- தேவகி கருணாகரனின் 'பிரியாவும் ஜேம்சும்' என்னும் இச்சிறுகதை மாறிவரும் உலகின் மாற்றத்தின் விளைவொன்றைப்பற்றிப் பேசுகிறது. அம்மாற்றம் என்ன என்பது பற்றி அறிய இச்சிறுகதையை முழுமையாக வாசியுங்கள். இக்கதையின் கூறு பொருளும், எழுத்து நடையும், பாத்திரப்படைப்பும் இதனை நல்லதொரு முக்கியமான சிறுகதையாக இதனை மாற்றியுள்ளன. இச்சிறுகதையில் வரும் குழந்தை  கீர்த்தி நெஞ்சைத்தொடுகின்றாள். முடிவில் அவளில்  ஏற்படும் மாற்றம் முக்கியமானது. அவ்வகையில் அவளொரு குறியீடு. மாறாத உணர்வுகள், கருதுகோள்களுடன் மாறுவதற்குச் சிரமப்படும் சமுதாயமொன்றைப் பிரதிநிதிப்படுத்தும் குறியீடு அவள். - பதிவுகள்.காம் -


அவுஸ்திரேலியாவின் நியுவ் சவுத் வேல்ஸ் மாநிலத்தின் கிராவின் புறநகரின் ’புனித அந்தோனியார்’ ஆரம்பப்பள்ளிக்குள் நுழைந்த பிரியா, தன் மகள் கீர்த்தியின் முதலாம் வகுப்பை அடைந்ததும்,  “வாடா குஞ்சு, வீட்டைப் போகலாம்,” எனக் கீர்த்தியை அன்போடு தூக்கிக் கொஞ்சிய பிரியாவை உற்று நோக்கி புதிதாக பார்ப்பது போல் பார்த்தாள் கீர்த்தி. திரும்பி நன்சிக்கு பக்கத்தில் நின்ற அவளது தாயாரையும் பார்த்தாள். ”இன்றைக்கு என்ன செய்தீங்கள்? கைவேலை செய்தீங்களா?”  எனக் கேட்டபடி நன்சியைத் தூக்கிக் கொண்டுபோன அவளது தாயையும். பிரியாவையும், மாறி மாறிப் பார்த்தாள். அவளது சின்ன மூளைக்கு எதுவுமே புரியாது குழம்பியது. அந்தச் சின்ன மூளைக்கு எதோ புரிகிற மாதிரி இருந்தது ஆனால் புரியாத மாதிரியும் இருந்தது.

    வீட்டுக்கு வந்ததும் குளிக்கும் தொட்டியில் பதமான சூட்டுக்கு வெந்நீரை, நிரப்பி கீர்த்தியைக் குளிப்பாட்டி, அவளுக்குப் பிடித்த `பணானாஸ் இன் பிஜாமாஸ்` பிரிண்ட் போட்ட, பிஜாமாவைப் போட்டு விட்டு,  ”எங்கள் கீர்த்தி இளவரசி நல்ல வாசனையாக இருக்கிறாள்,” எனக் கீர்த்தியை முகர்ந்தபடி சொன்ன பிரியாவை., கீர்த்தி கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாள். பிரியா கிச்சனுக்கு போகவும், அறையிலிருந்த விளையாட்டுப் பொருட்களில் கீர்த்தியின் கவனம் லயித்துப் போக, முற்பள்ளியில் அவளது சின்ன மூளையில் எழுந்த சந்தேகம், கேள்வி எல்லாமே மறைந்து போய்விட்டது,

    ”கீர்த்திக் குட்டி, டினர் ரெடி!” எனப் பிரியா கிச்சனிலிருந்து அழைக்கவும், வாசற் கதவைத் திறந்து கொண்டு அவளது ஜேம்ஸ் டடி வரவும் சரியாகவிருந்தது. அவரைக் கண்டதும் கீர்த்தி ஓடிச்சென்று ஜேம்ஸ் மேல் தாவி அவர் கைகளுக்குள் தஞ்சமானாள். தந்தையைக் கொஞ்சியவளின் முகத்தில் ஒரே சந்தோசம். ஏனோ அவளுக்கு ஜேம்சோடு இருப்பதில் ஒரு தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும்.

