ஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா!
- வெங்கட் சாமிநாதன் -
பெரனாக்கான்
என்றால் என்ன என்று இதை வாசிப்பவர் எவருக்காவது தெரியுமா? யோசிக்க வேண்டாம்,
பதிலைத் தேடும் பாவனையில் ஆகாயத்தைப் பார்க்க வேண்டாம். சிந்திக்கும் பாவனையில்
தலையைச் சொரிந்து கொடுத்துக் கொள்ளவும் வேண்டாம். தெரியும், அல்லது தெரியாது
என்று இரண்டில் ஒன்றே உடனே பதிலாக வரும் சாத்தியம் உண்டு. தெரியாது. சரி.
சட்டைக்காரன் என்றால் என்ன, யாரைச் சொல்வார்கள் என்று தெரியுமா? இந்த
தலைமுறைக்குத் தெரிந்திருக்கும் சாத்தியமில்லை. ஆங்கிலேயர் இந்த நாட்டை ஆண்டு
வந்த காலத்தில், இங்கேயே தங்கி இந்தியப் பெண்ணை மணந்து வாழ்ந்த ஆங்கிலேயர்களின்
வாரிசுகளாக இந்தியர்களாகி விட்டவர்களுக்கு, தமிழ் நாட்டில் சட்டைக் காரன் என்று
பெயர். அவர்கள் மாத்திரம் தான் சட்டை அணிந்தவர்களா, அதனால் தான் அவர்கள்
சட்டைக்காரர் ஆயினரா என்றால், தெரியாது என்பது தான் பதில். இந்த சட்டைக்காரர்
குடும்பத்துக் குழந்தைகளைப் பார்த்து வியந்த என் நண்பர் சொல்வார்: அவர் மன்னி,
"டேய் சீனு, இத்துனூண்டு குழந்தகள்ளாம் என்னமா இங்கிலீஷ் பேசறதூங்கறே! என்னமாடா
இத்தனை சீக்கிரமா இங்கிலீஷ் கத்துண்டுதுகள் இந்த வாண்டெல்லாம்!" என்று சொல்லி
ஆச்சரியப்படுவாளாம். ஆங்கிலோ இந்தியருக்கு என்று ராஜ்ய சபாவில் ஒரு இடம்
ராஷ்டிரபதியின் நியமன உறுப்பினராக ஒதுக்கப்பட்டிருந்து. இப்போதும் அது உள்ளதா,
அந்த இடத்தில்யார் என்றெல்லாம் தெரியாது.
ஆரம்பித்த விஷயத்திற்கு வருவோம். தென் சீனாவிலிருந்து வணிகம் செய்ய மலாய்
தீபகற்பம் வந்து சேர்ந்த் சீனர்கள் நாளடைவில்
மலாய் பெண்களை மணந்து மலேசியாவிலேயே தங்கி விட்டனர். அந்நாட்களில் சீனர்கள் தம்
குடும்பத்தோடு வெளிநாடு செல்வது
அனுமதிக்கப்படவில்லை. நம் ஊர் செட்டியார்கள் மாதிரி அவர்கள் தனியாகத்தான் சென்று
வியாபாரத்தை மேற்கொண்டனர். ஆனால் நம்
ஊர் செட்டியார்கள் அனேகர் தமிழ் நாடுதிரும்பினர். இப்படி வந்த சீனர்களுக்கும்
மலேசியர்களுக்கும் பிறந்த கலப்பினத்தவர் தான்
பெராக்கான் என்று அழைக்கப்படுவதாக ஜெயந்தி சங்கர் நமக்குச் சொல்கிறார். இவர்கள்
கணிசமான எண்ணிக்கையில் இருப்பதால்,
அவர்கள் தம் தனித்வ அடையாளங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் முடிந்திருக்கிறது.
