| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| கடன் தருவோம்! |  
| 
  நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு 
இங்கே அழுத்துங்கள்
 |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழர் சரித்திரம் |  
| 
             சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |  
|   |  
|   |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் 
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |  
| Download Tamil Font |  
|   |  | 
| இலக்கியம்! |  
| மூத்த எழுத்தாளர் நகுலன் மறைவு! நகுலனின் நினைவில்!
 
 - வெங்கட் சாமிநாதன் -
 
 
  நகுலன் 
மறைந்துவிட்டார் என்று எனக்குத் தகவல் வந்தது செல் தொலைபேசியில் குறுஞ்செய்தியாக. 
அனுப்பிய உபகாரி யார் என்று தெரியாது. பின் ஒரு கவிஞர், திலகபாமாவிடமிருந்து செய்தி 
வந்தது. மறு நாள் ஹிந்து பத்திரிகையில் நகுலனின் மறைவு பற்றி செய்தி வந்திருந்தது. 
எந்த தமிழ் பத்திரிகையும் நகுலனின் மறைவு தமிழகத்திற்குத் தரப்படவேண்டிய செய்தி 
எனக் கருதியதாக எனக்குத் தகவல் இல்லை. ஹிந்து பத்திரிகைக்கு தமிழ் எழுத்தாளர் ஒரு 
பொருட்டாவது, அவர் சினிமாப் பாடல்கள் எழுதுபவராக இருந்தால் தான் சாத்தியம். 
வாலியும், மு.மேத்தாவும். வைரமுத்துவும் தான் ஹிந்து பத்திரிகை அறிந்த தமிழ் 
எழுத்தாளர்கள். லா.ச.ராவைக்கூட ஹிந்து பத்திரிகைக்கு தெரியாது. லா.சு.ரங்கராஜன் 
என்பவைத்தான் லா.ச.ரா என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. 
 இப்போது தமிழ் நாட்டுப் பத்திரிகைகளுக்கு கனி மொழி கவிஞர் என்று தெரியத் 
தொடங்கியுள்ளது, கவிதை சம்பந்தப்படாத அவரது மற்ற பொதுக்காரியங்களுக்காக, விழா 
நடத்துதல், திறப்பு விழாக்கள் போன்றவைக்காக. அதாவது கட்சிப் பிரமுகரான பிறகு, 
அவரைக் கவிஞராகக் கண்டுகொள்ளப் படுகிறார். கட்டாயம் கவிஞர் கனிமொழி என்று தான் 
சொல்கிறது வழக்கமாகியுள்ளது. மலையாள பத்திரிகைகளில் நகுலன் மறைவு ஒரு முக்கிய 
செய்தியாக விரிவாக பதிவாகியுள்ளதாக எனக்குச் சொன்னார்கள். கேரளம் போல் நாமும் அது 
செல்லும் அதே தடத்தில் செல்லமுடியுமா என்ன? நமக்கென ஒரு நீண்ட வரலாறும், 
பண்பாட்டுச் சிறப்புகளும் தனித்வமும் இல்லையா என்ன? ஒரு கவிஞரை முதல்வராகக் 
கொண்டுள்ள நாடல்லவா தமிழ் நாடு! கேரளத்துக்கு, அல்லது வேறு எந்த மாநிலத்துக்காவது 
இத்தகைய சிறப்பு உண்டா? ஆக, நம் செயல்பாடுகளும் வேறு குணத்ததாகத் தான், நம் தமிழ் 
மணம் பரப்புவதாகத்தான் இருக்க முடியும்.
 
 சோகம் என்னவென்றால், நகுலன் தனது எண்பத்தாறாவது வயதில், உடல் க்ஷ£ணமுற்று, இறந்த 
போது, சுமார் 45 வருட ஒரு நீண்ட காலம் தமிழில் கவிதை, விமர்சனம், நாவல், என்று பல 
துறைகளில் தன் பெயர் பதித்து வந்துள்ளார். ஆங்கிலத்திலும் அவர் கவிதைத் தொகுப்புகள் 
வந்துள்ளன. 60-களிலிருந்து பல கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் அவர்களின் 
ஆரம்ப காலங்களில் நகுலன் தந்த உற்சாகமும் ஊக்குவிப்பும் ஆதரவாக, அங்கீகாரமாக 
பயன்பட்டுள்ளது. பதவி உயர்வைக்கருத்தில் கொள்ளாது, திருவனந்த புரத்தில் கல்லூரி 
ஆசிரியராக இருந்து கொண்டே, அந்த வட்டார எழுத்தாளர்களுக்கு மரியாதைக்குரிய மூத்தவராக 
இருந்துள்ளார்.
 
 ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர் நிறைந்த படிப்பும் பாண்டித்யமும் பெற்றவர். 
பழந்தமிழ் இலக்கியங்களிலும் நல்ல படிப்பும் ஞானமும் பெற்றவர். ஞானம் என்று நான் 
சொல்லும்போது பொருள் அறிந்து தான் சொல்கிறேன். வெற்றுத் தகவல் சேகரிப்பு செய்து 
முனைவர் பட்டம் பெற்றுள்ளோர் தமிழ் பல்கலைக் கழங்கங்களை நிரப்பியுள்ள சூழலில், 
ஞானம் என்ற சொல்லை நகுலனின் பண்டைத் தமிழ் இலக்கியத் தேர்ச்சியின் சந்தர்ப்பத்தில் 
உபயோகப்படுத்தித் தான் ஆகவேண்டும். அவர் கவிதைகளே இதைச் சாட்சியப் படுத்தும். 
அவ்வகையில் அவர் கவிதைகள் அவர் ஆளுமையைச் சொல்லும் தனித்வம் பெற்றவை.
 
 நகுலன் அப்படி ஒன்றும் தமிழ் எழுத்தாளர் சாதியைச் சேர்ந்தவர் என்று சொல்லிவிட 
முடியாது. அவர் எழுத ஆரம்பித்தது, எழுத்து பத்திரிகையில். எழுத்து பத்திரிகை 
இல்லையெனில் அவரை நாம் அறிந்திருப்போமா என்பது சந்தேகத்துக்குரிய விஷயம். எழுத்து 
இல்லையெனில் வேறொன்று என்று வாதிடலாம். அந்த வேறொன்றும், அது போன்ற எத்தனையோ 
வேறொன்றுகள், எழுத்து பத்திரிகையின் பாதிப்பில் பிறந்தன தான். எழுத்துவின் 
பாதிப்பற்ற எந்த பத்திரிகையிலும் அவர் எழுதவில்லை. அவருக்கு அவற்றில் இடமிருக்காது, 
என்னும்போது, எழுத்துவின் கண்டுபிடிப்பாகத்தான் அவரைக் கொள்ள வேண்டும். என் 
ஞாபகத்தில் அவரது 'கொல்லிப் பாவை' கவிதை தான் நகுலனை எனக்கு அறிமுகப்படுத்தியது. 
உரையாடல்கள், நாவல், விமரிசனம் என்று அவர் பலவாறாக தன்னை வெளிப்படுத்திக் 
கொண்டாலும், 'கொல்லிப்பாவை' நகுலன் தன்னை சிறப்பாக ஒரு கவிஞராக 
வெளிப்படுப்படுத்திக் கொண்டுள்ளார் என்று எனக்கு இன்றும் தோன்றுகிறது.
 
 கவிதை தவிர மற்ற எல்லாவற்றிலும், விமர்சனம், கட்டுரைகள், நாவல்கள் போன்ற 
எல்லாவற்றிலும், நமக்குக் கிடைப்பது, நகுலன் படித்த புத்தகங்கள், சந்தித்த 
எழுத்தாளர்கள், அவர்களுடனான அவரது அவ்வப்போது மாறும் உறவுகள், கசப்புகள், மறைமுக 
தாக்குதல்கள், கிண்டல்கள் போன்ற சமாச்சாரங்கள் நிறைந்திருக்கும். எழுத்துலகமும், 
எழுத்தாளர்களும் நகுலனும் தான் அவர் நாவல்களின் கதா பாத்திரங்கள். பெயர்கள் 
கற்பனையேயானாலும், யாரைச் சொல்கிறார் என்று படிப்பவர்க்கு நன்றாகவே தெரியும். 
தெரியாது போகும் அளவுக்கு அதை மறைப்பதில் நகுலனுக்கு அக்கறை இல்லை. மறைமுகமாகத் 
தாக்கினாலும், தாக்கப்படுபவருக்கு அது தான் தான் என்று உறைக்காவிட்டால் அதில் என்ன 
சுவாரஸ்யமிருக்க முடியும்? நகுலனின் ஒவ்வொரு நாவலைப் படிக்கும் போதும், நகுலனின் 
உறவுகள் மற்ற எழுத்தாளர்களோடு இருக்கும் அவ்வப்போதைய வெட்ப தட்பங்களைச் சொல்லும். 
ஒரு நாவலில் கண்ட வெட்ப தட்பம் அடுத்த நாவலில் தொடரும் என்பது நிச்சயமில்லை. 
உறவுகள் கெட்டிருக்கலாம். அல்லது சமாதானம் அடைந்திருக்கலாம். கற்பனைப் பெயர்கள் 
மறைப்பதால், யாரும் இதில் தப்புவதில்லை. இந்த விசித்திர உலகத்தைப் பற்றி நகுலனின் 
நாவல்கள் விஸ்தாரமாகச் சொல்வதற்கு மேல், நீல பத்மனாபனின் தேரோடும் வீதியும் 
('மறைந்து தாக்குதல், வத்தி வைத்தல் காரியங்களைச் செய்யும் கே.எச்.கே') ஆவணப் 
படுத்தும். இன்னும் சிலரும் (நகுலன் நாவலில் வரும் ஹேமசந்திரன், நீல பத்பனாபன் 
நாவலில் வரும் மதிரமூர்த்தி) நாவலாக அல்ல, கவிதை வடிவில் நகுலனுக்கு பிரதி உபசாரம் 
செய்துள்ளனர். சுவாரஸ்யமான மனிதர் நகுலன். அவரது இப்பரிமாணமும் சுவாரஸ்யமானது தான்.
 
 எழுத்தாளர்களையே பாத்திரங்களாக வைத்து நாவல் எழுதியவர்கள் உலகில் வேறு எங்கும் 
உண்டா? நகுலன் தான் அதைச் செய்துள்ளார். இதன் காரணமாக அவரது நாவல்கள் பிரசுரம் 
பெறுவதில் சிரமம் இருந்திருக்கிறது. பெரும்பாலும் அவர் தானே தான் 
வெளியிடவேண்டியிருந்திருக்கிறது. இருப்பினும் அவர் சளைத்தவரில்லை. தனிமையும் அதன் 
சோகமும் தான் அவர் எழுத்துக்கு பெரிய காரணிகள் என்று சொல்லவேண்டும். இதற்கு 
சாட்சியம் அவர் எழுத்துக்களில் நீங்கா இடம் பெறும் 100 அல்லது 200 மிலி, பின் ஒரு 
கற்பனைப் பாவை, 'சுசீலா'. இரண்டும் அவரது தனிமையின் சோகத்தைத் தணித்தவை. 
ஜெயதேவருக்கு சாருஷீலே, நகுலனுக்கு சுசீலா.
 
 ஆனால் தமிழ் இலக்கிய உலகின் விசித்திர குணம், நகுலன் தன் எழுத்துலக விவகாரங்களையே 
சம்பாஷணைகளாகவும், பாத்திரங்களாகவும் படைத்து தன்னைத் திருப்திப் படுத்திக்கொண்ட 
நாவல்களை, தமிழுக்கே உரிய அ-யதார்த்தம் என்றும் நான்-லீனியர் எழுத்தென்றும், மந்திர 
யதார்த்தம் என்றும், போஸ்ட் மாடர்னிஸம் என்றும் வரும் லேபிள்களில் ஒன்றை 
நகுலனுக்கும் தந்து மகிழ்ந்துள்ளது. இது நகுலனைப் பாராட்டும் செயல் என்று 
கொள்ளாமல், லேபிள் காரர்கள் தம் கூடாரத்துக்கு ஆள் சேர்க்கும் சமாசாரம் என்று தான் 
கொள்ள வேண்டும். எம்.வி.வெங்கட் ராமின் காதுகள் மந்திர யதார்த்த நாவலாகிப் போன கதை 
தான். கடைசிக் காலத்தில் ஏதோ ஆசைப் பட்டு பொன்னாடை போர்த்தி விட்டுப் போகிறார்கள். 
அவர்கள் ஆசையைக் கெடுப்பானேன் என்று நகுலன் எண்ணியிருக்கக் கூடும். 'நான் எதையோ 
நினைத்து எதையோ எழுதப் போக, அதுக்கு இப்படி ஒரு பொன்னாடையா!' என்று அவர் நமுட்டுச் 
சிரிப்போடு இருந்திருக்கக்கூடும். நகுலனின் நமுட்டுச் சிரிப்பு அவரது முத்திரை.
 
 இப்படி ஒரு சித்திரம் பெற்றுள்ள ஒரு மனிதர் எப்படி இலக்கியமே, இலக்கிய விசாரமே தன் 
வாழ்வின் ஒரே லக்ஷ¢யமாகக் கொண்டு வாழ்ந்த க.நா.சு விரும்பி சந்திக்கும் 
சம்பாஷிக்கும் மனிதராக இருந்திருக்கிறார் என்று யோசிக்கத் தோன்றும். ஒரு நல்ல 
சம்பாஷணைக்காரரான க.நா.சு. 'தான் சம்பாஷிக்க விரும்பும் இரண்டு பேர்கள் என 
மௌனியையும் நகுலனையும் மட்டுமே குறிப்பிட்டுள்ளார். எத்தகைய பாராட்டு இது! 
நகுலனிடம் இந்த விஷமத்தனங்கள் எல்லாம் மீறிய பரிமாணங்களும் இருக்க வேண்டும். அது 
தான் அவர் கவிதைகளை அவரது சிறப்பான இலக்கிய வெளிப்பாடாக்கியிருக்கிறது என்றும் 
நினைக்கத் தோன்றுகிறது. 1960 எழுத்து பத்திரிகையின் கொல்லிப் பாவையிலிருந்து 
தொடங்கி கடைசியாக அவர் எழுதிய கவிதைகளில் எனக்குப் பிடித்த 'இவர்கள்' வரை அனேக நல்ல 
கவிதைகள் நகுலனை முக்கிய கவிஞராக, தமிழ் கவிதைக்கு தன் வழியில் புதிய கவித்வ 
வடிவங்களை நமக்குத் தந்துள்ளார். நம் பழைய யாப்பு வடிவங்கள் போலல்லாது, புதுக் 
கவிதையில் ஒவ்வொரு நல்ல கவிதையும் தன்னில் ஒரு புது வடிவத்தைக் கொண்டிருக்கும் 
என்பது என் கருத்து. அத்தோடு நகுலனின் சாரத்தையும் அது சொல்லும். இந்த நகுலன், 1960 
ஆக இருந்தாலும் சரி, கடைசி வருடங்களில் தன்னில் தன் தனிமையில் முடங்கிக் கிடக்கும் 
நகுலனாலும் சரி, ஒருவரே தான். அவரின் சாரம் தான். முழுதையும் மேற்கோள் காட்ட 
முடியாது. ஒரு சில வரிகள் போதும்.
 
 காத்திருந்தேன் என்ற தலைப்பு அதற்கு. இந்த தலைப்பை முக்கியமாக கவனிக்க வேண்டும்:
 
 "மீண்டும் வீதியில் யாருமில்லை
 வெறும் தனிமை
 வெகு துலைவில்
 வேகம் குறைந்து வரும்
 டாக்ஸி என் வீடும் வரும் என்று
 நம்பிக்கையின்
 வேதனை தாங்கி,
 நான் வாழ மனந்தூண்ட
 நான் வறிதே வீற்றிருக்க
 வந்த வண்டி
 என் வீடு தாண்டிப் போகும்."
 
 இந்த தனிமையும் காத்திருத்தலும் தான் நகுலன். அவர் வாழ்ந்திருந்த 84 ஆண்டுகள் 
முழுமையுமான நகுலன். பின் கடைசி வருடங்களில் எழுதிய கவிதைகளில் ஒன்று: தலைப்பு 
இவர்கள்:
 
 "உதட்டளவில் பேசுகிறார்கள். மனமறிந்து
 பொய் சொல்கிறார்கள். ஒரு கணத்தில்
 சொன்னதை அடுத்த கணத்தில் மறந்து
 விடுகிறார்கள். எதிரில் இருப்பவன்
 பிரக்ஞையின்றி தங்களைப் பற்றியே
 பேசிக்கொண்டிருக்கிறார்கள். வயிறு
 காலியானாலும் வீடு நிறைய சாமான்
 களை வாங்கி வைக்கிறார்கள். உடமை
 கருதி செத்துக் கொண்டிருக்கும் ஒருவன்
 முன், "இவன் ஏன் இன்னும் சாகமாட்
 டேன்" என்கிறான் என்று பொறுமை
 இழந்து நிறகிறார்கள். எல்லாவற்றிலும்
 அதிசயம் என்ன வென்றால் இவர்கள்
 தங்களைப் போல் நல்லவர்கள் இல்லை
 என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்
 
 இவர்களுடன் தான் உறவுகளை
 வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது
 நாம் வாழும் உலகில் தான் இவர்களும்
 வாழ்கிறார்கள். ..."
 
 நகுலனது கவித்வ ஆளுமையின் சாரம் இது. காத்திருப்பும், கசப்பும். எல்லாமே 
இப்படித்தான் இருக்கும் என்றில்லை. தனிமை பேசும் கவிதைகள் ஆத்மார்த்தமானவை. 
சிறப்பானவை.
 
 அவரது கவிதைகள் சிறக்கக் காரணம், அவரது வெளிப்பாடும் மொழியும் மிகச் சிக்கனமானவை. 
அனேக சமயங்களில் அவர் சொல்லவந்தது முழுதையும் சொன்னதாக இராது. எங்கோ தத்துத் 
தாவுவது போலவும், சொல்ல மறந்து விட்டது போலவும், தோன்றும். நாவலில், விமர்சனங்களில் 
'மனுஷன் ஏன் இப்படி எழுதுகிறார்? என்று நம்மை நினைக்கத் தோன்றும் விட்டு விட்டுத் 
தொடரும், தொடர் அறுந்து தாவும் சிந்தனை, கவிதையில் நமக்கு இட்டு நிரப்பிக்கொள்ளும் 
இடை வெளிகளைத் தரும்.
 
 நில்
 போ
 வா
 
 வா
 போ
 நில்
 
 போ
 வா
 நில்
 
 நில் போ வா
 
 என்று நவீன விருட்சத்திற்கு எழுதிய கவிதை போல நிறைய உண்டு. என்ன 
எழுதியிருக்கிறீர்கள் என்று அழகிய சிங்கர் நகுலனைக் கேட்டு திருப்பிவிட முடியாது. 
பின் நகுலனின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. இவ்வளவுக்கும் 
அவரது கடைசி வருடங்களில் நகுலனது கவிதைகள் பெரும்பாலும் நவீன விருட்சத்தில் தான் 
வெளிவந்த மாதிரித் தெரிகிறது.. வீம்புக்கு வினோத சூத்திரங்களை உருவாக்குவார். ஒரு 
கவிஞர் (நல்ல கவிஞர் தான் அவர்) தாகூரை காப்பியடிக்கிறார் என்று தெரிந்ததும், 
நகுலன் தரும் வாதம்: இது;"மொழிபெயர்ப்பு (மொழிபெயர்ப்பு என்றால்) 1:1 அல்ல" என்று 
வாதிப்பார். இந்த பிரம்ம சூத்திரத்திற்கு யார் பாஷ்யம் எழுதுவது?. விஷமத்தனம் என்று 
தோன்றும். இது தான் நகுலனின் முழுமை என்பதல்ல.
 
 பொதுவாக, தத்துவார்த்தமாக இலக்கியம் பற்றி, கவிதை பற்றி பேசும் போது, நகுலன் மிக 
சிறப்பாகவும், ஆழமாகவும், உண்மையாகவும் பேசிவிடுகிறார்: இந்த கவியுள்ளம் தான் அவர் 
கவிதைகளை சிறப்பான சிருஷ்டியாக்கிவிடுகின்றன என்று தோன்றுகிறது: ஒரு சில வரிகள் 
மாத்திரமே.
 
 "கவிதை எழுப்பும் பரவச நிலையை வார்த்தைகளிலிருந்து பிரிக்க முடியாதென்றால், 
கவிதையின்
 வார்த்தைகள் நமது உப-போத மண்டலத்தில் ரீங்கரிப்பதற்கு ஒரு காரணம் ஓசை."
 
 "என் அனுபவத்தில் எந்த உயர் கவிதையிலும் உச்ச கட்டம் என்பதில் ஓர் அபூர்வ எளிமை,
 ஆழம், தெளிவு இருக்கின்றன.
 
 "அடிப்படையாக இரு விஷயங்கள் -அனுபவம் - உருவம் (வெளிப்பாடு மூலம் எழுவது). எங்கு
 அனுபவம் வெளிப்பாடு - மூர்த்தண்யம் அடைகிறதோ அங்கு இலக்கியம் பிறக்கிறது"
 
 பின் ராஜாராவின் வார்த்தைகளை நினைவு படுத்துகிறார் ஒர் இடத்தில்.
 
 "இலக்கியம் நிசப்தத்தின் அடிப்படையில் பிறந்து சப்தம் மூலம் உருவாகி மீண்டும் 
நிசப்தத்தில்
 லயிப்பது."
 
 இவற்றின் சாட்சியங்களை நகுலனின் கவிதைகள் பெரும்பாலானவற்றில் காணலாம். விமர்சன 
வாக்கியங்களில் ஆங்காங்கே காணலாம்.அந்த நகுலனைத் தான் க.நா.சு தான் விரும்பிய 
நகுலனுடனான் சம்பாஷணைகளில் கண்டாரோ என்னவோ. நகுலனது நாவல்களிலோ, அவரது விஷம 
வேடிக்கைகளிலோ நிச்சயமாக இல்லை. இருந்தாலும், அவரது ஆரம்ப வருடங்களில் அவருக்குப் 
பிடித்த கவிஞர்களை அவர் உற்சாகப்படுத்தி ஆதரவளித்தார். அவரிடமிருந்து இவர்கள் 
பெற்றது நிறைய. ஆனால், இப்படி கொடுப்பவர்களுக்கெல்லாம் எப்போதும் நேர்வது போல, அவர் 
உற்சாகப்படுத்தி அங்கீகரித்தவர்கள் எவரிடமிருந்தும் நகுலன் பெற்றது ஏதும் இல்லை. 
அது மிக வருந்தத் தக்க விஷயம். ஆனால் தமிழ் எழுத்தாளர்கள் வேறு எப்படி நடந்து 
கொள்வார்களாம்? ஏது சாட்சியம்? அதே சமயம் நகுலன் விடாப்ப்பிடியாக தொடர்ந்து முன் 
வைத்த ஷண்முக சுப்பையா மறைந்த பிறகு அவர் போன இடம் தெரியவில்லை.
 
 அறுபதுகளில், நகுலன் குரு§க்ஷத்திரம் என்று ஒரு இலக்கியத் தொகுதியை வெளியிட்டார். 
தம் செலவிலேயே. வேறு யார் வெளியிடுவார்கள் தமிழ் நாட்டில்? அதில் அன்று அவர் தான் 
முக்கியமானவர்களாகக் கருதியவர்களின் படைப்புக்களைத் தொகுத்துள்ளார். அப்போது 
க.நா.சு எழுதியது எனக்கு நினைவுக்கு வருகிறது. "தமிழ் நாட்டில் இரண்டு முக்கிய 
நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. 'சென்னையில் நடந்த உலகத் தமிழ் மாநாடு ஒன்று. இது 
மிகுந்த கோலாகலத்தோடு ஆடம்பரமாக நிகழ்ந்தது. மற்றது, நகுலனின் 'குரு§க்ஷத்திரம்' 
தொகுப்பு. வெகு அமைதியாக, அனேகர் கவனத்திற்கு வராது நிகழ்ந்தது. இருப்பினும், 
தமிழுக்கு உருப்படியாக ஏதோ செய்தது என்றால் அது நகுலனின் 'குரு§க்ஷத்திரம்' தான்," 
என்று எழுதினார்.
 
 இப்போதும், சுமார் ஐம்பது வருட காலம் தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் 
கவிதைக்கும் வளம் ஊட்டிய 86 வயது மனிதரை நாம் இழந்து விட்டதை பற்றி தமிழ் இலக்கிய 
உலகம், பத்திரிகை உலகம் கண்டு கொள்ள வில்லை. தமிழகம் செய்யத் தவறியதை, எங்கோ 
அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் தான் 'விளக்கு' பரிசு தந்து கௌரவித்தார்கள். 
மலையாளத்தவர்கள் கூட தம்மிடையே வாழ்ந்த தமிழனுக்கு 'குமரன் ஆசான்' பரிசு 
கொடுத்தார்கள் என்று நினைவு எனக்கு .என் நினைவு சரிதானா? இதெல்லாம் செய்வார்கள். 
தண்ணீர் தான் தரமாட்டார்கள்.
 
 வெங்கட் சாமிநாதன்/21.5.07
 vswaminathan.venkat@gmail.com
 |  
| 
 |  
| © 
காப்புரிமை 2000-2006 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |