| நினைவுகளின் தடத்தில் (47) 
 - வெங்கட் சாமிநாதன் -
 
 
  ரயில் 
  செண்டிரல் ஸ்டேஷனை விட்டு, மதராஸைவிட்டு விரைந்து கொண்டிருந்தது. நான் 
  பார்த்திராத என்றுமே பிரயாணம் செய்திராத புதிய இடங்கள், ஊர்கள். எனக்குத் 
  தெரிந்தது, நிலக்கோட்டைக்கும் கும்பகோணத்துக்கும் இடையேயுள்ள பூமிதான். அதிகம் 
  போனால் குமப்கோணத்துக்கு வடக்கே என்று ரயில் தண்டவாளத்தின் மீது நடந்தே இருப்புப் 
  பாதை இட்டுச் செல்லும் அடுத்த ஊர் திருநாகேஸ்வரம் வரை போயிருக்கிறேன். 
  கும்பகோணத்துக்கும் பட்டணத்துக்கும் இடையேயான தூரத்தைக்கூட முந்தின நாள் 
  பிரயாணத்தை இருட்டில் தான் கடந்திருக்கிறேன். உடையாளூர், தங்கைகள், நிலக்கோட்டை 
  மாமா என்று தான் நினைவுகள் படர்ந்து கொண்டிருந்தன. நினைவுகளுக்கிடையேயே இருள் 
  கவிந்து விட்டது. ஒன்றும் சாப்பிடத் தோன்றவில்லை. வண்டியில் என் இருக்கையைச் 
  சுற்றி புதிய மனிதர்கள். அவர்கள் பேச்சுக்களின் சலசலப்புக்கள். ஆனால் நான் 
  தனித்து விடப்பட்டதாகவே உணர்ந்தேன். அவர்களோடு பேசலாம் என்று கூட தோன்றவில்லை. 
  அளவுக்கு நான் வாழ்க்கையில் வளர்ந்துவிடவில்லை. அவர்களும் என்னைக் கவனித்தவர்கள் 
  இல்லை. இருக்கைக்குப் பக்கத்தில் வைத்திருந்த இரும்புப் பெட்டியின் மீது தலை 
  வைத்தே தூங்கிவிட்டேன். என்னையறியாது தான். விழித்தபோது ரயில் எங்கோ விரைந்து 
  கொண்டிருந்தது. சுற்றி சில நேற்றையவர்கள். சிலர் புதிதாக வந்து சேர்ந்தவர்கள். 
 நான் விரும்பித் தேர்ந்த பயணம் இது, திருப்பம் இது என்று தோன்றவில்லை. ஏதோ 
  நடக்கிறது, நான் இட்டுச் செல்லப்படுகிறேன். இதில் எனக்குப் பங்கில்லை. எனக்கு 
  எதிர்ப்பும் இல்லை என்பது போன்று ஒரு உணர்வில் அமைதியாக ஜன்னலுக்கு வெளியே 
  பார்த்துக் கொண்டிருந்தேன்.
 
 தில்லியில் இருந்து வந்திருந்த ஒருவர் எனக்கு நண்பரானால் உடையாளூரில் என்று 
  சொன்னேனே, அவர் நான் ஜெம்ஷெட்பூர் போகப் போகிறேன் என்று தெரிந்தது, தன் பிரயாண 
  அனுபவங்களைச் சொல்வார். அவர் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்: " வழிலே எல்லா 
  ஸ்டேஷன்லேயும் நல்ல பால் கிடைக்கும். இங்கே மாதிரி தண்ணிப் பாலா இருக்காது. 
  அவங்களுக்கு பால்லே தண்ணி விடணும்னே தெரியாதுன்னா பாத்துக்குங்கோ. நல்ல கெட்டியா 
  கள்ளிச் சொட்டு மாதிரி இருக்கும். கெட்டில்லே சூடா கொண்டு கொடுப்பான். பழமும் 
  கொண்டுவருவான். திருப்தியா சாப்பிடலாம். அதிலேயே பசி அடங்கிடும் கவலையே 
  படாதேங்கோ." அதுவும் காதில் விழுந்து கொண்டிருந்தது, என்னமோ அவர்தான் கிட்ட 
  உட்கார்ந்து கொண்டு திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பது போல.
 
 ஆனாலும் நான் எதுவும் வெளியே வாங்கிச் சாப்பிடத் துணியவில்லை. பள்ளியில் படித்த 
  ஹிந்தியை வைத்துக்கொண்டு ஏதாவது பேசமுடியுமா என்பதை இனித் தான் சோதனை செய்து 
  பார்க்கவேண்டும். செய்வேனா தெரியாது. வண்டி தெலுங்கு தேசத்தில் இருந்தது. நேற்று 
  சாயந்திரம் வண்டி ஏறினதிலிருந்து இது வரை நான் யாரோடும் பேசவில்லை. வெளியேயும், 
  வண்டிக்குள்ளும் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதோடு சரி. பதினைந்து 
  பதினாறு மணி நேரம் ஆயிற்று. இவ்வளவு நேர பிரயாணம் புதிய அனுபவமாயிற்றே.
 
 பின் வருடங்கள் ஒன்றில் என் எதிரே ஒரு ஸ்வீடன் நாட்டுப் பெண்மணி தன் இரு குழந்தை 
  களுடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தாள். இரண்டு பசங்களும் அவளிடம் என்னமோ சொல்லி 
  சிணுங்கிக் கொண்டிருந்தனர். அவள் சிரித்துக் கொண்டே என்னிடம், "இவ்வளவு தூரம் 
  ரயிலில் பிரயாணம் செய்து இவர்களுக்குப் பழக்கமில்லை. எப்போ இறங்கப் போறோம் என்று 
  அலுத்துக் கொள்கிறார்கள்." என்றாள். அப்போது தான் எனக்கு இதில் இப்படிக் கூட 
  ஒருவர் உணரக்கூடும் என்று தெரிந்தது.
 
 எனக்கு அலுப்பாக இல்லை. பேச யாரும் இல்லையென்றாலும், சுவாரஸ்யமாகவே இருந்தது. 
  இன்னமும் உட்கார்ந்த இடத்திலேயே பொழுது என்னை அறியாது போய்க்கொண்டிருந்தது. 
  சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற தேவையும் தெரியவில்லை. புதிய அனுபவங்களிடையே பசியும் 
  மறந்து போயிற்று. எப்படியோ நேரம் கழிந்து போய்க்கொண்டிருந்தது. வால்டேர் ஸ்டேஷன் 
  வந்ததும் தெரியவில்லை. வந்தது தான். ஆனால் அதன் முக்கியத்வத்தை நான் உணரவில்லை. 
  திடீரென, "நீ உடையாளுர்லேர்ந்து தானே வரே? என்று ஒருவர் அருகில் வந்து கேட்டார். 
  "ஆமாம்" என்றேன். "சாமிநாதன்?" தலையாட்டினேன். அப்போது தான் சித்தப்பா சொன்னது 
  ஞாபகம் வந்தது. "சாப்பாடு கொண்டு வந்திருக்கேன். கீழே இறங்கி வா. சௌகரியமா 
  உட்கார்ந்து சாப்பிடலாம்." என்றார். பக்கத்திலிருந்தவர்களிடம் ஏதோ தெலுங்கில் 
  சொன்னார்.
 நாங்கள் இதற்கு முன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதில்லை. சொல்லப்போனால், 
  வால்டேருக்கு சித்தியோட அண்ணாக்கு லெட்டர் எழுதியிருகேன்டா என்று சொல்லும் வரை 
  சித்திக்கு ஒரு அண்ணா இருக்கிறார், அவர் வால்டேரில் இருக்கிறார் என்றும் 
  தெரியாது. அவருக்கும் நான் ஒருத்தன் இருக்கிறேன் என்று தெரிந்திராது தான். 
  கல்கத்தா மெயிலில் இவ்வளவு பேருக்கு இடையில் எப்படி என்னை அடையாளம் கண்டார்? 
  ஆச்சரியமாக இருந்தது. நான் கேட்டதாக நினைவில்லை. பழகினால் ஒழிய புதியவர்களிடம், 
  அதிலும் பெரியவர்களிடம் சகஜமாகப் பேச வந்ததில்லை எனக்கு. ஜன்னல் ஓரத்தில் 
  உட்கார்ந்திருக்கிறேன். வயது ஒன்று, அது போக, சுற்றி இருப்பவர்களைப் பார்த்து 
  மிரள மிரள் விழித்துக்கொண்டு அந்நியப்பட்டு உட்கார்ந்திருக்கும் இன்னொரு பதினாறு 
  வயசு பிள்ளையாண்டான் அந்தக் கல்கத்தா மெயிலில் கிடைப்பது கஷ்டம் தான்.
 
 எப்படியோ எல்லாம் நடந்து விடுகிறது. அதுவும் நல்ல பசியில் உருளைக் கிழங்கு 
  கறியும், வெங்காய சாம்பாருமாக வந்தால்... எப்படி தெரியும் இவை எனக்கு மிகவும் 
  பிடித்தவை என்று? என் இருக்கைக்கு எதிரே ப்ளாட்·பாரத்தில் இருந்த ஒரு சிமெண்ட் 
  பெஞ்சில் உட்கார்ந்து சாப்பிட்டேன். அவர் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்.
 
 சாப்பிட்டு முடிந்ததும் வேறே ஏதாவது வேணுமா? என்று கேட்டார். நான் தலையை 
  ஆட்டினேன். சரி போ உன் இடத்தில் போய் உட்கார்ந்து கொள், நேரம் ஆயிடுத்து என்றார். 
  முதல் தடவையா தனியா ரொம்ப தூரம் போறே. பயப்படாமே போ. அப்பாக்கும் சித்தப்பாக்கும் 
  லெட்டர் எழுது என்றார். வண்டி கிளம்பியது.
 
 பொழுது எப்படியோ போய்விடுகிறது. பிற்பகலில் எப்படியோ வண்டியில் கூட்டம் 
  நிறைந்தது. இரண்டு வாலிபர்கள், 24, 25 வயது இருக்கும். எனக்கு முன்னால் நின்று 
  கொண்டிருந்தனர். என் இடத்தில் ஜன்னல் ஓரமாக நானும் என் பெட்டியும். அவர்கள் கொஞ்ச 
  நேரம் பார்த்திருந்தனர். பின்னர் பக்கத்திலிருந்தவர்களிடம், "இந்த பையனை பெட்டியை 
  சீட்டுக்கு அடியில் வைத்துக்கொள்ளச் சொல்லுங்கள். நாங்கள் உட்காரலாமே" என்றான் 
  ஒருவன். அவர்கள், " ஏன்? உனக்குப் பேசத்தெரியாதா? நீயே சொல்லேன்" என்றார்கள். 
  பாவம், எனக்கு பெட்டியை கீழே வைத்துவிட்டால் அதை எப்படி திருட்டுப் போகாமல் 
  பாதுகாப்பது? என்ற கவலை. பக்கத்தில் வைத்துக்கொண்டு இது வரை செய்து கொண்டு வருவது 
  போல கையால் அணைத்துக்கொண்டிருந்தால் தான் திருட்டுப் போகாமல் இருக்கும் என்ற 
  நினைப்பு எனக்கு. சின்னப் பையன் பயந்துகொண்டிருக்கிறான் என்று அவர்களும் என்னிடம் 
  எதுவும் சொல்ல விரும்பவில்லை. அவர்களுக்கு நான் பெட்டியைக் கீழே வைத்து இடமும் 
  கொடுக்கவில்லை. பாவம் நின்று கொண்டே தான் வந்தார்கள். எனக்கு அவர்கள் பேசுவது 
  ஒருவாறாகப் புரிந்தாலும், எனக்கு பதில் பேச ஹிந்தியும் தெரியவில்லை. புதிய 
  இடத்தில் புதியவர்களிடம் ஏதோ பாஷையில் பேசவும் தோன்றவில்லை. அவர்கள் சொல்லச் 
  சொல்ல நான் ஒன்றும் பதில் சொல்லாமல் விழித்துப் பார்த்துக்கொண்டு தான் இருந்தேன். 
  நினைத்துப் பார்க்கிறேன். இப்போது இது மாதிரி நடப்பது சாத்தியமா? தாம் கஷ்டப்பட்ட 
  போதிலும் அந்த வாலிபர்கள் புரிந்து கொள்ளாது பிடிவாதம் பிடிக்கும் ஒரு சிறு 
  பையனிடம் அதட்டிப் பேசவோ, மிரட்டவோ, கூச்சல் போடவோ இல்லை. வெறுத்துப் போய் 
  அலுத்துக்கொண்டார்கள். இன்று அவர்களே கூட அப்படி நடந்து கொள்ள மாட்டார்கள் என்று 
  தான் நினைக்கிறேன். மனித உறவுகள் மாறிவிட்டன.
 
 நன்றாக சாப்பிட்டு விட்டதால், தனிமையில் சீக்கிரமே உறக்கம் வந்து விட்டது போலும். 
  காலையில் விழித்தது தான் எனக்கு நினைவில் இருக்கிறது. காலை ஏழு மணி அளவில் என்று 
  நினைக்கிறேன். வண்டி கரக்பூர் வந்து சேர்ந்தது. இங்கு நான் இறங்க வேண்டும். 
  பன்னிரண்டு மணிக்கு இங்கிருந்து பம்பாய் மெயில் பிடிக்கவேண்டும். பெட்டியுடன் 
  இறங்கி ப்ளாட்·பாரத்தில் நின்று கொண்டேன்.
 
 அப்பு மாமா எழுதியிருந்த அவரது நண்பருக்கு என்னை அடையாளம் கண்டு கொள்வதில் ஏதும் 
  சிரமமிருக்கவில்லை. காலில் செறுப்பில்லாது, வேட்டி கட்டிக்கொண்டு ஒரு இரும்புப் 
  பெட்டியும் ஜமக்காளமுமாக காலை நேரத்தில் கல்கத்தா மெயிலிலிருந்து இறங்கி கரக்பூர் 
  ப்ளாட்·பாரத்தில் நிற்கும் பதினாறு வயசு பிள்ளையாண்டான்கள் எத்தனை பேர் 
  இருப்பார்கள்? ஒருவர் என்னைச் சற்று தூரத்திலிருந்தே பார்த்ததும் கிட்ட 
  நெருங்குவதும் தெரிந்தது. "நீ தான் நாராயணஸ்வாமி சொன்ன பையனா? டாடா நகர் போறவனா?" 
  என்று கேட்டார். ஆமாம் என்று தலையாட்டினேன். அவர் பெட்டியை எடுத்துக் கொண்டார். 
  நான் படுக்கையை எடுத்துக்கொண்டு அவரோடு நடந்தேன். " வா, க்வார்ட்டர்ஸ்க்கு 
  போலாம். முதல்லே குளி, என்ன? ரெஸ்ட் எடுத்துக்கோ, ரொம்ப களைச்சுப் போயிருப்பே. 
  சமையல் ஆனதும் சாப்பிடு. அப்பறம் நான் வந்து உன்னை அழைச்சிண்டு வந்து ரயில் ஏத்தி 
  விடறேன். என்ன? சரியா? என்று பேசிக்கொண்டே வந்தார். நானும் ஒவ்வொன்னுக்கும் தலையை 
  ஆட்டிக்கொண்டே வந்தேன்.
 
 ஒரு அழகான வசதியான வீடு தான். மர கேட்டைத் திறந்து கொண்டு போனால் வீட்டுக்கு 
  முன்னால் சின்ன தோட்டம். வால்டேரில் சித்தியோட அண்ணாவைப் போலவே இவரும் 
  ரயில்வேயில் வேலை பார்ப்பவர் போல இருந்தது. எல்லா வீடுகளும் ஒரே மாதிரி. வீடும் 
  ஸ்டேஷனுக்கு அருகிலேயே. "சங்கோஜப் படாதே வா உள்ளே" என்று சிரித்த முகத்தோடு 
  வரவேற்றாள் அவருடைய மனைவி. " முதல்லே குளிச்சிட்டு வந்துடுப்பா. குளிக்க வெந்நீர் 
  வேணுமா, பச்சத் தண்ணீயே பரவாயில்லையா? என்று கேட்டாள்.
 
 "இல்லே வெந்நீர் வேண்டாம். பழக்கமில்லே" என்று சொல்லிக் குளிக்கப் போனேன். 
  குளித்துவிட்டு வந்தேன். சுகமாக இருந்தது. காபி வந்தது. இங்கு வெயில் அவ்வளவாக 
  இல்லை. வெளியில் வந்து தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதுவும் சந்தோஷமாக 
  இருந்தது. "என்ன போர் அடிக்கிறதா? ஏதாவது புஸ்தகம் தரட்டுமா, படிக்கிறயா, ஆனந்த 
  விகடன், கல்கி எல்லாம் இருக்கு?" என்று கேட்டாள். புன்னகை பூத்த முகத்துடன். 
  "உம்," தான் என் பதிலாக இருந்தது. இவர்கள் இருவரும் தான் போலிருந்தது. குழந்தைகள் 
  எதுவும் கண்ணில் படவில்லை. தோட்டத்தை ஒட்டிய சின்ன தின்னையிலேயே உட்கார்ந்து 
  படிப்பதும் தோட்டத்தைப் பார்ப்பதுமாக பொழுது கழிந்தது. ஒரு நாள் இடைவெளியில் 
  எங்கோ வந்தாயிற்று. புது புது மனிதர்கள். புதிய இடங்கள். நன்றாகத்தான் இருந்தது. 
  "நீ சாப்பிட்டுடேன். அவர் உன்னை ரயிலில் ஏற்றிவிட்டு வந்து சாப்பிடுவார்," என்று 
  அழைப்பு வந்தது. சாப்பிட்டு வந்து மறுபடியும் தோட்டத்தின் முன் திண்ணையில். 
  அவரும் வந்தார். "வா போகலாம்." என்றார். "வருகிறேன்," என்று சொல்லி விடைபெறுவது 
  போல் தலையசைத்துக்கொண்டே கிளம்பினேன்.
 
 ரயிலில் கூட்ட நெருக்கடி ஏதும் இல்லை. தாராளமாக உட்கார இடம் கிடைத்தது. டாடா நகர் 
  வரை, நான்கைந்து மணி நேர பிரயாணம் என்று நினைக்கிறேன். சௌகரியமாகத் தான் 
  இருந்தது. டாடா நகர் வந்து ரயில் நின்றதும் அப்பு மாமா ப்ளாட்·பாரத்தில் நின்று 
  கொண்டிருப்பதைப் பார்த்தேன். இறங்கும் போதே பெட்டியை வாங்கிக்கொண்டார். "சௌகரியமா 
  இருந்ததா? ஒண்ணும் கஷ்டமா இல்லையே?" சம்பிரதாயக் கேள்விகள் இல்லை. பள்ளிப்படிப்பு 
  முடித்த பையன் இரண்டு நாள் ரயிலில் தனியாக வந்திருக்கிறான் என்ற நினைப்பு 
  பின்னிருக்கும் கட்டாயம். " கரக்பூரில் சாப்பிட்டயா, என் ·ப்ரண்டுக்கு 
  எழுதியிருந்தேனே, வந்தானா, உன்னைக் கண்டு பிடிசுட்டானா, இல்லே ரொம்ப நேரம் 
  காத்திருந்தியா?" என்று சரமாரியாக கேள்விகள். இப்போது நான் வாய்மூடி 
  இருக்கவில்லை. கேள்வி கேட்பது மாமா. அதுவும் தமிழில். ஸ்டேஷனிலிருந்து பஸ்ஸில் 
  தான் போனோம் என்று நினைவு. மாமா இருந்த இடம் பிஷ்டுபூர். டாடா இரும்புத் 
  தொழிற்சாலை நிர்வாகம் உருவாக்கிய குடியிருப்பு.
 
 கரக்பூர் மாதிரியே மிக வசதியாகவும் ஆடம்பரமேதுமின்றியும் கட்டப்பட்ட வீடுகள். 
  இரண்டு முன் அறைகள். முன் திண்ணை. வீட்டின் பின்னே கொஞ்சம் இடைவெளி விட்டு அவுட் 
  ஹவுஸ் போல இரண்டு அறைகள். வீட்டில் மாமி. பத்து வயசில் ஒரு பையன், சதாசிவம். 
  "வாடாப்பா " என்று மிக அன்போடும் சிரித்த முகத்தோடும் வரவேற்றாள் மாமி.
 
 "ஆமாம். நீ என்ன நார்த் ரோடு, நார்த் ரோடுன்னே எழுதறே?. இது என். ரோடு. நார்த் 
  ரோடு இல்லே. ஏ, பி, சி ன்னு தான் இங்கே ரோடுகளுக்கு பேர் வச்சிருக்கு. நல்ல 
  வேளையா லெட்டர் வந்து சேர்ந்ததே. நார்த் ரோடுன்னு ஒண்ணும் கிடையாதுன்னு அவன் உன் 
  கார்டைத் திருப்பி அனுப்பாமே கொடுத்தானே," என்றார் மாமா. பக்கத்திலிருந்த மாமி 
  சிரித்துக்கொண்டிருந்தாள். "அட அசடே" என்று சொல்வது போலிருந்தது.
 
 மறுபடியும் "குளிக்கணுமா, வெந்நீர் போடட்டுமா?" என்று கேட்டாள் மாமி. "வேண்டாம். 
  காலேலே கரக்பூரிலேயே குளிச்சாச்சே, அது போதும்." என்றேன். இரண்டு நாட்களுக்குப் 
  அப்போதுதான் மறுபடியும் வாய் பேச ஆரம்பித்திருக்கிறது என்று தெரிந்தது.
 
 
 நினைவுகளின் சுவட்டில் -(48)
 
  காலையில் 
  எழுந்ததும் முதல் வேளையாக, "இங்கே டைப் ரைட்டிங் ஷார்ட் ஹாண்ட் இன்ஸ்டிட்யூட் 
  இருக்கு. பக்கத்திலே தான். நடந்தே போயிடலாம். அது கத்துக்கணும் நீ. கத்துண்டா 
  தான் எங்கேயும் வேலை கிடைக்கும். அதை நடத்தறவர் எனக்குத் தெரிஞ்சவர் தான். 
  அவருக்கு எப்படி சௌகரியம்னு தெரியாது. போய் கேட்கலாம். காலம்பறவும் சாயந்திரமும் 
  ஒரொரு மணி நேரம்னு வச்சுக்கலாம். போய்ப் பார்ப்போம் அவரை. சேத்துப்பார்னா 
  இன்னிக்கே உன்னைச் சேர்த்துடறேன். சேத்துட்டு நான் அப்பறமா நான் ஆ·பீஸ¤க்குப் 
  போறேன்," என்றார். பின் இரண்டு நிமிஷம் கழித்து, "இல்லே ரெண்டு நாள் ரயில்லே 
  வந்திருக்கே. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துண்டுட்டு அப்புறமா போகலாமா?" என்று கேட்டார். 
  "நான் இன்னிக்கே போகலாம். அப்படி ஒண்ணும் களைப்பா இல்லே" என்றேன். "சபாஷ், 
  அப்படித்தான் இருக்கணும்" என்றார் சந்தோஷமாக. 
 பின் என்ன? சேர்ந்தாயிற்று. மாடியில் தான் இன்ஸ்டிட்யூட்டும் அவர் வீடும். 
  ஐந்தாறு மெஷின்கள். முன்னால் உட்கார்ந்து டைப் செய்துகொண்டிருந்த நாலைந்து பேர். 
  ஷார்ட் ஹாண்ட் படிக்கும் இன்னுமொரு நாலைந்து பேர். "இவன் தான் என் மருமான். 
  ஊரிலேர்ந்து வந்திருக்கான். இவனையும் கவனிச்சுக்குங்கோ. கொஞ்சம் சங்கோஜப் 
  பேர்வழி." என்று மாமா சொல்ல, அதற்கு, "அதுக்கென்ன நாளானா சரியாப் போயிடும் 
  இப்பத்தானே ஊர் விட்டு வந்திருக்கான். தூர தேசம். பாஷை புதுசு. நாமளும் 
  அப்படித்தானே இருந்தோம்." என்றார் அவர்.
 
 காலையில் ஒரு மணிநேரம் டைப் ரைட்டிங் என்றும் சாயந்திரம் ஏழு மணிக்கு மேல் ஷார்ட் 
  ஹாண்ட் சொல்லிக்கலாம் என்றும் சொன்னார். ஒரு மெஷின் காலியானதும் என்னை உட்கார 
  வைத்து சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார். "சரி பாத்துக்குங்கோ. நான் வரேன். 
  ஆ·பீஸ¤க்குப் போகணும்" என்று மாமா கிளம்பிவிட்டார்.
 
 அவர் சொல்லிக்கொடுத்தபடி a s d f என்று அடிக்க ஆரம்பித்தேன். என் 
  பக்கத்திலிருந்து வந்த சப்தத்தைக் கேட்டு, பக்கத்திலிருந்த மற்றவர்கள் என் பக்கம் 
  பார்க்கவே, "ரொம்ப ஓங்கி அடிக்காதே. மெதுவா அடி. முதல்லே அப்படித்தான் இருக்கும். 
  ஆனால் இப்பவே கவனமா இருந்தா தானே சரியாயிடும்." என்றார். எல்லாரும் அவருக்கு 
  சின்ன பசங்கள். கண்டிப்பு, அன்பு, அக்கரை எல்லாம் கலந்திருந்தது அவரிடம். புதிதாக 
  ஏதோ கற்றுக்கொள்கிறோம் என்ற சுவாரஸ்யம். புது அனுபவமாகவும் இருந்தது.
 
 ஒரு மணிநேரம் போனதே தெரியவில்லை. நான் டைப் செய்ததைப் பார்த்தார். "பரவாயில்லை. 
  நாளைக்குப் பார். சரியாயிடும்." என்று ஆதரவாகச் சொல்லி, சாயந்திரம் ஏழு மணிக்கு 
  வரியா, இல்லே மாத்தணுமா? என்று கேட்டார். "ஏழு மணிக்கே வரேன்" என்று 
  சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
 
 சாயந்திரம் போனேன். பிட்மன் ஷார்ட் ஹாண்ட் புஸ்தகம் ஒண்ணு வாங்கிகோ என்ன? என்று 
  சொல்லி ஆரம்பித்தார் இதுவும் சுவாரஸ்யமாகத்தான் இருந்தது. இரண்டிலும் என்ன எனக்கு 
  நிம்மதி அளித்தது என்ன என்றால், எதையும் திரும்பத் திரும்பப் படித்து உருப்போட்டு 
  ஞாபகத்தில் வைத்துக்கொள்ளத் தேவையில்லை. ஒரு மணி நேரம் எழுதுவதோ, டைப் செய்வதோ 
  அத்தோடு சரி. பின் அதைப் பற்றிக் கவலைப் படவேண்டாம். மற்ற பள்ளிப் பாடங்கள் போல 
  அது நாள் முழுதும் துரத்துவதில்லை.
 
 சாயந்திரம் வீடு திரும்பியதும், மாமா கேட்டார். "எப்படி இருந்தது சாமா? கஷ்டமா 
  இருக்கா?" என்று. "இல்லை எனக்கு சுவாரஸ்யமாத்தான் இருக்கு. இதெல்லாம் எனக்கு 
  புதுசு இல்லியா? அப்புறம் வேலைக்குப் போகணும்னா இதெல்லாம் தெரிந்து தானே ஆகணும்? 
  என்றேன். மறுபடியும் ஒரு "சபாஷ்" கிடைத்தது. "சாப்பிட வரலாம் என்றாள் மாமி. 
  "இன்னிக்கு ரொட்டிடாப்பா. இனிமே ராத்திரி ஒரு வேளை ரொட்டி சாப்பிட பழகிக்கோ 
  என்ன?" என்றாள் மாமி. சுடச் சுட ரொட்டியும் சப்ஜியும் ருசியாகத் தான் இருந்தது. 
  இலேசாக குளிர் ஆரம்பித்துவிட்ட பருவம் அது.
 
 சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, மாமா சொன்னார். "நாளைக்கு ஒண்ணு செய். காலம்பற 
  இன்ஸ்டிட்யூட்டிலேருந்து திரும்பி வந்ததும் சாப்பிடு. சாப்பிட்டுட்டு வெளீலே வா. 
  என். ரோடு முனையிலேர்ந்து வலது பக்கம் நேரே இன்ஸ்டிட்யூட்டுக்குப் போறே இல்லையா? 
  அப்படிக்கில்லாம இப்போ இடது பக்கம் திரும்பி நேரா வா. ஒரு மைல் நடந்தேன்னு 
  வச்சுக்கோ. இடது பக்கம் டவுன் அட்மினிஸ்டிரேஷன் ஆ·பீஸ்-னு போர்டு போட்டிருக்கும். 
  அங்கே வந்து என் பேரைச் சொல்லிக் கேட்டு என் ரூமுக்கு வா. என்ன வரயா?. இனிமே 
  தினம் அங்கே ஒரு மணி நேரம் என்ன தான் நடக்கறதுன்னு பார். என்னமோ ஆ·பீஸ்ங்கராளே, 
  மாமாவும் இன்னம் மத்தவாளும் என்னதான் பண்றான்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? நீயும் 
  அதைத் தானே பண்ணப் போறே? என்ன வரயா, இல்லே சிரமமா இருக்கா? படுத்துத் தூங்கணுமா?" 
  என்றார் சிரித்துக்கொண்டே. "வரேன்," என்று நானும் சிரித்துக்கொண்டே சொன்னேன்.
 
 மறு நாள், இன்ஸ்ட்டியூட்டிற்குப் போய் வந்ததும் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினேன் 
  புதிய ஊரில் நடந்து புதிய இடங்களைப் பார்ப்பது சுகமாகத்தானே இருக்கும். அதுவும் 
  தினம் 11 மைல் பள்ளிக்கு நடந்து போய்வந்தவனுக்கு ஒரு மைல் தூரம் பெரிய விஷயம் 
  இல்லை. டவுன் அட்மினிஸ்டிரேஷன் அலுவலகக் கட்டிடமும் வந்தது. கேட்டுக்கொண்டு 
  மாமாவின் அறைக்குச் சென்றேன். அறைச் சுவரில் தொங்கிய போர்டைப் பார்த்ததும் அவர் 
  தான் அட்மினிஸ்டிரேடிவ் ஆ·பீஸர் என்று தெரிந்தது. கதவைத் திறந்து கொண்டு உள்ளே 
  போனேன். உள்ளே மாமா யாரோடோ பேசிக்கொண்டிருந்தார். உள்ளே நுழைந்ததும், மாமா 
  என்னைக் காட்டி 'இது என் மருமான் ஊரிலிருந்து வேலை தேடி வந்திருக்கிறான்." என்று 
  சொன்னார். பேசிக்கொண்டிருந்தவர் எழுந்து நின்று கைநீட்டி 'welcome, happy to meet 
  you" என்று வரவேற்றார். நானும் அவருடைய நீட்டிய கையுடன் கைகுலுக்கினேன், 
  புன்னகையுடன். "உட்கார்' என்று சொல்லி அவருடன் பேசி முடித்துவிட்டு என் பக்கம் 
  திரும்பினார். "குட், சரியா வந்துட்டயே. பாத்தியா, நீ சின்ன பையன்னும் பார்க்காமே 
  உனக்காக எழுந்து நின்று, 'welcome' சொன்னாரில்லையா? அது போல நீயும் இந்த மாதிரி 
  சந்தர்ப்பத்திலே எழுந்து நின்னு மரியாதை கொடுக்கணும், புரிஞ்சுதா? எழுந்து நின்னு 
  கைகொடுத்தா மட்டும் போறாது. thank you-ன்னாவது ஒரு வார்த்தை சொல்லணும்" என்றார். 
  பின் இரண்டு பேரை மணி அடித்து வரவழைத்தார். ஒருவர் வந்தார். தமிழர். நல்ல சிகப்பு 
  பாரி உடம்பு. நெற்றியில் சந்தனம்."இவர் தான் டைப் செக்ஷன் இன்சார்ஜ்" என்று 
  அறிமுகப்படுத்தி வைத்தார். சொன்னார், "இவன் என் மருமான். ஊரிலேருந்து வேலை 
  வேணும்னு வந்திருக்கான். கொஞ்ச நாளைக்கு உங்க கிட்டே இருக்கட்டும். டைப் 
  ரைட்டிங்குக்கு நேத்திலேருந்து போறான். சும்மா ஆபீஸ்னா என்னன்னு தெரியட்டும்னு 
  கூப்பிட்டேன். உங்க ரூம்லே ஒரு சேரைப் போட்டு உக்காத்தி வையுங்கோ. பார்த்துப் 
  பழகிக்கட்டும். ஏதாவது கேட்டான்னா என்னன்னு சொல்லுங்கோ." என்றார். அதே போல 
  இன்னொருவரையும் அறிமுகப்படுத்தினார். அவர் தமிழரில்லை. "இங்கே ஒரு மணி நேரம், 
  டைப் செக்ஷன்லே ஒரு மணி நேரம் சும்மா உக்காந்து போய் பார், ஏதாவது கேக்கணும்னு 
  தோணித்துன்னா கேள்." என்று சொல்லி அனுப்பினார்.
  மாமா அவர் வகையில் எனக்கு பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார் என்று 
  பின்னால் அது பற்றி நினைப்பு வரும்போது தோன்றிற்று. இரண்டாம் நாளோ என்னவோ, 
  ராத்திரி சாப்பாட்டுக்குப் பிறகு, திடீரென, நீ கொஞ்சம் 'புக் கீப்பிங்க்' 
  என்னன்னு தெரிஞ்சிண்டா நன்னாருக்கும். எங்கியாவது அக்கௌண்ட்ஸிலே தான் வேலை 
  இருக்குன்னு வச்சுக்கோ, நீ அதுக்குப் போகலாமில்லியா?" என்று எனக்கு அவரே அந்த 
  பாடமும் ஆரம்பித்தார். அது கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நடந்தது. எப்படி ஒவ்வொரு 
  வரவும் செலவும் எந்தெந்தக் கணக்கில் சேர்ப்பது, எப்படி வெவ்வேறு கணக்குகளை 
  ஆரம்பிப்பது, என்று பின்னால் கடைசியில் 'பாலன்ஸ்ஷீட்' எப்படி போடுவது என்பது வரை 
  சொல்லிக்கொடுத்து விட்டார். நிறைய அக்கறை மாத்திரமல்ல, பொறுமையும் கொண்டவர் என்று 
  தெரிந்தது. எனக்கு மிகக் கஷ்டமாக இருந்தது இந்த மாமாவின் இந்த 'புக் கீப்பிங்க் 
  க்ளாஸ்'கள் தான். புரிந்து கொள்ளவும் வேண்டும், அவரிடம் திட்டும் வாங்கக் கூடாது 
  என்றால் கஷ்டமாகத்தான் இருந்தது. இதை எனக்கு சாத்தியமாக்கிக் கொடுத்தது அவர் 
  பொறுமை. கடுமை காட்டாமல் கண்டிப்புடன் இருப்பது அவருக்கு இயல்பாகக் கைவந்த ஒன்று 
  எனத் தோன்றியது.
 
 அவர் வீட்டில் வரவேற்பு அறையில் அந்தக் கால ரேடியோ பெட்டி ஒன்று இருந்தது. மேலே 
  சுவற்றில் ஒரு திகம்பர ஸ்வாமிகளின் பெரிய படம் ஒன்று. அது யாரென்று இப்போது 
  நினைவில் இல்லை. அடுத்து மகாத்மா, பின் கஸ்தூர்பா இருவரின் முகச் சித்திரங்கள், 
  பென்ஸிலால் வரையப்பட்டவை கண்ணாடி போட்டு சட்டமிட்டு மாட்டப் பட்டிருந்தன. வந்த 
  ஒரு சில தினங்களில், ஒரு நாள் அதைப் பார்த்துக்கொண்டிருந்த போது, "என்ன பாக்கறே, 
  நன்னா இருக்கா? நான் தான் வரைஞ்சேன்." என்றார் சிரித்துக்கொண்டே. பின் தொடர்ந்து, 
  "நீ வரைவியோ? " என்றும் கேட்டார். "எனக்கா வரையத் தெரியாது. ஆனால் ஒரு படத்தைப் 
  பார்த்து சுமாரா காபி பண்ணிடுவேன்" என்றேன். மறு நாள் அவர் மாலை வீடு வந்த போது, 
  அவரிடம் நான் காபி செய்திருந்த சுபாஷ் போஸ் படத்தைக் காண்பித்தேன். பெரிய அளவில் 
  அல்ல. சிறிதாக, ஒரு சின்ன நோட்புக்கில் வரையக்கூடிய அளவில். 3" x 4" அளவில். "அட, 
  பரவாயில்லையே!" என்று சந்தோஷமும் ஆச்சரியமுமாக பார்த்து, பின் அது கார்பன் வைத்து 
  காபி செய்ததா? என்று கேட்டார். நான் காபி செய்த ஒரு புத்தகத்தில் இருந்த படத்தைக் 
  காண்பித்தேன். இரண்டும் வேறு வேறு அளவில் இருந்ததைப் பார்த்து, "இரு இன்னிக்கு 
  ராத்திரி உனக்கு அளவு எடுத்து காபி பண்ணக் கத்துக்கொடுக்கறேன்." என்றார். அன்று 
  இரவு சாப்பாடு எல்லாம் ஆன பிறகு, ஒரு டிராயிங்க் பேப்பர் எடுத்துக்கொண்டு வந்து 
  காபி செய்ய ஒரு பத்திரிகையில் வந்த ஒரு போட்டோவை வைத்துக்கொண்டு அவர் பையன் 
  சதாசிவத்தின் காம்ப்ஸ், ஸ்கேல் எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டார். "இதோ பார், 
  இப்படி அளவெடுக்கணும்" என்று அளவெடுத்து அதை காபி செய்யப் போகும் பேப்பருக்குத் 
  தகுந்தவாறு எப்படி பெரிதாக்கிக்கொளவது என்றெல்லாம் விவரிக்க ஆரம்பித்து விட்டார். 
  அளவெடுத்து பென்சிலால் புள்ளி வைத்துக்கொண்டு பின் 'அவுட் லைன்' ஒன்று வரைந்து 
  கொள்ளவேண்டும் என்று படிப் படியாக சொல்லிக்கொடுக்க நானும் செய்து கொண்டு வந்தேன். 
  ஆனால் இந்த அளவெடுப்பதெல்லாம் எனக்கு போர் அடித்தது. ஆனால் அதை அவரிடம் சொல்லவோ 
  காட்டிக்கொள்ளவோ இல்லை. இவ்வளவு சிரத்தையும் அக்கறையும் கொண்டவரிடம் எப்படிச் 
  சொல்வது? மறு நாள் சனிக்கிழமையோ ஞாயிற்றுக் கிழமையோ, அவருக்கும் சரி, எனக்கும் 
  நாள் பூராவும் விடுமுறை. காலை ஆகாரம் ஆனதும், "வா, போகலாம். ஆர்ட் ஸ்கூல் ஒண்ணு 
  இங்கே இருக்கு. நீ வரைஞ்சயே, அதை எடுத்துக்கோ" என்று சொல்லிக் கிளம்பிவிட்டார்.
 vswaminathan.venkat@gmail.com  
   |