மூத்த எழுத்தாளராகக் கௌரவம் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களுக்கான பாராட்டுரைஇந்த மாலைப்பொழுது மிக இனியதாக இருக்கிறது. இப்பொழுது இம் மேடையில் நிற்பது அதை விட மகிழ்ச்சியாக இருக்கிறது. பாராட்டும் பெறும் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களை விட, பாராட்டப் புறப்பட்ட நான் களிப்பில் மிதந்து நிற்கிறேன். பாராட்டுகள் அவருக்கு ஒரு பொருட்டல்ல என்பது மட்டும் காரணமல்ல. ஈழத்தின் மிகச் சிறந்த ஒரு எழுத்தாளருக்கு பாராட்டுரை வழங்கக் கிடைத்த இந்த வாய்ப்பானது நோயாடும், சீழோடும்; பிணியோடும் நிதம் கலந்தலையும் எனக்கு, பூவோடு கூடிய நார்போன்று, இவர் அருகே நிற்பதே பெருமை வீச்சதை தருகிறது. இந்த வாய்ப்பைத் தந்த தகவம் அமைப்பினருக்கு நன்றி. எழுத்துலகில் அவர் சாதாரணர் அல்ல. பூனையையும் எலியையும் வழுக வழுகப் பிடித்துவிட்டு இமயமலை உச்சியில் ஏறிநின்று, மார்தட்டி, கைஉயர்த்தி இருவிரல் சுட்டி, அது தன் வெற்றியெனத் தாமே பறைசாற்றுபவர்கள் இடையே இவர் வித்தியாசமானவர். அத்தகையோர் பலர் எழுத்துலகில் இருக்கிறார்கள். காலத்திற்கும் தருணத்திற்கு ஏற்ப குயளவ குழழன போலக் கதைகட்டிச் சுடச்சுடப் பரிமாறும் எழுத்தாளர்கள் அவர்கள். இவர் அவற்றில் சேர்த்தியல்ல. அனுபவங்களோடு கூடியவை இவரது படைப்புகள். இரை மீட்டி, மீள மீள அரைத்து, மனத்தில் செரிமானமான பின் எழுத்தில் வந்து யதார்த்தமாக வீழ்பவை.

தட்டி திருத்தாமல், கணனி கீ போட்டிலும் தட்டச்சு யந்திரத்திலும் ஸ்டெனோ போல நேரடியாக எழுதும் விண்ணர் அல்ல இவர். நுணக்கி நுணக்கி எழுதி, அதை வெட்டிக் கொத்தி, திருத்தி அதுவும் திருப்திப் படாதபோது கிழித்து எறிந்துவிட்டத் தயங்காதவர். மீண்டும் மனத்தில் ஊறப்போட்டு நுண்ணிய வேலைப்பாடுகளுடன் செதுக்கி எழுதுபவர். ஆனால் நாம் அதைப் படிக்கும்போது அந்தப் பிரயாசை தூக்கி நிற்காது. மிக இயல்பானதாக மனதோடு இசைந்து வரும். தனது மேதைமையைக் காட்டுவதற்காக புரியாத சொற்களையும், சொல் அடுக்குகளையும் உவமானங்களையும் அரிவியெனப் பொழிவது இவரது பாணியல்ல.
 
கிழக்கு மண்ணில் மக்கள் நாளாந்தம் பேசும் மொழி இது. இசைத் தமிழோ எனக் கிறங்க வைக்கும் தொனியின் ஏற்றத் தாழ்வுகள். அவை எம்மைக் கிறங்க வைக்கும்.

'அடிபட்டிட்டு அடிபட்டிட்டு அண்ணாவியார்ரெ தலையிலெ அடிபட்டிட்டு'
'நீ மட்டும்தாண்டா மனெ அதெக் கண்டாய். இண்டெய்க்கிம் அந்தெச் சத்தம் என்ட காதிலெ இரையிதிடா மனெ' பதத்திற்கு ஒன்று சொன்னேன். இவரது அழியாப் புகழ்பெற்ற 'மக்கத்துச் சால்வை' படைப்பில் வருகின்ற ஒரு மிக முக்கிய வசனம். அந்தக் கதையின் இருதயம்போல முக்கியமான வார்த்தை.
 
ஆம்! அவருடைய படைப்பு மொழி மிகவும் வித்தியாசமானது. தான் வாழும் மக்களின் வாழ்வை, வித்துவம் காட்டாத் தெரியாத அந்தச் சனத்தின் நாளாந்தப் பாடுகளை அவர்களது அப்பாவித்தனத்தை, அவர்கள் நித்தம் கதைக்கின்ற பேச்சுகளை கலை அழகோடு எழுத்தில் கொண்டு வருகிறார். அவருடைய படைப்புமொழி பற்றி சிலாகிக்காத நல்ல எழுத்தாளர்களே இருக்க முடியாது. அற்புதமான மொழியாற்றல் கொண்ட எழுத்தாளரான எஸ்.பொன்னுத்துரை அவர்கள் இவரது எழுத்தைப் பற்றிச் சொல்வதைக் கேளுங்கள்.

'ஓட்டமாவடிச் சூழலிலே நடமாடும் மகா சாமாண்ய மனிதர்களிலே அவர்கள் பயிலும் தமிழிலே, மனிதத்துவத்தின் சத்தியம்-தர்மம் என்ற இரு முகங்களையும் தரிசிக்க நடாத்தும் ஓர் இலக்கியத் தேடலாக இத்தொகுதியிலுள்ள பல கதைகள் அமைந்துள்ளன' இவ்வாறு மக்கத்துச்சால்வை சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் எஸ்.பொ சொல்கிறார்.

ஆம் இவரது தமிழ் உண்மையானது. 'விளக்குமாற்றுக்கு குஞ்சரம் கட்டும்' எமது தமிழ் போல போலி அலங்காரங்கள் கிடையாது. நாங்கள் நேரடியாக மற்றவர்களுடன் ஒரு வித தமிழில் கதைப்போம், மேடையில் மற்றொரு தொனியில் முழங்குவோம். எழுத்தில் மற்றவருக்குத் தெளிவில்லாத மற்றொரு தமிழில் எழுதுவோம். ஆனால் இவருக்கு தெரிந்தது ஒரே ஒரு தமிழ். அது அழகானது இனியது. கவிதை போன்றது. இசைபோல ராகம் இழுக்கக் கூடியது. அது கிழக்கு இலங்கையின் பேசு தமிழ்.
 
இவர் ஒரு நல்ல எழுத்தாளர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு மேலாக அவர் ஒரு நல்ல கதை சொல்லியும் கூட. படைப்பிலக்கிய கதை சொல்லியைச் சொல்லவில்லை. நிஜவாழ்விலும் கூட இவர் சுவார்ஸமாகக் கதைசொல்பவர். இவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பதே சுகமான அனுபவம். இவரை நான் முதல் முதலில் நேரில் சந்தித்தது 2001ம் ஆண்டில். சுமார் 11 வருடங்களாகிவிட்டது. மகள் மாஜிதாவுடன் வந்திருந்தாரா அல்லது தனக்காக வந்திருந்தாரா என்பது ஞாபகம் இல்லை. 
 
அது வரை அவரது கதைகளின் ரசிகனாக இருந்த நான் அதன் பின் கதை கதையாகப் பொழிந்து கொண்டிருக்கும் அவரது பேச்சின் ரசிகனாகிவிட்டேன். சரியாக 3 வாரங்களுக்கு முன் தேவமுகுந்தனின் நூல் வெளியீட்டு விழாவில், நீண்ட நாட்களின் பின் அவரோடு பேசக் கிடைத்தமை இனிய அனுபவமாக இருந்தது. தனது சுற்றுச் சுழலில் நடந்த சில மனதை உறுத்தும் சம்பவங்கள் பற்றிக் கதை சொல்லிக் கொண்டிருந்தார்.

இவரது எழுத்தில் மட்டுமல்ல வாழ்விலும் சத்தியமும் நேர்மையும் தொக்கி நிற்கினறன என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. படைப்புகளில் இவரது பாத்திரங்கள் மென்மையானவர்கள் மெய்யானவர்கள். பொதுவாக கிராமியத்தின் உயிர்ப்பையும் எளிமையையும் வனப்பையும் இவரது படைப்புகளில் நிறையவே காணலாம்.

