ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்தபோது, இந்தியாவில் அவர்களுக்கு எதிராகப் பல போராட்டங்கள் நிகழ்ந்தன. இருப்பினும் அப்போராட்டங்கள் வீறுகொண்டதாக அமையவில்லை. தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தியடிகள் இந்தியாவிற்கு வந்து காங்கிரஸ் இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர்தான் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டங்கள் மிகவும் தீவிரமடைந்தன எனலாம்.

 உப்புக்கு வரியும் தடையும்

காந்தியடிகள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திய பின்னரும் ஆங்கில அரசு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டதேயன்றி, இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்கவில்லை. ஆங்கில அரசு அனைத்துப் பொருள்களுக்கும் வரிகளை அதிகரித்தனர். விலைவாசி ஏற்றத்தால் மக்கள் பெரிதும் அவதியுற்றனர். 1930-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆங்கில அரசு இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்பிற்கு வரிவிதித்தது. மேலும் இந்தியாவில் இந்தியரால் தயாரிக்கப்படும் உப்பைப் பிரிட்டிஷ் அரசாங்கத்தைத் தவிர வேறு யாரும் விற்கக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது.

     இதனை விலக்கிக் கொள்ளுமாறு காந்தியடிகள் ஆங்கில அரசிடம கோரிக்கை விடுத்தார். ஆனால் ஆங்கிலேய அரசு செவி சாய்க்கவில்லை. காந்தியடிகளின் கோரிக்கையை நிராகரித்தது. இதனைக் கண்ட காந்தியடிகள் உப்புச்சட்டத்தை எதிர்த்து உப்புசத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்தார். அடித்தட்டு மக்களின் அடிவயிற்றைத் தொட்ட உப்புவரி எதிர்ப்பை ஆயுதமாகக் கொண்டு வலிமை வாய்ந்த ஆங்கிலேய அரசுடன் மோதத் துணிந்த அண்ணல் காந்தியடிகளை அப்போது பலரும் எள்ளி நகையாடினர். கோலியாத்தை எதிர்க்க வந்த தாவீது போல காந்தியடிகளை வருணித்தனர்.

ஆங்கில அரசின் எள்ளல்

     அப்போது இந்தியாவின் வைசிராயக இருந்த இர்வின் பிரபு உப்புசத்தியாகிரகத்தைத் தேனீர்க் கிண்ணத்தில் எழுந்த புயல் எனக் கருதினார். ஆங்கிலேய அதிகார வர்க்கம், அதனைக் கிண்டர்கார்டன் கிளர்ச்சியாகக் கருதியது. ஆங்கிலேயர்கள் ஒரு கோப்பையில் கடல் நீரைக் காய்ச்சுவதால் பிரிட்டிஷ் பேரரசைப் பதவியிறக்கம் செய்ய முடியாது எனக் கேலி பேசினர்.

     ஆங்கில உயரதிகாரிகள் இது ஒரு கற்பனைப் போராட்டம் என்று வருணித்தனர். இந்திய தேசிய காங்கிரஸில் இருந்த தலைவர்களில் பலரும் கூட உப்புக்கும் சுதந்திரப் போராட்டத்திற்கும் என்ன தொடர்பு எனக் கேட்டனர்.

தண்டியாத்திரை

     ஆனால் அண்ணல் காந்தியடிகள் அவ்வாறு இப்போராட்டத்தை நினைக்கவில்லை. உப்பு சத்தியாகிரகத்தை மிகவும் வலிமை வாய்ந்த அறப்போர் ஆயுதமாகக் கருதினார். தாம் அறிவித்தவாறு 1930-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12-ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட 78 ஆசிரமச் சீடர்களுடன் சபர்மதியிலிருந்து 385 கிலோமீட்டர் தொலைவிலிருந்த தண்டிக்குப் பாதயாத்திரையாகப் புறப்பட்டார்.

     காந்தியடிகள் தண்டியாத்திரை சென்றபோது அண்ணலாரின் காலடிபட்ட இடத்தில் எல்லாம் போராட்டப் பொறி  உண்டாயிற்று என்று ஜவகர்லால் நேரு குறிப்பிடுகின்றார். காந்தியடிகள் மேற்கொண்டது வெறும் பாதயாத்திரை மட்டுமல்ல அது ஒரு பெரும் போராட்டப் பயணம் என்பது போகப் போகத்தான் அனைவருக்கும் புரிந்தது.

     காந்தியார் நடந்து சென்ற கிராமங்களில் எல்லாம் மக்கள் அவருக்கு உற்சாகமாக வரவேற்பளித்தனர். காந்தியடிகளின் பின்னால் சென்ற கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருந்தது. கிராம அதிகாரிகள் தங்களின் வேலையை உதறித் தள்ளிவிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     காந்தியடிகள் 24 நாள்கள் நடை பயணத்திற்குப் பின்னர் ஏப்ரல் 5-ஆம் நாள் காலை தண்டி கடற்ரையை அடைந்தார். அடுத்த நாள் காலை பிரார்த்தனைக்குப் பிறகு அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராகப் பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார். மேலும் இந்தியாவில் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களையும் இது போல் உப்பு தயாரித்துப் பயன்படுத்துமாறு கூறினார்.

அண்ணலின் அறிக்கை

ஏப்ரல் 13-ஆம் நாளைத் தேசியவாரமாக மக்கள் கொண்டாட வேண்டும் என்றும், அப்போது மக்கள் உப்புசத்தியாகிரகத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் கலந்து கொள்ள முடியாதவர்கள் அந்நியத் துணிப் புறக்கணிப்பினையும், கதரைப் பயன்படுத்துதல் பற்றிய பிரச்சாரப் பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு காந்தியடிகள் அறிக்கை விடுத்தார்.

நாடெங்கும் பரவிய போராட்டம்

      காந்தியடிகளின் வேண்டுகோளை மக்கள் ஏற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காந்தியடிகள் மேற்கொண்ட தண்டியாத்திரை மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்தது. பம்பாய் மக்கள் உப்புக் காய்ச்சியதோடு மட்டுமல்லாது உப்பை வரியின்றி விற்றனர். உப்புக் கிடங்குகளையும் தாக்கினர். வங்காளத்திலும், குஜராத்திலும் வரிகொடா இயக்கம் தொடங்கப்பட்டது. மோதிலால் நேருவும் ஜவகர்லால் நேருவும் வீதிகளில் உப்பு விற்றுச் சட்டத்தை மீறினர்.

     தமிழகத்தில் ராஜகோபாலாச்சாரியாரும் பல தொண்டர்களும் உப்புசத்தியாகிரகத்திற்காக வேதாரண்யத்திற்குப் பாத யாத்திரையாகச் சென்று தங்கி உப்பெடுத்து உப்பு வரிச்சட்டத்தை மீறினர். இந்தியா முழுவதும் இப்போராட்டம் பரவியது.

ஆங்கில அரசின் கைதுப் படலமும், வரி நீக்கிய படலமும்

     உப்பு சத்தியாகிரகப் போராட்டம் தீவிரமடைந்ததைக் கண்டு ஆங்கிலேய அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. 1930-ஆம் ஆண்டு மே மாதம் 4-ஆம் நாள் நள்ளிரவில் காந்தியடிகள் கைது செய்யப்பட்டு புனாவில் உள்ள எரவாடாச் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை அறிந்த மக்கள் போராட்டத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டனர். கல்கத்தாவில் ஏற்பட்ட கலவரம் துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. காந்தியடிகள் கைது செய்யப்பட்ட பின்னர் சத்தியாகிரகத்திற்குத் தலைமை ஏற்ற அப்பாஸ் தியாப்ஜி கைது செய்யப்பட்டார். மேலும் சரோஜினி நாயுடு, கான் அப்துல் கபார்கான் ஆகியோரரும் கைது செய்யப்பட்டனர்.

 இதே போல் பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் அச்சம் அடைந்த ஆங்கில அரசாங்கம் வேறு வழியில்லாமல் காந்தியடிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் வரியை நீக்கிக் கொண்டது. உப்புச் சட்டத்தையும் திரும்பப் பெற்றுக் கொண்டது. உப்பு சத்தியாக்கிரகம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது.

அறப்போரின் வெற்றி

கத்தியின்றி, ரத்தமின்றி நடத்தப்பட்ட அண்ணலின் உப்பு சத்தியாகிரகப் போராட்டமே அனைத்து விடுதலைப் போராட்டங்களுக்கும் அடிப்படையாக அமைந்தது. அஹிம்சை, சத்தியம் போன்றவற்றின் ஆற்றலை உலகம் அண்ணல் காந்தியடிகளின் வாயிலாக உணர்ந்து கொண்டது.

அண்ணலார் தொடர்ந்த பல போராட்டங்கள் இந்தியாவை அடிமைத் தளையிலிருந்து நீக்கிச் சுதந்திர இந்தியாவாக மலரச் செய்தது. அண்ணலாரின் அறவழிப் போராட்டத்தைப் பல உலக நாடுகளும் பின்பற்றிச் சுதந்திரம் பெற்றன. பாரததேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகானைப் போற்றி அவர்வழி நடந்து பாரதத் திருநாட்டின் முன்னேற்றத்திற்கு அனைவரும் பாடுபடுவோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.