- முனைவர் ம இராமச்சந்திரன் உதவிப் பேராசிரியர், ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) , த்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம் -"சத்தியத்தை நாடிச் செல்பவர் தூசிக்கும் தூசியாகப் பணிவு கொள்ள வேண்டும். உலகம் தூசியைக் காலின்கீழ் வைத்து நசுக்குகிறது. ஆனால் சத்தியத்தை நாடுகிறவரே அத்தூசியும் தம்மை நசுக்கும் அளவுக்குத் தம்மைப் பணிவுள்ளவராக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் - அதற்குமுன் அல்ல- ஒளியைக் கணப்பொழுதாவது காணமுடியும். கிறிஸ்தவமும், இஸ்லாமும் கூட இதை நன்கு எடுத்துக்காட்டுகின்றன" என்று மகாத்மா காந்தி தனது சத்திய சோதனையில் கூறியுள்ளார். உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனின் சத்தியத்தேடலே சமயங்களாக வளர்ச்சிப் பெற்றன. ஒரு மனிதன் பிறக்கும் இடத்தின் காரணமாக ஒரு சமயத்தைச் சார்ந்தவனாக ஆகிறான். அவனது சத்தியத் தேடல் அச்சமயத்தோடு தொடர்புடைய நம்பிக்கைகள் சடங்குகள் சார்ந்து செயல்படுவதைக் காணலாம். காலப்போக்கில் நம்பிக்கைகள், சடங்குகள் பொருளற்றதாக மாறும் போது பகுத்தறிவு புதிய நம்பிக்கைகளையும், சடங்குகளையும் தருகிறது என்றாலும் இதன் அடிப்படை நோக்கம் சத்திய ஒளியை அடைவதேயாகும். இயற்கை வழிபாடு, உருவ வழிபாடு, சமய வழிபாடு, சமணம், பௌத்தம், சைவம், வைணவம், இஸ்லாமியம், கிறிஸ்துவம் என்று மனிதனின் சத்தியத் தேடலில் கண்டடைந்த வழிமுறைகள் ஏராளம் . இடைக்காலத்தில் ஏற்பட்ட சமயக் காழ்ப்புணர்ச்சி மனிதனைச் சற்று விலங்கு நிலைக்குத் தள்ளியது. சமயப் பற்று சமய வெறியாக உலகம் முழுவதும் அரசியலும் அதிகாரமும் செலுத்தத் தழைப்பட்டது. தற்காலத்தில் ஜனநாயகத்தின் மலர்ச்சியும் நவீன சிந்தனைகளும் தோற்றம் பெற்றப் பிறகும் இடைக்கால சிந்தனை மரபு ஆதிக்கம் செலுத்தி வருவதை எல்லா சமயங்களிலும் காணமுடி கிறது. என்றாலும் ஜனநாயகத்தின் சுதந்திர ஒளியில் சத்தியத்தைத் தேடும் நவீன சிந்தனை மாற்றத்தை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில் அயோத்தி ராமர் கோயில் சிந்தனையின் அடிப்படைகளை எண்ணி பார்க்க வேண்டும்.

அயோத்தி ( ஆங்கிலத்தில் :Ayodhya), இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தி, மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது. இராமர் பிறந்த இடமான  இராம ஜென்ம பூமி அயோத்தியில் அமைந்துள்ளது. இந்நகரம் சரயு ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அவதி மொழி, சமஸ்கிருதம் - பாரசீகம் கலந்த அவதி மொழி பேசப்படுகிறது. அயோத்தி நகரம், பண்டைய கோசல நாட்டின் தலைநகரம் ஆகும். விஷ்ணுவின் அவதாரமான  இராமர், இந்த அயோத்தியைத் தலை நகராகக் கொண்டு கோசல நாட்டை ஆட்சி செய்ததாக வால்மீகி எழுதிய இராமாயண இதிகாசம் கூறுகிறது. அத்தகைய அயோத்தியில் 500 ஆண்டு நடைபெற்ற சட்டம் போராட்டத்தில்  இராமருக்குக் கோவில் கட்டும் விழாவில் 'பிரதமர் நரேந்திர மோடி' கலந்துகொண்டு  இராமர் கோவில் கட்டடப்பணிக்கான அடிக்கல் நாட்டினார். சரியாக  பகல், 12:45  மணிக்கு, கோவில் கருவறை அமைய உள்ள இடத்தில், 40 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட செங்கல்லை வைத்து பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், முதல்வர் யோகி ஆதித்யநாத், பாபா ராம்தேவ், உமாபாரதி உள்பட 170 முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அலோக் குமார் கூறுகையில்,  இராமர் கோவிலுக்கு இன்று பிரதமர் மோடி முன்னிலையில் கட்டுமானப்பணிகள் தொடங்கியது. அங்கு அமைய உள்ள பிரமாண்ட கோவிலின் கருவறையில் 3 ஆண்டுக்குள் பக்தர்கள் வழிபட முடியும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.

கோவில் கட்டுமானப் பணிகளைக் கவனிக்கும் குஜராத்தின் சோம்புரா குடும்பத்தைச் சேர்ந்த சந்திரகாந்த் சோம்புரா, அவரது மகன் ஆசிஷ் சோம்புரா கூறும்போது, “வடமாநிலத்தின் நாகரா கட்டுமானக் கலையில்  இராமர் கோயில் கட்டப்பட உள்ளது. 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டி எழுப்பப்படும். முதல் மாடியில் 160 தூண்கள், 2-வது மாடியில் 132 தூண்கள், 3-வது மாடியில் 72 தூண்கள் அமைக்கப்படும். கருவறை, எண் கோண வடிவில் இருக்கும். வாஸ்து சாஸ்திர வழிகாட்டுதலின்படி கோயில் கட்டப்படும்” என்றனர். இவ்வாறு உருவாகும் இக்கோயில் கடந்து வந்த பாதையை நோக்கி சிந்திக்கும் போது பல வியப்பான தருணங்களைக் காணமுடிகிறது. அவற்றில் சில,

1528: மசூதியில் காணப்பட்ட கல்வெட்டுகள் மற்றும் அரசு ஆவணங்களின்படி பார்த்தால், 1528 - 1530 காலக்கட்டத்தில் அயோத்தியில் ராம் கோட் மொகல்லாவில் மலைக்குன்றில் முகலாய சக்ரவர்த்தி பாபரின் உத்தரவின் பேரில் அவருடைய ஆளுநர் மீர் பாகி என்பவரால் இந்த மசூதி கட்டப்பட்டது.

1853: இந்த இடத்தில் முதல் முறையாக மதக் கலவரம் ஏற்பட்டது.

1949: ராமர் சிலைகள் மசூதிக்குள் கொண்டுவந்து வைக்கப்பட்டன. இதை இந்துக்கள் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதை முஸ்லிம்கள் எதிர்த்தனர். இதையடுத்து இரு தரப்பும் சிவில் வழக்கை நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. இவ்விடயத்தில் தலையிட்ட இந்திய அரசு சம்மந்தப்பட்ட இடத்தைச் சர்ச்சைக்குரிய இடமாக அறிவித்து அந்த இடத்தின் கதவுகளை மூடியது.

1984: இந்த இடம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் இந்த இடத்தில்  இராமருக்குக் கோயிலைக் கட்டப் போவதாக அறிவித்தது. பாரதிய ஜனதா கட்சியின் அப்போதைய தலைவரான எல்.கே. அத்வானி  இராமர் கோயில் கட்டுவதற்காக நாடு தழுவிய பிரசாரத்தை மேற்கொண்டார்.

1989: விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு, சர்ச்சைக்குரிய மசூதிக்கு அடுத்த பகுதியில்  இராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டியது.

1990: விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மசூதியின் சில பகுதிகளை நாசம் செய்தனர். இதன் பிறகு அப்போதைய பிரதமர் சந்திரசேகர் இரு தரப்பினரையும் அழைத்துச் சமரசம் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

1991: அயோத்தி அமைந்துள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது.

1992: பாரதிய ஜனதா கட்சி, விஸ்வ இந்து பரிஷத், சிவசேனா உள்ளிட்ட அமைப்புகளின் தொண்டர்களால் மசூதி இடித்துத் தள்ளப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற மத மோதல்களின் காரணமாகச் சுமார் இரண்டாயிரம் பேர் உயிரிழந்தனர்.

2003: இந்த வழக்கில் முதன்மை மனுதாரர்களில் ஒருவரான ராமச்சந்திர பரமஹம்ஸ் என்பவரின் மரணச் சடங்குகளில் கலந்து கொண்டு பேசிய அப்போதைய பிரதமர் வாஜ்பேயி அயோத்தியில் கோயில் கட்டப்படும் என்றார். நீதிமன்ற உத்தரவு மூலமாகவோ, அல்லது பேச்சுவார்த்தை மூலமாகவோ இதற்குத் தீர்வு கிடைக்கும் என்றும் வாஜ்பேயி நம்பிக்கை வெளியிட்டார்.

2010: அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, மூன்றில் ஒரு பகுதி  இராம் லல்லாவுக்கும் (குழந்தை வடிவில்  இராமர் கடவுள்), இன்னொரு மூன்றில் ஒரு பகுதி நிலம் சன்னி வக்ஃபு வாரியத்துக்கும், மீதி மூன்றில் ஒரு பகுதி நிலம் நிர்மோஹி அகாரா எனும் துறவிகள் குழுவின் அமைப்புக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

2019: இந்திய உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஒரு மனதாக அயோத்தி பிரச்சனையில் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பு அடிப்படையில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் இந்திய அரசு  இராமர் கோயிலை நிறுவ மூன்று மாதங்களுக்குள் ஒரு அறக்கட்டளையை நிறுவவும், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அயோத்தியில் வேறு இடத்தில் ஐந்து ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் ஜனநாயக வழியின் அடிப்படையில் (நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது) இக்கோயில்  கட்டுமானம் செயல்படுத்தப்பட்டாலும் சமய காழ்ப்புணர்ச்சியின் உச்சிக்குச் சென்று மற்றவர்களால் சரயு ஆற்றங்கரையில் உள்ள இந்தியாவின் மிக அழகான நகரங்களில் ஒன்றான அயோத்தி ஒரு செழிப்பான கடந்த காலத்தைக் கொண்டுள்ளது. இதைப் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் 'சாகேத்' என்று கூறுவர்.  இராம ஜென்ம பூமி வளாகம் ஒருகாலத்தில் புத்த மதத் தலமாக இருந்ததாகக் கூறிய பௌத்த பிக்குகள், அந்த இடத்தை யுனெஸ்கோ அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்று கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதையடுத்து, கடந்த ஜூலை 15ஆம் தேதி ஆசாத் பவுத் தரம் சேனா அமைப்பு சார்பில் அங்கு உள்ளிருப்பு போராட்டமும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் சமணர்கள் உரிமை கோரும் இந்த இடத்தில் சீக்கியர்களுக்கும் தொடர்பு உள்ளது. மேலும், இதே இடத்தில்தான் பாபர் மசூதி 400 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தது. இதை  இராமர் பிறந்த இடமாக கூறுவதை விட இந்தியாவின் வளமான பாரம்பரியத்தின் நல்லிணக்க மையமாக மாற்றியிருக்க முடியும்.
ஆனால் வேறு விதமான அரசியலைக் கூர்மைப்படுத்துவதற்கான கருவியாக இது பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் அமைதியற்ற இளம் தலைமுறையினரிடையே சமநிலையை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பாக அல்லாமல், மத நம்பிக்கையைக் கசப்பான பிரிவினை உண்டாக்கும் கருவியாக மாற்ற இது பயன்படுத்தப்படுவதைச் சிந்திக்க முடிகிறது.

