- வெங்கட் சாமிநாதன் -
              நண்பர் 
              தாஜ் இப்போது என்னிடம் மிகக் காட்டமாக இருக்கிறார். அவர் மனமும் 
              எழுத்தும் ஒரு நிலையில் இருப்பதில்லை போலத் தோன்றுகிறது. என்ன 
              செய்யலாம் என்று மனம் பரபரக்கிறது. கற்பனையா ஆத்திரமா எது செய்யும் 
              விஷமம் என்று தெரியவில்லை. கணையாழி அலுவலகத்தில் என்னைப் 
              பார்த்ததாகவும் பின் ஒரு டீக்கடையில் டீ சாப்பிட்டுக்கொண்டு பேசியது 
              பற்றிச் சொல்கிறார். வளர்ந்தவராக முப்பது வயது மதிக்கத் தக்க இளைஞர் 
              ஒருவர் என் நினைவில் நிழலாடுகிறார். அவர் தான் தாஜ் ஆக 
              இருக்கவேண்டும். பேசியது எதுவும் என் நினைவில் இல்லை. ஆனால் அவர் 
              நினைவிலிருந்து இப்போது நிறைய என்னைப் பற்றி எழுதி வருகிறார். அவர் 
              கருத்துக்களோடு மோத நான் வரவில்லை. அவர் கருத்து அவரது உரிமை. ஆனால் 
              தவறான உண்மைக்கு மாறான தகவல்கள் அவரது உரிமை அல்ல. அவர் வேண்டுமென்றே 
              திரித்துச் சொல்கிறார் என்று சொல்ல நான் துணியவில்லை. ஆனால் ஆத்திரம் 
              மேல் எழுந்து கொதி நிலை அடைந்து விட்டால் நினைவுக்கு வருவதெல்லாம் 
              உருமாறி வந்து விடுகின்றன.
              
              எனக்குத் தான் என்ன பேசினோம் என்பது நினைவில் இல்லை என்றேனே. அவர் 
              என்னிடம் ஏன் ஜே.ஜே. சில குறிப்புகள் பற்றி எழுதவில்லை என்று 
              கேட்டதாகவும் நான் கர்நாடகாவிலிருந்து வரும் ஆங்கிலப் பத்திரிகையில் 
              எழுதியிருப்பதாகவும் சொன்னதாகச் சொல்கிறார். முதலில் அவர் 
              சொல்கிறபடி, "விமர்சனமே என் ஆத்மார்த்த பணி" என்று நான் இயங்கவில்லை. 
              நான் என்னை விமர்சகனாக கருதிக்கொள்வதில்லை என்று 8749 தடவை 
              சொல்லியாயிற்று. இரண்டாவது யாரையும் ஏன் இந்த புத்தகத்திற்கு 
              விமர்சனம் எழுதவில்லை என்று கேட்டு விட முடியாது. எழுதுவதும் 
              எழுதாதிருப்பதும் அவரவர் சந்தர்ப்பம், விருப்பம், பொறுத்து அமைவது. 
              எழுதக் கேட்டு பின் மறுத்திருந்தால் தான், ஏன்? என்ற கேள்வி எழுப்ப 
              ஒருவருக்கு உரிமை உண்டு. ஏதோ ஒரு புத்தகத்தைக் குறிப்பிட்டு அதற்கு 
              நீங்கள் ஏன் எழுதவில்லை என்று எந்த உலகிலும் யாரையும் கேட்கமுடியாது. 
              இதெல்லாம் சாதாரண, அடிச்சுவடி விஷயங்கள். 
              
              விஷயத்திற்கு வரலாம். ஜே. ஜே. குறிப்புகள் புத்தகம் வந்த பிறகு நாகர் 
              கோயிலில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. அதற்கு நான் அது பற்றி எழுதி 
              அனுப்பக் கேட்கப்பட்டேன். நானும் எழுதி அனுப்பினேன். அதுவும் 
              கருத்தரங்கில் படிக்கப்பட்டது. "உங்கள் கட்டுரையை அந்த 
              சந்தர்ப்பத்தில் கவனமாக கேட்க முடியவில்லை" என்று சுந்தர ராமசாமி 
              எனக்கு எழுதினார். இதற்கு அர்த்தம் புத்தகத்தைப் பற்றி நான் 
              எழுதியிருந்தது அவருக்கு அவ்வளவு உவப்பாக இருக்கவில்லை என்று நான் 
              புரிந்து கொண்டேன். அதை நான் கேள்வி கேட்க முடியுமோ?, அல்லது அவர் 
              தான் என்னைக் கேள்வி கேட்க முடியுமோ?. அந்த கட்டுரை யாத்ரா இதழ் 
              42-43, ஆகஸ்ட், 1983- ல் பிரசுரமாகியுள்ளது. பின்னர் அந்த கட்டுரை 
              "என் பார்வையில் சில கதைகளும், சில நாவல்களும்" என்ற 2001-ல் கலைஞன் 
              பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது (பக்கம் 150-162).
              
              தாஜ் தான் வெ.சா.வின் எழுதியது எல்லாவற்றையும் அனேக மாக 
              படித்துள்ளதாக வேறு சொல்லியிருக்கிறார். எல்லாம் படித்திருப்பது 
              சாத்தியமில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அப்படி இருந்தால் தாஜ் 
              "ஜே.ஜே பற்றி ஏன் எழுதவில்லை?" என்று கேட்பதற்கு பதிலாக நீங்கள் 
              எழுதியிருக்கிறீர்களா? எங்கு? என்று தான் நியாயமாகக் 
              கேட்டிருக்கவேண்டும். எழுதவே இல்லை என்று அடித்துச் சொல்வது 
              நியாயமில்லை.
              
              இது ஏதோ தற்செயலாக களங்கமில்லாது கேட்கப்படும் கேள்வியாக எனக்குத் 
              தோன்றவில்லை. போகட்டும். 
              
              இதைக்கூட நான் பாராட்டாது ஒதுக்கி விடலாம். தொடர்ந்து என் மத 
              வெறியையும், முக மூடிகளையும் கிழித்தெறியும் இயக்கத்தின் பணியில் 
              ஒன்றாக, அவர் கீழ்க்கண்ட வரிகளை எழுதியிருக்கிறார்: அவரது 
              அம்பறாத்துணியிலிருந்து எடுத்து எய்த அம்புகளில் இது ஒன்று என்பது 
              நினைவில் கொளவது நல்லது: 
              
              "இரண்டு வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு வலைப் பதிவில், வெ.சா. அவர்கள் 
              காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குப் போயிருந்ததைப் பற்றி எழுதியிருந்தார். 
              அதன் அருகில் உல்ள மசூதியின் இரைச்சலால் காசி விஸ்வநாதரை நிம்மதியாக 
              வழிபடமுடியவில்லை என்ற தனது ஏக்கத்தை அதில் அவர் பதிந்திருந்தார்."
              
              நான் எழுதியிருந்தது அப்போது வந்து கொண்டிருந்த "உலகத் தமிழ்.காம்" 
              இனையத்தில். 
              இரண்டு தவறுகளை தாஜ் இங்கு செய்திருக்கிறார். ஒன்று நான் எழுதிய 
              சந்தர்ப்பத்தைச் சொல்லாதது. இரண்டு, நான் எழுதியதையும் 
              நினைவிலிருந்து தவறான பொருள் கொள்ளும் வகையில் திரித்து எழுதியது.
              
              
              அவர் குறிப்பிடும் பாராவின் மூல ரூபத்தை தடித்த எழுத்துக்களில் தந்து 
              நான் எழுதிய பகுதியை மாத்திரம் அதன் முழு வடிவில் தருகிறேன். என் 
              முகமூடிகளையும், மத வெறியையும் எல்லோருமே தெரிந்து கொள்ளலாமே. இது 
              'கலை உலகில் ஒரு சஞ்சாரம்' என்ற புத்தகத்தில் பக்கம் 164-165 -ல் 
              வெளிவந்துள்ளதைப் பார்க்கலாம். "உலகத் தமிழ்.காம் இப்போது 
              இல்லையாதலால் அது வெளிவந்த 
              வேறு குறிப்புகள் நான் தர இயலாது. இனி நான் எழுதியது:
              
              "தமிழ் நாட்டில் எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றையொன்று அழிக்கும் 
              முனைப்பில் தீவிரம் கொண்டவை. இந்த அழிப்பு வேள்வியில், பரஸ்பர 
              பகைமையில், தமிழ் நாடு வரண்ட பாலையாகச் சீரழிந்தாலும் 
              இக்கட்சிகளுக்குக் கவலை கிடையாது. ஆனால் இக்கட்சிகள் எல்லாம் ஒரே ஒரு 
              விஷயத்தில் ஏகோபித்து ஒன்று சேர்ந்துள்ளன. திருவண்ணாமலை கோயில் 
              பிரச்னை ஒரு உதாரணம். இக்கோயிலைச் சுற்றியிருக்கும் வியாபாரிகளின் 
              பிடியிலிருந்து விடுவித்து உலகப் பொதுவான கலைச் சொத்தாகப் (World 
              Heritage site) பிரகடனப்படுத்த இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை 
              முயன்றது. அதன் பராமரிப்பிற்குள் வராமல் கோவில் 
              காப்பாற்றப்படவேண்டும். இதில் மட்டும் அரசு, எதிர்க் கட்சிகள். 
              வியாபாரிகள், கோயில் குருக்கள், பக்த கோடிகள், ஆஸ்திகர்கள், 
              நாஸ்திகர்கள் எல்லோரும் ஒரு குடைக்கீழ். 
              
              கோயில் ஒரு Departmental Store ஆவதை நான் தென்னாட்டில் தான் 
              பார்க்கிறேன். மதுரை மீனாட்சி கோயில் எதிரே உள்ள புது மண்டபம் 
              காலப்போக்கில் ஒரு கடைத் தெருவாக மட்டும் மாறி விட்டது. 
              
              எனக்குச் சொல்லப்பட்ட ஒரு சம்பவத்தை நான் இங்கு பதிவு செய்ய 
              வேண்டும். 
              
              கங்கை ஆற்றின் கரையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் மிக பிரசித்தி 
              பெற்றது. கங்கை ஒரு புனித ஆறு, எல்லாப் பாவங்களையும் போக்கும் என்று 
              நம்பப் படுகிறது. மதுரையில் இருப்பவர் தன் சொத்துக்களுக்கு உயில் 
              எழுதி ஏற்பாடு செய்துவிட்டுத் தான் காசி யாத்திரை புறப்படுவார். 
              திரும்பி வருவது நிச்சயமில்லை என்ற காரணத்தால். இது அந்நாளைய 
              சமாச்சாரம். 
              
              இந்நாளைய காசி விஸ்வநாதர் ஆலயத்தையோ, கங்கை ஆற்றையோ ஜீவித 
              லட்சியமாகக் கொண்டு ஏமாந்து விடக்கூடாது. இப்போது கங்கை சாக்கடையாகப் 
              பரிணமித்து விட்டது. இப்போது சிறுமைப்பட்டு சிறியதாகிவிட்ட காசி 
              விஸ்வநாதர் ஆலயம் ஒரு பெரிய மசூதியின் பின் ஒட்டிக்கொண்ட out house 
              மாதிரித்தான் இருக்கும். காரணம், விஸ்வநாதர் ஆலயம் சரித்திரத்தில் 
              பலமுறை இடிக்கப்பட்ட ஆலயம். திரும்பக் கட்டப்பட்டு, திரும்ப 
              இடிக்கப்பட்டு, இப்போது தன் இடத்தை விட்டுக் கொடுக்காத பிடிவாதத்தில் 
              கட்டப்பட்ட மசூதி போக எஞ்சியுள்ளதே இன்றுள்ள விஸ்வநாதர் ஆலயம். 
              சுற்றி வந்தால் மசூதி மிகப் பெரியதாக, சுத்த மாக இருக்கும். நான் 
              போய்ப் பார்த்த எந்த மசூதியும் சுத்தமாகத்தான் இருக்கும். 
              
              ஒரு ஹிந்து, ஒரு முஸ்லீம் இருவரும் அத்யந்த சினேகிதர்கள். 
              வாலிபத்துடுக்கு மிக்கவர்கள். "நீ வாய் திறக்காமல் வா. நீ இல்லாமல் 
              போகமாட்டேன்" என்று ஹிந்து நண்பர் முஸ்லீம் நண்பரை விஸ்வநாதர் 
              ஆலயத்துக்குள் இட்டுச் சென்றார். செருப்பைக் கழட்டி உள்ளே சென்றால், 
              அந்த மிகச் சிறிய ஆலயத்தின் - ஒரு பெரிய முற்றத்தின் அளவு தான் 
              இருக்கும் -பளிங்குக்கல் பதித்த தளம். எப்போதும் ஈரமும் மண்ணும் 
              கலந்த சகதியாகத் தான் இருக்கும். காலெல்லாம் சேறாகும். 
              
              பின்னர் மசூதிக்குள் நண்பர்கள் நுழைந்தார்கள். அவர்களுக்கு அனுமதி 
              மறுக்கப்பட்டது. "ஏன்?" என்று முஸ்லீம் நண்பன் கேட்க, 
              "ஹிந்துக்களுக்கு அனுமதி இல்லை" என்று பதில் வந்தது. "நான் முஸ்லீம் 
              தான். எனக்கு ஏன் அனுமதி இல்லை?" என்று வாதாட நீங் கள் இரண்டு பேருமே 
              ஹிந்துக்கள் தான். நீங்கள் விஸ்வநாதர் ஆலயம் போய்வந்திருக்கிறீர்கள் 
              என்பது எனக்குத் தெரியும். உங்கள் இருவர் கால்களிலும் உள்ள சகதியைப் 
              பாருங்கள். என்னையா ஏமாற்ற நினைக்கிறீர்கள்?" என்று சத்தமிட்டு 
              அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர் என்பது தான் அந்த சம்பவம். 
              
              நம் புனித ஸ்தலங்களை எவ்வளவு மதிக்கிறோம் என்பதற்கு இது ஒரு 
              எடுத்துக்காட்டு. 
              
              ஒரு புறம் திருவண்ணாமலை கோபுரங்கள் வெள்ளையடிக்கப்பட்டு, கோயில் 
              புணருத்தாரணம் நடக்கும். மறுபுறம் அக்கோயிலுக்குரிய நிலங்கள் 
              ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும். நமது நாஸ்திக சமுதாயப் புரட்சியும், 
              ஆஸ்திக ஆன்மீகப் புரட்சியும் ஒரே குணத்தவை. ஒரே வண்ணம் கொண்டவை."
              
              நான் எழுதியவற்றிலிருந்து தாஜ் கொடுத்துள்ள பகுதியும் அவர் அதற்குத் 
              தந்துள்ள வியாக்கியானமும் எப்படிப் பெறப்படுகிறது? நான் எப்படி 
              மதவெறியனானேன்? யார் முகத்தை முக மூடி மறைக்கிறது. 
              
              தாஜுக்கோ, நாகூர் ரூமிக்கோ பதில் சொல்லித்தான் என்னைக் 
              காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்ற நிலை இல்லை. பொய்யான தகவல்களை 
              மாத்திரம் திருத்த வேண்டும். நாகூர் ரூமிக்கு பதில் 
              நானில்லாவிட்டாலும் நான் அறிந்த, அறியாத நண்பர்களின் தார்மீகக் கோபம் 
              பதில் சொல்கிறது. பொய்க்கூற்றுக்களை நான் தானே திருத்த வேண்டும்?
              
              வெங்கட் சாமிநாதன் /18.10.06
              swaminathan_venkat@rediffmail.com



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




