| 
'தமிழ் டைம்ஸ்' ஆசிரியர் திரு. என்.எஸ்.கந்தையா 
மறைவு! 
- விம்பம் கலை- கலாச்சார அமைப்பு - 
காற்றினில் கரைந்த பெருமகன்: அமரர் N.S. 
கந்தையா!மண்ணில்: 
07. 09. 1922; 
விண்ணில்: 26. 08. 
2008
 
  லண்டனுக்குப் 
புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வரலாற்றில் மிகமூத்த தமிழ்ப் பிரமுகராகத் திகழ்ந்த திரு 
N.S. கந்தையா அவர்களின் மறைவு, நேர்மையோடும் அர்ப்பணிப்போடும் தமிழர் விவகாரங்களில் 
பணியாற்றிய ஒரு சிறந்த சேவையாளரின் பாரிய இழப்பாகும்.. 
லண்டனில் கடந்த 25 ஆண்டுகளாக வெளிவந்த ‘TAMIL TIMES’ என்ற ஆங்கில மாத சஞ்சிகை யின் 
முகாமையாளராக அமரர் N.S. கந்தையா அவர்கள் ஆற்றிய பெரும் பணி, தமிழர்களின் ஊடக 
வரலாற்றில் தனி அத்தியாயத்தைக் குறித்து நிற்கின்றது. மிகப்பெரிய பணபலமோ, ஆளணியோ இல்லாத நிலையிலும், ஒரு தனிமனிதனாக நின்று அசாத்தியமான 
உழைப்போடு அப்த்திரிகையை தொடர்ச்சியாக வெளிக்கொணர்ந்ததில் அவர் ஒரு சாத னையை 
நிலைநாட்டியிருக்கிறார்.
 
 உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் இல்லங்களிலெல்லாம் ‘TAMIL TIMES’ மாத இதழ் 
அவசிய வாசிப்புக்குரிய தொன்றாகவே இருந்தது. இந்த ஆங்கில சஞ்சிகைக்கான ஆக்கங்களை 
உரியவர்களிடமிருந்து பெறுவதுடன், பத்திரிகையைப் பல்வேறு நாடுகளுக்கு விநியோகம் 
செய்தல், சந்தா மற்றும் விளம்பர விவகாரங்கள், படைப்பாளிகள், சந்தாதாரர்கள், 
விளம்பரம் செய்வோர் ஆகியோருடனான தொலைபேசி தொடர்புகள் என பத்திரிகைக்கான அனைத்து 
அம்சங்களையும் ஒருங்கிணைத்து அவர் செயற்பட்ட விதம் முன்னுதாரணம் இல்லாத சிறப்பைக் 
கொண்டதாகும்.
 
 திரு. P. ராஜநாயகம் அவர்களின் ஆசிரியர் தலையங்கம் மற்றும் தொகுப்பு பணிகளோடு ‘TAMIL 
TIMES’ சஞ்சிகையை மாதாமாதம் உரிய காலத்தில் வெளிக்கொணர்ந்ததில் N.S. கந்தையாவின் 
நிர்வாகத் திறன் பளிச்சிடுகின்றது.
 
 லண்டனில் நீண்ட காலமாக இயங்கிவரும் ஸ்கொட் நலன்புரி அமைப்பின் (Standing Committee 
Of Tamil speaking people) நீண்டகால உறுப்பினராக இருந்து தமிழர்களின் சமூகப் 
பணிகளுக்கு உதவுவதில் அவர் முன்னின்று செயற்பட்டிருக்கிறார்.
 
 யாழ்/சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரியில் கணித, ஆங்கில பாடங்களில் புகழ்மிக்க 
ஆசிரியராகத் திகழ்ந்த N.S. கந்தையாஅவர்கள், லண்டனில் இயங்கிவரும் அக்கல்லூரியின் 
பழைய மாணவர் சங்க செயற்பாடுகளின் அச்சாணியாக திகழ்ந்தவர் ஆவார். ஸ்கந்தவரோதய 
கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ஒருமித்த குறிக்கோளுடன் செயற்பட்டமைக்கு
 N.S. கந்தையாவின் தனித்துவ ஆளுமையே காரணமாகும்.
 
 சைவநெறியில் சிறந்த இப்பெரியார் ஆர்ச்வே உயர்வாசற்குன்று முருகன் ஆலயத்தை 
நிர்மாணிப்பதில் தலையாய பங்கினை ஆற்றியிருக்கிறார்.
 
 இலங்கை போக்குவரத்து சபையின் முகாமையாளராக சிறப்பாகப் பணியாற்றிய திரு. N.S. 
கந்தையா அவர்கள், தான் சார்ந்து செயற்பட்ட அனைத்து விடயங்களிலும் ஒழுங்கு. நேர்மை, 
கண்ணியம், நேரந்தவறாமை, பிறரை மதிக்கும் உயர்பண்பு, மற்றவர்களுக்கு உதவும் 
பரோபகாரம் ஆகிய உயர்ந்த நற்பண்புகளை கொண்டவராகத் திகழ்ந்தார்.
 
 தமிழர்களின் எதிர்காலம் அறிவுத்தளத்தில் உயர்ந்து விளங்க வேண்டும் என்று 
அக்கறையுடன் செயற்பட்ட இந்த கல்விமானின் வரலாறு தமிழ் மக்களின் நினைவில் போற்றிப் 
பாதுகாக்கப்பட வேண்டிய சரித்திரம் ஆகும்.
 
 ‘விம்பம்’ கலை - கலாச்சார அமைப்பின் நோக்கங்களைப் பாராட்டியும், அதன் 
செயற்பாடுகளில் அக்கறைகொண்டு அரிய அறிவுரைகளையும் உதவிகளையும் நல்கிய பெருமகனாரை 
நாம் என்றென்றும் நினைவில் நிலை நிறுத்திக்கொள்கின்றோம்.
 
 அன்னாரின் மறைவினால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் 
அனைவருக்கும் ‘விம்பம்’ தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றது.
 
 
KKRAJAH2001@aol.comவிமபம்: vimbam @aol.com
 |