யூமா வாசுகி முதல் சு.சமுத்திரம்
வரை!
- வெங்கட் சாமிநாதன் -
[கேட்டீர்கள், சொல்கிறேன்]!
கடந்த
40 வருஷங்களாக அவ்வப்போது பத்திரிகைகள் கேட்க எழுதியவை இங்கே
தொகுக்கப் பட்டுள்ளன. எல்லாமே இவைதான் என்றல்ல. எழுதித்
தொகுக்கப்பட்டு வந்துள்ளவை போக எஞ்சியுள்ளவற்றில் இவை ஒரு பகுதி.
இன்னும் மிஞ்சியிருப்பவை இப்போதைய அவசரத்திற்கு கையிலகப்படாதவை. அவை
அத்தனையும் ஆங்கிலத்தில் இருப்பதால் இப்போது உடனே சேர்க்க இயலாமல்
போயுள்ளது. அவற்றில் கரிச்சான் குஞ்சு, கோபி கிருஷ்ணன், க.நா.சு,
1970களில் சென்னையில் இருந்த இலக்கிய சங்கம் தொகுத்த கோணல்கள்,
தி.ஜானகிராமன் ஆர். ஷண்முக சுந்தரம் என்று நிறையப் பேர் உண்டு.
சேர்க்க முடியாமல் போவது எனக்கு வருத்தம் தருவது தான். ஆனால் என்ன,
அடுத்த தொகுப்பு வருமானால் அதில் சேர்த்துக் கொண்டால் போயிற்று.
அதற்கிடையில் ஆங்கிலத்தில் உள்ளவற்றை மொழிபெயர்த்துக்கொண்டிருக்க
வேண்டும். இது மட்டுமல்ல, இன்னும் நாடகம், நாட்டியம், செய்திப்படம்
என்பன தவிர பொதுவான இலக்கியப் பிரச்சினைகள் பற்றியும். பார்க்கலாம்.
இப்போதைக்கு, 'யூமா வாசுகியிலிருந்து......'என்று நான் இத்தொகுப்பின்
தலைப்பைத் தொடங்குவது ஒரு கோட்டின் தொடக்கத்தைக் குறிக்க.
சு.சமுத்திரம் அக்கோடு முடியும் புள்ளி. இக்கோட்டை பலவாறாக அர்த்தப்
படுத்திக்கொள்ளலாம். இதன் பல நிலைகளில், பரிமாணங்களில் பலவும் உண்டு.
வண்ணங்களில், தரும் சுவாரஸ்யத்தில், எழுத்துத் திறனில், இலக்கிய
நோக்கில். தான் பெற்ற அனுபவத்திலிருந்து அர்த்தம் பெறப்படுகிறதா,
அல்லது வெளியிலிருந்து பெற்ற அர்த்தம் அந்த அனுபவத்திற்குள்
திணிக்கப்படுகிறதா, என்று பலவாறாக அவரவர் பார்வைக்கேற்றவாறு பொருள்
கொள்ளலாம்.
யாரையும் எதையும் இப்படித்தான் பார்க்கவேண்டும், இப்படித்தான் பொருள்
கொள்ளவேண்டும் என்று நிர்ப்பந்திக்க முடியாது. எத்தனை மனித ஜீவன்கள்
உண்டோ அத்தனை பார்வைகள் இருக்கும். இருக்கவேண்டும். நாமெல்லாம் என்ன
அச்சு வெல்லமா, ஹமாம் சோப்பா? குணம், மணம், உருவம், நிறம் எல்லாம்
ஒரே மாதிரியாக இருக்க. இருப்பினும் இப்படி நிர்ப்பந்திக்கும் குணம்
நம்மை விட்டு நீங்க மாட்டேன் என்கிறது.
நான் பிறக்கும் போதே சங்கிலிப் பிணைப்புடன் பிறந்தவன். சாதி.
மற்றவர்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ள குண்டாந்தடி. அதை நான்
மறந்தாலும் மற்றவர் மறப்பதில்லை. அதெப்படி மறப்பார்கள்? அது தான்
அவர்களுக்குக் கிடைத்த வலுவான ஆயுதமாயிற்றே, என் சுதந்திரப் போக்கு
பிடிக்காதவர்கள் என்னைத் தாக்க. பின் நானே என் வளர்ச்சியில் ஏற்றிக்
கொண்ட சுமைகள். அவையும் என்னை எதிரியாக்கி விடுகின்றன.
சென்னை வந்த புதிது. "நான் சோலை சுந்தரப் பெருமாள். உங்களைப்
பார்க்கவேண்டும்" என்ற தொலை பேசிக்குரல் கேட்டது. வாருங்கள் என்றேன்.
