| தமிழகக் கோட்டைகள்! - வெங்கட் சாமிநாதன் -
 
 
  வெற்றுப் 
படாடோபங்களும், பம்மாத்துக்களும், தமிழ் சினிமாத்தனமான பாவனைகளுமே ஈர்ப்புப் பெறும் 
இன்றைய தமிழ்ச் சூழலில், அமைதியாக தனக்குத் தெரிந்ததை, தான் ஆழமாக ஈடுபாடு 
கொண்டவற்றை மாத்திரமே வெளி உலகுக்கு வைத்து அமைதி கொள்ளும் மனிதர்கள் 
கவனிக்கப்படுவதில்லை. அதிகம் பேசுபவரும் உரக்கப் பேசுபவரும் இல்லை விட்டல் ராவ். 
தண்டோரா போட்டால் தான் கவனிக்கப்படும் என்பது நியதியானால் இழப்பு யாருக்கு என்பது 
ஒரு ஆரோக்கியமான சமூகத்துக்குத் தெரியும். ஆனால் தமிழ் நாட்டில் அது பற்றி பிரக்ஞையே இல்லை. சௌகரியமாகப் போச்சு.
 
 விட்டல் ராவ் பிறந்த, வாழ்ந்த இடம் அவருக்கு பல வாய்ப்புக்களைக் கொடுத்துள்ளது. 
கன்னடமும் தமிழும் சந்திக்கும் இடம். கன்னடம் பேசும் மாத்வ பிராமணர், தமிழராக தமிழ் 
நாட்டில் வாழும் தமிழர். ஒவியம் படித்தவர். நாடகப் பித்து பிடித்தவர்கள் அவர் 
குடும்பத்தில் இருந்தனர். கன்னட நாடகக் குழுவில் இருந்தவர்கள். இளம் வயதிலிருந்தே 
நாடகத்திலும் சினிமாவிலும் ஈர்ப்பு. எழுத்தாளர். அவர் பிறந்த, வாழ்ந்த மொழி 
கலாச்சார கலப்பு வாழ்க்கை வெகுவாக சிறப்பித்துக் காட்டும் நாவல்களை எழுதியவர்.
 
 இவையெல்லாம் போக தன் ஆளுமையின் பரிமாணங்களில் காணும் இன்னொரு ஈடுபாட்டையும் விட்டல் 
ராவ் தனது சமீபத்திய புத்தகம் தமிழகக் கோட்டைகள் என்னும் புத்தகத்தில் 
வெளிப்படுத்துகிறார். தமிழகக் கோட்டைகள் பற்றித்தான் அவர் பெரும்பாலும் எழுதுகிறார் 
என்ற போதிலும் அவரது புத்தகம் மைசூர், சீரங்கப்பட்டினம் என்றும் விரிகிறது. அவர் 
பிறந்து வளர்ந்த ஹோசூர், நாமக்கல், ஒமலூர் பகுதிகள் கோட்டைகள் நிறந்தவை. விஜய நகர 
சாம்ராஜ்ய காலத்திலிருந்து தொடங்கி, நாயக்கர்கள், நவாபுகள், ஹைதர் அலி, திப்பு 
சுல்தான், என்று கடந்து ஆங்கிலேய கம்பெனி ஆட்சிக்காலம் வரை நீளும் சரித்திரத்தில் 
சீரங்கப் பட்டினத்திலிருந்து தொடங்கி, கிருஷ்ணகிரி, வேலூர் என்று கடந்து வந்தால் 
சென்னை புனித ஜியார்ஜ் கோட்டை வரை வரலாற்றால் சங்கிலித்தொடராக பின்னப்பட்டவை தான் 
இடைப்பட்ட ஊர்களில் காணப்படும் கோட்டைகள் அத்தனையும். இவற்றின் மையம், 
இப்புத்தகத்தின் தொடக்கத்துக்கும், விட்டல் ராவின் இளம் வயதிலிருந்து தொடங்கும் 
கோட்டைகள் மீது கொண்ட கவர்ச்சி வளர்ந்து இப்புத்தகத்திற்குக் காரணமாகவிருந்த ஓமலூர் 
நாமக்கல் கோட்டைகள் தான். அப்பா அடிக்கடி மாற்றல் பெரும் உத்தியோகத்தில் இருப்பவர். 
எல்லாம் அன்றைய சேலம் மாவட்டத்திற்குள் தான். ஐந்து வயதில் 'கோட்டைன்னா என்னம்மா?' 
என்ற கேள்வியோடு தொடங்கி, அடுத்த
 வருடங்களில் மாறிய இடங்களில், தன் விளையாட்டுத் தோழனோடு வீட்டுக்குத் தெரியாமல் ஊர் 
சுற்றக் கிளம்பியதும், பள்ளிக்கூட சுற்றுப் பயணம் பற்றிப் பேச்சு எழுந்தால் ' சார் 
கோட்டைக்குப் போகலாமே சார்" என்றும், புதிய இடத்திற்கு மற்றலாகிப் போகும் பஸ் 
பயணத்தில், 'அங்கேயும் கோட்டை இருக்குடா, காமிக்கிறேன்' என்று அப்பா 
உற்சாகமூட்டுவதும் வாழ்க்கையின் கட்டங்கள்.
 
 இப்படிப்பட்ட வாழ்க்கை தந்த வாய்ப்புக்கள், இயல்பான கலை உணர்வு, ஒவியப் பயிற்சி, 
இலக்கிய உணர்வு எல்லாம் சேர்ந்தால்,
 கோட்டைகள் பற்றிய புத்தகம் வெற்று விவரத் தொகுப்பாக இருக்க முடியாது. பழைய 
ஞாபகங்கள், பின்னர் சமயம் நேர்ந்த போது புதுப்பித்துக்கொண்ட அனுபவங்கள், பின்னர் 
இது பற்றி எல்லாம் எழுதவேண்டும் என்று தோன்றியபோது ஏற்படுத்திக்கொண்ட பிரயாண 
அனுபவங்கள், இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த இழப்புக்கள், சரித்திர பதிவுகள், 
கும்பெனி கால ஒவியர்கள் விட்டுச் சென்ற ஓவியப் பதிவுகள், பின் படித்திருந்த 
சரித்திரம், கெஜட்டியர் தரும் விவரங்கள் என்று ஒரு கலவை இப்புத்தகம்.
 
 
  
தமிழகக் கோட்டைகள் பற்றிய புத்தகம் தான். பெரும்பாலும் 
தமிழகத்தில் காண்பவை தான். ஆனால் இவற்றில் அனேகம் நாம் பெயராகக் கூட பரவலாக 
அறிந்திராத கோட்டைகள். நாம் அறிந்திராதது இருக்கட்டும். அறிந்தவற்றைப் பற்றிப் 
பேசலாம் முதலில். சென்னை புனித ஜியார்ஜ் கோட்டையை உள்ளே சென்று ஆவலோடு 
பார்த்திருக்கும் சென்னை வாசிகள் எத்தனை பேர் இருப்பார்கள்? நான் முதன் முதலில் 
தில்லியில் வேலைகமர்ந்த போது முதலில் குதப் மினார் போகலாம் என்று கிளம்பிய போது 
என்னோடு அலுவலகத்தில் இருந்த நண்பர்களும் உடன் சேர்ந்தனர். அவர்களில் பலர் 
தில்லியிலேயே பிறந்தவர்கள். அவர்கள் குதப்மினாரைப் பார்த்தவர்கள் இல்லை. அந்த எண்ணம் தோன்றவில்லை அவர்களுக்கு. ஆனால் விட்டல் ராவ் நமக்குக் காட்டும் காட்சி வேறு 
வகையானது. அது நம் வரலாற்று
 அக்கறைகளை, நம் மண்ணின் மீது நமக்கு இருக்கும் பிரியத்தை, நம் கலைகள், நம் 
மூதாதையர் நமக்கு விட்டுச் சென்றிருக்கும்
 சொத்துக்களைப் பற்றி நமக்கு இருக்கும் அறியாமை, அலட்சியம் பற்றியெல்லாம் சொல்லும்.
 
 சிறு வயதில் அப்பாவோடு பார்த்த மாளிகை அது, கெனில்வொர்த் காசில். ஹோசூருக்கு 
கலெக்டராக வந்த ப்ரெட் தன் அன்பு
 மனைவிக்காக, தன் நாட்டில் இருக்கும் அழகான கெனில்வொர்த் மாளிகை போன்று ஒன்று கட்டிய 
மாளிகை அது. அப்படிப்பட்ட
 மாளிகையில் தான் வசிப்பேன் என்று அவள் சொன்னாளாம். "மூளையில் ஹொசூரின் வரலாறும் 
டானியல்களின் ஓவியங்களும் வளைய வர, நவீன தொழில் நகரமாகிவிட்ட "ஓசூர்" என தமிழ் 
உச்சரிப்பு பெற்ற ஹோசூரை அடைந்தேன். பஸ் நிலையத்தில் அறுபது வயது மதிக்கத்தக்கவரை 
அணுகி விசாரித்தேன்.
 
 "கெனில் வொர்த் காசிலுக்கு எப்படி போகலாம்"
 
 அவர் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு என்னையே உற்றுப் பார்த்தார். மீண்டும் கேட்ட 
போது, "அப்படீன்னா என்ன?" என்று கேட்டார். அந்த இடத்தைக் காலி செய்து தபால் நிலையம் 
சென்று கேட்டேன்.
 
 "எந்தத் தெரு?" என்று கேட்டார் அந்த சிப்பந்தி.
 "தெருவெல்லாம் கிடையாது. பெங்களூர் ரோடு, ஜூஜூவாடிக்கு ஏரிக்கு எதிரே"
 "கதவு எண் ஏதாவது இருக்கா?" என்று கேட்ட பெண் ஊழியரைப் பரிதாபமாகப் பார்த்தேன்.
 "சார் தெரிஞ்சுக்கங்க. ஜூஜூவாடி ஏரிங்கறதே இப்ப இல்லே. அது போய எத்தனையோ 
வருஷமாச்சு. ஏரியத் தூத்துட்டுத் தான் சிட்கோ தொழிற்பேட்டை வந்திருக்கு. எந்தூரு 
நீங்க?"
 "சரி கோட்டைக்கு எப்படிப் போறது?"
 "அது கூட இருக்காதே. பஸ் ஸ்டாண்டுக்குப் பின்னாடியா போய்ப் பாருங்க.
 
 நான் திரும்பிச் செல்லும்போது, மூத்த சிப்பந்தி பெண் சிப்பந்தியிடம் சொன்னது 
தெளிவாகக் கேட்டது.
 "பாவம் எதையோ நினைச்சிக்கிட்டு, எதையோ தேடிக்கிட்டு, பைத்தியக்காரத்தனமா......"
 
 கடைசி முயற்சிகளில் ஒன்றாக, காவல் நிலையத்திற்குச் சென்றேன். அது பெங்களூர் சாலையை 
ஒட்டியிருந்தது. இன்ஸ்பெக்டர், நடுத்தர
 வயது.
 "சார், கெனில்வொர்த் காசில் பத்தி தெரியுமா? அது எங்கிருக்கு இந்த ரோட்லே.?
 "ஏதாவது காணாமப் போயிருச்சா?
 "இல்லீங்க அது வெள்ளைக்கார மாளிகை"
 "சார் இது போலீஸ் ஸ்டேஷன். ஏதாவது கம்ப்ளெய்ண்ட் கொடுக்கணுமா?
 "அதைப் பார்க்கணும். சின்ன வயசிலே பார்த்தது."
 "எதை?
 "கெனில்வொர்த் காசிலை"
 "அப்படீனா யாரு, தொரையா?"
 "துரை கட்டின மாளிகை."
 "போய் விசாரிச்சு பாருங்க. எங்கிருந்து வர்ரீங்க?"
 
 எப்படியோ ஒரு வழியாகத் தேடி அலைந்து சென்று பார்த்த போது "கோட்டை மதிற்சுவர்கள் 
தரைமட்டத்திற்கு இருந்தன" காணக்
 கிடைத்தது, அம்மைத் தழும்பு போல் ஆகிவிட்ட அகழி மட்டுமே. தரை மட்டத்திற்கு மேல் 
எதுவுமே இல்லை. புல் டொசர் ஒன்று
 கோட்டையின் கடைசி கட்டுமானத்தை இடித்துக் கொண்டிருந்தது; வீட்டு வசதி வாரியம் 
அலுவலகம் முதலிய கட்டுவதற்காக ஹோசூரின் வரலாற்றுச் சின்னங்களையும், திப்பு 
சுல்தானின் கோட்டையையும், இடித்துத் தரைமட்டமாக்கிக்கொண்டிருந்தன. அகழி என்றோ 
மூடப்பட்டு விட்டது. கெனில் வொர்த் மாளிகை இடிக்கப்பட்டது எண்பதுக்களில் நடந்து 
விட்டது. தொன்னூறுகளில் ஹோசூர் கோட்டையும் இடித்தாகிவிட்டது. தர்ம புரி கிருஷ்ணகிரி 
ம்யூசியம்களில்(?) உடைந்த சிற்பங்களும், நடுகற்களும் தான் இருந்தன. பாராமஹால் 
கோட்டைகள், மாளிகைகள் குறித்த புகைப்படங்களோ, சித்திரமோ, குறிப்புகளோ எதுவும் 
இல்லை. விசாரித்தால் சலித்துக்கொள்கிறார்கள். கோட்டைகள், மாநில அரசி 
அருங்காட்சியகங்களின் பொறுப்பில் இல்லையென்றும், அவை மத்திய அரசின் தொல்பொருள் 
ஆய்வுத் துறையின் பொறுப்பில் உள்ளவை என்றும் கூறி விரைவாக வெளியில் அனுப்புவதில் 
தான் குறியாக இருக்கிறார்கள். பஸ் நிலைய பழக்கடையில் விசாரித்த வயோதிகருக்கும், 
இந்த மாநில அரசு அருங்காட்சியக அலுவலகர்களுக்கும் வித்தியாசம் கொஞ்சம் தான்" என்று 
கூறி முடிக்கிறார், ஒரு பயணக் கதையை விட்டல் ராவ்.
 
 இத்தகைய அனுபவங்கள் அவருக்கு திரும்பத் திரும்பக் கிடைக்கின்றன. தாலிபான்கள் ஒரு 
குருட்டுத்தனமான மத வெறியால் சரித்திரத்தையும் கலைகளையும் அழிக்கின்றனர். நாங்கள் 
தமிழர். எங்களுக்கு இன்று தேவை பணம், வீட்டு மனைகள், கட்டிடவேலை செய்து சம்பாதிக்க 
ஏரிகள், குளங்கள், பழம் வரலாற்றுச் சின்னங்கள் எதுவானாலும் இடித்து தரைமட்டமாக்கி 
வீட்டு மனைகளாக்க.
 
 தென்கரைக் கோட்டைக்கு பள்ளிச் சிறுவனாகச் சென்றபோது, கல்யாண மகால்கள், படிகள் 
கட்டப்பட்ட குளம், அதை ஒட்டிய பெரிய மண்டபங்கள், ராணிகள் குளிக்கும் இடம் என்று 
சொல்லப்பட்டது. பள்ளிச் சிறுவன் ஒருவன், மிகுந்த வேலைப்பாடுகள் கொண்ட ஒரு சுவரில், 
தன் பெயர், தான் படிக்கும் படிவம், பள்ளியின் பெயர் எல்லாம் கீறி வைக்கிறான். 
இசைத்தூண்கள் ஒவ்வொன்றையும் சிறுவர்கள் கல்லால் அடித்து இசை எழுப்புகிறார்கள். 
'டேய் மெல்லத் தட்டுங்கடா" என்று சொல்லவேண்டியிருக்கிற து. இப்போது ஐம்பது 
வருடங்களுக்குப் பிறகு விட்டல் அங்கு சென்ற போது, ராணி குளிக்கும் மண்டபம் சிறு 
வயதில்பார்த்தது எங்கென்றே காணோம். எங்கும் புதர் மண்டி, இடிபாடுகளுக்கிடையே பாசி 
ஏறிய சுண்ணாம்புப் பாளத்திடையே "அன்னய்யன், இரண்டாம் படிவம், ஏ-பிரிவு, ஜில்லா 
போர்டு உயர்நிலைப் பள்ளி ஹோசூர்" என்று ஆணியால் கீறப்பட்டிருந்தது மாத்திரம் 
தெரிந்தது. எது அழிகிறது, எது அமரத்வம் அடைகிறது என்பதிலும் விடம்பனம். 
கோட்டைக்குள்ளிருந்து ஒருவன் வெளிவந்து உள்ளே போகாதீங்க, கூட்டம் நடக்குது, அது 
முடிந்த பிறகு போகலாம்" என்று தடுக்கிறான். அவர்கள் பாளையக்கார வம்சமாம். அவர்கள் 
கூட்டம் நடக்கிறதாம்.
 
 ஆத்தூர் கோட்டை, சமவெளிக்க்கோட்டைகளில் மிக அழகானது என்கிறார். அதைப் பார்க்கப் 
போகிறார். இன்னமும் பார்க்க அழகாகத் தான் இருக்கிறது தூரத்திலிருந்து பார்க்க. 
சாக்கடைகளைக் கடந்து புதர்களையும் இடிபாடுகளையும் கடந்து செல்லவேண்டும். மேற்கூரை 
இடிந்து காணப்பட்ட அது நெற்களஞ்சியமாக இருந்ததாம். இப்போதும் அது 
நெற்களஞ்சியமாகத்தான் இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். பாளையக்காரர்களுக்கோ 
அரசுக்கோ அல்ல. அதைப் பாதுக்காக்க என்று நியமிக்கப்பட்டுள்ள ஒருவனின் குடும்பத்து 
தானியங்கள் அங்கு காயப் போடப்பட்டுள்ளன. 'போட்டோ எடுக்காதீங்க" என்று அங்குள்ள பெண் 
தடுக்கிறாள். பின் அந்தப் பெண்ணோடு போய் பார்த்ததில், அங்கு கிடந்தவை, கீற்றுக்கள் 
ஓலைத் தடுப்புகள், காயப் பரப்பப்பட்ட விறகுக்கட்டைகள், மட்டை உரிக்கப்படாத 
தேங்காய்க் குவியல்கள்.
 
 அங்கு ஒவ்வொரு மஹாலும், முட்கம்பி வேலியிடப்பட்டு, தொல்பொருள்துறையின் பெரிய நீல 
நிற எச்சரிக்கைப் பலகை சகிதம் பாதுக்காக்கப்பட்டு வருகிறது. இதற்கான சாட்சியம் 
பெரிய நீல நிற எச்சரிக்கைப் பலகைதான். மஹாலின் மையத்தில் ஒரு கயிற்றுக் கட்டில், 
ஒரு தலையணை.
 
 வாட்ச்மேன் படுத்துப்பாரா? வாட்ச்மேன், கீச்சுமேனெல்லாம் இல்லை. பக்கத்து வீட்டுத் 
தாத்தாதான் காத்தாட வந்து படுப்பாரு.சென்னைக்கு வரும்போதெல்லாம், செங்கல்பட்டைக் 
கடக்கும்போது "கோட்டை ரோடு" என்ற அறிவிப்புப் பலகை ஒன்று அறுபதுகளில் கண்ணில் 
பட்டுக்கொண்டிருக்கும். ஊரு முடிந்து கொளவாய் ஏரியை ஒட்டி பழைய கோட்டையின் நீண்ட 
சுவரும், சுவரை ஒட்டி புற அரண்கள் ஒன்றிரண்டும் தென்படும் என்ற ஞாபகத்தில், 
"கோட்டைக்கு இப்படியே போகலாங்களா? என்று இப்போது விசாரித்த விட்டல் ராவுக்குக் 
கிடைத்த பதில், "நீங்க நின்னுட்டிருக்கிறதே கோட்டை ஏரியாதாங்க எல்லாமே".
 
 இப்படியான அனுபவங்கள் அடுத்தடுத்து நேரும்போது, இன்றைய தமிழ் பண்பாட்டின் 
காவலர்களின் பண்பாட்டுணர்வு வறுமையை எண்ணி துக்கிக்க வேண்டியிருக்கிறது. இவர்கள் 
வேறு வகை தாலிபான்கள் என்பதை யாரும் உணரவில்லை.
 
 இது ஒரு புறமிருக்க இவர்களையும் மீறி கோட்டைகள், பழம் வரலாற்றுச் சின்னங்கள் பல 
அழிவிலிருந்து தப்பியுள்ளனதான். அவை எவ்வளவு நாட்கள் இருக்குமோ தெரியாது. ஐம்பது 
வருஷங்களுக்குள் இவ்வளவு அழிபாடுகளை எங்கள் நாடு அமைதியில் வாழ்ந்திருக்கும்போதே 
நாங்கள் சாதித்திருக்கிறோமென்றால் அது ஆச்சரியப்படவேண்டிய விஷயம் தான்.
 
 அப்படி மிஞ்சியிருப்பவை பற்றி அனுபவித்து, எழுதியிருக்கிறார் விட்டல் ராவ். இப்படி 
ஒரு விஷயத்தை எழுதத் தேர்ந்தெடுத்தது
 அபூர்வம் தான். தென்கரைக் கோட்டை, பாராமஹால், ஆத்தூர் கோட்டை, ஏன் 
செங்கல்பட்டுக்கோட்டை என்று கூட நான்
 கேள்விப்பட்டதில்லை. இப்படி நிறைய தகவல்கள், அவற்றின் சரித்திரப் பின்னணி, 
கோட்டையின் கட்டுமான அழகுகள், அவற்றிற்கான ஆவணச் சான்றுகள், கேள்விப்படும் பழம் 
கதைகள் என நிறைய எழுதியிருக்கிறார். ஒவ்வொரு கோட்டைக்கும் சென்று பார்க்கும்போதும், 
சிறு வயது நினைவுகள், படித்த சரித்திரம், டானியல்கள் இருவரின் ஒவியங்கள் எல்லாம் 
அலைமோது. குறிப்பாக ஒவியப் பதிவுகள் பற்றி கிடைத்தவரை எழுதியுள்ளார். இவை எனக்கு 
மிக சுவாரஸ்யமானவை. ஐம்பதுக்களில் முதன் முதலாக கொல்கத்தா சென்றிருந்த போது 
விக்டோரியா மெமோரியல் ஹாலில் பார்த்த டானியல்களின் ஒவியங்கள், பின் தில்லி ஜெய்பூர் 
மாளிகையிலும் சில டானியல்கள் உள்ளன, பார்த்த எத்தனையோவற்றில் இவையும் நினைவில் 
பதிந்துள்ளன என்றால், அவற்றின் ஒவியச் சிறப்போடு ஆவண முக்கியத்வமும் முன்னிற்கிறது. 
கடந்துவிட்ட காலத்தைப் பற்றிய பிம்பங்களை உருவாக்கி திரையோடும் அவை. பின்னர் 
தாணாய்க்கன் கோட்டை புத்தகத்தை என்னிடமிருந்து இந்த புத்தகம் எழுவதற்காகவே விட்டல் 
ராவ் எடுத்துச் சென்றார்.
 
 இது மிக முக்கியமான நூல். இதை வெளியிட ஒரு பிரசுராலயம் அவருக்குக் கிடைத்துள்ளது 
பற்றி எனக்கு மிக சந்தோஷம். ஆனால், இதில் கொடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் 
அனேகம் தெளிவற்றவை. எவ்வித தெளிவான உருவையும் அவற்றில் நாம் பார்க்க முடியாது, 
இருள் மண்டியவையாக ஏதோ மாலை நேர சில்ஹட்டைப் போல காண்கின்றன இவை. மேலும் 
இப்புகைப்படங்கள் எது பற்றியவை என்று ஒரு குறிப்பும் இல்லாது பிரசுரம் 
செய்யப்பட்டுள்ளன. புகைப்படங்கள் இல்லாது இத்தகைய புத்தகம் வெளிவருவது 
அர்த்தமில்லாதது. ஆனால் அப்புகைப்படங்கள் இருள் பூசப்பட்டைவையாகவே தரப்பட்டால், அதை 
என்ன சொல்வது?
 
 இது தொலைபொருள் காப்பகத்தின் பாதுகாப்பில் உள்ளது என்று ஒரு பெரிய நீல நிற 
எச்சரிக்கைப் பலகையை நிறுத்தி விட்டால் தங்கள் பணி தீர்ந்தது என்று எங்கள் 
தொலைபொருள் பாதுகாப்பகம், அரும்பொருள் காப்பகங்கள் செயல்படுகின்றன. அது போல்தான் 
எல்லாமே இருக்கும்
 
 தொமஸ் டேனியலும் அவரது மருமகன் வில்லியம் டேனியலும் இப்பழைய அரண்கள் இருந்த 
விடமெல்லாம் சென்று ஒவியம்
 வரைந்தது பற்றி அதற்கு அவர்கள் படும் சிரமங்கள், எடுத்துச் செல்லும் பொருட்கள், 
-ஏதோ ஒரு படையெடுப்புக்கான ஆயத்தம் போல அவை தோன்றும், - பற்றி விட்டல் ராவ் 
எழுதியிருப்பது மிக சுவாரஸ்யமானது. அவை தான் பல கோட்டைகள், அக்கால காட்சிகள், 
உடைகள், வாழ்க்கை பற்றிய ஆவணங்களாகத் திகழ்கின்றன. நாம் இழந்தது எது என்பதையும் அவை 
சொல்கின்றன. ஆங்காங்கே விட்டல் ராவ், "இக்கோட்டை டானியலின் ஒவியங்களில் 
பதிந்துள்ளதா என்று தெரியவில்லை." என்று எழுதுகிறார்.
 
 தமிழகக் கோட்டைகள்:விட்டல்ராவ். அம்ருதா பதிப்பகம், எண் 5, ஐந்தாவது 
தெரு, எஸ்,எஸ் அவென்யு, சக்தி நகர், போரூர், சென்னை 600116 விலை ருபாய் 150.
 
 vswaminathan.venkat@gmail.com
 |