இவர்கள் உடைகள், சாப்பாடு, மொழி எல்லாமே சீன
மலாய் கலப்பாகத்தான் இருக்குமாம். உணவு வகைகளில் இந்தோனேசிய, இந்திய கலவைகளையும்
காணமுடிகிறது என்கிறார் ஜெயந்தி சங்கர். இவர்கள் பௌத்தர்கள். ஜாதகப் பொருத்தம்
நக்ஷத்திரப் பொருத்தம் பார்த்துத் தான் வெற்றிலை மாற்றி திருமணத்தை
நிச்சயப்படுத்திக் கொள்வார்களாம். ஆக பகுத்தறிவுப் பிரசாரத்திற்கு இங்கும் நிறைய
வாய்ப்பு இருக்கிறது என்று தோன்றுகிறது. சிஇவர்கள் பேசும் மொழிக்கு பஹாசா பாபா
என்று பெயர். பாபா பெரனாக்கானைக் குறிக்கும். பஹாசா என்பது பாஷா என்னும்
சமஸ்கிருதத்தின் திரிபு தான். இந்தோனேசிய மொழியையும் பாஷா என்றே அழைக்கிறார்கள்.
இந்தியாவிலிருந்து பெற்ற தாக்கம் அது. இவர்கள் மூத்தோரை மதித்தால் என்பது
இவர்களது பண்பு. இரண்டு பிறந்த தினங்களைத் தான் இவர்கள் கொண்டாடுகிறார்கள். முதல்
வருடம், பின் 61-வது பிறந்த வருடம். இந்த 61 என்ற எண்ணும் சுழற்சியும் மிக பரவலாக
பல நாடுகளில் இடங்களில் காணப்படுகிறது. இந்த எண்ணில் சுழற்சியில் என்ன மகத்துவமோ.
மலேசிய சிங்கப்பூர் அரசுகள் தம் மக்களின் கலாச்சார அடையாளங்களைக் காப்பாற்றுவதில்
கவனம் கொள்கிறது என்றாலும் இளம் தலைமுறையினரிடம் இந்த அக்கறை இருப்பதில்லை
என்கிறார் ஜெயந்தி சங்கர். எங்கேயும் இந்தக் கதைதான் போலும்.
ஜெயந்தி சங்கர் நமக்குச் சிங்கப்பூரையும் அதன் மக்களையும் பற்றி மட்டும்
சொல்வதில்லை. சிங்கப்பூரில் தமிழர், சீனர், மலாய் மக்கள்
வாழ்கின்றனர். இவர்களைப் பற்றிச் சொல்லும் போது சீனாவும் மலாயாவும், அத்தோடு
இந்தோனேஷியாவும் கூட வந்து சேர்ந்து
கொள்கின்றனர். ஒன்றைப் பற்றிப் பேசும்போது மற்றதும் உடன் வந்து விடுகிறது.
அப்படி வந்ததில் ஒன்றுதான் மிக ஆச்சரியம் தரும் சரித்திரத் தகவல். கொலம்பஸ¤க்கும்
வாஸ்கோட காமாவுக்கும் முன்னரே, 1405- ம் வருடம் 317 கப்பல்களும், 27.870
படைவீரர்களையும் கொண்ட ஒரு பெரிய கப்பற்படையுடன் தன் முதல் பயணத்தைத் தொடங்கியது
யுனான் என்னும் தென் சீன மாநிலத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து, அரச
குடும்பத்தின் நட்பு வாய்க்கப்பெற்ற செங் ஹ என்னும்
இஸ்லாமிய சீனன். முதலில் தரை வழியாக மக்காவுக்குச் சென்றவன். அரபி மொழி
தெரிந்தவன். மலாக்கா, இந்தோனேசியா, இலங்கை,
கிழக்கு ஆப்பிரிக்கா என்றெல்லாம் சுற்றி அமெரிக்காவையும் தொட்டவன். மெக்ஸிக்கோ
கலி·போர்னிய தீவுகள் எல்லாம் அவன் காலடி பட்ட இடங்கள். போர் புரிந்த இடங்கள்.