புதிய அறிமுகம். ஒரு நாள் அந்தி நேரம். வந்தார். அவருடைய தஞ்சைச்
சிறுகதைகள் தொகுப்பைக் கொடுத்து அதுபற்றி என் கருத்தைச்
சொல்லவேண்டும் என்று சொல்லிப் போனார். பெரிய தொகுப்பு. அதில்
என்னையும் க.நா.சு வையும் நாலு சாத்து சாத்தியிருந்தார். மூன்று
நான்கு இடங்களில். அவருடைய சார்பு முற்போக்கும் திராவிட இயக்கமும்.
அதற்கு ஆதாரமாக அவர் என்னைப் பற்றி கூறியிருந்ததும், என்
கருத்துக்கள் என மேற்கோள் காட்டியிருந்ததும் முற்றிலும் தவறானவை.
உண்மையில்லாதவை. ஆனாலும் தொகுப்பின் பெரும்பகுதி இலக்கிய பூர்வமானது.
அவருடைய உழைப்பிற்கு சாட்சியாக முன்னிற்பது. அவரது சித்தாந்த
கொள்கைச் சார்புகளும் கூட சோலைய கைபிடித்து இழுத்துச்
சென்றிருக்கின்றன தொகுப்பில். எதையும் மறைக்கவில்லை. இரண்டையும்
தெளிவாகச் சொல்லி எழுதினேன். அவர் எனக்களித்த மண்டகப்படியை மறந்து
விட்டதாகவும் சொல்லியிருந்தேன். அன்றிலிருந்து இன்று வரை அவர்
எழுதும் ஒவ்வொரு புத்தகம் பற்றியும் நான் எழுத வேண்டும் என்று
வற்புறுத்துவார். பின் அந்த மதிப்புரைகளை யெல்லாம் தொகுத்து
புத்தகமாக வெளியிடுவார். அத்தொகுப்புகளில் என் கருத்து மாத்திரம்
தனித்து நிற்கும். ஏனெனில் என்னைத் தவிர மற்றெல்லோரும் அவருக்குச்
சார்பான அரசியல் சார்புடையவர்கள். அவர் எனக்கு நண்பர் தான். இந்த
தொகுப்பிலும் அவரது இரண்டு நாவல்களைப் பற்றி நான் எழுதியவை
சேர்க்கப்பட்டுள்ளன. சோலை பொறுத்ததை அவரது மூத்த முற்போக்கு அன்பர்,
தமிழ்ச் செல்வனால் பொறுக்க இயலவில்லை. நான் ஏதோ தெருவில் 'சிவனே'
என்று நடந்து போய்க்கொண்டிருக்கும் தோழர் சோலையை வீட்டுக்குள்
இழுத்து வைத்து அடித்துவிட்டது போல கோபம் கொண்டு எனக்கு கட்டைப்
பஞ்சாயத்து செய்துவிட்டார். இந்த அன்பர் சிறுகதை ஒன்றை நான் மிக
விரும்பி சாகித்ய அகாடமியின் ஹிந்தி வெளியீட்டுக்குத் தயாரித்த
இன்றைய தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பில் சேர்த்தேன். கதையின் பெயர்
பாவனைகள். எழுதியவர் தமிழ்ச் செல்வன். அவர் பாவனைகள் கதையைப் பார்த்த
கணம், தமிழ்ச் செல்வன் ஒரு முற்போக்கு என்பதைப் பொருட்படுத்த
எனக்குத் தோன்றவில்லை. ஆனால் தமிழ்ச் செல்வனுக்கு என் இலக்கிய நேர்மை
ஒரு பொருட்டல்ல. நான் முற்போக்குச் சார்பற்று இருந்தது அவரது
பகைமைக்குப் போதுமானதாக இருந்திருக்கிறது. மேலும் சோலையின்
பெருந்திணை நாவலைப் பற்றி என்னிடம் எழுதி வாங்கி சோலைதான் உங்கள்
நூலகம் பத்திரிகைக்கு பிரசுரத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால்
தமிழ்செல்வன்? சரி, நான் ஒருத்தன் அவர் அணியில் சேர்ந்து சீருடை
அணியாவிட்டால் என்ன நஷ்டம்? நோ. தப்பு. எல்லோரும் கட்டாய ராணுவ சேவை
செய்யவேண்டுமென்கிறார்கள். இது தான் தமிழ் நாடு. அதன் அறிவு ஜீவிகள்.
எழுத்தாளர்கள். யாருடைய குரலும் சற்றும் வேறுபட்டு விடக்கூடாது.
