அவகாசம் தேவைப்படுவது போலாகிவிட்டது.

 சக மனிதன் மேல் இருக்கும் அக்கறைதான் இக்கேள்வியைத்தந்துள்ளது. மார்க்சிய அடிப்படை தந்திருக்கும் பார்வை இந்தக் கவலையை தொடர்ந்து  எனக்கும் என் எழுத்திற்கும்  தந்திருக்கிறது. உலக மயமாக்கலின் பாதிப்பிலான ஒரு வணிக நகரத்தில் வசிக்கிறவன் என்ற வகையில் இதற்கான எதிர்வினையாக்குகிறேன் சகமனிதனின் அன்பும்.பகிர்வும், நிம்மதியும், மனித உரிமைகளும், சமூகப் பாதுகாப்பும் இதன் அக்கறை. இதைத் தருவது ஒரு முதலாளித்துவ சமூகமாக இருந்தாலும் சந்தோசமே.

(பேட்டியாளர்:  பாலு சத்யா   கிழக்குப்பதிப்பக உதவி ஆசிரியர். பத்திரிக்கையாளர். எழுத்தாளர் . திரைப்பட உதவி இயக்குனர்,  சென்னையில் வசித்து வருகிறார் )

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.