இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவம்பர் 2006 இதழ் 83 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!
பிரபல எழுத்தாளர் வல்லிக்கண்ணன் மறைவு!

எழுத்தாளர் வல்லிக்கண்ணன்தினமலர் (சென்னை) : பிரபல எழுத்தாளர் வல்லிக்கண்ணன் நேற்றிரவு உடல் நலமின்றி இறந்தார்.பிரபல எழுத்தாளர் வல்லிக்கண்ணன். சாகித்ய அகடமி விருது பெற்றவர். திருநெல்வேலி மாவட்டம், ராஜவள்ளிபுரத்தைச் சேர்ந்த இவர், சென்னை அவ்வை சண்முகம் சாலை, புதுத் தெருவில் உள்ள வள்ளலார் குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த நான்கு நாட்களுக்கு முன் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி வல்லிக்கண்ணன் நேற்றிரவு இறந்தார். அவருக்கு வயது 86. திருமணம் செய்து கொள்ளவில்லை. இறந்த வல்லிக்கண்ணனின் உடல் அடக்கம் இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

[ மறைந்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன் நினைவாக ஆறாம்திணை இணைய இதழில் வெளிவந்த எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணனின் கட்டுரையினை இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம். வல்லிக்கண்ணன் அவர்கள் ஆரவாரமற்று இலக்கியப் பங்களிப்பு செய்து வந்தவர். எனது சிறுகதைத் தொகுதியான 'அமெரிக்கா' தமிழகத்தில் சிநேகா பதிப்பக வெளியீடாக வெளிவந்தபோது அதற்கு நல்லதொரு விமரிசனக் கடிதமொன்றினைத் தனது முத்து முத்தான கையெழுத்தில் அனுப்பியவர். அதனை இச்சமயத்தில் நினைவு கூர்ந்து கொள்கின்றேன். - ஆசிரியர்]


வல்லிக்கண்ணன்

- திருப்பூர் கிருஷ்ணன் -

எழுத்தாளர் வல்லிக்கண்ணன்இலக்கியத்தின் பல துறைகளைத் தொட்ட படைப்பாளிகள் தமிழில் பலர் உண்டு. சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, கட்டுரை, விமர்சனம் என்றிப்படி. ஒரு துறையே போதும் என்று யாருக்கும் ஆறுதல் ஏற்படுவதாய்த் தெரியவில்லை. 'இதிலும் முயன்று பார்ப்போம்' என்று ஓரொரு துறையாக முயற்சி செய்து பார்க்கிறார்கள். முயற்சிதான். வெற்றி கிடைப்பது ஏதாவது ஓரிரு துறைகளில்தான். இலக்கியம் என்ற நீச்சல் குளத்தில் குதித்த பிறகு, ஒரே மாதிரி நீந்துவதில் அலுப்பு ஏற்படுகிறது போலும். டைவ் அடிப்பது, முக்குளித்து நீந்துவது, பின்னோக்கி நீந்திப் பார்ப்பது என்று பல வகையாக நீந்த முயல்வது இயற்கை தானே?
ஆனாலும் பல துறைகளில் ஈடுபட்ட சிலர் ஒருசில துறைகளைத் தவிர்த்தே வந்திருக்கிறார்கள். இதன் உளவியல் பின்னணி ஆராய்ச்சிக்குரியது. நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதிக் குவித்த ஜானகிராமன், நாடகங்களையும் கட்டுரைகளையும் கூட எழுதிய ஜானகிராமன், ஏன் கவிதைப் பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை என்று தெரியவில்லை. இத்தனைக்கும் கவிதைக்கு அடிப்படைத் தேவை என்று கருதப்படும் வர்ணனையாற்றல் அவரிடம் அபரிமிதமாகவே இருந்தது. தம் கதாநாயகிகளை எல்லாம் உயிருள்ள கவிதைகளாகவே உலவவிட்ட ஜானகிராமன், அவர்களைப் பற்றிய வர்ணனைகளை உரைநடைக் கவிதை போலவே தீட்டிக் கிறங்க வைத்த ஜானகிராமன் கவிதை எழுதாத காரணமென்ன என்று தெரியவில்லை.

தீபம் நா.பார்த்தசாரதி பல உயர்ந்த சிறுகதைகளையும் சில நல்ல நாவல்களையும், ஒரேயொரு சுமாரான நாடகத்தையும் எழுதினார். பல மிகவும் சுமாரான கவிதைகளையும் அவர் தொடர்ந்து எழுதி வந்தார். செங்குளம் வீரசிங்கக் கவிராயர், நவநீதகவி என்றெல்லாம் பல புனைபெயர்களில் அவரது கவிதைகள் வெளி வந்தன. கவிதையெழுத வேண்டும் என்ற ஆர்வம் கடைசி வரை அவருக்கிருந்தது என்றாலும் தமிழில் என்றும் நிலைபேறுடைய ஒரு சிறந்த கவிதையை அவரால் எழுத முடியாமல் போயிற்று. இத்தனைக்கும் 'தாமரைப்பூம் பாதங்கள்' என்பன போன்ற மரபு வழிபட்ட சிறந்த பல கவித்துவ உவமைகள் அவரது சிறுகதைகளிலும், நாவல்களிலும் நிறையக் காணக் கிடைக்கின்றன. 'சிறுகதை என்பதே உரைநடையில் ஆக்கப்பட்ட கவிதைதான்' என்று ஜெயகாந்தன் சொல்வதை கவனத்தில் எடுத்துக் கொண்டோமானால் நா.பா.வின் பல சிறுகதைகள் கவிதையைப் போன்றே எழில் நிரம்பியன என்றாலும் கவிதைக் கலையில் அவர் ஏன் வெற்றி பெறாமல் போனார் என்பது ஒரு புரியாத புதிர்.

அகிலன் கவிதைகளும் எழுதியிருக்கிறார் என்ற சங்கதி பலரும் அறியாதது. தாம் கவிதையெழுதி அனுப்பிய சில பத்திரிகைகள் உடனே நின்றுவிட்டதாகவும் சில பத்திரிகைகளைப் பார்க்கும்போது கவிதையெழுதி அனுப்பினால் என்ன என்று தமக்குத் தோன்றுவதாகவும் அவர் நகைச்சுவையாகச் சொல்வதுண்டு. இப்போதைய பல பத்திரிகைகளைப் பார்க்கும்போது அகிலன் உயிரோடிருந்து இவற்றுக்கெல்லாம் கவிதை எழுதி அனுப்பினால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்ற ஆதங்கம் நமக்கு இப்போது ஏற்படுகிறது!

இலக்கியத்தில் பல துறைகளிலும் ஈடுபட்டவர்கள் எல்லாத் துறைகளிலும் ஒருசேர வெற்றி பெற இயல்வதில்லை. ஓரிரு துறைகளில் வெற்றி பெறுவதே மிகப் பெரிய சாதனைதான். வ.க.வும் பல துறைகளில் ஈடுபட்டவர். அவர் பெரு வெற்றி பெற்ற துறைகளாகக் கட்டுரை, சிறுகதை ஆகிய இரண்டு துறைகளையும் குறிப்பிட வேண்டும். கட்டுரை என்று சொல்லும்போது திறனாய்வு அல்லாத கட்டுரை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

சிறுகதையில் அவர் வெற்றி பெற்றார் என்று சொல்வது ஒரு தனிப்பட்ட அபிப்ராயமாகவும் கருதப்படக்கூடும். வ.க.வின் சில சிறுகதைகள் தமிழிலக்கித்தில் நிலைத்து நிற்கக் கூடியவை என்ற கருத்தை இங்கே வற்புறுத்திச் சொல்லத் தோன்றுகிறது. ஆனாலும் க.நா.சு., வல்லிக்கண்ணனை ஒரு சிறுகதைப் படைப்பாளியாக ஏற்றுக் கொண்டதில்லை. ஞானரதம் இதழில் வல்லிக்கண்ணன் நல்ல சிறுகதைகளே எழுதியதில்லை என்பது போல ஒரு கருத்தை க.நா.சு. சொன்னதும், அதற்கு எதிர்வாதங்கள் எழுந்ததும் பலருக்கும் நினைவிருக்கலாம். எனவே வல்லிக்கண்ணனைச் சிறந்த ஒரு சிறுகதை ஆசிரியர் என்று சொல்லும்போது அதற்கு மாறுட்ட கருத்துகளும் இருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

கட்டுரை, சிறுகதை ஆகிய இரண்டு துறைகளைத் தவிர கவிதை, நாவல் ஆகிய துறைகளில் வ.க. பெரு வெற்றி பெற்றவர் என்று சொல்வதற்கில்லை என்றே தோன்றுகிறது. அவர் எழுதிய 'அமர வேதனை' என்ற கவிதை நூலை விட, 'புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதை பற்றிய கட்டுரை நூல்தான் பெரும்புகழ் பெற்றது. ஆனால் மொழிபெயர்ப்புத் துறைக்கு அவர் ஆற்றிய தொண்டு குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதுதான். என்றாலும் த.நா. சேனாபதி, த.நா. குமாரசாமி போன்றவர்களைப் போல் தம்மை முழுவதும் மொழிபெயர்ப்புத் துறைக்காக அவர் அர்ப்பணித்துக் கொள்ளவில்லை. அப்படி அர்ப்பணித்துக் கொண்டிருந்தால் அவர் அந்தத் துறையில் சிகரங்களைத் தொட்டிருக்க முடியும். ஆனாலும் அதை அவர் விரும்பவில்லை அல்லது அதற்கு வாய்ப்பு நேரவில்லை என்றே கருதத் தோன்றுகிறது. 'கு.ப.ராவின் புகழ் பெற்ற சிறுகதையான 'விடியுமா?' என்ற தலைப்பிலேயே வ.க. ஒரு நாடக நூல் எழுதியிருக்கிறார். ஆனால் அவரை நாடக ஆசிரியராக யாரும் குறிப்பிடுவதில்லை.

வ.க.வின் திறனாய்வு பற்றி இரு வகையான அபிப்ராயங்கள் நிலவுகின்றன. ஒன்று, அவர் முழுவதையும் படித்து நல்ல திறனாய்வுகளைத்தான் எழுதி வருகிறார் என்பது. இன்னொன்று, அவரது திறனாய்வுக் கட்டுரைகள் பெரும்பாலும் வாழ்த்துரைகளேயன்றி வேறல்ல என்பது.

உண்மையில் வ.க. பல தீவிரமான அபிப்ராயங்களைத் தெரிவித்ததுண்டு. 'காலத்தின் குரல்' என்ற சிவசு எழுதிய பேட்டி நூலில் நா.பா., அகிலன் இருவரை விடவும் ஜானகிராமன், ஜெயகாந்தன் இருவரும் இலக்கியப் படிநிலையில் மேலான தளத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் தெரிவித்துள்ள ஓர் அபிப்ராயத்தை உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் வ.க.வைப் பற்றி தீவிரமான, கறாரான அபிப்ராயங்களைச் சொல்பவர் என்கிற மாதிரி எண்ணுகிற ஒரு மனப்போக்கு பலரிடையே உருவாகவில்லை. வாழ்த்துரையாளர் வல்லிக்கண்ணன் என்பது போலத்தான் பலரும் அவரைக் கருதுகிறார்கள். நல்ல எழுத்தாளர்களே அருகி வரும் சூழலில் புதிதாக எழுத வரும் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதே வ.க.னின் இந்த வாழ்த்துரை மனப்போக்கிற்குக் காரணம் என்று கருத இடமுண்டு.