'ஒரு படைப்பு அது முளைத்த பண்பாட்டின் பிரதிநிதி. அது அளிக்கும் தகவல்களுக்கு முடிவே இல்லை என்பதற்கான உதாரணம்' என  மக்கத்துச் சால்வை பற்றி ஜெயமோகன்; சொல்லியதை இங்கு சுட்டிக் காட்டுவது பொருத்தமாகும்.
 
இவரது பாத்திரங்கள் மென்மையானவர்கள், மெய்யானவர்கள். இட்டுக் கட்டிய பாத்திரங்கள் அல்ல. அன்றாட வாழ்க்கையைச் சித்தரிப்பவை. கிழக்கு மாகாணக் கிராமிய வாழ்வைப் பிரதிபலிப்பவை. அதில் இஸ்லாமிய சமூகத்தின் வாழ்வை உள் நின்று பார்ப்பவை. சுவாரசியமானமான சம்பவங்கள். சூழலோடு இசைவுறும் உவமானங்கள். எளிமையான சித்தரிப்புகள் என வாசகனோடு நெருக்கமாக உறவாடும். அவரது பேச்சுப்போலவே அவரது படைப்புகளிலும் மெல்லிய எள்ளலும் எகத்தாளமும் நிரம்பியிருக்கும். ஒருவித அங்கத்தச் சுவை கொண்டவையாக இருக்கும். பல படைப்புகளில் உளவியல் பாங்கிருப்பதையும் காணலாம். இதற்குக் காரணம் அவரது கூரிய அவதானிப்பு. வெறுமனே சம்பவங்களை பார்த்துக்கொண்டிருக்காது அதற்கான காரணங்களை மனிதர்களின் மனங்களில் அவர் தேடுவதேயாகும்.

'சிறுகதை எனும் இலக்கிய வகையின் ஆத்ம உயிர்ப்பான 'மானுட நிலையினை' வெளிக் கொணர்வதற்கு ஹனீபா ஒன்றுக்கொன்று வேறுபட்ட சமூகப் பின்புலங்களையும் பாத்திர ஊடாட்டங்களையும் கையாள்கிறார்' எனப் பேராசிரியர்.கா.சிவத்தம்பி 'அவளும் ஒரு பாற்கடல்' என்று இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுதிக்கான முன்னுரையில் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

பெரும்பாலான இவரது பெண் பாத்திரங்கள் நினைவில் நிற்பவை. தமிழ் முஸ்லிம் சமூகங்களில் பெண்களின் சுதந்திரமும், வாயும் பெருமளவு அடக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறார்கள். இருப்பினும் இவரது பெண் பாத்திரங்கள் நிமிர்ந்து நிற்கிறார்கள். போலியாக சமைக்கப்பட்ட பெண்பாத்திரங்கள் அல்ல. தமது களத்திற்கு ஏற்ப துணிவோடு செயற்படுபவர்களாக இருப்பது குறிப்படத்தக்கது. ஆனால் வாயால் பெண்ணியம் பேசுபவையைல்ல.

நேரடியாகப் போதிப்பது சிறுகதை எழுத்தாளனின் கடமை அல்ல என்பதில் நம்பிக்கை கொண்டவர். ஆனால் படைப்பின் அடிநாதமாக சத்தியமும் நேர்மையும் பொதிந்து கிடக்கும்.
 
இவருக்கு இத்தகைய இலக்கியத் தாகமும் மொழி அழகும் எவ்வாறு வாலாயமாயின? எவை இவரது படைப்புகளைப் பண்படுத்தின? என் மனதிற்கு ஐந்து விடயங்கள் மனதில் பட்டன.

1.    இளவயது குடும்பச் சூழல் வாய்மொழி இலக்கியத்தின் சுவடுகள் இன்னமும் இவரிடம்
2.    இலக்கிய தொடர்புகள்
3.    பரந்த ஈடுபாடுகள்
4.    வாசிப்பு
5.    கடுமையான உழைப்பு

இவரது இளவயது ரம்யமானது. ஆறும் வயலும் காடுகளும் நிறைந்த கிராமிய வாழ்வு. பரந்த காணிகள். அதற்குள் சிறிய வீடுகள். வளவெங்கும் கமுகு. பலா. தென்னை எனச் சோலையாக மரங்கள். சுதந்திரமாகத் திரியும் மாடுகள், கோழிகள் நாய்கள். சகமனிதரோடு பிழங்குவதுபோல அவற்றோடு உறவாடும் வெள்ளை மனசுகள். புடிப்பறிவு குறைந்த சூழலில் படிக்கத் தெரிந்தவர்கள் மற்றவர்கள் கேட்பதற்காக வாய்விட்டு படிப்பது. நாட்டார் மொழிகள். சிலம்படி, கூத்து விளையாட்டுப் போட்கள் என அனுபவங்களை ஊட்டிய சிறிய பிராயம் இவருக்கு நிறையவே கற்றுத் தந்திருக்கிறது.
சிறுவயதிலேயே நல்ல எழுத்தாளர்களுடைய தொடர்பு கிடைத்தது இவருக்குக் கிடைத்த பாக்கியம். தானாகக் கிடைப்பதுதான் பாக்கியம். ஆனால் இவர் அவற்றைத் தேடிச் சென்றுள்ளார். எஸ்.பொ, பித்தன் மற்றும் 'மட்டக்களப்பு மானியம்' புகழ் எவ்.எஸ்.சி.நடராசன் இவர்களுடனான தொடர்பும், கலந்துரையாடல்களும் இவருக்கு மிகச் சிறுவயதிலேயே தொடர்பும் நெருக்கமும் இருந்திருக்கிறது.
பல்துறை சார்ந்த ஈடுபாடுகள் இவருக்கு நிறைய அனுபவங்களைத் தந்துள்ளது. வெறுமனே புத்தகங்களோடு அலையும் புத்தகப் பூச்சியல்ல. எழுத்திற்கு அப்பால், விளையாட்டு, விவசாயம், கால்நடை வளர்ப்பு, மேடைப்பேச்சு, அரசியல் என்று எல்லாவற்றிலும் கால்வைத்துக் கைகண்டவர். இணையத்தில் இவரது பேரைப் போட்டுத் தேடிப் பார்த்தால் வாலைக்குலையைத் தூக்கிக் கொண்டு நிற்கிற ஒரு விவசாயி வருவார். அவர் வேறுயாருமல்ல நம்ம ஹனீபாதான். இரண்டு நாட்களுக்கு முன்னர் குயஉந டிழழம ல் தகவம் பரிசளிப்பு விழாவில் இவருக்கு கௌரவம் அளிக்படுவது பற்றி எழுதியிருந்தபோது மற்றொரு எழுத்தாளரான வதிரி.சி.இரவீந்திரன் இவரது கரப்பந்தாட்டம் பற்றிக் குறிப்பட்டிருந்தார். ' எழுத்து மட்டுமல்ல. இவரது கரத்தில் கரபந்தும் சுழன்றாடும். அது வாழைச்சேனை காலம்.'  என எழுதியிருந்தார். ஒவ்வொரு படைப்பும் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக கடும் சிரமம் எடுப்பராக இருக்கிறார். இதனால்தான் 50 வருடகாலமாக படைப்புலகில் இருந்தபோதும் 50 சிறுகதைகளையே தர முடிந்திருக்கிறது.

நிறைய வாசிப்பவர். நல்ல வாசகர். பெயர் பெற்ற எழுத்தாளர்களை மட்டுமின்றி வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் படைப்புகளையும் நிறையவே வாசிப்பவர். அண்மையில் இவருடன் பேசிக் கொண்டிருக்கும் 'இப்பொழுதெல்லாம் யார் நன்றாகவும் புதிதாகவும் எழுதுகிறார்கள்' எனக் கேட்டேன். பக்கெனப் பத்துப் போர் கொண்ட பட்டியலை அள்ளிப் போட்டார். அவ்வளவு வாசிப்பு அவ்வளவு ரசனை, அவ்வளவு நினைவாற்றல். விரல் நுனியில் தான் ரசித்தவற்றை வைத்திருக்கிறார். உள்ளார்ந்த ஈடுபாட்டோடு வாசிப்பவரால்தான் அவ்வாறு நினைவில் வைத்திருக்க முடியும்.

