
[ இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன ]
நம்பிக்கை தரும் விடயம்: உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி ஃபேர்ணண்டோவுக்கும் மரண தண்டனை!
இலங்கையின் வரலாற்றில் முக்கியமான தீர்ப்பு. நாட்டின் எதிர்காலத்தையிட்டு நம்பிக்கை அளிக்கக்கூடிய் தீர்ப்பு! சட்டம் எவ்விதப் பாரபட்சமும் இல்லாமல் தன் கடமையை உரிய முறையில் செய்திருக்கின்றது என்பதை வெளிப்படுத்தும் தீர்ப்பு! நாட்டு மக்களுக்கு நாட்டின் சட்டத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் தீர்ப்பு. இவ்விதமாக நாட்டின் நீதிமன்றங்கள் செயற்படுவது இத்துடன் முடிந்து போகக்கூடாது. தொடர வேண்டும். நிரந்தரமாகத்தொடர வேண்டும். அப்படித்தொடர்ந்தால் மட்டுமே நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளும் படிப்படியாகத் தீர்வதற்கான சூழல் உருவாகும்.

[முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர]
பலவேறு புலனாய்வுத்துறைகளின் எச்சரிக்கைகள் இருந்தும் பூஜித ஜெயசுந்தர, ஹேம்சிறி ஃபெர்ணாண்டோ போன்றோர் உரிய நடவடிக்கைகள் எடுக்கத்தவறியதன் காரணமாகப் அப்பாவிகள் பலர் கொல்லப்பட்டார்கள். பல்லினத்தவரும் கொல்லப்பட்டார்கள். இந்நிலையில் இவர்கள் அசமந்தமாகச் செயற்பட்டற்குக் காரணமான , பின்னாலிருந்து இயங்கிய அரசியல்வாதிகள் மீதும் சட்டம் பாய வேண்டும். தன் கடமையைச் செய்ய வேண்டும். செய்யுமென்று எதிர்பார்ப்போம்.
இவ்விதம் தீர்ப்பு இன்று கிடைப்பதற்குக் காரணமானவர் நாட்டின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவே. ஏற்கனவே முடிந்த இந்த வழக்கில் பூஜித ஜயசுந்தர, ஹேமசிறி ஃபெர்னாண்டோ ஆகியோர் விடுவிக்கப்பட்ட நிலையில் , வழக்கை மீண்டும் நடத்த தீர்ப்பு வழங்கியவர் இவர். அதனால்தான் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதற்காக இவரை வரலாறு என்றும் நினைவில் வைத்திருக்கும்.
நாட்டின் சட்டம் இவ்விதம் தன் கடமையைச் செய்யும் நிலையை உருவாக்கியுள்ளதற்கு முக்கிய காரணம் இன்றுள்ள அநுர குமார தீசாநாயக்க தலைமையிலான அரசின் 'இலங்கையைச் சுத்தமாக்குவோம்' என்னும் கோட்பாடுதான். நாட்டின் அனைத்துத் துறைகளையும் சுத்தம் செய்தால் மட்டுமே , நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

[முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி ஃபேர்ணண்டோ]
இன்று இவ்விடயத்தில் தண்டிக்கப்பட்டுள்ளவர்கள் வெறும் பொம்மைகள்தாம். இப்பொம்மைகளை ஆட்டுவித்த பொம்மலாட்டுக்காரர்கள் மீதும் சட்டம் பாயுமா? அவர்கள் மீதும் சட்டம் தன் கடமையைச் செய்யுமா? இத்தீர்ப்பு அதற்கான கேள்விக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய பதிலான செய்யும் என்னும் உணர்வைத் தந்திருக்கின்றது.
இவ்வழக்கில் தாமிழைத்த குற்றங்களுக்காக ஏற்கனவே பூஜித ஜெயசுந்தர 75 இலட்சமும், ஹேம்சிறி ஃபெர்ணாண்டோ 75 இலட்சம் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்குக் கொடுத்திருக்கின்றார்கள். முன்னாள் ஜனாதிபதி பத்து கோடி கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கவனத்தில் கொள்ளத்தக்கது.
[* சட்டம் இவ்விதம் செயற்படுவதைச் சமூக ஊடகவியலாளர்கள் கவனத்திலெடுக்க வேண்டும். பணம் சம்பாதிப்பதற்காக எவ்விதமும் செய்திகளைத் திரித்துப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். அவ்விதம் செயற்படுகையில் சட்டம் அவர்கள் மீது பாய்கையில் மக்கள் எவரும் அவர்களுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை. ஏனென்றால் இது போன்ற தீர்ப்புகளால் நாட்டுச் சட்டம் சரியாக இயங்குகின்றது என்னும் நிலைப்பாட்டை மக்கள் அடைந்திருப்பார்கள்.}
இவ்விடயம் பற்றிய சிறப்பான காணொளியொன்றை வெளியிட்டுள்ளது Hisham's Insights சானல். அதற்கான இணைப்பு