இந்தச் சூழ்நிலையில் நரேந்திர மோடி தனது அடிக்கல் நாட்டு விழாவில் தனது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார். குஜராத் கலவரம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பெரும்பாலும் அயோத்தி சமயச் சிக்கலைத் தவிர்த்து வந்த நிலையில் இந்து இஸ்லாமியர் உடன்பாடு நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட பிறகு இந்நிகழ்ச்சியில் "பல ஆண்டுகளாகக் குடிசையில் இருந்த இராமருக்கு இனி பெரிய கோயில் அமைய இருக்கிறது. வரலாற்றுச் சிறப்பு நிகழ்வில் நான் கலந்து கொள்ள அழைத்து இருப்பது நான் செய்த பாக்கியம், அதிர்ஷ்டம். கன்னியாகுமரியில் இருந்து ஷிர்பவானி, கொட்டேஷ்வரில் இருந்து காமாக்யா, ஜெகன்னாத்தில் இருந்து கேதர்நாத், சோம்நாத்தில் இருந்து காசி விஸ்வநாத் என்று இன்று நாட்டின் அனைத்து இடங்களும்  இராமர் நம்பிக்கையில் மூழ்கியுள்ளது. இன்று  இராமர் கோயில் கட்டுவதன் மூலம் வரலாறு ஏற்படுத்தப்படவில்லை. வரலாறு திரும்புகிறது. எப்படிப் படகு ஓட்டியில் இருந்து பழங்குடியினர் வரை  இராமருக்கு உதவினார்களோ, எப்படி குழந்தைகள் கோவர்த்தன மலையைத் தூக்குவதற்குக் கடவுள் கிருஷ்ணருக்கு உதவினார்களோ அதுபோல ஒவ்வொருவரின் உதவியுடன்  இராமர் கோயில் எழுப்பப்படும். இந்தியா வரலாற்றில் அயோத்தி இன்று பொன்னான நாளை துவக்கியுள்ளது. பல ஆண்டுகளாகக் காத்திருந்ததற்கு இன்று முடிவு கிடைத்து இருக்கிறது. நமது நாட்டின் அடையாளமாக, பக்தியாக, தேசிய உணர்வாக இன்றைய நாள் பார்க்கப்படுகிறது. பல கோடி மக்களின் முடிவுகளுக்கு, தீர்மானத்துக்கு அடையாளமாக, அங்கீகாரமாக உள்ளது. எதிர்கால சந்ததிகளுக்கு ஊக்கமளிப்பதாக அமையும். ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தை இன்று உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. நாட்டு மக்களுக்கும், உலக அளவில் இருக்கும்  இராமர் பக்தர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய காலாச்சாரத்தைப் பண்பாட்டைப் பிரதிபலிப்பதாக  இராமர் கோயில் அமையும். மனித குலம் இருக்கும் வரை இந்த உணர்வு எதிரொலிக்கும்'' என்று கூறியுள்ளார். ஆனால் இது குறித்து எதிர்மறையான சிந்தனைகள் உலக அறிஞர்களால் முன்வைக்கப்படுகின்றன.

சீமா சிஷ்டி தனது கற்பனையின் உச்சத்திற்குச் சென்று விட்டார் : "இராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழா என்பது இந்தியா அரசின் புதிய மற்றும் தனித்துவமான யோசனையின் அடித்தளமாகும். இதில் துன்பகரமான விடயம் என்னவென்றால், மிகச் சிறந்த மனிதனுக்கு அடையாளமாக கூறப்படும்  இராமரின் பெயரில் இவையெல்லாம் நடக்கிறது. தற்போது அவரை வேறொரு வகையில் பயன்படுத்துவதற்கான ஒரு புதிய உந்துதல் இது. இது ஒரு புதிய இந்தியா என்று அழைக்கப்படலாம். அல்லது இதனை புதிய இந்திய குடியரசின் கல்லறை வாசகம் என்றுகூட எடுத்துக்கொள்ளலாம்"

இன்றைய உலகச் செயல்பாடுகளில் ஒரு இந்து கோயிலைக் கட்டுவதால் குடியரசு வீழ்ந்து விடும் என்று கூறுவதைப் போன்ற அபத்தம் வேறொன்று இருப்பதாகத் தெரியவில்லை. ஜனநாயகம், குடியரசு போன்ற அரசியல் அடிப்படைகள் மதிக்கப்பட்டதால் தான்   இராமருக்குக் கோயில் கட்ட 500 ஆண்டுகள் ஆகியது என்பதைச் சீமா சிஷ்டி சிந்திக்க மறந்து விட்டார். உலகிலேயே அதிகமான சமயச் சுதந்திரம் பேணப்படும் சமயமாக இந்து சமயம் விளங்குவதை யாராலும் மறுக்க முடியாது என்பதையும் சீமா சிஷ்டி எண்ணிப் பார்க்க வேண்டும். மேலும், இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதை விட அது மேற்கொள்ளப்படும் தேதி இன்னும் அதிகம் உணர்த்துவதாக பேராசிரியர் கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலோட்  "கடந்த ஆண்டு இதே நாளில்தான் ஜம்மு & காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் பறிக்கப்பட்டது. ஒரே தேதியில் மேற்கொள்ளப்படும் இரண்டு விடயங்களும் அரசியலமைப்பின் பன்முகக் கலாச்சாரத்தை முதலாகக் கொண்டு இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றுவதையே நோக்கமாக கொண்டுள்ளன. இதன் மூலம், இஸ்ரேல், துருக்கி, பாகிஸ்தான் மற்றும் பல நாடுகளின் வரிசையில் இந்தியாவும் காலடி எடுத்து வைக்கிறது" என்று கூறியுள்ளார். இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று வரையறை செய்தாலும் இந்தியர்கள் மதச்சார்பற்றவர்கள் அல்ல என்பதைச் சிந்திக்கத் தவறும் பேராசிரியர் கற்பனாவாதப் போக்கிலிருந்து உலக யதார்த்த மனநிலைக்கு வர வேண்டும்.