வாசிப்பைப் பற்றி இவ்வாறு தானே சொல்கிறார். அண்மையில் ஒரு பாடசாலை விழாவில் கலந்து கொண்டிருந்தபோது பேசிய உரையிலிருந்து "..புத்தகங்களை கண்டடைவது. வாசிப்பது. அவற்றின் வழியே விவாதிப்பதென்பது இன்றை அறிவார்ந்த தளத்தில் மிக்க முக்கிய செயற்பாடாக வேண்டிநிற்கின்றது. வாசிப்பு, வாசிப்பின் வழியே உருவாகின்ற சிந்தனை, நல்ல எண்ணங்கள் அனைத்தும் நம்மை கும்பல்களால் வடிவமைக்கப்பட்டுள்ள நமது சமூகத்தின் பொதுப்புத்தியிலிருந்து நம்மை விலக்கி வேறு செயல்வாதத்தை செய்யத் தூண்டுகின்றது. அத் தூண்டுதல்களின் விளைவால் உருவானவர்களின் வரலாறுதான் நம் கண் முன்னே பல நூறு நூல்களாக விரிந்து கிடக்கின்றது..."
 
ஆம் வாசிப்பு மனிதனை மனிதனாக்குகிறது. உள்ளத்தைப் பண்படுத்துகிறது. நல்ல படைப்பாளியாக உருவாவதற்கும் அடிப்படை வாசிப்புத்தான். இவரது உயிரே வாசிப்புத்தான். அதன் பின்தான் எழுத்துக்கு வருகிறார். 60 களில் தானே ஓரிடத்தில் சொல்வதுபோலக் கிறுக்கத் தொடங்கினாலும் 70களின் பின்னரே அவரது எழுத்தானது கவனிப்பிற்குள்ளாத் தொடங்கியது.
 
பிறந்தது மீராவோடையில். ஓட்டமாவடியில் வாழ்கிறார். இரண்டு வருடங்களால் இவர் எனக்கு நானா! வயதால் இரண்டு வருடங்கள் மட்டுமே அண்ணன். ஆனால் எழுத்துலகில், அனுபவங்களின் முதிர்ச்சியில், உள்ளார்ந்த அன்பு வாய்ந்த நட்பில் இவரது காலடியில் ஊரும் சிற்றெறும்பிற்குத்தான் என்னை உவமை கூற முடியும்.
 
1946ல் பிறந்திருக்கிறார். ஆனால் இளைஞனுக்குரிய உற்சாகம் ஒவ்வொரு கணமும் இவரிடமிருந்து ஊற்றெடுத்துக் கொண்டேயிருக்கும் அதனால்தான் இவரைப் பற்றி இவ்வாறு ஓரிடத்தில் சொல்லப்படுகிறது.
 
'அவரைப் போன்ற உயிராற்றல் ஒவ்வொரு கணமும் பீரிடும் ஒரு மனிதரைப் பார்த்ததில்லை. இருபது வயது இளைஞர்களுக்குரிய உற்சாகமும் அலைபாய்தலும் துருதுருப்பும் கொண்டவர்.' சொன்னவர் இவருக்கு மிகவும் பிடித்தமான எழுத்தளர்களில் ஒருவரான ஜெயமோகன்.
 
அங்கீகாரத்தையும் பாராட்டுகளையும், பொன்னாடைகளையும் தேடி ஓடுபவர் அல்ல ஹனீபா. தகவம் உங்களை கௌரவிக்க விரும்புகிறது. வருடாவருடம் மூத்த எழுத்தாளர்களைக் கௌரவிப்பது அதன் வழமை. இம்முறை உங்களைக் கௌரவிக்க விரும்புகிறார்கள் என்று சொன்னவுடன் சற்று யோசித்தார். நான் விழாவிற்கு வரத்தான் வேண்டுமா எனக் கேட்டார். நீண்ட நேரம் பேசிய பின்தான் முழுமையாக ஏற்றுக் கொண்டார்.
 
புகழையும் பாராட்டையும் அவராகத் தேடாதபோதும் பல அவரைத் தேடிவந்துள்ளன.

முக்கியமானது கோவை லில்லி தேவசிகாமணி விருதாகும். 'மக்கத்துச் சால்வை' சிறுகதைத் தொகுப்பு நூலுக்காக 1992ல் வழங்கப்பட்டது.
இலங்கை அரசின் தேசிய சாகித்திய மண்டல விருது அதே 'மக்கத்துச் சால்வை' சிறுகதைத் தொகுப்பு நூலுக்காக 1993ல் வழங்கப்பட்டது.
மிகப் பெரிய அங்கீகாரம் இலங்கை அரசின் னல்வித் திணைக்கள 11ம் வகுப்பிறான தமிழ் நூலில் இரு தசாப்தங்களாக இடம் பெற்றிருக்கிறது
 
தனிப்பட்ட வாழ்க்கையில் பார்க்கும்போது அவரது படைப்புகள் போலவே உள்ளழகும் சத்தியமும் நேர்மையும் கொண்டவர். இனிய மனைவி. மூன்று குழந்தைகளின் அப்பா. அவர்களில் மாஜிதா ஒரு சட்டத்தரணி. எனக்கு மிகவும் அறிமுகமானவர். இப்பொழுது வெளிநாட்டில என நினைக்கிறேன்.
 
தனது குடும்பத்தில் எப்படி நல்ல அப்பாவாக இருக்கிறாரோ அதே போல அவரைச் சூழ உள்ள இலக்கிய குடும்பத்திலும் நல்ல அப்பாகிறார். பல இளம் படைப்பாளிகளை அப்பா போல வழி காட்டியிருக்கிறார். கிழக்கிலிருந்து பல சிறந்த சிறுகதையாசிரியர்களும் கவிஞர்களும் உருவாகியிருக்கிறார்கள் என்றால் அதில் இவரது பங்களிப்பும் நிறையவே இருக்கிறது. இளம் எழுத்தாளர்களுடன் மட்டுமின்றி 10-12 வயதுப் பொடியன்களையும் மதித்து பேசக் கூடியளவு பரந்த மனதுள்ளலவர்.
 
இதன் காரணமாக தனது சமூகத்தில் ரெம்பவே மதிக்கப்படுகிறார். தனது சமூகத்தில் பல சபைகளிலும் தலைமைத்துவம் தாங்குகிறார். மதிக்கப்படும் வழிகாட்டியாக இருக்கிறார்.
 
மற்றொரு மிக முக்கிய விடயமானது ஆயுத காலாசராம் அச்சுறுத்திய காலங்களிலும் உறுதியோடு நின்று பிடித்தவர். பலர் எழுதாமலிருந்தார்கள். பலர் எழுத்திற்கு விடைகொடுத்து அநாமதேயங்களானார்கள். இன்னும் சிலர் மனச்சாட்சியை விற்று சரணாகதியடைந்தார்கள். ஆனால் இவர் தன்னளவில் உறுதியோடு இருந்தார் அதிலும் முக்கியமாக தமிழ் முஸ்லிம் உறவு கலையாது காப்பதில் மிக முக்கிய பணியாற்றியிருக்றார்.
 
இறுதியாகச் சொல்வதானால் தனது எழுத்துகள் மூலம் மட்டுமின்றி குடும்ப வாழ்விலும் சமூகத் தளத்திலும் மிகச் சிறப்பாக இயங்கிய, இன்மும் இயங்கிக் கொண்டிருக்கும் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களுக்கு இன்று கௌரவம் வழங்கப்படவது மிகவும் பொருத்தமானது. அவருக்கு கௌரவம் வழங்குவதின் மூலம் தகவம் அமைப்பானது இலக்கியத்தின் மீதும் சிறுகதை இலக்கியத்தின் மீதும் கொண்டுள்ள பற்றுறுதி நிரூபணமாகிறது.
 
இன்று கௌரவம் பெறும் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சில தினங்களுக்கு முன்னர் எனது பேஸ்புக்கிலும் மறந்துபோகாத சில புளக்கிலும் அத் தகவலை தந்திருந்தேன். அதிலும் பலர் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கு உங்கள் முன் அவருக்குச் சமர்ப்பிக்கின்றேன்.
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.