கொலைக்கு முன்பாக களிக்கூத்து.முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் சாட்சிகளாகத்திகழும் காணொளிகளை, புகைப்படங்களை எடுத்து வெளியுலகுக்குத் தந்தவர்கள் சிறிலங்காப்படையிலிருந்த சிங்களவர்கள்தாம். அதுபோல் 1983 இல் நடைபெற்ற தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற இனக்கலவரத்தை ஞாபகப்படுத்தும் குறியீடாக விளங்குவது பொரளையில் காடையர்கள் முன் நிர்வாணமாக்கப்பட்டுக்கொல்லப்பட்ட தமிழரின் புகைப்படம். ஆடிப்பாடிக்கொண்டிருக்கும் இரத்தவெறி பிடித்த காடையர்கள் முன் , நிர்வாணமாகக்கூனிக்குறுகி நிற்கும் அந்தத்தமிழரின் நிலை ஈழத்தமிழரின் நிலையை எடுத்தியம்பும் ஒரு குறியீடு. அந்தப் புகைப்படத்தினை எடுத்தவரும் ஒரு சிங்களவரே சந்திரகுப்த அமரசிங்க என்னும் பெயரினைக்கொண்ட அவர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் 'அத்த' நாளிதழில் பணியாற்றிய பத்திரிகையாளர்களில் ஒருவர். 24.07.1983 அதிகாலையில் பொரளை சந்திக்கண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது.

1983 இனப்படுகொலையைப்பற்றிய நெஞ்சினை அதிர வைக்கும் கட்டுரையொன்றினை எழுதியவர் மைக்கல் றொபேர்ட்ஸ். இவரது கட்டுரை கவிஞர் சேரனின் மொழிபெயர்ப்பில் 'எண்ணித் துணிந்தே எடுத்த படுகொலை' என்னும் பெயரில் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டு காலச்சுவடு இதழில் வெளியானது. அக்கட்டுரையினை 'கறுப்பு ஜூலை நினைவாக பகிர்ந்துகொள்கின்றோம்.

இந்தக்கட்டுரையில் சிங்கள வழக்கறிஞரான பாஸில் பெர்ணாண்டோவின் ஜூலைப்படுகொலை பற்றிய 'ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்' கவிதையினையும் கட்டுரையாளர் உள்ளடக்கியிருக்கின்றார். 83 ஜூலைப்படுகொலைபற்றி வெளிவந்த கவிதைகளில் மிகவும் முக்கியமான கவிதையாக இதனையே நான் கருதுகின்றேன். வாசிக்கும்போது நெஞ்சினை அதிர வைக்கும் கவிதை. இது பற்றிக் கட்டுரையாளர் பின்வருமாறு குறிப்பிடுவார்:

"1985இல் இந்தக் கவிதையை முதல்முறை வாசித்தபோது என்னுடைய எலும்புகள் உறைந்தன. கவிதையில் இடம்பெற்ற சம்பவங்கள் கற்பனையானவை என நான் நினைக்கவில்லை. கவிதை தருகிற துல்லியமான வர்ணனையும் விவரங்களும் நேரடிச் சாட்சியம் இன்றிச் சாத்தியப்பட்டிருக்காது. நேரில் பார்த்த ஒரு சிங்களவரின் சாட்சியம். வலியுடன் ஆனால், சிங்களவர் என்ற வகையில் பாதுகாப்பான நிலையிலிருந்து பார்த்த ஒரு நேரடிச் சாட்சியம். இந்தச் சம்பவத்தை பாஸில் ஃபெர்னாண்டோ நேரடியாகப் பார்க்கவில்லை. நேரில் பார்த்தவர் பாஸிலின் நண்பர் ஒருவர். நாரஹேன்பிட்டியாவில் இருக்கும் தொழில் திணைக்களத்துக்கு அருகே சம்பவம் நடந்தது. வேறு பல வன்முறைச் சம்பவங்களை அந்த வாரம் நேரடியாகப் பார்த்திருந்தமையால், உயிருடன் கொளுத்திய சம்பவங்கள் வெகு சாதாரணமாக இடம் பெற்றன என்கிறார் பாஸில் ஃபெர்னாண்டோ"

பாஸில் ஃபெர்னாண்டோவின் கவீதை கீழே:

ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்

இறந்தவர்களைப் புதைப்பது
ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில்
இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக்
காரணம் ஏதுமில்லை
சத்தியமாகச் சொல்கிறேன்:
நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன்
சித்தம் குழம்பியவனாகவும் ஒருபோதும் இருந்ததில்லை
உங்களைப் போலவே
நானும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குபவன்
மேலும் அன்றாட வாழ்க்கையிலும்
நான் ஒரு யதார்த்தவாதி
எச்சரிக்கை உணர்வுள்ளவனும்கூட
மறந்துவிடு என்று அரசு ஆணையிட்டால்
உடனடியாகவே மறந்துவிடுகிறேன்
மறப்பதில் எனக்கிருக்கும் ஆற்றல் பற்றி எவருக்குமே ஐயமிருந்ததில்லை
என்னை ஒருவரும் குறை சொன்னதும் கிடையாது
எனினும் அந்தக் கும்பல் அந்தக் காரை
எப்படித் தடுத்து நிறுத்தியது என்பதை
இப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன்
காருக்குள் நாலு பேர்
பெற்றோர், நாலு அல்லது ஐந்து வயதில்
ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள்
ஏனைய கார்களை எப்படித் தடுத்து நிறுத்தினரோ
அப்படித்தான் இந்தக் காரையும் தடுத்து நிறுத்தினார்கள்
எந்த வேறுபாடும் இல்லை
குதூகலம் கொப்பளிக்கின்ற மனநிலையில்
ஒரு சில கேள்விகள் செய்வதைப்
பிழையறச் செய்ய விரும்பும் கவனமாய் இருக்கலாம்
பிறகு செயலில் இறங்கினர் வழமைபோல
பெட்ரோல் ஊற்றுவது, பற்றவைப்பது போன்ற விடயங்கள்
ஆனால், திடீரென்று யாரோ ஒருவன்
காரின் கதவுகளைத் திறந்தான்
அழுது அடம்பிடித்துப் பெற்றோரைவிட்டு விலக மறுத்த
இரண்டு குழந்தைகளையும் வெளியே இழுத்தெடுத்தான்
குழந்தைகளின் உணர்வுகளைக் கவனத்தில் எடுக்காமல் இருப்பது
சில சமயங்களில் குழந்தைகளுக்கு நல்லது என
அவன் எண்ணியிருக்கக்கூடும்
துரிதமாக இயங்கிய இன்னொருவனோ தீக்குச்சியைக் கிழித்தான்
சூழவர எரிந்துகொண்டிருந்த பலவற்றோடு
இந்த நெருப்பும் சேர்ந்துகொண்டது
அருகே நின்று தமது சாகசங்களைப் பற்றிப்
பேச ஆரம்பித்தனர் கொஞ்சப் பேர்
கலைந்து போனார்கள் ஒரு சிலர்
காருக்குள் இருந்த இருவரும் என்ன எண்ணியிருப்பார்கள்
என்பதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள்
சமாதான விரும்பிகளாக மக்கள்
தமது வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர்
அப்போதுதான் திடீரென உள்ளேயிருந்தவர்
கார்க் கதவை உடைத்து வெளியே பாய்ந்தார்
சட்டையிலும் தலைமயிரிலும் ஏற்கனவே தீ பற்றிவிட்டிருந்தது
குனிந்தவர் தன் இரண்டு குழந்தைகளையும் வாரி எடுத்தார்
எங்கும் பாராமல் கவனமாகத் திட்டமிட்டு எடுத்த முடிவை
செயல்படுத்துவதுபோல உறுதியுடன் காருக்குள் திரும்பி ஏறினார்
கதவை மூடினார்
தனித்துவமான அந்த ஒலியை நான் கேட்டேன்
எரிந்தழிந்த கார் இப்போதும் தெருவோரம் கிடக்கிறது
ஏனையவற்றோடு இன்னும் சில நாட்களில்
மாநகர சபை அதனை அகற்றக்கூடும்
தலைநகரின் தூய்மையே ஆட்சியாளரின் தலையாய பணி.

காலச்சுவடு இதழில் வெளியான மைக்கல் றொபேர்ட்ஸின் கட்டுரை இதோ: http://www.kalachuvadu.com/issue-103/page27.asp