இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரல் 2008 இதழ் 100  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!
சூமன் ஹார்தி (Choman Hardi) – பதினோரு குர்திஸ் கவிதைகள்!

- யமுனா ராஜேந்திரன் -

குர்திஸ் பெண் கவிஞரான சூமன் ஹார்திமொழிபெயர்ப்பாளர் எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன்

குர்திஸ் பெண் கவிஞரான சூமன் ஹார்தி ஈராக்கியக் குர்திஸ்தானைச் சேரந்தவர். தற்போது லண்டனில் அகதியாகத் தனது கணவருடனும் குழந்தைகளுடனும் வாசித்து வருகிறார்.

1

எனது அப்பாவின் புத்தகங்கள்

அது 1988 ஆம் ஆண்டின் இலையுதிர் காலம்

எனது தந்தையின் புத்தகங்கள் கலைந்தபோது
ஒன்றன் பின் ஒன்றாய் அவை அலமாரியிலிருந்து விழுந்தன
அவரின் கையெழுத்தைச் சுத்தமாக அழித்துக் கொண்டன
வேறுபட்ட தலைவிதியை அவைகள் தேர்ந்து கொண்டு பிரிந்து நின்றன.

மனசாட்சியுள்ள புத்தகங்கள் பிரித்தெடுக்கப்பட்டன

மிக உறுதியான புத்தகங்கள் தமக்குத் தாமே தீயிட்டுக் கொண்டன
மறுத்து மிகவும் கலகம் செய்த புத்தகங்கள்
இரவில் தம்மை மாய்த்துக் கொள்வதெனத் தேர்ந்து கொண்டன.

பிற பிறிதொரு வழியைத் தேர்ந்தன
மறுபடியும் உலகின் வெளிச்சத்தைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கையில்
தாமே ஒரு தோலால் ஆன பொதிப்பைக்குள் சென்று சேர்ந்து
பின்தோட்டத்தில் புதைந்து கொண்டன
பல வருடங்கள் கழித்து
செதில் செதிலாகி ஈரம் படிந்து மக்கிப் போய்
மறுபடி கண்டுபிடிக்கப்படவென

இதுவல்லாதவை பாதுகாப்பான வீடுகளுக்குச் சென்றன
அங்கே அவை என்றும் கைவிடப்படப் போவதில்லை
பிறரின் வீட்டுப் புத்தக அலமாரிகளில்
அவைகள் தம்மை ஒப்புவித்துக் கொண்டன

தமது இரகசியங்களைத் தமக்குள்ளாகவே புதைத்துக் கொண்டு


2

எனது அம்மாவின் சமையலறை


எனது அம்மாவின் சமையலறைக்கு நான் வாரிசு

சில உயரமாயும் மெலிந்தும்
சில சிறுத்தும் பருத்தும் தெரியும்
அவளது மூக்குக் கண்ணாடிக்கு

வேறுபட்ட கலவைகளிலிருந்து தேர்ந்த அசிங்கமான
அவளது தட்டுக்களுக்கு

பல்வேறு சந்தர்ப்பங்களில் அவசரத்தில் வாங்கிய
அவளது கோப்பைகளுக்கு

அவள் வெளியில் எறிய விரும்பாத துருப்பிடித்த பாத்திரங்களுக்கு

‘இப்போதைக்கு எதையும் வாங்காதே’ அவள் சொல்வாள்
‘இவற்றையெல்லாம் சீக்கிரமாக உனக்கே கொடுத்துவிடுவேன’

இன்னொரு தப்பித்தலுக்கு எனது தாய்
தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறாள்

முதன் முதலாக வீடு அவளது இருப்பிடமாகிவிட்டது
மறுபடி கட்டப்பட்ட அந்த வீட்டுக்கு அவள்தான்
இருக்கைகள் தயார் செய்தாள்
69 வயதான அவள்
மறுபடியொரு சிராயப்பிலிருந்து துவங்க நினைக்கிறாள்

இது அவளுக்கு ஒன்பதாவது முறை

அவள் தனது வீட்டை விட்டு வர நேர்ந்த பொழுதெல்லாம்
இழந்துவிட்ட அவளது இருக்கைகள் குறித்து
அவள் பேசியதேயில்லை