சு.சமுத்திரம்
பற்றி எழுதியது அவர் சாகித்திய அகாடமி இலக்கியப் பரிசு பெற்றதை
முன்னிட்டு அகாடமியின் Indian Literature -ல் எழுதியது. அதன்
ஆசிரியராக அப்போது இருந்தவர் D.S. ராவ், லா.ச.ரா பற்றி நான் எழுதிக்
கொடுத்ததிலிருந்து என் நண்பர். என் எழுத்தை மிக விரும்புகிறவர். நான்
எழுதித் தான் ஆக வேண்டுமென்று கட்டாயப் படுத்தினார். விருப்பமின்றி
நண்பரின் கட்டாயத்திற்காக எழுதினேன் அவர் பல வருடங்களுக்கு முன்
சாகித்ய அகாடமி பரிசு பெற்ற தெலுங்கு எழுத்தாளர் ஒருவரைப் பற்றி
மட்டமாக எழுதப் போக வேலையிலிருந்து நீக்கப்பட விருந்தார். அவரைக்
காப்பாற்றியது டாக்டர் ராதாகிருஷ்ணன் என்று சொல்லப்பட்டது.
அப்படியிருந்தும் மறுபடியும் ஆபத்தோடு இன்னொரு விளையாட்டில்
இறங்குவதா? அவர் வேலை பாதிக்கப்படக்கூடாது என்று ஒரு வார்த்தை கூட
பாதகமாக இல்லாது மறைமுகமாக கிண்டலாகவே சமுத்திரத்தின் எழுத்தைப்
பற்றியும் பரிசு பெற்ற புத்தகத்தைப் பற்றியும் எழுதினேன். அதைப்
பிரசுரிக்க என் நண்பர் வேலையில் இல்லை. சாகித்ய அகாடமி தலைமையோடு
வேறு தகராறு செய்துகொண்டு அவரே வேலையை விட்டுப் போனார். வேறொருவர்
வந்து நான்கு மாதங்கள் ஏற்ற ஆசிரியப் பொறுப்பில் என் எழுத்துக்கு
அறுவை சிகித்சையெல்லாம் நடந்து பிரசுரம் பெற்றது. 'சாமிநாதனே என்னைப்
பாராட்டிவிட்டார். மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை' என்று
சமுத்திரம் சொல்லிக்கொண்டிருந்தார்/எழுதியிருக்கிறார் என்று கேள்விப்
பட்டேன். அந்தக் கட்டுரையும் இத் தொகுப்பில். எத்தகைய பாராட்டு அது
என்பதை எல்லோரும் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
இதெல்லாம் எப்படியோ போகட்டும். சு.சமுத்திரத்தின் எதிர்பாராத மரணம்,
அந்த விபத்து வேதனை மிகுந்தது. விபத்தில் அடிபட்டுக்கிடந்த
சமுத்திரம் உடன் கையில் பணமில்லாத காரணத்தால் அவர் கவனிப்பாரற்றுக்
கிடந்தார் ஒரு மருத்துவ மனையில் என்ற செய்தி, கேட்பவர் இரத்தம்
உறையச் செய்யும் செய்தி தமிழ் நாட்டின் கோரமுகத்தையே காட்டிற்று.
நிறைந்த அரசியல் செல்வாக்கும் வசதிகளும் கொண்ட மனிதருக்கே அந்த கதி.
உயிருடன் இருந்த வரை தன் உரிமைகளுக்கும் தனது உரிமை என்று அவர்
நினைத்துக் கொண்டவற்றிற்கும் உரக்கக் குரல் கொடுத்துக்
கொண்டிருந்தவர் அவர்.
இதுதான் என் தமிழ் நாடு. இங்கு நான் தொகுத்துள்ளவை அந்தப்
புத்தகங்களைப் பற்றி மாத்திரம் சொல்வன அல்ல. என் சமூகத்தைப்
பற்றியும் மக்களைப் பற்றியும் சொல்லும். அது தான் எனக்கும், என்
நாட்டுக்கும் மக்களுக்கும் இந்த எழுத்துக்களுக்கும் நான் செய்து
கொள்ளும் நியாயம்.
வெங்கட் சாமிநாதன்/ 29.11.06:
யூமா வாசுகி முதல் சமுத்திரம் வரை: (கட்டுரைத் தொகுப்பு): வெங்கட்
சாமிநாதன்: எனி இந்தியன் பதிப்பகம்: 102, எண். 57, பி.எம்.ஜி.
காம்ப்ளெக்ஸ், ஸௌத் உஸ்மான் ரோட், தி.நகர், சென்னை-17
swaminathan_venkat@rediffmail.com