ஸ்ரீ சந்திரசேகரானந்த சரஸ்வதி - காஞ்சி மடத்தில்
ஒரு ஞானி! - வெங்கட் சாமிநாதன் -
"ஐம்பது
வருஷங்களுக்கு முன் உலக வஸ்துக்கள் எல்லாம் எழுபத்திரண்டு மூலப் பொருள்களுக்குள்
(elements) அடங்குவதாக ஸயன்ஸ் சொல்லி வந்தது. இந்த மூலப்பொருள்கள் ஒன்றுக்கு ஒன்று
மாறுபட்டவை என்பதே அன்றைய கருத்து. ஆனால் இப்போது அணு(atom) பற்றிய அறிவு
விருத்தியான பின் இந்த மூலப்பொருள்கள் எல்லாமும் கூட வேறுவேறான பொருட்கள் அல்ல
என்றும், ஒரே சக்தி (energy) தான் இவை எல்லாமாகவும் ஆகியுள்ளது என்றும் ஸ்யன்ஸ்
நிபுணர்கள் நிலைநாட்டியுள்ளார்கள். பொருள்(matter), சக்தி (energy) இவையும் வேறு
வேறானவை அல்ல என்று நவீன ஸயன்ஸ் சொல்லுகிறது. ஆக, அத்வைதம் தான் ஸயன்ஸ¤ம் நமக்குக்
காட்டுகிற உண்மை. ஐன்ஸ்டைன், ஸர் ஜேம்ஸ் ஜீன்ஸ் போன்ற பிரபல ஸயன்ஸ் நிபுணர்கள்,
உபநிஷதமும், சங்கர பகவத் பாதாளும் உபதேசித்த அத்வைத சித்தாந்தத்துக்கு மிகவும்
நெருங்கி வந்துவிட்டார்கள்."
"உலகம் மாயை என்று அத்வைதம் கூறுவதற்குப் பொருள் யாதெனில், 'உலகம் இறுதி
சத்தியமல்ல. இது விவகாரத்துக்கு மட்டுமே சத்தியம். இதனுடைய இருப்பும் பிரம்மம் என்ற
ஒன்றைச் சார்ந்ததே என்பது தான். இதையே மேற்கண்ட ஸயன்ஸ் நிபுணர்களும்
சொல்லுகிறார்கள். பிரம்மமே பரமார்த்திக சத்தியம், உலகம் விவகாரிக சத்தியமே என்று
அத்வைதம் சொல்வதைத் தான் இவர்கள் "உலக இயக்கமெல்லாம் இன்னொன்றைச் சார்ந்தவை
(relative) தான்: முழு உண்மை அல்ல (absolute) அல்ல" என்கிறார்கள். (தெய்வத்தின்
குரல்: பாகம்-1; பக்கம்-18).
இந்த ஜீவன் தான் ஹீப்ரு மதங்களில் ஈவ் ஆகியிருக்கிறான். 'ஜீ' என்பது 'ஈ' யாவது ஒரு
வியாகரண விதி. 'ஜ' வரிசை சப்தங்கள் 'ய' வரிசையாக மாறிவிடுவது சகஜம். இப்படித்தான்
'யமுனா' 'ஜமுனா' வாயிற்று. 'யோகீந்திர' என்பது 'ஜோகீந்தர்' என்றாயிற்று. 'ஜீவ'
என்பது 'ஈவ்' என்றாயிற்று. 'ஆத்மா' என்பது 'ஆதம்' ஆக மாறிவிட்டது. *பிப்பலம் என்பது
'ஆப்பிள்'(apple) என்றாயிற்று. அறிவு விருட்சம் என்பதும் நம் 'போதி' விருட்சம்
தான். 'போதம்' என்றால் 'ஞானம்". புத்தருக்கு போதி விருட்சத்தின் கீழ் தான் ஞானம்
உண்டாயிற்று என்பது எல்லாருக்கும் தெரிந்தது தானே? ஆனால் அவருக்கும் முந்தியே
அரசமரத்துக்கு போதி விருட்சம் என்ற பெயர் இருந்தது. (மேற்கூறிய நூல்: பக்கம்
-135-136)
* இதற்கு ஒரு பாரா முன்னதாக உபநிஷதத்தில் இதே old testament கதை, பிப்பல மரத்தை
மையமாக வைத்துச் சொல்லப்பட்டிருப்பதை விஸ்தரிக்கிறார் பரமாச்சாரியார்.
"பழைய தர்மங்களை எல்லாம் முறிவு படாமல் காப்பாற்றப்படவேண்டும் என்று எங்களுக்கு
ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் ஆக்ஞை இட்டிருக்கிறார்கள். அவர் பெயரை நான் வைத்துக்
கொண்டிருப்பதால் தான் நிங்கள் இங்கு வருகிறீர்கள். அவருடைய ஆக்ஞையை உங்களுக்குத்
தெரிவிக்க வேண்டியது என் கடமை. ஆக்ஞையைக் காரியத்தில் நிறைவேற்றுவதும்,
நிறைவேற்றாததும் ஒரு பக்கம் இருக்கட்டும். சாஸ்திர வழக்கங்கள், லோக §க்ஷமம், ஆத்ம
§க்ஷமம் இவற்றைக் கருதியே வகுக்கப்பட்டவை என்பதையாவது உங்களுக்குப் புரிய வைக்கப்
பார்க்கிறேன்." (மேற்கூறிய நூல் பக். 284)
"தினமும் ஒவ்வொருவரும் ஒரு மாட்டுக்கேனும் ஒரு பிடி புல்லோ, அகத்திக்கீரையோ கொடுக்க
வேண்டும். மாட்டுக்கு ஒரு பிடி புல் கொடுப்பதை "கோக்ராஸம்", என்று பெரிய தர்மமாக
சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. 'க்ராஸம்' என்றால் ஒரு வாயளவு (mouthful):
இங்கிலீஷில் புல்லை grass என்பது கூட இதிலிருந்தே வந்திருக்கலாம்." (மே. நூல் பக்.
316)
"வான நூலில் (astronomy) நமக்கு இருந்த பாண்டித்யத்தால் தான் எத்தனையோ ஆயிரம்
வருஷங்களாக, இன்று அமாவாசை, இன்று கிரஹணம் என்று கொஞ்சம் கூடத் தப்பாமல் பஞ்சாங்கம்
கணிக்க முடிந்திருக்கிறது." (மே. நூல் பக். 424)
"இப்போது கூட, நாஸ்திகர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கிறவர்களில் ரொம்பப் பேர்
வியாதி வெக்கை வந்து ரொம்பவும் கஷ்டம் ஏற்பட்டால், வெங்கடரமணஸ்வாமிக்கு வேண்டிக்
கொள்கிறார்கள்: மாரியம்மனுக்குப் பிரார்த்தனை செலுத்துகிறார்கள். கேட்டால்,
"வீட்டில் இப்படி அபிப்ராயம்: சம்ஸாரத்துக்கு இதிலே நம்பிக்கை: அவர்களுக்காக
விட்டுக் கொடுத்தேன். அவர்கள் உணர்ச்சி (feeling)க்கு மதிப்பு(respect) கொடுத்தேன்:
என்று ஜம்பமாக சொல்லிக்கொள்வார்கள்." (மே நூல் பக். 576)
"Action and reaction are equal and opposites (செயலும் பிரதிச் செயலும் சம சக்தி
வாய்ந்ததாகவும் எதிரிடையானதாகவும் இருக்கும்) என்ற "Newton Law" எல்லாக்
காரியங்களையும் பற்றின 'கர்மா தியரி' யை அடிப்படையாகக் கொண்டது என்பது மட்டுமில்லை;
எண்ணத்தின் பிரதிபலனையும், மன நெறியின் சக்தி மற்ற மனங்களின் மீது மட்டுமின்றி
'natural forces' மீதும் பிரதி விளைவுகளை உண்டாக்குவதையும் அடிப்படையாகக் கொண்டது
தான். Mental plane, metaphysical plan, physical plane, மூன்றையும் கோத்து தம்
மதத்தில் சொன்னதை physical plane-ல் (பௌதீக மட்டத்தில்) மட்டும் சொல்வதே ந்யூட்டன்
லா:......"(மே. நூல். 3-ம் பாகம்: பக் 392)
"வெறும் physical plane-லேயே ஜட இயற்கை என்கிற வெளிநேச்சர் அடங்கியிருந்ததானால்
சூர்யன் எப்போதோ குளிர்ந்து போயிருக்கும் என்று ஸயண்டிஸ்டுகளே சொல்கிறார்கள்.
எப்படியோ அதில் உஷ்ண சக்தி ஊறிக்கொண்டே யிருக்கிறது என்று சொல்லி இதன் காரணத்தைப்
பலவிதமாக ஊகம் செய்கிறார்கள். ஆதி காரணம் ஈஸ்வர சக்தி தான்.......ஐன்ஸ்டைன் மாதிரி
ரொம்ப பெரியவர்கள் அது தான் ஈஸ்வர சக்தி என்று நமஸ்காரம் பண்ணுகிறார்கள். (மே நூல்:
3-ம் பாகம்: பக். 393)
"விக்ரஹங்களில் பார்த்திருக்கலாம். 'நாத தநூம் அனிஸம் சங்கரம்" என்று தியாகராஜ
ஸ்வாமிகள் செய்திருக்கிற க்ருதியில் பரமேஸ்வரனுக்கு நாதமே சரீரம் என்கிறார். "தநூ"
என்றால் சரீரம், இதுவே ஈஸ்வரனின் சக்தியோஜாதம் முதலான ஐந்து முகங்களிலிருந்தே சப்த
ஸ்வரங்களும் வந்திருக்கின்றன என்று சரணத்தில் சொல்லியிருக்கிறார்." ஸத்யோஜாதாதி
பஞ்சவக்த்ரஜ ஸரிகமபதநீ வர சப்தஸ்வர") ஐந்து முகத்திலிருந்து ஏழு ஸ்வரமென்றால்
எப்படி என்று புரியாமலிருந்தது,. வாஸ¤தேவாச்சார், காரைக்குடி சாம்பசிவ ஐயர்,
மகாராஜபுரம், செம்மங்குடி முதலிய இத்தனை பேரையும் விசாரித்துப் பார்த்தேன். முதலில்
அவர்களுக்கும் புரியாமல்தான் இருந்தது. அப்புறம் சங்கீத சாஸ்திரங்களைப் புரட்டிப்
பார்த்ததில், சட்ஜமும், பஞ்சமமும் பிரக்ருதி ஸ்வரங்கள் என்பதாக ஈஸ்வரனைப் போலவே
ஸ்வயம்புவாக இருப்பவை என்றும், விக்ருதி என்ற செயற்கை ஸ்வரங்களான மற்ற ஐந்துமே
பரமேஸ்வரனின் ஐந்து முகங்களில் ஒவ்வொன்றிலிருந்தே ஒவ்வொன்றாகத் தோன்றிய என்றும்
அர்த்தம் தொனிக்கும்படி பிரமாணங்கள் அகப்பட்டன.(மே. நூல் பக். 811-12).
"சப்த பிரம்ம வாதத்தில் சப்தம் முக்கியமானது, பூர்ணமானது என்று இரண்டு லக்ஷணங்கள்
சொல்லியிருக்கிறது. Time என்கிற காலத்துக்குக் கட்டுப் படாமல் இருப்பது தான்
'நித்யம்'. Space என்னும் இடக்கட்டுப்பாடு இல்லாமல் எங்கும் பரவியிருப்பது தான்
'பூர்ணம்'. இப்படி எக்காலத்திலும், எவ்விடத்திலுமான நிறைந்திருப்பதே சப்தம் என்று
நம் பூர்வீகர்கள் சொன்னதை இப்போது தான் ஸயன்ஸ் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
(மே. நூல் பக். 814)
"இப்போது தான் வயசு ஒன்றைத்தவிர ஜனநாயகப் பிரதிநிதிகளுக்கு எந்தத் தகுதியும்
வைக்காமல் விட்டிருக்கிறது. நம்முடைய கான்ஸ்டிட்யூஷனை (அரசியல் நிர்ணய சட்டத்தை)
நிறைவேற்றிய சபைக்கு அக்கிராசனராக இருந்த ராஜேந்திர பிரசாதே இதை ஆட்சேபித்துப்
பார்த்தார். "சட்டத்தைப் பற்றி வாதிக்கவேண்டிய வக்கீல்களுக்கும் தீர்ப்புக்
கொடுக்கவேண்டிய ஜட்ஜுகளுக்கும் அனேக க்வாலி·பிகேஷன்கள் வைத்திருக்கிறோம். ஆனால்
அந்தச் சட்டங்களைப் போட்டு நிறைவேற்றுகிற எம்.எல்.ஏக்களுக்கும் எம். பி.க்களுக்கும்
ஒன்றும் வேண்டாம் என்றால் கொஞ்சம் கூட சரியாயில்லையே" என்று எவ்வளவோ சொல்லிப்
பார்த்தார். ஆனாலும் அவர் சொன்னதறகு கான்ஸ்ட்டியூவெந்த் அசெம்ப்ளி ஒத்துக்
கொள்ளவில்லை. (மே. நூல் பக். 854).
"நிர்வாணம் என்பதற்கு நேர் அர்த்தம், 'தீபத்தை ஊதி அணைப்பது'. ஒரே சூடாக தகித்துக்
கொண்டு, பிரகாசித்துக் கொண்டிருந்த சுடர் அடியோடு இல்லாமலே போய்விடுவது தான்
நிர்வாணம். இப்படி அக்னியை க்ஷணத்தில் அடியோடு இல்லாமல் பண்ணிவிடுகிற மாதிரி வேறே
எதையும் பண்ணமுடியாது. ஜலத்தைக் காய்ச்சி, கீய்ச்சிப் பொங்க வைத்துத் தான்
வற்றடித்து இல்லாமல் பண்ணனும். இப்படியே மற்ற பூதங்களையும். அப்போதும் கூட
அவையெல்லாம் அணுக்களினால் ஆனதால், நாம் அழிந்துவிட்டதாக நினைத்த பிறகும், நம்
கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் வேறே ரூபத்தில் இருந்து கொண்டுதான் இருக்கும்.
Matter-ஐ destroy பண்ணவே முடியாது என்று சொல்லுகிறார்கள். அக்னி அணுக்களால் ஆனது
அல்ல (அக்னி எரிவதற்குத்தான் ஆக்ஸிஜன் வேண்டுமே தவிர அக்னியே ஆக்ஸிஜன் அணுக்கள்
தான் என்று நினைத்து விடக்கூடாது). அணுக்களால் உண்டாகாததால் அக்னியைத் தான் அடியோடு
ரூபமே இல்லாமல் பண்ணி அழிக்க முடிகிறது. அம்மாதிரி அணைந்து போவது தான் நிர்வாணம்.
பூதங்களிலேயே ரொம்ப வீர்யத்துடன் இருப்பது அக்னி. (மே. நூல். 5-ம் பாகம் பக். 648)
"அபிநவசங்கரர்": அவர்களுடைய ஆர்குமெண்டில் இன்னும் இரண்டு பாக்கி இருக்கின்றன.
கம்போடிய கல்வெட்டில் ஒரு 'பகவத் சங் கர' ரின் காலில் அறிஞருலகம் முழுதும் தாமரையை
வண்டுகள் மொய்ப்பது போல தங்களுடைய சிரசுகளைத் தாழ்த்தியிருப்பதாகச்
சொல்லியிருக்கிறதே, அது நம்முடைய ஆதி சங்கர பகவத் பாதாளைத் தவிர
யாராயிருக்கமுடியும்? 'கல்வெட்டிலிருந்து அந்தக் காலம், கி.பி. 8- நூற்றாண்டின்
முடிவு பாகத்திலிருந்து 9- நூற்றாண்டின் ஆரம்ப பாகம் வரை ஆசார்யாளின் காலம்'
என்பதற்கும் ஒத்துப் போகிறதே! இதற்கு என்ன சொல்கிறீர்கள்?" என்பது ஒரு ஆர்குமெண்ட்.
இன்னொன்று நம் ஊரிலேயே வழங்கும் சங் கேதக் கணக்கு ஸ்லோகம்- கலியில் 3889-ம் வருஷமான
கி.பி.788 -ஐச் சொல்லும் "நிதிநாகேபவஹ்ன்யப்தே ஸ்லோகம்." (மே.நூல் 5-ம் பாகம் பக்
835).
மேலே தரப்பட்டிருப்பவை காஞ்சி பரமாச்சார்யர், ஸ்ரீ சந்திரசேகரானந்த சரஸ்வதி
(1894-1895) அவர்களின் சொற்பொழிவுகளிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள். அவரைத்
தரிசிக்க வந்து குழுமும் பக்தர்களுக்கு அவ்வப்போது அவர் உபதேசங்கள் செய்வதுண்டு.
இப்பிரசங்கங்களுக்கு ஏதும் முன் தயாரிப்புகள் கிடையாது. அவ்வப்போது அவர்கள் முன்
தம் மனதில் தோன்றுவதைச் சொல்வார். மேலே கொடுக்கப்பட்ட பகுதிகள், எவ்வித தேர்வும்
இன்றி யதேச்சையாக கண்களில் பட்டவை (இது காறும் வெளிவந்துள்ள ஆறு பாகங்களின் சுமார்
6000 பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்டவை.கண்ணில் பட்டவற்றில் துறைக்கு ஒரு மேற்கோள்
என்று மாத்திரமே ஒரு சில துறைகளோடு நிறுத்திக்கொண்டேன். மாதிரிக்கு ஒரு துணுக்கு
என்று )பரமாச்சாரியாரின் படிப்பும், அக்கறைகளும் என்ஸைக்ளோபீடியா என்று சொல்லும்
அளவுக்கு விஸ்தாரமும் ஆழமும் கொண்டவை. வரலாறு, தத்துவம், இசை, மொழியியல்,
சமஸ்கிருதம், தமிழ் இலக்கியம், பெளதீகம், தொல்லியல் என அடுக்கிக்கொண்டே போகலாம்,
அவரது அறிவு விஸ்தாரமும் தீக்ஷண்யமும் விரிந்து கொண்டே போகும். இவற்றோடு உடன் நிகழ்
கால அரசியல், சமூக பிரச்சினை களையும் நிலவரங்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். தன்
13வது வயதில் சங்கராச்சாரியாராக பீடமேறிய பையனுக்கு மடத்தைச் சேர்ந்த
சம்பிரதாயங்களும், பீடாதிபதியாக அந்தப் பையன் தெரிந்து கொள்ள வேண்டிய மத
சாஸ்திரங்கள் அனுஷ்டானங்கள், புராணங்கள், சடங்குகள், பின் சமஸ்கிருதத்திலும்
தமிழிலும் நல்ல தேர்ச்சி இவற்றைத் தவிர வேறு என்ன கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கும்?
வேறு எதுவும் யார் கற்றுக் கொடுப்பார், கற்பதற்கு நேரம் எங்கு இருக்கும்? இவற்றைக்
கற்பதே, முழு நேர கடும் பயிற்சியாக இருக்கும். பின் எங்கிருந்து அவர் ஆங்கிலமும்,
அவருக்கு இப்போது தெரியவந்துள்ள அத்தனை இந்திய மொழிகளில் பயிற்சியும், உயர்
கணிதமும், தொல்பொருளியலும், கல்வெட்டு இயலும், ·ப்ரென்சும், ஆஸ்ரமத்துக்குள்
இருந்து கொண்டு எப்படிக் கற்றார்?. ஆசிரமத்து கடமைகள் போக அவருக்கு நேரம் எப்போது
கிடைத்தது? யார் அவருக்குக் கற்றுக் கொடுத்தார்கள்? அவராகத் தான் கற்றுக்
கொண்டிருக்க வேண்டும். எந்த ஆஸ்ரமும் இத்துறை ஒவ்வொன்றிற்கான பேராசிரியர்களை
வரவழைத்து பீடாதிபதிக்கு கற்பிக்க ஏற்பாடு செய்ய முடியாது. அவராகக் கற்றுக்கொண்டால்
அதற்குத் தடை எழாது மடத்திலிருந்து. அதற்காக அவர் இர்விங் வாலஸ், எர்ல் ஸ்டான்லி
கார்ட்னர், க்ரேஸ் மெடாலியஸ் என்று படித்துக் கொண்டிருக்க முடியாது. நூற்றாண்டுகள்
பல காலமாக கடைப்பிடிக்கப் பட்டு வரும் சம்பிரதாயங்களும், மடத்தின் கண்ணியமும்,
சமூகத்தில் அதற்கு உள்ள மரியாதையும் பங்கப்படாத வரை, சங்கராச்சாரியார் எந்த
சாஸ்திரம் படித்தாலும் அது பற்றிக் கவலை இல்லை. ஆனால் விஷயம் அதுவல்ல. ஒரு
பீடாதிபதிக்கு இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற மன உந்துதல் இருக்க
வேண்டும். அத்தோடு ஆசிரமத்துப் பொறுப்புக்களை நிறைவேற்றியபிறகு இவற்றைக் கற்க நேரம்
இருக்கவேண்டும். அந்த மனம் இந்தப் பதினோரு வயதுப் பையன் தன் வளர்ச்சியில் எப்படிப்
பெற்றான், அதுவும் ஆஸ்ரமத்துச் சூழலில் என்பது ஒரு கேள்வி. அத்தோடு இதற்கான நேரம்
எப்படிப் பெற்றான் என்பது அடுத்த கேள்வி.
பரமாச்சாரியாரின் பிரசங்கங்கள் 1945லிருந்து 1972 வரை உள்ள கால கட்டத்தைச்
சேர்ந்தவை. அதாவது 30 வருட கால நீட்சி கொண்டவை. பரமாச்சாரியார் பேசும்போது எடுத்து
எழுதிய குறிப்புகளிலிருந்து சேர்க்கப்பட்டவை. சுமார் ஆயிரம் ஆயிரம் பக்கங்கள் கொண்ட
ஐந்து பாகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை மேலே கொடுக்கப்பட்டவை. புத்தகத்தை உத்தேசமாக
திட்டமின்றிப் புரட்டிப் பெற்ற பக்கங்களிலிருந்து கண்ணில் பட்டவை என்று
எடுக்கப்பட்டவை. 1945-ல் டேப் ரெகார்டர் கிடையாது.
பரமாச்சாரியாரின் பேச்சுக்களை பதிவு செய்யவேண்டும் என்ற எண்ணமே எப்படி எப்போது
தோன்றியிருக்கக்கூடும். அவரது பரந்த அறிவும், உலக ஞானமும், பல அறிவார்த்த, தத்துவ
கலைத் துறைகளில் உள்ள ஆழ்ந்த சிந்தனைகளை ஒருமைப் படுத்திப் பெற்ற ஞானம் ஒரு
மடாதிபதியாக, இந்து மத போதகராக, ரக்ஷகராக அவருடைய ஸ்தானத்தைச் சிறப்பிக்கக் காணும்
போது அது பக்தியோடு கூடும் சாதாரண மக்களுக்கும் புரியும் படியாகச் சொல்லும்
வல்லமையையும் கண்டு, அப்பிரசங்கங்கள் காற்றோடு போய்விடக்கூடாது, பதிவு செய்ய
வேண்டும் என்று ஒரு கட்டத்தில் ஒரு சிலருக்குத் தோன்றியிருக்கவேண்டும்.
அப்பிரசங்கங்கள் வெறும் இந்துமத சாஸ்திர போதனைகளாக இல்லாமல், ஒரு தத்துவ தரிசனமாக
வெளிப்படுவதும் பல சிக்கலான அறிவுத்துறை விஷயங்களைப் பற்றிய அவரது விளக்கங்கள்
பாமரனும் புரிந்து கொள்ளும் மொழியில் இருந்து விட்டதும் இன்னும் சிறப்பு. அவரது
தரிஸன ஆளுமை ஆஸ்ரமத்தைத் தாண்டி, தமிழ் நாட்டைத் தாண்டி, இந்து மதத்தினரையும்
தாண்டி வெளிஉலகில் பரவவே, அது மகாத்மா காந்தியையும் அவரிடம் ஈர்த்துள்ளது. பால்
ப்ரண்டனையும் ஈர்த்துள்ளது. 1930 களிலேயே. இதன் பின்னர் தான் ஆர்தர் கெஸ்லர்
ஐம்பதுக்களில் பரமாச்சாரியரிடம் வருகிறார். தன்னைக் காண வந்த பால் ப்ரண்டனை ரமண
மகரிஷியையும் காணும்படி அனுப்பி வைத்தார் பரமாச்சாரியார். அவர்கள் எல்லாம்
காணவந்தது ஒரு மடாதிபதியை அல்ல. ஒரு மடாதிபதியாக அமர நேர்ந்துள்ள ஒரு ஆச்சாரிய
புருஷனை.
ஆக, தொழில் நுட்ப வசதி இல்லாத காலத்தில் அது குறிப்பெடுத்த பதிவுகளாகத்தான்
இருந்திருக்க முடியும். பதிவாவது தன் மொழியில் அல்லாது, பரமாச்சாரியரது மொழியில்
அமைந்திருக்கவேண்டும். விஸ்தாரமாகக் குறிப்பெடுப்பது மட்டுமல்லாமல் அதை ஆச்சாரியரது
மொழியிலேயே தருவதற்கு சிரமமும் சிரத்தையும் அவையெல்லாம் போக பக்தியும் கூடத் தேவை.
சந்திர சேகர சரஸ்வதிக்குக் கிடைத்த இந்த கியாதி, காஞ்சி மடம் தந்ததல்ல. உண்மையில்,
காஞ்சி மடத்தை மற்ற சங்கர மட பீடாதிபதிகள் அங்கீகரிப்பது கூட இல்லை. சிருங்கேரி
மடத்தவருக்கு காஞ்சி மடம் என்றால் இளப்பம் தான். ஆதி சங்கராச்சாரியார் தன்
காலத்தில் ஸ்தாபித்த மடங்களில் காஞ்சி எங்கேயிருந்து வந்தது என்று கேட்பார்கள்.
பூரி சங்கராச்சாரியாருக்கு மடத்தைவிட மற்ற காரியங்களில், அரசியலில் விருப்பம்
அதிகம். பத்திரிகைச் செய்திகளில் ஒவ்வொரு சமயம் அவர் பெயர் அடிபடும். வடக்கே
பத்ரிநாத் மடம் நிலத்தகராறு, பணத்தகராறுகளில் சிக்கிக் கொண்டிருப்பது. மடத்துத்
தலைவர் யார் என்பதில் போட்டி. அது இன்னம் தீர்ந்தபாடில்லை. அவர்களுக்கெல்லாம்
லோகாயத, ஸ்தாபன நிர்வாக அக்கறைகள் அதிகம். அவர்களைத் துறவிகள் என்றோ ஞானிகள் என்றோ
நினைப்பது சிரமம் தரும் காரியம். மடத்தை நிர்வகிக்க வந்தவர்கள். அவ்வளவே. ஆக,
இம்மடங்கள், காஞ்சி மடத்தை ஒர் சங்கராச்சாரிய பீடமாக ஏற்பதில்லை. ஆனால் விஷயம்
என்னவென்றால், இவர்கள் பீடாதிபதிகளாக இல்லையென்றால், இவர்களுக்கென்று தனிப்பட்ட
ஆளுமை ஏதும் கிடையாது. ஒரு அதிகாரி பதவி இழந்த மாதிரி தான். இவர்களது தனி மனித
ஆளுமை காரணமாக, இவர்கள் தலைமையேற்க வந்த மடத்தின் கண்ணியமும் கௌரவமும் இவர்களால்
க்ஷ£ணித்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். தம் இழுக்குகளைத் தான் மடத்தின்
தலைமைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்றும் சொல்ல வேண்டும்.
ஆனால், 11 வயது சாமிநாதன் என்ற சிறுவனை விதி காஞ்சிக்கு அழைத்து சந்திரசேகரானந்த
சரஸ்வதியாக காஞ்சி மட பீடாதிபதியாக்கியிருக்காவிட்டாலும், இந்த நாடு முழுதும் அவரது
கியாதி தெரிந்த ஒரு தயானந்த சரஸ்வதியாகவோ, ஆனந்த குமாரசுவாமியாகவோ மகாத்மா
காந்தியாகவோ அறியப்பட்டிருப்பார். மடத்துக்கு அவர் தம் ஆளுமையின் பெருமையைக்
கொடுத்தவர் பரமாச்சாரியார். மடத்தின் சம்பிரதாயங்கள், சங்கராச்சாரியாராக அவரது
பொறுப்புகள் அவரது செயல்களைக் கட்டுப்படுத்தியுள்ளது என்றே சொல்லவேண்டும்.
அப்படியும் காஞ்சி ஒரு சங்கராச்சார்ய பீடமாக, காஞ்சி சங்கராச்சாரியார் ஒரு ஜகத்
குருவாக அப்படி ஒன்றும் பெரிய அளவில் செல்வாக்கு உள்ள மடமோ பீடாதிபதியோ அல்ல.
காஞ்சி நகரில் அவரை முஸ்லீம்கள் வெகுவாக மதித்தனர், அவர்களுக்கு அவர் குரு அல்ல
என்றாலும். காஞ்சியைச் சுற்றிலும் சென்னையிலும், தஞ்சை போன்ற சில மாவட்டங்களின்
உள்ள பிராமணர்களை உள்ளிட்ட ஒரு வட்டத்திற்குள் தான் அவருக்கு குரு ஸ்தானம். தென்
மாவட்டங்களில் உள்ள பிராமணர்கள் சிருங்கேரி சங்கராச்சாரியாரைத் தான் தம் குருவாக
மதிக்கின்றனர். மடத்தின் ராஜ்ய விஸ்தாரம் அப்படி ஒன்றும் பெருமைப் படும் பரப்பு
கொண்டதல்ல. ஆனால் காஞ்சி மடம் சந்திரசேகரானந்தரின் பீடாதிபத்யத்தில் பெற்றுள்ள
கீர்த்திக்கும் மரியாதைக்கும் ஈடாக வேறு எந்த சங்கராச்சாரியார் பீடம் மட்டுமல்ல,
எந்த மத பீடத்தையும் சொல்ல முடியாது. அதிலும் தனிப்பட்ட முறையில் சந்திரசேகர
சரஸ்வதி அவர்கள் பெற்றுள்ள, பீடம், மதம், மாநிலம் மீறிய கௌரவமும் பெருமையும் ஈடு
இணையற்றது. மடத்தின் கட்டிட எல்லைக்குள் சாதாரணமாக நிகழும் உபதேசப் பேச்சுக்களில்
கூட புத்தர், காந்தி, முகம்மது, ராமானுஜர் போன்ற ஆச்சாரியார்கள், சரித்திர
மகான்கள், ஞானிகள் பற்றிப் பேசும்போது அவர்களுக்குரிய மரியாதையோடு தான்
குறிப்பிடுவார். அவர்கள் அத்வைதிகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற பேதம்
பார்த்ததில்லை. அவருக்கு ஐன்ஸ்டைன் கூட வேத காலத்து ரிஷி போன்றவர் தான். அவருடைய
அக்கறைகள், ஆழந்த அறிவு எத்துறையைச் சேர்ந்தது என்று சொல்ல முடியாது, ஆங்கிலத்தில்
Catholicity of outlook என்பார்களே அப்படியானது அவரது பார்வை. ஆக, அப்படிப்பட்டவர்,
மடத்தின் தலைமைக்கு ஈர்க்கப்பட்டிராவிட்டால் என்னவாக இருந்திருப்பார் என்று
யூகிப்பது சிரமம் தான் என்றாலும், அவர் எத்துறையில் செயல்பட்டிருந்தாலும், அவர்
தனது அருளையும், ஞானி தேஜஸயும் உடன் கொண்டு சென்றிருப்பார், அத்துறையும் அவரது ஞான
ப்ரசன்னத்தில் ஓளி பெற்றிருக்கும் என்பது நிச்சயம்.
அத்துடன் அவருடைய அசாதாரண தீர்க்க தரிசனமும் அவருக்கு துணை கொடுத்திருக்கும்.
இந்தியா சுதந்திரம் பெற்ற ஆரம்ப வருஷங்கள் அவை. அரசியல் நிர்ணய சபை என ஒன்று
அமைந்து இந்தியாவுக்கான அடிப்படையான அரசியல் நிர்ணய சட்டம் உருவாகிக்கொண்டிருந்த
காலம். அப்போது, பெரும்பான்மையான மக்கள் கல்வியற்றவர்களாக இருக்கும் நிலையில், வயது
வந்தவர்களுக்கெல்லாம் வாக்குரிமை என்பதும் கட்சி சார்ந்த அரசியலும் அபாயங்கள்
நிறைந்தது என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். பண பலம் கொண்டவர்களால் தேர்தல்கள்
துஷ்பிரயோகத்திற்கு இரையாகும், கட்சிகளையும் அவர்கள் தம் வசப் படுத்தக் கூடும்
என்று அவர் எச்சரித்தார். ஒரு மத பீடாதிபதி அரசியல் விவகாரங்களில் தலையிடலாமா, இது
ஜனநாயகத்திற்கு எதிரான குரல் அல்லவா, இப்படியெல்லாம் பேசுவது பிற்போக்கு வாதமல்லவா
என்று பலர் அந்நாட்களில் கருதியிருக்கக்கூடும். கட்சி சார்ந்த அரசியலும்
ஜனநாயகமும், கட்சித் தாவல்களால், 'ஆயாராம் கயாராம்' களால் நாசமடையக்கூடும், கொடும்
குற்றவாளிகள் மந்திரிகளாவார்கள், நீதி மன்றங்கள் மந்திரிகளின் லஞ்ச ஒழுங்கீனங்கள்
பற்றி பேசுவது, நீதிமன்றங்களே தம் எல்லை மீறும் செயலாகும் என்று குற்றம்
சாட்டுவார்கள் என்று நமக்கு இன்று தெரிவதைத்தான் அன்று பரமாச்சாரியார் சொன்னார்
என்று நம்மில் இப்போது சொல்லலாம். ஆனால், 1948-1951-ல் யார் சொல்லக்கூடும்?. அன்று
அவர் பிற்போக்கு வாதியாக, அனாவசியமாக அரசியலில் ஒரு மதத் தலைவர் தலையிடுவதாகத் தான்
குற்றம் சாட்டப்ப்டிடிருப்பார். ஆனால் யார் சொன்னது சரி என்று நிரூபணம்
ஆகியுள்ளது?. பரமாச்சாரியாரா, அல்லது நம் அரசியல் வாதிகளா?
சாதி பற்றியும், பெண்கள் பற்றியும் அவரது கருத்துக்கள் பழமை சார்ந்தவை, இறுகியவை
என்பது உண்மைதான். அவர் அதில் சமரசத்திற்கு வழியே வைப்பதில்லை. இப்பழம்
சம்பிரதாயங்களையும் மரபுகளையும் சார்ந்து பேசும் சமயங்களில் அவர் மனிதாபிமானமோ
இரக்க குணமோ அற்றவராகப் பேசுவதில்லை. இந்நேரங்களில் ஒரு பிற்போக்கு மனம் கொண்ட,
உணர்ச்சியற்ற பழமைவாதியாக அவர் நம் முன் காட்சியளிப்பதில்லை. பல நேரங்களில் ஒரு மத
குருவாக, ஒரு மடத்தின் தலைவராக தான் பல கட்டுப்பாடுகளுக்குள்ளேயே இயங்கவேண்டிய
பொறுப்புக்களைப் பற்றிப் பேசுவார். ஆதி சங்கரர் காலத்திலிருந்து தொடரும்
சம்பிரதாயங்களை, மடத்தின் சம்பிரதாயங்களைத் தான் காக்கும் பொறுப்புகளைப் பற்றி தான்
அவற்றை மீறி எதுவும் செய்யவியலாது என்றும் சொல்வார்.
அவர் வழிகாட்டலை எதிர்நோக்கும், அவருடைய உபதேசங்களை ஆவலுடன் கேட்கும் பக்தர்களுக்கு
அவர் ஜகத் குரு. தெய்வாம்சம் பொருந்தியவர். சிவனின் மறு அவதாரமே தான் அவர். ஆனால்
பரமாச்சாரியார் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பது சுவாரஸ்யமானது.
"ஒரு தேசத்தின் பண்பாட்டு வளத்தை எப்படி கண்டறிவது? ஒரு தேசத்தின் கவிஞர்களின்
குரலில் தான் அத் தேசத்தின் ஹிருதயம் நம்மிடம் பேசுகிறது. மதத்தலைவர்களின்
கருத்துக்களுக்கு ஒரு முக்கிய இடம் உண்டுதான். ஆனால், ஒரு மதத்தின் தலைமை தன்
மதத்தின் சிறப்புக்களையும் பெருமையையும் நிலை நாட்ட, மற்ற மதங்களின்
நம்பிக்கைகளையும் சாஸ்திரங்களையும் மட்டமாகப் பேசி இழிவு படுத்துவார்கள். ஆனால் ஒரு
சிருஷ்டிகரமான கலைஞனுக்கு இம்மாதிரியான நோக்கங்கள் இருப்பதில்லை. கலைஞன்
பாரபக்ஷமற்றவன். அவன் தனக்கு எது அழகாகத் தோன்றுகிறதோ, உண்மையெனத் தோன்றுகிறதோ
அதைச் சொல்வதற்கு அவன் சுதந்திரம் பெற்றவன்."
(மேற்கண்ட வரிகள் நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைத்துக்கொண்டவை. இதன் தமிழ்
தமிழ் மூலம் உடனடியாகக் கிடைக்காததால், என் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து திரும்ப
தமிழுக்கு மொழிபெயர்த்துக் கொண்டேன். கருத்து அதே தான் வார்த்தைகள் தான்
என்னுடையவை)
ஆதி சங்கராச்சாரியார் எட்டாம் நூற்றாண்டில் ஸ்தாபித்து விட்டுச் சென்ற
காலத்திலிருந்து இன்று வரை அந்த மடங்களில் இவ்வளவு நீண்ட கால நீட்சியில் எத்தனையோ
சங்கராச்சாரியார்கள் பீடாதிபதிகளாக இருந்திருக்கிறார்கள். ஆனால், காலடியிலிருந்து
வந்த எட்டாம் நூற்றாண்டு ஆதி சங்கராச்சாரியாரைத் தவிர வேறு எவரும் நாம் இன்று
நினைவு கொள்ளும் தடயங்களை விட்டுச் செல்லவில்லை. சந்திரசேகரானந்த சரஸ்வதி காஞ்சி
சங்கர மடத்தின் சங்கராச்சாரியாரக இருந்த செய்தி மறக்கப்படலாம். ஒரு வரலாற்றுத்
தகவலாக அது குறுகி விடலாம். அது தற்செயலான ஒரு இடை நிகழ்வு தான். ஆனால்
சந்திரசேகரானந்த சரஸ்வதி ஒரு மகான். ஒரு உன்னத நிகழ்வு. அவர் பிறந்த பதினொன்பதாம்
நூற்றாண்டின் பின் பாதி இந்த நாட்டிற்கு விவேகானந்தர், ராமகிருஷ்ண பரம ஹம்ஸர்,
வள்ளலார், மகாத்மா காந்தி, தயானந்த சரஸ்வதி போன்ற பல ஞானிகளை, மகா மனிதர்களைத்
தந்திருக்கிறது. பரமாச்சாரியார் இந்த மகா புருஷர்களில் ஒருவர். ஒரு மடத்திற்குத்
தலைமை வகித்த இன்னுமொரு சங்கராச்சாரியார் அல்லர்.
வெங்கட் சாமிநாதன்/22.12.06
vswaminathan.venkat@gmail.com
|