இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஆகஸ்ட் 2008 இதழ் 104  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!

நினைவுகளின் தடத்தில் - 17!

- வெங்கட் சாமிநாதன் -


வெங்கட் சாமிநாதன்என் உபநயனத்திற்காக உடையாளூருக்குச் சென்றது தான் என் நினைவிலிருக்கும் முதல் தடவை என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த நினைவுகளுக்குச் சென்று எழுத முனைந்ததும் அங்கு பார்த்த காட்சிகளையும் மனிதர்களையும் நினைவு கொண்டபோது, அதற்கும் முந்தி ஒரு தடவை உடையாளூருக்கு நான் சென்றிருக்கவேண்டும், ஆனால் அது எப்போது என்பது தான் நினைவில் இல்லாது போயிற்று. இருப்பினும் நினைவிலிருந்து மறைந்து கொண்டிருக்கும் அந்த பழைய உடையாளூரின் மனிதர்களையும் காட்சிகளையும் நினைவில் தங்கி மேலெழுந்த சிலவற்றையாவது எழுத முடிந்திருக்கிறது. ஆனால் அப்படி ஒன்றும் உடையாளூர் பெரும் மாற்றங்களை அடைந்திருக்கவில்லை. மின் சாரம் இல்லை. மாலையில் மங்கிய ஒரே ஒரு தெருவிளக்கைத்தவிர உடையாளூர் இருளில் தான் ஆழ்ந்திருந்தது. பள்ளிகள் இல்லை. ஒரு நாட்டு வைத்தியரைத் தவிர வேறு எதற்கும் வலங்கிமானுக்குத் தான் போகவேண்டியிருந்தது. தபால் அலுவலகம் கிடையாது. மாலையில் இருட்டத் தொடங்கியதும் எல்லா வீடுகளிலும் எல்லோரும் சாப்பிட்டு உறங்கப் போய்விடுவார்கள். அது பற்றி நினைக்கும் போதெல்லாம் உ.வே.சா. தன் 19-ம் நூற்றாண்டு பின் பாதி தமிழ் நாடு பற்றி எழுதி வைத்துள்ளவை தான் நினைவுக்கு வந்தன. உடையாளூர் தான் அந்த 19-ம் நூற்றாண்டுப் பின் பாதியிலேயே தங்கி விட்டதான தோற்றம் தந்ததே ஒழிய மூன்று மைல்கள் தள்ளி வலங்கைமானுக்கோ, அல்லது வேறு திசையில் மூன்று ஆறுகள் தாண்டி ஐந்து அல்லது ஆறு மைல்கள் கடந்தால் கும்பகோணத்துக்கோ சென்றால் காணும் காட்சி வேறாகத் தான் இருக்கும். ஆனால், 19-ம் நூற்றாண்டுப்பின் பாதியிலேயே உறைந்து விட்ட உடையாளூரும் அதன் வாழ்க்கையும் இப்போது நினைத்துப் பார்க்க ஒரு ரம்மியமான நினைவுகளாகத் தான் கண் முன் திரையோடிச் செல்கின்றன.

உப நயனம் முடிந்து நிலக்கோட்டை திரும்பியது ஒன்றும் நினைவில் இல்லை. ஆனால் இந்த உடையாளூர் பயணம் நினைவுக்கு வந்ததே, அந்த ரயில் பிரயாணம், அதை மகிழ்ச்சியுடன் நினைவுக்குக் கொணர்ந்த மதுரைக்கு 9-ம் வகுப்பு படிக்கச் சென்ற பஸ் பிரயாணம். 30 மைல் பஸ்ஸில் பயணம் என்றால் அது ஒன்றும் சாதாரண விஷயமாக அன்று எனக்குப் படவில்லை. ஆனால் மனித மனதின் விந்தைகள், இப்போது அந்த பிரயாணத்தை 32 மைல் தூரத்தையோ, அது எடுத்துக்கொண்டிருக்கக்கூடும் ஒன்றரை நேர அனுபவத்தையோ என்னால் நினைவு கொள்ள முடியவில்லை. எனக்கு அந்த பிரயாணத்தில் இப்போது நினைவுக்கு வருவது, மதுரை எல்லையை அடைந்ததும், பஸ் நிறுத்தப்பட்டது. சாலையில் ஒரே கூட்டமாக இருந்தது. யாரோ ஒருவர் டிரைவரிடம் வந்து பஸ் அந்த வழியில் மேலே செல்லவியலாது என்றும், டவுனுக்குள்ளே ஆங்காங்கே ரகளையாக இருப்பதாகவும், வண்டியை வேறு வழியில் தான் திருப்பிக் கொண்டு போகவேண்டும் என்றும் சொல்ல வண்டி திருப்பப்பட்டது. நாங்கள் மதுரை போய்ச் சேர்ந்தோம் தான். ஆனால் மதுரை அமைதியாக இல்லை. ஆங்காங்கே அவ்வப்போது காங்கிரஸ் காரர்களின் கூட்டம், ஊர்வலம் என்று ஏதோ அன்றாட அமைதி கலைந்துகொண்டிருந்தது.

மதுரையில் சிம்மக்கல் பக்கம் வைகை ஆற்றை நோக்கிச் செல்லும் பாதையில் பாதி தூரத்தில் இடது பக்கம் உள்ள சந்து ஒன்றில் நுழைந்து உள்ளே சென்றால் காமாட்சி புர அக்கிரஹாரம் என்று ஒரு தெரு வரும். அதில் ஒரு வீட்டில் இருந்த ஐந்து குடித்தனங்களில் ஒன்றாகத் தான் பாட்டி, நான், என் சின்ன மாமா வாடகைக்கு இருந்தோம். முதலில் கம்பி போட்ட ஒரு திண்ணை. பின்னர் இடைகழி, அதன் இரு பக்கங்களிலும் அறைகள். பின்னர் ஒரு ஹால். அந்த ஹால் எல்லோருக்கும் பொது வான இடம். அந்த ஹாலின் இருபுறங்களிலும் ஒரு அறையும் சமையலறையும் கொண்ட இரண்டிரண்டு குடித்தனங்கள். தெருவிலிருந்து உள்ளே போகப் போக சூரிய வெளிச்சம் குறையும். இருள் அதிகமாகும். கொஞ்சம் வெளிச்சம் பார்க்க கிணறு இருக்கும் கொல்லைப்புறத்திற்கு வரவேண்டும். ஐந்து குடும்பங்கள் ஒரே வீட்டில் இருப்பது என்பது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. வந்த ஓரிரண்டு நாட்களில் பாட்டிக்கு ஒரு சினேகிதமும், பரிச்சயமும் கிடைத்து விட்டது. அடுத்த குடித்தனத்தில் இருந்த ஒரு பாட்டியோடு பேச்சுக்கொடுத்ததில் எப்படியோ சுற்றி வளைத்து ஏதோ ஊரில் இருவருக்கும் தெரிந்த சொந்தக்காரர்கள் ஒரே தெருவில் கிட்டத்து வீடுகளில் இருந்தார்கள். அவர்களுக்கு அவர்களைத் தெரியும். என் பாட்டி அந்தப் பாட்டியிடம் சொன்னது எனக்கு நினைவில் இருக்கிறது. "இதோ பாருங்களேன் அதிசயத்தை. ஒவ்வொத்தரும் எங்கேங்கேயிருந்தோ வரோம். கடைசிலே பாத்தா நாம ஒத்தொருக்கொத்தர் தெரிஞ்சவா தான். எந்த சீமைக்குப் போனாத்தான் என்ன, தெரிஞ்சவா தான் சுத்திச் சுத்தி வந்திண்டிருக்கா," பாட்டிக்கு எழுதப் படிக்கத் தெரியாது தான். நாம் தான் படித்தவர்கள், தெரிந்தவர்களிடமிருந்தே பழகியவர்களிடமிருந்தே அன்னியமாகிக்கொண்டிருக்கிறோம் என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது.

அதே வரிசையில் மூன்றாவது அறையில் ஒரு குடும்பம் இருந்தது. இளம் வயதினர். கணவனும் மனைவியும். கணவன் எப்போதாவது தான் வீட்டுக்கு வருவான். எங்கே வேலை, ஏன் தினம் வருவது இல்லை என்பதெல்லாம் தெரியாது. யாரும் கேட்கவும் இல்லை. ஆனால் அவன் வரும் நாட்களில், மூடிய அறைக்குள் அடி உதை சத்தம் கேட்கும். அழுகுரல் கேட்கும். ஆண்குரலில் வசவுகள் கேட்கும். ஆனால் யாரும் ஏதும் அவர்கள் விஷயத்தில் தலையிட்டுக் கொள்வதில்லை.

