இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு உள்நோக்கம் கற்பிக்கும் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் அந்நாட்டின் பாதுகாப்பு செயலருமான கோட்டாபய ராஜபக்ஷ, தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு கூடுதலான அதிகாரங்களை வழங்குவது சாத்தியமில்லை எனக் கூறியிருக்கிறார். ஹெட்லைன்ஸ் டுடே எனும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்டமே இலங்கை மக்கள் அனைவரும் ஒருமித்து வாழப் போதுமானது' என்று கூறியுள்ளார்.இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில், இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ பேட்டியளித்திருப்பதாகவும், அதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். அதே நேரத்தில், இலங்கையில், சிங்கள மக்களுக்கு இணையாக தமிழ் மக்களுக்கும் சம உரிமை கிடைக்கும் வரை தனது அரசு ஓயாது என்றும் ஜெயலலிதா கருத்துத் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்தை அரசியல் உள்நோக்கம் என்று கூறிய இலங்கை பாதுகாப்பு செயலரை ந்தியா கண்டிக்க வேண்டும் என்கிறார் தமிழக முதல்வர்.

 இதுதொடர்பாக, சமீபத்தில் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், அந்தத் தீர்மானங்கள் தொடர்பாக கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்திருந்தார். அந்தப் பிரச்சினை, இன்று வியாழக்கிழை தமிழக சட்டப்பேரவையில் எதிரொலித்தது. அதுதொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் ஜெயலலிதா பேசும்போது, கோட்டாபயவின் கருத்துக்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

''ஐநா பொதுச் செயலாளரால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையிலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே தவிர, அரசியல் ஆதாயத்திற்காக அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்’’ என ஜெயலலிதா குறிப்பிட்டார்.

சிங்களர், தமிழர் அல்லது இஸ்லாமியர் என்ற எந்தவித பாகுபாடுமின்றி அனைவரும் இலங்கையர் என்ற முறையில் தான் நடத்தப்படுகின்றனர் என்றும்; மற்றவர்களை விட தங்கள் நாட்டு குடிமக்கள் மீது தாங்கள் மிகுந்த அக்கறை கொண்டு இருப்பதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது என ஜெயலலிதா விமர்சித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் சுதந்திரமாக மீன் பிடிக்கலாம்; மற்றும் வலைகளை உலர்த்துவதற்கு அந்தத் தீவை பயன்படுத்திக் கொள்ளலாம் என அப்போதைய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உறுதியளித்ததை சுட்டிக்காட்டிய ஜெயலலிதா, 'இந்த ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரணான வகையில் நடந்து கொண்டு விட்டு தமிழ்நாடு அரசிற்கு அறிவுரை கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது' என ஜெயலலிதா காட்டமாக தெரிவித்துள்ளார்.

'சர்வதேச விசாரணையை அனுமதிக்க வேண்டும்'- ஜெஇறுதிக்கட்டப் போரில், சர்வதேச போர் நெறிமுறைகளை மீறி இலங்கை ராணுவம் செயல்பட்டதாகவும், மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டதாகவும் ஐநா நிபுணர் குழு அறிக்கையை சுட்டிக்காட்டி ஜெயலலிதா புகார் கூறியுள்ளார்.

போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணவோ; பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்தோ எந்தவிதமான நடவடிக்கையும் இலங்கை அரசால் எடுக்கப்படவில்லை என ஜெயலலிதா புகார் கூறினார்.

'கோட்டாபய ராஜபக்ஷவின் பேட்டியிலிருந்தே, இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்திருக்கிறது என்று மறைமுகமாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. உண்மையிலேயே இலங்கை ராணுவம் போர்க் குற்றம் செய்யவில்லை என்றால், அது தொடர்பான சர்வதேச விசாரணைக்கு தயார் என இலங்கை அரசு அறிவித்திருக்க வேண்டும்'என்று தமிழக முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார் இலங்கைப் பிரச்சினை தொடர்பில் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம், மனிதச் சங்கிலி போராட்டம், பிரதமருக்கு தந்தி,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்ற அறிவிப்பு, இறுதி எச்சரிக்கை என பல்வேறு கண்துடைப்பு நாடகங்களை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நடத்தியதாகவும், அப்போதெல்லாம் வாய்திறக்காத கோட்டாபய இப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விமர்சித்திருப்பது அந்தத் தீர்மானத்துக்கு தாக்கம் இருப்பதையே காட்டுகிறது என ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார்.

"சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது தான், இது போன்றதொரு பேட்டியை அளிப்பதற்கான துணிச்சலை கோத்தபயவுக்கு கொடுத்திருக்கிறது என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது."

சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது தான், இது போன்றதொரு பேட்டியை அளிப்பதற்கான துணிச்சலை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அளித்திருக்கிறது என்ற ஐயம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் வரை; சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்து அவர்களுக்குக் கிடைக்கும் வரை ஓயப் போவதில்லையெனவும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதற்கிடையே, பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. 2006ம் ஆண்டில் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மகிந்த, நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் தமது அரசியல், பொருளாதார சூழ்நிலைகளை தீர்மானிக்கும் அளவுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில், அதனை நிறைவேற்ற இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அரசாங்கத்துடனான பேச்சுக்களின்போது இணக்கம் காணப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், ஜனாதிபதியின் சகோதரரும் ஆலோசகருமான அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற தெரிவுக் குழு மூலமே அரசியல் தீர்வுத் திட்டத்துக்கு செல்ல முடியும் என்று தற்போது ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்தப் பின்னணியில், அண்மையில் கோட்டாபய ராஜபக்ஷ ஹெட்லைன்ஸ் டூடே தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி அரசியல் தீர்வுத்திட்டம் பற்றிய அரசாங்கத்தின் போக்கில் அவ நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்

      - நன்றி: http://www.bbc.co.uk/tamil/india/2011/08/110811_jayaongodhabaya.shtml

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடையாது - கோட்டாபய!

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் அந்நாட்டின் பாதுகாப்பு செயலருமான கோட்டாபய ராஜபக்ஷ, தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு கூடுதலான அதிகாரங்களை வழங்குவது சாத்தியமில்லை எனக் கூறியிருக்கிறார். ஹெட்லைன்ஸ் டுடே எனும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்டமே இலங்கை மக்கள் அனைவரும் ஒருமித்து வாழப் போதுமானது' என்று கூறியுள்ளார்.

‘இப்போது விடுதலைப்புலிகளும் இல்லை, மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இப்போது கூட உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. விரைவில் மாகாணசபை தேர்தல்களும் நடத்தப்படும், ஜனாதிபதி முதல்வர்களையும் அமைச்சர்களையும் நியமிப்பார். இதற்கும் மேல் செய்வதற்கு எதுவுமில்லை’ என்று கோட்டாபய கூறியதாக அச் செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.

விடுதலைப்புலிகளுடனான் மோதல்களின் இறுதிக்கட்டங்களில் பல்லாயிரக் கணக்கில் அப்பாவித் தமிழ்மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுவது குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை தேவை என்ற கோரிக்கை நியாயமற்றது என்றும் ஜனாதிபதி மகிந்தவின் சகோதரர் வாதிட்டுள்ளார்.

'அமெரிக்காவோ பிரிட்டனோ மட்டும் உலகமாகி விடாது, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், பல ஆப்பிரிக்க நாடுகள், தென் கிழக்காசிய நாடுகள் எங்கள் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றன, இந்தியாவும் ஆதரிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை' என்றும் கூறியதாக செய்திக்குறிப்பு கூறுகிறது.

தவிரவும், விசாரணை வேண்டும் என வற்புறுத்தும் அண்மைய தமிழக சட்ட மன்றத் தீர்மானம் இலங்கையில் நிலவும் யதார்த்தங்களை உணராமல் நிறைவேற்றப்பட்டதாகும். தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார் என்று கோட்டாபய கூறியதாக ஹெட்லைன்ஸ் டுடே தெரிவிக்கிறது

நன்றி: http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2011/08/110808_gotaontamils.shtml