கவிஞர் சு.வில்வரத்தினம்
மறைவு!
ஈழத்துத்
தமிழ்க் கவிஞரான சு.வில்வரத்தினம் காலமாகியதாகக் கிடைக்கப்பெற்ற
தகவல்கள் தெரிவிக்கின்றன. 1950இல் பிறந்த கவிஞர் யாழ்
மாவட்டத்திலுள்ள புங்குடுதீவினைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1970களில்
எழுத ஆரம்பித்து ஈழத்துத் தமிழ் இலக்கிய வானில் தனக்கென்றோரிடத்தினை
ஏற்படுத்திக் கொண்டவர். இவரது முன்னைய கவிதைத்தொகுதிகளாவன, அகங்களும்
முகங்களும் (1985), காற்றுவெளிக்கிராமம் (1995), காலத்துயர்.
நெற்றிமண், 2000 இலே வெளியானது. இவருடைய கவிதைகள் மொத்தமாக
உயிர்த்தெழும் காலத்துக்காக என்ற தொகுதியாக 2001 இலே வெளியானது.
மரணத்துள் வாழ்வோம் தொகுதியிலேயும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
கவிதைகளையும் பாடல்களையும் சிறப்பாகப் பாடும் வல்லமை
பொருந்தியவரும்கூட. ‘Lutesong and
Lament: Tamil Writing from Sri Lanka’
தொகுதியிலே இவரது கவிதை ஒன்று ஆங்கிலவடிவிலே வெளிவந்துள்ளது.
தன்னிறுதிக் காலத்தில் கவிஞர் திருகோணமலையில் பணியாற்றி வந்தார்.
வெளிவந்த நூல்கள்: அகங்களும் முகங்களும் (கவிதைத் தொகுதி, 1985),
காற்றுவெளிக் கிராமம் (கவிதைத் தொகுதி, 1995), காலத்துயர் (கவிதைத்
தொகுதி), நெற்றிமண் (கவிதைத் தொகுதி, 2000), உயிர்த்தெழும்
காலத்துக்காக (கவிதைத் தொகுதி, 2001). கவிஞரின் மறைவு
ஈழத்தமிழர்களின் துயர்நிறைந்த இந்தக் காலகட்டத்தில் மேலும்
துயரளிப்பதாகும். கவிஞருக்கென்றொரு வலைப்பதிவுமுண்டு. அதன் இணையத்தள
முகவரி: http://vilvaratnam.blogdrive.com. மறைந்த கவிஞரின் ஞாபகமாக
அவரது 'அகங்களும் முகங்களும்' கவிதைத் தொகுதிக்கு எழுத்தாளர்
மு.பொன்னம்பலம் எழுதிய முன்னுரையிலிருந்து சில பகுதிகளையும்,
அந்நூலுக்கான கவிஞரின் முன்னுரையினையும், மேலும் அவரது 'அகங்களும்
முகங்களும்' மற்றும் 'காற்றுவழிக் கிராமம்' ஆகிய தொகுதிகளிலிருந்து
சில கவிதைகளையும் மீள்பிரசுரம் செய்கின்றோம்.
'அகங்களும் முகங்களும்' நூல்
முன்னுரையிலிருந்து!
'...என்னோடு கூடவே இளைய
பரம்பரையின் கலைஞனான சு.வில்வரத்தினமும் இருந்தான்....'
- மு.பொன்னம்பலம் -
இவரது சிருஷ்டிகளை ஆத்மார்த்த தளத்துக்கு உரியவையாகவே நான்
காண்கிறேன். ஆத்மார்த்த விஷயங்களை வெளிக் கொணரும் ஊடகங்களாகவே
ஆதியில் கலை இலக்கியங்கள் தோன்றின. அதாவது மனித இருப்பின் அனுபவங்கள்
சில சாதாரண வார்த்தைகளால் சொல்லக்கூடியவையாகவும், சில அப்படிச் சொல்ல
முடியாதவையாகவும் நிற்கின்றன. அப்படிச் சொல்லமுடியாத உணர்வுகள்
எண்ணங்களைச் சொல்லில் வடித்துக் காட்டும் ஊடகங்களாகவே ஆதியில் கலை
இலக்கியங்கள் தோன்றின. ஆத்மீக, தத்துவச் சிந்தனைகளில்
பரிச்சயமுள்ளவர்கள் இவற்றை வியவகாரிக, பரமார்த்திக என்ற
பிரிவுகளுக்குள் அடக்கிப் பார்க்கக்கூடும். அதாவது வார்த்தைகளில்
சொல்லக்கூடிய நடைமுறை விஷயங்களை வியவகாரிக என்றும்; அப்படி முடியாத
இறைவன், மனித இருப்பு போன்ற நடைமுறைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை
பரமார்த்திக என்றும் கூறலாம். ஆனால் எனது ஆத்மார்த்தத் தளம் இந்தப்
பிரிவுகளுக்குட்பட்டதல்ல. வியகாரிக தளத்திலும் சரி பரமார்த்திக
தளத்திலும் சரி நாம் பிறர்க்கு வார்த்தைகளாற் சொல்ல முடியாமல்
எம்முள் பதிவுறும் அனுபவங்களின் தளத்தையே, நான் ஆத்மார்த்த தளம் எனக்
கருதுகிறேன்.
இறைவன் பற்றி அல்லது நம் இருப்புப்பற்றி எழும் ஆத்மீக விஷயங்கள்
வேண்டாம். வெகு சாதாரணமான, மண்ணில் தெறிக்கும் உண்மைகளையே சொல்ல
முடியாத அவஸ்தை நமக்கு.
பள்ளிக்கூடத்துக்கு முன்னால், விபத்தொன்று நேர்ந்ததின் பின்னர் அங்கே
தனித்துக் கிடக்கும் ஒரு கால் சப்பாத்து.
வெட்ட வெளியில் தூரத்தில் நின்று சோழகத்தில் ஆடும் ஒற்றைப்பனை.
இப்படிப் பல. இந்த நிகழ்வுகள் எம்முள் கிளறிவிடும் உணர்வு ரூபங்களை
வெளிக்கொணர முடியாமல் தவிக்கும்போது எமக்குக் கைகொடுத்து நிற்கும்
ஊடகங்களே கலை இலக்கியங்கள்! இந்த உணர்வுநிலைகளை வெற்றிகரமாக
வெளிக்கொணரும் படைப்புகளே சிறந்த கலைச் சிருஷ்டிகளாகக்
கொள்ளப்படுகின்றன; கருத்துக்களைக் கோஷித்தும் கொள்கைகளைப் போதித்தும்
நிற்கும் படைப்புகள் அல்ல. ஆயினும் கோஷிப்பும் போதிப்பும் கூட
இவ்வுணர்வுகளில் கவலையிடப்படும்போதே உத்வேகமும் நிமிர்வும்
பெறுகின்றன. இத்தகைய அனுபவ வெளிப்பாடுகளையே நான் ஆத்மார்த்த தளத்தவை
என்கிறேன். இந்த ஆத்மார்த்த அனுபவங்களின் உந்துதலே கலை
இலக்கியங்களின் தோற்றத்தின் ஆரம்பமாக இருந்திருக்கின்றன,
இருக்கின்றன.
இந்த ஆத்மார்த்த உணர்வுகளின் மற்றுமொரு நிலை இன்னும் முக்கியமானதும்
சுவையானதுமாகும். அதாவது பல்வேறு பன்முகப்பட்ட தளங்களிலிருந்து இந்த
ஆத்மார்த்த உணர்வுகள் கிளறப்படுகின்றன. அப்படிக் கிளறப்படும்
உணர்வுகள் அவ்வத் துறைக்கேற்ற கனதிகளைப் பரிமாணங்களை ஏற்று
வெளிக்கிளம்பி வரும்போதும் அவையெல்லாம் ஒன்றையன்று தழுவி, ஒன்றுவிட்ட
இடத்திலிருந்து மற்றொன்று தொடர்ந்து நானாபக்கமிருந்து வரும் ஆற்றின்
கிளைகளைப்போல், ஒரே உணர்வுக் கடலை நோக்கிப் பாய்கின்றன.
