prince-harry-meghan-markle-gettyபிரித்தானிய அரசகுடும்பத்தினர் இன்று வெளியிட்ட அறிக்கை,பிரித்தானியா மகாராணியின் மூத்த மகனின் இரண்டாவது மகனான இளவரசர் ஹரியும் அவரின் மனைவியான மேகனும் இன்றிலிருந்து பிரித்தானிய அரசகுடும்பத்துக் கடமைகளிலிருந்து வெளியேறிச் சாதாரண பிரஜைகளாக வாழ்க்கையை நடத்துவதை மகாராணியார் அங்கிகரிப்பதாக வெளியிடப்பட்டிருக்கிறது.

கடந்த சில மாதங்களாகப் பிரித்தானியப் பத்திரிகைகளிற்சில ஹரியின் மனைவிக்கு எதிராகத் தொடரும் இனவாதம் கலந்த பதிவுகள்தான் இளவரசர் ஹரி தனது மனைவியுடனும் குழந்தையுடனும் பிரித்தானிய அரச குடும்பத்திலிருந்து பிரிந்து போவதற்குக் காரணம் என்பதைப் பிரித்தானிய பத்திரிகைகளின் அரசகுடும்பம் பற்றிய தகவல்களை ஆழமுடன் அணுகும் அத்தனைபேரும் புரிந்து கொள்வார்கள்.

தனது பன்னிரண்டாவது வயதில் தனது அருமைத்தாயான இளவரசி டையானா அகாலமாக இறந்ததற்கு பத்திரிகை நிருபர்களின்; மனிதத் தன்மையற்ற செயற்பாடுகளே காரணம் என்பது இளவரசர் ஹரியின் ஆதங்கம் என்பது பலருக்குத் தெரியும்.

பிரித்தானிய அரசகுடும்பத்தின் வாழ்க்கைமுறையில் அதிருப்தி கொண்ட இளவரசி டையானா அவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மிகவும் 'சுதந்திரமாக'நடந்து கொண்டார். இளவரசர் சார்ள்ஸை விவாகரத்துச் செய்து கொண்டபின் பிரித்தானிய அரசகுடும்பம் அதிருப்தி கொள்ளும் வகையில், பல 'ஆண்சினேகிதர்களை' வைத்திருந்தார், அவர்களை அடிக்கடி மாற்றிக் கொண்டார். இந்த பிரமாண்டான உலகத்தின் பெரும் பகுதியைத் தங்கள் பிடிக்குள் வைத்திருந்த பிரித்தானிய ஆதிக்க வர்க்கம் அதை விரும்பவில்லை. இளவரசர் ஹரியின் தாயான காலம் சென்ற இளவரசி டையானா பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு சத்திரசிகிச்சை நிபுணரான டாக்டர் ஹசான் அஹமட் கான் என்பரை மிகவும் நேசித்தார் அதை மோப்பம் பிடித்த ஊடகவாதிகளின் தொல்லை தாங்காத டாக்டர் ஹசான் டையானாவுடனான தனது தொடர்பைத் துண்டித்துக் கொண்டார் அதைத் தொடர்ந்து, இளவரசி டையானா, எகிப்திய நாட்டைச் சேர்ந்தவரும் மிகவும் பிரமாண்டமான'ஹரட்' என்ற கடைச் சொந்தக்காரருமான அல்பாய்டின் மகன் டொடியுடன் சினேகிதமானார்.

பிரித்தானிய அரசபரம்பரைக்கே அவமானதாக நினைத்து,அந்த உறவைத் தாங்கிக்கொள்ளாத,-ஊடகவாதிகள் டையானாவையும் அவரின் சினேகிதர் டோடியையும் விலங்குகள்மாதிரி வேட்டையாடித் துரத்தினார்கள். அதனால் நடந்த கோர விபத்தில் சிக்கிய உலகப் என்ற பேரழகியும், ஹரி, வில்லியம் என்ற இரு இளவரசர்களின் தாயாருமான டையானா அகால மரணமடைந்தார்.

அந்த நிகழ்ச்சியால் மிகவும் பாதிக்கப் பட்டவர் இளவரசர் ஹரி. பிரித்தானிய அரச பரம்பரைக்கப்பாற்பட்ட அந்தஸ்துள்ள மேகன் மார்கிள் என்ற விவாகரத்துச் செய்து கொண்ட, அமெரிக்க நடிகையைத் திருமணம் செய்தபோது, தனது தாயைத் துரத்திக் கொலைசெய்ததுபோல், தன்மனைவியைத் தேவையற்ற விதத்தில் இனவாதம் பிடித்த சில ஊடகங்கள்; துரத்துவதைக் கண்டு ஆத்திரத்துடன்; குமுறிக் கொண்டிருந்தார்.இன்று தனது மனைவியிலுள்ள காதலால்,ஆடம்பரமான அரச வாழ்க்கையிலிருந்து விலகிப் போகிறார். உலகத்திலேயே மிகவும் பிரபலமான பிரித்தானிய அரச பரம்பரையின் கட்டுமானங்களையும் அதில் தனது சுதந்திரமற்ற வாழ்க்கையையும் அவர் என்றுமே விரும்பியதில்லை என்று அவரை நன்கு தெரிந்தவர்கள் பலர் கூறுகிறார்கள்.

இளவரசர் ஹரி (16.9.84) அவரின் தாய்மாதிரி மற்றவர்களில் மிகவும் இரக்ககுணம் படைத்தவர்.சாதி மத.இன.நிறபேதம் பார்க்காதவர்.ஒன்றிரண்டு தடவைகள் காதலுக்குள் நுழைந்த அனுபவமுள்ளவர். ஆனால் கலப்பினப் பெண்ணான,மனித உரிமைவாதி,பெண்ணியவாதியான மேகன் என்ற அமெரிக்க நடிகையைக் கண்ட கணத்திலிருந்து ஆழ்ந்த காதல் வயப்பட்டு அவரைத் திருமணம் செய்து கொண்டவர்.

பிரித்தானிய அரச பாரம்பரியம் தங்கள் அந்தஸ்துக்கு அப்பால் திருமண உறவுகளை விரும்பாதவர்கள். அதைத் தாண்டிக் காதலில் மாட்டிக் கொண்ட இன்றைய மகாராணி இரண்டாவது எலிசபெத் அவர்களின்;,பெரியப்பாவும் எட்டாவது எட்வேர்ட் அரசருமானவர்,அமெரிக்காவைச் சேர்ந்த வலிஸ் சிம்ஸன் என்பவரும் மூன்று தரம் விவாகரத்துச் செய்தவருமான பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பியதால் அவரின் பதவியிலிருந்து விலக 1936ம் ஆண்டு தூண்டப்பட்டார்.

அதேமாதிரி இன்றைய மகாராணியாரின் தங்கை மார்க்கரெட், விவாகரத்துச் செய்து கொண்ட கப்டன் பீட்டர் டவுன்ஸென்ட் என்பரைக் காதலித்தபோது 1955ம் அந்த உறவை விடும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்.

மேலும், இன்றைய தம்பதிகளான சார்ல்சும் கமிலாவும் ஒரு காலத்தில் காதலார்களாகவிருந்தார்கள்.ஆனால் சார்ஸ்சுக்கு முன்னர் கமிலாவுக்கு வேறொரு காதல் இருந்த காரணத்தால்,கமிலா 'கன்னித்தன்மையற்றவராகக்' கருதப்பட்டு சார்ஸ்சிடமிருந்து பிரிக்கப்பட்டார். அதனால் சார்ள்ஸ் வேண்டா வெறுப்பாக,அவருக்கு 12 வயது இளமையான 'கன்னியான' டையானவைத் திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டார். அவர்கள் திருமணம் விவாகரத்தில் முடிந்த பின், இளவரசர் சார்ள்ஸ் தனது இளமைக் காதலியான கமிலா தனது கணவரை விவாகரத்துச் செய்து கொண்டபின் திருமணம் செய்துகொண்டார்.

இப்படிப் பல சோகக் கதைகளைத் தனது அனுபவத்தில் கண்ட எலிசபெத் மகாராணியார், தனது பேரன், கலப்பு நிற, அமெரிக்க.கத்தோலிக்க.விவாகரத்து செய்து கொண்ட நடிகையை விரும்பியபோது எந்தத் தடையும் சொல்லாமல் உலகமே வியக்கும்படி ஒரு அழகிய பிரமாண்டமான திருமணத்தை 2018ல் செய்து வைத்தார் அந்தத் தம்பதிகளுக்கு, 2019ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால் இனவாதம் பிடித்த சில ஊடகங்கள் ஹரியின் மனைவியைத் தங்களால் முடிந்தவரை தாழ்த்தி எழுதத் தொடங்கினார்கள். அதற்குக் காரணங்கள் பல:

- இளவரசர் ஹரியின் மனைவி மேகன்(4.8.1981) அவரின் பதினோராவது வயதிலேயே பெண்களின் சமத்துவத்துக்காகக் குரல் கொடுத்துப் பிரபலம் பெற்றவர்.
-அடிமைகளாகக் கொண்டு வரப்பட்ட பரம்பரையிலிருந்து வந்த அவரின் தாயாரான டோரியாவுக்கும் ஐரோப்பிய பாரம்பரியத்தைச் சேர்ந்த தோமஸ் மார்கிள் என்பருக்கும் மகளாகப் பிறந்து, ஓரளவான மத்தியதர வாழ்க்கைமுறையில் வளர்ந்தவர்.
-விவாகரத்துச் செய்து கொண்டவர்.
-2016ம் ஆண்டு கனடாவின் அம்பாஸிடராக 'வேர்ல்ட் விஸனில்' பங்கு பற்றியவர்.
2016ம் ஆண்டு பெண்கள் விடயம் பற்றி இந்தியா சென்றவர்.
-ஐக்கிய நாடுகள் சபையுடன் சேர்ந்து பெண்கள் விடயமாக வேலை செய்பவர்.
-பிரித்தானிய 'பிரக்ஷிட்'டுக்கு எதிரானவர்.ஐரோப்பிய ஒன்றியத்திலிருக்க விரும்புவர்
-2016ம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக ஹிலரி கிளிண்டனுக்கு வேலை செய்தவர்
-அமெரிக்க அதிபதியான டொனால்ட் ட்ரம்பின் பரம வைரியான ஓபாமா குடும்பத்தின் நெருங்கிய சினேகிதி.
-ஹரியின் தாயார் டையானா மாதிரி ஏழைகளின் நலங்களில் அக்கறை கொண்டவர்
-இன்றைய உலகப் பெண் ஆளுமைகளில் முக்கியமானவராகக் கருதப் படுபவர்
-சமுக வலைத்தளங்களிலுள்ள இளம் தலைமுறையினரால் மிகவும் விரும்பப் படுபவர்.
-பிரித்தானிய அரச குடும்பத்தில் மிக மிகப் பிரபலமானவர்கள் ஹரியும் மேகனும் என்ற அடையாளத்தைக் கொண்டவர்.
-பிரித்தானிய அரசபாரம்பரியத்தின் இறுக்கமான கட்டுமானங்களைத் தாண்டிச் சில பணிகளை மக்களுக்குச் செய்ய வேண்டும் என்ற ஆவலையுடையவர்.

இப்படிப் பல காரணங்களால் பழைவாதமும், இனவாதமும் கொண்ட ஊடகவாதிகள்; அவரின் வாழ்க்கைக்குப் பல தர்ம சங்கடங்களையுண்டாக்கத் தொடங்கினார்கள்.அப்பட்டமாகச் சில பொய்களை எழுதத் தொடங்கினார்கள்
தனது தாய்க்கு ஊடகங்களால் நடந்த கொடுமையால் பாதிக்கப் பட்ட ஹரி, தனது மனைவியும் குழந்தையும் அரச சுகபோகங்களுக்காக எந்தக் கொடுமையையும் தாங்கவேண்டும் என்று மற்றவர்கள் எதிர்பார்ப்பதை நிராகரித்து வெளியேறுகிறார்.

ஹரியின் வெளியேற்றம் பற்றிக் குறிப்பட்ட' கார்டியன்' பத்திரிகை,

"அவர்கள் அரச குடும்பத்துடன் இணைந்தவர்கள்,ஆனாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அவர்களுக்கு உரிமையுண்டு. அரச குடும்பத்தைப் பற்றி எழுதினால் பத்திரிகைகள் நன்றாக விலைபோகும் அதற்காகச் ஊடகங்கள், சில விடயங்களை உண்மைகள்போல் சித்தரித்து எழுதித் தள்ளுகிறார்கள். (பொது மக்களின் வரிப் பணத்தில் வாழும் அரச குடும்பம் அதைச் சகித்துக் கொள்ளவேண்டும் என்று ஊடகவாதிகள் நினைக்கிறார்கள்.ஹரி அந்த அரசபோகத்தைத் தன் சொந்த வாழ்வின் நலம் கருதி உதறி விட்டுச் செல்கிறார். ஹரியும் மேகனும் உலகின் கண்களுக்குப் பிரபலமாக இருப்பதால் அவர்களைச் சுற்றிச் சில ஊடகங்கள் விடாமல் சுற்றித் திரிகின்றன"  என்று குறிப்பிட்டிருக்கிறது.

ஹரி அரச குடும்பத்திலிருந்து ஒரேயடியாக வெளியேறி விட்டாரா அல்லது, மகாராணியின் வேண்டுகோளின்படி சில அரச கடமைகளை ஏற்றுக் கொள்வாரா என்பது கேள்விக் குறி. ஹரியின் தந்தை இளவரசர் சார்ள்ஸ 70 வயதானவர். மகாராணிக்குப் பின் அவர் அரசரானால் அவருக்குத் துணையாக அவரின் இருமகன்களும் அவருக்குத்; துணை செய்யவேண்டும். அப்படியான காலகட்டத்தில், நாட்டுக்காகத் தனது உயிரைப் பணயம் வைத்து இராணுவத்தில் 15 வருடங்கள் சேவை செய்த ஹரி தனது தந்தைக்காக எதையும் செய்வார் என்று எந்தத் தயக்கமுமமில்லாமல் சொல்லலாம்.

இன்று,அரச குடும்பத்திலிருந்து வெளியேறிய ஹரி தம்பதிகள் எப்படி வாழுப் போகிறார்கள்? என்ற கேள்விக்குப் பதில். ஹரி ஏற்கனவே அவரின் தாயாரான டையானா வழியாகவும், கொள்ளுப் பாட்டியாரான எலிசபெத் அவர்களாலும் நிறைய சொத்துக்களை வைத்திருப்பவர். மேகன் ஹரியைக் காணமுதலே பெரிய பணக்காரி. அத்தோடு அவர்கள் பல திறமைகளுள்ள இளம் தம்பதிகள்.

உலகத்திலேயே மிகவும் பிரபலமான பிரித்தானிய அரச குடும்பத்தின் பழைசார்ந்த இறுக்கமான கட்டுமானங்களால் தங்கள் சுயமையைப் பறி கொடுத்துவிட்டு வெற்றுப் பொம்மைகளாகக் காட்சி கொடுக்காமல் அவர்கள் தங்களுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ்வதில் எந்தக் குற்றமில்லை என்கிறார்கள் அரச குடும்பத்தில் ஆர்வமுள்ளவர்கள்.
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.