விஜய் படங்களின் இலாபத்தில பங்கு யாருக்கு?
- சினிமாக் குருவி --
அண்மைக்காலமாகத் தமிழகச் சினிமா உலகிலொரு கதை அடிபடுகின்றது. நடிகர்
விஜய்யின் திரைப்படங்கள் தொடர்ச்சியாக நட்டமடைந்து வருவதால் அவர்
நடிகர்கள் ரஜனி, கமல் மற்றும் டி.ராஜேந்தர் ஆகியோர்போல் தொடர்ச்சியான
தோல்விகளை ஈடுகட்ட குறைந்தது 30% நட்டத்தினையாவது தரவேண்டுமென்று
திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும், விநியோகத்தர்களும் வலியுறுத்துவதாக வெளிவந்த
செய்திதானது. அண்மையில் வெளிவந்த நடிகர் விஜய்யின் 'சுறா' வினை கலாநிதி
மாறனின் 'சன்' நிறுவனம் வாங்கி 48 கோடிக்கு விற்றதாகப் படம்
வெளிவருவதற்கு முன்னர் செய்திகள் இணையத்தளங்கள் பலவற்றில்
வெளிவந்திருந்தன. மேற்படி விநியோகத்தர்களும், திரையரங்க
உரிமையாளர்களும்
நட்டத்தைக் கேட்க வேண்டியது 'சன்' நிறுவனத்திடம்தானே தவிர நடிகர்
விஜய்யிடமல்ல.
சன் நிறுவனம் விஜய்யின் திரைப்படங்களை கலாநிதி மாறன்
வழங்கும் என்று விளம்பரங்கள் செய்து விஜய்யின் பெயரை மிகவும் சிறிய
எழுத்தில் விளம்பரப்படுத்தி தன் விளம்பரத்தைப் பெருக்குகிறது. படத்தை
வாங்கி விற்று இலாபமெடுக்கிறது. இலாபம் அவர்களது கைகளுக்கு வந்தவுடன் அவர்கள் எந்த நிமிடத்திலும் படத்துக்கான விளம்பரங்களைத் தொடரவோ அல்லது நிறுத்தவோ முடியும். இவ்விதம் முன்னணி நடிகரொருவர் தன் எதிர்காலத்தை ஒரு நிறுவனமொன்றின் கைகளில் விடுவது ஆபத்தானது. இதற்குப் பதில் எம்ஜிஆர் 'உலகம் சுற்றும் வாலிபனுக்கு' செய்ததுபோல் விளம்பரங்கள் இல்லாமலே தன் படத்தை ஓடுவதற்குரிய திறமையும், நம்பிக்கையுமிருப்பவராக இருக்க வேண்டும். அன்றைய காலகட்டத்தில் உலகம் சுற்றும் வாலிபம் படம் வெளிவந்தால் சேலை கட்டுவேன் என்று சபதமிட்ட மதுரை முத்துக்குப் பலர் படம் வெளிவந்ததும் சேலைகளைப் பொதிகளாக அனுப்பியது தனிக்கதை. இவ்விதமாகச் சவால்களை எதிர்க்கும் திறமையில்லாத எவரும் இன்னொரு எம்ஜிஆராக வருவதுபற்றிக் கனவு காணக்கூடாது. நடிகர் அஜித்திடம் இவ்விதம் சவால்களை எதிர்த்து நீச்சலடிக்கும் பண்பு உண்டென்பதை அண்மையில் கலைஞருக்கு எடுக்கப்பட்டவிழாவில் அவர் துணிச்சலுடன் கூடிய கருத்துகளே சான்று. இந்நிலையில இளையதளப்தி விஜய்யின் படங்கள் தொடர்ச்சியாகத் தோல்வியினைத்
தருகின்றனவென்றால் எதற்காக அவரது படங்களை அவர்கள் வாங்க வேண்டும்?
எதற்காக வேட்டைக்காரன் தோல்விப் படமென்றால் சன் குழுமம் மீண்டும் அதிக
விலைகொடுத்து 'சுறா'வினை வாங்க வேண்டும்?
நடிகர்கள் ரஜனியும், கமலும் பிழையான முன்மாதிரியினைக் காட்டி
விட்டார்கள். அதனைத் தொடர வேண்டுமென்று திரையரங்க
உரிமையாளர்களும்,
விநியோகத்தர்களும் நினைப்பது பிழையானது. இவ்விதம் நட்டத்திற்கு
நடிகர்கள் பொறுப்பேற்க வேண்டுமென்று அவர்கள் நினைத்தால் அவர்கள் பெரும்
இலாபம் ஈட்டும்போதெல்லாம அவற்றில் 30% இனை நடிகர்களுக்கும் வ்ழங்க
வேண்டும். அதற்கு அவர்கள் சம்மதிப்பார்களா? இலாபத்தில் பங்கு போட்டுக்
கொள்ள மாட்டோம் ஆனால் நட்டத்தில் மட்டும் பங்குபோடவேண்டுமென்று கேட்பது
பிழையானது. ஒரு பக்கச் சார்பானது.
ஆனால் பெரும் நடிகர்கள் எதிர்காலத்தில் அவர்களது ஊதியத்தைக் குறைக்க
வேண்டுமென்று வலியுறுத்தலாம். அது நியாயமானது. ஆனால் கையைக் கடித்தால்
நட்டத்தை ஏற்றுக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை. இவர்கள் உண்மையிலேயே
நல்லதொரு விடயத்தைத் தமிழ் சினிமா உலகிற்குச் செய்ய விரும்பினால்
குறுகிய நேரத்தில் பெரும் இலாபம் எடுப்பதறகாகப் பெரும் நடிகர்களின்
படங்களை வாங்குவதற்குப் பதில் குறைந்த செலவில் எடுக்கப்படும் தரமான
படங்களை வாங்க முன்வரலாம். இன்றைய காலகட்டத்தில் பல தரமான
திரைப்படங்கள் இலாபத்தை ஈட்டும் வகையில் வெளிவருகின்றனவென்பது
குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நட்டமடைந்தாலும் குறைந்தளவென்பதால்
பாதிப்பு அதிகமில்லை. இலாபமென்றால் மேலும் இது போன்ற திரைப்படங்கள்
அதிகளவில் வெளிவரலாம்.
விஜய் போன்றவர்கள் தங்களது படங்களை சன் குழுமம் போன்ற இன்னொரு நிறுவனத்துக்கு விற்று,
அந்நிறுவனம் மேலும் இலாபம் வைத்து விநியோகத்தர்களுக்கு விற்பதை விட
தயாரிப்பாளர்களிடமிருந்து நேரடியாகவே விநியோகத்தர்கள் திரைப்படங்களை
வாங்குவதற்கு வழி வகைகள் செய்ய வேண்டும். அவ்விதம் செய்தால்
விநியோகத்தர்கள் நட்டமடைவது குறையலாம். ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் என்
கேள்வி என்னவென்றால் சுறாவைப்
பொறுத்தவரையில் அதன் தயாரிப்பாளர் சன் குழுமத்திற்கு இலாபத்திற்கு
விற்றுவிட்டார். சன் குழுமமும் இலாபம் வைத்து விற்று விட்டது.
இந்நிலையில் நட்டத்தைக் கேட்க வேண்டிய இடம் சன் கலாநிதி மாறனின் சன்
குழுமம்தானே? 'ஒன்றுமே புரியலை இந்த உலகத்திலே, என்னமோ
நடக்குது மர்மமாய் இருக்குது, ஒன்றுமே புரியலை இந்த உலகத்திலே.'
- சினிமாக் குருவி - |