அமெரிக்காவின் பிரின்ஸ்டன் நகரில் வசிக்கும் ஆய்வாளரும், 'தி எமர்ஜென்சி க்ரோனிகல்ஸ்' என்ற தனது புத்தகத்திற்காக விருது வென்ற எழுத்தாளருமான பேராசிரியர் ஞான் பிரகாஷ், "இந்த அடிக்கல் நாட்டு விழா என்பது சம குடியுரிமைக்கான அரசியலமைப்பு கொள்கையின் அடித்தளத்தின் மீதான தாக்குதலாகும். ஒரு மதச்சார்பற்ற குடியரசின் யோசனை ஒருபுறம் இருக்க, மதத்தைப் பொருட்படுத்தாமல் சம குடியுரிமையின் அடிப்படை ஜனநாயகக் கொள்கை கூட இனி பாதுகாப்பாக இருக்காது. பாஜக அரசாங்கமும், அச்சுறுத்தப்பட்ட நீதித்துறையும் ஒரு எதேச்சதிகார இந்து ராஷ்டிரத்திற்கு முறையாக அடித்தளம் அமைத்து வருகின்றன. அம்பேத்கரும் நேருவும் தங்கள் கல்லறைகளில் புரள்வார்கள்" என்று கூறுகிறார். மேலும்,

நார்வேஜியன் ஸ்கூல் ஆஃப் தியாலஜியை சேர்ந்த ஆய்வாளரான எவியன் லீடிக், "இது ஒரு நீண்ட செயல்முறையின் புதிய தொடக்கம் என்பது மட்டுமின்றி இந்திய குடியரசு மாற்றியமைக்கப்படுவதும் ஆகும். ஆகஸ்டு 5ஆம் தேதி ராமர் கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டுவது, 1992இல் பாபர் மசூதி தகர்க்கப்பட்டதுக்கு பிறகு இந்துத்துவா இயக்கம் சந்திக்கும் ஒரு வரலாற்று தருணத்தை பிரதிபலிக்கிறது.

ஒரு காலத்தில் கொடிய கலவரத்தால் மேற்கொள்ளப்பட்ட செயல், இன்று அரசாங்க ஆதரவுடைய முயற்சிகளால் சட்டபூர்வமானது.  இராமர் கோயிலைக் கட்டுவது ஒரு பெரும்பான்மை தேசியவாதத்தைக் குறிக்கிறது. இதில் இந்து மதம் மற்ற எல்லா மதங்களுக்கும் மேலாக மதிப்பிடப்படுவதை போன்று தெரிகிறது. இது மோதி அரசிடமிருந்து நாம் சந்திக்கும் இந்துத்துவ பொருண்மை கொண்ட கடைசி நிகழ்வாக இருக்காது" என்று கூறுகிறார்.

பேராசிரியர் ஞான் பிரகாஷ், ஆய்வாளர் எவியன் லீடிக் போன்றோர் முன்வைக்கும் இந்து ராஷ்டிரம்,  எதேச்சதிகாரம், இந்துத்துவம், குடியரசு மாற்றம் போன்ற கருத்தாக்கங்கள் ஆங்கிலேய பிரிவினைவாதிகளால் முன்வைக்கப்பட்டு பல வடுக்களுக்குக் காரணமாக அமைந்தவை. மாற்று சமயத்தவர்கள் பயம் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இவை இன்று அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடிய ஜனநாயக சிந்தனைக்கு மாற்றப்பட்டுள்ளது. இத்தகைய பழைய பூதங்களைக் காட்டி இன்றும் தங்களை அறிவுஜீவிகளாக வெளிக்காட்டிக் கொள்ள இனிமேலும் இவை உதவப்போவதில்லை. இதன் வெளிப்பாடாக இஸ்லாமியர்கள் வெளிப்படையாக ஜனநாயக உரிமைகளைப் பெறுவதிலும் மதநல்லிணக்கச் செயல்பாடுகளை முன்னெடுப்பதையும் காண முடிகிறது. இதனை, அயோத்தியின் ராமர் கோயிலுக்கு முஸ்லிம்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என இந்தோ இஸ்லாமிக் கல்சுரல் பவுண்டேஷன் டிரஸ்ட் (ஐஐசிபிடி) பொருளாளர் பைஸ் அப்தாப் தெரிவித்துள்ளார். இப்புதிய அறக்கட்டளை பாபர் மசூதிக்கு ஈடாக அயோத்தியில் புதிய மசூதி அமைக்க 5 ஏக்கர் நிலம் பெற்றுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஐஐசிபிடி பொருளாளர் பைஸ் அப்தாப் கூறும்போது, "அயோத்தியில் கட்டப்படும்  இராமர் கோயிலுக்கு இந்திய முஸ்லிம்கள் அனைவரின் ஆதரவு உள்ளது.  இராமர் கோயில் கட்டுவதற்கு நமது பிரதமர் நரேந்திர மோடி பூமி பூஜை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கு முன்னதாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பாபர் மசூதிக்கு ஈடாக உத்தரபிரதேச அரசு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கி உள்ளது' என்றார்.

மசூதி கட்டுவதற்காக வழங்கப்பட்டுள்ள நிலம்,  இராமஜென்ம பூமி வளாகத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனிபூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இதற்கான நிலப் பத்திரங்களை அயோத்தி மாவட்ட ஆட்சியர் அனுஜ் குமார் ஜா, உத்தரபிரதேச சன்னி முஸ்லிம் மத்திய வக்ஃபு வாரியத்தினரிடம் வழங்கினார். இதில் மசூதியுடன் சேர்த்து ஒரு கல்விக்கூடமும், ஆய்வுடன் கூடிய சிறப்பு மருத்துவமனையும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு நூலகமும், அருங்காட்சியகமும் அங்கு அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை செய்ய ஐஐசிபிடி அறக்கட்டளைக்கு 9 உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர். மேலும் 6 உறுப்பினர்கள் பின்னர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும்

முஸ்லிம் மகிளா மஞ்ச் அமைப்பின் அமைப்பாளர் நஸ்ரின் அன்சாரி ‘இந்து தமிழ்' வில் "அயோத்தியில் அமையவிருக்கும் பிரம்மாண்டமான  இராமர் கோயிலால் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை கிடைக்கும். எந்த ஒரு இந்தியரும் முஸ்லிமாக மதம் மாறலாம். அதனால், அவர்களது மூதாதையர்களும் மதம் மாறியதாக அர்த்தம் இல்லை. இந்து-முஸ்லிம் என அனைவரது கலாச்சாரமும் ஒன்று தான்" என்று கூறியுள்ளதை ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு இந்து - இஸ்லாமியர் ஒற்றுமை பேணப்பட்டாலும் அறிவுஜீவிகளின் சிந்தனையில் பொதிந்து விட்ட சிக்கலை அவர்களால் மறு ஆய்விற்கு உட்படுத்த முடியாது. ஏனென்றால் இந்தச் சிக்கலை மையமாக வைத்து பல ஆண்டுகள் அரசியல் செய்து விட்டார்கள். இந்துக்கள் கனவிலும் சிந்தித்திராத இந்துத்துவச் சித்திரங்களை முதலில் வரைந்தவர்கள் இவர்களே. இவர்கள் எழுத்தில் மிரட்டிய அளவுக்கு இந்துக்கள் யாரும் செய்து விடவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. எந்தவொரு வழிபாட்டுத்தலமும் வன்முறையை ஏவுவதில்லை. எல்லா அறிவுஜீவித்தனங்களுக்கும் வன்முறையே தீனியாக இருக்கிறது. ஆகையால் அவர்களின் சிந்தனைகளும் சிக்கலை நோக்கியே இருக்கின்றன. இவர்களின் சிந்தனை அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்ட இளைய தலைமுறை இந்தியா உருவாகிவிட்டது.

சி.சு.செல்லப்பா தமிழாய்வு மையம் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்..