சூரிச் கலந்துரையாடல்:
முரண்பாடுகளுக்கிடையிலான இணக்கமா? முன்னேற்றத்தின் அறிகுறியா?
இலண்டனைத்
தளமாகக் கொண்டியங்கும் "தமிழர் தகவல் மையம்" ஏற்பாட்டில் சுவிட்சலாந்திலுள்ள
சூரிச்சில் இல்ங்கையின் பல்வேறு தமிழ் அமைப்புகள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல்
நவம்பர் 20, 2009 இலிருந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் பலவேறு முரண்பட்ட கருத்துகளுடன் செயற்பட்டு
வந்துள்ள தமிழ் அமைப்புகளுக்கிடையிலான கலந்துரையாடலென்பதால் இதற்கொரு
முக்கியத்துவமுண்டு. முரண்பாடுகளென்பவை தவிர்க்கப்பட முடியாதவை.
முரண்பாடுகளுக்கிடையிலொரு ஆக்கபூர்வமான இணக்கத்தைக் காண்பதன் மூலம் அனைத்துத்
தமிழ் அமைப்புகளும் ஒன்றுபட்டுச் செயற்படுவதன் அவசியத்தை பதிவுகள் எப்பொழுதுமே
வலியுறுத்தி வந்துள்ளதை வாசகர்களாகிய நீங்கள் அறிவீர்கள். இத்தகைய
இணக்கமும், ஒற்றுமையும் இல்லாமலிருந்ததுதான் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைக்குக்
காரணம். பல்வேறு சக்திகளும் (பிராந்திய மற்றும் சர்வதேச) இதுவரைகாலமும் தமிழ்
மக்களைப் பிரித்தாண்டு வந்ததற்குக் காரணம் இதுவே. முரண்பாடுகளை நட்புரீதியாக
அணுகுவதற்குப் பதிலாக பகை முரண்பாடுகளாக்கியதன் விளைவே இன்றைய ஈழத் தமிழர்களின்
நிலைக்குக் காரணம். இந்நிலையில் பல்வேறு முரண்பட்ட பிரிவினருக்குமிடையிலான
இத்தகைய கலந்துரையாடல்கள், கூட்டங்கள் எதிர்காலத்தில் நல்ல பல விளைவுகளை
உருவாக்குவதற்கான சாத்தியங்களைக் கொண்டிருப்பதால் பதிவுகள் இத்தகைய சந்திப்புகளை,
கலந்துரையாடல்களை வரவேற்கிறது. இத்தகைய சந்திப்புகள், கலந்துரையாடல்கள் எந்தவித
நிபந்தனைகளுமற்று, உளத்தூய்மையுடன் அமைந்திருப்பது மிகவும் அவசியம். இதுவரை கால
ஈழத்தமிழர்களின் வரலாற்றிலிருந்து , பெற்ற அனுபவங்களிலிருந்து பெற்ற தெளிவுடன்,
எதிர்காலம் அணுகப்படவேண்டியது அவசியம். உணர்ச்சிகர அரசியல் தவிர்க்கப்பட்டு,
யதார்த்தபூர்வமான முறையில் இத்தகைய கலந்துரையாடல்களில் ஈழத்தமிழர்களின் சமூக
மற்றும் அரசியற் பிரச்சினைகள் அணுகப்பட வேண்டும். மேலும் இதுவரை காலமும் நிலவிய
ஈழத்தமிழர்களின் அரசியலில் நிலவிய மாற்றுக் கருத்துகளைச் சகிக்காத போக்கு
முற்றாகக் களையப்பட வேண்டும். மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். இதுவரை காலமும்
தமது அரசியற் கருத்துகளுக்காக உயிரிழந்த மக்கள் மற்றும் போராடி மரணித்த போராளிகள்
அனைவரும் நினைவு கூரப்பட்டு மதிக்கப்பட வேண்டும்.
மானுடக்
கையொன்றின் ஐந்து விரல்களும் ஒரே மாதிரியானவை அல்ல. பல்வேறு தன்மைகளுடன்
முரண்பட்டு விளங்குவன. இவ்விதமாக முரண்பட்டு விளங்கும் ஐந்து விரல்களின்
உதவியுடன் ஆக்கபூர்வமான செயல்களை ஆற்ற முடியும். அதே சமயம் அழிவினைத் தரவல்ல
செயல்களையும் ஆற்ற முடியும். இயற்கை இவ்விதமான இருவித போக்குகளையும் காட்டி
நிற்கிறது. இதுவரை காலமும் ஈழத்தமிழர் அமைப்புகள் உள்முரண்பாடுகள் விடயத்தில்
அழிவுபூர்வமான பாதையினைத் தேர்ந்தெடுத்திருந்தன. இனிமேலாவது ஆக்கபூர்வமான
செயற்பாடுகளுக்காக தமது முரண்பாடுகளைப் பயன்படுத்தட்டும். அதன் மூலம்
ஈழத்தமிழர்களின், ஈழத்தின் அனைத்து மக்களினதும் மற்றும் மானுடர்களின் நன்மைக்காக,
உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் போக்கும் வளரட்டும். அதற்கு இத்தகைய
கலந்துரையாடல்கள் உதவட்டும்.
மணிக்கு 65,000 மைல்கள் வேகத்தில் , விரியும் வெளியினூடு விரைந்து கொண்டிருக்கும்
சின்னச்சிறிய காற்று மண்டலத்துடன் கூடிய கோளமொன்றினுள் இருந்து கொண்டு
குத்துவெட்டுகளுடன் காலத்தைக் கழித்து அழிவதற்குப் பதில் இந்த மானுட இனம் 'யாதும்
ஊரே! யாவரும் கேளீர்' என்னும் பரந்த மனப்பாங்குடன் வாழ, இச்சின்னஞ்சிறிய
கோளத்தின் சூழலைக் காக்க, முதலில் மானுடர்களுக்கிடையில் நிலவும் இன, மத, மொழி
மற்றும் வர்க்கரீதியிலான பல்வேறு முரண்பாடுகள் பிராந்திய மற்றும் சர்வதேசரீதியில்
களையப்பட வேண்டும். இவ்விதமாக இப்பூமிப் பந்தின் ஒவ்வொரு திக்கிலும் வாழும்
மானுடர் நினைத்து இயங்கத் தொடங்கினாலே இச்சின்னஞ்சிறிய கோளில் அமைதிப் பூக்கள்
பூத்துக் குலுங்கும் சூழல் ஏற்படும். அவ்விதமானதொரு இலக்கினை நோக்கிய நீண்ட
பயணத்தை நோக்கிய ஆரம்ப அடிகளாக இத்தகைய கலந்துரையாடல்கள் விளங்கினால் அதுவே
போதுமானது.
நந்திவர்மன்
- |