நல்லூர் இராஜதானி நகர அமைப்பு;
அத்தியாயம் 9: இந்துக்களின் நகர அமைப்பும் அதில் சாதியின் பாதிப்பும்,
வகைகளும்!
- வ.ந.கிரிதரன் -
[இந்த
அத்தியாயம் மீண்டும் திருத்தி எழுதப்பட்டுள்ளது. வ.ந.கிரிதரன்]
இந்துக்களின் நகர அமைப்புக் கலையைப் பல காரணிகள் நிர்ணயித்தன. அதிலுள்ள மண்ணின்
அமைப்பு, அம்மண்ணில் நிலவி வந்த சாதிக் கட்டுப்பாடுகள் போன்ற சமுதாய
அமைப்புமுறை, சாத்திரங்கள் எல்லாமே இந்துக்களின் நகர அமைப்புக் கலையில் முக்கிய
பாத்திரத்தை வகித்தன. மண்ணின் அமைப்பு முறைக்கேற்ப நிலத்தை மூன்று வகைகளாகப்
பிரித்தார்கள். 'யங்கள': நீர், நதி, வளமற்ற வறண்ட நிலத்தை இது குறித்தது.
'அநோபா': நீர் வளம் மிகுந்த , குளிர்ந்த சுவாத்தியம் மிக்க, வளம் மலிந்த
மண்ணைக் கொண்ட நிலத்தை இது குறித்தது. 'சாதனா': 'யங்கலவு'க்கும்,
'அநோபா'வுக்கும் இடைப்பட்ட சாதாரண வகையான நிலத்தை இவ்விதம் அழைத்தனர். மண்ணின்
நிறம், மணம், அது எழுப்பும் ஒலி, அதன் சுவை, இவையெல்லாம் எவ்விதம் இந்துக்களின்
நகர அமைப்புக் கலையில் பங்காற்றின என்பது பற்றி, மேற்கு நாட்டவரான
Andras Volwahsan
என்பவர்
Living Architecure: Indian என்ற நூலில்
பின்வருமாறு கூறுவார்.
"மண்ணின் நிறம், மணம், ஒலி, சுவை, அது தரும் உணர்வு இவையெல்லாம் மிகுந்த
கவனத்துடன் பரிசீலிக்கப்பட்டன. மண்ணின் நிறம் அம் மண்ணில் குடியமர்த்தப்
பொருத்தமான சாதி மக்களை இனங்காட்டியது. வெள்ளை , சிவப்பு, மஞ்சள். கறுப்பு
ஆகியவை முக்கியமானவை. வெள்ளை நிற மண் பிராமணர்களுக்கும், சிவப்புநிற மண்
சத்திரியர்களுக்கும், மஞ்சள் நிற மண் வைச்யர்களுக்கும், கறுப்பு இந்ற மண்
சூத்திரர்களுக்கும் உரியனவாகக் கொள்ளப்பட்டன. மண்ணின் சுவைக்கும்
சாதியமைப்புக்குமிடையிலும்
தொடர்பிருந்தது. இனிமையான மண் பிராமணர்களுக்கும், காரமண் வைசியர்களுக்கும்,
கசப்பான மண் சூத்திரர்களுக்கும், உவர்ப்புமிக்க
மண் சத்திர்யர்களுக்கும் உரியனவாகக் கொள்ளப்பட்டன. தட்டும்பொழுது நரிகள்
ஊளையிடுவதைப் போலவோ, நாய்கள் குரைப்பதைப்
போலவோ அல்லது கழுதைகள் கத்துவதைப் போலவோ ஒலியெழுப்பும் மண்ணினைத் தவிர்க்க
வேண்டும்"- [Living Architecure;
பக்கம்
44].
நில அமைப்பின் சாய்வும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வடக்கை அல்லது
வட-கிழக்கை நோக்கிச் செல்லும் சாய்வைக் கொண்ட மண்ணின் மீதே நகரம் அமைக்கப்பட
வேண்டும். தெற்கு நோக்கிய சாய்வு மரணத்தையும், தென்மேற்கு நோக்கிய சாய்வு
துன்பத்தையும், மேற்கு நோக்கிய நாய்வு வறுமையையும், பயிர் அழிவையும், வடமேற்கு
நோக்கிய சாய்வு போரையும் கொண்டுவருமென இந்துக்கள் நம்பினார்கள். பள்ளமான
தாழ்ந்த பிரதேசத்தில் நகரங்கள் அமைக்கப்படுவதானது ஆபத்தினைக் கொண்டு வரும்.
இவ்விதமாக நகர் அமைப்பதற்குரிய நிலம் தெரிவு செய்யப்பட்டதும் 32 வகைகளில்
காணப்படும் வாஸ்துபுருஷ மண்டலத்தில் பொருத்தமான வகை சோதிடத்தில் நிபுணத்துவம்
பெற்ற குருக்களினால் தெரிவு செய்யப்படும். நகரம் சதுரவடிவில் (இயலாத பட்சத்தில்
செவ்வக வடிவில்) அமைக்கப்படும். சிலவகையான கட்டடக்கலைச் சுவடிகள் தரும்
தகவல்களின்படி பூரனமான சதுர வடிவான நகரங்கள் பிராமணர்களுக்கு மட்டுமே
உரியதென்றும், ஏனைய சாதியினரைப் பொறுத்தவரையில் செவ்வக வடிவான நகரங்களிலேயே வாழ
வேண்டுமெனவும் அறியமுடியவதாக மேற்படி நூலில் நூலாசிரியர் எடுத்துக் காட்டுவார்.
இவ்விதமாகப் பொறுத்தமான வாஸ்து புருஷ மண்டல அமைப்பு தெரிவு செய்யப்பட்டு
அமைக்கப்படும் நகர அமைப்பு பின்வருமாறு காணப்படும்.
1. நகரைச் சுற்றி மதில் அமைக்கப்படும்.
2. வடக்கு தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் செல்லும் வீதிகளால் பிரிக்கப்பட்ட
பல சிறு சிறு சதுரங்களை உள்ளடககிய பெரிய
சதுரமாக நகர் காணப்படும்.
3. நகரமானது வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்காகச் செல்லும் அகன்ற இரு இராஜ
வீதிகளால் பிரிக்கப்பட்டிருக்கும்.
4. இவ்விதம் அமைக்கப்படும் இராஜபாட்டையானது நகரின் தன்மைக்கேற்ப அளவில்
வேறுபடும். உதாரணமாக மாநகர்களைப்
பொறுத்தவரையில் இந்த இராஜபாட்டை 12 மீட்டர்கள் அகலமுடையதாகவும், சாதாரண
நகரங்களைப் பொறுத்தவரையில் 10 மீற்றர்கள்
அகலமுடையதாகவும், வெறும் சந்தையை மட்டுமே கொண்டதாகவிருக்கும் நகரமாயின் 8
மீற்றர்கள் அளவுடையதாகவுமிருக்கும்.
5. நகரினைச் சுற்றிவர மதிலின் உட்புறமாகவும் பாதையொன்று அமைக்கப்படும்.
இராஜபாட்டையின் அகலத்தையொத்ததாக
இப்பாதையிருக்கும்.
இதுதவிர நகரின் எந்த வகையான திசையில் எந்த வகையான மக்கள் வாழலாம் என்பது
பற்றியும் பண்டைய இந்துக்களின் கட்டடக்கலை
சம்பந்தமான நூல்கள் கூறுகின்றன. இவையெல்லாமே வாஸ்துபுருஷ மண்டல
விதிகளினடிப்படையில் பல்வேறு தொழில்களையும்,
சாதிகளையும் உள்ளடக்கிய நகரங்கள் அமைக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றன.
மிக எளிமையான நகர அமைப்புத் திட்டப்படி பிராமணர்கள் நகரின் வடக்குப் பகுதியில்
வாழ்ந்து, தொழில் செய்து வரவேண்டும். இதுபோல் சத்திரியர்கள் கிழக்கிலும்,
தென்கிழக்கிலும், வைஷியர்கள் தெற்கிலும், சூத்திரர்கள் மேற்கிலும் வசிக்க
வேண்டும்.இது முடியாதவிடத்து, குறைந்தது குடியிருப்புகள் சாதி அடிப்படையில்
பிரிக்கப்பட்டு அமைக்கப்பட்டடிருக்க வேண்டும். மேற்படி உபபிரிவுகள் சம்பந்தமான
இன்னுமொரு விதியின்படி பிராமணர்கள், சோதிடர்கள், காவல்துறை தலைமையகம், அரச
அதிகாரிகள் போன்றோர் வாழுமிடங்கள் வடக்கிலும்,
வடமேற்கிலும்,பொற்கொல்லர்கள் போன்ற தொழிலாளர்கள் வாழும் பகுதிகள்
தென்கிழக்கிலும், சிறையதிகாரிகள் , போர்வீரர்கள், இடையர்கள், மீனவர்கள்
போன்றோர் வாழுமிடங்கள் தென் மேற்கிலும், சந்தை வடகிழக்கிலும், அரண்மனைகள்
போன்றவை கிழக்கிலும் அமைந்திருக்க வேண்டும். இவையெல்லாம் இந்துக்களின் நகர
அமைப்புத் துறையில் சாதி வகித்த பங்கினைத் துலாம்பரமாக வெளிக்காட்டுகின்றன.
பண்டைய இந்திய நகர வகைகள்:
இவ்விதமாக வாஸ்துபுருஷ விதிகளுக்கேற்ப கிராமங்கள், நகரங்கள் மற்றும் கோநகரங்கள்
அமைக்கப்பட்டன. தண்டகம்,, சர்வதோபாத்ரா, நந்தியாவர்த்தம், பத்மம், சுவாஸ்திகம்
பிரஸ்தரம், காமுகாண்ட, சதிர்முகா, பிரகீர்ணம், பராகம், ஸ்ரீபிரதிஷ்டம்...
இவ்விதமாகப் பல்வேறு வகைகளில் இவை விளங்கின. இவற்றில் சில சிறிய நகரங்கள்,
கிராமங்களுக்குப் பொருத்தமாகவிருந்தன. உதாரணமாக தண்டகம் வகையினைக் கூறலாம்.
நீளக்கோல் (தண்டம்) போன்று நீண்ட வீதிகளை வ்டக்காகவும், கிழக்காகவும் நடுவில்
நான்கு சந்துக்களைக் கொண்டு விளங்கிய இத்தகைய சிறிய நகரங்கள் அல்லது கிராமங்கள்
இரு பிரதான வாயில்களைக் கொண்டு விளங்கின. நந்தியாவர்த்த
போன்ற வகை நகரங்கள் ஆலயத்தை மையமாகக் கொண்டு விளங்கின. வடக்கு-தெற்கு,
கிழக்கு-மேற்கு என, மையத்தில் சந்திக்கும் இரு பிரதான வீதிகளுடன், மதில்களும்
கொண்டு விளங்கிய வகைகளில் முக்கியமானது சுவாஸ்திகா வகை. இதுவே எல்லாவகைகளிலும்
பிரபல்யமானது. ஊரின் கிழக்கு , மெற்குப் பகுதிகளில் வடக்கு நோக்கிய வீதிகளின்
எண்ணிக்கை மூன்று, நான்கு, ஐந்து ,ஆறு அல்லது ஏழாகவிருப்பின் அவ்விதமாக
அமைக்கபப்டும் நகரங்கள் அல்லது கிராமங்கள் பிரஸ்தரம் என அழைக்கப்பட்டன.
பிரகீர்ண அமைப்பில் கிழக்கு நோக்கி நான்கு வழிகளும், வடக்கு நோக்கி எட்டு,
ஒன்பது, பத்து, பதினொன்று அல்லது பன்னிரண்டு வழிகளில் வீதிகள் காணப்பட்டன.
பராகத்தில் வடக்கு நோக்கிப் பதினெட்டிலிருந்து இருபத்திரண்டு வழிகளும், கிழக்கு
மேற்காக ஆறு வழிகளும் அமைந்திருந்தன. நந்தியாவர்த்தப் பூவினையொத்துச் சிறுசிறு
வீதிகளையும்,சந்துக்களையும் ஊரின் உட்புறமாகக் கொண்டிருந்த
நந்தியாவர்த்த வகை ஊர்களில் கிழக்கு-மேற்காக ஐந்து வழிகளும், வடக்கு நோக்கிப்
பதின்மூன்றிலிருந்து பதினேழு வழிகளும், அத்துடன்
நான்கு திசைகளிலும் பிரதான வழிகள் காணப்பட்டன. தாமரைப் பூவினையொத்த பத்மம்
வகையிலான அமைப்பினில் கிழக்கு-மேற்காக
ஏழு வழிகளும், தெற்கு-வடக்காக மூன்றிலிருந்து ஏழுவரையிலான வழிகளும் காணப்பட்டன.
பண்டைய மதுரை மாநகர் தாமரை வடிவமைந்திருந்ததைப் பரிபாடல் விளக்கும். பண்டைய
நகரங்களிலொன்றான கலைகளில் சிறந்து விளங்கிய காஞ்சி நகர் தண்டியலங்காரத்தில்
தோகை விரித்தாடும் மயிலுக்கு ஒப்பிடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டும்
நா.பார்த்தசாரதி தனது 'பழந்தமிழர்
கட்டடக்கலையும் நகரமைப்பும்' என்னும் ஆய்வு நூலில் மயூரம் என்றொரு பிரிவும் நகர
அமைப்பு வடிவங்களில் இருந்திருக்கலாம் என்பார்.
இவை தவிர வேறுவகையான சில வகைகளும் காணப்படுகின்றன. இத்தகைய வகையான நகரங்கள்
குறிப்பிட்டதொரு சாதிக்கு மட்டுமேயுரியதாக விளங்கின. உதாரணமாகக் கேட்டாவைக்
குறிப்பிடலாம். இந்தவகை நகரத்தில் சூத்திரர்கள் மட்டுமே வாழ
அனுமதிக்கப்பட்டனர். இந்த்துக்களின் சாதிவழிச் சமுதாயத்தில் தாழ்ந்த படியில்
இருந்த காரணத்தினால் சூத்திரர்கள் பூரணத்துவமற்ற மனிதர்களாகக் கருதப்பட்டனர்.
இதனால் இவர்கள் மட்டுமே வாழ உருவாக்கப்பட்ட நகரங்களும் பூரணத்துவமற்றவையாகவே
அமைக்கப்பட்டன. எந்தவித முக்கியமான மையப்பகுதியையும் கொண்டிராத வகையில்,
முக்கியதுவம் குறைந்த நிலையில் இத்தகைய நகரங்களின் அமைப்பு காணப்பட்டது.
சமுதாயத்தில் முக்கியத்துவமற்ற படியில் வாழ்ந்த சூத்திரர்களின் நிலையை மேற்படி
நகரங்களின் நகர அமைப்பு வெளிப்படுத்துகின்றது.
அதே சமயம் இந்துக்கள் பெரும்பாலும் சதுர அல்லது செவ்வக வடிவங்களிலேயே
கட்டடங்கள், நகரங்களை அமைத்தாலும் வட்டவடிவிலும் சில சமயங்களில் அமைக்கத்தான்
செய்தார்களென்பதை Andras Volwahsan தனது
Living Architecure: Indian நூலில்
சுட்டிக்காட்டுவார். அதற்காக மண்டுக மண்டல அடிப்படையில் அமைந்த வட்ட வடிவ நகர்
அமைப்பு வடிவங்களைச் சுட்டிக் காட்டுவார். இருந்தாலும் பொதுவாக பெரும்பாலும்
பண்டைய இந்துக்கள் பாவித்த வடிவங்கள் சதுரங்கள் அல்லது செவ்வகங்களாகவேயிருந்தன.
இந்துக்களின் நகர அமைப்புக் க்லையில் சமயம், சாதி போன்றவற்றின் பங்களிப்பை
அல்லது பாதிப்பைப் பண்டைய இந்துக்களின் கட்டடக்கலை மற்றும் நகரமைப்புக்கலை
பற்றிய நூல்கள் வழங்கும் தகவல்கள், மற்றும் காணப்படும் பழமையின் சின்னங்கள்,
காணிப்பெயர்கள் ஆகியன தற்போதும் வெளிப்படுத்தி நிற்கின்றன. இவ்விதமாக நகர
அமைப்புக்கலையினை சமயம், சமுதாயத்தில் நிலவிய சாதி அமைப்பு, காலநிலை, நில
அமைப்பு, பாதுகாப்பு எனப் பல்வேறு காரணிகள் பாதித்தன. சங்ககாலத்தில் தமிழர்
ஊரமைப்பானது எவ்விதம் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகிய நில
அமைப்புகளால் வேறுபட்டு விளங்கின என்பதைச் சங்க இலக்கியங்கள் மூலம் அறிய
முடியும். மேலும் ஆரம்பத்தில் நகரங்கள் அமைக்கப்படமுன்னர் ஆரியக் குழுக்களினால்
அமைக்கப்பட்ட கிராமங்களின் அமைப்பு முறை பற்றியும் அறிய முடிகிறது. பெரியதொரு
கிளைவிட்டுப் பரந்ததொரு மரத்தினை மையமாக வைத்துக் கிராமங்கள் அமைக்கப்பட்டன.
அம்மரங்களின் கீழமர்ந்து அக்கிராமத்து முதியவர்கள் ஊர்ப்பிரச்சினைகளுக்கு
ஆலோசனைகள், தீர்ப்புக் கூறினார்கள். மேலும் இப்பிரபஞ்சமும், இங்கு காணப்படும்
அனைத்தும் எதனை மையமாக வைத்துச் சுழல்கின்றனவோ அந்த ஒழுக்கினையே அம்மரங்கள்
பிரதிநிதிப்படுத்துவதாகவும் அன்றைய இந்துக்கள் கருதினார்கள் என்பதையும் மேற்படி
நூல்கள் விளக்குவதை அறிய முடிகிறது.
ஸ்தபதி வை.கணபதி இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக் கையேட்டில் ;ஊரமைப்புக்கலை'
பற்றியொரு விரிவான கட்டுரை எழுதியுள்ளார். அதில் மயமதத்தினொரு பிரிவான
சிற்பநூல் நகரமைப்புப் பற்றியும் விவரிப்பதாக அவர் கருதுவதை
நா.பார்த்தசாரதியின் 'பழந்தமிழர் கட்டடக்கலையும் நகரமைப்பும்' சுட்டிக்
காட்டும். இவ்விதமாக 'மயமத' அடிப்படையிலமைந்த ஊரமைப்பானது அதன் சுற்றளவின்
அடிப்படையில் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததையும் அறிய முடிகிறது.
20,000தண்டங்களைச் சுற்றளவாகக் கொண்ட கிராமம் (ஒரு தண்டமென்பது நான்கு முழங்களை
அல்லது பதினொரு அடிகளைக் குறித்தது)., 40,000 தண்டங்களைச் சுற்றளவாகக்
கொண்ட கிராமம், 60,000 தண்டங்களைச் சுற்றளவாகக் கொண்ட கிராமம், 80,000
தண்டங்களைச் சுற்றளவாகக் கொண்ட கிராமம், 1,00,000 தண்டங்களைச் சுற்றளவாகக்
கொண்ட கிராமம் எனக் கிராமங்கள் பல்வேறு அளவுகளில் அமைக்கப்பட்டன. இவ்விதமான
கிராமங்களின் இருபதினொரு பாகத்தில் மட்டுமே வீடுகள் கட்ட ஒதுக்கப்பட்டன.
எஞ்சியவற்றில் விளைநிலங்கள், நீர்நிலைகள், மேய்ச்சல் நிலங்கள்,
விருட்சங்களுக்கு, தோப்புக்களுக்கென ஒதுக்கப்பட்டன. இவ்விதமாக நகர அமைப்பானது
கிராமம், கேடம், கர்வடம், துர்க்கம், நகரம் ,கோநகரெனப் பரிணாம வளர்ச்சியுற்று
வந்ததை மேற்படிக் கட்டடக்கலை/நகரமைப்பு நூல்கள் குறிக்கின்றன.
இவ்வத்தியாயத்தில்
பண்டைய இந்துக்களின் நகர அமைப்புக் கலைபற்றியும், வகைகள் பற்றியும், அதில்
சாதியின் பாதிப்புப் பற்றியும் பார்த்தோம். இனிவரும் அத்தியாயத்தில் பண்டைய
இந்துக்களின் குறிப்பாகத் தமிழர்களின் தென்னிந்திய நகரங்கள் பற்றிச் சிறிது
பார்ப்போம்.
[தொடரும்]
நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு' - வ.ந.கிரிதரன் -அத்தியாயம் எட்டு: பண்டைய நூல்களும் கட்டடக்கலையும்! ..உள்ளே
நல்லூர் இராஜதானி (கடந்தவை:):
..உள்ளே
சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு!
- வ.ந.கிரிதரன் -......உள்ளே
கடந்தவை: நல்லூர் இராஜதானி: ..உள்ளே
வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்!
- வ.ந.கிரிதரன் -..உள்ளே
ngiri2704@rogers.com