    சிக்கின் துண்டுகளும், நிறைய கொலி ஃப்லவர், புரோக்களி மரக்கறிகளும் சேர்த்துப் பிரியா சமைத்துக் கொடுத்த பஸ்டா சிக்கின் பேக்கை கிச்சன் மேசையடியிலிருந்த உயர்ந்த கதிரையில் அமர்ந்து ருசித்து ருசித்துச் சாப்பிட்டாள் கீர்த்தி.

    ”யமி, பஸ்டா சிக்கின், எனக்கு பிடிச்ச கோலிஃப்லவர்,” என முள்ளு கரண்டியால் ஒவ்வொன்றையும் எடுத்துக் காட்டினாள் கீர்த்தி.  

”ஓம் அதற்குள்ளே நிறைய அன்பும் போட்டு செய்திருக்கிறேன்,” என்ற பிரியாவை கட்டி அணைத்து முத்தமிட்டாள், கீர்த்தி.

    இரவு உணவு உண்டபின் கீர்த்தி தன் அறையிருந்த பொம்மைகளோடு விளையாடப் போய்விட்டாள்.  ஜேம்சும் பிரியாவும் கிச்சனில் வேலைகளை முடித்தனர்.  கீர்த்தியின் படுக்கைக்குப் போகும் நேரம் வரவும் பிரியா கீர்த்தியின் அறைக்கு வந்து, ”கீர்த்தி உன்னுடைய பெட் டைம் வந்துவிட்டது வா,” எனக் கீர்த்தியைத் தூக்கிக் கொண்டு போய் பாத்ரூமில் பல் துலக்கிவிட்டுத் திரும்ப அறையில் படுக்கையில் கீர்த்தியை வளர்த்தி விட்டு சைட் டேபில் மேலிருந்த `கம் பாக் அல்பி` come back Alfie  என்ற புத்தகத்தை எடுத்து,

”நேற்று கதையிலே எந்த இடத்திலே விட்ட நாங்கள் குஞ்சு, சொல்லு பார்ப்போம்?” எனப் பிரியா கீர்த்தியின் தலையை கோதியபடி கேட்க,

”நீ வேண்டாம். ஜேம்ஸ் அப்பா தான், எனக்குக் கதை வாசிக்க வேணும்,” என்றாள் கீர்த்தி கீழ் உதட்டை பிதுக்கியபடி.

”சரி செல்லம், ஜேம்சைக் கூப்பிடுறேன்,” என்று சொல்லிவிட்டு, ஜேம்ஸ்! ஜேம்ஸ்! என உரத்த குரலில் அழைக்கவும். ஜேம்சே அறைக்கு வந்து விட்டான். “நீ தான் கதை வாசிக்க வேணுமாம்,” எனச் சொல்லிவிட்டு, கிச்சனுக்கு போன பிரியா தங்கள் இருவரது இரவு சாப்பாட்டைத் தயார் பண்ணியபடி, ’நாங்கள் எடுத்த முடிவு சரியோ? கீர்த்திக்கு உண்மை தெரிய வரும் போது எப்படி எடுத்துக்கொள்வாளோ? சமீபத்திலே என்னோடு ஒட்டத் தயங்குகிறாளே,’ என்ற பயமும் வேறு மனதில் எழுந்தது.

கதையை வாசித்துவிட்டு ”குட் நைட் மை பெற்,” எனக் கீர்த்தியின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு அறை மின் விளக்கை அணைத்தான் ஜேம்ஸ்.

கிச்சனுக்கு வந்த ஜேம்ஸ். பிரியாவை அணைத்து உதட்டில் முத்தமிட்டவன் வைன் போத்தலைத் திறந்து இரண்டு வைன் கிளாசில் ஊற்றவும், பிரியா இரவு உணவை மேசைக்கு எடுத்து வைக்கவும் சரியாகவிருந்தது.

”இன்றைக்கு வேலை எப்படி ஏதாவது விசேசமா. நீ வழக்கம் போலில்லாமல் சோர்வாக இருக்கிறாய்?” என ஜேம்ஸ் பிரியாவிடம் கேட்டான்

“வேலை எப்பவும் போலே தான். உன் வேலை எப்படி?” என பிரியாவும் கேட்க இருவரும் அன்று தங்கள் வேலை இடத்தில் நடந்த விசயங்களைப் பற்றிக் கதைத்தனர். தனது மனதில் எழுந்த குழப்பத்தை ஜேம்சுக்குச் சொல்லுவோமா வேண்டாமா எனத் தடுமாறியது பிரியாவின் மனம். எனினும் அதைப் பற்றி பேசவில்லை.

கீர்த்திக்கு ஒரு வயதாகும் வரை முதலில் பிரியா ஆறு மாதமும் ஜேம்ஸ் ஆறு மாத காலமும் மகப்பேறு விடுப்பில் (லீவில்) இருந்தார்கள். இருவரும் மருத்துவர்கள். ஒரே மருத்துவமனையில் வேலை செய்ததால் அங்கே இருந்த குழந்தைகள் காப்பகத்தில் கீர்த்தியை விட்டு விட்டு வேலைக்குப் போவது மிகவும் வசதியாகவிருந்தது. கீர்த்திக்கு ஐந்து வயது ஆனதும் அவளைப் புனித அந்தோனியார் ஆரம்பப்பள்ளியில் சேர்த்திருந்தார்கள்.  பிரியா ஒரு மருத்துவ நிலயத்தில் பகுதி நேர பொது மருத்துவராக வேலை செய்ததால், கீர்த்தியைப் பள்ளிக்குக் கொண்டு போகவும் திரும்ப கூட்டிக் கொண்டு வரவும் கீர்த்தியின் தேவைகளைப் பார்த்துக் கொள்ளவும் வசதியாகவிருந்தது.

கீர்த்தி சந்தோசத்தோடும் ஆர்வத்தோடும் ஆரம்பப் பள்ளிக்குப் போய் வந்தாள். பள்ளியில் நடந்ததைப்பற்றி உற்சாகத்துடன் சொல்லுவாள். காரில் ஏறி வீடு வந்து சேரமட்டும் தன் புதிய சினேகிதர்களைப் பற்றி பிரியாவிடம் ஓயாமல் சொல்லுவாள். நாட்கள் வாரங்களாகி மாதங்களாகியது, இரண்டு வருடங்களும் உருண்டோன.

 ஆனால் சமீபத்தில் கீர்த்தி முன்னம் போல் இல்லாது சற்று அமைதியாகவே காரில் அமர்ந்திருந்தாள்.  பிரியாவிற்கு, கீர்த்தி தன்னை பார்க்கும் பார்வையில் பல கேள்விகள் இருப்பது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. ஒரு நாள் கீர்த்தி உறங்கியபின், ஜேம்சும் பிரியாவும் இரவு உணவும் உண்டபின் கையில் வைன் கிளாசுடன், நிதானமாக இருந்து இருவரும் கதைத்துக் கொண்டிருந்தனர். அப்போது பிரியா தன் மனதில் எழுந்த சந்தேகத்தை பற்றி ,சொல்லி  ”ஜேம்ஸ்! கீர்த்தி என்னை இடை இடையே ஒரு கேள்விக்குறியோடு பார்க்கிற மாதிரி இருக்கிறது. இந்த ஆரம்ப பள்ளிக்கு போகத் தொடங்கியபின் தான் இது எல்லாம்.”
”பிரியா! கீர்த்தி ஒரு குழந்தை. அவளுக்கு வித்தியாசம் காட்டத் தெரியாது. நீ தான் அவள் அப்படிப் பார்க்கிறாள் இப்படிப் பார்க்கிறாள் எனக் கண்டதையும் நினைத்து கவலைப் படுறாய்,” என ஜேம்ஸ் பிரியாவிற்கு ஆறுதல் சொன்னான்.

ஆயினும் பிரியாவின் மனக்குழப்பம் தீரவில்லை. நாளுக்கு நாள் கீர்த்தி, பிரியாவிடம் ஒட்ட விருப்பப்படாதது போன்ற உணர்வுதான் ஏற்பட்டது. ஆரம்பப் பள்ளியிலிருந்து அழைத்து வந்து குளிப்பாட்டி இரவு உணவு சமைத்துக் கொடுத்து, படுக்கைக்குப் போடுவது எல்லாமே பிரியாதான். ஆனால் சமீபத்தில் அதைக் கீர்த்தி விரும்பாது, ஜேம்ஸ் தான் தன்னை குளிப்பாட்ட வேணும் என அடம்பிடித்தாள். வீட்டில் இருக்கும் போது சதா ஜேம்சோடு ஒட்டிக் கொண்டிருந்தாள். இப்படியே ஒரு வருடம்  ஓடியது.   

அன்று ஜேம்சுக்கு நேரத்தோடு வேலை முடிந்ததால் அவனே  பள்ளிக்கூடம் முடிந்ததும் கீர்த்தியை காரில் ஏற்றிக் கொண்டு வீட்டை நோக்கு ஓட்டினான். பின்னால் குழந்தை இருக்கையில் அமர்ந்திருந்த கீர்த்தியிடம்,

”கீர்த்தி பிரின்சஸ்! இன்றைக்குப் பள்ளிக்கூடத்தில் என்ன எல்லாம் நடந்தது சொல்லு,” என காரின் நிழற் கண்ணாடியில் அவளை பார்த்தபடி   கேட்டான்.

”டடி! என்னுடைய ஃப்ரெண்ட் நன்சியை அவளுடைய அம்மா தான் கூட்டிக்கொண்டு போக வருவா. என்னை எப்போதும் பள்ளியில் கொண்டு போய் விடுவதும் பிறகு கூட்டிக் கொண்டு வருவதும் பிரியா தானே.

”ஓம் பிரின்சஸ்”

”இன்றைக்கு நீ வந்தது எனக்குச் சந்தோசமாக இருக்கு, ஒவ்வொரு நாளும் நீயே என்னைக் கூட்டிட்டுப் போக வந்தால் சந்தோசமாகவிருக்கும்,”  என்றாள் கீர்த்தி.

“ஏன் கீர்த்தி உன்னைக் குளிக்கவார்ப்பதும் உனக்கு சாப்பாடு தீத்துவதும், ஏன் உனக்குக் காய்ச்சல் வந்து படுக்கையில் இருக்கும் போது நித்திரை முழிச்சு பார்த்துக் கொள்ளுவதும் பிரியா தனே,” என்றான் ஜேம்ஸ் ரோட்டைப் பார்த்து காரை ஓட்டியபடி.

“அப்பா, எனக்கு அம்மா இல்லையா? நன்சியிண்ட அம்மா மாதிரி எனக்கு ஒரு அம்…..மா………. இல்லையா?  அப்ப எனக்கு இரண்டு அப்பாவா?” எனக் கேட்ட கீர்த்தியின் குரலில் ஏக்கம் தொனித்தது.
திடீரென கீர்த்தி இப்படிக் கேட்டதும் இதை எதிர்பாராத ஜேம்ஸ் திகைப்பில் நடு றோட்டில் பிரேக்கைப் போட்டு கிரீச்சென்ற சத்தத்தோடு காரை நிறுத்திவிட்டான்.  நல்லவேளை பின்னால் எந்த வாகனமும் வராததால் விபத்து ஏதும் ஆகாது தப்பிவிட்டான். உடனே ஜேம்ஸ் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, இறங்கிப்போய் கீர்த்தியை அணைத்து, கலங்கியிருந்த அவள் கண்களைத் துடைத்துவிட்டான்.
”கீர்த்தி டார்லிங் நீ வளர்ந்து விட்டாய். உனக்கு ஏழு வயதாகிவிட்டது. நீ பெரிய பிள்ளை. கேள்வி எல்லாம் கேட்கிறாய். வெரி குட்! கெட்டிக்காரி. வீட்டுக்குப் போனதும் உனக்கு எல்லாத்தையும் பிரியாவும் நானும் விளக்கிச் சொல்லுறோம்” என்றான்.

முகத்தில் குழப்பத்தோடு, குழந்தை கீர்த்தி, தலையை மட்டும் ஆட்டினாள்.

வீடு போய்ச் சேர்ந்ததும், ஜேம்ஸ், தானே கீர்த்தியைக் குளிக்க வார்த்துவிட்டான். பிரியா சமைத்துக் கொடுத்த மீன் கறியையும் சோற்றையும் கீர்த்தி விரும்பிச் சாப்பிட்டாள்.

 பின்பு ஜேம்ஸ் ஒரு சோபாவில் அமர்ந்து, கீர்த்தியை தன் மடியில் இருத்திக்கொண்டு பக்கத்தில் பிரியாவும் நெருக்கமாக அமர்ந்திருக்க,

”கீர்த்தி செல்லம்!, நீ இண்டைக்கு காரிலே எனக்கு அம்மா இல்லையா எனக் கேட்டாய் தானே. அதைப் பற்றி இப்போது கதைப்போமா? கேட்டான் ஜேம்ஸ்.

இருவரின் முகங்களைப் பார்த்துவிட்டு ”சரி,” எனப் பதிலளித்தாள் கீர்த்தி.  

”செல்லம்! இந்த உலகத்தில் எல்லோரும் வளர்ந்து பெரியவர்களானதும் ஒரு துணையைத் தேடுவார்கள். அதிகமான ஆண்கள் பெண்களை விரும்பி கலியாணம் கட்டுவார்கள். ஆனால் சில ஆண்கள் ஆண்களை விரும்பி அவர்களைக் கல்யாணம் கட்டுவார்கள்.  அதேப் போல் சில பெண்கள் பெண்களை விரும்பி கல்யாணம் கட்டுவார்கள்.

கீர்த்தி குஞ்சு, நானும் பிரியதர்சனும் பள்ளிக்கூடத்தில் ஒரே வகுப்பில் படிக்கும் போது ஃப்ரெண்ட்சானோம். பிறகு யூனிவசிட்டியிலும் ஒன்றாய் தான் படித்தோம். அங்கு தான் ஒருத்தரை ஒருத்தர் விரும்பி காதலிக்கத் தொடங்கினோம். பின்பு நாங்கள் இருவரும், கல்யாணமும் கட்டிக் கொண்டோம். உனக்கு அம்மா இல்லை. ஆனால் உன்னை மிகவும் நேசிக்கிற உன்னை லவ் பண்ணுகிற அப்பாக்கள் பிரியாவும் நானும் இருக்கிறோம்.” என்றான் ஜேம்ஸ்.

”புரிகிறதா குஞ்சு  நாங்கள் தான் உன் பெற்றோர்கள். நீ எங்கள் பிள்ளை. உன்னை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம்.” என்று பிரியாவும் சொன்னான்.

 ”எங்களுக்கென்று ஒரு குழந்தை வேணுமென்று ஆசைப்பட்டோம். ஆனால் ஆண்களான நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு குழந்தையை உருவாக்க முடியாது. எங்கள் வயிற்றில் பிள்ளை வளர முடியாது. ஒரு பெண்ணிண்ட வயித்திலே தான் குழந்தை வளர முடியும்,” என்றான் ஜேம்ஸ்.    

”ஆ அப்போ நான் எப்படி பிறந்தேன்?”

”அதற்கு சில நடைமுறைகள் இருக்கிறது. இதைப் பற்றி இன்னுமொரு நாள் கதைப்போம் செல்லம். இப்ப உண்ட படுக்கிற நேரம் வந்திட்டுது”. என்று கீர்த்தியை அவள் படுக்கைக்குத் தூக்கிக் கொண்டு போனான் பிரியா.

ஒரு கிழமைக்குப் பின் மூவரும், ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியம் வீட்டின் பின் விறாந்தையில் அமர்ந்திருந்தார்கள். பிரியா கீர்த்தியை தன் மடியில் இருத்தி, அவளது தலையைக் கோதியபடி,  ”எங்களுடைய கீர்த்தி பிரின்சஸ் எப்படி எங்களுக்குக் கிடைத்தாள் என்பதைப் பற்றிக் கேட்க விருப்பமா? எனக் கேட்டான்.

”ஓம் ஓம்” என ஆவலோடு ஜேம்சினதும் பிரியாவினதும் முகத்தை ஆவலோடு பார்த்தாள் கீர்த்தி.  

”கீர்த்தி குஞ்சு நான் கேக் செய்வதை பார்த்திருக்கிறாய் தானே. ஏன் நீ கூட எனக்கு உதவி செய்திருக்கிறாய் இல்லையா?” எனக் கீர்த்தியின் நாடியை கையால் நிமிர்த்தியபடி கேட்டான் பிரியா.
”ஓம் ஒரு அழகான டெடி பெயார் கேக் செய்தோமே,” என்றாள் கீர்த்தி

”அப்படி கேக் செய்வதற்கு பட்டர், மா சீனி முட்டை எல்லாத்தையும்  சேர்த்து ஒவனில் வைப்போமே. ஒரு மணித்தியாலத்தில் வெந்ததும் தானே வெளியே எடுப்போம்?”

”ஓ…..ம்” என பதிலளித்தாள் கீர்த்தி

”அதைப் போல ஒரு குழந்தை உருவாக்க ஒரு பெண்ணின் முட்டையும், ஒரு ஆணின் விந்துவும், தேவை.  ஆண்களாகிய எங்களுக்கு பிள்ளை உண்டாக்கிற முட்டையும், வயிற்றில் கர்ப்பப்பையும் இல்லாததால் எங்களால் உன்னை உருவாக்கிச் சுமக்கவும் முடியவில்லை.  ஆகையால் நன்கொடையாக முட்டை வங்கியிலிருந்து ஒரு முட்டையும், ஜேம்சின் விந்துவையும் சேர்த்து டொக்டர்கள் ஒரு வாடகைத்தாயின் வயிற்றில் வைத்தார்கள். அந்த வாடகைத்தாயின் வயிற்றில் நீ பெரிசாக வளர்ந்து வர,…… டெடி பெயார் கேக் பேக் பண்ணின மாதிரி ஒரு மணித்தியாலம் இல்லை ஒன்பது மாதம் பொறுமையாகக் காத்திருந்தோம்.  எங்கள் பிரின்சஸ் நீ வெளியே வந்ததும் நாங்கள் இருவரும் மிகவும் மிகவும் சந்தோசப்பட்டோம். உன் அழகைப் பார்த்து சொக்கிப்போனோம். நாங்கள் உன்னைக் கட்டி அணைத்து…….” என்றான் பிரியா.

”இதைப்போலே தான்!” எனச் சொன்ன ஜேம்சும் பிரியாவும் கீர்த்தியைக் கட்டி அணைத்து முத்தம் கொடுக்க முற்பட்டனர்.

”ஸ்டொப்!! ஸ்டோப்! இருவரும் வன் அட்ட டைம் தான் என்னைக் கொஞ்சலாம் பிளிஸ்!,” என இரு கைகளையும் சேர்த்துத் தட்டிக் கல கலவெனச் சிரித்தாள் கீர்த்தி.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.