நான் அறிந்த ஏ.ஜே.கனகரத்னா
-யோகி தம்பிராசா -
முதலிலேயே ஓர் உண்மையை நான் சொல்லிவிடவேண்டும். ஏ.ஜே என்னுடைய உற்ற நண்பன் அல்ல. ஆனால் நான் அவரில் பெரு மதிப்பு வைத்திருந்தேன். அவருடைய ஆற்றலை அந்தக் காலத்தில் இருந்தே உணர்ந்தவன். நான் சொல்லப்போகும் சம்பவம் 50 வருடங்களுக்கு முன்பாகவே நிகழ்ந்தது. ஆகவே என்னுடைய ஞாபகங்கள் பழுதுபட்டுப்போயிருக்கலாம். அவை நிச்சயமாயும் இல்லை. நான் பெப்பினை (அப்படித்தான் அவரை அழைப்போம்) 1956ல் முதன்முதலாகச் சந்தித்தேன். பெப்பின் பெரதனியா பல்கலைக்கழகத்தில் ராமனாதன் விடுதியில் தங்கியிருந்தார். நானும் அங்கேயே இருந்தேன். ஆகவே அவர் என் விடுதித் தோழர். அங்கே இருந்த ஓய்வு அறையில் அவர் எபோதும் காணப்படுவார். அங்கே இருந்த ஒரு மேசை, கதிரைபோல அவரும் அசையாமல் இருப்பார். சேர் ஐவோர் ஜென்னிங்க்ஸ், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை முன்னோடியாக வைத்து நிர்மாணித்த பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையில் அவர் ங்கிலத்தை சிறப்புப் பாடமாக எடுத்திருந்தார்.
நான் அன்று காலை பிந்தி எழும்பிவிட்டபடியால் என் காலை உணவை தவறவிட்டுவிட்டேன். பெப்பினும் அப்படியே. இருவரும் அரியரத்தினாவின் உணவகத்தில் இனிப்பு பாண் சாப்பிட்டோம். அதை உள்ளே தள்ள பால் விடாத தேநீர் அருந்தினோம். அதன் கசப்பைபோக்க சிகரெட்டை பற்றவைத்து சொண்டிலே தொங்கவிட்டோம். ஏ.ஜே அன்றைய டெய்லி நியூஸ் பேப்பரை ஏதோ அதற்குமேல் படுக்கப்போவதுபோல நிலத்திலே நல்லாக விரித்து வைத்து வாசிக்கத் தொடங்கினார். களையான அவருடைய முகத்தில் எப்பவும்போல ஒரு மௌனமான புன்னகை வீசியது. அது என்னை நோக்கியும் இருக்கும், உலகத்தை நோக்கியும் இருக்கும். யாராவது அவரைத் தெரிந்தவர்கள் அவரைத் தாண்டிப் போனால் நாலைந்து வார்த்தை பேசுவார். ஆங்கிலத்தை சிறப்பு பாடமாக எடுப்பவர் என்பதால் தாராளமாக நாலு எழுத்து வார்த்தை விழும்.
நாள் முழுக்க பெப்பின் என்ன செய்வார். பல்கலைக்கழகம் என்று ஒன்றிருக்கிறது, அதிலே ஆங்கில சிறப்பு பாடம் விரிவுரை நடக்கிறது. அதற்கு நான் போகவேண்டும் என்ற கவலையே அவரிடம் இல்லை. அவர் அந்தப் பக்கம் போனதைப் பார்த்த சாட்சி ஒன்றுகூடக் கிடையாது. பல்கலைக்கழக உள்பாதைகளிலே அலைவார். அதைத் தாண்டி வெளியே பயணித்ததும் இல்லை. அல்லது விதம் விதமாக அலங்கரித்து, கூட்டம் கூட்டமாகச் செல்லும் பெண்களைத் திரும்பிப் பார்த்ததும் கிடையாது.
அதே காலத்தில் அங்கே படித்த தமிழ் தூண்கள் சிவத்தம்பியுடனோ, கைலாசுடனோ ஏ.ஜே நட்பாக இருந்ததை நான் பார்க்கவில்லை. தமிழில் பேசிக்கூட கேட்டதில்லை. ஏனெனில் அவர் வீட்டு மொழிகூட ஆங்கிலம்தான். நல்ல வசவு வார்த்தை ஆங்கிலத்தில் கிடைக்காவிட்டால் மாத்திரம் ஒன்றிரண்டு தமிழ் வசவு வார்த்தை அவரிடமிருந்து வெளிப்படும். அவருடன் படித்த சக மாணவர்களுக்கெல்லாம் அவருடைய ஆங்கில புலமை தெரியும். அவரிடம் மிகவும் மதிப்புடனேயே நடந்துகொள்வார்கள். அவர் வாரத்துக்கு ஒரு முறை பேராசிரியர் லுட்விக்கின் விரிவுரைகளுக்கு போயிருந்தாலே காணும். அவர் போகவில்லை. சோதனை முடிவில் என்னைப்போல மூன்றாம் வகுப்பில் சித்தியடைந்தார். அப்பொழுதுகூட அவர் முகத்தில் அதே மௌனப் புன்னகைதான். ஏ. ஜேயுடனான தொடர்பு எனக்கு அத்துடன் விட்டுப்போயிற்று.