வீட்டின் முன்றிலில் மூங்கில்தட்டி வைத்துப் படரவிட்டிருந்த
திராட்சைச் செடிகள் தவிரவும்
பொருட்களுக்காக அவள் கவலைப்பட்டதேயில்லை

திரட்சைகள் கனிவதற்காக அவள் பாடல்கள் பாடுவாள்
பூச்சிகளிடமிருந்து திராட்சைகளைக் காப்பாற்றி மூடுவதற்கென
அவள் பைகள் தைப்பாள்

அவளது மரங்களை மரபுரிமையாகப் பெறுதல் என்பது மட்டும்
என்றும் எனக்குச் சாத்தியமில்லை.



3

என் இதயத்தை நான் ஏந்தியிருக்கிறேன்


சூரியக் கதிர்களை விடவும் பிரகாசமானவனே
நிலவொளியைக் காட்டிலும் ஒளிர்பவனே

என் இதயத்தை என் கைளில் ஏந்தியிருக்கிறேன்
எனது கைளை உன் கைகளின் மீது வைத்திருக்கிறேன்

நான் உன்னுடன் வந்திருக்கிறேன்
நீ தான் எனது திராட்சை ரசம்
எனது எல்லா தாகங்களினதும் தாதி நீ தான்

பைத்தியகாரத்தனமான போதையுடன் கேட்கிறேன்
எங்கே என்னை அழைத்துச் செல்கிறாய்?

எனது ஆன்மாவின் இருட்டு மூலைகள் அனைத்தும்
அறிந்தவன் நீ
எனது இதயத்தின் விநோதமான ஏக்கங்களையும் அறிந்தவன் நீ

எனது இயத்தை உன் கைகளில் கொடுத்துவிட்டேன்
சூரியக் கதிர்களை விடவும் பிரகாசமானவனே

நிலவொளியைக் காட்டிலும் ஒளிர்பவனே
நான் உன்னோடு வருகிறேன்

நீ எங்கெங்கு சென்றாலும் அங்கெல்லாம்



4

‘கிலீ ஸவாயா’!


‘கிலீ ஸவாயா’ அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்

முதியவர்கள் இளைஞர்கள் ஆண்கள் பெண்கள் என அனைவரும்
‘கிலீ ஸவாயா’ என
அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்

இதுதான் தங்களது மராத்தான் பந்தயம் என்றும்
நமது உடலை இது ஆரோக்கியமாக வைத்திருக்கும் எனவும்
தமக்கிடையில் இளைஞர்கள் நகைச்சுவையாகப் பேசிக் கொள்வார்கள்

அவர்கள் சளைக்காமல் ஓடிக் கொண்டிருப்பார்கள்
சில வேளைகளில்
தம் முகத்தில் எந்தச் சலனமும் இல்லாமல் ஓடிக் கொண்டிருப்பார்கள்

பிற சமயங்களில் முகத்தில்
பயத்தின் வியர்வை படிந்திருக்க ஓடிக் கொண்டிருப்பார்கள்.

பின்திரும்பிப் பார்ப்பார்கள்
மறுபடி ஓடுவார்கள்

மறுபடி வேடிக்கைக்காகப் பின்திரும்பிப் பார்ப்பார்கள்
சில வேளை துப்பாக்கி வெடிச் சப்தம் கேட்டு அவர்கள் ஓடுவார்கள்
அல்லது
நகரின் சதுக்கத்தில் தமது டாங்கியில் இருந்து குதிக்கும்
கொடூரமான ராணுவத்தினனின் தோற்றத்தைக் கண்டு

சில சமயம் விபத்துப் போல பிற யாராவது ஓடிக் கொண்டிருந்தால்
அவர் பின்னாடி எல்லோரும் ஓடுவார்கள்

சில வேளைகளில் ராணுவ டாங்கிகளால் அவர்கள் சூழப்படுவார்கள்
எங்கேயும் ஓடமுடியாதபடி அகப்பட்ட ஆட்டுமந்தை போல
அவர்கள் நிற்கச் செய்யப்படுவார்கள்

தமது நண்பர் ஒருவரின் மரணத்தைச் சாட்சியாக இருந்து
பார்க்கச் செய்யப்படுவார்கள்

‘நீதி நீடு வாழ்க’ எனக் கைதட்டிக் கோஷமிடச் செய்யப்படுவார்கள்.

- குர்திஸ் மொழியில் ‘கிலீ ஸவாயா’ எனில் உடைத்துத் திறத்தல் என அர்த்தம். நிலத்தினை அல்லது மாதுளம் பழத்தினைச் சுட்ட இச்சொல்
பயன்படுகிறது. 1980 களில் மேலே சொன்ன சமூக நிலைமைகளை விளக்க இச்சொல் பயன்படுத்தப்பட்டது.-



5

எல்லையில்


‘இந்ந நாட்டில்
இதுதான் உங்களுக்குக் கடைசி சோதனைச் சாவடி’
நாங்கள் ஒரு மிடறு தண்ணீர் குடித்தோம்
சீக்கிரமே அனத்துமே வேறுவிதமான சுவையாக இருக்கப் போகிறது
என நாங்கள் நினைத்தோம்

எங்கள் கால்களது கீழிருந்த நாடு விரிந்தது
பெருத்த இரும்புச் சங்கிலிகளால் நாடுகள் பிரிக்கப்பட்டிருந்தது

எனது தங்கை குறுக்கே ஒரு காலை வைத்தாள்
‘இங்கே பாருங்கள்’ என அவள் எங்களிடம் சொன்னாள்
‘எனது வலது கால் இந்த நாட்டில்
எனது இடது கால் வேறு நாட்டில்’
என்றாள் அவள்
எல்லைக் காவலர்கள் ‘காலை எடு’ என்றனர்

எனது அன்னை சொன்னாள்:
நாம் எமது சொந்த நாட்டுக்குப் போகிறோம்
அங்கு சாலைகள் சுத்தமாக இருக்கும் என அவள் சொன்னாள்
நிலவெளிகள் அழகாக இருக்கும் என
மககள் மிகவும் அன்பாக இருப்பார்கள் என அவள் சொன்னாள்

மழையில் மிகப் பல குடும்பங்கள் காத்திருந்தன
‘வீட்டை என்னால் நுகர முடிகிறது’ என யாரோ சொன்னார்கள்
எனது அன்னை அழத் தொடங்கினாள்
அப்போது எனக்கு ஐந்து வயது

சோதனைச் சாவடியில் நாங்கள் காத்திருந்தோம்

எல்லையின் இரு பக்கங்களையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டு
இலையுதிர்கால நிலம் அப்பக்கத்திலும் விரி;ந்திருந்தது
அதே நிறத்தில் அதே வடிவத்தில்
இரும்புச் சங்கிலியின் இரு பக்கமும் மழை பெய்தது

எமது ஆவணங்கள் சரிபார்க்கப்படும் வரை நாங்கள் காத்திருந்தோம்
எமது முகங்களும் துப்புரவாகச் சோதனையிடப்பட்டது
பிற்பாடு எங்களை அனுமதிப்பதற்காக
இரும்புச் சங்கிலிகள் அகற்றப்பட்டது
ஒருமனிதன் குனிந்து புழதியில் நாட்டை முத்தமிட்டான்

அதே மலைகளின் தொடர்சங்கிலிகளால்
நாங்கள் மறுபடியும் அணைத்துக் கொள்ளப்பட்டோம்


6

என் விருப்பங்கள்


எனது அப்பா என்ன விரும்பினாரோ
அதனை அவர் பெறவேயில்லை
எமது அப்பா எங்களுக்கு எதை நேசிக்கக் கற்றுக் கொடுத்தாரோ
அது இன்னும் எங்களுக்குக் கிடைக்கவில்லை

எமது குலுங்கும் காதணியின் சப்தத்தை உணர்ந்தாலோ
நாங்கள் சிவப்பு உடை உடுத்தியிருந்தாலோ
எமது கூந்தலுக்கு வாசனைத் திரவியம் பூசியிருந்தாலோ
எமது அப்பா அகற்றிவிடுங்கள் என்பார்
தமது இழந்து விட்ட மகன்களுக்காக அரற்றும்
எமது அண்டை வீட்டார் பற்றி அப்பா எம்மிடம் சொல்வார்

1988 ஆம் ஆண்டு
மரணம் எங்கு நிறைந்திருக்க ஆன்மாவற்று கிராமங்கள்
விஷமூட்டப்பட்டதைப் பற்றிச் சொல்வார்
பெரும் யுத்தத்தின் முடிவு பற்றிப் பேசுவார்
அதன் அர்த்தம் மறுபடியும் எம்மை அழிப்பதற்கான
பெரும் தாக்குதலுடன் அவர்கள் வருவார்கள் எனச் சொல்வார்

அப்பா கதறுவார்

வசந்தத்தின் முதல் தளிர்களை நுகரும்போது
என்ன நடந்தது என்பதை அறியாத நிலையில்
சந்தோஷமாயிருக்கும் குழந்தைகளின் முகங்களைப் பார்க்கும்போது

‘அமெரிக்க இந்தியர்களைப் போல
நமது போராட்டமும் திரைப்படத்திற்கான கதைகளாகும்’
என் ஆழ்ந்த சோகத்துடன அவர் சொல்லிக் கொண்டிருப்பார்

எமது தந்தை தனக்குள்
என்ன விதமான போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்திருப்பார்
என நான் நினைத்துப் பார்க்கிறேன்.

துக்கமிகுதியில் கல்லறைக்குக் போகக்கூட மனமின்றியிருந்த
அண்டை வீட்டார்கள் பற்றி
நான் நினைத்துப் பார்க்கிறேன்.

மனித வடிவிலிருந்து ராணுவத்தினரை நான் யோசிக்கிறேன்
‘உமது சொந்தத் தசையைப் புசிக்கும் இடத்திற்கு
உன்னை நாங்கள் கூட்டிச் செல்கிறோம்’ எனச் சொன்ன ராணுவத்தினரை

எமது தந்தை தனக்குள்
என்னவிதமான போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்திருக்கிறார் என
நான் நினைத்துப் பார்க்கிறேன்.


7

பயங்கரம்


அதே பிம்பம் எனது அன்னையை
ஒவ்வொரு இரவிலும் உலுக்கிக் கொண்டிருந்தது

பின்னால் கட்டப்பட்ட கைகளுடன் தொங்கவிடப்பட்ட எனது அப்பா
அவரது இளம் இரத்தததை உறிஞ்சி மேலே பறந்து கொண்டிருக்கும்
அவர் மிகவும் வெறுத்த அந்தக் கொழுத்து பூச்சிகள்
அதன் இரைச்சல் எனது அன்னைக்குக் கடுங்கோபமூட்டும்

அவர் திரும்பி வந்தார் வீங்கிய உடலுடன்
நீலம் பாரித்த விரல் நகங்களுடன்
செவிப் பொட்டில் திறந்த காயத்துடன்

பிற்பாடு அவர் முன்னைப் போல் எப்போதும் இருக்கவேயில்லை

அவர் திரும்பி வந்தார்

பெரும்பாலானவர்களுக்கு அப்படி வாய்க்கவில்லை.


8

எனது குழந்தைகள்


சரளமான ஆங்கிலத்திலும் அரைகுறை குர்துவிலும் என் குழந்தைகள்
தமக்குள் பேசிக் கொள்வதை நான் கேட்டிருக்கிறேன்

எப்போதெல்லாம் அவர்களோடு நான் முரண்படுகிறேனோ
அப்போதல்லாம் அவர்கள்
தமக்குள் ஒருவரையொருவர் சமாதானப் படுத்திக் கொள்வார்கள் :

‘அம்மாவைப் பற்றி அதிகம் கவலைப்படாதே அவள் குர்திஸ்காரி’

எனது வீட்டிலேயே நான் அந்நிய நாட்டவளாகி விட்டேனா?



9

கயிறுகள்


மரத்தின் ஒரு கிளையிலிருந்து
ஜன்னல்வரை இழுத்தக் கட்டிய கயிற்றில் துணி உலர்த்தலாம்

உல்லாசப் பயணமொன்றின் போது
ஊஞ்சல் ஆடுவதற்காகக் கயிறு கட்டினோம்
அது எனது குண்டியில் காயம் உண்டாக்கியதென
அம்மா அதற்கு சிறப்பான பட்டு மெத்தை ஒன்று செய்து தந்தாள்

ஒரு கோடைக் காலத்தில் நாங்கள்
எமது முன்வாசல் கம்பியில் ஊஞ்சல் கட்டி விளையாடினோம்
அண்டை வீட்டார்களும் எம்மோடு வந்து விளையாடினார்கள்

எமது வாழ்வை இறுக்கப் பிணைக்கிறது கயிறு
நம்மோடு இழுத்த இழுப்பிற்கு இழுபடுகிறது கயிறு
நம்மைப் பின்தள்ளவும் கயிறு

நமது சகோ¡தர்களைத் தூக்கிலிடவும் கயிறு.
தூக்கிலிடப்பட வேண்டும் எனத் தண்டனை விதிக்கப்பட்டாலும் கூட
ரோஜ்ஜினது உடலைத் துண்டு துண்டாகத்தான்
அவனது பெற்றோர்களிடம் அவர்கள் கொடுத்தார்கள்

வசந்த காலத்தில் பயணம் செய்வதை நினைவுபடுத்தும்
நீலநிறக் கயிறுகள்
தாகமுற்ற புள்வெளிகளுக்கு நீர்வார்க்கும்
அழகான வானத்தை ஞாபகமூட்டும்

அந்தக் காலங்களில் தூய நீலத்தைப் பற்றி நாங்கள் பேசுவோம்

கயிறு இன்னும் கூட தீங்கற்றதாகத்தான் இருக்கிறது.


10

பதுங்குகுழி இரவுகள்


இதுவென்ன வாணவேடிக்கையா அல்லது நெருப்பா?
ஓவ்வொரு நாளும் இதுதான் கதை

பதுங்குகுழிக்குள் போகும்போதெல்லாம் புகைநாற்றம் அடிக்கும்
சிவப்பு வெடிச் சத்தங்கள் வானத்தை உரசிச் செல்லும்போது.

நாங்கள் பதுங்கு குழிக்குள் போனவுடன் ஒரு சுவரொட்டி கீழே வீழும்
சுவறிலுள்ள வெள்ளைப் பிரதேசம் நிறம் மாறுவது தெரியும்.

எனது சகோதரர்கள் சிகரெட் புகைக்கிறார்களா
என அப்பா சந்தேகத்துடன் கேட்பார்.
இல்லையில்லை
எப்போதும் ஒரே பதில்தான் சொல்வோம்.

எங்கள் எல்லோருக்கும் நடப்பது தெரியும்.

ஆனால் தெரியாதது போல நாங்கள் நாடகமாடுவோம்.

பல ஆண்டுகளின் பின்னாலும் கூட
அப்பாவின் முன் எவரும் சிகரெட் பிடித்ததேயில்லை.



11

ஓப்புக்கொள்தல்


பறவைகள் மழைத் தண்ணீரை அருந்துவதில்லை என முடிவுசெய்துவிட்டு
அதற்கு மாறாக முதுமையடைவதைத் தேர்ந்துகொள்கிறது
என்பதை நாம் மறந்துவிடக்கூடாது

ஒரு சின்னஞ்சிறு நட்சத்திரம் ஜொலிக்கும் இரவிலிருந்து வெளியேறி மௌனத்திலும் தனிமையிலும் மரணமுறுகிறது
என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

சூரியனும் சந்திரனும் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டு
விரக்தியுற்ற நிலையில்
பகலையும் இரவையும் தமக்குள் பிரித்துக் கொண்டுவிட்டார்கள்
என்பதை நாம் மறந்துவிடக் கூடாது

அதனது பெருமிதத்துக்காவும் அதனது மௌனத்திற்காகவும்
கற்களை நாம் குற்றம் சொல்லக்கூடாது

கொந்தளிக்கும் நதியை அதனது பொறுமையின்மைக்காவும்
அதனது பைத்தியகாரத்தனத்திற்காகவும்
நாம் குற்றம் சொல்லக்கூடாது

துடைத்தழித்துப்போன கருமேகங்களை நினைத்துப் புலம்பும் மலைகளை
நாம் தேற்றுவதற்கு மறந்துவிடக் கூடாது

வித்தியாசமான இதயங்களை
நாம்
நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்



rajrosa@gmail.com

சூமன் ஹார்தி பற்றிய மேலும்...
http://en.wikipedia.org/wiki/Choman_Hardi


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner