இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜனவரி 2011  இதழ் 133  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
பாகம் இரண்டு: நினைவுகளின் சுவட்டில் ...
நினைவுகளின் சுவட்டில் (58 & 59 ) ....

- வெங்கட் சாமிநாதன் -

அத்தியாயம்
58


நினைவுகளின் சுவட்டில் ....  வெங்கட் சாமிநாதன்நாக்பூர் வந்து சேரும் வரை பயணம் எவ்வித விக்கினமும் இல்லாது இருந்தது. என்னை அவர்கள் துணைக்குச் சேர்த்துக் கொண்டது, “சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை” என்ற வாசகத்தை நம்பித்தான். ஜனங்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார். நாக்பூர் போய்ச் சேர மணி சாயந்திரம் நாலு ஆகிவிடும். இவர்களை அழைத்துக்கொண்டு, நாக்பூர் ஸ்டேஷனில் காத்திருக்கும் க்ராண்ட் எக்ஸ்ப்ரேஸோடு சேர்க்கப்படும் வண்டியைத் தேடி இடம் பிடிக்கவேண்டும். இந்த பாதையில் வருவது இது தான் முதல் தடவை. பிலாஸ் பூர் வரைக்கும் ஒரு தடவை வ்ந்திருக்கிறேன் தான். அது ஜெஸகுட்டாவில் இறங்க மறந்து தூங்கிவிட்டதால். என்னைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, சொந்த ஊர் பற்றி யெல்லாம் கேட்டு வந்தார் திருமதி கிருஷ்ணஸ்வாமி. எப்போதும் புதிதாகப் பழக நேரும்போது நடக்கும் பரிச்சயம் தான். ஆனால் அவரிடம் ஒரு சின்னப் பையனிடம் காட்டும் கரிசனத்தையும் உணர முடிந்தது. குழந்தை வேறு. அது அதிகம் பழக மறுத்தது. அன்றைய தினத்துக்கான சாப்பாடு உடன் கொண்டு வந்தத்தை நானும் பகிர்ந்து கொண்டேன். எல்லாம் ந்ன்றாகத் தான் இருந்தது.

நாக்பூர் ஸ்டேஷன் வந்ததும் சென்னைக்குப் போகும் வண்டியைத் தேடி கண்டு பிடிப்பது அவ்வளவு ஒன்றும் கஷ்டமாக இல்லை. எங்களுக்காகக் காத்திருந்தது. இடம் பிடித்துக்கொண்டோம். மூன்று பேருக்கும். உட்கார இடம் கிடைத்தது. பக்கத்தில் ஒரு பெரியவர், நல்ல சிகப்பு. தாட்டியான உடம்பு. பஞ்சகச்சம், மேலே ஒரு சின்ன ஜரிகை துண்டு போர்த்தியிருந்தார். தமிழர். அப்படி ஒரு பெரியவர் பக்கத்தில் இருந்தது மனதுக்கு இதமாக இருந்தது. ஒரு பாதுகாப்பு என்று கூட உணரத் தோன்றியது. அவரும் கொஞ்ச நேர பழக்கத்திற்குப் பிறகு தாராளமாக பேச ஆரம்பித்தார். எங்கிருந்து வருகிறோம். எத்தனை பேர் குடும்பத்தில்...வகையறா வகையறா. அடுத்த நாள் ராத்திரி பிரிப் போகிறோம். இவ்வளவு விவரம் ஒருத்தரைப் பற்றித் தெரிந்து என்ன செய்யப் போகிறோம் என்ற நினைப்பு இல்லாது வெறும் பேச்சுக்காகவே சேகரிக்கும் விவரமாகத் தெரிந்தது. என்னைப் பற்றிக் கேட்டதைச் சொன்னேன். திருமதி கிருஷ்ணசாமிக்கு அவர் கேள்விகளுகெல்லாம் பதில் சொல்வது கூச்சமாகவே இருந்திருக்கிறது. இதிலிருந்து அவரை நான் எப்படிக் காப்பாற்ற முடியும்? பேசாதிருந்தேன். அவர் தான் கேள்விகள் கேடடாரே ஒழிய நாங்கள் அவர் பற்றிக் கேட்கவும் இல்லை. அவர் தன்னைப் பற்றிச் சொல்லவும் இல்லை. இருந்தாலும், அந்தப் பெரியவரை எதுவும் சொல்லவும் முடியவில்லை. பெரியவர் இருப்பது ஒரு துணையாயிற்றே. அது போக எதுவும் சொல்வது மரியாதையும் இல்லை. இந்தக் கூச்சத்தையும் மீறி எங்களிடையே ஒரு சகஜ் பாவம் உருவானது என்று தான் சொல்லவேண்டும். அந்த சகஜ பாவத்தில் அந்த அம்மையார் அவரிடம் பேசும் போது ஏதோ உரிமையோடு என்னைக் கேலி பேசவும் செய்தார். கேலி செய்தார் என்பது தான் நினைவில் இருக்கிறதே ஒழிய, என்ன வென்றுநினைவில் இல்லை. அது எனக்கு ஒரு நெருக்கத்தைக் கொடுத்ததால் எனக்கும் அந்தக் கேலி வேண்டித்தான் இருந்தது.

நேரம் செல்லச் செல்ல வண்டியில் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போயிற்று. உட்கார்ந்திருப்பவர்கள் நெருக்கியடித்துக்கொண்டு இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். நிற்கும் வண்டியில் தன் இடத்தை நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற நினைப்பில் இருந்தார்களே ஒழிய க்ராண்ட் ட்ரங்க் எக்ஸ்ப்ரஸ் வந்தால் அதில் சௌகரியமாக இடம்பிடிக்க முடியுமா என்று எண்ண அவர்களுக்குத் தோன்றவில்லை.

நினைவுகளின் சுவட்டில் ....நேரம் செல்லச் செல்ல வண்டியில் ஏறும் கூட்டத்திற்கு ஓர் அளவில்லாமல் போய்க்கொண்டிருந்தது. வழியெல்லாம், சாமான்களை வைத்துக்கொண்டு அடையத் தொடங்கினார்கள். யாரும் தான் இருந்த இடத்தை விட்டு எப்படி வெளியே செல்வது என்பது தெரியாதபடி கூட்டத்தின் நெரிசல் அதிகமாகிக் கொண்டிருந்தது. வழியை விட்டு நகர்ந்து போகச் சொல்வதும், அவர்கள் கேட்காதது போல உட்கார்ந்திருப்பதும், “ஏன்யா நீயே கக்கூசுக்குப் போகணும்னா எப்படிய்யா போவே, அதை நினைச்சியா, இங்கேயே வழியை மறைச்சிட்டு உட்கார்ந்திட்டயே” என்று திட்டினால், “ போறப் போ சொல்லுங்க அப்போ பாத்துக்கலாம். இப்போ சும்மா இரு” என்று இவர்கள் சத்தம் போடுவதுமாக ஒரே கூசசலும் கலவரமுமாக இருந்தது. இப்படியே தான் சென்னை போகும் வரை இருக்குமா? இந்த மாதிரி ஒரு அனுபவம் இருந்ததில்லை. திருமதி கிருஷ்ணசாமியின் முகத்தில் கலவரமும் பீதியும் தெரிந்தது. “நான் இப்படி தனியா வந்ததுமில்லை. மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்ததுமில்லை, எப்ப்டி குழந்தையோடு நல்லபடியா ஊருக்குப் போகப் போறோமோ தெரியலையே” என்று குரல் தழதழக்க சொல்லும் போது அழுகையின் வரம்பைத் தொடும் நிலையில் இருப்பதாகத் தோன்றியது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பக்கத்தில் இருந்த பெரியவர், “கவலைப்படாதேம்மா. நாங்க இருக்கோம். பாத்துப்போம். ஒரு நாள் தானே, எப்படியோ க்ழிந்து விடும்.” என்று ஆறுதல் சொன்னார்.

நான் இருந்த இடத்தை விட்டு நகர முடியாது. இப்படியே எப்படி உட்கார்ந்திருப்பது? தூங்குவது எப்படி? உட்கார்ந்தபடியே? இவர்களை என் பொறுப்பில் என்னை நம்பி, ஆண்பிள்ளைத் துணையென், அனுப்பியிருக்கிறார்களே?” என்று எனக்குக் கவலையாக இருந்தது.

அதெல்லாம் போக, இன்னுமொரு கவலை. என் பையில் அறு நூறு ரூபாய் பணம் வேறு இருந்தது. அதை துணிப்பையில் வைத்தால் ஏதும் துணி எடுக்கும் போது விழுந்துவிடும், பையிலேயே இருப்பது தான் பத்திரம் என்று பையில் வைத்திருந்தேன். அதை வேறு காபந்து பண்ணவேண்டும்.

அறுநூறு ரூபாய் என்பதுஎனக்கு பெரிய பணம். அதை நான் மாயவரம் போய் ஹிராகுட்டில் இருக்கும் ஒரு கண்ட்ராக்டரின் குடும்பத்துக்குச் சேர்க்கவேண்டும். அவர் அதை மணியார்டரில் அனுப்பக் கூடாதோ? என்னை மூலம் கொடுத்தனுப்புவானேன் என்று எனக்கு எரிச்சல் வரத் தொடங்கியது அப்போது. அது வரை இதென்ன பெரிய விஷயம் என்று ஒரு மித மிதப்புடன் அந்தப் பணத்தை ஒப்புக்கொண்டிருந்தேன்.

அந்தப் பணத்தைக் கொடுத்தவர் ஒரு வேடிக்கையான மனிதர். தன்னைப் பற்றி மிக அட்டகாசமாகப் பேசுவதில் பிரியர். தான் செய்ய முடியாத காரியமே இல்லை என்பதே போல. இவ்வளவுக்கும் ஒரு சிறிய குத்தகைகள் எடுத்து பிழைப்பை நடத்துகிறவர். எளிய தோற்றம். தனிக்கட்டையாகத்தான் இருந்தார் ஹிராகுட்டில். அடிக்கடி எங்களிடையே அவர் காட்சி தருவார். அத்தருணங்களில் அவ்வப்போது அவர் திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டது போல, நெற்றியை விரித்த கை விரல்களால் அழுத்திக் கொண்டு, “டேய் திருமலை, ஒரு பேப்பர் எடுத்துண்டு வாடா, ஒரு லெட்டர் டிக்டேட் பண்றேன் எழுதிக் கொடு.” என்பார். அது மாயவரத்தில் அவருடைய மனைவிக்கு எழுதுவதாக இருக்கும். ‘பையன் நன்னா படிக்கிறானா, பொண் என்ன பண்றா, போதும் இந்த வருஷத்தோட படிப்பை நிறுத்தச் சொல்லு, அடம் பிடிச்சா நான் சொன்னேன்னு சொல்லு, அவளுக்குக்கல்யாணம் பண்ணனும், விசுவை காலேஜில் சேக்கணும் நான் இங்கே அலைஞ்சிண்டு இருக்கேன். அடிக்கடி வர முடியாது. ரண்டு மாசம் முன்னாலே தானே ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் அனுப்பினேன். அடிக்கடி பணம் அனுப்புன்னு ஒண்ணும் எனக்குஎழுத வேண்டாம். பணம் வந்ததும் அனுப்பறேன். இப்போ ஆயிரம் ரூபாய் அனுப்பறேன். ....”.இப்படி போகும், ”அந்த லெட்டர் எழுதிட்டயா, சரி கொண்டா”, என்று வாங்கி அதில் கையெழுத்துப் போட்டு மடித்து சட்டைப் பைக்குள் வைத்துக்கொள்வார். “சரி போறேன். எனக்குவேலை இருக்கு. போற வழிலே இதை தபாலில் நானே போட்டுக்கறேன்.” என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுவார். நாங்கள் எல்லாம் வாயைப் பிளந்து கொண்டிருப்போம் நூறு, நூற்றைம்பது என்று சம்பளம் வாங்கிக்கொண்டு ஊருக்கும் பணம் அனுப்பும் நாங்கள் மாதா மாதம் ஆயிரம் ஆயிரைத்தைந்நூறு என்று மூன்று பேர் இருக்கும் மாயவரம் குடும்பத்துக்கு பணம் அனுப்புகிறவரய்யா இவர்” என்று மலைத்து நிற்போம். ஒரு நாள் சம்பத் தான் அவர் குட்டைப் போட்டு உடைத் தான். அவர் சும்மா நம்ம கிட்ட பந்தா பண்றதுக்காக இப்படி பண்றார். அவர் எழுதற லெட்டரையெல்லாம் தபாலில் சேர்ப்பதில்லை. வழியில் கிழித்துப் போட்டு விடுவார். இரண்டு நாள் கழித்து இன்னொரு இடத்தில் இன்னொருத்தனுக்கு இன்னொரு லெட்டர் இரண்டாயிரம் அனுப்புவதாக லெட்டர் எழுதச் சொல்வார். அதையும் வழியில் கிழித்து எரிந்து விடுவார்.” என்றான். இப்படி நாங்கள் ஒவ்வொருத்தரும் முறை வைத்து முட்டாளாகியிருக்கிறோம். இடையில் ஒரு நாள் சம்பத் அகப்பட்டான். அவன் வெகு பவ்யமாக அவர் சொல்வதையெல்லாம் எழுதிவிட்டு ,கடைசியில், ”நானே அந்தப் பக்கம் தான் சார் போயிண்டிருக்கேன். நீங்க பேசீண்டு இருங்கோ. நானே போஸ்ட் பண்ணிடறேன்” என்று ஆரம்பித்து கொஞ்ச நேரம் அவரோடு வாதாடினான். அவருக்கு ரொம்ப கஷ்டமாகப் போய்விட்டது. திரும்ப வாங்கி விட்டாரென்றாலும், அது சுலபத்தில் நடக்கவில்லை. ஒரு வேளை தன் குட்டு வெளிப்பட்டு விட்டதோ என்ற சந்தேகம் தட்டியிருக்கலாம். ஆனால் நாங்கள் சிரித்து வைத்து ஏதும் அவரை மனம் நோகச் செய்யவில்லை.

ஆனாலும் இப்போது அவர் லெட்டரும் என் சட்டைப் பையில். அவர் கொடுத்த பணம் ரூபாய் அறுநூறும் அந்த கவரில் இருக்கிறது. பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்க்கவேண்டும். சம்பத் சொன்னான். ”கட்டாயம் கொண்டு போய்க் கொடுடா. அங்கே உன்னைச் சாப்பிடச் சொல்வா. மாட்டேன்னு வந்துடாதே. சாப்பிட்டுட்டு வா. காரணமாத்தான் சொல்றேன்” என்று வேறே தனியாகக் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறான். என்னிடம். .

****************

நினைவுகளின் சுவட்டில் –
59

நினைவுகளின் சுவட்டில் ....  வெங்கட் சாமிநாதன்.
அந்த பிரயாணம் அன்று மாலை வரை அதிகம் விக்கினங்கள் ஏதும் இல்லாமல் கழிந்தது என்று சொல்லவேண்டும் அது ஒன்றும் சுகமான பிரயாணமோ இதுகாறும் நான் அனுபவித்த நீண்ட தூரப் பிரயாணங்கள் போல நினைத்துப் பார்க்க சந்தோஷம் தரும் ஒன்றாகவோ இருக்கவில்லை. ஆனால் அன்று மாலையில் இருந்து மறு நாள் இரவு சென்னை வந்து சேரும் வரையான அனுபவத்தை நினைத்துப் பார்க்கும் பார்க்கும் போதெல்லாம், இனி யாருக்கும், குறிப்பாக பெண்மணிகளுக்கும் குழந்தைகளுக்கும் நீண்ட ரயில் பிரயாணத்திற்குத் துணைபோகும் தவற்றைச் செய்யக்கூடாது என்ற எண்ணமும் உடன் பிறக்கும். ஆனால் அந்த மாதிரியான தேர்வுகளுக்கோ, ’இல்லை ஐயா,, என்னால் முடியாது’ என்ற மறுப்புக்களுக்கோ வாய்ப்பு ஏற்படவுமில்லை.. அந்த அனுபவம் திரும்ப ஒரு முறை கூட நிகழ்ந்ததுமில்லை

இவவளவு. தூரம் சொல்லக் காரணம், அன்று ஒரு நாள் மாலை ஜி.. டி.எக்ஸ்ப்ரெஸின் சென்னை போகும் பெட்டியைத் தேடி உட்கார்ந்ததிலிருந்து மறுநாள் மாலை ஏழு மணிக்கோ என்னவோ சென்னை செண்டிரல் வந்து சேரும் வரை நானும் கூட வந்தவர்களும், குழந்தைகளும் எதிர்கொண்ட அனுபவம் தான் அப்படி ஒரு அவஸ்தை ஒன்று காத்திருந்தது எங்களுக்கு என்பதன் நினைப்பே யாருக்கும் எழுந்ததில்லை. எங்களுக்கு, ‘இப்படி எல்லாம் இருக்கும் அந்த பிரயாணம், பார்த்து ஜாக்கிரதையா போப்பா” என்று யாரும் எங்களுக்கு எச்சரிக்கை தந்ததும் இல்லை.

நாக்பூர் வரும் வரைக்கும் பிரயாணம் சுகமாகத்தான் கழிந்தது. எல்லாப் பிரயாணங்களையும் போல். சென்னைக்கு என்று ஒதுக்கப்பட்டு, பிரயாணிகள் வந்து நிரம்பக் காத்திருந்த நேரம் நான்கைந்து மணி நேரம் இருந்திருக்கும். நாங்கள் அதைத் தேடிக்கண்டு பிடிக்கும் முன்னரே அதில் தெற்கு நோக்கிச் செல்லும் பிரயாணிகள் அந்தப் பெட்டியில் இடம் பிடிக்கத் தொடங்கியிருந்தனர். இல்லையென்றால் எங்களால் அந்தப் பெட்டியை சுலபத்தில் கண்டுபிடித்திருக்க முடியாது. ஆனால் நாங்களும் பெட்டியில் இடம்பிடித்துக்கொண்ட பிறகு அது காத்திருந்த இரண்டு மணி போல நீண்ட அவகாசத்தில் அதில் பிர்யாணிகள் நெருக்குயடித்துக்கொண்டு தான் உட்கார முடிந்தது.

அந்த நெருக்கடியில், திருமதி கிருஷ்ணசாமி பாடு தான் மிகவும் பரிதாபமாக இருந்தது. குழந்தைகள் வேறு. அவற்றுக்குப் பசிக்க ஆரம்பித்தால், பின்னர் நெருக்கடியைப் பார்த்து பீதியடைந்து அழ ஆரம்பித்தால் என்ன சமாதானம் சொல்லி அவற்றைத் தேற்ற முடியும்? அதுகள் அழுகையை நிறுத்த முடியும். என் மனத்திலேயே இந்தக் கவலைகள் ஓடிக்கொண்டிருக்கும் போது, அந்தக் குழந்தைகளின் அம்மா மனதிலும் இந்தக் கவலைகள் இன்னும் அதிகமாகத்தான் கலவரபபடுத்திக் கொண்டிருக்க வேண்டும். அந்த பீதி அவர்கள் முகத்தில் தெரிந்தது. ஆனால் அவர்கள் இன்னும் அதை வெளிப்படுத்தத் தொடங்கவில்லை. சொல்லி,கலவர்ப்பட்டுப் பிரயோஜனம் இல்லை. சமாளித்தாக வேண்டும்.

இன்று இதை எழுதும் போது எனக்கு நினைவில் இருப்பதெல்லாம் அன்றைய இரவிலிருந்து மறு நாள் மாலை ஏழு அல்லது எட்டு மணிவாக்கில் சென்னை அடையும் வரை எப்படி சமாளித்தோம் என்பது கொஞ்சமும் நினைவில் இல்லை. இடையில் அந்த அம்மையார் அழத்தொடங்கியது நினைவில் இருக்கிறது. பக்கத்தில் இருந்த் பெரியவர் சுற்றியிருப்பவர் கூட்டத்தைச் சத்தமிட்டு அடக்க முயன்று கொண்டிருந்ததும், திரையோடுகின்றன. அவர்களும் பெரியவரும் ஜன்னலை ஒட்டிய பெஞ்சில் உட்கார்ந்திருக்க, ஒரு குழந்தை தன் அம்மாவின் மடியில், நான் அவர்களுக்கு எதிரில் கீழே நடைபாதையில் அவர்கள் கொடுத்த ஏதோ ஒரு சிறிய மூட்டையின் மேல் உட்கார்ந்திருந்தேன் பெரியவர் குழந்தைகளையும் அம்மாவையும் சமாதானப் படுத்திக்கொண்டிருப்பதும் திரையோடுகிறது. குழந்தைகளுக்கு எங்கிருந்து பால் வந்தது, நாங்கள் எங்கே எப்படி சாப்பாடு வாங்கி வந்து சாப்பிட்டோம் என்பதெல்லாம் நினைவில் இல்லை. ஒரு சமயம் குழந்தைக்கு பாலுக்காக வெந்நீர் ஒரு கடையில் வாங்கி வர என்னை அனுப்ப, அங்கு இருக்கும் கூட்டத்தைப் பார்த்து, இது நடககாது என்று தீர்மானித்து, ரயில் வண்டியியிலிருந்து ஒரு தெர்மாஸ் ப்ளாஸ்கில் வெந்நீர் எடுத்து வரச்சொன்னதும் நினைவுக்கு வருகிறது.

பெட்டியின் வழியெங்கும் கூட்டம் நெருங்கியடித்து உட்கார்ந்து கொண்டிருந்தது. கழிப்பறைக்குப் போகும் வழியும் நெருக்கியடித்து உட்கார்ந்திருக்கும் கூட்டத்தால் அடைபட்டுக் கிடந்தது. எப்படி எங்கும் தேவைக்கு இவர்களையெல்லாம் கடந்து போனோம், குழந்தைகள் என்ன செய்தன என்பதெல்லாம் நினைவில் இல்லை. “இனிமே ஜன்மத்துக்கும் இந்த தேர்ட் க்ளாஸில் வரவேமாட்டேன். ஒரு தடவை பட்டது போறும்.” என்று அந்த அம்மாள் இரண்டு மூன்று தடவை வெறுப்போடு சொன்னது நினைவில் இருக்கிறது. ஏதோ ஆண் துணை என்று தான் அவர்களை, குழந்தைகள் சகிதம் என்னோடு அனுப்பியது என்ன புண்ணியத்துக்கு என்று நான் நினைத்துக்கொண்டேன். நான் இல்லையென்றால், அவர்கள் சௌகரியமாக உயர் வகுப்பில் பிரயாணம் செய்திருக்கக்கூடும். இல்லையெனில் பயணத்தையே பின்னொரு நாளைக்கு கிருஷ்ணசாமியும் உடன் வரும் சமயத்திற்குத் தள்ளி வைத்திருக்கக் கூடும்.

நினைவுகளின் சுவட்டில் ....எனக்கும், அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு கெட்ட கனவு போல அந்த பயணம் நினைவுகளாக மனதில் உறைந்து விட்டது. அதன் பிறகு நான் ஹிராகுட்டில் இருந்த ஆறு வருடங்களில், பின்னர் ஹிராகுட்டை விட்டு தில்லி சென்ற சமயமும், இடையில் வெள்ளப் பெருக்கில் நாக்பூரிலிருந்து தெற்கே ரயில் பாதைகள் சேதமடைந்து, பிலாஸ்பூர், விசாகபட்டனம் என்று சுத்தி வந்த காலத்திலும் பயணம் எனக்கு ஒரு நரகமாக இருந்ததில்லை. கஷ்டங்கள், எதிர்பாராத காத்திருத்தல்கள் ஏல்லாம் இருந்தன தான். ஆனால் நான் தனித்திருந்தேன். எந்த இளம் வயது பென்ணுக்கும் குழந்தைகளுக்கும் பொறுபேற்று அல்ல. எதிர்பாராத் பயண திருப்பங்கள் எதிர்பாராத சந்திப்புக்களையும் மகிழ்ச்சியையும் தந்த பயணங்களாக அவை வண்ணம் பெற்றிருக்கின்றன. நினைத்துப் பார்க்க, இப்போதைய சந்தர்ப்பத்தில் அவை மனதுக்கு மிக ஆனந்தம தருவனவாகத் தான் இருக்கின்றன. அவை பற்றி, சந்தர்ப்பம் வரும்போது பின்னால் சொல்கிறேன்.

மாலை ஏழுமணியோ என்னவோ அல்லது இன்னம் தாமதமாகவோ நாங்கள் சென்னை வந்து சேர்ந்தோம். செண்டிரலில் கிருஷ்ணசாமியின் மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துச் செல்ல அவர் அண்ணா அண்ணாசாமி ஏதோ ஏற்பாடு செய்திருந்தார். “அப்பா ஒரு வழியாக ஒரு நரக வேதனை முடிவுக்கு வந்துவிட்டது என்று அந்த அம்மையாரும் ஆசுவாச பெருமூச்சு விட்டிருக்கக் கூடும். அங்கிருந்து எப்படி எழும்பூர் நிலையத்துக்குப் போனோம் என்பது நினைவில் இல்லை. அவர்களுக்குப் போகவேண்டியது சீர்காழி. எனக்கு கும்பகோணம். இருவருக்கும் அடுத்த பயணமும் கூட ஒரே வண்டியில் தான். அவர்க்ள் எனக்கும் கும்பகோணத்துக்கு டிக்கட் எடுத்து வைத்திருந்தார். அவர்களிடம், பின்னர் ஹிராகுட்டில் வந்து பார்ப்பதாகச் சொல்லிக்கொண்டு. நான் எனக்கான மூன்றாம் வகுப்புப் பெட்டிக்குப் போனேன். சீர்காழ் வரை இரவுப் பயணம் மிக நிம்மதியாக கழியும்.

நான் ஊருக்கு வந்தேன். சாதாரணமாக பயணம் முடிந்து வருபவரைக் கேட்கும் கேள்விகள், ‘என்னடா எல்லாம் சௌகரியமா இருந்ததா? வழிலே நன்னா சாப்பிட்டியா, வந்த களைப்புத் தீர வேணுமானா வெந்நீர் போட்டுக் குளியேன்” என்ற சமாசாரங்கள் இல்லை. ஹிராகுட்டில் நானே ஒரு வேலை தேடிக்கொண்டுவிட்டேன். ஊருக்கு பணம் அனுப்புகிறேன். ஊருக்கு வந்து ஒன்றரை வருடத்துக்கு மேலாகிறது. புது வேலை. முதன் முதலாக பிள்ளை சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறான். ஊருக்கு வந்திருக்கிறான். “ என்ற சந்தோஷம் அப்பாவுக்கும் அம்மாவுக்கும், தங்கைகளுக்கும். எல்லோருக்கும் ஒரு புதிய அனுபவம். நான் இப்போது அந்த வீட்டில் ஒரு புது அந்தஸ்துடன் நுழைகிறேன். அவர்களுக்கு நான் பெருமிதத்துடன் பார்க்கும் மூத்த பிள்ளை. ‘வடக்கே வேலை பாக்கறான். லீவுக்கு வந்துருக்கான். பாத்து வருஷமா ஆயிடுத்து இல்லியா> என்று “என்ன பிள்ளையாண்டான் வந்திருக்கான் போலெருக்கே” என்று ஊரில் ஒவ்வொருவராக கேட்க வருபவர்களுக்கு சொல்ல வேண்டும்

இதில் என்ன ஆச்சரியம் என்றால், நான் அவர்களுக்கு லீவில் வருகிறேன் என்று ஒரு கார்டு கூட எழுதிச் சொல்லவில்லை. நான் வருவது பற்றி நினைப்பே இல்லாது அவர்கள் முன் போய் நிற்பேன். அவர்கள் “என்னடா இது வர்ப்போறேன்னு ஒரு வரி கார்டு போட மாட்டியா? என்னடா பிள்ளை நீ? என்று அவர்கள் என்னைப் பார்த்துச் சந்தோஷப்படுவதும், என்னைக் கடிந்து கொள்வதும் ரொம்ப வருஷங்களுக்கு நீடித்தது. எனக்கு, திடீரென்று அவர்கள் முன் நின்று அவர்களைச் சந்தோஷத்தில் திக்குமுக்காடச் செய்யவேண்டும் என்ற நாடகமாடும் என்ணங்கள் ஏதும் இல்லை. என்னவோ எனக்கு எழுதவேண்டும் என்ற என்ணமே தோன்றியதில்லை. அவரகள் கடிந்து கொண்ட பிறகும் நான் என்னை ரொம்ப வருடங்களுக்குத் திருத்திக் கொண்ட தில்லை. என் பெற்றோர்கள் விஷயத்தில்மாத்திரமில்லை. அனேகமாக நண்பர்கள், உறவினர்கள் யாருக்கும் நான் பார்க்க வருகிறேன் என்று முன்னதாகச் சொல்லி எழுதும் பழக்கம் எனக்கு அந்தக் காலங்களில் இருந்ததில்லை..
    (தொடரும்).

vswaminathan.venkat@gmail.com


 
aibanner

 ©© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்