வாசலில் வீட்டுச் சொந்தக்காரர் உட்கார்ந்திருப்பார். ஐம்பது ஐம்பத்தந்து வயது மனிதர். இடுப்பு வேட்டியோடு தான் எப்போதும் காணப்படுவார். குள்ள உருவம். தலை வழுக்கை. தொந்தி தள்ளிய வயிறு. நானும், என்னைப் பார்க்க வரும் பள்ளித் தோழர்கள் ஒன்றிரண்டு பேரும் அவர் முன்னால் உட்கார்ந்தால் அவர் அரசியல் பேசுவார். ஜின்னாவை ஆதரித்துப் பேசுவார். "மைனாரிட்டிகளுக்காகவாக்கும் ஜின்னா பாடுபடறார். இந்தியாவிலே மைனாரிட்டி யார் சொல்லுங்கோ பாப்பம். பிராமணாள் தானே? அவாளுக்காகத் தான் ஜின்னா வெள்ளைக்காராளோட, காங்கிரஸோட சண்டை போடறார்." என்பார். நாங்கள் சிரிப்போம். " இப்ப உங்களுக்கெல்லாம் சிரிப்பாத்தான் இருக்கும். நீங்கள்ளாம் சின்னப் பசங்க உங்களுக்கு இப்போ ஒண்ணும் புரியாது" என்பார்.

சிம்மக்கல்லிலிருந்து வைகை ஆற்றுக்குப் போகும் பாதையில் பாதிவழியில் இடது பக்கம் திரும்பினால் காமாட்சிபுர அக்கிரகாரம் போகும் சந்து என்றால் அதற்குச் சற்றுத் தள்ளி உள்ள கோவிலுக்கு எதிர்த்தாற்போல் உள்ள தெருதான் லட்சுமிநாராயண புர அக்கிரஹாரம். அதில் ஒரு வீட்டில் தான் மாமாவின் மாமனார் குடும்பம் வாடகைக்கு இருந்தது. அவர் மதுரை மாவட்ட கல்வி அதிகாரியின் அலுவலகத்தில் தலைமை குமாஸ்தாவாக இருந்து ஓய்வு பெற்றவர். என் மாமி தான் அவருக்கு மூத்த மகள். மாமிக்கு இரண்டு தங்கைகள். இரண்டு தம்பிகள். எல்லோரும் அந்த வீட்டில் இருந்த மூன்று குடித்தனங்களில் ஒருவராக இருந்தனர். மதுரையில் அந்தப் பக்கத்தில் எந்தத் தெருவில் எந்த வீடாக இருந்தாலும் ஒவ்வொரு வீட்டிலும் நிறைய குடித்தனங்கள் இருந்தன. ஒவ்வொரு வீட்டையும் ஸ்டோர் என்று சொன்னார்கள். ஏன் ஸ்டோர் என்ற பெயர் வந்தது என்று தெரியவில்லை. நானும் கேட்கவில்லை. அது தான் பெயர். ஏன் அந்த பெயர் என்று கேட்பார்களா? ஆனால் இதெல்லாம் எனக்கு புதிய விஷயங்களாக இருந்தன. அம்பி வாத்தியார் என்னை, 'டவுன் வாலா'வாகப் போறயாக்கும்' என்று சொன்னதன் அனுபவம் தான் இந்த புதிய விஷயங்களோ என்னவோ என்று நினைத்துக் கொண்டேன். அவ்வப்போது நான் அவர்கள் வீட்டுக்குப் போவேன். அவர்கள் பிரியமாகவே இருந்தார்கள். குப்புசாமி ஐயர், அதாவது என் மாமாவின் மாமனார், என்னையும் அழைத்துக்கொண்டு எப்போதாவது அவரது பழைய ஆபீசுக்குப் போவார். ஒரு வேளை பென்ஷன் வாங்குவதற்காக இருக்குமோ என்று இப்போது தோன்றும். அங்கு பழைய அலுவலக நண்பர்களோடு அளவளாவுவார். பழைய அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதோடு புதிய செய்திகளையும் பேசிக்கொண்டிருப்பார்கள். அவருக்கு இனிப்பு என்றால் ரொம்ப பிடிக்கும். நிறைய இனிப்பு சாப்பிடுவார். இடையிடையே கொஞ்சம் காரமும் சாப்பிட்டு நாக்கு ருசியை மாற்றிக்கொள்வார், திரும்ப இனிப்பு சாப்பிட. ஒன்றும் இல்லையென்றால் "ஒரு ஊறுகாய்த் துண்டமாவது கொடேன்" என்று கேட்பார். வேடிக்கையாக இருக்கும்.

தினம் ஸ்கூலுக்குப் போவது ஒரு பிடித்தமான விஷயமாக இருந்தது எனக்கு. வீட்டிலிருந்து சிம்மக்கல்லுக்கு வந்துவிட்டால் நேரே வடக்கு வெளி வீதி வழியாக நடந்தால், கிட்டத்தட்ட அந்த வீதியின் கடைசியில் சேதுபதி ஹைஸ்கூல் இருக்கும். நடுவில் தான் பெரிய கட்டிடம். அதைச் சுற்றி ஓடு போட்ட தனித்தனி கட்டிடங்கள். அதன் பழமைத் தோற்றமே அழகாக இருந்தது. ஸ்கூலுக்குள் நுழையும் போதே பாரதி நடமாடிய, ஆசிரியராக இருந்த ஒரு ஸ்கூல் இது. இங்கே தான் நான் படிக்கிறேன் என்ற பெருமை இருந்தது. அங்கேயே இருக்கிறவர்களுக்கு அது சாதாரணமாக இருக்கலாம். ஆனால், எனக்கு, நிலக்கொட்டையிலிருந்து மதுரைக்குப் படிக்க வந்தவனுக்கு, பாரதி சொல்லிக்கொடுத்த ஸ்கூலில் நான் படிக்கும் வாய்ப்புக் கிடைத்ததென்றால் அது என்ன சாதாரண விஷயமா என்ன? வகுப்பில் உட்கார்ந்து வாத்தியார் பாடம் சொல்லிக்கொண்டிருக்கும்போது நான் பாரதியை அந்த இடத்தில் வைத்துக் கற்பனை செய்து பார்த்துக் கொள்வேன். அது ஏதோ ஒரு தனி உலகம் தான்.

அந்நாட்களில் மாணவர்களும் கிளர்ச்சி செய்தார்கள் என்று சொன்னார்கள். நான் இருந்தபோது அப்படி ஏதும் நடக்கவில்லை. எங்கள் ஸ்கூல் நிகழ்ச்சி ஒன்றுக்கு என்.எம்.ஆர். சுப்பராமன் வந்திருந்தார்.அந்நாட்களில் மதுரையில் அவர் ஒரு பெரிய காங்கிரஸ் தலைவர். ஏதோ வரலாற்று நிகழ்வில் பங்கு கொள்வது போன்ற உணர்வு எனக்கு. பி. ராமமூர்த்தி, மோகன் குமாரமங்கலம், கே.டி.கே தங்கமணி எல்லாம் அடிக்கடி காற்றில் அடிபட்ட பெயர்கள். அப்போது நான் ஏதோ உலகத்தில் தான் மிதந்து கொண்டிருந்தேன் என்று சொல்ல வேண்டும்.

நினைவுகளின் தடத்தில் - (18)

வெங்கட் சாமிநாதன் -செண்டிரல் சினிமாவுக்கு எதிரே மாமாவும் நானும் நின்றுகொண்டிருந்தோம். மாமா அம்பி வாத்தியாரோடு பேசிக்கொண்டிருந்தார். மாமாவுக்கு நிலக்கோட்டையிலிருந்த போதே குடும்பத்தை சம்ரக்ஷ¢க்க முடியாது தவித்துக் கொண்டிருந்தார். இப்போது சின்ன மாமாவின் படிப்புக்காக, வத்தலக்குண்டில் படிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்ததன் காரணமாக, மதுரையில் இருந்து படிக்க வசதியாக ஒரு குடித்தனம் வைக்க வேண்டிய கூடுதல் செலவு மாமாவுக்கு. எப்படி சமாளிப்பது என்பது ஒரு பெரிய பிரச்சினையாக மாமா முன் நின்றது. அது பற்றித் தான் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். "என்ன பண்றது அம்பி, என் கஷ்ட காலம். எப்படியோ ஒரு வருஷம். இதோன்னு ஓடிப் போயிடும். அவன் ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ணீட்டான்னா போரும் போ. நான் எப்படியோ சமாளிச்சுத் தான் ஆகணும்." பக்கத்தில் நின்று இருந்த என்னைப் பார்த்து அம்பி வாத்தியார் " இவர் இப்போ டவுன் ஆளாயிட்டார்." மதுரையில் தங்குவது ஒரு பெரிய விஷயமாகவே அவருக்கு இருந்திருக்கிறது. அதோடு என்னைச் சற்று தமாஷ் செய்யவும் வசதியாக இருந்திருக்கிறது. அப்போது அது எனக்கு தமாஷ் என்று மாத்திரம் தான் தெரிந்தது. ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கும் போது, மிகவும் வறிய நிலையில் இருந்த அவர் குடும்பம் அவருடைய 19 ரூபாய் சம்பளத்திலேயே வயோதிக தாய் தந்தையர், மூன்று தம்பிகள் - தவிர புதிதாக கல்யாணம் செய்து அழைத்து வந்துள்ள மனைவி. கடைசித் தம்பி ராஜா, என் வயது. கோடை விடுமுறையில் அவனை நாடார் ஹைஸ்கூலுக்கு எதிரே இருந்த வெங்கிடாசலம் ஐயர் ஹோட்டலில் சப்ளை வேலைக்கு அனுப்பி விடுவார். என்னை வயிறு முட்ட சாப்பிட வைத்து, நான் காசு கொடுக்க வரும்போது "ரெண்டு இட்லி அரையணா" என்று கத்துவான். அப்போது இட்லி காலணா தான். அவர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தார்கள். வறுமையிலும், அன்பு பாசம், சினேகம் எல்லாம் மனிதர்களைக் கைவிட்டு விடவில்லை. இதற்கிடையே தான், மதுரையில் வாழ்வது ஒரு வரப்ரசாதம், பெருமைப்பட வேண்டிய ஒரு அதிர்ஷ்டம் என்ற நினைப்போ, ஆசையோ உள்ளே ஊறிக்கொண்டுமிருந்திருக்கிறது. நான் அங்கே மேற்குக் கோபுர வீதியில் ஒருசினிமா தியேட்டரின் முன் அந்த சந்தடிக்களுக்கிடையே நின்று கொண்டிருந்ததே ஒரு மாயலோகத்தில் வந்து சேர்ந்துவிட்ட மிதப்பில் தான் இருந்தேன். அம்பி வாத்தியார் சொன்னதில் வெறும் தமாஷ் மாத்திரம் இல்லை. அகல கண்விழித்து சுற்றும் முற்றும் பராக் பார்த்தவாறு நின்று கொண்டிருக்கும் பயலின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும் என்பதும் தெரிந்திருந்தது.

செண்டிரல் சினிமாவுக்கு முன் நின்று கொண்டிருந்தோம். அப்போது ஓடிக்கொண்டிருந்தது, '"நாம் இருவரா?" அல்லது ஸ்ரீவள்ளியா?" எனக்கு சரியாக ஞாபகமில்லை. எனக்கு அந்த தியேட்டரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரின் மேல தான் கண்ணிருந்தது. "பயலை ஒரு சினிமாக்குக் கூட்டிட்டுப் போங்க சார்" என்றார் அம்பி வாத்தியார். "எல்லாம் வேண்டியது நிலக்கோட்டையில் பார்த்திருக்கான். போறும்." என்றார் மாமா. "வத்தலக் குண்டிலே சிவகவி பார்த்தேன் சார். பாகவதர்தான் நிறைய பாடியிருக்கான். அத்தனையும் மணி மணியா." என்றார் அம்பி வாத்தியார்.

மதுரையில் நான் சினிமா பார்ப்பதற்கு மாமா அழைத்துப் போகவேண்டியிருக்கவில்லை. அவர் காசும் தரவேண்டாம். முதன் முறையாக இங்கிலீஷ் படம் பார்த்தது மதுரையில் தான். ரீகல் டாக்கீஸ் என்று நினைக்கிறேன். அதில் காலை வேளைகளில் இங்கிலீஷ் படம் போடுவார்கள். ரயிலடிக்குப் பக்கத்தில், மேலக்கோபுர வீதியின் கடைசியில் ரோடைத் தாண்டி. முதன் முதலாக ஹிந்தி படம் பார்த்ததும் மதுரையில் தான். பார்த்த படங்கள் நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஸ்வர்ணலதா நடித்த படம், ரத்தன். அதன் பாட்டுக்கள் தமிழ் நாடு பூராவும் எதிரொலித்தன. நிறைய படங்களில் அந்த படத்தின் மெட்டுக்களை காபியடித்த தமிழ் பாட்டுக்கள் வந்தன. அதில் நடித்திருந்த ஸ்வர்ணலதா பின்னர் பாகிஸ்தான் உருவானதும் பாகிஸ்தானுக்குப் போய்விட்டாள். பேர்தான் ஸ்வர்ணலதா. முஸ்லீம் நடிகை. நான் மதுரையில் பார்த்த இரண்டாம் ஹிந்தி படம் அன்மோல் கடி. அதுவும் அதன் பாட்டுக்களுக்கு புகழ் பெற்ற படம். அந்த படத்தில் சுரையா முதன் முதலாக ஒரு துணைநடிகையாக அறிமுகம் ஆகிறாள். அவ்வளவாக அழகில்லாத ஆனால் நல்ல பாடகியான நூர்ஜஹான் தான் அதில் கதாநாயகி என்னும் இவளும் பின்னால் பாகிஸ்தானுக்குப் போய்விட்டாள். அந்நாட்களில், லாகூர் தான் இன்றைய மும்பை மாதிரி படத் தயாரிப்பு மையமாக இருந்தது. பிரிவினைக்குப் பின் தான் மும்பை பெரிய கேந்திரமாக மாறியது. இந்த இரண்டு படங்களும் தமிழ் பட உலகில், ஒரு பெரிய பூகம்ப மாற்றத்தை விளைவித்தன. எல்லோரும் இந்த படங்களில் வந்த ஹிந்தி பாட்டுக்களை காப்பிஅடித்தனர். கல்கி ஒருவர் தான் இதை எதிர்த்து முதல் குரல் எழுப்பியவர். 1947-ல். கல்கி தலையங்கம் யாருக்கும் பார்க்கக் கிடைத்தால் பார்க்கலாம்.

இதையெல்லாம் எழுதும்போது, நான் மதுரைக்குப் போனதே சினிமாப் பார்த்துக்கொண்டு அலையத்தான் என்பது போல ஒரு தோற்றத்தை நான் தந்துவிட்டேன் என்று தோன்றுகிறது. அப்படி இல்லை. ஒரு சில மாதங்கள் நானும், சின்ன மாமாவும் ஒழுங்காக சேர்ந்தே பள்ளிக்கூடம் போவோம். சேர்ந்தே திரும்புவோம். எனக்கு சேதுபதி ஹைஸ்கூலும் ரொம்ப பிடித்திருந்தது. அவ்வளவு பெரிய விசாலமான, இவ்வளவு பேர் படிக்கிற பள்ளிக்கூடத்தில் படிக்கிறோம், பாரதியார் சொல்லிக்கொடுத்த பள்ளிக்கூடம் என்ற நினைப்புகளில் நான் மிதந்து கொண்டிருந்தேன். அவ்வப்போது இரண்டு தெரு தாண்டி, குறுக்க்கே செல்லும் ரோடைத் தாண்டினால், லக்ஷ்மி நாராயணபுர அக்கிரஹாரம் வரும். அதில் தான் மாமியின் குடும்பத்தினர் இருந்தனர். அங்கு அடிக்கடி போக மாட்டேன். எப்போதாவது போவேன். சேதுபதி ஹைஸ்கூல் வடக்கு வெளிவீதியின் ஒரு பக்கம். அதன் எதிர்பக்கத்தில் மாமியின் தங்கை ஆசிரியையாக வேலை பார்த்து வந்த பெண்கள் பள்ளிக்கூடமும் இருந்தது. சரஸ்வதிக்குத் துணையா நீயும் போய்ட்டு வாயேண்டா என்பார், மாமியின் அப்பா சில சமயம்.

ஆனால் நான் நிறைய நேரம் ஊர்சுற்றுவதில் செலவழித்தேன் என்று நினைவுக்கு வருகிறது. மதுரை பெரிய நகரமாயிற்றே. முதல் தடவையாக நான் டவுன் வாசியாகியிருக்கிறேனே. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தால் நான் எப்படி மதுரை வாசியாவேன்? தினம் ஒரு பக்கமென ஊர் சுற்றக் கிளம்பி விடுவேன். எனக்குச் சில இடங்களைக் கண்டதும் உடலில் ஒரு புத்துணர்ச்சி பரவுவதாகப் படும். சுற்றிகொண்டே வரும்போது கண்ணில் பட்டதும் வியப்புடன் மலங்க மலங்க விழிக்க வைத்த இடங்களும் உண்டு. முதலில் அது சிம்மக்கல்லிலேயே, வக்கீல் புதுத்தெரு ஒன்று ஒரு தெரு. அதில் கம்பி போட்ட ஒரு வீட்டில் போட்டிருந்த போர்டு. K.T.K. தங்கமணி. அப்போது எனக்கு மோகன் குமாரமங்கலம், பி.ராமமூர்த்தி, தங்கமணி யெல்லாம் மதுரையில் எனக்குத் தெரிய வந்த ரொம்ப பெரிய மனிதர்கள். என்னில் வியப்பை ஊட்டிய மனிதர்கள். இவர்கள் பெயரெல்லாம் இன்றைய தலைமுறைக்கு எந்த அர்த்தத்தையும் கொடுக்காத பெயர்கள் தான். ஆனால், இவர்களுக்கு முன் இன்றைய பெருந்தலைகள் எவரும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டாதவர்கள் தான். சிறுவனாக என் மனத்தில் அன்று எழும்பியிருந்த பிம்பங்களத் தான் இங்கு பதிவு செய்கிறேன். இதே போல மேற்குக் கோபுர வாசலில் வி.சூ.சுவாமிநாதன் அண்ட் கோ. என்றொரு புத்தகக் கடை அந்நாளில் இருந்தது. அந்தக் கடையை பிரஸ்தாபிக்கக் காரணம், பரிதிமாற் கலைஞர் என்று தன் பெயரை மாற்றி வைத்துக்கொண்ட முதல் தனித் தமிழ் அறிஞரான, சூரிய நாராயணசாஸ்திரியாரின் இளைய மகன் தான் அந்த புத்தகக் கடை சுவாமிநாதன். எவ்வளவு பெரிய சரித்திரப் பிரஸித்த பெற்ற இடங்களில் நான் கால் பதிக்கிறேன் என்ற நினைப்பை இவையெல்லாம் அன்று எனக்குத் தந்தன.

என் ஊர் சுற்றலில் எனக்குப் பிடித்தமான இடங்கள் இரண்டு. ஒன்று ரயில் நிலையத்தின் மேம்பாலம். அதில் போய் நின்று கொண்டு போகும் வரும் ரயில்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் பிடித்தமான பொழுது போக்கு. மாமா பையன் வந்தால் அவனையும் அழைத்துப் போவேன், "வா வேடிக்கை பார்க்கலாம்" என்று. அடுத்தது, மதுரை க்கோயிலின் கிழக்குக் கோபுர வாசலில். உள்ளே நுழைந்தால் இரு புறமும் ஒரே கடைகள் மயமாக இருக்கும். அவற்றைத் தாண்டி உள்ளே நுழைந்து விட்டால் பிரகாரங்கள் ஆரம்பிக்கும் திறந்த வெளி மண்டபங்கள். ஒரு புறம் யானைகள் கட்டியிருக்கும். நல்ல காற்று வரும். அந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு இருப்பேன் மணிக்கணக்கில் நேரம்போவது தெரியாமல். நல்ல காற்றும் சற்று குளிர்ச்சியாகவும் இருக்கும். பாட்டியிடம் எனக்கு எப்போதாவது கோபம் வந்து விட்டால், நான் என் துக்கங்களை எல்லாம் மறக்க தஞ்சமடைவது அந்த இடத்தில் தான்.

வெங்கட் சாமிநாதன்
vswaminathan.venkat@gmail.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner