உமாமகேஸ்வரன்இவர் இலங்கைத்தமிழர் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்ட அமைப்புகளின் தலைவர்களில் வித்தியாசமானவர். இவர் ஆயுதப்போராட்டத்தில் குதிப்பதற்கு முன்னர் இவருக்கு வயது முப்பதைத்தாண்டி விட்டிருந்தது. தமிழர் விடுதலைக்கூட்டணியின் இளைஞர் அணியில் நீண்ட காலம் இயங்கியிருக்கின்றார்.அதன் காரணமாகத் தமிழ் அரசியல்வாதிகளுடன் நன்கு பழகியிருந்தார். அரசியல் பற்றிய புரிதல் நிறைய இவருக்கிருந்தது. பொதுவாக அடக்குமுறைகளுக்கு எதிராக உணர்ச்சி வசப்பட்டு இளம் வயதில் ஆயுதம் தூக்கியவர் என்பதற்கு மாறாக, நடுத்தர வயதினை நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில், நல்லதொரு உத்தியோகம் உள்ள நிலையில் அதனை உதறிவிட்டுப் போராட்டத்துடன் தன்னைப் பிணைத்துக்கொண்டவர். இவரது வயது, அறிவு இவைதாம் இவரை ஆரம்பத்தில் போராட்ட அமைப்பின் தலைவராக்கியது.

பல விடயங்களில் இவருக்குத் தூரப்பார்வை இருந்தது. சகல விதமான அடக்குமுறைகளும் (வர்க்க, இன, மத, மொழி, வர்ண) உடைக்கப்படுவதே மக்களின் விடுதலைக்கு அவசியம் என்பதை உணர்ந்திருந்ததால்தான் பின்னர் தன் தலைமையில் அமைப்பு உருவானபோது 'சகல அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்' என்னும் தாரக மந்திரத்தைக் கட்சியின் தாரக மந்திரமாகக்கொள்ள முடிந்தது. தென்னிலங்கை முற்போக்குச் சக்திகளுடன் இணைந்தே தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட முடியுமென்ற தீர்க்கதரிசனச் சிந்தனை இருந்ததால்தான் இவருடைய தலைமையின் கீழ் சுமார் அறுநூறு வரையிலான சிங்கள இனத்தைச் சேர்ந்த போராளிகள் இவர் அமைப்பில் இணைந்து போராட முன் வந்திருந்தார்கள். ஆயுதம் தாங்கிய வேறெந்த தமிழ் அமைப்புகளிலும் இல்லாத நிலை இது.

போராளிகள் மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அவர்களது அடிப்படைப்பிரச்சினைகளை அறிந்து கொள்ள வேண்டும். என்ற எண்ணமிருந்ததால்தான் காந்தியம் அமைப்புடன் இணைந்து இயங்கி , காந்தியப்பண்ணைகளில் இளைஞர்களைச் செயற்பட வைக்க இவரால் முடிந்தது. பூரணமான மார்க்சியவாதியோ இல்லையோ மார்க்சியச் சிந்தனைகள் இவரிடமிருந்தன. அதன் காரணமாகத்தான் மார்க்சியச் சிந்தனை மிக்க இளைஞர்கள் பலரை (ஜான் மாஸ்ட்டர் , சந்ததியார் போன்ற) இவரது தலைமையிலான அமைப்பு ஈர்க்கக் காரணமாக அமைந்தது. தென்னிலங்கையின் இடதுசாரி அமைப்புகள் பல இவரது அமைப்புடன் நெருங்கிவந்தன.
தமிழகத்தில் இந்திய அரசின் உதவியுடன் அமைப்புகள் பலம் பெற்று வந்த நிலையில் இவர் ஒருவர்தான் உறுதியாக 'எங்களுக்கு உதவினால் போதும், நாங்களே எங்கள் விடுதலையைப் பெற்றுக்கொள்வோம்' என்று பல தடவைகள் கூறினார்.அவ்வுரைகளைத் தாங்கி வெளியான ஊடகங்கள் பலவற்றைக் கண்டிருக்கின்றேன். பரந்து பட்ட மக்களின் ஒன்றிணைந்த தாக்குதலே இறுதியில் வெற்றியைத்தரும். மக்களுக்குத் தேவையற்ற அழிவுகளைத்தரும் தாக்குதல்கள் குறுகிய காலப்பயனைத்தந்தாலும் இறுதியில் அழிவைத் தரும் என்று இவரது தலைமையிலான அமைப்பின் பிரச்சார ஏடு அடிக்கடி வலியுறுத்தியது.

தீர்க்கதரிசனம் மிக்க தெளிவான பார்வை, வசீகரப்படுத்தும் ஆளுமை இவரிடம் இருந்ததால்தான் 83 கலவரத்தைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் இவர் பின்னால் அணி திரண்டார்கள் பெருங் கனவுகளுடன். இருந்தும் உபகண்ட அரசியற் சூழல், அதன் ஆதிக்கத்துக்குப் பணிந்து கொடுக்க முடியாத தன்மை இவற்றால் அமைப்பில் பிளவுகள் உருவாகின. உருவாக்கப்பட்டன. சந்ததியார் , சிவநேசன் போன்றவர்களின் மரணங்கள், கூடவே உள்ளே உருவான முரண்பாடுகளைச் சரியாகத் தீர்க்கத்தவறிவிட்டதன் காரணமாக ஏற்பட்ட விளைவுகள் இவர் தலைமையிலான அமைப்பு உடைவதற்குப் பிரதானமான காரணங்கள். அவற்றைச் சரியாகக் கையாண்டு, அமைப்பினைக் கொண்டு நடத்தியிருந்தால் இவரது எதிர்காலம் வேறொரு திசையில் பயணித்திருக்கும். இறுதியில் இவரது முடிவும் எதிர்பாராத விதமாகவே அமைந்து விட்டது. பாரதப் பிரதமர் இந்திரா காந்திக்கு நடந்ததுபோல் இவரது முடிவும் அமைந்து விட்டது. இவர்தான் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவராகச், செயலதிபராக விளங்கிய உமாமகேஸ்வரன். இன்று அவரது நினைவு தினம்.

ஒரு காலத்தில் இவரது தலைமையையேற்று கனவுகளுடன் அணி திரண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்றும் பல்வேறு நாடுகளில் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் பலவேறுபட்ட விமர்சனங்களுடன் இவரை இன்றும் மறக்காமல்தானிருக்கின்றார்கள். 'உமாமகேஸ்வரன் அறக்கட்டளை' போன்ற அமைப்புகள் மூலம் இலங்கையில் பல்வேறு சமூக நலப்பணிகளைச் செய்துகொண்டுதானிருக்கின்றார்கள். இவர் பெயரில் வவுனியாவில் நீண்டதொரு வீதி கூட இருக்கின்றது. இலங்கைத்தமிழர் அரசியல் வரலாற்றில் தடம் பதித்த முக்கிய ஆளுமைகளில் இவரும் ஒருவர். வாழ்வின் சுக,சுகதுக்கங்களையெல்லாம் ஒதுக்கி, மக்களுக்காகப் போராட எழுந்தார். அதன்பொருட்டு ஏற்பட்ட விளைவுகளையெல்லாம் ஏற்றுக்கொண்டார்.

மக்களின் விடுதலைக்காகவே அனைவரும் போராடினர். அனைத்து அமைப்புகளும் போராளிகளும், அவர்கள்தம் குறை , நிறைகளுடன் நினைவுகூரப்படுவது அவசியம். கூடவே யுத்தச்சூழலில் பலியாகிய மக்கள் அனைவரும் எப்போதும் நினைவு கூரப்பட வேண்டும். ஏற்பட்ட கடந்த கால அழிவுகளிலிருந்து பெற்ற பாடத்தின் மூலம் இலங்கையின் அனைத்தின அரசியல் தலைவர்களும் சகல மக்களும் சகல உரிமைகளுடன் எவ்வித அச்சமுமற்று வாழும் நிலையினை ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும். எதிர்காலம் அவ்விதமானதொரு சூழலை உருவாக்குமென்று நம்புவோம். அதே சமயம் கடந்த கால வரலாற்றை முறையாகப்பதிவு செய்வோம். அனைத்து அமைப்புகளும் குறை, நிறைகளுடன் தம் வரலாற்றினைப்பதிவு செய்வது அவசியம். அமைப்புரீதியாக முட்டிமோதிய காலம் வரலாறாகிவிட்டது. தற்போதுள்ள தேவை ஆய்வுக்கண்ணோட்டத்துடன், நடைபெற்ற தவறுகளை, மனித உரிமை மீறல்களை விமர்சிக்கும் அதே சமயம், பிரச்சாரம் தவிர்த்து, அமைப்புகளின் வரலாறுகளும் முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.