அரிய பொருட்களையும், பெண்களையும், அரிய தாவரங்களையும், மிருகங்களையும் கப்பலில்
நிரப்பிக்கொண்டு சைனா திரும்பினால், அவன் உலகம் சுற்றுவது ஒரு தடவையோடு நின்று
விடுமா என்ன? அக்காலங்களில் உலகிலேயே
சீன கடற்படைதான் மிகப் பெரியது என்று சொல்லப்படுகிறது. 1430 -ம் ஆண்டு அவன் ஏழாம்
முறையாக மேற்கொண்டது தான் அவனது
கடைசிப் பயணமாகியது. 1433-ம் ஆண்டு அவன் வழியில் இந்தியாவில் மரணமடைந்ததாகவும்,
1435-ல் அவன் நான் ஜிங் மாநிலத்தில்
புதைக்கப்பட்டதாகவும் வரலாற்றுச் செய்திகள் சொல்கின்றன. சீனாவில் செங் ஹவின்
பயணங்கள் குறித்த கருத்தரங்கு, செங் ஹ தன் பயணத்தை முதலில் தொடங்கிய தாய்சாங்கில்
ஒரு பிரும்மாண்ட விழா, சிங்கப்பூரிலேயே கூட செங் ஹ வுக்கென ஒரு பெரும்
அருங்காட்சியகம் என செங் ஹ வின் நினைவு சீனர்கள் வாழும் இடமெல்லாம்
கொண்டாடப்படுகிறது. செங் ஹ என்ற பெயரே நமக்குப் புதிது. அவன் சாகஸங்கள்
பிரமிப்பைத் தருபவை. இருப்பினும் கொலம்பஸ் பெயரைத் தான் உலகறியும்.
ஹினா மட்சுரி என்றால் நம்மூரில் கொலு கொண்டாடப்படுவது போல ஜப்பானிலும்
கொண்டாடுகிறார்களாம். அதற்குப் பெயர் ஹினா
மட்சுரி. வேடிக்கையாக இல்லையா? கொலு கொண்டாடப்படுவது எனக்குத் தெரிந்து தமிழ்
நாட்டில் மட்டுமே. அதுவும் சில குடும்பங்களில் மாத்திரமே. அப்படிப்பட்ட ஒரு
கொண்டாட்டம் ஜப்பானில் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது என்றால்? அதிலும் ஜப்பான்
பொம்மைகள் எவ்வளவு கலை அழகும் செய்நேர்த்தியும் கொண்டவை! அதைப் பார்த்தபின் நம்
கொலு பொம்மைகள் ஏன் அத்தனை அழகையும் செய்நேர்த்தியையும் கொள்ளவில்லை என்று
யோசிக்கத் தோன்றுகிறது. நம் சிற்ப பாரம்பரியம் மிக பழமையானது. நீண்டதும்
வளமையானதும் கூட. இருப்பினும்...... அதெல்லாம் சரி. இந்த ஒற்றுமை எப்படி
நேர்ந்தது!. நேர்ந்துள்ளது. 1990களில் தில்லியில்
ஜப்பானிய கலைகளின் ஒரு பரந்த கண்காட்சி, கருத்தரங்கு எல்லாம் நடந்தது. அதில்
பேசிய ஒரு ஜப்பானிய அறிஞர், ஜப்பானிய
இசையில் தென்னிந்திய தாக்கம் உண்டு என்றார். நம்மூர் காரர் யாரும்
சொல்லியிருந்தால், இதுவும் ராமாயண புஷ்பகவிமானம் போன்ற சமாச்சாரம் என்று
ஒதுக்கியிருப்பேன். அந்த ஜப்பானியர் சொன்னதை சாட்சியப்படுத்தும் முகமாக,
காஞ்சியிலிருந்து அசோகர் அனுப்பிய தூதுவர்களோடு, காஞ்சியிலிருந்து இரு சங்கீத
கலைஞர்களும் சென்றார்கள் என்ற செய்தியும் படித்திருந்ததும் நினைவில் இருக்கிறது.
இப்படி நிகழ்வ துண்டு தான். இப்போதைக்கு இன்னொரு சம்பவத்தையும் சொல்லலாம். ஒரு
நைஜீரியன் பாடகர் (அம்மையார்) பாடிக்கொண்டிருந்தார் தில்லியில் நடந்த ஒரு சர்வதேச
கலை விழாவில். எனக்கு அடுத்து பக்கத்தில் இருந்தது சுப்புடுவும் வெங்கட் ராமன்
என்னும் என் நண்பரும். திடீரென என் நண்பர் சுப்புடுவிடம், "பாரும் இது மோஹனம்
இல்லியோ!" என்றார், சுப்புடுவும் ஒப்புதலுடன் தலையாட்டினார். எனக்கு அந்த
மோகனத்தின் சாயல் ஒன்றும் புரியவில்லை. என் சங்கீத ஞானத்திற்கு "ஏன் பள்ளி
கொண்டீரய்யா " என்றோ, "மயில் வாகனா, வள்ளி மன மோஹனா" என்றோ "ராமா நின்னே
நம்மினவாரு.." என்றோ பாடினால் தான் மோகனம் எனக்குப் புரியும். சாயல் எங்கு
விழுந்திருக்கிறது என்றெல்லாம் எனக்குப் புரிபடாது. எதற்குச் சொல்கிறேன் என்றால்
இப்படி உலகப் பொதுமையான பல உணர்வுகள், சடங்குகள், விழாக்கள் நம்பிக்கைகள்,
கற்பனைகள் நாடு, கலாச்சார, மொழி எல்லைகள் தாண்டி காணப்படும். ஆனால் ஜப்பானின்
நாடு முழுதும் தழுவிய ஹினா மட்சுரிக்கும் தமிழ் நாட்டில் சில இடங்களில் மட்டுமே
காணப்படும் கொலுவுக்குமான ஒற்றுமை ஆச்சரியப்படுத்தும்.
தமிழ் நாட்டு கொலு நவராத்திரி எனப்படும் ஒன்பது நாட்கள் நீடிக்கும். இதன் பின்
புராணக்கதைகள் இருப்பது போலவே ஹினா
மட்சுரிக்கும் ஒரு வரலாறு, அதன் பரிணாம வளர்ச்சி எல்லாம் உண்டு. ஜப்பானிலும் இது
சிறுமிகளை மையமாகக் கொண்ட விழா.
ஜெயந்தி சங்கர் இது பற்றி விவரிக்கும் பல காட்சிகள், 'சிறுமிகள் விளக்குகளைக்
கையிலேந்தி செல்லும் அழகு' தமிழ் நாட்டில் சிறுமிகள் தம்மை அலங்கரித்துக் கொண்டு
கூட்டம் கூட்டமாக குங்கும சிமிழை ஏந்திச் செல்லும் காட்சிகளை நினைவு படுத்தும்.
அவரவர் வீட்டில் குடும்பச் சொத்தாகக் பாதுகாக்கப்படும் பொம்மைகள், 15 படிகள் வரை
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கொலு. தமிழ் நாட்டில் வீட்டு வைபவமாகவே இருக்கும்
இது ஜப்பானில் ஊரே கொண்டாடும் அளவில் பெரிய விழாவாகவும் இருக்கிறது. இதையெல்லாம்
எண்ணும் போது பகுத்தறிவுக் காரர்கள் எதை இழந்து தம் வாழ்க்கையை
வரட்சியாக்கிக்கொள்கிறார்கள் என்று என்ணத் தோன்றுகிறது.
இந்தோனேசியாவின் பாலி தீவு மக்களைப்பற்றி எழுதுகிறார் ஜெயந்தி சங்கர்.
