இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூன் 2009 இதழ் 114  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்

நினைவுகளின் தடத்தில் - (29 & 30)

வெங்கட் சாமிநாதன்


வெங்கட் சாமிநாதன்ஆனால் என் கும்பகோண ஸ்தல சஞ்சாரங்கள் எல்லாம் ஒரு எல்லைக்குட்பட்டே இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அரசலாற்றைத் தாண்டி கும்பகோணம் எல்லையில் கால் வைத்ததும் நேராகப் போகும் சாலை யின் வலது பக்கம் கிளைவிடும் சந்து பொந்துகளுக்குள் தான் நான் தினம் வழிமாற்றி கும்பகோண நகர் பயண ஆராய்ச்சிகளைத் தொடரமுடியும். ஏனெனில் நான் காலை 9.30 மணிக்குள் போய்ச்சேர வேண்டிய பாணாதுரைப் பள்ளி சுமார் ஒரு மைல் தூரம் வடகிழக்கே இருந்தது. ஆகவே நான் அந்த சாலைக்கு இடது பக்க கிளைகளில் நடை போட முடியாது. நான் சொன்ன பிள்ளையார் கோயில் தெரு, சௌராஷ்டிரா தெருக்கள், விஜய லக்ஷ்மி டாக்கீஸ், காவேரி பத்திரிகை அலுவலகம் எல்லாம் பள்ளி செல்லும் வழியில் நேர் சாலைக்கு வலது பக்கமாகக் கிளை பிரியும் தெருக்களில் இருந்தன. காலையில் நேராக பள்ளிக்கும் மாலையில் நேராக உடையாளூருக்கும் நடை போட வேண்டும். காலையில் இடது பக்கமாகவும், மாலையில் வலது பக்கமாகவும் நான் ஊர் சுற்ற முடியாது.

அப்பா சிலசமயம் அவருக்கு வேண்டியது சிலதை கும்பகோணத்திலிருந்து வாங்கி வரச் சொல்லுவார். இப்போது எனக்கு ஞாபகம் இருப்பது அவர் உபயோகிக்கும் லை·ப் பாய் சோப். அதைத்தான் காலம் காலமாக உபயோகித்து வந்தார். நான் தினம் கும்பகோணம் போவது அவருக்கு ஒரு விதத்தில் சௌகரியமாகிப் போயிருந்தது.. அவர் சொல்லும் கடையில் தான் வாங்கவேண்டும். "டௌன் ஹைஸ்கூல் இருக்கா இல்லியா? அதோட ஒட்டி கொஞ்சம் தள்ளி காந்தி பார்க்கப் பாத்துண்டு வந்தேன்னு வச்சுக்கோ, அதே சாரிலே முனையிலே ஒரு கடை இருக்கு. அங்க தான் லை·ப் பாய் சோப் அஞ்சே காலணாவுக்கு தருவான். எங்கே வாங்கினா என்னன்னு நீ உன் புத்திசாலித்தனத்தைக் காட்டாதே. மத்த கடையிலே எல்லாம் அஞ்சரை அணா கேப்பான். என்ன புரிஞ்சதா?" என்று கடுமையாக எச்சரித்து அஞ்சே கால் அணா காசு கொடுப்பார். அவருக்குத் தேவையானது இன்னொன்று 501 பார் சோப். அப்பா சோப் என்று அதைச் சொல்லமாட்டார். சவுக்காரம்னு தான் சொல்வார். இப்போ சவுக்காரம் என்ற சொல்லே வழக்கொழிந்துவிட்டது போலிருக்கு. அது துணி துவைக்க. வெள்ளை வெளேர்னு தும்பைப் பூவாக இருக்கும் அவர் உடைகள். அவர் போல அந்த தும்பைப் பூ வெள்ளையில் யாரும் உடையணிந்து நான் உடையாளூரில் பார்த்ததில்லை. துணி துவைக்க அவர் அளவுக்கு அதிகமாக நேரமும் சிரமமும் எடுத்துக்கொள்வார். பஞ்ச கச்சமாக பத்து முழ வேட்டியும் ஒரு துண்டும் தான் அவருக்குத் தேவை. கும்பகோணம் தஞ்சாவூர் போனாலும் அது போதும். பின்னாட்களில் அவர் சென்னைக்கு வர நேரிட்டால் தான் சட்டை போட்டுக்கொளவதைப் பார்த்திருக்கிறேன். எதற்காக இவ்வளவும் சொல்கிறேன் என்றால், ஒரு பொருள் வாங்குவதில் காலணா மிச்சம் பிடிக்க முடியும் என்றால் அதைச் செய்வார். காலணா என்றால், அந்நாட்களில் அறுபத்து காலணாக்கள் கொண்டது ஒரு ரூபாய். அப்படித் தான் ஒவ்வொரு பைசாவையும் கவனத்தோடு செலவழிக்கும் நிலையில் தான் அப்பா இருந்தார். அந்த நிலையிலும் சிறப்பாக, நேர்த்தியாக வாழவேண்டும் என்று நினைப்பவர். அவர் வார்த்தையில், "எதானாலும் நறுவிசா இருக்க வேண்டாமாடா?" 'நறுவிசு' என்பது அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை. 'to perfection' என்று அதற்கு அர்த்தம். அதன் மூல உருவம் என்ன, அது எப்படி தேய்ந்தோ, மறுவியோ, உருமாறி, இந்த உருவத்திற்கு வந்து சேர்ந்துள்ளது என்பது எனக்குத் தெரியாது.

அந்த நிலையிலும் ஒரு நாள் அம்மா, "உனக்கு தினம் ரண்டணா கொடுக்கச் சொல்லி அப்பா சொல்லியிருக்கார்டா" என்று சொன்னாள். மத்தியானம் ஒரு மணிக்கு பள்ளி இடைவேளியில் கொண்டு வந்திருந்த தயிர் சாதத்தைச் சாப்பிட்டு விட்டு சாயந்திரம் 5 மணிக்கு மேல் ஐந்தரை மைல் தூரம் நடந்து வீடு வந்தால் அகோரப் பசி எடுக்கும். இதை ஒன்றிரண்டு நாள் பார்த்து விட்டு அப்பா, "அவனுக்கு ரண்டணா காசு கொடுத்துடு. பள்ளிக்கூடம் விட்டதும் சாயந்திரம் ஏதாவது சாப்டுப் பான்." என்று சொல்லி யிருக்கிறார். எனக்கு ரொம்ப குஷி. அம்மாவும் சந்தோஷம் தான். ஆனால் அந்த இரண்டணா என்பது அப்பாவை, குடும்பத்தை வருத்தும் ஒரு தொகை. அது அப்போதெல்லாம் எனக்கு புரிந்ததில்லை. இரண்டணாவில் என்னென்னவோ வாங்கலாம். ஒரு பெரிய மாம்பழம் கிடைக்கும். கிளிமூக்கு மாம்பழம் என்று சொல்வார்கள். அது இரண்டணாவில் கிடைத்துவிடும். அது போதும். சாப்பிட்டுக் கொண்டே வரப்புகளில் நடப்பது ஒரு ஆனந்தம் தான். காந்தி பார்க்குக்கு எதிரே ஒரு பெரிய ஹோட்டல். பெயர் நினைவில் இல்லை. தோசை கிடைக்கும். ஹோட்டலில் சாப்பிடுவது என்றாலே அந்நாட்களில் அது ஒரு சுகம் தான். அப்போது எங்கும், எந்த ஹோட்டலிலும் எது சாப்பிட்டாலும் ருசியாகத் தான் இருக்கும். அது எப்போதாவது தான் எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது. ஒரு சமயம் நான் தனியாக இருந்த போது, நிலக்கோட்டையில் நாடார் ஸ்கூலுக்கு எதிரே இருந்த வெங்கிடாசலபதி அய்யர் ஹோட்டலில் சாப்பிட்டது ஞாபக மிருக்கிறது. அந்த ஆனந்தத்தை நினைத்து நினைத்து வெகுநாட்கள் ஆனந்தப் பட்டிருக்கிறேன். ஒரு சமயம் மாமாவும் நானும் மாத்திரம் பத்து நாட்களோ என்னவோ தனியாக் இருந்தோம். மாமா தான் சமைப்பார். ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம், " வாடா, இன்னிக்கு ஹோட்டல்லே போய் ஏதாவது சாப்பிடலாம்" என்று அழைத்துச் சென்றார் மாமா. என்னென்னமோ ஸ்வீட் மிக்ஸர் கா·பி என்று சாப்பிட்டோம். கடைசியில், "எவ்வளவு ஆச்சா! ஜாஸ்தி ஒண்ணும் இல்லே, பன்னிரண்டணாத்தான் ஆயிருக்கு சார்" என்றார் வெங்கிடாசலமய்யர். "ரொம்ப ஆயிடுத்தே. குழந்தை ரொம்ப வாடிப்போயிட்டானேன்னு வந்தேன். ஆனால் ரொம்ப ஆயிடுத்து," என்று மாமா சொன்னார்.

ஒரு நாள் நான் ஸ்கூல் விட்டு ஊருக்குத் திரும்பி வர ரொம்ப நேரமாய் விட்டது. என்ன காரணம் என்று எனக்கு இப்போது நினைவில் இல்லை. இருட்டி விட்டது. நான் வீட்டுக்கு வந்ததும் அம்மா கேட்டாள், "ஏண்டா இத்தனை நாழி, என்ன ஆச்சோ என்னவோன்னு ரொம்ப கவலையாப் போயிடுத்து, அப்பா உன்னைத் தேடிப் போனாளே, வழிலே பாக்கலே?" என்று கேட்டாள். "பாக்கலை" என்று சொன்னேனே ஒழிய, எப்படிப்பார்க்காமல் இருந்திருக்கமுடியும் என்று யோசித்தேன். கும்பகோணத்துக்குள்ளே தான் எப்படியெல்லாமோ சுத்தலாமே தவிர, அரசலாற்றில் தோணி ஏறி, இக்கரைக்கு வந்துவிட்டால், ஒரே வரப்பு தான். ஒரே வழிதான். எப்படி நேர்ந்தது? அப்பா கொஞ்ச நேரம் கழித்து வந்தார். வீட்டில் என்னைப் பார்த்ததும், கவலையும், கோபமும், ஏமாற்றமும் கொப்பளித்தது அவர் முகத்தில். " எப்ப வந்தான் இவன்? ஏன் லேட்டாம்? இனிமே உன் பிள்ளையாச்சு, நீயாச்சு, என்னாலே இனிமே இவனை வச்சுண்டு மன்னாட முடியாது?" என்று கத்தினார். யாரும் ஏதும் பேசவில்லை. "நேரத்தோட வந்தா என்ன? ரெண்டு ஆத்திலேயும் தண்ணி போயிண்டு இருக்கு. இருட்டி வேறே போயிடுத்து. நம்ம என்னத்தைன்னு கண்டோம்? இப்படி தினம் தினம் அவஸ்தைப் படமுடியுமா?" என்று சீறிக்கொண்டே இருந்தார்.

கடைசியில் கும்பகோணத்திலேயே எங்காவது தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் உடனே ஏதாவது ஏற்பாடு செய்வது என்பது நிச்சயமாயிற்று. அது முன்னாலேயே, என்னை கும்பகோணத்தில் படிக்கச் சேர்ப்பது என்று முடிவெடுத்த போதே கொண்டிருந்த எண்ணம் தான். ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால் தினம் இரண்டு ஆறு கடந்து, ஐந்து ஆறு மைல் நடந்து போவதும் வருவதும் ஒன்றும் 'சரிப்பட்டு வராது' என்பதும் முன்னாலேயே தீர்மானமானது தான். அது இப்போது உடனடியாக செய்ய வேண்டிய காரியமாகிவிட்டது. இதையெல்லாம் மறுநாள் அம்மா சொல்லித் தான் எனக்குத் தெரியும். 'அங்கேயே இருந்து படிக்கலாம்டா, தினம் பத்து பதினோரு மைல் நடந்தால் பின்னால் படிக்கிறதுக்கு முடியவேண்டாமாடா. அப்பா சௌகரியமா ஏதாவது ஏற்பாடு செய்வா. அது வரைக்கும் நீ எங்கேயும் அலையாம சீக்கரம் ஊருக்கு வந்து சேர்" என்றாள்

கொஞ்ச நாளில் ஒரு வழியாக ஒரு இடம் கிடைத்தது அப்பாவுக்கு. மகாமகக் குளம் மேற்குக் கரைத் தெருவில் ஒரு விதவைப் பாட்டி தன் ஒரு பிள்ளையோடு இருக்கிறாள். அது அவர்கள் சொந்த வீடு. வீட்டில் ஒரு பகுதி வாடகைக்கு விட்டிருக்கிறாள். அதில் கொஞ்சம் வருமானம் வரும். பாட்டி கூடத்தை ஒட்டிய சமையலறையைத் தனக்கு வைத்துக்கொண்டிருந்தாள். பின்னால் கிணற்றடியில் ஒரு அறை. அனேகமாக அதில் வெண்ணீர்த் தவலை, வாளி, விறகு போன்றவை வைக்கப் பயன் படும் இடமாக இருந்திருக்கவேண்டும். அதில் அந்தப் பாட்டியின் பிள்ளை தன் படிப்பறையாக வைத்துக்கொண்டிருந்தான். அதில் நானும் என் பெட்டி படுக்கை, புத்தகங்களை வைத்துக்கொள்ள உபயோகப்படுத்திக்கொள்ளலாம். படிப்பதற்கு இடமா இல்லை. கூடம், வாசல் திண்ணை எல்லாம் பொது இடங்கள் தான். அப்பாவுடன் ஒரு நாள், என் புத்தகங்கள், வேட்டி சட்டை அடைக்கப்பட்ட ஒரு தகரப் பெட்டி, ஜமுக்காளம், தலையணையோடு போய்ச் சேர்ந்தேன். பாட்டிக்கு ஒரே சந்தோஷம். பாட்டிக்கு ஐம்பதிலிருந்து அறுபதுக்குள் இருக்கும் வயது. முதுகு கொஞ்சம் கூன் விழ ஆரம்பித்திருந்தது. "என் பிள்ளை மாதிரி பாத்துக்கறேன். கவலைப் படாதேங்கோ. என் பிள்ளையை விட சின்னவன் இல்லியோ இவன்? இவனுக்குன்னு ஒண்ணும் தனியா சமைக்கப் போறதில்லே. நானும் என் பிள்ளையும் சாப்பிடறத இவனும் கூட உக்காந்து சாப்பிட்டுப் போறான். படிக்கிற குழந்தை. கவனிச்சுக்கறேன். நிம்மதியா இருங்கோ." என்று அப்பாவை ஆசுவாசப் படுத்தினாள் பாட்டி. காலையில் கா·பி கொடுப்பாள். காலம்பற ஒம்போது மணிக்கு சாப்பாடு போட்டுடறேன். அப்பறமா ராத்திரி எட்டு மணிக்கெல்லாம் சாப்புடட்டும். பசிக்காதோ. படிக்க வேண்டாமோ? வளர்ற புள்ளை.." பாட்டி பேசிக்கொண்டே போனாள். "சனி ஞாயிறு ஊருக்கு வந்துடுவான். பாக்கி அஞ்சு நாளைக்குத் தான்." "அதுக் கென்ன அதுக்கு நாலு ரூபா கொறச்சுக்கங்கோ" என்றாள் பாட்டி. மாசம் பதினைந்து ரூபாய். வாரத்துக்கு இரண்டு நாட்கள் ஊருக்கு வந்துவிடுவதால் எட்டு நாளைக்கு நாலு ரூபாய் குறைத்துக்கொண்டு மாதம் பதினோரு ரூபாய் செலவாகும். என்று அப்பா கணக்குப் போட்டார். அது போக ஸ்கூல் சம்பளம் ஆறு ரூபாய். ஆக மாதம் பதினேழு ரூபாய். அது அவரால் சமாளிக்க முடியாத அளவு பெரிய தொகை. அப்பாவுக்கு கிராமத்தில் வைதீகத்தில் கொஞ்சம் கூடக் குறைய வரும் வருமாணம் இருபது ரூபாய் தான். குத்தகைக்கு விடப்பட்டிருந்த ஐந்து மா நிலத்திலிருந்து சாப்பாட்டுத் தேவைக்கு அரிசி வந்து விடும். மற்ற செலவுகளை இருபது ரூபாய் வருமானத்திலிருந்து தான் எடுக்க வேண்டும். என் படிப்புக்கு பதினேழு ரூபாய் போக மிஞ்சுவது என்ன? ஆனால் வேறு வழி?

24.10.08

நினைவுகளின் தடத்தில் - (30)

நினைவுகளின் தடத்தில் - (30)பாட்டியிடம் என்னைப் போல சாப்பிட வந்தவர் வேறு யாரும் இல்லை. காசு கொடுத்து பாட்டியிடம் சாப்பிட வந்தது நான் ஒருத்தன் தான், அதுவும் என்னுடன் தான் இந்த ஏற்பாட்டையே பாட்டி ஆரம்பித்தாள் என்றும் தோன்றிற்று. இந்த பாட்டியை அப்பா எப்படி கண்டு பிடித்தார் என்பதும் எனக்கு ஒரு ஆச்சரியம். அதுவும் பாட்டியின் சாப்பாட்டுக் கடையில் முதல் வாடிக்கை, ஒரே வாடிக்கை நானாக இருக்கும் போது, எப்படி இதெல்லாம் தொடங்கியது, அது எப்படி உடையாளூரில் இருக்கும் அப்பாவின் காதுக்கு எட்டி அவர் என்னை இங்கு கொண்டு சேர்த்தார் என்பதும் ஒரு புதிர் தான். அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த ஒரு குடும்பம் கபிஸ்தலத்திலிருந்து வந்த குடும்பம். கணவன் கும்பகோணத்தில் வேலை பார்ப்பதால், மனைவி மற்றும் ஒரு குழந்தையோடு வந்து தங்கியிருக்கும் சின்ன குடும்பம். அவர்கள் தான் சொல்லியிருக்கவேண்டும். இருந்தாலும், நான் அங்கிருந்த இரண்டு வருஷ காலத்தில் அவர்கள் என்னிடம் எந்த அன்னியோன்னியத்துடனும் பழகியது பேசியது கிடையாது. பாட்டியின் பையன் தான் என்னிடம் சினேகம் கொண்டாடினான். எனக்கு இரண்டு வயது மூத்தவன். பாட்டி அவனைப் படிக்க வைப்பதற்காகவே கும்பகோணத்தில் இந்த வீட்டில் தங்கினாள். இல்லையெனில் அவளுக்கு கிராமத்தில் ஒரு வீடு இருந்தது. அங்கேயே இருந்து கொண்டு, இந்த வீட்டு வாடகையின் உபரி வருமானத்தோடு காலம் தள்ளக்கூடும். ஆனால் அந்த பையன் படிப்பதில் சிரத்தையுள்ளவனாகத் தெரியவில்லை. அவன் படித்துப் பார்த்ததில்லை நான். ஆனால் என்னிடம் பிரியமாக இருந்தான். நான் இளையவன், என்னைப் பாதுகாத்து தனித்து வந்திருக்கும் எனக்கு சௌகரியங்கள் செய்து கொடுப்பது மூத்தவனான அவனது கடமை என்று நினைத்திருக்கலாம். அவ்வப்போது எனக்காக பாட்டியிடம் அவன் சிபாரிசு செய்வான். பாட்டிக்கு அது சங்கடமாகவே இருக்கும். பாட்டியும் வேடிக்கையான பாட்டி. "இது என்ன ரசம், இல்லை, சாம்பார் பாட்டி?" என்று நான் சாப்பிட்டுக் கொண்டிருப்பது என்ன என்பது தெரியாமல் கேட்டு விடுவேன். "அதுவாடா, இப்ப புளியைக் கரைச்சு வச்சேனே அந்த ரசம் தான்?" என்பாள். புரிந்து விட்டது போல் பாவனையில் அதற்குப் பின் நான் மௌனமாகிவிடுவேன். இது இரண்டு மூன்று தடவை நடந்துவிட்டதும், பின்னர் நான் பாட்டியிடம் என் அந்த மாதிரி சந்தேகங்களக் கேட்பதில்லை. ஒரு தடவை நான் சனி ஞாயிறு ஊருக்குப் போயிருந்த போது அம்மாவிடம் இதைச் சொன்னேன். அம்மா முதலில் சிரித்தாள். பின்னால் என்ன தோணித்தோ என்னவோ, "இன்னம் கொஞ்ச நாள் பொறுத்துக்கோப்பா, சனி ஞாயிறு வர்ரையோல்யோ, அப்போ உனக்கு நாக்கு ருசியா நான் சமைச்சுப் போட்டுடறேன் போ." என்று வருத்தத்துடன் சொன்னாள். பாட்டி சொன்னது வேடிக்கையாக இருந்ததைச் சொல்லப் போய், நான் அங்கு சாப்பிடக் கஷ்டப்படுவதாக அம்மாவுக்குத் தோன்றிவிட்டது, என்னமோ நினைத்தது என்னமோ நடந்துவிட்டது. "அதுக்கில்லேம்மா, பாட்டி சொல்றது வேடிக்கையா இருந்தது, அதைச் சொன்னேன்" என்று அம்மாவைச் சமாதானப் படுத்தினேன்.

உண்மையில் அப்போது எனக்கு அது ஒன்றும் கஷ்டமாகத் தெரியவில்லை. மூன்று வேளை சாப்பாடும், இரண்டு வேளை காபியும் மத்தியானம் நாலு மணிக்கு ஏதும் கொரிக்கவும் கிடைத்துக்கொண்டிருந்தது போய், இப்போது காலியில் ஒரு காபி, பின் இரண்டு வேளை சாப்பாடு என்று ஆகிவிட்டது. இருப்பினும் அது என்னை ஏதும் கஷ்டப்படுத்தியதாக எனக்கு நினைவில்லை. அது பற்றிய சிந்தனைகள் எனக்கு அப்போது இருந்ததில்லை. மதுரையில் மூன்று மாதங்கள் தனிக் கட்டையாக இருந்து பெற்ற புது அனுபவம், இங்கு கும்பகோணத்தில் புதுப்பிக்க இருந்தது. வீடு மகாமகக் குளத்தைப் பார்த்து மேற்குக் கரையில் இருந்தது. மகா மகக் குளம் மிகப் பெரிய குளம். அதன் நாலா பக்கமும் சுர்றியிருந்த நாட்டு ஓடு போட்ட வீடுகள். ஒரே ஒரு வீடு தான் மாடி வீடு. சத்திரம் என்று சொல்லப்பட்டது. அங்கு ஒரு முறை ராஜமாணிக்கதிற்கு பாராட்டு விழா நடந்தது. நிறைய சங்கீத வித்வான்கள் வந்திருந்தார்கள். மறுநாள் பரி¨க்ஷ என்பதையும் மறந்து இரவு நெடு நேரம் அங்கு கழித்தேன். அது பற்றி நான் வேறு இடத்தில் எழுதியிருக்கிறேன். திண்ணையில் உட்கார்ந்து கொண்டால் எதிரே பிரம்மாண்டமான மகா மகக் குளம், அதைச் சுற்றி நான்கு கரைகளிலும் வீடுகள். சில வருஷங்களுக்கு முன் மகா மகம் நடந்த போது பத்திரிகைகளில் வெளியாகிருந்த புகைப்படத்திலிருந்து என் மனதில் பதிவாகியிருக்கும் 1948-49 காட்சி, அறுபது வருட பழைய காட்சி அப்படி ஒன்றும் மாறிவிடவில்லை. அப்படி மாறாது காலத்தின் ஒரு புள்ளியில் உறைந்துவிட்டது ஒரு அழகாகத் தான் இருந்தது. அது மனதில் பதிக்கும் கிளர்ச்சிகளும் சந்தோஷம் தருவதாகத் தான் இருக்கிறது. சமீபத்தில் உடையாளூர் சென்றிருந்த கதிரவன் என்ற புகைப்படக்காரர் எடுத்த புகைப்படங்கள், இன்றைய உடையாளூர் தெருக்களைப் பதிவு செய்துள்ளது. 48-49 வருட உடையாளூர் தான் அவை. காலத்தின் கதியில் உறைந்துவிட்டவை. மின் விளக்குக் கம்பங்கள் அன்று இருக்கவில்லை. மற்றபடி இன்றும் அவை கண்களுக்குப் பார்க்க வசீகரமாகத்தான் இருக்கின்றன. பொற்காலம் இது அரசியல் தலைமைகள் சொல்கின்றன. இன்றைய சென்னை மாநகரத் தெருக்களைப் போல் அல்லாது உடையாளூர் கிராமத்தின் தெருக்கள் சுத்தமானவை. அரசும் அதன் நிர்வாகமும் தலையிடாத இடம் எதுவும் சுத்தமாகத்தான் இருக்கும் போலும்.

வீட்டை விட்டு கீழே தெருவுக்குள் கால் வைத்து இடது பக்கம் கொஞ்ச தூரம் நடந்தால், தெரு முனையில் ஒரு பூங்கா இருக்கும். அங்கு ஒரு வானொலி மாலை வேளைகளில் ஒலி பரப்பிக்கொண்டிருக்கும். அது எனக்கு நிலக்கோட்டைப் பூங்காவில் கழித்த மாலைகளின் நீட்சி என்று சொல்ல வேண்டும். அதல்லாது வீட்டைவிடு இறங்கி வலப்புறம் கொஞ்ச தூரம் நடந்தால், வலப்புரம் கிளை விடும் ஒரு சந்தில் ஒரு வாசகசாலை தென் படும். அதை திராவிட கழகத்தினர் நடத்தினர் என்று நினைக்கிறேன். அங்கு விடுதலை, திராவிட நாடு, போர்வாள் போன்ற கட்சிப் பிரசாரப் பத்திரிகைகளுக்கிடையில் சில சமயம் சுதேசமித்திரன், தினமணி கூட கிடக்கும். அங்கு என் மாலைப் பொழுதுகள் போகும். விடுதலையில் சென்னை அரசாங்கத்தின் ஒவ்வொரு இலாகாவிலும் பணிபுரியும் பார்ப்பன அதிகாரிகள், அலுவலகர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்று அவ்வப்போது வெளிவரும். குத்தூசி என்று ஒருவரின் கட்டுரைகள் வெளிவரும். சுவாரஸ்யமாக இருக்கும்.

அந்நாட்களில் கும்பகோணத்தில் தூள் கிளப்பிக்கொண்டிருந்த ஒரு பேச்சாளர், விபூதி வீரமுத்து சுவாமிகள் என்பவர். இளம் வயதுக்காரர். இடுப்பில் ஒரு காவி வேட்டியும், தோளில் ஒரு காவித் துண்டுமாகத் தான் எப்போதும் காணப்படுவார். நானிருந்த வீட்டுக்குக் கொஞ்ச தூரத்தில் இருந்த கடலங்குடித் தெருமுனையில் தான் அவர் பேசும் கூட்டங்கள் நடக்கும். திராவிட கழகத்தலைவர்களையும் அவர்கள் பேச்சுக்களையும் மிகக் காரசாரமாகத் தாக்கிப் பேசுவார். திராவிடக் கழகத் தலைவர்கள் பேசும் பாணியிலேயே அந்தத் தரத்திலேயே தான் இருக்கும் அவர் திராவிடக் கழகக் கண்டனப் பேச்சும். அதே பாணியில் தரத்தில் பதிலளித்தால் அதை எப்படி தாங்கிக் கொள்வார்கள்? அவர்கள் பேசினால் அந்த பாணி ரசிக்கும். அதே பாணியில் பதில் அளித்தாலோ, கலகம் தான். விபூதி வீரமுத்து சுவாமிகள் பேசும் கூட்டம் என்றால் அங்கு கலகம் என்பது நிச்சயம் இருக்கும். ஒரு முறை 'கருப்புக்கு மறுப்பு' என்று தலைப்பிட்டு அவரது புத்தகம் பத்திரிகைக் கடைகளில் தொங்கியது. நான் படித்ததில்லை. அதை அடுத்து வெகு சீக்கிரம் 'மறுப்புக்கு செருப்பு" என்று ஒரு புத்தகம் கடைகளை வந்தடைந்தது. நான் கும்பகோணத்தில் இருந்து படித்துக் கொண்டிருந்த 1948-49 க்குப் பிறகு அவர் பெயரை நான் கேட்டதில்லை. என்ன ஆனோரோ, எங்கு சென்று மறைந்தாரோ தெரியாது. அந்நாட்களில் அங்கு மிகுந்த பரபரப்பை உண்டாக்கியவர் அவர்.

காந்தி பார்க்கும் கூட அப்படி ஒன்றும் தூரமில்லை. அங்கு ஆரவாரமும் கலகலப்பும் இன்னும் கூட கிடைக்கும். கும்பகோணத்தின் இதயம் போன்றது அது. நிறைய அரசியல் கூட்டங்கள் நடைபெறும் அங்கு. பெரும்பாலும் திராவிட கழகக் கூட்டங்கள் தான். பெரியார், அண்ணா பேச்சுக்களை நான் கேட்டது அங்கு தான். அந்நாட்களில் அவை எனக்கு மிக பிடித்தமாக இருந்தன. முக்கியமாக அண்ணாவின் பேச்சுக்கள். அவர் பேச்சைக் கேட்க நல்ல கூட்டம் கூடும். பெரியாரின் பேச்சுக்களும் ஒரு விதத்தில் சுவாரஸ்யமானவை தான். கொச்சைப் பேச்சு. எதைப் பற்றியும் கவலைப்படாத துணிவு. ஹிந்தி எதிர்ப்பு வெற்றிகரமாக முடிந்ததற்காகன் வெற்றிவிழாக் கூட்டம் ஒன்று. கடைசியில் பேசியது பெரியார். அவர் கையில் அரசு பத்திரிகை ஒன்று. இன்றைய தம்ழரசு பத்திரிகையின் அந்நாளைய முன்னோடிக்கு என்ன பெயர் என்பது இப்போது என் நினைவில் இல்லை. பத்திரிகையை விரித்து ஒரு பக்கத்தைக் கூட்டத்திற்குக் காட்டி, 'இதை நான் சொல்லலை. இந்த அரசாங்கம் தான் சொல்லுது. இதோ பாருங்க, நம்ம கல்வி மந்திரி. படம் போட்டிருக்கா! உங்களுக்கெல்லாம் தெரியும். அவினாசி லிங்கம் செட்டியார். தொட்டன் கூட சொல்வான், இது அவினாசி லிங்கம் செட்டியார் தான்னு....." என்று அவர் பேச்சு தொடர்ந்தது. பெரியார் என்ன பேசினாலும், எப்படி பேசினாலும் திராவிட கழகத்தவர் மன்னித்துவிடுவார்கள். ரசிக்கவும் செய்வார்கள். ஆனால் இன்று வேறு யாராவது யாரையாவது இப்படி ஜாதியைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசினால், பேசினவரை உள்ளே தள்ளணும்னு ஒருத்தர் மனதிலும் ஒரு எண்ணம் தோன்றிவிட்டால், பேசியவர் கம்பிதான் எண்ணவேண்டி வரும்.

அந்த இரண்டு வருடங்களில் குமப கோணத்தில், காங்கிரஸ் காரர்களோ, கம்யூனிஸ்டுகளோ கூட்டம் கூட்டி பேசி நான் கேட்டதில்லை. அவர்கள் இருந்த இடம் தெரியவில்லை. எல்லாம் மதுரையோடு போயிற்று. இங்கு, கும்பகோணத்தில் திராவிட கழகத்தவர் பிரசாரப் புயல் தான் அடிக்கடி கடுமையாக வீசிக்கொண்டு இருந்தது.

ரொம்ப வருஷங்கள் கழித்து, நான் ஒரு முறை எழுபதுகளில் தில்லியிலிருந்து விடுமுறைக்கு கும்ப கோணம் வந்த போது, டவுன் ஹைஸ்கூல் காம்பௌண்டுக்குள் உள்ள மைதானத்தில் தில்லி பல்கலைக் கழக பேராசிரிய தம்பதிகள் சாலை, சாலினி இளந்திரையனார் இருவரும் அங்கு மேடையில் பேசக் கேட்டிருக்கிறேன். அவர்கள் இருவரும் தில்லியில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக, அங்கேயே ஒரு பாளையங்கோட்டையை உருவாக்கி, அதனுள் தில்லிக் காற்று அவர்களைப் பாதிக்காது, பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்கள். விடுமுறை மாதங்களில் அவர்கள் தெற்கே சொற்பொழிவு ஆற்றுவதற்கென்றே சுற்றுப் பயணம் திட்டமிட்டு மேற்கொள்வார்கள். அறிவியல் இயக்கம் என்றோ என்னவோ அச்சிட்ட ஒரு லெட்டர் பேடில் தமிழ் நாட்டில் பலருக்கும் சுற்றறிக்கை அனுப்புவார்கள். தாம் வரும் தேதியைக் குறிப்பிட்டு அவர்கள் சொற்பொழிவைக் கேட்க விரும்புவோர், அவர்களுக்குத் தங்க இடம், அவர்களுக்கு விருப்பமான எந்தெந்த வேளையில் என்ன உணவு, கார் வசதி எல்லாம் ஏற்பாடு செய்து முன்னதாகவே அறிவித்தால் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் அறிவியக்க சுற்றுப் பயணத்தில் அந்த ஊரையும் சேர்த்துத் திட்டமிட இயலும் என்று சொல்லியிருப்பார்கள். நானும் என் தம்பியும் அந்த வழியாகப் போகும் போது டவுன் ஹைஸ்கூல் வாசலில் இருந்த அறிவிப்பையும், பேச்சுக் குரலையும் கூடியிருந்த கூட்டத்தையும் பார்த்து, "இவங்க எங்க ஊர் ஆளுங்கப்பா" என்று சொல்லி உள்ளே நுழைந்தோம். சாலினி இளந்திரையனார் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். "நான் இப்போதெல்லாம் யாருடைய கவிதையும் படிப்பதில்லை. அவசியமில்லை என்றுதான். பாரதி தாசனுக்குப் பிற்கு தமிழ் நாட்டின் மிகச் சிறந்த கவிஞர் சாலை இளந்திரையனாரை கணவராகப் பெற்று அவருடனேயே எந்நேரமும் வாழ்கின்ற எனக்கு, வேறு எந்த கவிஞரையும் தேடிப்போய் படிக்கும் அவசியமென்ன?" என்று அவர் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. "அவர் இங்கே இருக்கிறாரா? எங்கே?" என்று தம்பி கேட்டான். "அதோ நடு நாயகமாக மேடையில் உட்கார்ந்திருக்கிறாரே அவர்தான் சாலை இளந்திரையன். அடையாளத்துக்கு பக்கத்து நாற்காலி காலியா யிருக்கே. அதில் சாலினி உட்கார்ந்திருந்ததால் இப்போ அது காலியாயிருக்கு" என்றேன். இத்தம்பதியனர் தம்மைப் பற்றிச் சொல்லிக்கொள்ளும் அருமை பெருமைகள் பற்றி எனக்கு தில்லியிலேயே நன்கு தெரியும் என்றாலும், அதை இங்கு தமிழ் நாட்டில் அவர்கள் கொஞ்சம் அதிகமாகவே உறுதிபடச் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கோ என்னவோ என்று நினைத்துக் கொண்டேன்.

வெங்கட் சாமிநாதன்/31.10.08


vswaminathan.venkat@gmail.com


© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner