பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
கடன் தருவோம்! |
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
மணமக்கள்! |
|
தமிழர் சரித்திரம்
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
Download Tamil Font
|
|
|
இலக்கியம் / கலை! |
தில்லியில் ஒரு நாடக விழா!
- வெங்கட் சாமிநாதன் -
Mahindra's
Excellence in Theatre Awards சுருக்கமாக (META) மெடா வுக்கான தேர்வுகள் நடத்த
விருப்பதாகவும் அதையொட்டி இந்தியாவின் எல்லா பிராந்தீயங்களிலிருந்தும்
மொழிகளிலிருந்தும் வரவிருக்கும் நாடகங்களிலிருந்து கடைசிப் பரிசுப் போட்டிக்கு
பத்து நாடகங்களைத் தேர்ந்தெடுக்கும் முதல் கட்ட தேர்வுக் குழுவில் நீங்கள் பங்கு
பெறவேண்டும் என்ற அழைப்பு மின்னஞ்சலாக வந்த போதுதான் இப்படி ஒரு அகில இந்திய நாடகப்
போட்டியும் தேர்வும் நடக்கிறது என்று எனக்குத் தெரிய வந்தது. 2007-ம் வருடம் நடக்க
விருந்த இந்தப் போட்டி இரண்டாவதாகும்.
இந்த மெடா ஒன்று மட்டுமே இவர்களது செயல்பாடாக இருக்கவில்லை என்று பின்னர் தெரிந்து
கொண்டேன். Teamwork என்ற அமைப்பின் கீழ் இந்த மெடா மட்டுமல்ல, இது போன்று பல
விழாக்கள் உலகம் முழுதும் இவர்கள் நடத்திவருகிறார்கள். ஜெய்பூர், எடின்பரோ,
ஹாங்காங், லண்டன், மாட்ரிட், வாஷிங்டன், நியூயார்க், மெல்போர்ன் என்று 13 இடங்களில்
விழக்கள் நடத்திவருகிறார்கள் மெல்போர்னில் 2006 வருட காமன்வெல்த் விளையாட்டுக்களை
ஒட்டி நடந்த ஆசிய ·பில்ம் விழா உட்பட. இவர்களின் செயல்பாடுகள் இன்னும் பல கலைத்
துறைகளில் விரிகின்றன என்று நான் அங்கு தேர்வுக்குழுவில் பங்கு பெறச் சென்றபின்
அறிந்து கொண்டேன்.
போன வருடம் இது மிக சிறப்பாக பெரும் வரவேற்போடு நடந்ததாக மெடா பொறுப்பாளர்கள்
சொல்லி எனக்குத் தெரிந்தது. போன வருடம் நடந்த விழாவுக்கான தேர்வில் பரிசுக்கான
நாடகங்களைத் தேர்வு செய்தவர்கள், இலா அருண், எம்.கே.ரைனா, ஷாபனா ஆஜ்மி,
எம்.எஸ்.சத்யூ, ஷ்யாமானந்த ஜலான், ஸா·பர் ஹாய் ஆகியோர். இவர்களில் ஸா·பர் ஹாய் தான்
புதியவர், யார் என்று தெரியவில்லை. இலா அருண் பாடகி. ஷ்யாமானந்த ஜலான் கல்கத்தாவில்
ஹிந்தி நாடகங்கள் நடத்துபவர். தேர்ந்தெடுக்கப்படும் நாடகத்திற்கு ரூபாய் ஒரு
லக்ஷமும், சிறந்த நாடகப் பிரதிக்கு ருபாய் 75,000 மும் பரிசு என்று சொன்னார்கள்.
இம்முறை, சிறந்த நாடகம் சிறந்த நாடகப் பிரதி எவை எனத் தேர்ந்தெடுக்கும் கடைசி கட்ட
தேர்வுக் குழுவில், ஷ்யாம் பெனெகல், ஜாய் மைக்கேல் (தில்லியில் ஆரம்ப
காலத்திலிருந்து ஆங்கிலத் தில் நாடகங்கள் மேடையேற்றியவர்யவராக எனக்குத் தெரியும்),
அனீதா ரத்னம், இவர் டிவிஎஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர், சென்னையில் சமீப காலமாக the
Other Festival-ஐ மிகச் சிறப்பாக நடத்தி வருபவர், நாட்டிய கலைஞர், மிக முக்கியமாக,
இவரது ஆதரவில் தான் செ. ராமானுஜம் மூலம் திருக்குறுங்குடி ஆலயத்தில் கைசிகி நாடகம்
திரும்ப புனர் ஜீவிதம் பெற்று வருகிறது), அமோல் பலேகர், மகேஷ் எல்குஞ்ச்வர் ஆகியோர்
உள்ளனர் என்று தெரிந்து கொண்டேன்.
இவ்வளவு பரந்த அளவில் தேர்வும், இவ்வளவு பெரிய பரிசுத் தொகையும் நாடகத்திற்கென்று
வேறு எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் இவ்வளவு பெரிய மெடா
பரிசு பற்றி போன வருடமோ, இந்த வருடம் நடக்கவிருப்பது பற்றியோ ஏதும் செய்தி என்
காதுகளுக்கு எட்டவில்லை. பரிதாபமாகச் சீரழியும் நம் சாகித்திய அகாடமி தமிழ் பரிசு
பற்றியும், கோவில் சுண்டல் மாதிரி வினியோகிக்கப் படும் கலைமாமணி விருதுகள்
பற்றியும் நடக்கும் கொண்டாட்டங்கள், களேபரங்களை எண்ணிப் பார்த்துக் கொண்டேன். இந்த
விவரங்களையெல்லாம், இவர்கள் தேர்வுக்குழுவில் நான் பங்கு கொள்ள சம்மதம் கேட்டு மெடா
என்னைத் தொடர்பு கொண்டபோது நான் அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொண்ட செய்திகள். வேறு
எங்கும் எந்த தகவல் சாதனத்திலும் கிடைக்காத செய்திகள். ஒரு பெரும் வர்த்தக நிறுவனம்
நிறைய பணத்தைக் கொட்டி ஆர்வத்துடன் ஒர் ஒழுங்கு முறையோடு தேர்வு செய்து கொடுக்கும்
பரிசு பற்றி எந்த செய்தியும் பரவலாக தெரியவில்லை. ஆச்சரியமாகத் தான் இருந்தது.
இருந்தாலும், என் நடமாட்டங்கள் எவ்வளவு குறைபட்டிருந்தாலும், தில்லி யாயிற்றே,
நாடகங்களாயிற்றே, சம்மதம் தெரிவித்தேன்.
என்னோடு
இன்னும் நால்வர் தேர்வுக் குழுவில் இருந்தார்கள். டாக்டர் ஜெய்தேவ் தனேஜா, தில்லி
பல்கலைக்கழக பேராசிரியர், ஓய்வு பெற்றவர், நாடகங்கள் பற்றி நிறைய புத்தகங்கள்
எழுதியுள்ளவர், அனுஜா சர்மா, பஞ்சாபிப் பெண், ஆனால், பங்களூராவில் வசிப்பவர், ஆர்ட்
டைரக்டர், நாடக விமர்சகர். தீபா கெஹ்லோட், மும்பை வாசி, நாடகம், சினிமா என்று பல
முனைகளில் ஈடுபாடு கொண்டவர். பின்னர் ஐந்தாவதாக இருந்திருக்க வேண்டியவர்,
பேராசிரியர் ஆனந்த் லால், கல்கத்தா வாசி. Oxford Book of Theatre Companion-ன்
தொகுப்பாசிரியாக அவர் எனக்கு எற்கனவே அறிமுகமானவர். ஆனால் அவர் பங்கு கொள்ளவில்லை.
தான் சம்பந்தப்பட்ட நாடகம் ஒன்று தேர்வுக்கு வருவதால், தான் தேர்வுக்குழுவில் பங்கு
கொள்வது முறையல்ல என்று ஒதுங்கிக் கொண்டவர். இன்றைய நம் தமிழ்ப் பண்பாட்டுக்கு
முற்றிலும் எதிராகச் செயல் பட்டுள்ளார் இந்த பேராசிரியர். எந்தத் தமிழ்
பேராசிரியர், இலக்கியவாதி இப்படி ஒரு காரணத்தைச் சொல்லி கிடைத்த வாய்ப்பை உதறுவார்?
சாகித்திய அகாடமியின் முதல் தமிழ் பரிசை, தமிழ் ஆலோசனைக் குழுவின் தலைவர், டாக்டர்
ரா.பி. சேதுப்பிள்ளைக்கே அவரது பாரதி இன்கவித் திரட்டு க்குத் தரப்பட்டது எத்தனை
பேருக்கு நினைவிருக்கிறதோ என்னவோ. தமிழ் பரிசின் முதல் பிள்ளையார் சுழியே
இப்படித்தான் சுழிக்கப்பட்டது. ஏனெனில் இது சேதுப்பிள்ளை அவர்களோடு நிற்கவில்லை.
அதன் பிறகு அவரது வழித்தடத்திலேயே பின் வந்த சாகித்ய அகாடமியின் ஆலோசனிக் குழு
உறுப்பினர்களே முறை வைத்து பரிசை தாமே வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். ஆக அதன்
இன்று வரைய ஜாதக விசேஷங்கள் எல்லொருக்கும் தெரியும்.
சமரசம் எதற்கும் ஒத்து வராதவன், பிடிவாதக் காரன் என்றே அந்த நிறுவனத்திற்கு
முன்னதாகவே நான் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தேன். அந்த நிறுவனம் இதை எப்படி
அர்த்தப்படுத்திக்கொண்டதோ, அல்லது முதல் கட்டத் தேர்வுக் குழுவின் சகாக்களும் தான்
இதற்கு என்ன பொருள் கொண்டனரோ நான் அறியேன். தமிழ் நாட்டில் இந்த மாதிரி
அறிமுகப்படுத்தப்படும் ஆளுக்கு எந்த இடத்திலும் நிராகரிப்பே முன் நிற்கும். நமக்கு
அடி பணியாதவன் என்ற காரணத்திற்காகத் தான் நிராகரிப்பு என்பது சொல்லப்படாது,
'மேட்டுக்குடி மனப்பான்மை', 'பார்ப்பனீய சிந்தனை' என்று இப்படி தயாராக இருக்கும்
லேபிள்களில் ஒன்றிரண்டு வீசப்படும். முடிந்தது கதை; பின் நிராகரிப்பிற்கான
காரணங்களோ வாதங்களோ தேவையே இல்லை. இது தமிழ்ப் பண்பு. மரபாகிவிட்ட, வேரூன்றிய
தமிழ்ப் பண்பு.
ஆனால் தேர்வுக்குழுவில் நான் சந்தித்த சகாக்களும் சரி, ஆறு நாட்கள் காலை 10
மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை தொடர்ந்து நாடகங்களைப் பரிசீலிப்பதும்,
விவாதிப்பதுமாகக் கடந்த நேரங்கள், ஒவ்வொரு கணமும் நட்புணர்வுடனும், சீரிய கருத்துப்
பரிமாறல்களும், அனுபவ பரிவர்த்தனைகளும் நிறைந்த கணங்கள். சில சமயம் அவர்கள் என்னைக்
கேட்ட கேள்விகள் என்னைத் தலை குனிய வைத்தன. என்ன பதில் சொல்வதென்று எனக்குத்
தெரியவில்லை. "ஆமாம், இதென்ன மேடையில் மைக்? மைக் இல்லாமல் பேசமுடியாதா உங்களுக்கு?
எல்லோரும் மைக் இருக்கும் இடத்திற்கு நகர்ந்து சபையைப் பார்த்து உரக்கப்
பேசுவானேன்?" இதற்கு நான் என்ன பதில் சொல்லட்டும்? அபத்தமும் அசட்டுத் தனமுமான ஒரு
வழக்கத்தை நான் எப்படி ஆதரித்து பேசமுடியும்! 1961 லிருந்து நான் வட நாட்டு
நகரங்களில் நாடகங்கள் பார்த்து வருகிறேன். நம் அரும் பெரும் தமிழ் நாட்டைத் தவிர
இந்த உயரிய உத்தியும் பாரம்பரியமும் வேறு எங்கும் காணக்கிடைக்காது. எவ்வளவு காலம்
பின்னோக்கிப் போகமுடியும் என்று பார்த்தால், தில்லி AIFACS ஹாலில், பஹ¤ரூபி யின்
புதூல் கேலா (இப்சனின் 'Doll's House') நினைவுக்கு வருகிறது. சம்பு மித்ராவும்
த்ருப்தி மித்ராவும் விளையாட்டும் சீண்டலுமாக அன்னியோன்னிய தம்பதிகளாக காணும்
காட்சி. அவர்கள் யதார்த்த வாழ்வின் மேலெழாத குரலிலேயே அவர்கள் பேச்சு இருக்கும்.
மேடையின் குரல் அல்ல. வீட்டினுள் கேட்கப்படும் அடங்கிய குரல். அது பால்கனியில்
இருக்கும் எனக்குத் தெளிவாகக் கேட்கும். மைக் இல்லை. யாரிடம் சொல்வது? யார்
கேட்பார்கள்? 40-50 வருடங்களாக இதே கண்றாவிக் கூத்து தொடர்கிறது, எனக்குத்
தெரிந்து. "எனக்குப் புரியாத விஷயங்களில் இது ஒன்று" என்று சொல்லிச் சிரித்தால்
அவர்களும் சேர்ந்து சிரிப்பதோடு பிரச்னை தீர்கிறது.
எதற்காகச் சொல்கிறேன் என்றால், நாங்கள் எல்லோரும் ஒரு அடிப்படையான ரசனை என்ற
தளத்தில் கலை உணர்வு என்ற தளத்தில், ஒன்று பட்டவர்களாக இருந்தோம். நாடக பூர்வமான
விவாதங்கள் கருத்தொற்றுமை சாத்தியமாயிற்று. கருத்து வேறு பட்ட இடங்களில்,
அப்படிப்பட்ட இடங்கள் இருந்தன தான், மூன்று பேருக்கு நாலாமவர் விட்டுக் கொடுத்தல்
இயல்பாயிற்று, ஏனெனில் அவை சின்ன விவரங்களைச் சார்ந்தனவாக இருந்தன.
நல்ல அனுபவம் தந்த மகிழ்ச்சிகரமான நாட்கள். சுமார் 70 நாடகங்கள் பார்வைக்கு
வந்திருந்தன. என் கணக்கு கொஞ்சம் குறைவாக இருக்கலாம். கிட்டத்தட்ட எண்பது என்றும்
சொல்லப்பட்டது.
வெகு சுலபமாக ஏக மனதாக ஒதுக்கப்பட்ட நாடகங்கள் நிறையவே இருந்தன. எந்த அபத்தத்தையும்
வைத்துக் கொண்டு வீம்புக்குச் செய்யப்பட்ட விவாதங்கள் ஏதும் இருக்கவில்லை. நம்மவர்
களுக்கு கேட்க ஆச்சரியமாக இருக்கும். தமிழ் நாட்டு நிலைக்கு மாறாக, கன்னடத்திலும்,
வங்காளியிலும் ஒரு வளமான நாடக இயக்கம் இருந்து வருகிறது. தமிழை விட மலையாளத்தில்
பாரம்பரிய நாடக மரபுகள் இன்றும் காப்பாற்றப்பட்டு வருகின்றன. ஆயினும், இந்த
மொழிகளிலிருந்து போட்டிக்குத் தகுதியான நாடகங்கள் வரவில்லை. என் ஞாபகத்தில் நின்ற
ஒரு நல்ல நாடகம், மாக்பெத் மலையாளத்தில். ஆனால் இறுதித் தேர்வில் அது பின்
தங்கிவிட்டது. வேடிக்கையாக இருக்கும். வங்காள நாடகம் ஒன்று எங்கள் பார்வைக்காக
மாத்திரம் என்று, அது வெகு தாமதமாக, நாங்கள் பரிசீலணையில் ஈடுபட்டிருக்கும்போது
வந்தது, 'தண்ணீர், தண்ணீர்' வங்காள மொழியில். மிக முக்கியமான, மக்களின் உயிராதாரமான
பிரச்சினை பற்றியது, அரசியல் வாதிகளின் சுரணையற்ற பந்தாட்டத்தில் நீடித்து
ஜீவிக்கும் பிரசினை தான். ஆனால் நாடகமாக, பின்னர் சினிமாவாக அது என்னை கவரவில்லை.
அதிலும் சினிமாவில் அது படு மோசம். ஏதோ பரிசெல்லாம் பெற்றது தான். இயக்குனர்
திலகத்தின் கைவரிசை தான். ஆனால் வங்காளியில் அது மொழிபெயர்க்கப்பட்டு
மேடையேற்றப்படுவதன் உந்துதல் என்னவாக இருக்கும்! வங்காளத்தில் ஏது தண்ணீர் பஞ்சம்.
அங்கு வெள்ளம் தான் மக்களின் பகைவன். அது எத்த்தகைய பாதிப்பை வங்காளிகளுக்குத்
தரும்? ஆனால், ஆச்சரியம் எனக்கு அவர்கள் மேடையேற்றம் பிடித்திருந்தது. மிக
உருக்கமான சித்தரிப்பு, மிக எளிமையான உயிரோட்டம் மிகுந்த மேடையேற்றம். மக்கள்
கூட்டம் கூட்டமாக மேடையில் தோன்றும் போது அது எவ்வளவு நம்பகமாக, லாவகமாக
கையாளப்பட்டிருந்தது. நான் சொன்னேன். "வங்காளிகளுக்கு தண்ணீர் பஞ்சம் பற்றி எவ்வளவு
அனுபவம் இருக்குமோ தெரியாது. ஆனாலும், இதை எங்கள் தமிழ் நாடக சினிமா அசல்களைவிட பல
மடங்கு உயர்வாக நான் மதிக்கிறேன். வங்காளிகளுக்கு இத்தகைய பிரசினைகளை கையாள்வதிலும்
மேடையேற்றத்திலும் ஒரு நீண்ட மரபு IPTA (Indian Peoples' Theatre Association)
காலத்திலிருந்து உண்டு. அது அவர்களுக்கு கை கொடுத்திருக்கிறது." என்றேன். "ஆமாம்
நொபன்னா விலிருந்து " என்றார் டாக்டர் தனேஜா. அவர் விஷயம் அறிந்தவர். ரசனையும்
கொண்டவர். உடனே புரிந்து விட்டது.
நாம்
அறிந்த, ஹிந்து வில் சங்கீதம் பற்றியும், சர்வதேச சினிமா, இலக்கியம் பற்றி எழுதும்
கௌரி ராம் நாராயணின் ஆங்கில நாடகம் Dark Horse போட்டியிலிருந்தது. இது முன்னரே போன
வருடம் தேசீய நாடகப் பள்ளி நடத்திய ரங்க் மஹோத்சவத்தில் பங்கு கொண்டு அது பற்றி
நான் எழுதியிருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் காலமான அருண் கொலாட்கர் என்ற
மராத்தியிலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதியவர் பற்றி தான் முன்னர் பேட்டி
கண்டபோது பதிவு செய்திருந்த குறிப்புகளைக் கொண்டு திரும்ப கவிஞரையும் அவர்
உலகையும், அவர் உலகை உருவாக்கிய மராட்டி சரித்திரத்தையும் அனுபவங்களியும் நினைவு
கூறும் சித்திரம் ஒன்று. சத்யஜித் ரே, ம்ருணால் சென் படங்களில் நடித்திருந்த
த்ரித்திமான் சட்டர்ஜி அருண் கொலாட்கராக நடித்திருந்தார். அவர் உருவாக்கித் தந்த
கொலாட்கர் சித்திரமும், சவிதா நரசிம்ஹன் பாடும், மீரா, துக்காராம் பாடல்களும்,
அனுபவிக்க வேண்டிய விஷயங்கள். கடைசித் தேர்வில், இந்த நாடகம் சிறந்த ஒலிப்
பதிவுக்கான பரிசைப் பெற்றது. கௌரி ராம் நாராயண் தேர்வுக் குழுவினரால் சிறப்பாகக்
குறிப்பிடப்படும் (Special Mention) கௌரவத்தையும் பெற்றார்.
ஆச்சரியத்திலும்
ஆச்சரியம், தென் பிராந்தியத்திலேயே எது மிக மோசமான நாடகப் பங்களிப்பைத் தருகிறது
என்று நான் கருதுகிறேனோ அந்த பிராந்தீயத்திலிருந்துதான் இரண்டு நாடகங்கள் சிபாரிசு
பெற்றன. ஒன்று கௌரி ராம்நாராயணனது ஆங்கிலமாகப் போயிற்று. அடுத்தது, புதுச் சேரி
ஆறுமுகத்தின் பேய்த் தேர். மறுபடியும் ஆறுமுகம் தத்துவ விசாரங்களிலும் வான
சாஸ்திரத்திலும் தனக்குள்ள ஈடுப்பாட்டைத் தான் நாடகமாக்கினார். கருஞ்சுழிக்குப்
பிறகு மறுபடியும் தத்துவ விசாரம். மாணிக்க வாசகர் குரல் மறுபடியும் கேட்டது. ஒரு
நீண்ட கவிதையையே தன் நாடகத்திற்கான பின் குரலாக்கினார். அது எவ்வளவு பேருக்கு
புரியுமோ, நான் எவ்வளவு புரியவைக்க முடியும் என்ற என் கவலைகளுக்கு இடம் வைக்காமல்,
மேடையில் இடை விடாது நீண்ட நேரம் சுழலும் கோளங்கள், உருவாகி, ஒன்று பலவாகி, பின்
மறையும் கோளங்கள் தேர்வுக்குழுவின் அங்கீரத்தை விவாதத்திற்கு இடமின்றி பெற வைத்தது.
ஆறுமுகத்தின் தத்துவ விசாரமும், அதனால் தூண்டப்பட்ட டாக்டர் ரவீந்திரனின் ஓளி
ஜாலங்களும் கடைசித் தேர்வுக்கு பேய்த்தேர் நாடகத்தை இட்டுச் சென்றன. நான்கு
மொழிகளைக் கொண்ட தென் பிராந்தியத்திலிருந்து கடைசிப் போட்டிக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தமிழ் நாடகம், பேய்த்தேர் தான். தமிழை விட கன்னடமும்
மலையாளமும் இன்று நாடகத் துறையில் முன்னிற்கின்றன. இருப்பினும் பேய்த்தேர் தான்
கடைசிப் போட்டிக்குத் தேர்வு பெற்று விழாவில் பங்கு பெற தில்லி சென்றதென்றால் அது
முனைவர்கள் ஆறுமுகத்திற்கும் ரவீந்திரனுக்கும் பெருமை தான். அதற்கும் மேல் செல்ல
முடியாது போனதற்கு அதிகம் வருந்த வேண்டியதில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.
அடுத்து
என்னை மிகவும் கவர்ந்த எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்த
செகாவ் கி துனியா (செகாவின் உலகம்) என்னும் ஆறு செகாவ் கதைகள் நாடகமாக்கப்பட்டதைச்
சொல்லவேண்டும். எனக்கு பல ஆச்சரியங்கள் இதில் மிகச் சிறந்த நடிப்புத் திறன்களை
இதில் பார்க்க முடிந்தது. முதலாவதாக அமிதாப் ஸ்ரீவாஸ்தவா. இவர் தேசீய
நாடகப்பள்ளியின் நடிப்புக்கலை மாணவர் தான் என்றாலும் அவர் நடித்து என் மனத்தில்
பதிந்த நாடகம் எதுவும் இல்லை. ப்ரெக்டின் நாடகம் ஒன்றிற்காக, அர்த்துரோ உரியின்
எழுச்சியும் வீழ்ச்சியும் - ஹிட்லரைக் கேலி செய்யும் நாடகம் - அதை மேடையேற்றியவர்
நம்மூர் நவாப் ராஜமாணிக்கம் ஸ்டைலில் (ஸ்ரீ விஷ்ணு திருப்பாற்கடலில்
எழுந்தருளுவார். அவன் தலைக்குப்பின் மின் விளக்கு சுழலும் ஆதிசேசன் மடியில்
படுத்தவாறு மேடையின் கீழிலிருந்து அவர் மேலெழுவார்). ஒரு ட்ராக்டரையே மேடைக்கு
கொணர்ந்தவர். தமாஷாக இருக்கும். ஆனால் இந்த செகாவ் கதைத் தொகுப்பில் பல கதைகளில் பல
வேடங்களில் வருவார். அவர் நடிப்பு பிரமிக்க வைத்தது. அதை நினைத்து நினைத்து
சந்தோஷப்படுகிறேன். ஒரு கதையில் பாங்கின் அதிகாரி அவர். ஒரு முதிய ஸ்திரி தன்
துக்கத்தையெல்லாம் அவரிடம் சொல்லி நச்செரிப்பாள். அவள் மனம் பேதலித்தவள். இவள்
நச்செரிப்பு தொடரும். அவர் பாங்கு இதில் அவளுக்கு உதவ முடியாது என்பதைப் புரிய
வைக்க படாத பாடு படுவார். இரண்டு பேரின் நடிப்பும் அரங்கத்தையே ஆட வைத்து விட்டது.
அந்த பைத்தியக்கார ஸ்திரீ யாக நடித்த நூதன் சூர்யா தேசிய நாடகப் பள்ளியில்
பயின்றவர் தான், முப்பது வருடங்களுக்கு முன். சிறந்த துணை நடிகை என பரிசு
பெற்றதும், உணர்ச்சி வசப்பட்டு அழுகையின் முனைக்கு வந்து விட்டார். இத்தகைய
நடிப்புத் திறன் பெற்றவர்கள் எல்லாம் எங்கோ மூலையில் ஒதுக்கப்பட்டு விடுகிறார்கள்.
எல்லாம் வேடிக்கையான கதைகள் மிகச் சிறப்பாக நடிக்கப்பட்டன. ஒரு தந்தை தன் மகனின்
தன் வாலிபப்பருவத்தை உணரச் செய்ய ஒரு தாசியின் துணையை நாடுகிறார். கடைசியில் மகன்
இன்னும் வாலிபனாகாது தன் அசட்டு வட்டத்திலேயே இருந்து விடுகிறான். இப்போது ஓய்வு
பெற்றிருக்கும் கடற்படை வீரன் ஒருவன், பிழைப்புக்காக வருவோர் போவோரிடம் பணம்
கொடுத்தால் கடலில் மூழ்கிக் காட்டுவதாகச் சொல்கிறான். இன்னொரு கதையில் ஒரு கணவனையே
தூதனாக்கி அவன் மனைவியைக் கவரும் தன் தொழில் சாமர்த்தியத்தைக் காட்டுகிறான். இப்படி
எல்லாம் தமாஷான கதைகள் மிகச்சிறப்பாக நாடகமாக்கப்பட்டு நடிக்கப்பட்டு விடுகின்றன.
இப்சனின் பீர் கிண்ட் அதன் நாடக மேடை சலனங்களுக்காகவும், ஒரு கால கட்ட உடை
அலங்காரத் தயாரிப்புக்காகவும் நல்ல முயற்சியாகப் பட்டது. ஆனால், அது நாடகமாக்கலில்
அனாவசியமாக வளவளவென வளர்த்தப்பட்டது. ஒரு அளவுக்கு நல்ல நடிப்பு என்று தோன்றியது
கூட அலுக்க வைத்துவிடுகிறது. சொல்வதற்கு முன்னெடுத்துச் செல்வதற்கு ஏதும் இல்லை
யெனில்.
வினோதினி
(1863-1941) 19-ம் நூற்றாண்டில் கிரீஷ் சந்திர கோஷ் வங்க நாடகத்திற்கு புத்துயிர்
கொடுத்து அதற்கு ஒரு வளமான சரித்திரம் படைத்துக் கொண்டிருந்த காலத்தில், கிரீஷ்
சந்திர கோஷின் தூண்டுதலாலும் தந்த ஆதரவினாலும் வங்க நாடக மேடைக்கு வந்த ஒரு நடிகை.
அதற்கு முன் அவர் வறுமையின் காரணமாக சமூக பெருந்தனக்காரர்களுக்கு வைப்பாட்டியாக
இருந்தவர். தன் வறுமையிலிருந்து மீள தாசியாகிப் போன அவமானத்திலிருந்து மீள, தன்
திறமைகளைக் கொண்டு கௌரவமும் புகழும் தரும் நாடக மேடைக்கு வந்த பிறகும்,
எதிலிருந்தும் முழுதும் மீளும் வகை காணாது அல்லாடிய துயரமும், புகழும் அவமானமும்
மிக்க வாழ்க்கையை தன் வயோதிகத்தில் திரும்பிப் பார்க்கிறார் வினோதினி. அவரது நீண்ட
துயரமும் அவலமும் மிக்க வாழ்க்கையின் பல கட்டங்களையும் மன நிலைகளையும் பிரதிநித்வப்
படுத்தும் ஐந்து வினோதினிகளை மேடையில் உலவ விடுகிறார்கள் நடி வினோதினி நாடகத்தை
உருவாக்கிய நாடகப் பிரதி ஆசிரியையும், இயக்குனர் அமால் அல்லானா வும். ஐந்து
வினோதினிகளும் பல நிலைகளைப் பிரதிபலித்தாலும், தன் கதையைச் சொல்லும், எழுதும்
வினோதினி தன் வயோதிகத்தில் தன் நினைவுகளைச் சொல்லும் வினோதினி. ஐவரும் ஐந்து மன
நிலைகளும் ஒருவருக்கொருவர் அளவளாவிக்கொள்கின்றனர், மோதிக் கொள்கின்றனர், நிறை
செய்துகொள்வதும் அவர்கள் தான். வினோதினியின் கலைத் திறனில் ஆர்வம் கொண்டு உற்சாகப்
படுத்தி ஆதரவாக இருந்தாலும், அவளது மனப் போராட்டங்களை அவளே தான்
தீர்த்துக்கொள்ளவேண்டும் என்கிறார். ஆண்களே பெண்வேடங்களைத் தரித்த கட்டத்திலிருந்து
பெண்கள் நாடக மேடை ஏற வழி அமைத்துக்கொடுத்த கட்டம் அது. 19- நூற்றாண்டு பிற்பகுதி.
அந்த காலத்தில் வினோதினி கதா நாயகியாக பங்கு கொண்ட நாடகங்களிலிருந்து அந்த ஆரம்ப
காலத்தில் வங்க நாடக மேடையின் நாடகங்களைப் பார்த்து அதன் ஈடுபாடுகளின் தரத்தை
அறியலாம்: பங்கிம் சந்திரரின் மிருணாலினி, மைக்கேல் மது சூதன் தத்தின் மேகநாத்
வதம், சைதன்ய லீலா முதலியவை அவற்றுள் அடங்கும். இது 19-ம் நூற்றாண்டு
மத்திமத்திலிருந்து கடைசிவரையான கால கட்டத்தில். அதற்கு பல தலைமுறைகள் பின்
தொடங்கும் நம் தமிழ் நாடகமும் தன் ஆரம்ப காலங்களில் எத்தகைய கதைகளை நாடகமாக்கியது
என்று நாம் சற்று யோசிக்கலாம். உடன் நினைவுக்கு வருவன சில மாதிரிக்கு: பவளக்கொடி,
நல்ல தங்காள், வள்ளி திருமணம், போன்றவை. அவை எதுவும் இலக்கிய அல்லது நாடக இலக்கிய
அந்தஸ்து பெறத் தக்கவை தானா என்றும் நாம் யோசிக்கலாம். இன்னும் ஒன்று. நடிகை
வினோதினியின் சிறப்பை பலர் சொல்லக்கேட்டு, ஸ்ரீ ராமக்ரிஷ்ண பரமஹம்ஸரே வினோதினியின்
நாடகம் பார்க்க வந்து, அவரைப் பாராட்டி ஆசீர்வதித்தார். இப்படி நாம் யாரையாவது
உயர்த்தியிருக்கிறோமா, அல்லது இந்த உயர்வுக்கு யாராவது தகுதியடைந்திருக்கிறார்களா
என்று நாம் யோசித்தேன். நம் வரலாறுகள் நம் சமூக மதிப்புகளால் வர்ணம் தீட்டப்பட்டவை.
எதை உண்மை என்று எடுத்துக்கொள்வது. அவர்கள் தான் தகுதியற்றவர்களா அல்லது நாம்
அவர்களை தகுதியற்றவர்களாக உதறி எறிந்தோமா?
நாடகப் பிரதி, வினோதினியே தன் அந்திம காலத்தில் தன் வாழ்க்கைப் போராட்டங்களையும்
நினைவுகளையும் எழுதி வைத்துள்ள ஆமார் கொதா (என் கதை) வைத் தழுவி எழுதப்பட்டது.
இதற்கு முன் மராட்டிய நாடகத்திலிருந்தும் சினிமாவிலிருந்தும் தெரியப்பட்ட ஹம்ஸா
வாடேகர் என்ற நடிகையும் தன் வாழ்க்கைச் சரிதத்தை எழுதியிருக்கிறார். ஹம்சா
வாடேகரும் வினோதினி பட்ட அல்லல்களையே தன் வாழ்க்கையிலும் பட்டிருக்கிறார். அந்த
காலத்தில் எல்லோருக்கும் இதே கதி தான் போலும். அதைத் தான் ஷ்யாம் பெனெகல் பூமிகா
என்ற படத்தைத் தயாரித்திருக்கிறார். மராத்தியில் சுய சரிதம் ஒரு வளமான பகுதி.
நமக்கு சுயசரிதைகள் ஒத்து வருவதில்லை. அப்படி எழுதப்படுபவை மு. கருணாநிதியின்
'நெஞ்சுக்கு நீதி' ரகத்தில் தான் இருக்கும் பெரும்பாலும். சரி விஷயத்திற்கு
வருவோம்.
அமல் அல்லானா என்றாலே அந்தப் பெயர் எந்த நாடகத்திற்கும் அவர் தரும் பிரும்மாண்ட
தயாரிப்பை பிரகட னப் படுத்தும். மேடை முழுதிலுமே கண்ணாடி போன்ற பளபளத்துப்
பிரதிபலிக்கும் தளம் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. ஆடை அலங்காரங்களும் காலத்தைச்
சொல்லும். சில பாட்டுக்கள் பழங்காலத்துக்கு இட்டுச் சென்றன. நான் விரும்பியது,
19-ம் நூற்றாண்டின் இடைக்காலத்திய வங்க நாடக மேடையையும், வங்கத்தையும் நினைவு
படுத்தும் ஒரு தயாரிப்பை. அது எனக்குக் கிடைக்கவில்லை. அது அமல் அல்லானா போன்ற
செல்வாக்கு மிக்கவர்க்கு சாத்தியமே. ஆனால் அவர் தன் பிரும்மாண்ட கற்பனைகளைச்
செயல்படுத்தி பிரமிக்க வைக்க விரும்புவதாகத் தோன்றுகிறது. நம் தமிழ் சினிமாக்களில்
கிராமக்கதையாக இருந்தாலும், நடன காட்சிகளுக்கு ஆர்ட் டைரக்ஷன் என்று சொல்லிச்
செய்யும் 'அடி ஆத்தே என்னாமாத்தான் செஞ்சாங்களோ, என்னா செட்டு! என்னா செட்டு!'
சமாச்சாரமாகத் தான் எனக்குப் பட்டது. நடி வினோதினி சிறந்த உடை அலங்காரத்திற்கும்
சிறந்த ஓளி அமைப்பிற்குமான பரிசுகளையும், சிறந்த நடிப்பிற்கான பரிசுகளை ஐந்து
வினோதினிகளும் பெற்றார்கள்.
பலி ஔர் சம்பு (பலியும் சம்புவும்) என்ற நாடகம் மும்பையிலிருந்து வந்த ஹிந்தி
நாடகம். இரண்டு வயோதிகர்கள் ஒரு முதியவர் இல்லத்தில் தம் முதுமைக்காலத்தைக் கழிக்க
வந்தவர்களிடையே எழும் அன்றாட சிக்கல்கள் சின்னச் சின்ன சண்டைகள், இரண்டரை மணி நேரம்
எப்படிக் கழிந்ததென்றே தெரியாது நாடகத்தில் மனம் ஆழச் செய்யும் நடிப்பு. இருவர்
மோதலுக்கும் காரணம் ஒருவர் கடந்த காலத்தின் மகோன்னதம் கழிந்துவிட்டதன் ஆதங்கத்தைக்
கோபமாக வளர்த்துக் கொள்பவர். மற்றவர் இதற்கு நேர் எதிர். இருவருமே தனித்து இருக்க
வந்துவிட்டவர்கள். சுதீர் பாண்டே, குமுத் மிஸ்ரா இருவருமே நெடுங்காலமாக,
நாடகத்திலும், தொலைக்காட்சிகளிலும் நடித்து அனுபவம் மிக்கவர்கள். வெற்றுப்
பெருமையும், கிண்டலும், சீண்டலும், கோபமும், பின் சமாதானமுமாக மேடையில் ரகளை
செய்யும் சின்னச் சின்ன சம்பாஷணைகள். இதில் ஒருவருக்கு, சுதீர் பாண்டேக்கு அவரது
சிறந்த நடிப்பிற்கான பரிசைப் பெற்றார். தான் மிகுந்த பாசம் வைத்திருந்த பெண்ணை அவள்
காதல் கல்யாணத்திற்குப் பிறகு இழந்து விட்டவர். பெண் இறந்த துக்கம். தனித்து
விடப்பட்டவர் மரணத்துக்குப் பின்னும் ஏமாற்றப்படுபவார் என்பதை அவர் அறிய மாட்டார்.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு அசாம் படும் அவதி சொல்லிச் சாத்தியமில்லை.
வைஷ்ணவம் பரவலாக வேரூன்றிய மண் அது. அபலைகளான மக்களுக்கு ஆதரவளிக்கும் சாத்ராக்கள்.
பாரம்பரிய வழக்கங்கள் இன்னமும் தொடர்கின்றன. சிறு வயதில் கணவனை இழந்த துர்கா ஒரு
சாத்ராவில் தஞ்சமடைகிறாள். அந்த பிராமண விதவையின் ஆசைகள் இனி வெகு சிலவே. கணவனின்
அஸ்தியை கங்கையில் கரைக்கவேண்டும். தலையை மொட்டையடித்துக் கொள்ளவேண்டும். கணவன்
வீட்டார் அழைப்பை எதிர் பார்த்துக்கொண்டு சாத்ராவில் தன் நாட்களைக் கழிக்கிறாள்
துர்கா. சாத்ராவில் வாழும் இன்னொரு விதவை ஹோரு கோகானி. தன் கணவன் விட்டுப் போன
நிலத்தை பார்த்துக்கொள்ள அவள் நம்பியிருப்பவன் போதைக்கு ஆளானவன். ஹோருவை முடிந்த
அளவு ஏமாற்றுகிறவன்.
அது கம்யூனிஸ்டுகள் தலையெடுக்கும் காலம். சாத்ராவில் வாழும் பிராமண விதவைகளை
ஏமாற்றிப் பிழைப்பவர்களுக்கு உதவுவது சாஸ்திரங்கள். விதவைகளுக்கு சாஸ்திரங்களில்
பெரும் நம்பிக்கை.
மதிப்புகளும், சமூகமும் வெகு வேகமாக மாறிவரும் ஒரு கால கட்டத்தில், பழமையில்
நம்பிக்கை கொண்டு வாழும் சாதாரண எளிய மக்கள் தான் அவதிப் படுகிறார்கள். தர்மங்களில்
நம்பிக்கையற்றவர்கள் மாறி வரும் சமூகத்திலும் எப்படியோ பிழைத்து விடுகிறார்கள்.
தான் நடக்கும் மண் தன் காலடி பட்டு தீட்டுப் பட்டுவிடக்கூடாது என்று தன் பாதங்களில்
வெற்றிலை சுற்றிக் கட்டிக்கொண்டு நடக்கும் பிராமண விதவை, தன் லக்ஷ¢யமே கங்கை சென்று
கணவன் அஸ்தியைக் கரைத்து தலை மொட்டை அடித்துக் கொள்வது தான் என்று எண்ணும் ஒரு இளம்
பிராமண விதவை, மதிப்புகள் மாறி வரும் சமூகத்தில் எப்படி நிம்மதியாக தன்
வாழ்க்கையைக் கழிக்கமுடியும்? சாத்ராக்களும் அவர்களுக்கு பாதுகாப்பளிக்க
முடிவதில்லை.
மிகவும் மனதை நெகிழவைக்கும் இந்த அபேக்ஷா என்னும் நாடகத்தை எழுதியவரும்
இயக்குனருமான பஹரூல் இஸ்லாம் தேசீய நாடகப் பள்ளியின் பழம் மாணவர். இவர் நாடகப்
பயிற்சி நடத்திக் கொண்டிருக்கும் போதெல்லாம் தூரத்திலிருந்து தனிமையில் மௌனமாகப்
பார்த்துக்கொண்டிருந்த 'அம்மா' வின் தனிமை வாட்டும் சோகம்தான் இந்த நாடகத்திற்கு
வித்தும் கருவும் அளித்தது என்கிறார், பஹரூல் இஸ்லாம். 'அம்மா' என்று பஹரூல்
இஸ்லாம் குறிப்பிடுவது சாத்ரா ஒன்றில் அடைக்கலம் புகுந்த ஏதோ ஒரு பிராமண விதவையாகத்
தான் இருக்கும் என்று நான் ஊகித்துக் கொள்கிறேன். வைஷ்ணவமும் சாத்ராக்களும்
கொண்டுள்ள சம்பிரதாயங்களையும் மதிப்புகளையும் வாழ்முறைகளையும் இவ்வளவு பரிவோடும்
மனிதாபிமானத்தோடும் தன் நாடகத்தில் பதிவு செய்து அது மேடையேற்றவும் பஹ்ரூல்
இஸ்லாமுக்கு சாத்தியமாகியிருப்பது கண்டு மகிழ்ச்சியாக இருந்தது. மிக எளிய அதே சமயம்
மிக சக்தி வாய்ந்த மேடையேற்றம். துர்காவாக நடித்த பாகீரதியும், ஹோரு கோகர்ணியாக
நடித்த ·பெரோஸா பேகமும் மிக உருக்கமாக நடித்திருந்தனர். அவர்களில் ஒருவருக்கு
சிறந்த துணை நடிகைக்கான பரிசு கிடைத்தது.
காட்டன்
56, போலியெஸ்டர் 84 என்ற தலைப்பே வேடிக்கையாக இல்லியா? தலைப்பு தான் வேடிக்கை. இந்த
வேடிக்கைத் தலைப்புக் கொண்ட நாடகம் ஒரு மனித அவலம் பணப் பேராசை கொண்ட
முதலாளிகளாலும் அவர்களுக்குத் துணைபோகும் அரசியல் வாதிகளாலும் தொடர்ந்து நிகழ்த்தப்
படுவதைச் சொல்கிறது. பம்பாய் பஞ்சாலைகள் நிறைந்த நகரம். தொழில் வளர்ச்சியும் நாகரீக
மாற்றங்களும், பஞ்சாடைகள் போய் போலியெஸ்டர் சந்தையை, மக்கள் மனதை ஆக்கிரமித்துக்
கொண்ட பிறகு, பஞ்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்களுக்கு கணிசமான ரொக்கப்பணத்தைக்
கொடுத்து (அதை அவர்கள் ஆசையுடன் வாங்கிக் கொண்டார்கள்) வேலையிலிருந்து நீக்கி,
பஞ்சாலைகள் இருந்த இடம் மனைகளாக பல கோடி மடங்கு அதிக விலையில் விற்கப்பட்டு லாபம்
சம்பாதிக்கப்பட்டது. வெகு சீக்கிரம், மோசம் போனபிறகு தான், தாங்கள் ஏமாறியது
தொழிலாளர்களுக்குத் தெரிந்தது. தொழில் வளர்ச்சியா?, நகர வளர்ச்சியா? அல்லது எளிய
மக்களை வஞ்சித்து ஏமாற்றிய செயலா? பம்பாய் தொழிலாளர் வசித்த கிரண்காவ்(ன்)
பகுதியனரின் வாழ்க்கையின் சோகத்தைச் சொல்கிறது இந்த நாடகம் அந்த வாழ்க்கையை கள
ஆராய்வு செய்து நாடகமாக்கித் தந்தவர் நாடகாசிரியரும் இயக்குனருமான ராமு ராமனாதன்.
கிரன்காவ்(ன்) தெரு முனையில் நாடகம். பாட்டும் ஆட்டமும், பாரம்பரிய கதை சொல்லலுமாக
இக்கதை மேடையில் விரிகிறது. மராத்தி தான் ஆனாலும் வெகு சுவாரஸ்யமாக கதை
சொல்லப்படுகிறது. எரியும் பிரச்சினை, கவர்ச்சிகரமான வார்த்தைகளால் மூடி
மறைக்கப்படும் பிரச்சினை நாடகமாகிறது. விழாவில் இந்நாடகம் பல பரிசுகளைப் பெற்றது.
சிறந்த நாடகம், சிறந்த நாடகப் பிரதி பரிசுகளோடு, இதில் பாடி, கதை சொல்லி,
பாத்திரமாகவும் நாடகம் முழுதும் பிரபாவித்த நாகேஷ் போஸ்லேக்கு சிறந்த நடிகர்
பரிசும் கிடைத்தது. ராமு ராமனாதனுக்கு சிறந்த நாடகாசிரியர் பரிசு.
கடைசியாக
'து' என்னும் நாடகத்தைப் பற்றிச் சொல்லி முடித்து விடவேண்டும். 'து' என்றால் நீ
என்று பொருள். இந்த 'நீ' தமிழ் அகப்பாடல்களில், பக்திப் பாடல்களில் வரும் 'நீ'
எனக்கொள்ளவேண்டும். மராத்தி நாடகம். ரூமியின் கவிதைகளைக் கொண்டே ஒரு நாடகம். மகா
ராஷ்டிராவில் மராத்தியில் ரூமி ஏதும் அப்படி ஒன்றும் அறியப்பட்டவரில்லை. பஞ்சாப்,
உத்தரபிரதேசம், பீஹார் என்றால் சரி. ஆனால் துகாராமும் ஞானேஸ்வரும் வாழ்ந்த
மகாராஷ்டிர மண்ணில்? காதல் கவிதைகள். அந்த காதல் மனித பாசத்திலிருந்து மேலெழுந்து
தன்னை மறந்து வேறு ஒரு பொருளுக்கு இட்டுச் செல்லும் காதல். நம் தமிழ் அகப்பாடல்கள்,
பின்னர் பக்திப் பாடல்களுக்கு வழி வகுத்தது போல. இந்த நாடகத்தைப் பற்றி
முக்கியமாகச் சொல்ல வேண்டியது தமிழில் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. The
most undramatic drama; என்றும் a very enjoyable theatrical experience என்றும்
சொல்ல வேண்டும். நாடகீய குணங்கள் ஏதும் அற்ற நாடகம்,. மிகுந்த ரசானுபவம் தந்த
நாடகம் என்று சொல்லலாமா?
ஒரு இளம் பெண். ஒரு வாலிபன். காதல் தமக்கு இன்பம் தருவதால் காதலிப்பவர்கள். தம்மை
அழித்துக்கொண்டு காதலிப்பவர்கள் அல்ல. காதல் என்னும் எண்ணத்தைக் காதலிப்பதால்
உண்மைக் காதல் தெரியாது போகிறது. தன் மீது கொண்ட காதலே காதல் என்ற நினைப்பும்
உண்மைக் காதலை மறைக்கிறது. இருவரும் பிரிகிறார்கள். அரசன் தன்னை அந்தப் பெண்
காதலிக்கவேண்டும் என்று விரும்புகிறான். அவனும் உண்மைக் காதலை அறியாதவன் தான்.
அவனும் அந்த பெண்ணை இழந்து விடுகிறான். ஒவ்வொருவரும் அவரவர் எதை தம் சந்தோஷம் என்று
நினைக்கிறார்களோ அதைத் துறந்தால்தான் உண்மைக் காதலை அடைவார்கள். ஒரு ·பக்கீர்
எதிர்ப்படுகிறான். அவன் விடுதலை பெற்றவன். ஞான ஒளியில் பிரகாசிப்பவன். அவனுடைய
உள்ளத்தை அறிந்தவர்கள் விடுதலை பெறுகிறார்கள். உண்மைக் காதல் என்னவென்று
அறிகிறார்கள். தம்மின் 'தான்'-ஐ அழித்துக் கொள்கிறார்கள்.
இப்படி சுமார் ஐம்பது ரூமியின் கவிதைகளைக் கோர்த்து ஒவ்வொரு கவிதைத் தொகுப்பின்
உணர்வு நிலைகளை நிகழ்வுகளாக்கி நடிக்கப்படுகிறது, 'து'. மெல்லிய உணர்வுகளின்
வெளிப்பாடுகள். கோப தாபங்கள், உணர்ச்சிக் கொப்பளிப்புகள், சீற்றங்கள், ஆரவாரக்
கொண்டாட்டங்கள் ஏதும் இல்லை. சன்ன ஒலியில் காற்றில் மிதந்து வரும் சங்கீத இழைகள்
போல, ஒரு அனுபவம்.
இந்தியாவின் எல்லா மூலைகளிலிருந்து, எல்லா மொழிகளிலிருந்தும், எத்தனையோ வாழ்க்கை,
கலாச்சார வேறுபாடுகள் கொண்டு நாடகங்கள் எத்தனையோ வண்ணங்களில் மேடையேறுகின்றன.
அவற்றின் நல்ல மாதிரிகள் சிலவற்றைக் காணமுடிந்தது ஒரு சந்தோஷம் தரும் அனுபவம்.
வெங்கட் சாமிநாதன்/7.4.07
vswaminathan.venkat@gmail.com |
|
©
காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|