இந்தியாவிலிருந்து பரவிய ஹிந்து கலாச்சாரமும்
புராணங்களும், கோயில்களும் பற்றி நாம் கொஞ்சம் தெரிந்திருக்கிறோம். பாலி
தீவிலிருந்து இந்தியாவுக்கு வருகை தந்த ராமாயண நாட்டிய நாடகங்கள், பாவைக்
கூத்துக்களைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். அவர்களது ராமாயணக் கதைகள்
கொஞ்சம் நம்மைக் குழப்பினாலும், - நம்மிடையே கூட எத்தனை மாறுபட்ட ராமாயணங்கள்
இருக்கின்றன! - அவர்களது ராமாயண நடன நாடகங்களும், பாவைக்கூத்தும் மிகச்
சிறப்பானவை, அவற்றுக்கிணையானவை அல்ல நம்மது என்ற நினைப்பு எனக்கு எப்போதுமே
உண்டு. ஆனால் நான் செய்த ஒரு தவறு, இவர்கள் எல்லாம் முஸ்லீம்கள் என்றே
நினைத்திருந்தேன். ஆனால் இவர்கள் புத்த இந்துமதக் கலவையான ஆகம இந்து பாலி
மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஜெயந்தி ஷங்கரிடமிருந்து தெரிந்து கொள்கிறேன்.
இவர்கள் பெயர்களை வைத்து நாம் ஏதும் அனுமானிக்க முடியாது. முஸ்லீம்கள் பெயர்கள்
எல்லாம் மூல சமஸ்கிருத வடிவத்திலிருந்து சற்று மாற்றம் பெற்றவையாகவே இருக்கும்.
அவர்கள் விமான போக்குவரத்து சேவைக்குப் பெயர் கருடா ஏர்வேஸ். முதல் சுதந்திர
இந்தோனேசிய தலைவர் பெயர்
சுகர்னோ. காதுக்கு இனிமையானவர் என்று அர்த்தம். அவரது மகள், பின்னர் பிரதம
மந்திரியானவர், சுகர்னோ புத்ரி. இவ்வளவு இருக்கும்
போது சாதி இல்லாமல் போகுமா? அதுவும் உண்டு என்று தெரிகிறது. நம் வீடுகளில் பூஜை
அறை இருப்பது போல இவர்கள்
ஒவ்வொருவர் வீட்டிலும் அவரவர் வசதிகேற்ப கோயில் ஒன்று கட்டிக்கொள்வார்களாம். நமது
பாரம்பரிய நம்பிக்கைகள் சடங்குகள்
பலவும் இவர்களிடமும் உண்டு. சாமி வருவதும் உண்டு. தக்சு என்பார்கள். தக்சு தான்
இறந்த மூதாதையர், தெய்வங்கள் ஆகியோருடன் இன்று வாழ்பவர் தொடர்பு கொள்ள அழைப்புப்
பெற்றவர். இந்த தக்சு யாருக்கும் வரலாம். இதைச் சுற்றி எழும் பிரார்த்தனைகள்,
வேண்டுதல்கள், சடங்குகள், மந்திரங்கள் தீமிதி என பலவும் உண்டு. பல நம்பிக்கைகள்,
தீயவை நீங்கும், நல்ல அறுவடை கிடைக்கும், நோய் நொடிகள் தீரும் போன்ற நம்பிக்கைகள்
இதில் சம்பந்தப்பட்டுள்ளன. உலகெங்கும் காணப்படும் காட்சிகள் இவை. ஆப்பிரிக்க
சமூகங்களில் இம்மாதிரியான நிகழ்வுகளில் உச்சாடனம் செய்யப்படும் மந்திரங்கள்,
வாத்தியங்களின் முழக்கம், இவற்றாலேயே மன நோய்கள் பல தீர்க்கப்படுகின்றன என
மருத்துவ ஆராய்வுகளே சொல்கின்றன. நம்மூரிலும் பேயோட்டும் காட்சிகளின் சூழலே
இம்மாதிரியான ஒரு நாடகமாகத்தான் இருக்கும். உண்மையில் அந்த சூழலும் நம்பிக்கையும்
தான் நோயைக் குணப்படுத்துகின்றன என்று
நினைக்கிறேன்,.
ஜெயந்தி சங்கர் இப்படி பல விஷயங்களைப் பற்றி மிக விரிவாகவும், கூர்ந்த
பார்வையுடனும் எழுதியிருக்கிறார். கோலாலம்பூரின் பெட்
ரோ நாஸ் இரட்டைக்கோபுர கட்டிடம் பற்றி, ஆடையே மொழியாகவும் கருத்து
வெளிப்பாடுமாவது பற்றி, சிங்கப்பூர் சீனர்கள்
கொண்டாடும் ஆவிகளுக்கு உணவு படைத்தளிக்கும் விழா பற்றி, சந்திர ஆண்டு பற்றி
எல்லாம் எழுதுகிறார். இவையெல்லாம் நம்
கலாச்சாரத்திலும் வேறு உருவங்களில் வழங்குகின்றன தான். தமிழ் வருடக் கணிப்பும்
சந்திரனைக் கணக்கில் கொண்டது தான். அதனால்
தான் மாதங்களின் தினங்கள் ஒவ்வொரு ஆண்டும் வேறு படுகின்றன. நமக்கும் மூதாதையரை
நினைவு கொண்டு உணவு படைக்கும்
சடங்குகள் உண்டு. இந்த ஒற்றுமை வேற்றுமைகள், எப்படி எந்த தொடர்பும் காரணமாக
இல்லாது பல சடங்குகள், நம்பிக்கைகள், உலகின் எல்லாக் கலாச்சாரத்திலும்
காணக்கிடைக்கின்றன என்பது ஆச்சரியம் தரும் ஒன்று.
சிங்கப்பூர் மலாயா கல்வி நிலை பற்றியும் நம் கல்வி முறை பற்றியும் ஒப்பீடு
செய்யும் போது அவர் தரும் புள்ளி விவரங்கள்,
முடிவுகள், நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தக்கூடும். மற்ற நாடுகளை விட நாம்
கல்விக்குச் செலவிடுவது மிகவும் குறைவு என்றும், ஆரம்ப
கல்வியில் நாம் மற்ற நாடுகளைவிட அதிக தரத்தில் இருப்பதாகவும், நம் சில கல்வி
நிறுவனங்கள் உலக தரத்தவை என்றும்
சொல்கிறார். எல்லாம் சரி. புள்ளி விவரங்களும் சரி. கேட்க சந்தோஷமாகத்தான்
இருக்கிறது. ஆனால் நமக்குப் பார்க்கக்கிடைக்கும்
சாம்பிள் கல்லூரி மாணவர்களையும் முனைவர்களையும், தமிழ் அறிஞர்களையும் பார்த்தால்,
நாம் அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள
முடியாது என்றே நினைக்கிறேன். போகட்டும்.
ஜெயந்தி சங்கர் அவரைச் சுற்றி இருக்கும் உலகையும் மக்களையும் அவர்கள்
வாழ்க்கையையும் எவ்வளவு ஆர்வத்துடனும்,
ஆச்சரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் தன் இயல்பிலே கூர்ந்து கவனிக்கிறார்,
அவற்றில் தானும் பங்கு கொள்கிறார் என்பதைப் பார்க்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
தம் லண்டன் பயணத்தில் எங்கே தோசை கிடைக்கும் என்று தேடியதையும் அது கிடைத்ததும்
பெற்ற
பரமானந்தத்தையும் எழுதியுள்ள, பாளையங்கோட்டையிலிருந்து தில்லிக்குச் சென்றாலும்
அங்கும் ஒரு பாளையங்கோட்டையை
உருவாக்கிக் கொண்டு அதிலேயே திளைத்துத் தாம் வாழ்க்கையைக் கடத்திய இலக்கியப்
பெருமக்களை எனக்குத் தெரியும். ஜெயந்தி
சங்கர் மிக மிக வித்தியாசமானவர்.
ஏழாம் சுவை: (கட்டுரைத் தொகுப்பு): ஜெயந்தி சங்கர், உயிர்மை பதிப்பக வெளியீடு,
சென்னை-18
sankari01sg@yahoo.com |