தவராசா கலையரசன் - அம்பாறை மாவட்ட பா.உதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் நாவிதன்வெளிப் பிரதேசசபைத் தவிசாளர் தவராசா கலையரசனுக்கு வழங்கப்பட்டது. இலங்கை அரசு வெளியிட்ட அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் கூட்டமைப்பின் நல்லதொரு முடிவு. தமிழ் உறுப்பினர்களற்ற அம்பாறைக்கு இதன் மூலம் தமிழ் உறுப்பினரொருவர் கிடைத்துள்ளார்.

அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு: http://www.documents.gov.lk/files/egz/2020/8/2188-02_T.pdf

 

அறிந்து கொள்வோம்: இலங்கைப் பாராளுமன்றத்தில் மொழிபெயர்ப்பு வசதிகள்!

அண்மையில் சசிகலா ரவிராஜ் விடயத்தில் நம்மவர்கள் நடந்து கொண்ட முறையைப் பார்த்தபோது ஒன்று புரிந்தது.இவர்களுக்கு வாக்குகள் எவ்விதம் கையாளப்படுகின்றன என்னும் விடயம் தெரியாது? ஆளுக்காள் கூறும் விடயங்களை அப்படி அப்படியே நம்பி உணர்ச்சிப்பெருக்கெடுத்துத் தாண்டவமாட மட்டும் தெரிகிறது.

இப்பொழுது  ஒருவர் முகநூற் பதிவொன்றில் மிகப்புத்திசாலித்தனமான கேள்வியொன்றினைக் கேட்டிருக்கின்றார். அம்பாறையில் தமிழ் மட்டும் தெரிந்த தவராசா கலையரசன்  தெரிவு செய்யப்பட்டால் பாராளுமன்றத்தில் எந்த மொழியில் பேசுவார்? பெரிய கண்டுபிடிப்பு! பாராளுமன்ற நடைமுறைகளைத்  தெரியாதவர்கள் அரசியல் கருத்துகள் உதிர்க்கின்றார்கள். நமது அரசியல் ஆய்வாளர்கள் பலரின்  ஆய்வுகளும் இவ்வகையானவைதாம்.

உண்மையில் ஆசியாவிலேயே பாராளுமன்றத்தில் அனைத்து மொழியிலும் உறுப்பினர்களின் உரைகளை சமகாலத்தில் மொழிபெயர்க்கும்  வசதியை முதலில் ஏற்படுத்தியது இலங்கை நாடாளுமன்றம்தான். 1957இல் அதனை அமுல் படுத்தியது இலங்கை அரசு. ஆரம்பத்தில் தமிழ், சிங்கள உரைகளை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தார்கள். தற்போது ஆங்கில, தமிழ், சிங்கள மொழிகள்  அனைத்தையும் உறுப்பினர்களின் விருப்பமான மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் வசதிகளுண்டு.

தற்போது 24 மொழிபெயர்ப்பாளர்கள் இதற்காகப் பணியாற்றுகின்றார்கள். மூன்று குழுக்களாக மொழிபெயர்ப்பு நடைபெறுகின்றது. அவையாவன: சிங்களம்/தமிழ்/சிங்களம், சிங்களம்/ ஆங்கிலம்/சிங்களம் & தமிழ் /ஆங்கிலம் /தமிழ்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 'ஹெட்ஃபோன்' பாவித்துத் தமக்கு விரும்பிய மொழியில் உரைகளைக் கேட்கலாம். பாராளுமன்ற உறுப்பினர்களுடன், ஊடகவியலாளர்கள், பாராளுமன்றத்தில் பணி புரிபவர்கள், பார்வையாளர்கள் எனப் பலருக்கும் இவ்வசதி மேலதிகமாகவுண்டு.

மக்களே! உங்களுக்கு ஆங்கிலமோ, அல்லது சிங்களமோ தெரிந்தால் தான் மட்டும் பாராளுமன்றம் செல்ல வேண்டிய தேவையில்லை. மும்மொழிகளில் எந்தவொரு மொழி தெரிந்தாலும் போதும். இனியாவது ஊருக்கு உழையுங்கள். உங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். சுயேட்சையாகவென்றாவது தேர்தலில் நில்லுங்கள். வெல்லுங்கள். வாழ்த்துகள்.

இது பற்றிய விரிவான தகவல்களுக்கு : https://www.parliament.lk/en/component/organisation/sect/sections?depart=14&id=40&Itemid=107


முன்னர் முகநூலில் வெளியான செய்தி 9.8.2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்குவது சிறப்பான முடிவாகவிருக்கும். அம்பாறை மாவட்டத்திலிருந்து யாருமே தேர்ந்தெடுக்கப்படாதநிலையில் அங்குள்ள ஒருவரைத் தேசியப்பட்டியலினூடு தெரிவு செய்வது புத்திசாலித்தனமான செயல். நாவிதன்வெளிப் பிரதேசசபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன. பின்னர் அதனைத் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிப்பது தாமதமாகியுள்ளதாகச் செய்திகள் வெளிவந்தன.

போதிய வாக்குகள் பெறாதநிலையில் மக்களால் தேர்தலில் ஒதுக்கப்பட்டவர் மாவை சேனாதிராசா. அவர் கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருப்பவர். நியாயமாகக் கட்சியின் பின்னடைவுக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டியவர் அவர். அவருக்குத் தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்குவது நியாயமானதல்ல.

உண்மையில் தற்போது எல்லைப்புறமான அம்பாறையில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இருப்பது காலத்தின் தேவை. இச்சமயத்தில் தீர்க்கதரிசனத்துடன் கூட்டமைப்புக் கட்சிகளின் தலைவர்கள் தம்மை முன்னிறுத்தாமல், மக்களை முன்னிறுத்தி இவ்விடயத்தில் முடிவினையெடுப்பார்களென்று எதிர்பார்ப்போம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.