ஒரே உணர்வுக் கடல், அதுதான் முக்கியம்.
பல்வேறு தளங்கள். அவற்றின் கனதிகள், தன்மைகளுக்கேற்ப உணர்வுகளின்
மேற்பூச்சுக்கள் வேறுபடுவனபோல் தெரிந்தாலும், ஆழ நோக்கில் எல்லாம்
ஒன்றை நோக்குவன போல்; ஒன்றைத் தேடுவன போல்.
ஓர் இனிமையான இசை.
தூரத்து மலைகளில் கவியும் முகில் திரள்.
ஓர் அடர்ந்த காட்டுள் ரகசியத்தைப் பொத்திக் கொண்டு ஓடுவதுபோல்
கிளுகிளுத்துத் தலைமறையும் ஓர் அருவிக் கிளை.
"வெள்ளி நாடாவாய்" விரியும் நிலாக்கால ஒற்றையடிப் பாதை.
இந்தப் படிமங்கள் எம் இருப்பில் படியும்போது எமக்குள் வழியும் ஓர்
இன்துயர்.
இன்பமும் துன்பமும்.
இந்த நிகழ்வுப் படிவுகளின்போது கிளறப்படும் எமது ஆழ
உணர்வுகளிலிருந்து சந்தோஷமும் பின்னர் அதன் முடிவில் இருந்து வெளிக்
கசியும் துயரமும் என்கின்ற இரு முரண்பட்ட உணர்வுள்ள எம்முள். ஏன் இது
ஏற்படுகிறது?
இந்த நிகழ்வுப் படிவுகளின் தூண்டுதலால் எமது ஆழமான பேரியல்பு
கிளறப்படுவதால் சந்தோஷம் ஏற்படுகிறது. பின்னர் அப் பேரியல்போடு சதா
ஒன்றி நிற்க முடியாத எமது இயலாமை வெளிக்கும்போது துயரம் மேலெழுகிறது.
ஒரு பிரிவுத் துயர். எமது இயல்பை, இருப்பைப் பிரித்த பிரிவுத் துயர்.
இதை இப்படி நோக்கலாம்.
தனது காதலியோயடு ஒருவன் கூடியிருந்த காலத்தில் அவன் கேட்ட பாடல்கள்,
இப்போ அவன் தனித்திருக்கும்போது எங்காவது இசைக்கப்படும்போது அவன்
காதலியின் நினைவை அது அவனில் தடவிச் செல்கின்ற ஒரு சந்தோஷத்தையும்
பின்னர் அதன் முடிவில் அப்போது அவள். அங்கில்லையே என்கின்ற உண்மையில்
எற்படும் பிரிவுத் துயரையும் போலவே இதுவும்.
எமது இருப்பாக உள்ளியங்கும் இப் பேரியல்பே எல்லா உயிர்களது
இருப்பாகவும் இருப்பதால்தான் நாம் எல்லா உயிர்களிடத்தும் அன்பு
கொள்ளவும் அவைபால் ஈர்க்கப்படவும் செய்கிறோம். அதேநேரத்தில்
அவ்வியல்பு பற்றிய சீரான புரிதல் இன்மையே பிறரில் கோபமும்
குரோதமுமாய் வெடிக்கிறது. அதனால்தான் எமக்குப் படுவிரோதியாக இயங்கும்
ஒருவன் திடீரெனத் தன் பலவீனமான நிலையில் எம்மிடம் அகப்பட்டுப்
பழிவாங்கப்படும்போது எங்காவது அவன் முகபாவத்தில்
ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு சுழிப்பு, திடீரென எங்கோ எமக்கும்
அவனுக்கும் பொதுவாக உள்ளியங்கும் எம் ஆழ இயல்பின் நரம்பை நெருடிவிட,
இதுகாலவரை நாம் அவனுக்கெதிராக வைத்திருந்த முஸ்தீபுகளெல்லாம்
அடிபட்டுப்போக, அவனுக்காக எம் நெஞ்சு கரைந்து கரைந்து நாம் பெறும்
புது அனுபவம்.
என் எதிரியின் முகபாவத்தில் தெறித்த ஒரு சுழிப்பு எப்படி என் ஆழ
இயல்பை அருட்டி விட்டதோ அவ்வாறே, நம் ஆழ இயல்புகளை அருட்டிச்
செல்லும் கலை இலக்கியங்களும் சாகாத கலைச் சிருஷ்டிகளாகப்
பரிணமிக்கின்றன. ஒரு சிறந்த கலைஞன் இந்த ஆழ இயல்போடு தொடர்புகொள்ளச்
செய்யும் மின்னிணைப்பைத்தான் தன் படைப்பின் மூலம் செய்துவிட்டுப்
போகிறான். அவனது படைப்புத் திறன் எவ்வளவு காலஞ்சென்றும் மின்னாற்றல்
இறங்காத பற்றறிப் (Battery) பெட்டியாக, அதை நுகர்பவன் எவனுக்கும்
அந்தப் பேரியல்போடு தொடர்பு கொள்ளும் வல்லமையைக் கொடுத்துக் கொண்டே
இருக்கிறது.
இவ்வடிப்படையில் பார்க்கும்போது காலத்துக்குக் காலம் தோன்றும் கலை,
இலக்கியக் கோட்பாடுகள் எல்லாம் ஒவ்வொரு கலைஞனின் கல்வி, அனுபவம்,
சின்தனை ஆழம் என்பவற்றுக்கேற்ப அறிந்தோ அறியாமலோ மனிதனின் இவ் ஆழ
இயல்பைத் தொடும் முயற்சிகளாகவே அமைந்துள்ளன. எக்ஸ்பிறஷனிசம்,
இம்பிறஷனிசம், நச்சுறலிசம், றியலிசம், சேர்றியலிசம் என்று கலைஇலக்கிய
உலகில் அடிபடும் இக் கோட்பாடுகளெல்லாம் இதன் வெளிப்பாடுகளே. ஆனால்
அப்படி நான் கூறின் அக்கோட்பாடுகளை உருவாக்கியவர்களோ அதில்
ஈடுபட்டவர்களோ அதை ஒத்துக்கொள்ளப்போவதில்லை. அவர்கள் தத்தம் காலத்து
சமூக, தத்துவ, புறச் சூழ்ல்களால் தம் இருப்பு
யந்திரமயமாக்கப்படும்போது என்னென்ன நோக்குகள் தமக்கு விடுதலை
அளிப்பனவாக இருக்கின்றவோ அவற்றின் வெளிக்காட்டல்களே இவையெனக்
கூறுவர். மனிதனின் ஆழ இயல்புகள் பற்றி அக்கறைப்படாதவர்களாகவோ அல்லது
அறியாதவர்களாகவோகூட அவர்கள் இருக்கலாம். ஆனால் நமக்கு ஆறுதல்
தரக்கூடிய விஷயம் என்னவென்றால் அவர்கள் விடுதலைப்பற்றிப் பேசுவது.
விடுதலை : அது முக்கியமானது
ஒவ்வொரு கலைஞனும் இந்த விடுதலைக்குத் தான் கொடுக்கும் அர்த்தம், ஆழம்
என்கின்ற வரையறைகள் மூலம் நான் குறிப்பிட்ட மனிதனின் பேரியல்புக்கு
அருகிலா தூரத்திலா நிற்கின்றான் என்பதை, அறியலாம். காரணம் மனிதனின்
பேரியல்புதான் அவனது பூரணமான விடுதலையாகவும் இருக்கிறது; அதுவே அவனது
நிலையான இருப்பாகவும் ஆனந்தமேற்றுகிறது.
ஒரு சிறந்த கலைஞன் எந்தக் கோட்பாட்டுக்குள் தன்னைப்
புகுத்திக்கொண்டாலும் ஒரு தேர்ச்சிபெற்ற சுழியோடிபோல் நேரடியாகவே
இந்த மனித ஆழ இயல்புக்குள் இறங்கி, அந்த விடுதலையில் குளிப்பதோடு
மற்றவரையும் அங்கழைத்துக் குளிப்பாட்ட முயல்கிறான். அவன்
ஆத்மார்த்தத் தளத்தின் சிறந்த பிரதிநிதியாவான்.
2
இந்தப் பின்னணியின் அடிப்படையில் சு.வி.யின் கவிதைகளை நோக்குவது,
அவர் சிருஷ்டி ஆற்றலை நாம் புரிந்துகொள்வதற்கு எதிராக நிற்கும், சில
தடைகளை அகற்றுவதற்கு உதவிபுரிவதாக அமையும்.
சு.வி.யின் கவிதைகளின் தனித்துவத்திற்கும் வெற்றிக்கும் காரணம் என்ன?
அவரது கவிதைகளின் காட்டப்படும் எல்லா உயிர்களுக்கும் பொதுவாக
உள்ளியங்கும் பேரியல்பின் பரிமாணங்களும்; அப்படிக் காட்டுதலுக்குக்
கருவியாகப் பெய்யப்படும் ஆத்மார்த்த உச்சங்களும்; அவற்றின்
வெளிப்பாட்டு முறைகளுமாகும்.
ஏற்கனவே சமகாலத் தமிழ் இலக்கியத்தில் ஆத்மார்த்த வாதிகள்
தேறியுள்ளனர். 'மௌனி'யின் கதைகள் இந்த ஆர்மார்த்தப் பண்பின் உயர்
நிலைகளை எட்டியிருக்கின்றன. ஆயினும் அவை 'அவன்-அவன்' என்னும்
எல்லைக்குள் சிக்கி. ஒரே தன்மையத்த உணர்வு நிலைகளையே திரும்பத்
திருமப எழுப்ப முயல்வனவாதலால் ஆத்மார்த்தப் பண்பின் பூரண
சுற்றோட்டத்தைத் தராதவையாகவே போய்விடுகின்றன.
ஆனால் கவிஞர் சு.வி.யின் கவிதைகள் அவற்றிற்கு மாறாக, பன்முகப்பட்ட
துறைகள் இவர் இருப்போடு நிகழ்த்தும் 'உராய்வின்' சிலிப்பாகவே வெளிக்
கிளம்புகின்றன.
ஆனால் இப்படி வெளிக்கிளம்பும் உணர்வுகள் எல்லாம் பன்முகப்பட்ட
தளங்களின் குணங்களை ஏற்றிருந்த போதும், நான் ஆரம்பத்தில் கூறியதுபோல,
அவையெல்லாம் ஒரே உணர்வுக் கடலை நோக்குவனபோல், ஒன்றையே தேடுவனபோல்,
ஒன்றையன்று பின்னியும் தொடர்ந்தும் ஆத்மார்த்த உலகுக்குரியவையாகவே
வெளிக் கிளம்புகின்றன.
இதே 'விடுதலைப்பொழுது' என்னும் கவிதையில் காலைப் பொழுதின்
ரம்மியத்தைக் கூறும்
"நெஞ்சப்புலம் நெகிழ்ந்து அங்கு
புலரவிடு காலைப் பொழுதை" என்னும் வரிகள்,
அடுத்து வரும் 'கோடை'யில் எழும் வெறுமையை அசைபோடும்,
"கானல் அரவுகள் நெளிதரும்வயல் வெளி
மேய்தலிலாது வெறுமையை இரைமீட்டபடி
காய்தலுறும் மாடுகள்" என்னும் வரிகள்,
பின்னர் 'ஊடாக' என்னும் கவிதையில் பிணக்குற்ற தாம்பத்திய உறவில்
விழுந்த இரவு பற்றிப் பேசும் போது,
"உறைந்துபோய் நிற்கும் ஊமை இருளில்
புதைந்து போய்விட்ட கால ஊர்தி"
என்று வரும் படிமக் கலப்புகள்,
'பொழிவு' கவிதையில் வரும்
"இலையுதிர்ந்த நெடுமரமாய்
ஏகப் பெரு வெளியின்
சங்கீதம் குளித்திலையா?" என்று கேட்கும் வரிகள்.
'நிலவும் நெகிழ்வும்' என்னும் கவிதையில்
"எல்லாம் முடிந்து
நெற்பொதிகளுடன் வைக்கோற் போருஞ்
சுமந்தபடி மெல்ல
அசைநடைபோடும் மாட்டு வண்டிகள்;
வண்டிகளின் பின்னே நாங்கள்....
திரும்பிப் பார்த்தால்
பின்னிலவில்,
வளமெல்லாம் அள்ளித் தந்துவிட்ட
வயல்வெளி
வறிதே கிடக்கின்ற சோகம்
நெஞ்சைப் பிழியும்
துயர்- இன் இசையாய்....." என்று கூறும் வரிகளெல்லாம் நமக்கு என்ன
கூறுகின்றன?
ஒவ்வொரு வரிகளும் வெவ்வேறு நிலைகளின் தளங்களின் பிரசவங்களாக வெளிக்
கிளம்பியபோதும் அவையெல்லாம் அடிப்படையில் ஒன்றோடொன்று பின்னிப்
பிணைந்தும், தொடர்ந்தும் ஒரே உணர்வுக் கடலை நோக்குவனவாய், ஒன்றையே
தேடுவனவாய் நிற்கின்றன. அப்படி நிற்கும்போதும் ஆனந்தமும்,
இனந்தெரியாப் பிரிவுத் துயருக்குமான ஆத்மார்த்தப் படிவுகளாகவுமே
நிற்கின்றன.
ஆனால் இந்த ஆனந்தமும் துயரும் ஏனைய சிறந்த கலைஞர்கள் பலரிடம்
காணப்படுவதுபோல, அடிக்கடி மனதை வந்துறுத்தும் வெறும் அருட்டல்களாக
சு.வி.யிடம் நின்றுவிடவில்லை. இந்த இனங்காண முடியாத அருட்டல்களை
வைத்தே வெவ்வேறு கோணங்களில் காலங்காலமாகக் கலைகள் யாத்தவர் உள்ளார்.
இடைக்கிடை மின்னும் தரிசன வீச்சால் சில வெளிச்சங் காட்டினாலும்
அனேகமானவை விளக்கமின்மையால் மூடுமந்திரங்களாகவே வீழ்ந்துள்ளன.
ஆனால் சு.வி. ஏனையோர் போவல்லாது தம்மை அடிக்கடி அருட்டும் 'இன்
துயருக்'குரிய காரணத்தைத் தெளிகிறார். நம் விடுதலை இருப்புப் பற்றிய
தூண்டுதல்கள் ஆனந்தத்தையும் அதில் சதா நிலைகொள்ளாமை துன்பத்தையும்
தருகின்றன என்ற தெளிவே, அவரது 'விடுதலைப் பொழுது' என்னும் கவிதையும்;
'விடுதலை ஒன்றே உடைமையாய்' என்னும் கடைசிக் கவிதையுமாம். எல்லாப் புற
விடுதலைகளோடும் நீ, நீயாக உன் 'வீட்டில்' இருப்பதுபோல் வேறு சுகம்
வருமா? 'வீட்டை'ப் பிரிந்தால் துயரந்தான். அதனால்தான் அவர்,
விடுதலைப் பொழுதுக்காய்-
"திறந்து விடு கதவை முற்றாய்
உனதகம் ஒளி பெறுமட்டும்" என்கிறார் வீரியம் தொனிக்க.
இனி கவிஞர் சு.வி. தனது ஆத்மார்த்த அனுபவப் படிவுகளை வெளிக்கொணரக்
கையாளும் முறைகளைப் பார்ப்போம். இவர் ஏனைய ஆத்மார்த்தக் கவிஞர்கள்
போலல்லாது பன்முகப்பட்ட அனுபவங்களைத் தரும் பல்வேறு தளங்களில்
சஞ்சரிப்பவர். அப்படிச் சஞ்சரிக்கும் போது தான் பெறும் அனுபவங்களை
அந்தந்தத் தளத்துக்குரிய ஆத்மார்த்தச் சொற்களின் தெரிவின் மூலம்
பதிவு செய்கிறார். அதனால் அவர் அனுபவங்கள் ஏனைய அனேக ஆத்மார்த்த
கவிஞர்களின் படைப்புகள்போல் வெறும் மூடுமந்திரங்களாக வீழாமல் எல்லோர்
நெஞ்சங்களிலும் உரையாடிச் செல்கின்றன. சிறந்த ஆக்கங்களாக
வருவதற்குரிய கீற்றுகள் தெரிந்தும் அனேக படைப்புகள் வெறும்
மூடுமந்திரங்களாக வீழ்வதற்குரிய காரணம். அந்தந்தத் தளங்கள் பற்றிய
அறிவும் அவற்றிற்குரிய சொற்களின் தேர்வும் இல்லாமையே. தர்மு
சிவராமுவின் பலவீனத்துக்கு இது ஒரு முக்கிய காரணமாகும். பல்வகைப்பட்ட
தள அனுபவங்களை ஒரே தளத்துக்குரிய வார்த்தைகளால், படிமங்களால் பேச
முயலும் போக்கு அவருடையது. இதனால் தளப் பிறழ்வும் சொற்திரிபும்
மாறாட்டமும் நிகழ்கின்றன. ஆனால் தளமாறாட்டமும் சொற்திரிபும்
நிகழக்கூடாதென்றில்லை. ஆனால் அப்படி நிகழும்போது அது வேறோர்
புதுத்தள, புதுக் கலை இலக்கிய உருவாக்கத்தின் தேவையின் நிகழ
வேண்டும்.
கவிஞர் சு.வி.யின் தொடும் தளங்களுக்கேற்பச் சொற்களைத் தெரிவுசெய்து
மிகக் கச்சிதமாக வாய்பேச முடியாத உணர்வுகளை எம்மோடு தன் கவிதை மூலம்
பேசவைக்கிறார். இதே 'விடுதலைக் குருவியும் வீட்டு முன்றிலும்' என்ற
கவிதையில் பாரதியை நினைவூட்டி விடுதலைக் குருவியோடு அழகாகப்
பேசுகிறார்.
"பாரதி,
விடுதலை அவாவிய நின்
சிட்டுக் குருவி
எங்கள் வீட்டு முற்றத்திலும்
மேய்தல் கண்டேன்.
விடுதலைத் தாகத்தின் துடிப்பும் குரலென்றால்
அதன் இதழ்களிலும்
'விடு விடு' என்ற அதே துடிப்புத்தான்.
முற்றத்தில் மேயும் போதும்
திண்ணையில் திரியும் போதும்
வீட்டு வளையின் மேலும்
விண்ணை அளக்கும் போதும்
'விடுவிடு' என்ற ஒரே ஜபம்தான்......
தலையை உருட்டுதலில்,
சிறகைக் கோதுதலில்
காற்று வெளியில் 'ஜிவ்'வென்ற சிறகுதைப்பில்
அதே துடிப்பு! சதா துடிப்பு!"
என்று பாரதியை நினைவுகூர்ந்து சிட்டுக் குருவியை அழைக்கும்போது
விடுதலையின் துடிப்பும் தேவையும் புதுப் பரிமாணங்களும் ஆழ்கின்றன.
ஈற்றில்-
"விடுதலைக் குருவீ!
வீடுதேடி வந்தாய் நீ வாழி!
நின் அலகிதழ் முனையில் எம்
இருள் துயரெல்லாம் கிழிபடுகிறது...."
என்று கூறிச் செல்லும்போது உண்மையாகவே கருத்துக்கள் காட்சிப்
படிமமுறும் ரசவாதம் ஒன்று எம்முன்நடந்தேறுகின்றது போலவே உணர்கிறோம்.
'வீழ்ச்சி' என்னும் இன்னோர் கவிதையில் தான் சோரம் போனதையும், அது
எப்படித் தன் மனைவியின் முகத்தில் பிரதிபலிக்கிறது என்பதையும்,
அதேநேரத்தில் மனைவியின் குணவொழுக்கம் தனக்கு நேர்மாறானது என்பதையும்
காட்ட அவர் தேர்ந்தெடுக்கும் அந்தத் தளத்துக்குரிய வார்த்தைகள்:
"அவள் முகத்தில்
வெடித்துச் சிதறின முன்னைநாள் ஒருத்தி
உடைத்த சிலம்பின் உக்கிர மணிகள்"
'அகங்களும் முகங்களும்-2' என்ற கவிதையில் இன்றைய நம் போலி
அரசியல்காரர்களுக்கே உரிய, அவர்களை வைவதற்கே உரிய பாஷையில்
"வெட்கம் கெட்டவர்கள்!
வேற்றோர் இட்ட நெருப்பின்
வெக்கை தணிந்து இன்னும்
சாம்பல் அள்ளவில்லை.
தூர்ந்து போன தேசத்தைத்
தூக்கி நிறுத்தத் தோள் கொடுப்பாரில்லை.
அதற்குள்
தேர்தல் வெற்றி ஊர்வலம் வருகிறார்.
.....இன்றைய இடிபாடுகளை நாளைய தேர்தலுக்கு
படிக் கற்களாக்கும் பயன் தெரிந்தவர்கள் அவர்கள்...."
என்று நம் தமிழ்த் தலைவர்களைச் சாடும் அவர், இடிபாடுகளின்மேல் ஒரு
படைவீடு' என்ற கவிதையில் இந்த இடிபாடுகளை வேறோர் தத்துவத் தளத்துக்கு
இட்டுச் செல்கிறார்.
"கோபுரங்கள் எழுப்பிய கோயில்களை விடவும்
இடிபாடுற்றவைகளில்
எனக்கு அதிகம் ஈடுபாடு....
...எல்லாமே ஒரு நாள் இடிவிழுந்த குண்டாகாதோ?
எழும்பிய கோயில் வேறு. இடிவிழுந்தகுண்டு வேறா?
இடிவிழுந்த குண்டினுள்ளும்
நீருற்று முகங்காட்டும்." என்னும்போது கட்டடங்களில் செதுக்கப்பட்ட
சிற்பங்களை விட இடிபாடுகளின் குவியலும் குழிகளும் இன்னும் ஆழத்துக்கு
எம்மை இழுக்கின்றன.
அடுத்து 'புத்தரின் மௌனம் எடுத்த பேச்சுக் குரல்' என்ற கவிதையில்,
பேரினவாதச் சூறாவளியால் மனித இனத்தின் கலை, கலாசாரம், ஏன் மனித
நாகரிகமே இடியுண்டு வீழ்ந்த நிலையை புத்தர் மூலமே கூறவைப்பது மிக
நேர்த்தியாக அமைகிறது.
"நெடுஞ் சாலைகள்தோறும் நிறுவிய எனது
சிலைகளின் முன்னே
மனிதரின் நிணமும் குருதியும் எலும்பும்
படையல் செய்தோரே
இதோ ஏற்றுக் கொள்ளுங்கள்
எனது வெளிநடப்புக்கான பிரகடனம்.
பௌத்தத்தின் பேரால் தோரணம் கட்டிய
வீதிகள் தோறும் நீங்கள் நிகழ்த்திய
இன சங்காரப் பெரஹராக்களின் பின்னரும்
இங்கே எனக்கு அலங்கார இருக்கையோ?"
என்று இனவாத வெடில் சூழலை விளக்கிக் கொண்டு வரும் கவிஞர் இடையில்
"விலகி செல்கையில்
கால்விரல்களில் ஏதோ தட்டுப்படுகிறது.
பேரினவாதப் பசிக்கு மனிதக் குருதியை ஏந்திப்
பருகி எறிந்த பி‡¡ பாத்திரம்.
ஒரு கணம்
அமுத சுரபி என் நெஞ்சில்
மிதந்து பின் அமிழ்கிறது." என்று விவரிக்கும் போது இவ்வரிகள்
எத்தனையோ நினைவுத் தொடர்களை அவிழ்த்துச் செல்கின்றன. இக்கவிதை
அரசியலாகவும், தத்துவமாகவும் மாறி மாறி வளர்ந்து செல்கிறது.
'வெறுங் காற்றில் கலந்திடுமோ....' என்ற கவிதையில் பீகாரில், கீழ்
வெண்மணியில் ஹரிஜனங்களை நெருப்பாக்கிய சாதிவெறித்தனங்களைச் சாடிய
கவிஞர், இறுதியாக அதை முடிக்கும்போது ஆகுதி வளர்க்கும் புதிய
வேதியன்போல் நெருப்பைப் பார்த்து கூறுகிறார்:
"அக்கினியே! இடம்மாறு.
அஞ்சி ஒடுங்கி அடங்கி வாழும் இந்த
ஏழை எளியவரிடம் வந்து குடியேறு.
அவர்கள் கண்களில் ஜுவாலி.
நெஞ்சங்களில் ஞான நெருப்பாய் எரி.
சொற்களில் சுடுசரமாகு.
செய்களில் ஆலைக் கனல்பெருக்கு.
மெய்ந் நெருப்பாக மேதினி எங்கும் திரிக."
என்று கூறும்போது பாரதிபோல் வேதத்தின் புது வலு ஏற்றுமவர், 'தூது'
என்ற கவிதையில் இனவாதிகளால் கைதுசெய்யப்பட்ட ஒரு மார்க்சீய
நண்பனுக்கு வேத உண்மையையே தூது விடுகிறார்:
"நடுங்கா நாட்டத்து நண்ப,
இது கேள்
நினக்கும் துயர் வதையுறும்
விடுதலை நேசர் எவர்க்கும் இது பொருந்தும்.
குளிரால் நடுங்குதலும் தீயால் சூடுறுதலும் இலாதது
ஆத்மா!
இருமைகள் அதற்கில்லை
என்பது வேதம்."
என்று கூறும்போது வேத உண்மை வலுவுறும் சூழலும்; அதன் வழிவந்த
புரட்சிக்காரராகவும் சு.வி.நிற்கிறார்.
இப்படி அவர் கவிதைக்குக் கவிதை தன் அனுபவப் பதிவுகளை, நம் சூக்கும
புரிதலைத் தூண்டிவிடும் சொற்கலவையால் புரியவைத்துச் செல்கிறார். இங்க
நான் மேலெழுந்தவாரியாக மேற்கோள் காட்டியவற்றை விட, மேற்கோள் காட்டல்
என்னும் முறைக்குள் அடங்காது முழுமையான தரிசனத்துக்கே உரியவை என
நிற்கும் படைப்புகளே அனேகம்.
3
இந்த ரீதியில் பார்க்கும்போது கவிஞர் சு.வி.யின் கவிதைத் தொகுப்பு
ஒரு வெற்றிகரமான சாதனையே. அதற்குரிய காரணம் அவர் பல்வேறு
பன்முகப்பட்ட தளங்களையும் தொடுக்கிறார் என்பது மட்டுமல்ல, அவர்
பிரவேசிக்கும் தளங்களில் அவ்வப் பிரதேசங்களுக்குரிய முற்போக்குச்
சக்திகளான ஆத்மார்த்த நிகழ்வுகள், அவற்றின் படிமங்கள், வார்த்தைகள்
என்பவற்றோடும் அணிசேர்ந்துகொள்கிறார் என்பதுமே. இந்த நிலையில் அவர்
தனது தலைமுறைக் கவிஞர்களான யேசுராசா, சேரன், ஜெயபாலன், புஷ்பராஜன்
போன்றோரையும் மிஞ்சியே நிற்கிறார் என்றே சொல்லவேண்டும். இதனால்தான்
இவர் கவிதைகள் சிலவற்றில் தனக்கு முற்பட்ட கவிஞர்களின் செல்வாக்கின்
பாதிப்பு நிகழ்ந்தபோதும் தன் தனித்தன்மையை இழக்காது நிற்கிறார்.
உதாரணமாக நீலாவணனின் கவிதை ஒன்றின் உவமைப் படிமத்தை (பரிதிக் குஞ்சு)
இவரது 'தியானம்' கவிதையில் காணலாம். இவரது 'சுழலின் மையம் தேடி....',
'நிலவுக் கெழுதல்' போன்றவற்றில் மு.பொ.வின் 'பிரபஞ்சக்கும்மி',
'பிறையருகாலம் முழுநிலவாகும்' போன்ற கவிதைகளின் அருட்டலைக் காணலாம்.
ஆயினும் இவரது படைப்புகள் தமக்கே உரிய தனித்துவத்தோடு
நிமிர்கின்றனவென்றால் அதற்குரிய காரணம் இவரது வெளிப்பாட்டு முறையும்,
அதற்கரிய சொற் தேர்வுமே.
இவரது சாதனை தளங்களில் உடைவு நிகழாமல் சொற்களில் திரிபு ஏறாமல்
அந்தந்தத் தளங்களின் ஆத்மார்த்தத்தைக் கறந்தெடுத்தது என்றால்,
தளங்களில் உடைவு நிகழ்த்தியும் சொற்களில் திரிபு விழுத்தியும்
நிகழும் புதுத்தள இலக்கிய உருவங்களும் அதன் ஆத்மார்த்தமும் இதில்
இல்லாது போனது, ஒரு குறையே எனலாம். மு.த.வின் ஆளுமையில் பயின்ற
இவரின் இவ்வாக்கங்கள், ஏற்கனவே இசைவுற்றிருந்த புதுக்கவிதைப்
பரப்பின் அகலத்தையும் ஆழத்தையும் விரிக்கின்ற அதே நேரத்தில்,
புதுத்தள ஊடறுப்புகளைக் காட்டவில்லைத்தான். என்றாலும் இவரது 'ஸ்தல
புராணம்' சிருஷ்டி அந்தத் திசையின் சமிக்ஞைகளை விழுத்துவதாகவே
நிற்கிறது. சாதி அமைப்புக் கெதிராகப் போராடிய மு.த.வோடு தோளோடு
தோள்போட்டு நின்று அவரோடு அடிபட்டுச் சிறைக்குச்சென்ற இவரின் அப்
போராட்டத்தின் அனுபவ வடிப்பாக நிற்கும் இந்தப் படைப்பு, கூத்து
நாடகம் கவிதை போன்ற பல்வகை உருவாக்கத்தின் கலப்பாக நிற்பது, இங்கு
குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் இத் தொகுப்பு புதுக்கவிதை உலகில் ஒரு பெரும் பாய்ச்சலைக்
காட்டுகிறது. ஆயினும் அதற்கெதிராக சிறு சிறு தடைகள் நிற்கின்றன.
இவையே சிலவேளை பின்னர் பெரும் தடைகளாகவும் மாறக்கூடும். அதாவது
தத்துவ விஷயங்களைக் கவிதையில் சொல்லவரும்போது இன்னும் எளிய, கூரான
சொற்கள் பயன்படுத்தப்படவேண்டும். கவிதை என்பது கற்பனையில் இழுபடும்
றப்பர் போன்ற ஒரு குணத்தை உள்ளிருப்பாகக் கொண்டிருப்பதால், சிறந்த
ஆய்வு நோக்கு இல்லாவிடில் செழுமையான தத்துவ பலத்தையும் தன் 'இழுவல்'
குணத்தால் பாழடித்து விடக்கூடும். உதாரணமாக, 'சுழலின் மையல்
தேடி......' என்ற கவிதையில் வரும்
"மனதில் ஓரவிழி நோக்கில்
ஆழப் புதைகுழி நீத்துக் கிளர்வுறும்
உணர்வுகளின் முளை மீறல்கள்,
கிளைத்துப் படர்ந்து
பூச்சொரியும் இன் கனவுகள்...."
என்ற வரிகளைக் காட்டலாம்.
அதோடு அகவயப்பட்ட சிந்தனைகளைக் கூறும்போது, 'ஆணவம், மாயை, கன்மம்'
என்று சமயவாதிகள் சதா போட்டடிப்பதுபோல் திரும்பத் திரும்ப, இலை
கொட்டி நிற்கும் மரம்போல் கருத்துவலுப் போய்விட்ட சொற்களையும்,
விரணைகளையும் பாவிப்பது களையப்பட வேண்டும். இல்லாவிடில் நல்ல
சிருஷ்டிக்குப் பதில், இச்சொற்கள் புகுந்து வெற்றுப்பானைக் கட
கடப்பையே தரலாம். சு.வி.யின் இத் தொகுப்பில் இத்தகைய கடகடப்புகள்
இல்லையென்றாலும் அவற்றுக்குரிய தாக்குதல்கள், கவனிப்புக் குன்றினால்
நிகழலாம். இவைபோக அகங்களும் முகங்களும் ஒரு வெற்றிகரமான சாதனையே.
************************
அகங்களும் முகங்களும்' நூல் என்னுரை!
- கவிஞர் சு. வில்வரத்தினம் -
எனது கவிதைகளின் தொகுப்பு இங்கே அலைவெளியிடாக முகங்கொள்கிறது.
என்னைப் பாதித்தவற்றை உள்ளுறை அனுபவ ஒளிகொண்டு பின்னி இழைத்தெடுத்து
வேய்ந்ததோர் சிறு கவிக்குடில் இது. சிறு குடிலேனும் அதன் இருப்போ ஒரு
பரந்த பெருவெளியில்! இது ஒன்றே எனக்குப் பரவசம் தருவது. 1970இல்
ஆரம்பித்த நான் பதினைந்து வருடங்களில் பின்னால் ஒரு சிறுகுடில் போடல்
சாத்தியமாகியுள்ள இவ்வேளையில் நேர்ந்த தேடலின் காலவெளியைத்
திரும்பிப் பார்க்கிறேன். அப்படியான ஒரு திரும்பிப் பார்த்தலில்,
நான் போட்ட இச் சிறுகுடில் இன்னுஞ் சிறுத்தே தெரிவதுபோல்
தோற்றங்கொள்ளுகிறதேனும், சார்ந்து நின்ற பரந்த பெருவெளிதான் எனக்குப்
பர நிம்மதி தருகிறது. அந்தப் பரந்த பெருந்தள, விடுதலைவெளிக்கு
என்னைக் கூவியழைத்த குரலை இத்தருணம் பெருமிதத்துடன்
நினைவுகூறுகிறேன். இதோ காற்று வெளியிடை, பிரபஞ்சவெளியிடையிருந்து
கூவும் அக் குரல்ஒலி எனக்குள்ளும் கேட்கிறது. அக்குரலுக்குரியவரை
அடையாளம் காண்கிறேன். திரு.மு.தளையசிங்கம். எனது வளர்பருவகாலத்தின்
பள்ளி ஆசிரியராக வந்து என் வாழ்வின் அத்திவாரத்தையே ஓர் உலுப்பு
உலுப்பியவர். ஊன்றி நோக்கி உள்ளன்போடு என்னை அறிவால் தூண்டி நடாத்திய
ஒரு தனிக்குரல் அவரது. சகல துறைகளிலும் ஒரு வழிகாட்டியாய் இருந்து
ஆத்மீக குருவிடம் என்னை ஆற்றப்படுத்தியவர். கலைப்பற்றிய அவரது
நோக்கின் பூரண பரிமாணத்தை எய்திய கலைஞனாய் வாழ்ந்து காட்டி எம்மையும்
அவ்வழி இட்டுச் சென்றவர். "விடுதலை என்ற இலட்சியத்துக்குரிய வழிகளும்
விடுதலை பயப்பனவாய் இருக்கவேண்டும்" என்று ஒலித்த பரந்த விடுதலைப்
பெருவெளிக்குரிய அவரின் குரல், இதே இச் சிறுகுடிலினுள்ளும்
ஒலித்துக்கொண்டேயுள்ளது!
சிறுகுடில் என்றேனா? இச் சிறுகுடிலை நிமிர்த்துவதில்தான் எத்தனை
சிரமங்கள். இந்தச் சிரமங்களில் ஒன்றையேனும் என் முதுகு சுமந்ததில்லை!
ஏழைமை நிரம்பிய இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கிய -கலாசாரக் குடிலை
பல்துறை அடுக்குப் பரிமாணங்கொண்ட மாளிகையாய் நிமிர்த் மனங்கொண்டவர்,
ஆத்மார்த்தமான உழைப்பைப் பிழிந்து தமிழியல் வளமூக்கியாய் நின்று
செயல்படும் நண்பர் திரு.இ.பத்மநாப ஐயர். இதன் நிமிர்வுக்கும் முதுகு
கொடுத்தவர் அவரே. இன்றைய ஈழத் தமிழ் இலக்கிய -- பல்துறை
வெளியீடுகளின் பின்னணியின் இவரின் ஆத்மார்த்தமான உழைப்பின் திறன்
நின்றதை, அறிந்தோர் அறிவர். தன்னை முன்னிறுத்தாத அவரின் பங்களிப்பை
ஒருநாள் தமிழுலகம் முற்றாய் அறியவரும்போது, அதிசயப்படும் என்பது
உண்மை.
மு.பொன்னம்பலம் நீண்டதொரு முன்னுரையை இச் சிறுகுடிலின் முன்றலில்
கோலமிட்டுள்ளார். அவர் எனது கவிதைகளைக் கையெழுத்துப் பிரதியிலேயே
படித்த முதல் வாசகனாகவும் விமர்சகனாகவும் இருந்து என்னை
நெறிப்படுத்தியவர். தன் படைப்பாற்றலால் என்னை நிரம்பவும் பாதித்தவர்;
'அகங்களும் முகங்களும்' என்பதையே கவிதைத் தொகுதியின் தலைப்பாக
வைக்கலாம் என்று அக் கவிதை வெளியான போதே ஆலோசனை கூறியவர். அவரது
முன்னுரை எனது கவிதைகளின் போக்கை இனங்கண்டு கொள்ளும் பின்னணியாய்
இருக்கிறது என்பதற்கும் மேலாக, நானே என்னை விமர்சன ரீதியாகக்
கண்டுகொள்ளும் வகையிலும் அமைந்துள்ளது.
கனமான படைப்புகளை இனங்கண்டு தேர்ந்து தெள்ளி எடுக்கும் கூரிய
நோக்குடையவர், அ.யேசுராசா. தமது அலை இதழில் எனது கவிதைகளைத் தேர்ந்து
பிரசுரித்ததோடு, எனது தொகுதியையும் 'அலை வெளியீடு' நிறுவனத்தினூடாக
வெளிக் கொணர்வதில் மிக முனைப்போடு செயல்புரிந்தவர். அவ்வப்போது
விமர்சனங்களால் என்னை நெறிப்படுத்தியதில் அவருக்கும் பங்குண்டு. தக்க
இடங்களில் மனமுவந்து பாராட்டும் பண்பைவிடவும், அவரின் சமநிலை நோக்கே,
என்னை மிகக் கவர்ந்தது எனலாம் மற்றும் இ.ஜீவகாருண்யன், மு.புஷ்பராஜன்
ஆகியோரும் என்னை இவ்வகையான ஒத்துழைப்பால் கவர்ந்தவர்களே.
இவர்கள் எல்லோருக்கும் இதனால் நன்றி கூறல் என்பது, வெறும்
சம்பிரதாயமாகக் கீழிறங்கிவிடும் செயல் என்பதனால் அதைத்
தவிர்த்துவிடுகிறேன். அவர்கள் மேற்கொள்ளும் அரிய தமிழ்
இலக்கியப்பணிகளில் எம்முடையவுமான ஆத்மார்த்த ஒத்துழைப்பை வழங்குதல்
ஒன்றே, அதற்கான கைமாறாகும்.
இத்தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகள் பல ஏற்கனவே பூரணி, அலை, மல்லிகை,
புதுசு, வானம்பாடி இதழ்களி பிரசுரமானவை. அவ்வேடுகளின்
ஆசிரியர்களுக்கும் இதனால் என் நன்றி உரியது.
இது என் முதல் வெளிப்பாடு: முதற் சுழல் வட்டத்தின் சிந்தனையே
உள்ளடக்கியது. இதைத் தளமாய்க்கொண்டு இனிவரும் படைப்புகள் வேறொரு
பரிமாணத்தைக் கொண்டதாய் அமைதலே என் விருப்பு. அதை முனைப்போடு
செயல்படுத்துதல் காலத்தின் கையில்தான் உள்ளது. ஒவ்வோர்
அம்சங்களிலும்கூட ஒளிகூர்ந்த உக்கிரம் தெறிக்க வாழ்தல்
ஒன்றேதான்-வாழ்வையே கலை வடிவமாக்கி நிற்றல் ஒன்றேதான், பூரண கலைஞன்
என்ற பெருமைக்கு என்னை உரித்தாக்கும். மற்று இவை ஒன்றும் எனக்குப்
பெருமை தரா.
************************
சு. வில்வரத்தினம் கவிதைகள்
சில.....
மழையின் பொழிவில் நனையும் பொழுதுகள்!
வான் முலை சுரந்தது
வையம் அருந்திற்று
ஓ! வான் மழையே!
வையத் திருவே! வந்தனை நீ வாழி!
நீண்டெரிந்த கோடையில் தீக்குளித்த நிலமகளை
மழை முழுக்காட்ட வந்தனை! மாரி நீ வாழி!
வரண்டு வெடித்த வாய் பிளந்து பூமி
வருந்தி அழைத்த குரல் உனக் கெட்டிற்றோ?
இரங்கினை! அதனால் எம்மிதயங் குளிக்கிறது.
நின் வரவால் நிகழும்
அற்புதங்கள்தான் எத்தனை! எத்தனை!
மலை எழில் போர்க்கும்
துயிலும் நதியில் துரித விழிப்புப் பெருகும்
செடிகொடிகள் குளிக்கும்
தென்றலின் அசைப்பில் மேனிகுலுங்கி
நீர்த் திவலைகள் சிலும்பும்.
மண்ணில் நின் சங்கமத்தால் எழும் மண்வாசனை
எங்கும் பரவும்! அது
உழைப்பைக் கோருவது. உறங்கும் மனிதரின்
நாசியின் உட்புகுந்து
'எழுங்கள் ஏர் எடுங்கள்'என
உழுதுழுது பூமித்தாயை தொழுகை செய
தூண்டி நடாத்தும் புனிதவாசனை!
உழைப்பின் வாசனை!
வான் மழையே மண்ணில் உயிர்
வாசனை கிளர்த்தினாய் வாழி.
மழைத்தேவா வர்ஷித்தாய்
இந்த மண்ணில் உயிர் பெய்தாய்
ஓங்கிய பெரும் ஓசையுடன்
தாள பேத பாவங்களுடன்
துமிதுமி துமி என நின்
பாத துளிகள் இம் மண்ணில் பாவின.
பேதமிலாத நின் பெய்கையால்
வான் மழையே நினக்கு மறுபெயர்
ஞான மழை என்போம்.
ஞான மழையே நனி பொழிக
இம்மண்ணின் பாவங்கள் கழுவுண்டோட
பொறாமை பொச்சரிப்பு வெப்பு நோய்கள் தணிய
வரம்புகள் கடந்த வாழ் வொன்று செய்ய.
விடியலில் மதியத்தில் அந்தியில் நள்ளிருளில்
நாளெலாம் பொழிக பொழுதுகள் நனைக.
விண்ணின் றிழியும் அமிர்த தாரைகள்
வீட்டுமுன்றலில் மீண்டும் சங்கீதம்
உள்வாங்கி உள்வாங்கி உயிர் வீங்கி....
"பொங்கு மடுவில் புகப் பாய்ந்து பாய்ந்து நம்
சங்கஞ் சிலம்ப சிலம்பு கலந்தர்ப்ப...."
நானே எனக்குள் மழையாய்ப் பொழிந்து
நனைந்து நனைந்துருகி -- ஏலோரெம்பாவாய்.
விடுதலைக் குருவியும் வீட்டு முன்றிலும்!
பாரதி,
விடுதலை அவாவிய நின்
சிட்டுக் குருவி
எங்கள் வீட்டு முற்றத்திலும்
மேய்தல் கண்டேன்.
விடுதலைத் தாகத்தின் துடிப்புன் குரலென்றால்
அதன் இதழ்களிலும்
'விடு விடு' என்ற அதே துடிப்புத்தான்.
முற்றத்தில் மேயும் போதும்
திண்ணையில் திரியும் போதும்
வீட்டு வளையின் மேலும்
விண்ணை அளக்கும் போதும்
'விடு விடு' என்ற ஒரே ஜபம்தான்.
துயிலும் கட்டிலில் தொற்றியும்
தூங்கும் குழந்தையின் தொட்டில்
கயிற்றினைப் பற்றியும்
'விடு விடு' என்றே ஜபிக்கிறது.
தானியம் பொறுக்கும் போதும்,
கூடுகட்டக் குச்சுப் பொறுக்கும் போதும்.
'விடு விடு' என்ற ஜபத்தை அது விடவில்லை.
அதன் சிற்றுடலே
விடுதலைத்துடிப்பின் வேக இயக்கமாயிருக்கிறது.
தலையை உருட்டுதலில்
சிறகைக் கோதுதலில்,
காற்று வெளியில் 'ஜிவ்'வென்ற சிறகுதைப்பில்
அதே துடிப்பு! சதா துடிப்பு!
நீ நேசித்த தேசத்திலும் அதன்
ஒவ்வோர் அங்கங்களிலும்
பெண்மையில், ஆண்மையில், பிணைக்கின்ற காதலில்
மொழியில், இசையில், கவிதையில், உரைநடையில்
அரசியலில், தொழிலில், ஆன்மீகத்தில்-
இதே துடிப்பை நீ உடுக்கொலித்தாய்.
"குடு குடு குடு நல்லகாலம் வருகுது" என்று
நாட்டுக்கு நல்ல குறி சொல்ல
தூக்கிய நின் உடுக்கின் ஒவ்வொரு முழக்கிலும்
விடுதலைக் குருவியின் வீச்சு நிகழ்ந்தது.
'கொட்டு முரசு'வின் அதிர்விலும் அதே
விட்டு விடுதலையாகும் வீச்சேதான்.
தூக்கம் எங்கெங்கு கௌவிற்றோ அங்கெல்லாம்
துயிலெழுப்ப இந்தத்
துடிப்புக் குருவியை நீ தூதுவிட்டாய்.
உயிர்த்துடிப்பின் உன்னதபடிமம்,
நின் விடுதலைக்குருவி.
அந்த விடுதலைக்குருவி
எங்கள் வீட்டுமுற்றத்திலும்
மேய்தல் கண்டேன்.
சோம்பித் துயின்ற என்குழந்தைகளை எழுப்பி
'துரு துரு' வென்ற குருவியைக் காட்டினேன்.
சோம்பலை உதறிய அவர்களில்
தொற்றிய துடிப்பின் உயிரொளி கண்டேன்.
குருவியின் பின்னால் ஓர் கூட்டமே இயங்கிற்று.
விடுதலைக் குருவியோடு
'சடுகுடு' ஆடும் சிறுவரின் கூத்து.
'விட்டேன் விடுதலை விட்டேன் விடுதலை'
என்றந் நாளில்
'சடுகுடு' ஆடிய இளமையின் வேகம்
என்னுள்
புதுநடை பயிலும்.
விடுதலைக் குருவி!
வீடுதேடி வந்தாய் நீ வாழி!
நின் அலகிதழ் முனையில் எம்
இருள் துயரெல்லாம் கிழிபடுகிறது.
மூலை முடக்குகள், நாடி நரம்புகள் தோறும்
விடுதலை வீச்சோட்டம் நிகழ்கிறது.
சிட்டுக்குருவீ!
எட்டுத்திக்கும் பறந்தொரு சேதிசொல்
விட்டு விடுதலையானோம் நம்
கட்டுகள் யாவும் அறுந்தன வாமென்று.
குறி சொன்னானே அந்தக்
குடுகுடுப்பைக் காரன்!
அவன்
காதிலும் மெல்ல இச் சேதியைப் போடு!
புள்வாய்த் தூது!
இம்முறை
பெருங்குடமுழுக்குக் காட்டுவது போல கொட்டிற்று வானம்
புலம் பெயர்ந்து வந்த பறவைகள்
நிரம்பி வழிந்த நீர்த்துறையெங்கும்
முங்கிக் குளித்தன; முத்தெடுத்துதறின
கூரலகால் பிறகெடுத்துக் கோப்பன போல்வன.
எடுத்தூதிய வெண்சங்கென எழுகின்ற கொக்குகள்
அசை நடை நாரைகள்,
கன்னங்கரேலென நீர்க்காகங்கள் என
வண்ணம் பலப்பல-
இயற்கையெடுத்த விழாக் கோலம் போல.
இனிய பறவைகாள்
உங்களைப் போலவே வண்ணம் பலவுடைய மக்களின்
விழாக் கோல வாழ்விருந்த கிராமம்தான் இதுவும்.
எதற்கோ வியூகம் வகுத்தவர்க்கஞ்சியவர்
வேரற விட்டுப் போய் நாளாயிற்று.
நவராத்திரியின் கும்பச்சரிவோடு போனவர்கள்தான்
மீளக் கொலுவேறவில்லை
கொலுவிருந்த வாழ்வு குலைந்து போய்க் கிடக்கிறது.
கூடி வாழ்தல் என்பது அழகிய கொலுநேர்த்தியல்லவா?
எத்தனை நவராத்திரிகள் வந்தேகின.
கும்பப் பொலிவும், கூட்டுக்களியும், விழாக் கோலமும்தான்
இல்லையாயிற்று.
மார்கழி எம்பாவை வந்தாள்
மழைக்கண் திறந்து பொழிந்தவாறே.
வந்தவளை பட்டுக் குடையெடுத்து வரவேற்று
"ஏலோரெம்பாவாய்"என ஊர்கோலமாய்ப் போகவும்
ஆளணியற்ற தவக்குறைவு எமக்காச்சு.
பாவம் எம் பாவை போயினாள்
பண்ணிழந்த தெருவழியே.
மாரி வந்ததென்ன?
ஏரழகின்றிக் கிடந்தன வயல்கள்
தை மகள் வந்தாள்.
கைநிரம்ப வெறுமையுடன் கந்தலுடை பூண்டிருந்தது கிராமம்.
பொங்கல், படையலென பூரிப்பின் ஓரவிழும்
உண்டிலள் போனாள் ஒளியிழந்த முகத்தினளாய்.
"ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை"
வெண்தாடிப் புலவனது பாட்டோசை
"கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே"
என் செயலாம்
கூழை நினைத்தானே வாயூறத்தான் செய்கிறது.
ஊதிக் குடிக்க உதடும் குவிகிறது.
ஒடியலுக்கும் ஏது குறை?
போனவரியத்தானும் கிடந்துளுத்துக் கொட்டுது.
கூடிக்கலந்துண்ணச் சாதிசனம்?
இந்த ஆடிப் பிறப்பிற்கும் விடுதலை ஆனந்தம் இல்லையாச்சு.
விழாக்காலத் தேதி விவரங்களே
மறந்து போய்க் கிடக்கும் கிராமமிதில்
ஓசை, ஒலியெலாமாகி நிறைந்த பறவைகாள்
உங்கள் உயிர்த்துடிப்புகள் இனியவை.
வயல்வெளி நடப்புகள், சிறகடிப்புகள்,
வெளிநிரம்பிடும் சங்கீதம், யாவுமே
இனியவை என்பேன் எனினும்
சிறு துயரம்
நீராம்பலெனத் தலைநீட்டும்.
மாரிகழிய மறுபடியும் வருகின்ற
கோடை வறள்வில் இக் குதூகலங்கள்
சிறகை மடக்கி விடைபெறுதல் கூடும் அல்லவோ,
நினைகையில் சிறுதுயர் எழும்
எனினும் உமை நோகேன்
அற்ற குளத்து அறுநீர்ப்பறவையென
கேலியாடும் எண்ணம் சிறிதுமிலை.
நானறிவேன்
தாயக மீள்வில் இருக்கும் தனிச்சுகம்.
பெரு வெளியில் தலைநீட்டும்
உயர்மரக் கொம்பரில்தானே உங்கள் கூடுகள் உள்ளன.
அறிவேன்
குஞ்சு பொரித்தலும், குதலைகட்கு உவந்து
ஊட்டலும், காத்தலும், இங்காகலாம்
சிறகு முளைத்தவற்றை
கூட்டிச்செல்வதாய குதூகல நிகழ்வெலாம்
தாயக வெளிநோக்கியல்லவோ
நானறிவேன்
நீரறிவீரோ
என் நெஞ்சிலும்
கூடு கட்டி வாழும் குருவிகட்கு வாசலுண்டு
கூடிழந்து போனவரின்
நேசம் விட்டுப் போகாத நெஞ்சகத்தில் சோகமுண்டு
நீரறிய மாட்டீர்.
நீரறிதல் கூடுமெனில்
கோடைவழிப் போக்கில்
குளிர்த்தி வற்றிப்போன எங்கள் வாழ்நிலையின் சோகத்தை
எம்மவரைக் கண்டு இயம்புதல் கூடுமோ?
சற்றெமக்கு இரங்குங்கள்
நாளை நாளையெனக் காத்திருந்த நம்பிக்கை
முளைகருகிப் போகுமுன்னே வரவுண்டோ கேளுங்கள்.
"கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழுவிக்"
கதியிற் கலங்கிய புலவரென கைவிடப்பட்ட முதியவர்
கிழித்துப் போட்ட ஒடியல் கிழங்கென
வாடிச் சுருங்கி மனம் மெலிந்து
கடைசி ஒரு சொல்லாடலில் விடைபெறக்
காத்திருப்பதை சொல்லுங்கள்.
மாண்டோரும் மற்றும் தென்புலத்தோரும்
தாழ்வாரத் தவமியற்றிக் காத்திருந்தும்
திவசச் சோறுமின்றி, பரிந்துவக்கும் படையலுமின்றி
வெற்றுப் பாத்திரராய் மீளுவதைச் சொல்லுங்கள்
காலப்புற்றெழுந்து படர்ந்தாலும்
உட்கனலவியாத் தவ முனிவரென
ஒளியேற்றக் காத்திருக்கின்றன வீடுகள் ஒவ்வொன்றுமென
உரக்கவே அழுத்துங்கள்.
வேறென்ன விளம்ப இருக்கிறது
நீங்கள் மீளுகையில்
விட்டு விட்டுச் செல்லுகின்ற ஆனந்த வித்துகள்
முளை கொள்ளும் நாள்வரையும்
நாங்கள் இருப்போமா
நன்னிலத்தின் காவலராம்
எங்களுடைச் சந்ததிக்கேனும் இதன்
வேரடியில் வாழ்வு சிலிர்க்கட்டும்.
நன்றி:
http://vilvaratnam.blogdrive.com
http://www.geotamil.com/pathivukal/pathivukal_pongal2003/poem_VILVARATHTHINAM.html
http://www.geotamil.com/pathivukal/website_svilvaraththinam.html
http://www.tamilnation.org/literature/eelam/index.htm