ஆனால் பல வருடங்களுக்கு பின்னர் டெய்லி நியூஸ் பத்திரிகையில் அவர் மொழிபெயர்த்த தமிழ் சிறுகதை ஒன்று வந்திருந்தது. அப்பொழுதுதான் அவருக்கு தமிழ் வாசித்துப் படிக்கத்தெரியும் என்பதை நான் உணர்ந்தேன். அந்த மொழிபெயர்ப்பு மிகத் திறமாக இருந்தது. ஒரு மொழிபெயர்ப்பை படிக்கும் உணர்வே வரவில்லை. ஒரு தமிழ் சிறுகதையின் உயிர் சிதைக்கப்படாமல் அப்படியே வெளிவந்திருந்தது. அவர் தொடர்ந்து இலங்கை தமிழ் எழுத்தாளர்களை Times of Ceylon, Illustrated Weekly of India பத்திரிகைகளிலும் அறிமுகம் செய்தார்.
அதைத் தொடர்ந்து கனடாவில் Lutesong and Lament புத்தகம் வெளிவந்தபோது அவருடைய அருமையான மொழிபெயர்ப்புகளைக் கண்டேன். கவிதைகள் சரி, சிறுகதைகள் சரி அவற்றின் ஆத்மா வெளிவரும்படி செய்திருந்தார். எங்கள் தமிழ் படைப்பாளிகள் பலரை உலக வெளிச்சத்தில் இழுத்துவிட்ட பெருமை அவரையே சேரும்.
மத்து என்ற அவருடைய நூல் 2000 ஆண்டளவில் வெளியானபோது நான் பிரமித்துப்போனேன். பதினொரு தேர்ந்த ஆங்கில நூல்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்திருந்தார். அப்படி ஒரு நூலை நான் வேறு எங்கும் பார்த்ததில்லை. தமிழ் மாணவர் ஒவ்வொருவருடைய கையிலும் இருக்கவேண்டிய அவசியமான புத்தகம். ஆங்கிலத்திலேயே பேசி வளர்ந்த, படித்த ஒருவருடைய தமிழ் புலமை வியக்க வைத்தது. சமர்ப்பண பக்கத்தைப் பார்த்தபோது சிரிப்பு வந்தது. 1956ம் ஆண்டு நிறைவேற்றப் பட்ட தனிச் சிங்களச் சட்டத்துக்கு அந்த நூலை அர்ப்பணித்திருந்தார். அந்தச் சட்டம் வந்திராவிட்டால் அவர் தமிழ் படித்திருக்கமாட்டார், அந்த நூலும் வெளியாகியிருக்க முடியாது. எனவே அது சரிதான். கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் பல நல்ல காரியங்களை செய்திருக்கிறது. சமீபத்தில் ஏ.ஜே ஆஸ்பத்திரியில் நோய்வாய்ப்பட்டு கிடந்தபோது அவருடைய தமிழ் தொண்டை மெச்சி ஒரு விசேட விருதையும், பணமுடிப்பு ரூபா ஐம்பதாயிரத்தையும் வழங்கி அவரைக் கௌரவித்திருக்கிறது. ஏ.ஜே இந்த விருதுக்கு மிகவும் தகுதியானவர். தகுந்த நேரத்தில், தகுந்தவருக்கு கொடுத்த பரிசு. இந்த விருதும், பணமும் ஒரு வாரம் முன்புதான் ஆஸ்பத்திரி கட்டிலில் ஏ.ஜே படுத்திருக்கும்போதே அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் நான் கொழும்பு போகிறேன் அப்போது அவரைச் சந்தித்து வாழ்த்து சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் முந்திவிட்டார்.
ஏ.ஜே, உன் சாதனைகளை மௌனமான சிரிப்புடன் முடித்ததுபோல உன் மரணத்தையும் முடித்தாய். போய் வா, தோழா.
யோகி தம்பிராசா
ரொறொன்ரோ, 12 ஒக்டோபர் 2006
பதிவுகளுக்கு அனுப்பி உதவியவர்:amuttu@gmail.com
ஏ.ஜே.என்றொரு- மு.பொன்னம்பலம் (தினக்குரல்).....உள்ளே
ஈழத்து இலக்கிய செழுமைக்கு
பணிபுரிந்த விமர்சக அறிஞன் ஒருவனின் மறைவு! ஏ.ஜே.கனகரத்னா பற்றிய ஒரு
நினைவுக் குறிப்பு -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
(தினக்குரல்)-
உள்ளே