சில விமர்சகர்களைப் பற்றி, அவர்கள் படிக்காமலே அபிப்ராயம் சொல்கிறார்கள் என்றும் தாங்கள் படிக்காமல், தங்களால் நம்பப்படுகிறவர்கள் படித்துச் சொல்லும் அபிப்ராயங்களை அவர்கள் சார்ந்திருக்கிறார்கள் என்றும் சொல்வதுண்டு. வேறு சில விமர்சகர்களைப் பற்றி அவர்கள், பழங்காலத்திலேயே வாழ்கிறார்கள் என்றும் தற்கால நூல்களைப் படிப்பதேயில்லை என்றும் சொல்வதுண்டு. ஆனால் வல்லிக் கண்ணனைப் பற்றி இத்தகைய அபவாதங்கள் ஏதும் சொல்லப்படுவதில்லை. வல்லிக்கண்ணன் தாமே அனைத்தையும் வாசித்து, தனக்கென்று அபிப்ராயங்களை ஏற்படுத்திக் கொள்பவர் என்பதிலோ, நேற்று வந்த நூல் வரை வாசித்துவிட்டவர் என்பதிலோ இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. இந்தப் பண்புகளே வ.க.னின் மிகப் பெரிய பலங்கள் என்றும் சொல்லலாம்.

வ.க. என்றால் முதலில் மனத்தில் தோன்றுவது அவரது கட்டுரைகள்தான். சிறுகதை ஆசிரியர் அழகிரிசாமி, நாவலாசிரியர் தி.ஜானகிராமன் என்றெல்லாம் சொல்வது மாதிரி வ.க.வுக்கு ஓர் அடைமொழி கொடுக்க வேண்டுமானால் கட்டுரையாளர் வ.க. என்றே கொடுக்க வேண்டியிருக்கும். அவர் அதிக எண்ணிக்கையில் கட்டுரைகளை எழுதினார் என்பது மட்டுமல்ல இந்த அடைமொழிக்குக் காரணம். அவரது ஆற்றல் அதிகம் வெளிப்பட்ட துறை இதுதான் என்பதே இந்த அடைமொழியின் முக்கிய காரணம்.

உதிரி, உதிரியாக ஞானரதம், தீபம் உள்ளிட்ட பற்பல பத்திரிகைகளில் அவர் எழுதிக் குவித்த கட்டுரைகள் ஏராளம். ஆனால் தொகுதிகளாக வந்திருப்பவைகள் மிகவும் சில. அவரது 'வாசகர்கள் விமர்சனங்கள்' என்ற தொகுதி, 'எழுத்தாளர்கள் பத்திரிகைகள்' என்ற தொகுதி போன்றவை குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.

நிறையக் கட்டுரைகளை எழுதியவர்கள் என்ற வகையில் க.நா.சுவையும் வ.க.வையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். அவர்களிடையே சில முக்கியமான வேற்றுமைகள் உண்டு. க.நா.சு. தடலடியான அபிப்ராயங்கள் பலவற்றைச் சொன்னவர். அவர் சொன்ன அபிப்ராயங்களை 'லாஜிக்கலாக' அவர் நிறுவியதில்லை, என்றும் சொல்வதுண்டு. ஆனால் தம் மனத்தளவில் தமக்கென்று சில கறாரான இலக்கிய அளவுகோல்களை அவர் வைத்திருந்தார் என்றும், அந்த அளவுகோல்களை ஓரொரு முறையும் வாசகர்களுக்குத் தெரிவிக்காவிட்டாலும் அந்த அளவுகோல்களின்படி எடுத்த முடிவுகளையே அவர் இலக்கிய உலகுக்கு அறிவித்தார் என்றும் சொல்லப்படுவதுண்டு. க.நா.சு.வின் விமர்சனங்கள் சிலவற்றைப் பற்றிக் கருத்து பேதங்கள் ஒரு சிலருக்கு இருந்தாலும் க.நா.சு. தற்காலத் தமிழிலக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஒரு விமர்சகர் என்பதை மறுக்க இயலாது.

வ.க. தடலடியாக அபிப்ராயங்களை ஒருபோதும் தெரிவித்ததில்லை. அது மட்டுமல்ல. மிகத் தீவிரமான கருத்துகளை, தனி நபர்களைப் பற்றி, அவர் அதிகம் தெரிவித்ததுமில்லை. சமச்சீரான பார்வையுடன் நிதானமான அணுகுமுறையுடனேயே வ.க. தமது கருத்துகளைத் தெரிவித்து வந்திருக்கிறார்.

க.நா.சுவைப் பட்டியல்காரர் என்று சொல்வதுண்டு. அவரது பட்டியல் கறாரானது. மிகச் சிலருக்கே அதில் இடமுண்டு. வ.க.பட்டியலிட்டதில்லை. ஒரு வேளை அவர் பட்டியலிட்டால் அந்தப் பட்டியல் மிக நீண்டதாக அமையும். வ.க.வின் பெருந்தன்மையான மனம் எல்லோரது எழுத்துகளிலும் இருக்கும் நல்லனவற்றைக் கண்டு அவற்றை ஏற்கும் வகையில் பக்குவப்பட்டது. ஒருவேளை வ.க. பட்டியலிட்டால் தமிழில் ஓரளவு நன்றாக எழுதுகிற எல்லா எழுத்தாளர்களும், அந்தப் பட்டியலில், இடம் பெறக்கூடும். வ.க.வைப் பற்றி இன்னும் ஒன்றையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். வ.க. பட்டியலில் முதியவர்கள் பெயர்களை விட இளைஞர்கள் பெயர்கள் மிக அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றிருக்கவும் கூடும்.

கட்டுரையாளர்களில் சிட்டி, சிவபாத சுந்தரம் ஆகிய இரட்டையர்களோடு வ.க.வை ஒப்பிடவும் இடமுண்டு. அவர்கள் இருவரும்கூட அபிப்ராயங்களைத் தருவதைவிடத் தகவல்களைத் தருவதிலேயே அதிக கவனம் செலுத்துபவர்கள். அபிப்ராயங்கள் காலப்போக்கில் மாறக்கூடும். ஒரு சார்பானதாகவும் இருக்கக்கூடும். தகவல்கள் மாறாதவை. சார்பற்றவை. வருங்காலத் தலைமுறை தகவல்களை இழக்குமானால் அது மிகப்பெரிய நஷ்டம். தகவல்கள் இல்லாவிட்டால் தற்கால இலக்கியத்தின் வரலாறே மறைந்து போகும். வ.க. வரலாற்றில் நிலைத்து நிற்பார் என்பது மட்டுமல்ல. தற்கால இலக்கியத்தின் வரலாறே வ.க.வால்தான் நிலைத்து நிற்கும்.

வல்லிக்கண்ணனது கட்டுரைகளைப் பற்றி முக்கியமான சில விஷயங்களை இங்கே கட்டாயம் குறிப்பிடவேண்டும். அவைகள் கட்டுரை என்ற அளவில் மிக நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டவை. பிசிறில்லாத ஒழுங்கு, விஷயங்களைத் தொகுத்துச் சொல்வதில் இயல்பான தன்மை, சிடுக்கில்லாத தெளிந்த நடை, ஆரம்பத்திலிருந்து கடைசி வரை படித்துமுடித்தவுடன் மனத்தில் ஏற்படும் முழுமை உணர்வு, திடீரென உரத்த குரலில் பேசாமல் கட்டுரை முழுவதும் ஒரே தொனியில் பேசும் ஆற்றல், மிகுந்த சிரமத்தின் பேரில் தகவல்களைத் திரட்டித் தரும் பொறுப்புணர்ச்சி - இவையெல்லாம் வ.க. கட்டுரைகளின் பொதுத் தன்மைகள்.

தகவல்களைப் பொறுத்தவரையில் எழுத எடுத்துக்கொண்ட விஷயங்கள் முற்றிலும் உண்மையாக இருக்கவேண்டும் என்கிற நேர்மை உணர்ச்சி அவரிடம் நிறைய உண்டு. இந்த நேர்மை உணர்ச்சியை வல்லிக்கண்ணனது இயல்பாகவும், அவரது கட்டுரைகளின் இயல்பாகவும் ஒருசேரக் குறிப்பிடலாம்.

அவரது திறனாய்வை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட அவர் தகவல் தரும் ஆற்றலை மறுத்ததில்லை. பழந்தமிழுக்கு ஒர் உ.வே.சா. போல புதுத் தமிழுக்கு வல்லிக்கண்ணன் என்று சொன்னால் அது மிகையில்லை.

ஒரு பல்கலைக் கழகம் செய்யவேண்டிய பணியை வல்லிக்கண்ணன் தனியொரு மனிதராக நின்று செய்தார். செய்கிறார். சிலரைப் பற்றிச் சொல்லும்போது,`அவர் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்` என்று சொல்லி அன்னாரது அன்பர்கள் புளகாங்கிதம் அடைவதையும் சம்பந்தப்பட்டவரைக் `குளிப்பாட்டி` காரியம் சாதிக்க இந்த அடைமொழி பயன்படுவதையும் நாம் பார்த்துவருகிறோம். அறிவை, ஞானத்தை வருங்காலத் தலைமுறையினருக்காகச் சேகரித்து வைப்பது பல்கலைக் கழகத்தின் தலையாய பணிகளில் ஒன்று. அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் வல்லிக்கண்ணனை ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் என்றோ அல்லது குறைந்தபட்சம் ஒருநடமாடும் நூலகம் என்றோ கூறுவதை விவாத ரீதியாகவே அனைவரும் ஏற்பர். இது புகழ்மொழி அல்ல. உண்மையைச் சொல்லும் ஒரு முறை. வ.க. ஒரு நடமாடும் நூலகம் என்று சொல்லப்படுவதை அனைவரும் ஏற்கக் காரணம் அவரது வேறு துறைச் சாதனைகள் அல்ல. கட்டுரைத் துறைச் சாதனையே.

வல்லிக்கண்ணன் பல துறைகளில் ஈடுபட்டார். நாவல், கவிதை, நாடகம், சிறுகதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்றிப்படி. ஆனால் அவர் மிகப்பெரிய வெற்றி பெற்றதென்னவோ கட்டுரைத் துறையில் தான். `எஸ்ஸேயிஸ்ட்` என்று ஆங்கிலத்தில் சொல்வது மாதிரி தமிழில் கட்டுரையாளர் என்று யாரையாவது அழைக்கவேண்டுமானால் வல்லிக்கண்ணனைத் தான் அழைக்க முடியும்.

வ.க.னின் முத்து விழாவில் அவருக்குக் கவிஞர், நாவலாசிரியர், சிறுகதை ஆசிரியர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் என்றெல்லாம் பல கிரீடங்கள் சூட்டப்படுகின்றன. சில கிரீடங்கள் அளவில் சிறியவை. சில அளவில் பெரியவை. ஆனால் கட்டுரையாளர் என்ற கிரீடம் அவர் தலைக்கேற்ற அளவில் பொருத்தமாகச் செய்யப்பட்ட ஒரு சரியான கிரீடம். வல்லிக்கண்ணனுக்கு இந்தக் கிரீடம் மிகச் சரியாகப் பொருந்தியிருக்கிறது என்பது மட்டுமல்ல. தமிழில் வேறு யாருக்கும் வல்லிக்கண்ணனுக்குப் பொருந்துவதைப் போல் இந்தக் கிரீடம் அவ்வளவு கச்சிதமாகப் பொருந்தவில்லை என்பதையும் நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். ஏனென்றால் இலக்கியக் கிரீடங்கள் தலையின் வெளி அளவைப் பார்த்தல்ல, உள் அளவைப் பார்த்துச் செய்யப்படுபவை அல்லவா!

http://www.aaraamthinai.com/special/nov09sp.asp

நன்றி: ஆறாம்திணை இணைய இதழ்.

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner