| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை 
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் 
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை 
கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் 
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் 
ngiri2704@rogers.com 
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் 
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு 
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு 
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு 
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் 
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் 
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே 
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் 
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் 
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் 
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது 
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து 
கொள்ளலாம். |  | 
| நினைவுகளின் தடத்தில் .. |  
| நினைவுகளின் தடத்தில் (33) 
 - வெங்கட் சாமிநாதன் -
 
 (1947 - கும்பகோண - வாசம்)
 
  அந்நாட்களில் 
  எனக்குப் படிக்கக் கிடைத்த ஜகன்மோஹினி இதழ் ஒன்றே ஒன்று தான். ஆனந்த விகடன் 
  அளவில் சுமார் அறுபதோ எண்பதோ பக்கங்கள் கொண்ட பத்திரிகை அது. மாதப் பத்திரிகை. அந்த இதழில் 
  வெளிவந்திருந்த வை.மு.கோதை நாயகி அம்மாளின்
 நாவல் என்ன, நான் படித்த அத்தியாயத்தில் என்ன கதை சொல்லப்பட்டிருந்தது 
  என்பதெல்லாம் இப்போது நினைவில் இல்லை. மோகி சுத்தானந்த பாரதியார் பக்கங்களில் ஒரு 
  பெரிய பட்டியல் அவர் எழுதிய நூல்களின் பட்டியல் கடைசியில் தரப்பட்டிருந்தது. 
  இவற்றை யெல்லாம் தமிழ் மக்கள் பாதுகாக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் அந்தப் 
  பட்டியலின் முடிவில் இருந்தது. வை.மு.கோ எனக்கு அப்போது தான் தற்செலாகக் கிடைத்த 
  ஜகன் மோகினி இதழின் மூலம் அறிமுகம் என்றாலும், யோகியாரை நான் முன்னதாகவே 
  அறிந்தும் படித்திருந்தேன். பாடப்புத்தகத்திலும் அவரது பாடல் ஒன்று இடம் 
  பெற்றிருந்தது என்று நினைவு. தமிழ் பற்றி அவர் எழுதிய புத்தகம்
 ஒன்று படித்திருந்தேன். அவர் மொழிபெயர்த்திருந்த விக்டர் ஹ்யூகோவின் நாவல் 'ஏழை 
  படும் பாடு' படித்திருந்தேன். அக்காலங்களில் யோகியார் எனக்கு மிகவும் ஆதர்சமாக 
  இருந்தவர். நிறையவும் எழுதியவர். 'பாரத சக்தி மகா காவ்யம்' எழுதிக் 
  கொண்டிருந்தார் எனத் தெரியும். அதிலிருந்து ஒரு பகுதி பாடப்புத்தகத்தில் இருந்ததோ 
  ஒரு வேளை என்று ஒரு நினைவு நிழலாடுகிறது.
 
 பானாதுரை ஹைஸ்கூலுக்குப் போகும் வழியில் காந்தி பார்க்குக்குப் பிறகு டவுன் 
  ஹைஸ்கூலுக்கு எதிரே கடைத்தெரு. அந்தவழியாகத்
 தான் பள்ளிக் கூடத்துக்கு அனேக நாட்கள் போவேன். ஒரு புத்தகக் கடையில் ஒரு நாள் 
  காலையில் அன்றாட பத்திரிகைத் தலைப்புச்
 செய்திகளோடு தொங்கவிடப்பட்ட போஸ்டரில் 'பிரபல எழுத்தாளர் புதுமைப் பித்தன் 
  மறைந்தார்" என்று இருந்தது. அப்போது தான்
 புதுமைப் பித்தன் பெயரையே முதலில் கேள்விப்படுகிறேன். முதன் முதலாகக் கேட்கும் 
  அந்தப் பெயர் நினைவில் நிலைத்துவிடக்
 காரணம், அதற்கு அடுத்த வாரம் அப்பா நடத்தி வந்த சர்குலேஷன் லைப்ரரிக்கு வந்த 
  கல்கி இதழில் புதுமைப் பித்தன் படமும், அவர்
 எழுதிய 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்" என்னும் நீண்ட கதையும் கல்கியின் சில 
  பாராட்டு வரிகளோடு பிரசுரமாகியிருந்தது. கதை
 படிக்க தமாஷாக இருந்தது. அப்போதெல்லாம் கல்கி யைத் தவிர வேறு பிரபல எழுத்தாளர் 
  யாரையும் நான் படித்தவனில்லை. என்
 வகுப்பில் இருந்த கவிஞனான ஆர். ஷண்முகம் மூலம் கிடைத்த முதல் இரவு நாவல் படித்ததை 
  வைத்துக்கொண்டு ரகுநாதனைச் சேர்க்க முடியாது தான். இரண்டு வருடங்கள் கழித்து 
  ஹிராகுட்டில் வேலை பார்க்கத் தொடங்கிய பிறகு தான் ரகுநாதன், அழகிரிசாமி, புதுமைப் 
  பித்தன் போன்றவர்கள் என் படிப்பு புதிய தடங்களுக்கு மாற வழி அமைக்கிறார்கள். அது 
  1951-ல். அது மிகப் பெரிய மாற்றம். அது
 பின்னர், உரிய இடத்தில்.
 
 கதைக் கடல் என்றோ என்னவோ ஒரு புத்தகம். காந்தி பார்க் எதிரில் இருந்த பத்திரிகைக் 
  கடை ஒன்றில் பார்த்தேன். பல அயல் மொழிச்
 சிறு கதைகளின் தொகுப்பு. அது எப்படி பின்னர் என் கைக்குக் கிடைத்தது என்பது 
  நினைவில் இல்லை. அதையெல்லாம் வாங்கிப் படிக்க என்னிடம் காசு இருந்ததில்லை. ஆனால் 
  எப்படியோ கிடைத்து அதில் படித்த ஒரு கதை, ஐரோப்பிய மொழிபெயர்ப்புக் கதை நினைவில் 
  இருக்கிறது. ஒரு செல்வந்த வணிகன். அடிக்கடி வெளியூர்களுக்கு வியாபார நிமித்தம் 
  போய்விடுபவன். வீட்டில் அவனது இளம் மனைவி. தொடர்ந்து அடிக்கடி தனிமையில் 
  இருக்கும் இளம் மனைவிக்கு ஒரு வாலிபத் துணை கிடைக்கிறது. அவர்களுக்கிடையே கள்ளக் 
  காதல். ஒரு நாள் திடீரென்று, அவர்கள் இருவரும் வீட்டினுள் இருக்கும் போது 
  வெளியூர் சென்றிருந்த கணவன் வந்து விடுகிறான். அவசர அவசரமாக காதலனை வெளியே 
  அனுப்புவதற்கு வழி தெரியாது, அவனை பக்கத்து அலமாரிக்குள் அடைத்துக் கதவைச் 
  சாத்துகிறாள். உள்ளே வந்த கணவன் மனைவியின் முகத்தில் மகிழ்ச்சிக்குப் பதில் 
  பயத்தையும் மிரட்சியையும் கண்ட கணவன், திகைத்து, என்ன விஷயம் என்று கேட்கிறான். 
  ஒன்றுமில்லையே என்று கூட சொல்ல அவள் தடுமாறுகிறாள். அவனுக்கு சந்தேகம் 
  வலுக்கிறது. அவள்
 பதிலில் திருப்தி அடையாது சுற்றுமுற்றும் பார்க்கிறான். சாத்தியிருக்கும் 
  அலமாரியின் மேல் அவள் கண்கள் விட்டு விட்டுப் பதிவதைக் கண்டு, அலமாரியில் என்ன 
  இருக்கிறது, அப்படி மிரண்டு பார்க்கிறாய்? என்று கேட்டுக்கொண்டே அலமாரியைத் 
  திறந்து பார்க்க
 அலமாரியை நோக்கிச் செல்ல, அவள் ஒடிச் சென்று அலமாரிக்கு முன்னால் நின்று கொண்டு, 
  "இதில் ஒன்றுமில்லை என்றேனே" என்று
 பதட்டத்துடன் கூச்சலிடுகிறாள். அவன் சற்று திகைத்து நின்று பின் "சரி, பதறாதே, 
  இதில் ஒன்றுமில்லையல்லவா?," என்று
 சொல்லிக்கொண்டே, தன் வேலையாளைப் பார்த்து, "நீ போய் கொத்தனாரை உடனே அழைத்து வா. 
  கொஞ்சம் அவசர வேலை
 இருக்கிறது என்று சொல்" என்று அனுப்புகிறான். கொத்தனார் வருகிறான். "இந்த 
  மூடியிருக்கும் அலமாரியைத் திறக்காது, அதை
 அடைத்து ஒரு சுவர் எழுப்பு. என் முன்னாலேயே உடனே செய்" என்று கட்டளையிட, 
  எல்லோரும் பார்த்திருக்க சுவர் எழுகிறது சற்று
 நேரத்தில். திடுக்கிட்ட மனைவி செய்வதறியாது, ஏதும் சொல்லவும் முடியாது 
  தவிக்கிறாள். கொஞ்ச நேரத்தில் ஒரு கொத்தனார்
 வருகிறான். அலமாரியை அடைத்து சுவர் எழுப்பப்படுகிறது.
 
 அதையே வெறித்துப் பார்த்துக்கொண்டு நிற்கிறாள் அந்த இளம் மனைவி. அங்கிருந்து வந்த 
  வேதனை கலந்த ஒரு முனகல் குரல் நீண்ட நேரம் கேட்டுக்கொண்டே இருந்தது. பின் 
  அடங்கிவிட்டது, என்று அந்தக் கதை முடிகிறது.
 
 இந்த மாதிரி கதையா இதற்கு முன் நான் படித்ததே இல்லை. படித்ததும் மனசு என்னவோ 
  மாதிரியாக இருண்டு போயிற்று. அந்த
 உணர்வை என்னவென்று சொல்வதற்குத் தெரியவில்லை. சோகமான கதைகள், படங்கள் பார்த்து 
  துக்கம் தொண்டை அடைத்து,
 பேசமுடியாமல் போவது, அழுவது என்பதெல்லாம் இல்லை. அப்படி நேர்ந்தது, 
  கும்பகோணத்தில் நான் படித்துக்கொண்டிருந்த போது தான்,
 1948--ல், முதன் முதலாக, அனேகமாக கடைசியாகவும் பார்த்த ஒரு ஹிந்தி படம். விஜய 
  லக்ஷ்மி டாக்கீஸில் பார்த்தேன். ஜுக்னு என்பது
 படத்தின் பெயர். கும்பகோணத்திற்கு ஹிந்தி படம் வருமா? பார்க்க ஜனங்கள் 
  வருவார்களா? அப்போது கும்பகோணத்துக்கு இங்கிலீஷ்
 படம் வந்து கூட நான் பார்த்ததில்லை. அப்படியிருக்க ஹிந்தி படம்? இப்போது 
  நினைத்துப் பார்க்கும் போது புதிராகவும்
 வேடிக்கையாகவும் தான் இருக்கிறது. மதுரையில் ஹிந்திப் படங்களுக்கு ஒரு கூட்டம் 
  இருந்தது. அன்மோல் கடி, ரத்தன் என்ற இரண்டு படங்கள் பார்த்தது பற்றி 
  எழுதியிருந்தேன். அதன் பிறகு, கிட்டத்தட்ட ஒரு வருஷத்திற்குப் பிறகு இப்போது 
  ஜுக்னு. நன்றாக ஞாபகம் இருக்கிறது. திலீப் குமாரும், நூர்ஜஹானும் நடித்தது. 
  நூர்ஜஹான் மிகப் புகழ் பெற்ற பாடகி, பாகிஸ்தான் பிரிந்ததும் பாகிஸ்தானுக்குப் 
  போய்விட்டாள். பாகிஸ்தானின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றிய போது ராணுவத்தில் 
  தலைமையில் இருந்த ஜெனரல் யாஹ்யா கானுக்கு மிகவும் பிரியமானவள், தன் ஓய்வு 
  நேரங்களில் நூர்ஜஹானை அழைத்து பாடச்சொல்லிக் கேட்பது அவர் விருப்பம்
 என்பதெல்லாம் பின் வருடங்களில் நம்மை வந்தடைந்த செய்திகள். இதெல்லாம் படிக்க, 
  சொல்ல சுவாரஸ்யமாக இருந்தாலும் எவ்வளவு
 தூரம் உண்மை என்பது தெரியாது. கொஞ்சம் உண்மையும் கொஞ்சம் மசாலாவும் சேர்ந்து சுவை 
  கூட்டப்பட்டது என்று நினைத்துக்
 கொள்வேன். பின்னர் எண்பதுகளிலோ அல்லது தொன்னூறுகளிலோ என்னவோ நூர்ஜஹான் இந்தியா 
  வந்திருந்த போது அவருக்கு
 அளிக்கப்பட்ட வரவேற்பில் நூர்ஜஹானின் ரசிகர்கள் இன்றும் அவர் விட்டுச் சென்ற பழைய 
  நினைவுகளோடு வாழ்வதாகவும் அவர்
 திரும்ப எப்போது வந்து அந்நினைவுகளைப் புதுப்பிப்பார் என்று காத்திருந்ததாகவும், 
  திலீப் குமார் மிக அழகான கவித்வமான உருதுவில் பேசினார். சுமார் 40-50 வருட 
  பிரிவிற்குப் பிறகும் திலீப் குமாருக்கும் நூர்ஜஹானுக்கும் இடையே இன்னமும் 
  உயிர்த்திருக்கும் ஈர்ப்பு திலீப் குமாரின் பேச்சில் கனிந்திருந்தது. அவர்கள் 
  இருவரும் சேர்ந்து நடித்த முதல் படம், ஒரே படமாகிவிட்ட அந்தப் படம் எனக்குப் 
  பார்க்கக் கிடைத்ததில், அதுவும் கும்பகோணத்தில், எனக்கு மகிழ்ச்சி தான். சோகமயமான 
  பாத்திரங்களில் அமைதியுடனும் ஆழத்துடனும் நடிப்பதில் பெயர் பெற்ற அவரது சோக 
  குணச்சித்திரத்தையும், திரை இசைக்கே பெயர் பெற்றிருந்த நூர்ஜஹானையும் ஒருசேர 
  ஜூக்னு வில் கிடைத்தது பற்றி பின்னர் வெகு வருடங்களாக நான் நினைத்து 
  மகிழ்ந்ததுண்டு. இதையெல்லாம் மீறி திலீப் குமாரின் உச்ச கட்ட சோகத்தின் 
  ஆழத்தையும் அமைதியையும் ஜோகன் (1950 என்று நினைக்கிறேன்) என்ற படத்தில் பார்த்த 
  பிறகு ஜுக்னுவின் நினைவுகள் மங்கி விட்டன.
 
 இதெல்லாம் போகட்டும். கும்பகோணத்தில் 1948-ல் ஜுக்னு பார்த்த போது, எனக்கு திலீப் 
  குமார் நூர்ஜஹான், இருவரையும் அப்போது
 தான் தெரிந்துகொள்கிறேன். ஹிந்தி அந்த வருடம் தான் படிக்க ஆரம்பித்திருந்தேன் 
  என்றாலும், படத்தின் ஹிந்தி எனக்குப் புரிந்ததில்லை. பள்ளிப் பாடப்புத்தகத்தில் 
  கற்பிக்கப்படும் ஹிந்தி வேறு. திலீப் குமாரும் நூர்ஜஹானும் பேசும் ஹிந்தி வேறு 
  பாஷைதான். இருப்பினும் அந்தப் படம் என்னில் மிகுந்த பாதிப்பை விட்டுச் சென்றது. 
  கல்லூரியில் பெண்கள் ஆடிப்பாடி செய்யும் கலாட்டா எனக்கு நினைவில் இருக்கிறது. 
  கடைசியில் தன் காதலில் தோல்வியுற்ற திலீப் குமார் ஒரு பெரிய மலை உச்சியிலிருந்து 
  குதித்து தற்கொலை செய்துகொள்ளும் கடைசிக் கட்டம் நினைவிலிருக்கிறது. இந்த 
  இருவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த இந்த சோகம் என்னையும் வெகு தீவிரமாகப் பற்றியது. 
  படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தால் தூங்க முடியவில்லை. என்ன உலகமடா இது 
  என்று துக்கம் துக்கமாக வந்தது. இந்த துக்கம் இரண்டு மூன்று நாட்களுக்கு நீடித்து 
  பின் என்னை அறியாமலேயே அது மறைந்தும் போனது. இது போல என்னில் வெகுவாக மனசஞ்சலத்தை 
  ஏற்படுத்தியது மிக அரிதாகவே நடந்துள்ளது. 1961-லோ என்னவோ தில்லி ரிவோலி 
  சினிமாவில் Alfred Hitchhock-ன் Psycho படம் பார்த்துவிட்டு பீதியில் உறைந்து 
  கிடந்தேன் இரண்டு நாட்களாயிற்று அதிலிருந்து விடுபட.
 
 
 நினைவுகளின் தடத்தில் - (34)
 
 கும்பகோண வாசம் - 1947-48
 
  ஜூக்னு 
  என்ற ஹிந்திப் படத்தை கும்பகோணம் விஜயலக்ஷ்மி டாக்கீஸில் பார்த்தேன். அதைப் 
  பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் மனம் கலவரப்பட்டுக் கிடந்தேன் என்று எழுதிக்கொண்டிருந்த போது அந்தப் படத்தைப் 
  பார்க்கக் காசு எங்கேயிருந்து கிடைத்தது என்ற கேள்வியும் உடன் எழுந்தது. இப்போது 
  எனக்குப் பதில் தெரியவில்லை. அப்பாவால் மாதம் ஆறு ரூபாய் எனக்கு பள்ளிக்கூடச் 
  சம்பளம் கொடுப்பதே அவரது மாத சம்பாத்யம் கிட்டத்தட்ட 20 ரூபாய் அளவிலேயே 
  இருக்கும்போது சிரமமான காரியமாகத் தான் இருந்தது. அதில் முதல் சில
 மாதங்கள் எனக்கு தினம் இரண்டணா கொடுக்கச் சொல்லி அம்மாவிடம் சொன்னது 
  அம்மாவுக்கும் எனக்கும் சந்தோஷமாக இருந்ததே ஒழிய, அது எப்படி சாத்தியம் என்பதில் 
  அம்மாவுக்கும் ஆச்சரியம் தான். அப்படி இருக்க சினிமா பார்க்க எங்கிருந்து எனக்கு
 கைச்செலவுக்கு என்று தனியாக வீட்டிலிருந்து பணம் கிடைக்கும்?
 
 ஆனால் கும்பகோணத்திலும் உடையாளுரிலுமாக இருந்த அந்த இரண்டு வருடங்களில் நான் 
  சினிமா பார்க்க என்று சென்றது அதிகம்
 இராது. அதிகம் என்றால் நிலக்கோட்டையிலும் மதுரையிலும் பார்த்த கணக்கில் 
  சொல்கிறேன். நிலக்கோட்டையில் மூன்று நாட்களுக்கு
 ஒரு முறை படம் மாற்றும் டூரிங் டாக்கிஸில் மாறும் ஒவ்வொரு படத்தையும் நான் 
  பார்த்தாக வேண்டும். பெரும்பாலும் பாட்டியும்,
 அதற்கு உதவியாக பாட்டியின் ரசனைக்கேற்ப அந்த நாளில் புராணப்படங்களே 
  வெளிவந்துகொண்டிருந்த சூழலும், எனக்கு சாதகமாக இருந்தன. அவையே சிறு வயதிலிருந்து 
  வளர்ந்து வந்த என் சினிமாப் பைத்தியத்திற்கு உதவின. எப்போதாவது மூன்று 
  நாட்களுக்கு ஒரு முறை மாறும் படம் ஏதாவது பார்க்க முடியாமல் போய விட்டால், உலகமே 
  வெறுத்துப் போய் வீட்டை விட்டு ஓடி விட்டால் என்ன என்று தோன்றும். மதுரையிலும் 
  எல்லாம் எனக்கு சாதகமாகத்தான் இருந்தது. அனேகமாக மாமியின் சகோதரர்கள், ராஜா, 
  அம்பி என்னும் ரங்கநாதன் இருவரும் சினிமாவுக்குப் போகும் போதெல்லாம் என்னையும் 
  உடன் அழைத்துச் செல்வார்கள். ஆக, எப்படியோ என் சினிமா பைத்தியத்திற்கு குறை 
  வந்ததில்லை. உடையாளூருக்கு வந்த பிறகு தான் நிலைமை முற்றிலும் மாறியது. ஆனால் 
  மூணு வேளை சாப்பாடு, இரண்டு வேளை கா·பி, இடையில் நாலு மணிக்கு நொறுக்குத் தீனி 
  என்பதெல்லாம் கும்பகோணம் வந்ததும் மாறி வறுமைப் பட்டது போல, சினிமா பார்க்கும் 
  வாய்ப்புகளும் வற்றித் தான் போயின. ஆனால் இப்போது அதனால் வாழ்க்கை வெறுத்ததாக 
  உணரவில்லை. மனம் அதை சகஜமாக ஏற்றுக்கொண்டது. பெற்றோர்களால் அது இயலாது என்பது 
  தெரிந்தது. இருப்பினும், அந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் பத்து படங்களாவது 
  பார்த்திருப்பேன். எப்படி என்பது தான் இப்போது நினைவு கொள்ள முடியவில்லை. ஒரு 
  முறை தீபாவளிக்கு துணிமணிகளும், பட்டாசுகளும் வாங்க உடையாளூரிலிருந்து 
  கும்பகோணத்திற்கு வந்த உடையாளூரில் எங்க தெருவாசி ஒருவர், தன்னோடு என்னையும் அதே 
  விஜயலக்ஷ்மி டாக்கிஸ¤க்கு சினிமா பார்க்க அழைத்துச் சென்றார். பார்த்தது, ஆயிரம் 
  தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி. இரண்டாம் ஆட்டம். ஆயிரம் தலைகளையும் வாங்குவதை 
  பார்க்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. ஒரு சில தலைகளுக்குப் பிறகு எனக்கு 
  தூக்கம் வந்துவிட்டது. படம் முடிந்ததும் என்னை எழுப்பி வீட்டுக்கு அழைத்துப் 
  போனார்கள்.
 
 மற்ற படங்களை எப்படி பார்க்க முடிந்தது, யார் காசு கொடுத்தார்கள் என்பது 
  தெரியவில்லை. அப்போது தான் அண்ணாதுரையின் ஓர்
 இரவு, நல்ல தம்பி போன்ற படங்கள் தமிழ் சினிமா உலகையே உலுக்கி வைத்தன. கதை வசனம், 
  சி.என். அண்ணாதுரை எம். ஏ. என்ற
 எழுத்துக்களை திரையில் பார்த்ததுமே தியேட்டர் கைதட்டலில் அதிரும். தமிழ் 
  சினிமாவில் இது போன்று நிகழ்வது அது தான்
 தொடக்கம். பின்னர் அது தமிழ் சினிமாவிலும் நிகழவில்லை. வேறு எங்கும் நிகழ்ந்து 
  நான் பார்க்கவும் இல்லை. கட்சியின் எல்லைகளை
 மீறி அவருக்குக் கிடைத்த வரவேற்பு அது. இன்னும் இரண்டு படங்களை நான் குறிப்பாகச் 
  சொல்ல வேண்டும். பி.யு.சின்னப்பா வின்
 கிருஷ்ணபக்தி. சின்னப்பாவை விட அதிக புகழ் பெற்ற தியாகராஜ பாகவதருக்கு இனிமையான 
  சாரீரமும், பெண்களை வசீகரிக்கும்
 முகமும் சின்னப்பாவுக்கு கடவுள் அருளவில்லை. ஆனால் சின்னப்பாவின் குரலில் எனக்கு 
  ஒரு கவர்ச்சி இருந்தது. சங்கீதத்தில் திறமை என்று பார்த்தால், பாகவதரை விட 
  சின்னப்பாவை நான் சற்று மேலாகவே மதிப்பேன். கிருஷ்ணபக்தியில் அவர் கதாகாலட்சேபம்
 செய்வதும், அதில் அவர் கொணர்ந்த கேலியும் என்னை இன்றும் பரவசப்படுத்தும். 
  'செங்கமலம் என்றொரு தாசீ" என்று ஆரம்பிக்கும்
 அந்த காலட்சேபம், அவர் மனைவி வருவதைப் பார்த்ததும், 'தாசீ தாசீ" என்ற சொற்கள் 
  'சீதா சீதா" என்று மாறும். ஒரே ரகளை தான்.
 இன்று 2008 நவம்பர் மாதம் நான் பார்க்க விரும்புவது கிருஷ்ணபக்தி யா அல்லது ஒரு 
  புதிய நான் பார்க்காத கமலஹாஸன், ரஜனி
 காந்த் படமா என்றால், யோசிக்கத் தேவையே இல்லை. கிருஷ்ண பக்தியைத் தான் நான் 
  பார்க்க விரும்புவேன். அது போல ஒரு படத்தில் அவர் கொன்னக்கோல் போடுவதும் என்னைக் 
  கவர்ந்தது. அந்தப் படம் ஜகதலப்ரதாபன் என்று நினைக்கிறேன். தொலைக்காட்சியில் 
  ஜகதலப்ரதாபன் என்று இருப்பதைப் பார்த்து பி.யு. சின்னப்பாவாச்சே, அவரது 
  கொன்னக்கோலாச்சே, என்று ஆசையோடு பார்த்தால் ஏமாந்து போனேன். எனக்குக் கிடைத்தது 
  சிவாஜி கணேசனின் உருட்டும் விழிகள்.
 
 இந்த மாதிரியான பி.யு.சின்னப்பாவின் பல் வகைப்பட்ட திறன்களை பாகவதரிடம் 
  காண்பதற்கில்லை. அவரது குரலினிமையை விட்டு
 விட்டால் மற்றதெல்லாம் தட்டையான ஒற்றைப் பரிமாண சமாச்சாரமாகவே எனக்குப் படும். 
  அந்த இரண்டு ஆண்டுகளில் நான் பார்த்த ஒரே பாகவதர் படம் அமரகவியோ என்னவோ. 
  சிறையிலிருந்து விடுதலையாகி வந்தபின் அவர் நடித்த சிலவற்றில் நான் பார்த்தது. 
  அவரோடு சேர்ந்து பானுமதி பாடி நடித்திருந்தது. ஆனால் அதற்கு வரவேற்பில்லை. 
  பாகவதரின் காலம் ஓய்ந்து விட்டது அப்போது. அவரது பக்தி கதைகளுக்கு தமிழ் 
  சினிமாவில் இடமிருக்கவில்லை. ஓர் இரவு, மருத நாட்டு இளவரசி, மந்திரி குமாரி போன்ற 
  படங்கள் எல்லாம் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை, எதிர்பார்ப்பை மாற்றி விட்டன. 
  சிறையிலிருந்து வெளிவந்த பாகவதரின் வாழ்க்கை சோகமயமானது. சினிமாவும் தமிழ் 
  ரசனையும் அவரை வஞ்சித்து விட்டன. தமிழ் நாடும் தான்.
 
 சில நாட்களுக்கு முன் அவரது சமாதியை தொலைக்காட்சியில் காட்டினார்கள். அதுவும் ஒரு 
  சோகம் தான். அந்த சமாதி இருக்கும்
 கேவல நிலை கண்டு தமிழ் நாடு வெட்கித் தலை குனிய வேண்டும். அது பற்றிய ஸ்மரணையே 
  இல்லை நமக்கு. கோடிக்கணக்கான
 தமிழ்க் காதுகளை இனிமையான குரலால், சங்கீதத்தால் நிரப்பிய மனிதர். இன்றும் அந்த 
  இனிமையைக் கொடுக்கக் காத்திருக்கும் குரல்
 அது. தமிழ் உலகம் நன்றி கெட்ட உலகம் தான். பன்னிரண்டே படங்களில் நடித்து ஒரு 
  சூப்பர் ஸ்டார் ஆனவர். தன் குரல்
 இனிமையாலேயே. அறுபது வருடங்களுக்குப் பின்னும் இப்பவும் அவர் குரல் கேட்டாலே மனம் 
  நெகிழ்ந்து விடுகிறது. ஒரு
 வண்ணமயமான உலகம் பாழடைந்து பார்ப்பது போல ஒரு சோகம் கப்புகிறது.
 
 ஒரு நாள் ராஜா டாக்கீஸில் படம் பார்த்து விட்டு வழியில் ஏதோ ஒரு வீட்டுத் 
  திண்ணையில் படுத்திருந்து காலையில் எழுந்து
 உடையாளூருக்குக் கிளம்பியது நினைவுக்கு வருகிறது. அது ஒரு கலாச்சாரம். யார் 
  வீட்டுத் திண்ணையிலும் யாரும் படுக்கலாம். கதவு
 தடுக்காத திறந்த திண்ணை. யாரும் இளைப்பாறத் தான் அது. யாரும் காலையில் ஒரு வாளித் 
  தண்ணீரை நம்மேல் கொட்டி எழுப்ப
 மாட்டார்கள்.
 
 ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சாயந்திரம் பள்ளிக்கூடம் முடிந்ததும் உடையாளூருக்குப் 
  போய்விடுவேன். பின் திங்கட் கிழமை காலை புறப்பட்டு சாயந்திரம் பள்ளிக்கூடம் 
  முடிந்ததும் தான் தங்கியிருக்கும் பாட்டி வீட்டுக்குப் போவேன். இப்படித்தான் ஒரு 
  சனிக்கிழமை காலை உடையாளூரில் என் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். காலை 
  பத்து பதினோரு மணி இருக்கும். என் தங்கை யார் வீட்டுக்கோ போய்த் 
  திரும்பிக்கொண்டிருந்தவள் என்னைத் திண்ணையில் பார்த்ததும் வேகமாக ஓடி வந்து 
  "அண்ணா, காந்தி செத்துப் போய்ட்டாராம் அண்ணா, யாரோ சுட்டுட்டாளாம்" என்றாள். 
  அவளுக்கு காந்தி பற்றி எதுவும் அறியாதவள். கிராமத்திலேயே வளர்ந்த 13 -வயதுச் 
  சிறுமி. யாரோ செத்துப் போய்ட்டா. எல்லோரும் பேசிக்கிறா, ரொம்ப பெரிய விஷயமா 
  இருக்கணும். அண்ணா கிட்ட சொல்லணும். அண்ணாக்கு தெரியாத ஒரு விஷயம் தனக்குத் 
  தெரிஞ்சு போச்சு" என்ற ஆவலோடு மூச்சிறைக்க ஓடி வந்தவள். ஆனால் எனக்கு ஏற்பட்ட 
  அதிர்ச்சியில் அவள் பேரில் கோபம் தான் வந்தது. "உளறாதே. யார் சொன்னா உனக்கு? 
  பேசாமே உள்ளே போ," என்று கத்தினேன். என்னமோ நினைத்து ஆசையோடு வந்தவளுக்கு நான் 
  வள்ளென்று விழுந்தது அதிர்ச்சியாக இருந்தது. அவள் இதை எதிர்பார்க்கவில்லை. 
  பயத்தில் உள்ளே ஓடினாள்.
 
 இதை யார் சொல்லியிருக்கமுடியும்? உடையாளூரில் யார் வீட்டிலும் ரேடியோ கிடையாது. 
  தினசரி பத்திரிகையும் வலங்கிமானிலிருந்து
 தான் வரவேண்டும். அவன் இதற்குள் வந்திருக்கமுடியுமா? ஒரு சுதேசமித்திரனையோ, 
  தினமணியையோ எடுத்துக் கொண்டு மூன்று
 மைல் வலங்கிமானிலிருந்து உடையாளுருக்கு வந்து கொடுதாகவேண்டும் என்ற அவசரம் 
  அவனுக்கும் இல்லை. உடையாளுருக்கும் இல்லை. அவன் ஒரு மணி அளவில் தான் வருவான். அது 
  பற்றி யாரும் புகார் செய்யப் போவதில்லை. பின் தான் தெரிந்தது வலங்கிமானிலிருந்து 
  வந்தவர் ஒருவர் ஊருக்குச் செய்தி கொண்டு வந்திருக்கிறார். அவர் சாவகாசமாக 
  வலங்கிமானில் தன் வேலைகளை முடித்துக் கொண்டு ஊர் வந்ததும் முதல் காரியமாக ஊரில் 
  நுழைந்ததும் பிள்ளையார் கோயிலைத் தாண்டி தென்படும் இரண்டாவது வீட்டின் திண்ணையில் 
  உட்கார்ந்திருக்கும் part time போஸ்ட் மாஸ்டரிடம் சொல்லியிருக்கிறார். அவர் 
  கார்டு கவர் மொத்தமாக வாங்கி வைத்து வேண்டியவர்களுக்குக் கொடுப்பவர். அங்கு தான் 
  வலங்கிமானிலிருந்து வரும் தபால் காரன் தபால்களை எடுத்துச் செல்வதும் பட்டு வாடா 
  செய்வதும். திண்ணையைத் தாண்டி இடைகழியை ஒட்டிய அறையின் ஜன்னலைத் திறந்து 
  வைத்துக்கொண்டால் அந்த அறை எங்கள் ஊர் தபால் நிலையமாகி விடும். எங்கள் ஊரில் 
  வெளியூர் விஷயங்கள் விஷயங்கள் உலக விவகாரங்களுக்கு அவரும் இன்னும் ஓரிருவரும் 
  தான் அதாரிட்டி.
 
 அங்கு ஒரு சிறிய கூட்டம் கூடியிருந்தது. கொஞ்சம் சலசலப்புடன். பிறகு தான் கொஞ்சம் 
  கொஞமாக செய்தி அங்கிருந்து பரவியது.
 நேற்று (வெள்ளிக்கிழமை ) மாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் மகாத்மாவை யாரோ சுட்டு 
  விட்டார்கள். முன்னாலேயே சில நாட்கள்
 முன்னால் இம்மாதிரி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அப்போது யாருடைய உயிருக்கும் 
  சேதம் இல்லை. தனக்கு ஏதும் விசேஷ
 பாதுகாப்பு தேவையில்லை என்று சொல்லிவிட்டாராம் காந்தி. அவர் பேச்சைக் கேட்காமல் 
  பாது காப்பு கொடுத்திருந்தால் இதைத்
 தவிர்த்திருக்கலாம். காந்தி இப்போது உயிரோடி இருந்திருப்பார் என்று 
  பேசிக்கொண்டார்கள்.
 
 vswaminathan.venkat@gmail.com
 |  
| 
 |  
|  |  
|   |  
|  © 
      காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: 
      
      
      Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
      Press and Media Council Of
Canada . 
      முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  |