தலைவர் அமிர்தலிங்கம்ஜூலை 13  இலங்கைத்தமிழ் மக்கள் அரசியலில் ஒரு காலத்தில் கோலோச்சிய தலைவர்களிலொருவரான , முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் நினைவு தினம். அவருடன் கூடவே முன்னாள் யாழ் பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரனின் நினைவு தினமும் கூட. மே மாதம் போல் யூலை மாதமும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் பல மாற்றங்களை , அழிவுகளை ஏற்படுத்திய மாதம். அமிர்தலிங்கம் அவர்களைப்பொறுத்தவரையில் என்னால் அவரை ஒரு போதுமே மறந்துவிட முடியாது.

மேடையில் பேசும் திறமை மிக்க , அப்பேச்சுகளால் மக்களை வசியப்படுத்தும் அவரைப்போன்ற தலைவர்களை இக்காலத்தில் காண்பதரிது. சிலருக்குப் பேச்சுத் திறமையிருக்கும், ஆனால் மக்களை வசீகரிக்கும் தோற்றமிருக்காது, அமிர்தலிங்கம் அவர்களுக்கு இரண்டுமே இருந்தன. அந்தச் சிரித்த, புன்னகை தவழும் முகத்தை முதன் முறை பார்க்கும் எவருமே பின்னர் அவரை மறந்து விட மாட்டார்கள். முதலில் பார்த்தபோது நடுங்கியபடி நிற்பதற்கே சிரமப்பட்டுக்கொண்டிருந்த தந்தை செல்வாவுக்கு உறுதுணையாகத் தாங்கிப்பிடித்தப்படி நின்ற அவரது தோற்றமே இன்னும் கண்களில் நிற்கின்றது, அதன் பின் என் பால்ய, பதின்ம வயதுகளில் அவரது தேர்தல் கூட்டங்கள் பலவற்றுக்குச் சென்றிருக்கின்றேன். இளைஞர்கள் அவருக்கு இரத்தத் திலகமிடுவதைக் கண்டு பிரமித்திருக்கின்றேன். பின்னர் இளைஞனாக அவரைப்பற்றிய முரணான கருத்துகளுடன் அவரது கூட்டங்களுக்குச் சென்ற சமயங்களில் . கேட்டுக் கொண்டிருக்கையில் அவர் கூறுவது சரியாக இருக்கும். வேறு முரணான எண்ணங்களே வராத வகையில் கேட்பவரை வசியப்படுத்தி வைத்திருப்பார். அத்தகைய வாதத்திறமை மிக்கவர். பின்னர் வெளியில் வந்ததுமே அவரது கூற்றுகளைப்பற்றி மனம் தர்க்கிக்கத்தொடங்கும்.

ஒரு காலத்தில் என் அபிமானத்துக்குரிய தலைவராகவிருந்தவர் சிறிது காலம் விமர்சனத்துக்குரியவராகவும் விளங்கினார். அப்பொழுதும் அவர் மேல் நான் மதிப்பு வைத்திருந்தேன். அதுவரையில் அவரும் , அவரது குடும்பமும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காகக் போராடியதற்காக, அவற்றுக்காக அடைந்த சிறைவாசங்களுக்காக. ஆனால் 77 தேர்தலையடுத்து மாவட்ட அபிவிருத்திச் சபையினை ஏற்றுக்கொண்ட நாட்களில் அவர் இளைஞர்கள் பலரின் விமர்சனங்களுக்கு உரியவராக விளங்கினார். அக்காலகட்டத்தில் நான் யாழ் இந்துக்கல்லூரி உயர்தர மாணவன். அவ்வப்போது வழியில் ஜே.ஆர்.அரசு கொடுத்த ஜீப்பில் மகனுடன் காரைநகர்- அராலி வடக்கு -யாழ்ப்பாணம் பாதையூடு செல்வதைக் கண்டிருக்கின்றேன். அவரைக்கண்டவர்கள் அவருக்குக் கை காட்டுவார்கள். அப்போது அவர் மேலிருந்த விமர்சனத்தின் காரணமாக அவருக்கு நான் ஒருபோதுமே கை காட்டியதில்லை, அவருக்குப் பக்கத்தில் அவரது இளைய மகன் இருப்பதையும் கண்டிருக்கின்றேன்.

பின்னர் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்திலிருந்த காலத்திலும் நண்பர் பிறேமச்சந்திரா ஆசிரியராகவிருந்து வெளியான 'நுட்பம்' சஞ்சிகையில் அக்காலக் கூட்டணி அரசியலை விமர்சித்து 'நடிப்புச் சுதேசிகள்' என்னும் பெயரில் கவிதையொன்று எழுதியுள்ளேன். சுதந்திரன் பத்திரிகையிலும் கட்டுரைகள் இரண்டு 'அக்கினி' என்னும் பெயரில் எழுதியுள்ளேன். அக்காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தில் ஏற்பட்ட முதலாவது உடைவையடுத்த காலத்தில், சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) ஆசிரியராகவிருந்து வெளியான 'புதியபாதை' பத்திரிகையில் கூட்டணியை விமர்சித்து வெளியான கட்டுரைகளை வாசித்துள்ளேன். நண்பர் பிறேமச்சந்திரா புதியபாதை, தர்க்கீகம் போன்ற பல பத்திரிகைகளை அவ்வப்போது கொண்டுவந்து தருவார். பின்னர் சுந்தரம் மறைவின்போது அதன் பின் அமிர்தலிங்கம் அவர்களே இருந்ததாகவும் பரவலான கதையொன்றும் அடிபட்டது. இதனால் அக்காலகட்டத்தில் பலரின் விமர்சனத்துக்குரியவராகவிருந்தார் அமிர்தலிங்கம் அவர்கள். இன்று அவையெல்லாவற்றையும் காலம் அடித்துச் சென்று விட்டது.

முன்னாள் யாழ் பா.உ. யோகேஸ்வரன் தமிழர் விடுதலைக் கூட்டணிக்காக மிகவும் உழைத்தவர். அதன் விளைவாகப் பல இழப்புகளை சந்தித்தவர். யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது இவரது வீடும் எரிக்கப்பட்டது. பின்னர் அமிர்தலிங்கத்துடன் கொல்லப்பட்டதும் இவரது கொழும்பு இல்லத்தில்தான். பின்னர் இவரது மனைவி சரோஜினி யோகேஸ்வரனும் இவ்விதமே உயிரிழந்ததுதான் சோகமானது.

இன்று நான் அமிர்தலிங்கம் அவர்களை அவரது குறை , நிறைகளுடன் அணுகுகின்றேன். தமிழரசுக் கட்சி ஒரு மார்க்சியப் புரட்சிகர அமைப்பு அல்ல. சமுதாயப்பிரச்சினைகளை அடியோடு மாற்றி வைக்கப் போராடிய புரட்சிகர அமைப்பு அல்ல. பாராளுமன்ற அரசியலுக்குள் ,சுதந்திரமடைந்த இலங்கையில், இன,மத, மொழிரீதியாக அடக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்காகப்போராடிய அமைப்பு.. அவ்வமைப்பில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்தி விளைவுகளைக்கண்டு அஞ்சாமல் போராடி இறுதியில் பலியாகிய ஒரு தலைவராகவே அவரைக்காண்கின்றேன். குறை, நிறைகளுடன் கூடியதுதான் மானுடப்பிறப்பு. அவ்வகையில் அமிர்தலிங்கமும் குறை, நிறைகளுடன் கூடிய மானுடர்களிலொருவர்தான். ஆனால் குறைகளை விட அவரது நிறைகளே அதிகமாக இப்பொழுது எனக்குத் தோன்றுகின்றது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.